அனைத்து பண்டிகைகளும் மதம் சார்ந்தவையாக இருக்கின்றன. எனவே நாம் எதையும் கொண்டாடுவதில்லை, ஆனால் நமக்கும் கொண்டாடுவதற்கென்று பண்டிகைகள் வேண்டுமே அய்யா என்று பெரியாரிடம் கட்சிக்காரர்கள் கேட்டதாகவும் அதற்கு அய்யா அவர்கள் யோசித்து விட்டு பொங்கல் அறிவார்ந்த ஒரு பண்டிகை. உழைத்த மனிதன் அறுவடையைக் காணும் நாள். நமது முக்கிய உணவான அரிசியை மனிதன் விளைவித்து விட்ட மகிழ்ச்சியைக் கொண்டாடுவது இயல்பான ஒன்றாகும். எனவே அந்த பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுங்கள் என்று பெரியார் அனுமதி அளித்ததாகக் கூறுவார்கள்.

மாட்டுப் பொங்கல் 

எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்பது வள்ளுவப் பெருந்தகை கூற்று. அதனைப் போற்றும் சமுதாயமாக தமிழ்ச் சமூகம் உய்ய வேண்டும். அந்தப் பண்புதனை பயிரிட்டு வளர்க்க வேண்டும் என்ற அர்த்தப்பாட்டோடு கொண்டாடப்படுவது மாட்டுப் பொங்கல். உழவனோடு உடன் நின்று உழன்று வந்த ஆண்டுதோறும் பால் கொடுத்து குடும்பப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி வரும் அந்த ஒப்பற்ற உயிர்ச் செல்வத்தை ஆசை பொங்க நமது வீட்டுக் குழந்தைகளைச் சீராட்டுவது போல் சீராட்டி குளிப்பாட்டி அலங்கரித்து பொங்கலிட்டு அம்மாடுகளுக்கு ஊட்டி விட்டு அடடா. .அந்த இன்பம் எத்தகையது என்பது மாடு வைத்து வளர்த்துக் கொண்டிருக்கும் வீட்டினருக்கு மட்டுமே புரியும். வீடுகளில் இந்த சீராட்டு நடந்து கொண்டிருக்க இளைஞர்கள் தங்கள் தங்கள் வீட்டு மாடுகளை அலங்கரித்து வீதிகளில் ஆடல் பாடல்களோடு அழைத்துக் கொண்டு வருவார்கள்.

காணும் பொங்கல்

உற்றார் உறவினரோடு கூடி வாழும் பண்பினை சமுதாயத்தில் வளர்க்க வேண்டி அதற்கடுத்த நாள் கொண்டாடப்படும் பண்டிகை காணும் பொங்கல். உழைப்பிற்கு ஓய்வு கொடுத்து உற்றார் உறவினரைக் குசலம் விசாரித்து கொஞ்சி மகிழ ஒரு நாள்.

தமிழர்களின் அடையாளம்

இப்படி அன்று நிலவிய உற்பத்தி முறை மற்றும் பொருளாதார சுழற்சியோடு தொடர்புள்ள அறிவார்ந்த பண்டிகை பொங்கல் பண்டிகை. இன்று அந்த பொருளாதார சக்கரம் அப்படியே நிற்கிறது என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட அந்த பண்டிகை தனது பொருத்தப்பாட்டை இழந்து விடவில்லை. மேலும் இன்று தமிழ், தமிழர்கள் என்ற ஓர்மைப் பாட்டிற்கு ‘பொங்கல்’போன்ற பண்டிகைகளை மேலும் உயிரூட்டச் செய்வது ஒரு தேவையான பணியேயாகும். ஆனால் எந்தப் பாரம்பரியப் பெருமையையும் இன்றைய தேவை மாற்றங்களோடு பொருத்திப் பார்க்க வேண்டியது வளர்ந்து வரும் ஒரு சமூகம் செய்ய வேண்டிய மிக அத்தியாவசியமான பணியாகும். அதைச் செய்ய தவறினால் விளைவுகள் எதிர்மறையாகும்.

ஜல்லிக்கட்டு

jallikattu_359இந்த பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தின் தென்பகுதிகளில் ஜல்லிக்கட்டு என்ற வீரவிளையாட்டு நடத்துவது தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. எல்லா இனங்களையும் போலவே தமிழனும் காட்டுமிராண்டி நிலையிலிருந்துதான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறான். காட்டுமிராண்டியாயிருந்தது ஒரு தொன்மைதான். தொன்மையைப் போற்றுவதற்காக இன்று காட்டுமிராண்டியாக இருக்க முடியுமா?

அந்த நாள் மனிதனுக்கு தனது சதை வலிமை என்பது காட்டு விலங்குகளோடு போராடி வாழ்ந்த அந்த நாட்களில் மிக மிக அத்தியாவசியமான ஒன்றாக இருந்திருக்கிறது. நன்றியறிதல் மற்றும் உறவுகளைப் பேணுதலுக்கெல்லாம் பயிற்சி வேண்டும் என்று நினைத்த தமிழன் வீரத்திற்கு பயிற்சியளிக்க வேண்டும் என்று நினைக்காமல் அதற்காக செயல்படாமல் இருந்திருக்க முடியாது. எனவே இந்த மாடு பிடிக்கும் விளையாட்டும் அதன் மீது பணம் கட்டும் பழக்கமும் இருந்து வந்திருக்கிறது. ஓங்கு தாங்காக வளர்ந்திருக்கும் காளைகளை கோபமூட்டி வெறியேற்றி விட்டு அதனை அடக்க மனிதர்கள் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த மாடு பிடிக்கும் விளையாட்டு இப்போது நடத்தப் படுவது போல்தான் அப்போது நடத்தப் பட்டதா என்பதும் ஆய்வுக்குரிய ஒன்றாகும்.

எது வீரம்?

இன்றைய மனிதனின் முதல் எதிரி விலங்குகளல்ல. சொல்லப் போனால் மனிதர்களேதான். நாம் இன்று விலங்குகளோடு அல்ல மனிதர்களோடு போராடிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த போராட்டத்திற்கு தசை வலிமை முக்கியமல்ல. மூளை பலம்தான் முக்கியம். விவேகம்தான் வீரம்.. இன்னும் இப்படி விலங்குகளை அடக்குவதை வீரம் என்று நினைத்துக் கொண்டிருப்பதே மூளை வளரவில்லை என்பதைத்தானே காட்டுகிறது?

சாதியத் தொடர்பு

மேலும் இதில் இருக்கும் சாதியத் தொடர்பையும் நினைத்துப் பார்க்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயமாக இருக்கும் கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் சில இடங்களில் பறையர் சமுதாயத்தினர்தான் இந்த விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். பெரியார் கேட்டார் எந்த பார்ப்பானாவது பாப்பாத்தியாவது எந்த படித்த பெண்ணாவது சாமி வந்து ஆடுகிறார்களா? நமது சமுதாயப் பெண்களுக்கு மட்டும் ஏன் சாமி வருகிறது? என்று. ஆனால் இன்று நமது சமுதாயப் பெண்கள் டாக்டருக்குப் படித்தவுடன் டாக்டர் பெண்ணுக்குக் கூட சாமி வருகிறது சாமியார் மீது காதலும் வருகிறது. பெரியாரின் அந்தக் கேள்வி இதற்கும் கூட பொருந்தும். வேறு எந்த முன்னேறிய சமுதாயமாவது ஜல்லிக்கட்டில் ஈடுபடுகிறதா? இன்று மீண்டும் நாம் விலங்குகளோடு போராடிக் கொண்டிருந்தால் அதுதான் எங்கள் வீரம் என்று வேறு சொல்லிக் கொண்டால் அப்புறம் பிற சமுதாயத்தினர் நம் மூளை மீது ஏறி சவாரி செய்யத்தான் செய்வார்கள் அதிலென்ன தப்பு?

ஜல்லிக்கட்டு எங்கள் வீர விளையாட்டு என்று உரிமை கோரும் இவர்கள் சமுதாயத்தில் பெண்கள் அறுத்துக் கட்டுகிற பழக்கத்தை இதுதான் எங்கள் சாதிய நடைமுறை என்று உரிமை கோர மறுப்பது ஏன்? பணம் வந்ததும் எல்லா வகை நடைமுறையிலும் பார்ப்பனர்களாக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். பிறகு இதை மட்டும் ஏன் விட்டொழிக்கக் கூ டாது? இன்று எல்லா சாதியினர் வீடுகளிலும் நடக்கும் சடங்குகள் முக்கியமாக திருமணச் சடங்குகள் இவ்வளவு ஆடம்பரமாகவா இதே சாதிகளில் முற்காலங்களில் நடத்தப்பட்டு வந்தன? தாலியே இல்லாத சமுதாயங்களில் இன்று தாலி கட்டுகிறார்கள். பரிசம் போட்டு பொண்ணு எடுத்த சமுதாயங்களில் இன்று வரதட்சணை பட்டியல்....!

இந்த வீரம் எதற்கு யாருக்கு தேவை ?

மக்கள் சக்திக்கு முன்னால் உச்ச நீதிமன்றம் ஒன்றுமே செய்ய முடியாது என்று இதில் நிரூபிக்க முன் வருகிறீர்களே! இதே சமுதாயங்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கை இந்த உச்ச நீதிமன்றத்தால் முடக்கப்பட்டிருக்கிறதே அதில் ஏன் மவுனம் சாதிக்கிறீர்கள் ?     மதுரை மாவட்ட வீராதி வீர பெருமக்களே! வைகை ஏன் வறண்டு கிடக்கிறது? ஒரு சொட்டு தண்ணீர் தரமாட்டேன் என்றதே கேரள அரசு. கேட்டுக் கொண்டு சும்மாதானே இருந்தீர்கள்? அன்று மாட்டை அடக்கிய இளைஞர்கள் நாட்டைக் காவல் காப்பார்கள் என்பதற்குதான் அந்தப் பயிற்சி! இன்று நீங்களோ மாட்டுக்கும் தண்ணியடிக்கக் கொடுத்து நீங்களும் தண்ணியடித்து விட்டு வீரவிளையாட்டு நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இந்த வீரம் எதற்கு யாருக்குத் தேவை ?

பெண்ணை வீட்டுக்குள் சிறைப்படுத்தியிருந்த அந்த காலத்தில் தங்கள் வீட்டுப் பெண் திருமணத்திற்குத் தயாராகிவிட்டதைத் தெரியப்படுத்த பெண்களுக்கு சடங்குகள் வைத்தார்கள். உடல்வலிமை மிக்க ஆண்களால்தான் குடும்பத்தை சிறந்த முறையில் நிர்வகிக்கவும் பாதுகாக்கவும் முடியும் என்ற அடிப்படையில் இளைஞர்களை தேர்ந்தெடுக்க வீர விளையாட்டுகள், பாரம் தூக்குதல் போன்ற சோதனை முறைகளைக் கையாண்டு வந்தார்கள். இன்று இந்த சடங்குக்கும் விளையாட்டுக்கும் ஏதாவது அர்த்தமிருக்கிறதா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். இளைஞர்களின் சக்தி எத்தனையோ காரியங்களில் தேவையாயிருக்கிறது. இது போன்ற கலாச்சார நிகழ்வுகள் அவர்களுக்கு இன்று தேவைப்படும் முன்னேற்றத்தை வழங்கத் தவறி விடும்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல காலத்தின் வகையினானே”

என்றவன் நம் பாட்டனார் தமிழன். அதற்காகவே பொங்கலுக்கு முன்னால் போகிப் பண்டிகை ... நாம் போகி கொண்டாடுவதற்கு நிறைய விசயங்கள் இருக்கின்றன. நாம் பெண்களுக்கு நடத்தும் சடங்கு நிகழ்ச்சியும் இந்த ஜல்லிக்கட்டும் அதில் என்றோ போயிருக்க வேண்டியவை!!

- ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

(சிந்தனையாளன் பிப்ரவரி 2008ல் வெளியானது)

Pin It