தமிழக மக்கள் மனத்தில் மொழி, இன உணர்வு என்பது எப்போதும் நீறுபூத்த நெருப்பாக அணையாத தணலாகவே இருந்து வருகிறது. அதற்கோர் நல்ல எடுத்துக்காட்டுதான் தமிழ்ப்பண்பாட்டைப் பாதுகாக்க மாணவர்கள் நடத்திய அறவழிப் போராட்டம். தன்னெழுச்சியான மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவிய தமிழ்த்தேசியப் பகைவர்கள், சல்லிக்கட்டுக்காக மட்டும்தான் இந்தப் போராட்டமே தவிர வேறெதையும் வலியுறுத்தி அல்ல என்று நச்சுப் பரப்புரை செய்தார்கள். ஆனால் உண்மை அதுவன்று.
நடுவணரசால் தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதைக் கூட்டணித் தருமம் என்ற பெயரில் அதனோடு தோழமை வைத்துள்ள கட்சிகள் தன்னலத்தோடு உண்மையை மறைத்தாலும், நடுவணரசு நமக்கு இழைக்கும் அநீதியை முற்ற முழுதாக மாணவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் வையம் ஆண்ட வண்டமிழ் மரபினம் கையிருப்பைக்காட்ட கடற்கரை மணலில் இன்னொரு கடலாய் உருவெடுத்தது.
போராட்டத்தைத் தொடங்குவதற்கு சல்லிக்கட்டு ஒரு கருவாக அமைந்தாலும் போராட்டத்தின் நீட்சியில் தமிழர் இழந்த உரிமையை மீட்கும் குரல் முழக்கமாக ஓங்கி ஒலித்தது. குறிப்பாக தமிழீழ விடுதலைச் சிக்கல், முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி ஆற்றுச் சிக்கல்கள், உழவர், மீனவர் சிக்கல், ஆற்று மணல் கொள்ளை, கனிம வளச் சுரண்டல், கூடங்குளம், மீத்தேன் எதிர்ப்பு, அந்நிய நச்சுக் குடிப்பான தடை போன்ற எண்ணற்ற கேடுகளுக்கு எதிராக மாணவர்களும், இளைஞர்களும் அவர்களுக்குத் துணையாக மக்களும் குரல் எழுப்பினார்கள். இப்போராட்டம் என்பது அரசியல் கட்சிகள் பதிவுக்காக நடத்துகின்ற ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்றதல்ல; மாறாக தமிழ்த் தேசியப் பகைவர்கள் தொடர்ந்து நம்மீது தொடுத்துக் கொண்டிருக்கும் பண்பாட்டுப்படையெடுப்பை முறியடிக்க நிகழ்த்திய பண்பாட்டுப் புரட்சியின் தொடக்கமிது.
மாணவர்கள் தம் வாழ்நாளில் செய்ய வேண்டிய வரலாற்றுக் கடமையை எண்ணியதால் தன்னெழுச்சியாக ஒன்றிணைந்தும் மக்களை ஒன்றிணைத்தும் போராடியது பகைவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்தப் பேரெழுச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாத தற்குறிகளும் தறுதலைகளும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த முயன்றன. அதாவது போராட்டக் களத்திலே மாணவர்கள் இந்தியாவையும் அதன் தலைமை அமைச்சரையும் இழிவாகப் பேசினார்கள் என்றும் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தி தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கையை முழங்கினார்கள் என்றும் , மேலும் அவர்கள் கட்டுக்கோப்பிழந்த தலைமையில்லாத ஒரு மந்தையாகவே செயல்பட்டார்கள் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்படுத்தி அதன் வாயிலாக நஞ்சைக் கக்கினார்கள்.
56 சமஸ்தானங்களாகப் பிரிந்துகிடந்த நிலப்பகுதிகளை தம் வணிகத்திற்காக ஒன்றிணைத்து அதற்கு இந்தியா என்றும் அதில் வாழ்ந்தவர்களை இந்தியர்கள் என்றும் சொன்னது வெள்ளையர்களே. இல்லாத இந்தியாவை உருவாக்கிய வெள்ளையனிடம் இந்திய விடுதலையைக் கேட்டுப் போராடியது நியாயம் என்றால் இந்தியா உருவாவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த இப்போதும் இருக்கின்ற எப்போதும் இருக்கப்போகின்ற எங்கள் தமிழ் மண்ணை உருவகப்படுத்தி, தனித்தமிழ்நாடு என கேட்பதிலே என்ன தவறு இருக்கிறது? தமிழர் ஒரு தனித் தேசிய இனம் என்பதை இங்குள்ள படித்த தற்குறிகள் சிந்திக்க மறுப்பது ஏன்?
கேரளாவில் உள்ளவன் மலையாளியாக இருக்கிறான். ஆந்திராவில் உள்ளவன் தெலுங்கனாக இருக்கிறான். கருநாடகத்தில் உள்ளவன் கன்னடனாக இருக்கிறான். இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள அத்துணைத் தேசிய இனங்களும் அவனவனாக இருக்கின்றபோது, இந்த இளித்தவாய்த் தமிழன், புளித்தவாய்த் தமிழன், ஏமாளித் தமிழன், கோமாளித் தமிழன் இன்னும் திராவிடனாகவும், இந்தியனாகவும் இருக்க வேண்டுமா?
"அரம்பொருத பொன்போலத்
தேயும் உரம்பொருது
உள்பகை உற்ற குடி''
என்று வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதை இதுவரை உணராமலேயே நாம் நம் பகைவர்களை உடன் இணைத்துக் கொண்டு போராடி வருகின்றோம். இதன் விளைவு மாணவர்கள் நடத்திய போராட்டக் களத் தில் இருந்து வெளியேறிய உட்பகை நஞ்சைக் கக்கி யது. அதன் பிறகுதான் இந்தியமும் அடிமைத் தமிழகமும் கைக்கோர்த்துக் கொண்டு காவல்படையை ஏவி மாணவர்கள் மீதும் உடனிருந்த மீனவர்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தின.
நிரந்தரச் சட்டம் இயற்றும் வரை அவற்றை யெல்லாம் பொறுத்துக்கொண்டிருந்த மாணவர்கள் ஆரிய அரசின் கொடூர எண்ணத்தை வீழ்த்தி வீரியமிக்க தமிழர்களாய் வெற்றியை எட்டிப் பறித் தார்கள்.
தமிழ்நாடெங்கும் மூண்டெழுந்த இந்தத் தன்னெழுச்சிப் போராட் டத்தில் ஊடுருவிய அகப்பகை எனும் நச்சுக் கிருமிகள் ஒட்டுமொத்தமாக இணைந்து ஒற்றைக் குரலாக ஒலித்தது என்னவென்றால் "மாணவர்களிடம் பேச்சு நடத்த ஒரு தலைமை இல்லை' என்பதே.
ஏன் வேண்டும்? எதற்கு வேண்டும் தலைமை?
1965ஆம் ஆண்டு நடந்த மொழிப்போரின் போது அவ்வாண்டு சனவரி 26ஆம் நாள் குடியரசு நாளைக் கருப்பு நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஓர் அரைகுறையான அறிக்கையை தி.மு.கழகம் வெளியிட்டது. அவ்வறிக்கை அன்றைய மொழிப்போருக்கு ஓர் உந்தாற்றலாக இருந்தாலும், மொழிப்போரில் எண்ணிலடங்காத் துன்பங்களுக்கு ஆளானது மாணவர்கள்தான். அதன் முதல் கட்டமாக மொழிப்போர்க் களத்தில் இராசேந்திரன் என்ற மாணவன் முதல் களப்பலியானான். அதைத் தொடர்ந்து உயிர் ஈகத்தின் பட்டியல் நீண்டது. மொழிப் போர் மறவர்களின் உயிர் ஈகத்தின் விளைச்சலை 1967ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.கழகம் அறுவடை செய்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அன்று முதல் இன்று வரை அக்கழகமோ, மொழிப்போருக்கு எதிராக நின்ற அதன் தாய்க் கழகமோ தமிழ் மொழி மேம்பாட்டிற்கு ஆக்கப்பூர்வமாக ஒன்றும் செய்ய வில்லை என்பது அப்பட்டமான உண்மை.
உணர்வுகளின் அடிப்படையில் அவ்வப் போது கிளர்ந்தெழும் போராட்டங்களின் விளைச்சல்களை அரசியல் கட்சிகள் அறுவடை செய்துவிடும் என்பதை இன்றைய மாணவர்கள் நன்கறிவர். அதனால்தான் அவர்கள் அரசியல்வாதிகளைப் போராட்டக் களத்திலே அனுமதிக்கவில்லை. தலைமை ஒன்றை உருவாக்கி அதன் விளைச்சலை அரசியல் கட்சிகள் அறுவடை செய்துவிடும் என்பதை மாணவர்கள் அறியாதவர்கள் அல்லர். தலைமை ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் மாணவர்களின் போராட்ட வீரியத்தை மழுங்கடித்து உணர்வுகளை விலைபேசி ஒட்டுமொத்தமாக விற்றுவிடலாம் என எண்ணிய சழுக்கர்களைத் தலைமையே இல்லாத மாணவர் பட்டாளம் ஒழுக்கத்தையே அரணாக அமைத்து தமிழ் வீரத்தையே துணையாக நிறுத்தி, தமிழ்ப் பண்பாட்டைக் காக்கப் போராடிய நுட்பம், தலைவர்களையும், தலைமை வேண்டும் என்பாரையும் தலைதெறிக்க ஓடச் செய்தது.
இனி வரும் காலங்களில் மாணவர்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு தலைமை வேண்டுமா? வேண்டாமா? என்றால் கட்டாயம் வேண்டும். அது எப்படிப்பட்ட தலைமையாக இருக்க வேண்டும்? என்பதுதான் மாணவர்களின் எதிர்பார்ப்பு.
60 ஆண்டு காலம் நடந்த தமிழீழப் போரிலே 30 ஆண்டு கால மறப்போர் நாம் வாழும் காலத்திலேயே நிகழ்ந்தது. அப்போரில் போர் மரபு மீறாமல் வீரியத்தின் கூர்மை மழுங்காமல் ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும், மொழி, இன, மண் மீட்பை மட்டுமே உள்ளீடாகக் கொண்டு படை நடத்திய ஆற்றல் சான்ற பேராண்மையுள்ள ஒரு தலைமை ஈழத்தில் வாய்த்ததுபோல், இங்கும் நமக்கு அத்தகைய தலைமை அமைய வேண்டும் என்பதே மாணவர்களின் எண்ணமும் எதிர்பார்ப்பும். அந்த பேராண்மை கொண்ட தலைமைதான் தமிழ் மானம் காத்து, தமிழ் நிலத்தை மீட்டு, தனித்தமிழ்நாட்டை வழிநடத்தும். எனவே மாணவர்களுக்கு இப்போது வேண்டும் பேராண்மை கொண்ட தலைமை. அப்போதுதான் மாறும் தமிழ்நாட்டின் நிலைமை.