கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களின் சாதி, மதங்களை அடையாளப்படுத்தும் விதமாக மாணவர்கள் பயன்படுத்தும் தினசரி வீட்டுப்பாட டைரியில் “ஐடென்டி சர்டிபிகேட்” என்ற பெயரில் சாதி, மதம் ஆகியவற்றை விவரக் குறிப்பேட்டில் பதிவிட ஒரு பகுதியை உருவாக்கி கட்டாயமாக பதிவிட வலியுறுத்தி வருகிறது. அதேபோல பெரும்பாலான பள்ளிகளில் சாதி பெயர்களைப் பதிவிடுவதுடன் எஸ்சி, எஸ்டி, எம்பிசி, ஓசி (SC, ST, MBC, OC) என பிரித்து பதிவிட வலியுறுத்துகிறது. இந்நிலையில் இந்த சம்பவங்கள் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் சாதி, மத உணர்வைத் தூண்டுவதாக உள்ளது என திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்டித்தும், மாணவர்களின் அடையாள குறிப்புகளில் சாதி, மதம் அடை யாளம் கேட்பதைத் தடை செய்ய வலியுறுத்தியும், 2021 ஆகஸ்ட் 12 ஆம் தேதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநகரத் தலைவர் நேருதாஸ் கோவை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி அவர் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், பள்ளி கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர், பள்ளி கல்வி இயக்குநரகம் ஆணையர் ஆகியோரிடமும் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் நடப்பாண்டு அக்டோபர் 7 ஆம் தேதியன்று முதல்வர், பள்ளிக் கல்வித்துறை, சமூக நீதி கண்காணிப்பு குழு, மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு சாதி, மத அடையாளங்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார்.இந்த மனுவிற்குப் பதிலாக சமூக நீதிக் கண்காணிப்பு குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியன், பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளருக்கு தனியார் பள்ளிகளில் மாணவர்களின் விவரக் குறிப்பேட்டில் உள்ள சாதி, மத அடையாளங்கள் குறிப்பிடுவதைத் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் கோவை மாவட்ட கல்வி அலுவலர், பேரூர் அலுவலகத்திலிருந்து புகார் மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர்களிடம் விவரங்கள் கேட்கப்பட்டது என்றும், இட ஒதுக்கீடு மற்றும் கல்வி உதவித் தொகைகள் ஆகியவற்றை சட்டப்படி பெற்று மாணவர்களுக்கு வழங்குவதற்கு தேவையான விபரங்கள் மட்டுமே கோரப்பட்டது என்றும், பள்ளி முதல்வர்கள் தெரிவித்ததாக மாவட்ட கல்வி அலுவலகம் தெரிவித்ததுடன் உங்கள் கோரிக்கை மறுக்கப்படுகிறது என்றும் பதிலளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து மீண்டும் நேருதாஸ் பள்ளியில் சாதி, மத அடையாளங்களை வெளிப்படையாக மாணவர்கள் பயன்படுத்தும் அடையாள சான்றிதழில் பதிவிடுவது தவறு என குறிப்பிட்டு பள்ளிகளின் பட்டியல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த செய்திகள் பரவியதை தொடர்ந்து மாணவர்களின் வீட்டுப்பாட குறிப்பேட்டில் சாதி, மத விவரங்கள் கோரும் பகுதியை நீக்கி விடுகிறோம் என்று ஒன்றிரண்டு பள்ளி நிர்வாகங்கள் மட்டுமே உத்திரவாதம் அளித்தன. தொடர்ந்து சின்மயா வித்யாலயா, நேரு மகா வித்யாலையா, வித்யா விலாஸ், சவ்ரா வித்யாலையா, நாகினி வித்யாலையா, ஜே.சி மெட்ரிகுலேசன், காந்தியடிகள் மெட்ரிகுலேசன், வேல் இன்டர்நேஷனல் உள்ளிட்ட பல பள்ளிகளில் அதே நிலை தொடர்ந்து வருகிறது.
இதைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தோழமை அமைப்புகளை திரட்டி, சட்ட எரிப்பு நாளான நவம்பர் 26 அன்று கோவையில், தீண்டாமை ஒரு பெரும் குற்றம் என பாட நூல்களில் முதல் பக்கத்தில் அச்சிட்டு விட்டு மாணவர்களின் வீட்டுப் பாட கையேடுகளில் ஜாதி அடையாளங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும் தனியார் பள்ளிகளையும் , பள்ளி கல்வித் துறையையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகரத் தலைவர் நேருதாஸ் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். ஜெயந்த் - மாநகரத் துணைச் செயலாளர், வெங்கட் - துணைத் தலைவர் மாநகரம், இயல் - உடுமலை திவிக பொருப்பாளர், சோலார் ரஞ்சித் - ராம் நகர் பகுதி திவிக ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
தொடர்ந்து, சாஜித் - தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழன் - திராவிடத் தமிழர் கட்சி, பிரபாகரன் - திராவிடர் கழக மாநில இளைஞரணி , மலரவன் - புரட்சிகர இளைஞர் முன்னணி, அகத்தியன் - தமிழ் சிறுத்தைகள் கட்சி, முருகன் - தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், கோபால் - ஆதித்தமிழர் பேரவை, ஜூலியஸ் - மக்கள் அதிகாரம், குரு - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஜீவா - மே 17 இயக்கம், கோபிநாத் - திராவிட இயக்க தமிழர் பேரவை, சந்தானம் - சி பி ஜ எம் எல் லிபரேஷன், சி கே சுப்பிரமணியம் - சி பி ஜ எம் எல் ரெட் ஸ்டார், கதிரவன் - குத்தூசி குருசாமி படிப்பகம், அசார் - இந்திய மாணவர் சங்கம், ராகுல் திராவிடர் மாணவர் கழகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு மாணவர் கழகம் பொள்ளாச்சி சபரி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 60க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு தனியார் பள்ளிகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.