jallikattu 402

முப்பது நாளில் ஆங்கிலம் பேசுவது எப்படி? ஒரே நாளில் சைக்கிள் ஓட்டுவது எப்படி? ஒரே நாளில் நீச்சல் பழகுவது எப்படி? போன்ற புத்தகங்களை நீங்கள் பேருந்து நிலையங்களிலும், சாலைகளில் கடை பரப்பி புத்தகம் விற்பவர்களிடமும், இன்னும் புத்தக கண்காட்சிகளிலும் பார்த்திருக்கலாம். இது போன்ற புத்தகங்களைப் பார்க்கும் போதெல்லாம் அடிவயிற்றில் இருந்து ஒரு நெருப்புப் பிழம்பு எழுந்து, வாய் வழியாக வந்து வார்த்தைகளாய் காற்றில் கலக்கும். காரணம் அது போன்ற புத்தகங்களை நம் மக்கள் விரும்பி வாங்குவதற்கு எப்போதுமே போட்டி போடுவார்கள். எதையும் கடினமான சுய முயற்சியின் மூலம் கற்றுக் கொள்ளுதல் என்பதைவிட மிக சீக்கிரத்தில் உடல் வலி இல்லாமல் கற்றுக்கொள்வதில் எப்போதுமே நம் மக்களுக்கு விருப்பம் அதிகம். அந்த விருப்பம் தான் பல சுயமுன்னேற்ற எழுத்தாளர்களை புற்றீசல் போல உற்பத்தி செய்வதற்குக் காரணமாகின்றது. ஆனால் தமிழ் நாட்டில் இப்போதுள்ள அசாதாரணமான சூழ்நிலையைப் பார்க்கும் பொழுது (ரஜினி கூட அப்படித்தான் சொல்கின்றார்) அது போன்ற அறிவாளிகளின் ஆலோசனையை நாமும் நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது.

முப்பது நாளில் ஆங்கிலம் பேசுவது எப்படி? ஒரே நாளில் சைக்கிள் ஓட்டுவது எப்படி? ஒரே நாளில் நிச்சல் பழகுவது எப்படி? போன்ற புத்தகங்களை தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக எழுதியவர்கள் தமிழ் நாட்டில் 'தமிழனாய் வாழ்வது எப்படி?' என்றும் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டால் அது எங்களைப் போன்ற தமிழினத் துரோகிகளுக்கு மிக உதவியாய் இருக்கும். ஆங்கிலம் பேசுவதும், சைக்கிள் ஓட்டுவதும், நீச்சல் பழகுவதும் நாம் முயன்று கற்றுக் கொள்வது. ஆனால் தமிழனாய் வாழ்வது? அதுவும் கூட நாம் முயன்று கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகத் தான் தற்போதைய சூழ்நிலையில் உள்ளது. மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக் கொடுக்க வேண்டுமா? தமிழ்நாட்டில் பிறந்தவனுக்குத் தமிழனாக வாழக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? போன்ற அரதப் பழசான பஞ்ச் வசனங்கள் இப்போது தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை. நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்து இருந்தாலும், தமிழில் பேசினாலும், உங்கள் பெயர் சுத்தமான தமிழில் இருந்தாலும், நீங்கள் உங்கள் நெற்றியிலே கூட தமிழன் என்று பச்சை குத்தி இருந்தாலும் நீங்கள் தமிழர் ஆகிவிட முடியாது. அதையும் தாண்டி பல முக்கிய தகுதிகள் உங்களிடம் இருக்க வேண்டும்.

அது என்னவென்றால் நீங்கள் தமிழர் என்பதற்கு உங்கள் அம்மா, அப்பா, சுற்றத்தார், அரசு போன்றவை தரும் சன்றிதழ்களைவிட இங்குள்ள சில தமிழினவாத அமைப்புகளிடம் நீங்கள் சான்றிதழ்கள் வாங்க வேண்டும். அதை வாங்குவதற்கு உங்களுக்கு சில அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும். நீங்கள் ஆதிக்க சாதியாக இருக்க வேண்டும், அவர்களது பண்பாட்டை மனமுவந்து (சாதி ஆணவக் கொலைகள் உட்பட) ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உங்கள் மீது சாதிய தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், உங்களது குடிசைகள் கொளுத்தப்பட்டாலும், உங்கள் வீட்டுப் பையன்கள் ஆதிக்க சாதிவீட்டுப் பெண்களை காதலித்ததற்காகவோ, இல்லை திருமணம் செய்துகொண்டதற்காகவோ கொல்லப்பட்டிருந்தாலும் நீங்கள் சூடு சுரணையே இல்லாமல் ஆதிக்க சாதியின், அவர்களது சாதிவெறியின் நண்பனாகக் காட்டிக் கொள்ள மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும். மீசை இல்லை என்றாலும் கூட பரவாயில்லை, நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் அவ்வளவுதான்.

jallikattu 415

கிரானைட் கொள்ளையனையும், தாது மணல் கொள்ளையனையும், ஆற்றுமணல் கொள்ளையனையும், கல்வி வள்ளல்களையும் தமிழ்ச் சமூகத்தின் சிறந்த, உயர்ந்த மனிதர்களாகப் போற்ற வேண்டும். அவர்கள் நடத்தும் சொறிந்துவிடும் நிகழ்ச்சிகளுக்கு குடும்பம் சகிதமாகப் போய் அவன் காலை நக்கி, நாலுகாசு வாங்கிவந்து, அந்தக் காசில் தமிழ் மக்களுக்குத் தன்மானம் பற்றி வகுப்பெடுக்க வேண்டும். ஊரை அடித்து உலையில் போட்டவன் தமிழனாகவே இருந்தாலும் நிச்சயம் அவனை ஆதரிக்க வேண்டும். மேற்கொண்டு அவன் தமிழ்நாட்டு மக்களை ஒட்ட சுரண்டி, ஓட்டாண்டிகள் ஆக்குவதற்கும் ஆதரவு தரவேண்டும். குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தர வேண்டும். இது எல்லாம் உங்களால் செய்ய முடியும் என்றால் உங்களுக்கு ‘பச்சைத் தமிழன்’ என்று பட்டம் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கின்றார்கள். இதை நீங்கள் செய்ய மறுக்கும் போது உங்களது ஆதி டி.என்.ஏ வை அவர்கள் கண்டிபிடிப்பார்கள். அதை வைத்து உங்களை தெலுங்கன் என்றோ, இல்லை மலையாளி என்றோ, இல்லை வடக்கத்தான் என்றோ முத்திரை குத்துவார்கள். வந்தேறிகள் என்று ஊர் ஊருக்கு உங்களை அடையாளப்படுத்துவார்கள்.

நீங்கள் தமிழனாக இருக்க வேண்டும் என்றால் வேறு வழியே இல்லை. இதை எல்லாம் ஆதரித்துதான் ஆக வேண்டும். அப்படி இல்லாமல் நான் பிஆர்பியை எதிர்ப்பேன், வைகுண்டராஜனை எதிர்ப்பேன், குறிப்பாக ஜல்லிக்கட்டை எதிர்ப்பேன் என்று கிளம்பினீர்கள் என்றால் அவ்வளவுதான்!. இனி தமிழ்நாட்டில் இப்படித்தான் நடக்கப் போகின்றது. எப்படி மகாராஷ்டிராவில் நவநிர்மான் சேனா போன்ற இந்துமதவெறி அமைப்புகள் ஆதிக்க சாதிவெறியர்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யும், மண்ணின் மைந்தர்கள் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களை வந்தேறிகள் என்று முத்திரை குத்தி உதைக்கின்றார்களோ, அதே நிலை இனி தமிழ்நாட்டில் ஆதிக்க சாதிவெறிக்கு எதிராகவும், அவர்களது ஆண்டைத் திமிரை காட்ட நடக்கும் ஜல்லிக்கட்டு போன்றவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மீதும் நடக்கும்.

திராவிட இயக்கத்தின் இரட்டை குழல் துப்பாக்கி என்று கி.வீரமணி போன்ற ‘சாதி ஒழிப்புப் போராளிகளால்’ அழைக்கப்படும் திமுக, அதிமுக போன்றவையும், பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பேசும் CPI, CPM போன்றவையும், தலித் விடுதலை பேசும் விடுதலைச் சிறுத்தைகள் போன்றவையும் ஏற்றுக்கொண்டு சாமானிய மக்களை கொம்பு சீவி விடுகின்றார்களோ, அதே போல நாமும் நடந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களை தனது சொந்த நலனைக் காப்பாற்ற, ஆதிக்க சாதி பண்பாட்டைக் கடைபிடிக்க ஒப்புக்கொள்ள வைக்கும் இந்தக் குற்றக் கும்பலைப் போல நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் நம்மைப் போன்றவர்களால் அப்படி மாறுவது என்பது மிகவும் கடினமான காரியமாகவே தெரிகின்றது. ஒரு வேளை தமிழ்த் தேசியம் பற்றிய சித்தாந்தப் போதாமையாக இருக்கலாம். இல்லை பெரியாரும், மார்க்சும் நமக்குள் ஏற்படுத்திய சுயமரியாதை உணர்வாக இருக்கலாம். இது எதுவும் இல்லை என்றாலும் கூட நம்முடைய சொந்த நடைமுறை அறிவின் மூலம் இது போன்று பிழைப்பது கீழ்த்தரமானது என்று நாம் கருதி இருக்கலாம். ஆனால் ஒருபோதும் நம்மால் அவர்கள் எதிர்பார்க்கும் நிலையில் இருந்து சிந்திக்கவோ செயல்படவோ முடியாது.

வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் வாழும் மக்களில் யார் சுத்தத் தமிழன், யார் செத்த தமிழன் என்றெல்லாம் சான்றிதழ் கொடுக்க தனக்கு மட்டுமே உரிமை உள்ளது என தொண்டையில் மைக்செட்டை கட்டிக்கொண்டு அலையும் வீரத் தமிழர்கள், 'தமிழ்நாட்டில் தமிழனாய் வாழ்வது எப்படி?' என்று ஏதாவது புத்தகம் எழுதலாம். அப்படி எழுதினால் அதை எங்களைப் போன்ற கத்துக்குட்டிகள் படித்து, புரிந்து பின்னால் வரும் சந்ததிகளுக்கும் விளக்க காத்துக் கொண்டு இருக்கின்றோம். தமிழ்நாட்டில் நேர்மையானவனாய், நாணயமானவனாய், ஒவ்வொரு சாமானிய மனிதனின் வலியையும் தன்னுடைய வலியாய்க் கருதி அதைத் தீர்க்க அதிகார வர்க்கத்துடன் துணிந்து போராடுபவனாய் இருப்பதைவிட, தமிழனாய் இருப்பது மிக சுலபம். ஒரு வேளை இப்படி இருந்தால் தான் தமிழன் பட்டம் கிடைக்கும் என்றால், அந்த கேவலமான பட்டம் ஒருபோதும் நமக்குத் தேவையில்லை.

- செ.கார்கி

Pin It