தென்னிந்தியாவில் நிலத்தடி நீர் வளம் நல்லபடியிருப்பதாகவும் வட மேற்கு இந்தியாவில் நிலத்தடி நீர்வளம் வேகமாக காலியாகிக்கொண்டிருப்பதாகவும் கிரேஸ்' (GRACE Gravity Recovery And Climate Experiment) என்ற நாஸா விண்கலம் ஆராய்ந்து தெரிவிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக (2002-2008) தொடர்ந்து செய்யப்பட்ட அலசல்களின் மூலம் இது தெரியவந்துள்ளது. 

கிரேஸ் விண்கல ஆராய்ச்சியில், 220 கிலோமீட்டர் உயர இடைவெளியில் இரண்டு விண்கலங்கள் ஆகாயத்தில் பூமியைச் சுற்றி பறந்து கொண்டே தொடர்ந்து பூமியின் கிராவிட்டியில் (நிறையீர்ப்பு) ஏற்படும் வேறுபாடுகளை கணிக்கப்படுகிறது. நிலத்தடி நீரின் இடப்பெயர்ச்சிகளால் கிராவிட்டியில் ஏற்படும் சிறிய மாற்றங்களை வைத்து நிலத்தடிநீரின் அளவைக் கணிக்க முடியும். கடந்த 6 ஆண்டுகளாக ஆராய்ந்து வந்ததில் வட மாநிலங்களில் நிலத்தடி நீர் ஆண்டுக்கு ஒரு அடி வீதம் கீழே இறங்கிக்கொண்டிருக்கிறது (படத்தில் வடக்கே வட்டமாக காட்டப்பட்டுள்ள பகுதி) என்பதும், சில இடங்களில் மிகவும் அதிகமாக, அபாயகரமான அளவுக்கு இறங்கிக்கொண்டிருப்பதாகவும் சேட்டிலைட் தரவுகள் தெரிவிக்கின்றன. 

நிலத்தடி நீர் என்பது மழை பொழிவிலிருந்து வரும் நீர் மண்ணில் உறிஞ்சப்பட்டு கீழே பாறை இடுக்குகளிலும், மெல்லிய குகைகளிலும், சொரிப்பாறைகளிலும், களிமண்களிலும் தேங்கிவிடுவதே. மழை பொழிவு குறைவதும் அளவுக்கு அதிகமாக போர் கிணறுகளைப் போட்டு உறிஞ்சுவதும் நிலத்தடி நீர்நிலை குறைவதற்குக் காரணமாக ஆகிவிடுகின்றன. நாம் நீரை எடுக்கும் வேகத்தில் நீர், நிலத்தில் இறங்குவதில்லை. ஒரு நாளில் எடுக்கப்பட்ட நீரை நிரப்ப குறைந்தது ஆறுமாத மழை பொழிவாவது வேண்டும்! பல மில்லியன் ஆண்டுகளாக தேங்கியிருந்த நீரை நாம் போர்வெல் கண்டுபிடித்த கொஞ்சகாலத்திலேயே தீர்த்துவிட்டோம். அதை நிரப்ப எத்தனை காலம் ஆகுமோ தெரியாது. தென் மாநிலங்களுக்கும் அந்த கதி வந்துவிடாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை. நீர் சிக்கனம் மிக அவசியம்.

- முனைவர் க.மணி

Pin It