புரட்சிக் கவிஞரின் இந்த வரிகள் தமிழர் கடற்கரையாம், மெரினா கடற்கரையில் மெய்ப்பிக்கப்பட்டது. தமிழ், தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தோடு தமிழகமெங்கும் கூடிய இலட்சக்கணக்கான மக்கள், அதுவரை தமிழர் மீது படிந்திருந்த அவமான சின்னங்களை துடைத்தெறிந்தனர். காலில்விழுதல், மன்டியிட்டுகிடத்தல், மண்சோறுதின்றல், வானூர்தியைவணங்குதல், ஊர்தியின் அடியினைதொட்டு வணங்குதல் என்று அடிமை விசுவாவம் அரங்கேறிக் கொண்டிருந்த தமிழ்நாட்டில், தங்களையாரென்றே காட்டிக் கொள்ளாமல், தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளாமல் மாணவர்கள் / இளைஞர்கள் நடத்திய எழுச்சி, தமிழகம் இதுவரை கண்டிராத மாபெரும் ‘தைபுரட்சி‘-யாக மாறியது.

போராட்டம் துவங்கிய நாள் முதல், அதை அரசு வன்முறையால் ஒடுக்க முனைந்த நாள் வரையிலும், தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் அந்தந்த இடங்களில் மக்கள் குடும்பத்தோடு திரண்டு ஆதரவு அளித்ததும், அரச வன்முறையால் போராட்டம் ஒடுக்கப்பட்டபோது, பொதுமக்கள் ஆங்காங்கே திரண்டு நடத்திய போராட்டங்களும், சாலை மறியல்களும், தமிழ் மக்கள், மத்திய மாநில அரசுகளின் மீது கொண்டிருந்த கோபத்தினை வெளிக் கொணர்ந்தது.

 ‘சல்லிக்கட்டு’ என்ற ஒற்றை கருத்து முன்னிடப் படுத்தப்பட்ட போதும். காவிரி நீர் பிரச்சனை, முல்லைப் பெரியாரு அணை பிரச்சனை, மீத்தேன் எரிவாயு, கேல் எரிவாயு குழாய், கூடங்குளம் அனுமின் நிலையம், நூட்ரினோ, 2009-ல் நடந்த ஈழத்தமிழர் படுகொலை, அரசியல்வாதிகளின் கயமை ஆகிய எல்லாமும் போராட்ட களங்களில் பேசப்பட்டது. கடந்த காலங்களில் தமிழர்களுக்கெதிராக நடைப்பெற்ற அநீதிகளுக்கெல்லாம், மக்கள் நியாயம் கேட்டனர்.

மெரினா கடற்கரையில் ஐநூறு பேரென துவங்கிய போராட்டம் பத்து இலட்சத்திற்கும் மேலான மக்கள் சங்கமிக்கும் போராட்டமாக மாறியது.போராட்டம் ஒரு வாரத்தையும் கடந்து செல்ல, குடியரசு நாள் விழாவும் முடங்க கூடும், மக்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் நியாயம் கேட்பார்கள், இனி இவ்வாறான போராட்டங்கள் அவ்வப்போது எழும் என்ற நிலை ஏற்படவே, அரச பயங்கரவாதம் போராடும் மாணவர்கள் / இளைஞர்கள், மற்றும் அவர்களுக்கு ஆதராவாக திரண்ட இலட்சக்கணக்கான மக்கள் மீது ஏவப்பட்டு, அறவழிப்போராட்டம், அடித்து நொறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டது.

மாணவர்களுக்கு ஆதரவு அளித்தனர் என்பதற்காக மீனவர்கள் குடியிருப்புகளும் அவர்களின் மீனங்காடிகளும் காவல்துறை யினரால் கொழுத்தப்பட்டது. போராட்டத்தை ஒடுக்கிய அரசு அந்த இடத்தில் தேசிய கொடியினை ஏற்றி குடியரசு நாள் விழாவினை நடத்தி மகிழ்ந்தது. ஆனால், குடியரசு நாளன்று அதில் மக்கள் யாரும் பங்கெடுக்காமல், விழா பகுதியே வெறிச்சோடி கிடந்ததை அரசு கவணிக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. மக்கள் மீண்டும் தங்களின் எதிர்ப்பினை அரசுக்கு உணர்த்தினர்.

போராட்டம் ஒடுக்கப்பட்டாலும், அது தனது இலக்கை அடைந்தது. மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வந்தாலும், வேறுவழியின்றி மாநில அரசு சல்லிக்கட்டிற்கு ஆதரவான சட்டத்தை, சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி நிரைவேற்றியது. போராட்டம் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், பொது மக்களுக்கும் வெற்றியாக அமைந்தது என்பதை ஏற்க தயங்கிய மத்திய மாநில அரசுகள், அதைதேச விரோத போராட்டமாக சித்தரிக்க தவறவில்லை. சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் திரு. பன்னீர் செல்வம், இந்த போராட்டம் ‘தேச விரோத’ சக்திகள் கையில் சிக்கிக் கொண்டது என்று கூச்சப்படாமல் பொய்யுரைத்தார். ‘தேச விரோதம்’ என்ற சொல்லாடலை அவர் பயன்படுத்தியதிலிருந்தே, அந்த சொல்லின் சொந்தக்காரர்களுக்கும் அவருக்கும் இருக்கும் நெருக்கம் அம்பலமானது. பின்னாளில் அவர்களின் ஆசியோடு அவர் வெளியேறியதும், ‘புனிதராக’ அவர் புணையப்பட்டதும், திருமதி. சசிகலா அவர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும், தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறி மறைந்தன.

அஇஅதிமுக-வை பிளவுப்படுத்துவதால் தனக்கான தளத்தை தமிழ் நாட்டில் ஏற்படுத்தலாமென்று நினைக்கும் பா.ஜ.க., அஇஅதிமுக-வின் வீழ்ச்சியை பயன்படுத்த தருணம் பார்த்து காத்திருக்கும் திமுக, தமிழக அரசியல் சூழலை தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள ஆளுநரை பயன்படுத்துகிறது பா.ஜ.க. என்று குற்றம் சாட்டும் இடதுசாரிகள், பெரியாரிஸ்டுகள், தமிழ்தேசியவாதிகள் என்று தமிழக அரசியல் களம், பல களமுனைகளை கண்டு வருகிறது. பெரும்பான்மையாருக்கு, ஆட்சியாருக்கு என்ற போட்டிகளுக்கிடையே, மார்ச்சு மாதம் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையத்தின் முன் இலங்கை அரசை குற்றவாளியாக நிறுத்த வேண்டுமென்ற பேச்சும், முனைப்பும் தமிழகத்தில் கேட்கத் துவங்கியுள்ளது. ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தனக்கு சாதகமாக்கிக் கொண்டும், தான் புதிதாக இயற்றும் யாப்பை முன்னிலைப்படுத்தியும் இலங்கை அரசு உலக நாடுகளை மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கிறது. தமிழகத்தில் நிலவும், உறுதியற்ற அரசியல் சூழலை பயன்படுத்தி.

மைய அரசு, இதை கண்டும் காணாததுமாய் இருந்து இலங்கைக்கு ஆதரவான போக்கினை எடுத்துவிடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்திய அரசின் நிலைப்பாடு ஏனைய நாடுகளின் நிலைப் பாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், இலங்கை அரசு தொடர்ந்து காப்பாற்றப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் ‘சல்லிக்கட்டு’ என்ற ஒற்றை சொல்லை மையமாக கொண்டிருந்தாலும், அது அதையும் கடந்து ‘தமிழ்த்தேசியம்’ என்ற கருத்துருவாக்கத்திற்கு வித்திட்டுள்ளதால், மத்திய அரசின் உள்துறை அமைச்சு இதுப்பற்றி தமிழக அரசின் உள்துறையிடமிருந்து அறிக்கை கேட்டுள்ளது.

2009-ல் ஈழத்தில் ஏற்பட்ட பின்னடைவு, தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெற்று வரும், தமிழர் விரோத செயற்பாடுகள் ஆகிய அனைத்தும், தமிழ் மக்களை ஒரு புதிய விடியலை நோக்கி பயணிக்கச் செய்துள்ளது. மாற்றத்தை நோக்கி மக்கள் பயணிக்க ஆயத்தமாகவுள்ளனர், ஆனால் மாற்றத்திற்கான தளங்கள் இன்னமும் ஆரோக்கியமானதாக இல்லை. கால தேவைக்கு ஏற்ப, சூழலுக்கு ஏற்ப, இவர் நல்லவர், அவர் நல்லவர் என்று ஆட்களையும் கட்சிகளையும் அடையாளம்காட்டுபவர்களாகவே தமிழ் தேசிய சக்திகள் இருந்து வருகின்றன. இதை கடந்து, ஒர் நீண்ட கால அரசியல் திட்டத்தை உருவாக்கி அதை நோக்கி தமிழ் மக்களை ஆயத்தப் படுத்த வேண்டிய தேவை காலத்தின் கட்டாயமாக உருவெடுத்துள்ளது. ‘தைபுரட்சி’ எதிரிகளை வீழ்த்தியுள்ளது, ஆனால் நாம் எழவில்லை என்றால், 1965 தை மாதத்தில் எழுந்த மொழிப் போராட்டம் போல இந்த ‘தைபுரட்சி’-யும் வரலாற்றின் ஒருபக்கமென சுருங்கிப் போய்விடும்.

ஆசிரியர்

வழக்கறிஞர் ப.அமர்நாத்

Pin It