எதிர்வரும் பிப்ரவரி 6 ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கபுரம் என்னும் சிறிய கிராமத்தில் தினேஷ் மற்றும் ஜனக நந்தினி என்ற இருவரும் திருமணம் செய்யவிருக்கிறார்கள். இதற்கும் கட்டுரை தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?
காலையில் அவர்களின் திருமணம் முடிந்த பிறகு, மாலை மெட்டாவெர்ஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அது என்ன மெட்டாவெர்ஸ்?!
மெட்டாவெர்ஸில் அவர்களின் திருமண விருந்தினர்கள் மெய்நிகர் (virtual) நிலையில் கலந்து கொள்ளலாம். இது அவர்கள் திருமண வரவேற்பு நிகழ்வின் காணொளிக் காட்சியை இணையத்தில் கண்டு ரசிப்பதை போன்றதல்ல.
அவர்கள் இணையத்தில் நுழைந்து, ஹாரிபாட்டரின் (Harry Potter) ஹாக்வார்ட்ஸ் கோட்டைக்கு (Hogwarts castle) வந்து விடுவார்கள். வீடியோ கேம் போல அவர்கள் மணமக்களின் அலங்காரத்தோடு கூடிய அவதார் (Avatar) பயன்படுத்திக் கொள்வார்கள். அங்கு சாப்பாட்டு மேசையில் காத்திருப்பார்கள். உங்களுக்கு அழைப்பு இருந்தால் நீங்களும் இணையத்தில் நுழைந்து ஒரு அவதாரை தேர்ந்தெடுத்து அவர்களோடும் மற்ற விருந்தினர்களோடும் அளவளாவலாம். ஆனால் உணவு மட்டும் கிடைக்காது. திருமணப் பரிசாக அன்பளிப்பு வவுச்சர்கள் மூலமாகவோ, Gpay மூலமாகவோ வழங்கலாம். கிரிப்டோவாக (crypto) கூட வழங்கலாம் என்று அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இதில் ஒரு விசேடம் என்னவென்றால் காலம்சென்ற மணமகளின் தந்தையாரின் அவதாரை உருவாக்கி அதில் நடமாட விடுகிறார்கள். மணமகன் ஏற்கனவே பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பணிபுரிந்து வந்ததால் அவருக்கு இது எளிதாகத் தெரிகிறது.
உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் திருமண வரவேற்பை தங்களது நண்பர்கள் பார்ப்பதற்கு வசதியாக இப்படி ஏற்பாடு செய்ததாகக் கூறுகிறார். மேலும் தற்போதைய பெருந்தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த டிரேசி (Traci) என்பவரும் டேவ் காக்னான் (Dave Gagnon) என்பவரும் இதேபோல மெட்டாவெர்ஸ் திருமணம் முடித்தது பெரிய செய்தியாக இருந்தது.
இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்கிறீர்களா? இதுதான் இனி சமூக ஊடகங்களின் ஒரு வடிவமாக இருக்கப் போகிறது. தொழில்நுட்பம் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.
அண்மையில் ஃபேஸ்புக்கின் மார்க் ஸூக்கர்பெர்க் இதைத் தெளிவாக எடுத்து வைத்திருக்கிறார். இதற்காகவே தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா (Meta) என்று மாற்றியிருக்கிறார். மைக்ரோசாப்ட் கூட மெஷ் (Mesh) என்னுமொரு மெய்நிகர் அனுபவத்திற்கான ஒரு தளத்தினை உருவாக்கி வருகிறது. கூகுளும் ஆப்பிளும் கூட தனித்தனியே இத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கின்றன.
இந்த மெட்டாவெர்ஸ் சமூக நிகழ்வுகள் மட்டுமல்லாது கல்வி, மருத்துவம், வணிகம், பொழுதுபோக்கு என்று அனைத்துத் துறைகளிலும் பயன் அளிக்கப் போவதாக இருக்கிறது.
மார்க் ஸூக்கர்பெர்க் மற்றும் சத்ய நாடெல்லா போன்ற தலைமை செயல் அதிகாரிகளின் பேச்சுக்களில் இருந்து மெட்டாவெர்ஸ் என்பது இணையத்தின் எதிர்கால வடிவம் என்று தெரிகிறது. இப்போது மெட்டாவெர்ஸை பற்றிப் பேசுவது என்பது எழுபதுகளில் இணையத்தை பற்றிப் பேசுவது போலாகும். அப்போது, இணையம் இப்படித்தான் இருக்கும் என்று ஒருவராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. எனது நண்பர் ஒருவர் அப்போது இணையம் என்பது ஒரு பெரிய நூலகமாக இருக்கும் என்று சொன்னார். ஆனால் இணையம் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. எவ்வளவோ சேவைகளை அது வழங்குகிறது என்பது பின்னாளில் உறுதியாகிப் போன ஒன்று.
மெட்டாவெர்ஸ் என்பது தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி வரும் பல்வேறு தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பினால் விளைவது. அதிகரிக்கப்பட்ட யதார்த்தம் (Augmented Reality), மெய்நிகர் யதார்த்தம் (Virtual Reality), பிளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பம், சமூக ஊடகம் ஆகியவை இந்த மெட்டாவெர்ஸை முன்னோக்கி செலுத்துகின்றன.
சுருக்கமாகச் சொன்னால் மெட்டாவெர்ஸ் என்பது பல விதமான மக்கள், தங்களுக்குள்ளும், டிஜிட்டல் பொருள்களோடும், தங்களுடைய மெய்நிகர் மாதிரிகள்(virtual models), அதாவது அவதார்களை வைத்து உறவாடும், எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிற மெய்நிகர் சூழல்களின் (virtual environment), ஒரு வலைப்பின்னல் (network) எனலாம்.
மெட்டாவெர்ஸ் என்னும் இந்த சொல், அறிவியல் புனைவுக் கதைகள் எழுதும் 'நீல் ஸ்டீபன்சன்' என்பவரது 1992 இல் வெளியான "ஸ்நோ கிராஷ்" (Snow Crash) என்ற நாவலில் பயன்படுத்தப்பட்டது. அதில் வரும் கதாபாத்திரம் இதேபோல அவதார்களைப் பயன்படுத்தி சமூகத்தில் ஊடாடுகிறது; கடைகளில் பொருட்களை வாங்குகிறது; எதிரிகளை அழித்து ஒழிக்கிறது.
"மனித அனுபவத்தை விட உயர்ந்த" என்று பொருள்படும் மெட்டா (meta) என்ற சொல்லும் யுனிவர்ஸில் (universe) வரும் வெர்ஸ் என்ற சொல்லும் இணைந்து உருவான ஒரு இரட்டைப்பதமே மெட்டாவெர்ஸ்.
மெட்டாவெர்ஸூக்கு மூன்று அடிப்படையான அம்சங்கள் தேவை. ஒன்று, இருத்தல் (presence). அதாவது ஒரு மெய்நிகர் வெளியில் (virtual space) மெய் நிகராக உலாவும் மற்றவர்களுடன் (virtual others) இருப்பதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவது. இதற்குப் பெரிதும் உதவுவது தலையில் பொருத்திக் கொள்ளும் காட்சிக் கருவிகள் (head mounted displays).
இரண்டாவது, பரஸ்பர செயல்படும் தன்மை (inter operability). அதாவது ஒரு மெய்நிகர் நிலையிலிருந்து, மற்றொன்றிற்கு தனது மெய்நிகர் பொருட்களுடன், (அதாவது அவதார்கள், டிஜிட்டல் பொருட்கள்) எளிதில் செல்வதும் திரும்ப வருவதுமான ஒரு சூழல்.
மூன்றாவது, தரப்படுத்துதல். (Standardization). இதுவே பல்வேறு தளங்களும் சேவைகளும ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும் பரஸ்பர தன்மைக்கு உதவி செய்வதாக அமையும். இதற்கு கை கொடுப்பதுதான் பிளாக்செயின் தொழில்நுட்பம்.
மெட்டாவெர்ஸ் இணையத்தின் எதிர்கால வடிவம் என்று சொன்னாலும், மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன. இப்போது நாம் பயன்படுத்தும் இணையம் Web 2.0. எதிர்காலத்தில் வர இருப்பது Web 3.0. இப்போதுள்ள இணையத்தில் உள்ளடக்கங்கள் நம்மைப் போன்ற பயனர்களால் உருவாக்கப்படுகின்றன. ஆனால் நிறுவனங்கள் அதைக் கட்டுப்படுத்தவும், பணமாக்கிக் கொள்ளவும் அவற்றுக்கு வசதிகள் இருக்கின்றன. ஆனால் இனி வரும் இணையத்தில் (Web 3.0) உள்ளடக்கமும் நம்மால் உருவாக்கப்படும். அதைக் கட்டுப்படுத்துவதும், பணமாக்கிக் கொள்வதும் கூட பயனர்களால் முடியும். இதற்கும் முழுவதும் உதவுவது பிளாக்செயின் தொழில்நுட்பம் தான்.
மெட்டாவெர்ஸ்ஸை முன்னோக்கி கொண்டு செல்ல உதவும் ஒரு எஞ்சினாக இந்த எதிர்கால இணையம் Web 3.0 இருக்கும் என்று கூறுகிறார்கள்.
மெட்டாவெர்ஸ், கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கபுரம் கிராமம் வரை வந்து விட்டது. நாமும் அதற்கு தயாராகத்தான் வேண்டும்.
- இரா.ஆறுமுகம்