‘தாடி இல்லாத இராமசாமி’
தகுதி அடிப்படையில் 20 சதவீத இடஒதுக்கீடு செய்த முன்னாள் முதல்வர் பிரகாசம் உத்தரவை இரத்து செய்து வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை உறுதியாக அமுல்படுத்தினார் ஓமாந்தூரார். தமிழகம் வந்த காந்தியிடம் பார்ப்பனர்கள், இவர் இராமசாமி ரெட்டியார் அல்ல; தாடியில்லாத இராமசாமி நாயக்கர் என்று புகார் மனு தந்தனர். தங்களின் பிள்ளைகளுக்கு பொறியியல் படிப்பு மறுக்கப்படுகிறது என்றார்கள். காந்தியார் பதிலடி தந்தார். பிராமண தர்மம் - வேதம் படிப்பது; வேதம் ஓதுவது தானே; என்ஜினியரிங் படிப்பது எப்படி பிராமண தர்மம் என்று திருப்பி விட்டார். பார்ப்பனர்கள் வாயடைத்துப் போனார்கள்.
இந்திய சுதந்திரத்துக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. அன்றைய சென்னை மாகாணத்து முதலமைச்சரான பிரகாசம், பல தவறுகளுக்கு அடித்தளம் இடுபவராக இருந்தார். அவரை மாற்றுவதற்கு ராஜாஜியும் காமராஜரும் திட்டமிட்டார்கள். அடுத்ததாக யாரைக் கொண்டு வரலாம் என்று யோசித்தார்கள். அவர்கள் மனதில் உதித்தார் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.
அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் சத்தியமூர்த்தியை வென்றவர் அவர். இவருக்கே அனைத்துத் தகுதிகளும் இருப்பதாக ராஜாஜியும் காமராஜரும் நினைத்தார்கள். ஓமந்தூராரிடம் இவர்கள் கேட்டார்கள். இருவருமே விக்கித்துப் போகும் அளவுக்கு, முதலமைச்சர் பதவியை மறுத்தார் ஓமந்தூரார். அதற்கு அவர் சொன்ன காரணம், “இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது” என்பதுதான்.
ஒருநாள் அல்ல, இரண்டு நாட்கள் அல்ல... மூன்று நாட்கள் அல்ல... மூன்று மாதங்கள் கடந்தும் ஓமந்தூரார் இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால், அவர்கள் இருவரும் கட்டாயப்படுத்தினார்கள். விடவில்லை. இறுதியாக, “ரமண மகரிஷியிடம் கேட்கிறேன், அவர் ஒப்புதல் அளித்தால் ஏற்றுக் கொள் கிறேன்” என்றார் ஓமந்தூரார். தீர்ப்பு ரமணரிடம் இருந்தது. அனைவரும் பல நாட்கள் அமைதி யாக இருந்தார். திடீரென அனுமதி தந்தார் ரமணர். அதன் பிறகும் ஓமந்தூரார் யோசித்தார்.
அன்றைய சென்னை மாகாணம் என்பது ஆந்திராவையும் உள்ளடக்கியது. சென்னை சட்டசபையில் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட உறுப்பினர்களும் அதிகமாக இருப்பார்கள். அவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தன்னை முதலமைச்சராக ஏற்பார்களா என்ற சந்தேகம் இருந்தது இவருக்கு.
“நீங்கள் ஒப்புக் கொண்டால் போதுமா? ஆந்திர உறுப்பினர்கள் என்னை ஆதரிப் பார்களா என்று தெரியவில்லையே! நான் யாரிடமும் ஆதரவு கேட்டுப் போக மாட்டேன்” என்று ராஜாஜியிடமும் காமராஜரிடமும் சொல்லிவிட்டார் ஓமந்தூரார். “தமிழர் ஒருவரை முதலமைச்சசராகத் தேர்ந்தெடுப்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், தமிழர்கள் அனைவவரும் சேர்ந்து ஒரே நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று அவர்கள் நிபந்தனைப் போட்டார்கள்.
1947 பிப்ரவரி மாதம் 28ஆம் நாள் சென்னை மாகாண சட்டசபை காங்கிரஸ் கட்சி கூடியது. ஓமந்தூராரும் பிரகாசமும் போட்டி யிட்டார்கள். பிரகாசத்துக்கு ஓரிரு வாக்குகள் மட்டுமே கிடைத்தது. ஓமந்தூரார் வெற்றி பெற்றார். முதலமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்தான் தயக்கம் காட்டினாரே தவிர, அதன் பிறகு அச்சம் தவிர்த்த அண்ணலாக எழுந்தார்.
தன்னைத்தான் முதலமைச்சரின் செய லாளராக இவர் நியமிப்பார் என்று ஒவ்வொரு ஐ.சி.எஸ். அதிகாரியும் நினைத்தார்கள். அவர் நிர்வாக அனுபவம் இல்லாத கிராமவாசியாக இருப்பதால், நாமே ஆட்சி செய்யலாம் என்று அதிகாரிகள் ஆசைப் பட்டார்கள். எல்லா ஐ.சி.எஸ். அதிகாரிகளும் அதிர்ச்சி அடையும்படி, பெரியகுளம் மாவட்ட முன்சீஃப்பாக இருந்த ஏ.அழகிரிசாமியை தனது செயலாளராக நியமித்துக் கொண்டார் ஓமந்தூரார். பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் உயர்ந்த ஏ.அழகிரிசாமிதான் அவர். நேர்மையும், தான் நினைத்ததைத் தன்னிடம் தயங்காமல் சொல்பவராகவும் தனது செயலாளர் இருக்க வேண்டும் என்று நினைத்தார் ஓமந்தூரார்.
இந்தக் காலத்தில் இருப்பதுபோல பேசா மடந்தைகளை செயலாளர்களாக நியமிக்க வில்லை.
அந்தக் காலத்தில் பெரும்பாலும் ஆங்கில அதிகாரிகள் பணியில் இருந்தார்கள். அவர்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சி முடியப் போகிறதே என்ற வருத்தத்தைவிட... கதர் வேட்டி கட்டி... நெற்றியில் திருநீறு பூசிய... ‘டிரஸ் கோட்’ இல்லாத ஒரு மனிதனுக்குக் கீழே வேலை பார்ப்பது தான் அவமானமாக இருந்தது.
அன்றைய தொழில் துறை செயலாளர் அப்பாஸ் கலீலி என்ற ஐ.சி.எஸ். அதிகாரி, ஓமந்தூரார் முதலமைச்சராக பதவியேற்ற இரண்டாவது நாள் அவரைச் சந்தித்தார். அவர்தான் மீன்வளத் துறை இயக்குநராகவும் இருந்தார். உணவுப் பற்றாக்குறை காலம் என்பதால், அதைப் பற்றி முதலமைச்சர் பேசினார். “கடலில் மீன் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அதற்காக ஒரு புளு ரிவெல்யூசன் தொடங்கி மீன் வளத்தை அதிகரிக்க வேண்டும்” என்று முதலமைச்சர் சொன்னதும் அந்த அதிகாரி, “அது அவ்வளவு எளியது அல்ல... கடல் என்றால், அதில் எல்லா இடங்களிலும் மீன்கள் கிடைத்து விடாது” என்று அலட்சியமாகப் பதில் அளித்தார்.
“உண்மைதான்! ‘கான்டினண்டல் ஷெல்ப்’ என்று குறிக்கப்படும் பகுதிகள் மட்டும் தான் மீன்பிடிக்க ஏற்றது. அதற்கும் பல புதிய முறைகளை நார்வே போன்ற நாடுகளில் இப்போது கடைப்பிடிக்கிறார்கள்” என்ற சொல்லி அதனை விளக்க ஆரம்பித்தார் ஓமந்தூரார். அப்பாஸ் கலீலி அதிர்ச்சி அடைந்தார். இவர் இதனை அனைத்து அதிகாரிகளிடம் சொல்லிச் சொல்லி மலைத்துப் போனார். கிராமத்தான் போல கதராடை உடுத்தி இருக்கும் ஆள், சாமான்யன் அல்ல, படிக்காத மேதை என்பதை இரண்டாவது நாளே தலைமைச் செயலகம் உணர்ந்தது.
கோப்புகளைப் படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு ஆங்கில அறிவு இருந்தது. தானே படித்தார். தன்னால் முடிந்த அளவு ஆங்கிலத்தில் அவரே எழுதினார். இலக்கணம் சரியாக இருக்கிறதா என்று கவலைப்பட வில்லை. முடிவு சரியானதா என்பதை மட்டும் பார்த்தார். டெல்லிக்குப் போக வேண்டிய ஒரு கோப்பில் தனது கருத்தை எழுதி, ‘இன் மை ஒப்பீனியன்’ என்று எழுதினார். ‘ஒப்பீனியன்’ என்ற சொல்லில் ஓர் எழுத்து தவறுதலாக இருக்கிறது என்று அதிகாரி ஒருவர் எடுத்துக் காட்ட, “என்னுடைய ஒப்பீனியனைத் தானே கேட்கிறார்கள். எனக்கு ‘ஒப்பீனியன்’ என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் தெரியுமா என்று கேட்கவில்லையே” என்று பதிலளித்திருக்கிறார்.
“மிகவும் படித்த ஐ.சி.எஸ். அதிகாரிகள் கூட, முதலமைச்சர் ஓமந்தூராருக்கு ஒரு ஃபைலை அனுப்பிவிட்டால், அது எப்படி எந்த வடிவத்தில் திரும்பி வருமோ என்று அஞ்சினர். தப்பித்தோம், பிழைத்தோம் என்ற நிலை ஏற்பட வேண்டுமே என்று தங்கள் குலதெய்வங்களை வழிபட்டு வந்தனர்” என்று சொல்லி இருக் கிறார், ஓமந்தூரார் ஆட்சியில் கல்வித் துறை இயக்குநராக இருந்த கல்வியாளர் நெ.து.சுந்தர வடிவேலு.
பிரிட்டிஷ் அரசு நம்மிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு வெளியேறிய பிறகும் மவுன்ட் பேட்டனை கவர்னர் ஜெனரலாக இருக்கச் சொல்லியும், “நீங்கள் விரும்பும்வரை இந்தியாவிலேயே இருக்கலாம்” என்று தாசானு தாசர்களாக நேருவும், படேலும் வேண்டுகோள் வைத்தார்கள். “பிரிட்டிஷ் அதிகாரிகள், இங்கேயே இருக்கலாம். அவர்களுக்கான சலுகைகள் தொடரும்” என்றார் படேல். அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த ஆங்கிலேய ஐ.சி.எஸ். அதிகாரிகள் அனைவரையும் அழைத்து, “இதுவரை உங்களது பணிக்கு நன்றி. நீங்கள் சென்னையை விட்டுப் புறப்படலாம்” என்று கம்பீரமாகச் சொன்ன முதலமைச்சர் ஓமந்தூரார், எந்தெந்த அதிகாரிகள் மீது புகார் வந்ததோ, அவர்களுக்குக் கட்டாய ஓய்வுக் கொடுத்து அனுப்பினார். அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று இன்று அமைச்சர் களும், அரசியல்வாதிகளும் நடிக்கிறார்கள் அல்லவா? ஓமந்தூரார் நடிக்கவில்லை.
கோப்புகளில் விரைவாக ஆணை பிறப்பிக்க வசதியாக தலைமைச் செயலாளர் பதவியையை ஒழித்தார். “துறைக்கு ஒரு செய லாளர் இருக்கும்போது தலைமைச் செயலாளா எதற்கு?” என்று கேட்டார். “கோப்புகளை துறைச் செயலாளர் அமைச்சருக்கு அனுப்பினால் போதும், எல்லா கோப்புகளும் தலைமைச் செயலாளருக்குப் போவதுதான் காலதாமதத்துக்கு காரணம்” என்றார். இது பெரிய விவாதம் ஆனது. (சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்த) செம்பரப்பாக்கம் ஏரி விவகாரத்தை வைத்து யோசியுங்கள். நேரடியாக முடிவெடுக்கும் அதிகாரம் பொதுப்பணித் துறை அதிகாரிக்கு இருந்திருந்தால், மூன்று நாட்களுக்கு முன்பே தண்ணீரை ஒழுங்காகத் திறந்துவிட ஏற்பாடு செய்திருப்பார்கள். தலைமைச் செயலாளர் ஊறுகாய் பானையில் ஊறவைத்ததால், ஊரே மிதந்தது. இதனை வைத்து ஒப்பிட்டால் ஓமந்தூரார் எடுத்த முடிவு எவ்வளவு சரியானது என்று புரியும்.
பதவிக்கு வந்ததும் பாராட்டு விழாக்களில் கலந்து கொள்ளவில்லை. வெற்றி விழாக்களை ஏற்பாடு செய்யவில்லை. தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் மாலை வாங்க மாட்டார். பழங்கள் கொண்டு வந்தால், ‘வெளியில் வைத்து விட்டு வந்துவிடுங்கள்’ என்பார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தன்னிடம் யாருமே தனியாகப் பேசுவதை அனுமதிக்க மாட்டார். அவருடைய உதவியாளரும் அந்த அறையில் இருப்பார். இருவரும் பேசுவதை உதவியாளர் எழுத வேண்டும். போலீஸ் அணிவகுப்பு மரியாதையையே தவித்தார். ‘அவர்களுக்கு வேறு வேலையே இல்லையா’ என்று கேட்டார்.
தன்னுடைய மருத்துவராக டாக்டர் ரத்னவேலு சுப்ரமணியத்தை நியமித்தார் முதலமைச்சர் ஓமந்தூரார். அவருக்கு எழுத்துப்பூர்வமாக மூன்று கட்டுப்பாடுகளைப் போட்டார். 1. நீங்கள் யாருக்காகவும் என்னிடம் எந்தப் பரிந்துரையும் செய்யக் கூடாது.
- 2. என்னிடம் உங்களுக்காகப் பதவி உயர்வோ, சலுகையோ எதிர்பார்க்கக்கூடாது. 3. என்னிடம் அரசியல் விவகாரங்கள் பற்றி பேசக் கூடாது என்று நிபந்தனை போட்டு, அவர் ஏற்றுக் கொண்ட பிறகுதான் மருத்துவம் பார்க்கவே அனுமதித்தார்.
ஒருமுறை முதலமைச்சர் திருப்பதி போனார். திரும்பும்போது திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து பலாப்பழத்தைக் கொடுத்தார்கள். டிரைவரும் வாங்கி வைத்துவிட்டார். கடுமையாக கோபம் கொண்டார் ஓமந்தூரார். “இப்ப பலாப்பழத்தை எடுப்பாய். நாளைக்கு கோயில் நகையை வாங்குவாயா” என்று கேட்டார். ‘ரமண மகரிஷி சொன்னால், முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்கிறேன்’ என்று சொன்னவர் இவர். பதவிக்கு வந்த பிறகு, அதே ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவர் ஏதோ சலுகைக் கேட்டபோது, ‘இதில் எல்லாம் அரசு தலையிட முடியாது’ என்று மறுத்தார். தமிழகத்தில் அந்தக் காலகட்டத்தில் இருந்த ஆன்மிகப் பெரியவர்கள் அனைவரோடும் அவருக்கு நட்பு இருந்தது. அதற்காக அவர்களுக்கு எந்தச் சலுகையையும் காட்டியது இல்லை. ஓர் ஆன்மிகப் பெரியவரின் சமாதி வைக்கப்பட்ட இடத்தை அங்கீரித்து, அதற்குச் சுற்றி உள்ள மற்ற பகுதிகளை அகற்ற ஆணையிட வேண்டும் என்று அந்த மடத்தின் சார்பில் வந்து கேட்டார்கள். அப்படி எல்லாம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார். வந்தவர்களுக்கும் முதலமைச்சருக்கும் வாக்கு வாதமே வந்துவிட்டது. ‘அவர் உங்கள் கனவில் வந்து இதைச் செய்யச் சொல்வார்’ என்றார்கள். ‘கனவில் வந்தாலும் நேரில் வந்தாலும் நான் இதனைச் செய்ய மாட்டேன்’ என்று சொல்லி அவர்களை வெளியில் அனுப்பினார்.
அதனால்தான் ஓமந்தூராரை, ‘புனிதமான ஆத்மா’ என்றார் ராஜாஜி. ‘பட்டைத் தீட்டாத வைரக்கல்’ என்று பாராட்டினார் நேரு. ‘அவர் ஓமந்தூரர் ராமசாமி அல்ல... காந்தி ராமசாமி’ என்றார் அண்ணா. சுதந்திர இந்தியாவில், தமிழகத்தில் முதல் முதலமைச்சராக இருந்த ஓமந்தூரார் எல்லாவற்றுக்கும் முதல் என்று உதாரணம் காட்டத்தக்க மனிதராகத்தான் இருந்தார். ஆனால், அவரை நிம்மதியாக விட்டார்களா? ஒரு நல்லவனை இந்தச் சமூகம் வாழவும் விடாது, ஆளவும் விடாது என்பதற்கு உதாரணமாகவும் ஓமந்தூரார் வாழ்க்கை ஆகிவிட்டது.
முதலமைச்சர் ஓமந்தூரார் நல்லவர்தான். அவரைவிட நல்லவர் இல்லை. நேர்மையாளர் இல்லை. ஆனால், அவரை இரண்டே ஆண்டு களில் சென்னையை விட்டே விரட்டி விட்டார்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் சொந்தக் கட்சிக்காரர்களிடமும், கட்சித் தலைமையிடமும், தனது கட்சி எம்.எல்.எ.க் களிடமும் தனக்குக் கீழ் இருந்த அதிகாரி களிடமும் அவர் பட்ட துன்ப, துயரங்கள் தான், ஒரு நேர்மையாளன் அதிகாரத்துக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கான சாட்சிப் பத்திரங்கள்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கக் கூடாது, நிர்வாகத்துக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது, மக்களோடு மக்களாக அவர்கள் வாழ வேண்டும், தேவையில்லாமல் தலைமைச் செயலகத்துக்கு வரக்கூடாது என்று கண்டித்தார். “சட்டசபை உறுப்பினர்கள் சொல்கிற சிபாரிசுகளை புறக்கணித்து விடுங்கள். மக்கள் குறைகளைக் கேட்டு அந்தக் குறைகளை நிவர்த்திக்க வேண்டும். எது சரியோ, அதைச் செய்யுங்கள். தூய்மையான நிர்வாகத்துக்கு நீங்கள்தான் பொறுப்பாவீர்கள். எம்.எல்.ஏ. தலையிட்டார், அதற்காக இப்படி உத்தரவு பிறப்பித்தேன் என்று சொல்லக் கூடாது” என்று மாவட்ட ஆட்சியர் களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். இது காங்கிரஸ் உறுப்பினர்கள் பெரும்பாலானவர்க்கு கடுப்பைக் கிளப்பியது. பலரும், அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அதை மீறி நிர்வாகத்தில் தலையிட்டு அதைச் செய்யுங்கள், இதைச் செய்யுங்கள் என்று உத்தரவு போட்ட நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது விசாரணை கமிஷன் வைத்தார். இப்படிப்பட்ட முதலமைச் சரை எந்த எம்.எல்.ஏ.க்கள் ஆதரிப் பார்கள்?
அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து, “மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான் நாம் பதவியில் இருக்கிறோம். பெரிய ஆட்களுக்கு சலுகைக் காட்டுவதற்காக அல்ல...” என்று கண்டித்தார். அமைச்சர்கள் தேவையில்லாமல் சுற்றுப்பயணம் போகக் கூடாது, சுற்றுப் பயணங்களைக் குறைத்துவிட்டு தலைமைச் செயலகத்தில் உட்கார்ந்து கோப்புகளைப் படித்து தனக்கு முன்னால் இருக்கும் விவகாரங்களை விரைந்து முடிப்பதில் கவனம் செலுத்த nண்டும் என்று கட்டளையிட்டார். அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் என்று போய் விட்டுச் சொந்தப் பணிகள் பார்ப்பவர்கள் தலையில் குட்டினார்.
தஞ்சை மாவட்டத்தில் கடற்கரைப் பகுதியில் போதை மருந்து கடத்திய ஒருவருக்கு, அமைச்சர் ஒருவர் உடந்தையாக இருந்ததைக் கேள்விப்பட்டு காவல் துறையை விசாரிக்கச் சொன்னார். பெரம்பலூரில் போலீஸ் ஆதரவுடன் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகத் தகவல் கிடைத்ததுமே, அத்தனை போலீசையும் பதவி நீக்கம் செய்தார். அன்றைய ஹைதராபாத் - தெலுங்கானா பகுதியில் போராடி வந்த கம்யூனிஸ்ட்டுகளுக்கும், அன்று அமைச்சராக இருந்தவரின் குடும்ப உறுப்பினருக்குமே தொடர்பு இருந்ததாகச் சந்தேகப்பட்டார் முதலமைச்சர். உடனே அவரிடம் இருந்த போலீஸ் துறையைப் பறித்தார்.இந்த நடவடிக்கையை பிரதமர் நேருவும், ராஜாஜியும், காமராஜரும் விரும்பவில்லை. திரும்ப அவருக்கே போலீஸ் துறையைத் தரவேண்டும் என்றார்கள். அவர் ஏற்கவில்லை. ஹைதராபாத் மீட்கப்பட்டதும்தான் அந்த அமைச்சருக்கு மீண்டும் போலீஸ் துறையைக் கொடுத்தார்.
அமைச்சர்கள் அனைவரும் கோப்புகளை உடனுக்குடன் முடித்து அனுப்ப வேண்டும். ஒவ்வொரு கோப்புக்கும் தேதி குறித்தார். அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்யச் சொன்னார். இந்தக் கட்டுப் பாடுகளை அமைச்சர்கள் விரும்பவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக யாரை நியமிப்பது என்பதில் இருந்து ஓமந்தூராருக்கு எதிர்ப்புகள் பலமானது. நீதிபதி பதவி காலியாக இருந்தால் யாரை நியமிக்கலாம் என்று தலைமை நீதிபதி பரிந்துரைப்பார். அந்தப் பரிந்துரை ஆளுநருக்குப் போகும். ஆளுநர், முதல்வரிடம் கேட்பார். அவர் ஒப்புதல் கொடுத்தவுடன், அது மத்திய அரசுக்குப் போகும். அவர்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியைக் கேட்பார்கள். அவர் ஒப்புதலுடன் நியமனம் நடக்கும். இதுதான் நடைமுறை. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பிரபல கிரிமினல் வழக்கறிஞர் என்.சோமசுந்தரம் பெயரை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் பரிந்துரைத்தார். அன்றைய மத்திய அமைச்சர் ஒருவர், தனது மருமகனுக்கு இந்தப் பதவியை எதிர்பார்த்தார். நடக்கவில்லை. பிரதமர் நேருவிடம் புகார் கூறினார் மத்திய அமைச்சர். முதலமைச்சர் ஓமந்தூராரை வரவழைத்த பிரதமர் நேரு, இவரது செயல்பாடுகளுக்கு உள்நோக்கம் கற்பித்தார். “நீங்கள் சொன்னதை வாபஸ் வாங்குங்கள். இல்லை என்றால், நான் இந்த நிமிடத்திலேயே பதவி விலகிவிடுகிறேன்” என்றார் ஓமந்தூரார். அருகில் இருந்த அமைச்சர் படேல் சமாதானம் செய்த பிறகு நேரு, தான் சொன்னதை வாபஸ் வாங்கினார். (சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பார்ப்பனரல்லாத நீதிபதி இவர்தான். பார்ப்பனர்கள் - பார்ப்பன ஏடுகள் அலறின. விடுதலையும், பெரியாரும், ஓமாந்தூராரை ஆதரித்து எழுதின-ஆர்)
ஒரு நாளிதழ், ‘முதலமைச்சர் சாதி பார்க்கிறார்’ என்று எழுதியது. அந்த நாளிதழின் ஆசிரியரை தலைமைச் செயலகத்துக்கு அழைத்த ஓமந்தூரார், ‘உங்கள் பத்திரிகையில் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள், அதில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்’ என்று கேட்டார். அந்த ஆசிரியர் பதில் அளிக்கத் தயங்கினார். ‘உங்களுக்கே உண்மையைச் சொல்லத் தயக்கமாக இருக்கிறது. அப்படியிருக்க நான் சாதி உணர்ச்சி உடையவன் என்று எப்படி எழுதுவீர்கள்?’ என்று கேட்டார். (அந்த ஏடு ‘இந்து’ - ஆர்) உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஏதோ ஒரு பரிந்துரைக்காக அவரைப் பார்க்க விரும்பினார். முதலமைச்சர் சந்திக்க மறுத்தார். இவை அனைத்தும் மேல் மட்டத்தில் இவருக்கு எதிர்ப்பை உருவாக்கியது.
இலஞ்சப் புகாருக்கு உள்ளான அதிகாரிகள் மீது தயவுதாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுத்தார். இலஞ்சம் வாங்கிய அதிகாரி ஒருவர், காந்தியிடமே ஆளைப் பிடித்து பரிந்துரைக்குப் போய் விட்டார். ஓமந்தூராரின் விளக்கம் கேட்ட காந்தி, ‘நீங்கள் செய்ததே சரி’ என்று கடிதம் எழுதினார். பொதுப் பணித் துறை அதிகாரிகள் சிலரைக் கூட்டி வைத்து, ‘நீங்கள் எல்லோரும் ஊழல் பேர்வழிகள்’ என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் முதலமைச்சர். பொதுப் பணித் துறைக்கு சில இயந்திரங்களை வரவழைப்பதில் முந்தைய பிரகாசம் ஆட்சியில் முறைகேடு நடந்ததாகத் தெரிய வந்தது. உடனே நடவடிக்கை எடுத்தார். ‘பெரிய அதிகாரிகள் விஷயத்தில் சற்று நிதானமாக நடக்க வேண்டும்’ என்று பிரதமர் நேரு இவரிடம் சொன்னார். ‘இதைப் பற்றி உங்களிடம் நான் பேசத் தயாராக இல்லை’ என்ற போனை வைத்து விட்டார். அதன் பிறகு டெல்லி தலைமையின் கோபம் அதிகமானது.
அரசு ஊழியர்கள் மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவை ஏற்படுத்தியவரும் இவர்தான். இலஞ்ச ஊழல் ஒழிப்புக் குழுவை உருவாக்கியவரும் இவர்தான். தற்காலிக நீதிபதி ஒருவர் இலஞ்ச குற்றச்சாட்டுக்கு ஆளானார். அவரை நிரந்தர நீதிபதி ஆக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு எழுதினார். தனக்கு மிக நெருக்கமான நண்பர் ஒருவர், இரயில்வே டி.ஐ.ஜி.யாக இருந்தபோது முறையாகச் செயல்படவில்லை என்று நடவடிக்கை எடுத்தார். சட்டசபை உறுப்பினர் ஒருவர் மீது வழக்குத் தொடரும்படி கட்டளை யிட்டார். அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே இதனை எதிர்த்தார்கள். “உங்கள் பேச்சைக் கேட்டால் நான் எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணத்துக்கு என்ன மரியாதை?” என்று திருப்பிக் கேட்டார்.
இவரது ஆட்சியில் இந்து சமய அற நிலையச் சட்டம் முறைபடுத்தப்பட்டது. மடங் களும், கோயில்களும் ஒழுங்காக நடைபெறாத தால்தான் நாட்டில் நாத்திகம் பரவுகிறது என்று நினைத்தவர், கோயில்களை ஒழுங்குபடுத்தினார். மதத்தில் அரசு தலையிடக்கூடாது என்றார்கள். கோயில்கள் நடக்கும் முறைகேடுகளைப் பட்டிய லிட்டு சட்டசபையில் பேசிய ஓமந்தூரார், “எந்த நாகரிக சர்க்காரும், எந்த ஜனநாயக சர்க்காரும், எந்த நேர்மையான சர்க்காரும் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது” என்றார். காங்கிரஸ் கட்சியில் இருந்த என்.எஸ்.வரதாச் சாரி, வைத்தியநாத ஐயர் போன்றவர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தார்கள். இந்தச் சட்டத்தை ஆதரித்து ம.பொ.சி., ஒளவை துரைசாமிப் பிள்ளை, ‘தினசரி’ டி.எஸ்.சொக்க லிங்கம் போன்றவர்கள் நாடு முழுக்கப் பேசினார்கள். ஜமீன்தார் ஒழிப்புச் சட்டத்தையும், இனாம் ஒழிப்புச் சட்டத்தையும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையும் இவர் கொண்டு வந்தார். இதுவும் கடுமையான எதிர்ப்பை இவருக்கு சம்பாதித்துக் கொடுத்தது. காங்கிரஸ் உறுப்பினர்களே எதிர்த்தர்கள். ‘வகுப்பு துவேஷி’ என்று தூற்றப்பட்டார். அன்றைய அமைச்சர் ஒருவர் இதற்கு விளக்கம் அளித்து சட்டசபையில் பேசும்போது, “வகுப்பு துவேஷம் ஏன் வருகிறது? வகுப்பு துவேஷம் இருப்பதால் வருகிறது” என்று அளித்த பதிலுக்கு இன்று வரை உயிர் இருக்கிறது.
இவரை வீழ்த்த ஜமீன்தார்கள் துடித்தார்கள். சில மடாதிபதிகள் கூடிப் பேசினார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இரகசியக் கூட்டம் போட்டார்கள். அமைச்சர்கள் அவர்களைத் தூண்டினார்கள். இவர்களுக்கு காங்கிரஸ் தலைவர்களின் மறைமுக ஆசீர்வாதமும் இருந்தது. இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் பதவியில் இருக்க ஓமந்தூராரே விரும்பவில்லை. “நீங்கள் அழைத்ததால் வந்தேன். நீங்கள் போகச் சொன்னால் போகிறேன்” என்று சொல்லி பதவி விலகினார். “ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தினால், நீங்கள் வென்று விடுவீர்கள்” என்று சிலர் ஆசை காட்டினார்கள். “தேர்தல் காலத்துக்கு முன்பு ஆட்சியைக் கலைப்பதைவிட அரசியல் அநாகரிகம் எதுவும் இல்லை” என்று சொல்லிவிட்டு முதலமைச்சரின் இல்லத்தைக் காலி செய்தார்.
ஓமந்தூரார் பதவி விலகிய அன்று, ‘வழியனுப்புகிறோம்’ என்ற தலைப்பில் ‘விடுதலை’ நாளிதழ் எழுதிய தலையங்கத்தின் வரிகளைக் கவனியுங்கள், இன்றும் சத்தியமான சொற்கள் அவை.
“ஓமந்தூரர் ரெட்டியார் அவர்களே போய் வாருங்கள்; கிராமத்துக்குப் போங்கள்; நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி வழியனுப்பு கிறோம். நேர்மையற்ற உலகம் இது. நாண யத்துக்கு இந்த உலகத்தில் இடமில்லை. யோக்கியனுக்கு அரசியலில், அதிகாரத்தில் இடமில்லை என்ற உண்மையை, பொய்யாப் பழமொழியை நிலைநாட்டி விட்டுச் செல்கிறீர்கள். அது ஒன்றுதான் தாங்கள் செய்த சேவைகளில் எல்லாம் சிகரம் போன்றது, போய் வாருங்கள். போர்க்களத்தில் முதுகுப்புறமாகக் குத்தப்பட்ட வீரர் தாங்கள். காயம் மார்பில் அல்ல... முதுகில். பகைவனால் அல்ல... பச்சோந்தித் தோழனால். பரவாயில்லை. இது தான் உலகம். நன்றி கெட்ட உலகம். போய் வாருங்கள்!” என்று எழுதியது ‘விடுதலை’. கூண்டை விட்டு விடுதலை ஆகிய பறவையாய் வெளியேறினார் ஓமந்தூரார். அவரை வெளியேற்றியது நேர்மையின்மை யும் துவேஷமும்.
(கட்டுரையாளர் - பத்திரிகையாளர்)