1. வகுப்புவாரி உரிமையை அரசின் கொள்கையாக ஏற்று 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் நாள் முதல் வகுப்புரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டது. 15.8.1922-ல் இரண்டாவது வகுப்புரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டது.
2. ஆதித் திராவிடரின் குழந்தைகளைக் கட்டடத்திற்குள் அனுமதிக்காத பொதுப் பள்ளிகளுக்கு அரசு மானியம் அளிக்காது என 16.1.1923-ல் தனி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
3. பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் என்கிற பிரிவினருக்கு 14 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கும் ஆணையை 21.11.1947-ல் காங்கிரஸ் ஆட்சி அமுல்படுத்தியது.
பார்ப்பனர்கள் மிகக் கொதித்தெழுந்தனர். வகுப்புவாரி உரிமை ஆணையைக் குப்பையில் போட வேண்டி காந்தியின் உதவியை நாடினர்.
காந்தியாரை நேரில் அணுகி, ‘எங்கள் மாகாண பிரதமரான ஓ.பி.இராமசாமி ரெட்டியார் தாடியில்லாத இராமசாமி நாயக்கராகச் செயல்படுகிறார்.
கதர் சட்டைக்குள் கறுப்புச் சட்டை போட்டுக் கொண்டு காரியம் ஆற்றுகிறார். பிராமண துவேஷியாகக் காரியம் பண்ணுகிறார் என முறையிட்டனர்.
காந்தியார் உண்மையை அறிய விரும்பி ஓமந்தூராரை அழைத்தார். ஓமாந்தூரார் கல்வித் துறை மாணவர் சேர்க்கை, உத்தியோக நியமனம்
இவை பற்றிய அரசாங்க ஆதாரங்களைத் திரட்டி எடுத்துக் கொண்டு போய் காந்தியாரிடம் நேரில் காட்டினார்.
காலங்காலமாக அமிழ்த்தப்பட்டுக் கிடந்த பிற்படுத்தப் பட்டோருக்குத் தனிச்சலுகை அளித்திருப்பதும், தாழ்த்தப் பட்டோருக்கு விகிதாசாரப் பங்கு 14 சதவீதம் அளித்ததும் தான் செய்த செயல் என்பதைக் காந்தியாரிடம் விளக்கிக் காண்பித்தார்.
இது ‘பிராமண துவேஷ’ காரிய மன்று என்பதை புரிந்து கொண்ட காந்தியார், தென்னாட்டுப் பார்ப்பனரை நோக்கி உங்கள் தொழில் உஞ்சவிர்த்தி செய்வதும், மணியடிப்பதும் தானே. அதுதானே பிராமண தர்மம். கொஞ்ச காலத்துக்கு அதையே நீங்கள் பாருங்களேன். நசுக்கப்பட்ட மக்கள் கொஞ்ச காலம் சலுகைகள் பெறட்டுமே என ஓங்கி அறைந்தார். பார்ப்பனருக்கு காந்தியார் தந்த முதல் சூடு இது தான்.
4. 9.12.1946-ல் தொடங்கி 26.11.1949-ல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 26.01.1950-ல் அமுலுக்கு வந்தது.
1950-ல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின் திறக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டைய வகுப்புரிமை ஆணைப்படி கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்து அளிக்கப்பட்டன. அச்சமயம் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்காமற் போன சீனிவாசன் என்னும் ஓர் பார்ப்பன மாணவனும், மருத்துவக் கல்லூரியில் இடம் பெறாமற் போன சண்முகம் துரைராஜன் என்கிற ஓர் பார்ப்பன மாணவியும், வகுப்புவாரி ஆணை காரணமாகத்தான் தங்கட்கு இடம் கிடைக்கவில்லை.
அந்த ஆணை அரசியல் அமைப்பு சட்டவிதி 29(2)க்கு முரணானதாகும். எனவே அந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவர்களுக்காக உயர்நீதி மன்றத்தில் வழக்குரைத்த வழக்குரைஞர் ஆந்திரப் பார்ப்பனரான அல்லாடி ஏ.கிருஷ்ணசாமி அய்யர்.
அரசியல் அமைப்பு சட்ட வரைவியல் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்து பணியாற்றியவர் அவர், அன்றைய பார்ப்பன ஆதிக்க உயர்நீதி மன்றம் பார்ப்பானின் கோரிக்கையை ஏற்று, வகுப்பு வாரி ஆணையானது அரசியல் அமைப்பு சட்டவிதி 29(2)க்கு விரோதமானது எனவும் தீர்ப்பளித்தது.
பார்ப்பனரல்லாதார் அதிர்ச்சி அடைந்தனர். பெரியார் தொண்டர்கள், காங்கிரஸ், திராவிடர், தி.மு.க. ஆகிய அனைத்து பிரிவினரும் கொதித் தெழுந்தனர்.
இந்திய அரசியல் சட்டம் ஒழிக என்கிற இலட்சிய ஒலியை எழுப்பிக் கொண்டு கறுஞ் சட்டைத் தொண்டர்கள் பட்டி தொட்டியெங்கும் சென்று மக்களைத் தட்டியெழுப்பினர். பெரியார் 3.12.1950 திருச்சியில் பெரியார் மாளிகைத் திடலில் அனைத்துக் கட்சி திராவிடர்களையும் உள்ளிட்ட வகுப்புரிமை மாநாடு ஒன்றைக் கூட்டினார்.
பாராளுமன்றத்தில் இந்த விசயம் பற்றிய விவாதம் காரசாரமாக நடைபெற்றது. “பிற்படுத்தப்பட்டோர்” என்பதை நிர்ணயிக்க ‘கல்வியிலும் சமூகத்திலும்’ என்கிற அடிப்படைகளோடு கூட மூன்றாவதாக ‘பொருளாதாரத்திலும்’ என்கிற அடிப்படையும் கொள்ளப்பட வேண்டும் என 5 உறுப்பினர்கள் இறுதிவரை அங்கு வாதாடினார்.
இவர்களில் சர்தார் ஹுக்கும் சிங், டாக்டர் எஸ்.பி. முகர்ஜி இருவரும் முதன்மையானவர்கள். இறுதியில் வாக்கெடுப்பு 1.6.1951-ல் நடைபெற்றது. நேரு கொணர்ந்த திருத்தத்துக்கு ஆதரவாக 243 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் பதிவாயின. பெரியாரின் வகுப்புரிமை பாதுகாப்பு இலட்சியம் கை கூடிற்று.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத் துக்கு வந்த முதலாவது திருத்தமே இதுதான் என்பது உண்மை வரலாறு. இந்த வரலாற்றைப் படைத்த பெருமை பெரியாரையே சாரும்.அப்படி அவர் பெற்றுத்தந்த வகுப்புரிமைப் பாதுகாப்பு ஏற்பாடு என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 15வது விதிக்கு 4வது உட்பிரிவாகச் சேர்க்கப் பெற்றது. மூலச் சட்டத்தில் வழி 15-ல் 3 உட்பிரிவுகள் மட்டுமே இருந்தன என்பது நினைவில் நிறுத்தத்தக்கது.
மூலச் சட்டத்தில் ஏற்கனவே இருந்த விதி 16(4) பிற்படுத்தப்பட்டோர் (வேலை வாய்ப்பு தொடர்பானது) அம்பேத்கர் அவர்கள் அமைத்து அளித்தது என்பதையும் நாம் மறத்தல் கூடாது.
திருச்சி வே. ஆனைமுத்து அவர்கள் எழுதிய வகுப்புரிமை போராட்டம் ஏன்? என்ற நூலிலிருந்து.
(இதே அடிப்படையில்தான் இப்போது 93வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு உயர்க்கல்வி உட்பட அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.)