jallikatu 350தமிழ் மக்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றும், பாரம்பரியமான வீர விளையாட்டுமாகிய சல்லிக்கட்டு பொங்கல் திருநாளின் ஓர் அங்கமாகவே பல்லாண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது. அண்மைய ஆண்டுகளில்தான் விலங்குநல ஆர்வலர்களின் தலையீட்டால் முதலில் உயர் நீதிமன்றமும், பிறகு உச்ச நீதிமன்றமும் சல்லிக்கட்டுக்குக் கட்டுப்பாடுகளும், பிறகு தடையும் விதிக்கலாயின. தமிழக அரசைப் பொறுத்த வரை நீதிமன்றத்திலும் அரசியல் அரங்கத்திலும் எப்போதுமே சல்லிக்கட்டுக்கு ஆதரவாகத்தான் நிலையெடுத்து வருகிறது. இந்திய அரசு குறித்து இப்படித் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.

காங்கிரசாட்சிக் காலத்தில்தான் 2014ஆம் ஆண்டு காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளை மாடு சேர்க்கப்பட்டு, அதைக் காரணமாகக் காட்டித்தான் உச்ச நீதின்றம் சல்லிக்கட்டுக்குத் தடைவிதித்தது. பாரதிய சனதாக் கட்சி தலைமையிலான நடுவணரசு சல்லிக்கட்டுத் தடைக்குரிய இந்தக் காரணத்தைக் களையாமலே, சல்லிக்கட்டு என்பது கலாச்சாரம், மதம் தொடர்பானது என்று சொல்லி சல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக வழக்காடிக் கொண்டிருந்தது.

சல்லிக்கட்டு தமிழினத்துக்குரியதே தவிர, இந்து மதத்துக்குரியதோ பாரதப் பண்பாட்டுக்குரியதோ அன்று. இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள இந்துத்துவ, பார்ப்பனிய, பாரதிய ஆற்றல்களுக்கு மனமில்லை. சல்லிக்கட்டு கி.மு. 2000 வாக்கிலேயே விளையாடப்பட்டது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சிந்து வெளி நாகரிகத்திலும் இதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. திணைவழிச் சமூகத்தில் முல்லைத் திணைக்குரிய பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக ஏறுதழுவல் இருந்தது.

“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்

            புல்லாளே ஆயமகள்”

என்பது கலித்தொகையில் வரும் முல்லைக் கலிப் பாடல். ஏறுகோள், சல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு யாவும் இதன் பல்வேறு கிளை வடிவங்களே. கால்நடை வளர்ப்பு, உழவு என்ற பொருளாக்க அடித்தளத்துக்கு உரியவாறு காளையை அடக்குதல், பழக்குதல் என்ற தேவைக்குப் பொருத்தமாக இந்த விளையாட்டு பிறந்து வளர்ந்திருக்க வேண்டும். இந்து என்ற சொல் பிறப்பதற்கு ஈராயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகள் முன்பே சல்லிக்கட்டு பிறந்து விட்டது.

காங்கிரஸ் ஆனாலும், பா.ச.க. ஆனாலும் தமிழ்ப் பண்பாடு என்ற எண்ணமே அடிமனத்தில் கசப்பதால்தான், சல்லிக்கட்டு உரிமையை உளமார ஆதரிக்க முடியவில்லை. அரசியல் காரணங்களுக்காக ஆதரிக்க நேரிட்டாலும் அதற்கு இந்து, பாரதம் என்றெல்லாம் இல்லாத பொல்லாத காரணங்களைச் சொல்லிக் கொள்கின்றனர். இந்தியத் தேசிய மயக்கமுடைய அனைவருக்குமே சல்லிக்கட்டு என்றால் தயக்கம்தான். தமிழ்த் தேசியப் பிடிப்பு இல்லாதவர்கள் அனைவருக்குமே சல்லிக்கட்டை ஆதரிப்பதில் நெருடல் உண்டு.

சல்லிக்கட்டைப் பிரபுத்துவ, சாதியப் பண்பாடு என்று கருதி எதிர்ப்பவர்களும் உண்டு. பகுத்தறிவு நோக்கில் எதிர்ப்பவர்களும் உண்டு. சல்லிக்கட்டைப் பிரபுத்துவ, சாதியப் பண்பாடாகப் புரிந்து கொள்வது வரலாற்று இயங்கியல் பார்வை அன்று. பிரபுத்துவம், சாதியம் தலையெடுப்பதற்கு முன்பே திணைவழிச் சமூகத்தில் முல்லைத் திணைக்குரிய பண்பாட்டு அடையாளமாக ஏறுதழுவல் இருந்ததெனவும், சிந்துவெளி நாகரிகத்தில் இதற்கு இடமிருந்தது எனவும் கண்டோம்.

இடையில் வந்த பிரபுத்துவம், சாதியம்- அதே போல மதமும் இந்தத் தமிழர்ப் பண்பாட்டில் நுழைந்து விட்டது. சமூகநீதிப் பண்பாடு இந்த நுழைவை எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர, மக்கள் பண்பாட்டை மறுதலிக்கக் கூடாது. இன்றும் சல்லிக்கட்டு சாதிக்கட்டாகவே இருக்குமானால் அந்த சாதிக்கட்டுகளை அறுக்க வேண்டுமே தவிர, சல்லிக்கட்டை தில்லிக்கட்டுக்குள் விட்டு விடக் கூடாது.

முதலியம் வளர்ந்து உலகமயமாகி விட்ட இந்தக் காலத்தில் மாட்டு விளையாட்டா? என்று பகுத்தறிவுக் கேள்வி கேட்பவர்களும் உண்டு. சமூக அடித்தளமான பொருளாக்க முறைக்கும் மேற்கட்டுமானமாகிய பண்பாட்டுக்குமான உறவை நெகிழ்வற்ற நேர்கோட்டுறவாகப் புரிந்து கொள்ளும் கொச்சைப் பொருள்முதல் பார்வையின் விளைவு இது. வாழ்நிலை உணர்வுநிலையைத் தீர்மானிக்கிறது என்ற அடிப்படை உண்மையை வைத்து, பொருளாக்க முறை ஒரு சுரப்பியைப் போல் பண்பாட்டைச் சுரப்பதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பொருளாக்க முறைக்கென்று தனியாக ஒரு வரலாறு இருப்பது போல், அரசியல், பண்பாடு, இலக்கியம் என்று ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக வரலாறு உண்டு. மேற்கட்டுமானத் துறையிலான நிகழ்வு ஒவ்வொன்றையும் பொருளாக்க முறையின் அடிப்படையில் விளக்கும் முயற்சியை எதிர்த்து பிரெடெரிக் எங்கெல்ஸ் தமது இறுதி எழுத்துக்களில் நிறையவே எழுதியுள்ளார்.

பண்பாட்டு வளர்ச்சிக்குப் புற ஏரணம் போலவே அக ஏரணமும் உண்டு. இன்ன விளையாட்டு இன்ன சாதிக்கு என்ற இயங்காவியல் பார்வை வர்க்கச் சுருக்கவாதம் போல் சாதிச் சுருக்கவாதமே. மற்றவற்றை போலவே பண்பாடும் தேங்கி நிற்கும் குட்டையல்ல. அது பாய்ந்தோடும் ஆறு போன்றது. திணைவழிச் சமூகத்தில் பெரும்பாலும் முல்லைத் திணைக்குரிய ஆயர் விளையாட்டாக இருந்த ஏறுகோள், ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு, சாதியச் சமூகத்தில் பெரும்பாலும் படைச் சாதிகளின் விளையாட்டாயிற்று. இப்போதும் அதற்கு ஓரளவு முல்லைநிலச் சார்பு இருக்கக் காணலாம். முதலிய வளர்ச்சியும், அதற்குரிய சமூகநீதிப் போராட்டமும் இந்த விளையாட்டின் சாதித் தளைகளை அறுப்பதற்கேற்ற அடிப்படையை ஆக்கித் தந்துள்ளன.

கோமான்களின் கிரிக்கெட் இப்போது தெரு விளையாட்டாக வந்து விட்டதல்லவா? தானாக வராதென்றால் வரச் செய்வதுதானே நம் வேலை? கோயிலுக்குப் போவதா? வேண்டாமா? என்பது வேறு. அனைவர்க்கும் கோயில் நுழைவு உரிமை வேண்டுமா? வேண்டாமா? என்பது வேறு. சல்லிக்கட்டு என்ற விளயாட்டு தேவையில்லை என்று கருதக் கூடிய அனைவரும் இன இரண்டகர்கள் என்று நான் நினைக்கவில்லை. அந்தக் கருத்தைச் சொல்லவும் பரப்பவும் அவர் களுக்கு உரிமை உண்டு. அதே போல் சல்லிக் கட்டு வேண்டும் என்பவர் களின் உரிமையையும் சல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் ஆதரிக்க வேண்டும். மெரினா முதல் அலங்கா நல்லூர் வரையிலான போராட்டம் இந்தப் பாடத்தைக் கற்க விரும்பும் அனைவர்க்கும் கற்றுக் கொடுத்துள்ளது.

மாட்டோடு மனிதன் ஏதோ ஒருவகையில் விளையாட்டாகக் கூட பொருதுவது பகுத்தறிவின் பாற்பட்டதுதானா? என்று கேட்கப்படுகிறது. பகுத்தறிவின் பாற்பட்டு இன்னும் சில கேள்விகளும் கேட்டுப் பார்க்கலாம். நடுகல் வழிபாடு என்ற தமிழர் பண்பாடு பகுத்தறிவின் பாற்பட்டதுதானா? மாவீரர்கள் துயிலும் இல்லம் என்பதும், அங்கு மலர் தூவுவதும், சுடர் ஏற்றுவதும், சூளுரைப்பதும் எப்படி? பெரியார் உட்பட தலைவர்களுக்குச் சிலை வைப்பதும், சிலைகளுக்கு மாலை அணிவிப்பதும் எப்படி? பகுத்தறிவுக்கு அடிப்படை அறிவியல். வெறும் இயற்கை அறிவியல் மட்டுமன்று, சமூக அறிவியலும்தான். பண்பாட்டைப் புரிந்துகொள்ள இயற்கை அறிவியல் போதாது, சமூக அறிவியலும் வேண்டும். சமூக அறிவியலை - சமூக வளர்ச்சி விதிகளையும், மனித குல முன்னேற்றத்தில் பண்பாட்டின் பங்கையும் - அறிந்தேற்றுக் கொள்ளும் போதுதான் மக்களின் பண்பாட்டுத் தொன்மங்களிலும் அடையாளங்களிலும் உள்ளடக்கமாக இருக்கும் வாழ்க்கையை ஊடுகாணவும் உள்நுழைந்து மாற்றம் காணவும் இயலும்.

குதிரை மனித வாழ்வில் முகாமைப் பங்கு வகித்துள்ள நாடுகளில் குதிரை உழவும் குதிரை வண்டியும் வழக்கொழிந்த பிறகும் குதிரைப் பந்தயம், குதிரையேற்றம் போன்றவை கேளிக்கையாகவும் விளையாட்டாகவும் தொடர்ந்து நீடிப்பதில் தேடாத பகுத்தறிவை... மாட்டு வண்டியும் மாட்டு உழவும் இன்னும் அடியோடு வழக்கொழியாத தமிழ்நாட்டில் சல்லிக்கட்டு நீடிப்பதில் மட்டும் தேடுவது ஏனோ?

மக்களின் பண்பாட்டிலும் பாரம் பரியத்திலும் மாற்றம் வேண்டு மென்றால் அது மக்களிடமிருந்து வர வேண்டுமே தவிர அரச எந்திரத்திடமிருந்து வருவதை ஏற்க முடியாது. பொதுநலன் கருதி ஒழுங்குபடுத்தலாம், ஒழுங்குபடுத்தவும் வேண்டும். தடை செய்வது பண்பாட்டு ஒடுக்குமுறையே தவிர வேறன்று.

சல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டுமென்றால் சட்டப்படி அதற்குரிய நேர்வழி 1960ஆம் ஆண்டு இயற்றப்பட்ட விலங்குவதைத் தடுப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்வதுதான். இதைச் செய் வதற்கு வழிதேடாமல் “இந்த ஆண்டு சல்லிக் கட்டு உறுதியாக நடைபெறும்” என்று திரும் பத் திரும்ப சத்தியம் செய்தே நடுவண் அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன் கேலிப்பொருளாகிப் போனார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் விலங்குநலம் என்பதைப் பொது அதிகாரப் பட்டி யலில் வைத்திருப்பதால் விலங்குவதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மாநில அரசும் முயற்சி எடுக்கலாம். அப்படி எதுவும் செய்யாமல் மாநில அரசும் கடமை தவறியது என்பதே மெய். ஆனால் இந்த ஆண்டு சல்லிக்கட்டு நடைபெறும் என்று தமிழக அரசும் நம்பிக்கை ஊட்டிக் கொண்டே இருந்தது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும், அது சல்லிக்கட்டுத் தடையை நீக்குவதாக இருக்கும் என்ற நம்பிக்கையே இதற்கெல்லாம் அடிப்படை. இருக்கிற சட்ட நிலவரத்தையும்இ உச்ச நீதிமன்றத்தின் கடந்த கால அணுகுமுறையையும் வைத்துப் பார்த்தல் இது மூட நம்பிக்கையே.

ஆனால் உச்ச நீதிமன்றம் உடனே தீர்ப்பு தர மாட்டோம் என்று கூறிக் கடைசி நேரத்தில் கழன்று கொண்டது. இந்திய அரசும் கைவிரித்து விட்டது. பொன்னார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார், என்ன எதற்கு என்பதைத் தெளிவாகச் சொல்லாமலே! தமிழக அரசைப் பொறுத்த வரை, யாரும் தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தி விடாமல் தடுப்பதிதான் குறியாக இருந்தது. முதன்மையான சல்லிக்கட்டு மையங்களில் காவல் படை குவிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் சனவரி 14 பொங்கல் நாளில் சல்லிக்கட்டுக்காக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது காவல்துறையினர் தடியடித் தாக்குதல் நடத்தினர். பலரும் காயமுற்றுக் கைது செய்யப்பட்டனர். அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு நடப்பதைத் தடுக்க வேண்டுமெனக் காவல்துறையினர் முற்றுகையிட்டுக் கெடுபிடி செய்தனர். வாடிவாசலை அடைத்து நின்றனர். இதனால் எந்த ஒழுங்குமுறையும் இன்றிச் சில காளைகள் அவிழ்த்து விடப்பட்டன என்றாலும், நல்வாய்ப்பாகக் கெடுநிகழ்வு ஏதும் நிகழாமற்போயிற்று.

alanganallur 600அவனியாபுரத்தில் கைது செய்யப்பட்ட வர்களை விடுவிக்கக் கோரி அலங்காநல்லூர் உள்ளிட்ட சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களை வாடிப்பட்டி அருகிலுள்ள திருமண மண்ட பத்தில் அடைத்து வைத்தனர். அலங்காநல்லூர் அடக்குமுறையைக் கண்டித்து சனவரி 16ஆம் நாள் சில மாணவர்கள்- இளைஞர்கள் சென்னை மெரினாவில் கூடினார்கள். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி 17ஆம் நாள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடத் தொடங்கினர். இதுவே தமிழகமெங்கும் சல்லிக்கட்டு உரிமைக்கான மாபெரும் அறப்போராட்டமாக உருவெடுத்தது.

சல்லிக்கட்டு உரிமைக்கான கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்த இந்திய அரசும் தமிழக அரசும் உரிய நேரத்தில் அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதால் ஏற்பட்ட ஏமாற்றமும், அரசுகள் மீதான அவநம்பிக்கையும் தமிழர் போராட்டம் தீயாய்ப் பரவக் காரணம் என்றால், அவனியாபுரத்திலும் அலங்காநல்லூரிலும் காவல்துறை நடத்திய அடக்குமுறை அந்தத் தீயை மூட்டிய தீப்பொறியாக அமைந்து விட்டது.

சல்லிக்கட்டு என்னும் ஒரு பண்பாட்டு அடையாளத்துக்கான போராட்டம் இவ்வளவு பெரும் வீச்சுப் பெற்றது எப்படி? மொழிப் போர் - 1965 ஒரு தமிழ்த் தேசிய எழுச்சி. பிறகு சல்லிக்கட்டு உரிமைப் போர் - 2017 மீண்டும் ஒரு தமிழ்த் தேசிய எழுச்சி என்பது என் உறுதியான நம்பிக்கை. இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு போல் சல்லிக்கட்டு ஒரு பெரிய தேசியக் கோரிக்கையா? என்று கேட்கப்படலாம்.

சல்லிக்கட்டுக்கான போராட்டம் என்பதை விட சல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டம் என்பதே சரி. எங்கள் பண்பாடு, எங்கள் கலாசாரம் என்று முழக்கமிட்ட மாணவர்களில் பலருக்கு சல்லிக்கட்டு தெரியாது. விளையாடியவர்களும் அல்லர், விளையாட்டைப் பார்த்தவர்களும் அல்லர். அவர்களைப் பொறுத்த வரை பண்பாட்டு உரிமையின் ஓர் அடையாளம்தான் சல்லிக்கட்டு. ஒரு தேசிய இனத்தின் உரிமைகளில் மொழியுரிமைக்கு நிகரான இடம் பண்பாட்டு உரிமைக்கும் உண்டு. சல்லிக்கட்டுக்கு நேர்மையாக எதிர்க் கருத்துக் கொண்டவர்களும் கூட இந்தப் போராட்டத்தை உரிமைப் போராட்டமாக ஏற்று மெரினாவுக்குத் துணை நின்றது நல்ல செய்தி.

மொழிப் போர் - 1965 ஒரு தமிழ்த் தேசிய எழுச்சி. பிறகு சல்லிக்கட்டு உரிமைப் போர் -2017 மீண்டும் ஒரு தமிழ்த் தேசிய எழுச்சி என்பது என் உறுதியான நம்பிக்கை. இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு போல் சல்லிக்கட்டு ஒரு பெரிய தேசியக் கோரிக்கையா? என்ற கேள்விக்கு, சல்லிக்கட்டு வெறும் விளையாட்டு அல்ல, தமிழர்களின் பண்பாட்டு உரிமை என்று நம் மாணவர்கள், இளைஞர்கள் விடையிறுத்தார்கள். பண்பாடு உரிமைக்காக மட்டுமன்று, தமிழ் மக்களின் முழுமையான வாழ்வுரிமைக்காகவும் போராடுகின்ற உணர்வோடுதான் மாணவர்களும் இளைஞர்களும் களத்தில் நின்றார்கள்.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, பவானி உள்ளிட்ட ஆற்று நீர் உரிமை மறுக்கப்படுவதும், நூற்றுக்கு மேற்பட்ட தமிழக உழவர்களின் தற்கொலையும் கொடுஞ்சாவும், கல்விக் கொள்ளையும், சமூக நீதி மறுப்பும், இந்தி-ஆங்கில-சமற்கிருதத் திணிப்பும், வளர்ச்சி என்ற பெயரில் நசிந்து வரும் உழவு-சிறுதொழில்-வணிகமும், பெருகி வரும் வேலையின்மையும் வறுமையும், இறுதியாக நரேந்திர மோதி அரசின் செல்லாக் காசுத் திட்டத்தால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் படும் அல்லலும், இந்திய அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு தமிழக அரசும் உடந்தையாக இருப்பதும், பதவி வேட்டையாடும் அரசியல் கட்சிகளின் கையாலாகாத்தனமும்... எல்லாம் சேர்ந்து எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்த தமிழ் உள்ளம் சீறி வெடிக்க சல்லிக்கட்டு ஒரு காரணமாயிற்று என்பதே உண்மை.

சுருங்கச் சொல்லின், சல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பின்னால் பற்பல பொருளியல், அரசியல், பண்பாட்டுக் காரணங்கள் இருந்தன. கரையைத் தொடும் சிற்றலைக்குப் பின்னால் ஆழ்கடலின் பேரழுத்தம் இருக்குமல்லவா, அதேபோல் மெரினாவும் பற்பல அழுத்தங்களால்தான் எழுந்தது. அவற்றில் வலுவானதொன்று ஈழத் துயரம். கூடி ஆர்ப்பரித்த கூட்டு உளவியலின் கருவில் சிலநேரம் மறைவாக, சிலநேரம் தெளிவாகத் தமிழீழ வேட்கை உயிராகத் துடித்துக் கொண்டிருந்தது. ஆம், போராட்டக் களத்தில் காளை என்கிற அடையாளம் எல்லாப் பதாகைகளிலும் கொம்புயர்த்தி நின்றது போலவே எல்லார் உள்ளத்திலும் முள்ளிவாய்க்கால் நெருப்பு கனன்று கொண்டிருந்தது.

கரையேறி வந்த ஆழிப்பேரலையாகக் குதியாடிய பெருங்கூட்டத்தில் பெரும்பங்காக அமைந்த மாணவர்களும் இளைஞர்களும் 2009 தமிழின அழிப்பிலிருந்து - போரை நிறுத்து! எனும் முழக்கத்திலிருந்து - பொதுவாழ்வு கண்டவர்கள். அந்தப் போராட்டத்திலும் இந்தப் போராட்டத்திலும் முக்கியப் பங்கு புதிய நடுத்தர வர்க்கமாகிய தகவல்-தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு இருந்தது. மாணவர்களிலும் சென்னையைப் பொறுத்த வரை ஆங்கிலவழிக் கல்வி பயில்வோர் கணிசமாக இருந்தனர்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகைகள் இதையே உணர்த்தி நின்றன.“We want Jallikkattu. We want Cauvery. We want Tamil Eelam”- என்ற பதாகை சல்லிக்கட்டையும் காவிரியையும் தமிழீழத்தையும் அழகுற இணைத்தது.

இந்தப் போராட்டத்திற்குள் இந்திய தேசியக் கொடியைக் கொண்டுவரும் முயற்சி போராட்டக்காரர்களின் கூட்டு உணர்வாலேயே முறியடிக்கப்பட்டது. இளைஞர் ஒருவர் கையிலிருந்த முழக்கத் தட்டி மூவண்ணத்தில் இருந்தது - ஆனால் தலைகீழாக! பச்சை மேலே! நெருங்கிப் பார்த்த போது அந்தப் பச்சைப் பின்னணியில் வெள்ளை எழுத்தில் “WE REJECT INDIA” என்று எழுதியிருந்தது. இது 2009 முள்ளிவாய்க்கால் கற்றுத் தந்த பாடம்!

இறுதிக் கட்டத்தில் காவல்துறையின் வலுவந்த இழுப்பைத் தடுக்க இந்தியத் தேசியக் கொடியை சில பெண்கள் நெஞ்சில் போட்டுக் கொண்டது ஒரு போராட்ட உத்தி என்பதற்கு மேல் ஒன்றுமில்லை. தமிழன்டா! என்பதுதான் ஆண்பெண் அனைவர்க்கும் பொது முழக்கம். இனவுணர்ச்சி ததும்பும் இந்த அடையாளம் இவர்களில் பெரும்பாலார்க்கு ஈழப் போராட்டத்திலிருந்து கிடைத்தது.

பழைய வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இந்தியத் துணைக் கண்டத்திலேயே அநேகமாய் காசுமீரத்துக்கு அடுத்தபடி தேசிய இன உணர்வில் முன்னுக்கு நின்றது தமிழகம்தான். 1965 மொழிப் போராட்டத்தில் இது உச்சம் கண்டது. 1967 ஆட்சி மாற்றத்துக்கு அதுவே வழியமைத்தது. ஆனால் மறுபுறம் போராட்ட உணர்வு பதவி அரசியலில் திசைமாறி, இன எழுச்சி குன்றியது. அதை மீட்டெடுத்தது 1983 கறுப்பு ஜூலை. ஆம், இலங்கையில் நிகழ்ந்த இனவதையும் அரச பயங்கரவாதமும் வெலிக்கடைச் சிறைப் படுகொலையும் ஈழப் போராட்டத்தில் போலவே தமிழக இனவுனர்வுப் போராட்டத்திலும் ஒரு திருப்புமுனை ஆயின.

அது முதல் தமிழக அரசியலில் தமிழீழம் ஒரு முதன்மைக் கூறு ஆயிற்று. பதவி அரசியலுக்கும் போராட்ட அரசியலுக்குமான முரண்பாடு தொடர்ந்தாலும் தமிழீழம் குறித்தொரு நிலைப்பாடு இல்லாமல் யாரும் இங்கே அரசியல் செய்ய முடியாத நிலை உருவாயிற்று. இராசீவ் கொலைக்குப் பின் மீண்டும் ஒரு பெரும் பின்னடைவு குறுக்கிட்டாலும், தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய ஆற்றல்கள் ஈழ ஆதரவை நீறு பூத்த நெருப்பாகக் காத்து வந்தன. 2008--09 இறுதிப் போரும், போரை நிறுத்தக் கோரும் அமைதிப் போரும் அந்த சிறு நெருப்பை ஊழித் தீயாக வளர்த்தெடுத்தன. ஆனாலும் நாம் தோற்றோம்! அங்கேயும் இங்கேயும்!

முள்ளிவாய்க்கால் -- ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், உலகத் தமிழர்கள் அனைவர்க்கும் மாறாத் துயரம், தமிழினத்தின் உளவியலில் ஆறா வடு. அண்டம் குலுங்க நிகழ்ந்த அணுக்கரு வெடிப்பு. விடுதலைக்கான போராட்டத்தின் முற்றுப் புள்ளியன்று, கூரிய திருப்புமுனைப் புள்ளி. விடுதலைப் போராட்டம் முடியவில்லை, உலக வீச்சுடன் உருமாறியது, இனவழிப்புக்கு நீதி கோரும் போராட்டமாக உருவெடுத்தது. தொடக்கக் குழப்பங்களும் சோர்வுகளும் நீங்கி, 2013இல் பாலச்சந்திரன் படிமம் ஏந்தி எழுந்தனர் தமிழ்நாட்டு மாணவர்கள். அந்த எழுச்சியின் தொடர்ச்சியை மெரினாவில் கண்டோம்.

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி, ஆற்று மணல், தாதுமணல், கூடங்குளம், கெயில் குழாய், கல்விக் கொள்ளை, செல்லாத நோட்டு... எல்லாம் சேர்ந்துதான் சல்லிக்கட்டுத் தீ மூட்டின. இந்த வரிசையில் ஈழமும் ஓர் அக்கினிக் குஞ்சு. தீப்பொறியில் பெரிது, சிறிது இல்லை. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

கோரிக்கையில் நிறைவெற்றி கண்ட சல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் காவல்துறை நடத்திய வன்செயல், தீவைப்புக்குக் காரணம் தேடும் போது, தமிழீழ ஆதரவும், அதன் தொடர்ச்சியான இந்திய எதிர்ப்பும் போராட்டத்தில் இழையோடி நின்றது இந்திய வல்லாதிக்கத்துக்கு எரிச்சலூட்டியது புரிகிறது. எரிச்சல் மட்டு மன்று, எதிர்காலத்திலும் இது போன்ற போராட்டங்கள் நடந்தால் நசுக்குவதற்கான வெள்ளோட்டமாகவும், ஆதரவு தரும் மக்களுக் கான கடும் எச்சரிக்கையாகவும் காக்கி வெறியாட்டம் அரங்கேறியது. இந்த அடக்குமுறையை நியாயப்படுத்த தேச விரோதிகள், சமூக விரோதிகள் என்ற முத் திரை பயன்படுத்தப்பட்டதிலிருந்தே இது தெளிவாகிறது. நடுக்குப்பம் உள்ளிட்ட மீனவர் குப்பங்கள் காக்கிக் காடையரின் வன்தாக்கு தலுக்கு முக்கிய இலக்காக்கப்பட்டன.

சல்லிக்கட்டுப் போராட்டம் தமிழர்களின் போராட்ட ஒற்றுமைக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. ஆண்கள் - பெண்கள், மாணவர்கள் - மீனவர்கள், உழவர்கள் - தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் - பிற்படுத்தப்பட்ட மக்கள், கிராமத்தினர் - நகரத்தினர், இந்துக்கள் - முசுலிம்கள்... எல்லாத்தரப்பட்டவர்களும் தமிழ் ஓர்மையுடன் ஒன்றுபட்டு நின்றனர். தமிழ் கூறும் உலகெங்கும் இந்த ஒற்றுமை பரவி நிற்க ஈழம் ஊடிழை ஆயிற்று.

அரபு வசந்தத்தில் கெய்ரோவின் தகிர் சதுக்கத்துக்கு ஒப்பான பங்கு தமிழ் வசந்தத்தில் சென்னையின் மெரினாவுக்கு உண்டு. ஒவ்வொரு தேசத்துக்கும் ஒரு தகிர் சதுக்கம் தேவை என்றொரு கவிதை வரி உண்டு. சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்று விடும் என்றெண்ணிய மூடரைப் போல் மெரினாவில் தடைச் சட்டம் போட்டால் மீண்டும் ஒரு தமிழ் வசந்தம் எழாது தடுத்து விடலாம் என்று ஆட்சியாளர்களும் அவர்களின் அடியாள் படியான காவல்துறையும் மனப்பால் குடிக்கலாம். ஆனால் மெரினாவில் கரை தழுவும் கடலலைகளைப் போலவே மக்கள் போராட்டங்களும் ஓய்வதில்லை. அந்த ஓயாத அலைகளில் அடுத்த ஒன்று தமிழீழ மக்களுக்கு நீதி என்ற முழக்கத்தோடு ஆழிப்பேரலை போல் எழும் என்று நம்புவோம்.

marina lawerence 600வெற்றிப் பட்டயம்!

சல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டத்தில் தமிழக மாணவர்கள் - இளைஞர்கள் - மக்கள் அடைந்த வெற்றியின் ஆவணம் சனவரி 21ஆம் நாள் தமிழக ஆளுநரால் பிறப்பிக்கப்பெற்ற ‘அவசரச் சட்ட’மாகும். இதே சட்டம் 23ஆம் நாள் தமிழகச் சட்டப் பேரவையால் ஒருமனதாக இயற்றப்பட்டு முறைப்படியான சட்டமாகியுள்ளது.

இந்தச் சட்டம் குறித்துத் தமிழக அரசு வெளிப்படையாக விளக்கமளிக்கத் தவறியதால் ஏற்பட்ட குழப்பங்களை நாமறிவோம். போராட்டம் நடந்து கொண்டிருந்த போதே ஒரு தெளிவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவன் என்ற முறையில் இதனை எழுதுகிறேன்.

சல்லிக்கட்டுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் விதித்த தடையைக் கடந்து சல்லிக்கட்டு நடத்த வேண்டுமானால், 1960ஆம் வருடத்திய இந்திய விலங்குவதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்தாக வேண்டும். இந்தத் திருத்தத்தை இந்திய அரசு செய்யலாம், அல்லது, விலங்குநலம் பொது அதிகாரப் பட்டியலில் இருப்பதால், மாநில அரசும் செய்யலாம். அதாவது உரிய திருத்தச் சட்டத்தை இந்திய அரசு நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் மாநில அரசு சட்டப் பேரவையில் முன்மொழிந்து நிறைவேற்ற வேண்டும். எப்படிச் செய்தாலும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும் என்பது வேறு செய்தி.

எனவேதான் சல்லிக்கட்டு உரிமை மீட்புக்கான நமது கோரிக்கை இந்திய அரசு விலங்குவதைத் தடுப்புச் சட்டத்துக்குத் திருத்தச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதாயிற்று. இந்திய அரசு இப்படிச் செய்ய முன்வராத நிலையில் தமிழக அரசே சட்டப் பேரவையை கூட்டித் திருத்தச் சட்டம் கொண்டுவருமாறு கேட்டோம். இந்திய அரசோ தமிழக அரசோ இப்படி எதுவும் செய்யாமல் காலங்கடத்திக் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் பக்கமே கைகாட்டிக் கொண்டிருந்தன.

அந்த நேரம் நாடாளுமன்றமோ தமிழகச் சட்டப் பேர வையோ அமர்வில் இல்லாததால் முறையான மன்றச் சட்டத்துக்கு மாற்றாக ‘அவசரச் சட்டம்’ இயற்றக் கேட்டோம். போராட்டத்தின் அழுத்தத்தால் தில்லி சென்ற தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இந்தக் கோரிக்கையை வலியுறுத்திய போது இந்தியத் தலைமையச்சர் மோதி மறுத்து விட்டார். இந்தக் கட்டத்தில்தான் மாநில அரசே ‘அவசரச் சட்டம்’ இயற்றலாம் என்ற கருத்தைத் தமிழக அரசு ஏற்றது. உடனே சட்டம் வரையப்பட்டு, தொடர்புடைய நடுவணரசு அமைச்சகங்களின் இசைவு பெறப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு, மறுநாளே தமிழக ஆளுனரால் பிறப்பிக்கப்பட்டது.

இது சல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டத்துக்குக் கிடைத்த முழுமையான வெற்றி. ஆனால் இந்த வெற்றியை அறிந்தேற்று போராட்டத்தை நிறைவு செய்வதற்கு மாறாக நீட்டிச் சென்றதற்கு சட்ட அறியாமைதான் முக்கியக் காரணம். அரசு இந்த அறியாமையைப் போக்க முயலாத நிலையில் போராட்டக்காரர்கள் பலரும் “அவசரச் சட்டம் வேண்டாம், நிரந்தரச் சட்டம் வேண்டும்” என்று குரல் கொடுக்கலாயினர்.

‘அவசரச் சட்டம்’ என்றால் என்ன என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை என்பதே காரணம். Ordinance என்ற ஆங்கிலச் சொல்தான் அவசரச் சட்டம் என்று தமிழாக்கம் செய்யப்படுகிறது. இயல்புச் சூழலில் நாடாளுமன்றம் அல்லது சட்ட மன்றம்தான் சட்டமியற்றுவதற்குச் சரியான சனநாயக நிறுவனம். ஆனால் அந்த மன்றங்கள் கூடாமலிருக்கும் நேரத்தில் அவசரமாக ஒரு சட்டம் இயற்ற வேண்டி வந்தால் என்ன செய்வது? குடியரசுத் தலைவரோ ஆளுனரோ அமைச்சரவைப் பரிந்துரைப்படி ஆணை பிறப்பிப்பதன் வாயிலாக அச்சட்டத்தை இயற்றலாம், பிறகு ஆறு மாதம் என்பது போல் வரையறுத்த குறுகிய காலத்துக்குள் அதனை நாடாளுமன்றம் அல்லது சட்ட மன்றத்தில் முன்வைத்து முறையான சட்டமாக்கிக் கொள்ளலாம். அவசரத் தேவை கருதி பிறப்பிக்கப்படுவது என்பதால் அவசரச் சட்டம் என்று பெயர்பெற்று விட்டது.

ஆனால் Ordinance என்ற சொல்லில் அவசரம் என்ற கூறு மருந்துக்கும் இல்லை. Ordinance என்றால் அரச கட்டளை என்று பொருள். எனவே Ordinanceஎன்பதை ஆணைவழிச் சட்டம் எனலாம். Legislation என்றால் மன்றவழிச் சட்டம், ordinance என்றால் ஆணைவழிச் சட்டம். சுருக்கமாக, மன்றச் சட்டம், ஆணைச் சட்டம் என்று வேறுபடுத்திப் பார்க்கலாம். மற்றபடி அவசரச் சட்டம், நிரந்தரச் சட்டம் என்று வேறுபடுத்திப் பேசுவதற்கு அடிப்படை ஒன்றுமில்லை. அவசரச் சட்டம், நிரந்தரச் சட்டம் என்று ஆளாளுக்குப் பேசப்போய், வல்லுநர்களும் இதே ‘மக்கள்-மொழி’யில் பேசத் தொடங்கி விட்டார்கள். இது குழப்பத்தைக் குறைக்கப் பயன்படவில்லை.

சட்ட மன்றத்தால் நிறைவேற்றப்படாத சட்டம் என்பதால் ஊராட்சி பிறப்பிக்கும் சட்டத்தை ordinance என்று சில நாடுகளில் அழைக்கின்றனர். அதாவது சட்டம் பிறப்பிக்கப்படுகிற முறையைப் பொறுத்தே அதற்கு இந்தப் பெயர் வருகிறது.

சனவரி 19 அறிவிக்கப்பட்டு, 20 குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, 21 ஆளுனரால் பிறப்பிக்கப்பட்ட சல்லிக்கட்டு உரிமைக்கான ஆணைச் சட்டம் 23 மாலை சட்டப் பேரவையால் ஒருமனதாக ஏற்கப்பட்டு முறையான மன்றச் சட்டம் ஆகிச் செயலுக்கு வந்து விட்டது. இந்த வெற்றிக்கான பெருமை அறப்போரில் களங்கண்ட மாணவர்கள், இளைஞர்கள், மக்களைச் சாரும்.

ஆணைச் சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டு, முறைப்படி மன்றச் சட்டமாக மலர்ந்துள்ள சல்லிக்கட்டு உரிமைக்கான சட்டத்தின் முதன்மைக் கூறுகளைத் தெரிந்து கொள்வோம்.

விலங்குவதைத் தடுப்புச் சட்டம், 1960 - இந்தச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்துவதுதான் இப்போதைய சட்டம். கடந்த 2014 மே 7ஆம் நாள் இந்திய உச்ச நீதிமன்றம் சல்லிக்கட்டுக்குத் தடைவிதித்த போது சுட்டிய காரணிகளைக் கவனித்துச் சரி செய்வதாக இந்தத் திருத்தச் சட்டம் உள்ளது. இவ்விதம் உச்ச நீதிமன்றம் விதித்த தடையை அது செயலிழக்கச் செய்கிறது. எப்படி என்று பார்ப்போம். மூலச் சட்டமான விலங்குவதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தச் சட்டம் செய்யும் மாற்றங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

1) திருத்தச் சட்டத்தின் நோக்கத்தைக் குறிப்பிடும் போது, தமிழ்நாட்டின் மரபு, பண்பாட்டு உரிமை என்ற வகையில் மட்டுமல்லாமல், நாட்டு மாடுகளின் நலத்துக்கும் காப்புக்கும் தேவை என்ற வகையிலும் சல்லிக்கட்டை வலியுறுத்துவது சிறப்பு.

 2) சல்லிக்கட்டு என்பதற்கு இலக்கணம் வகுக்கும் வகையில் 2(இஇ) [ஆங்கிலத்தில் 2(dd)] என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. சல்லிக்கட்டு என்பதில் மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுவிடும் விழா ஆகியவையும் அடங்கும் என்று தெளிவுபடுத்தப்படுகிறது.

3) சல்லிக்கட்டு நடத்த விதிகள் வகுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு வழங்கப்படும் வகையில் பிரிவு 3 திருத்தப்பட்டு 3(2) என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

4) பிரிவு 11(3) என்பதில், சல்லிக்கட்டு என்பது விலங்குகளை வதைப்பதாகாது என்று கூறும் (ஊ) [ஆங்கிலத்தில் (f)] என்ற கூறு சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, கொம்பு அகற்றுதல், சூடு போட்டுப் பெயர், எண் எழுதுதல், மூக்கணாங்கயிறு போடுதல், இலாடமடித்தல், பலியிடுதல், உணவுக்காகக் கொல்லுதல், வண்டியிழுக்கச் செய்தல், ஏர் பூட்டுதல், காயடித்தல்... இவையெல்லாம் விலங்குவதையாகக் கருதப்பட மாட்டா என்பது போலவே சல்லிக்கட்டும் விலங்குவதையாகக் கருதப்பட மாட்டாது.

5) பிரிவு 22க்குச் சேர்க்கப்பட்டுள்ள விலக்கு விதி அப்பிரிவு சல்லிக்கட்டுக்குப் பொருந்தாது என்று தெளிவாக்குகிறது. அதாவது காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளையைச் சேர்க்கும் 11-.07.-2011 நாளிட்ட நடுவணரசின் அறிவிக்கை - எதைக் காரணமாகக் காட்டி சல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததோ அந்த அறிவிக்கை - சல்லிக்கட்டுக்குப் பொருந்தாமற் செய்யப்பட்டுள்ளது. (தமிழகத் திருத்தச் சட்டத்துக்குப் பின் இந்த அறிவிக்கையையே இந்திய அரசு விலக்கிக் கொண்டு விட்டது.)

6) விலங்குவதைத் தடுப்புச் சட்டத்தின் 27ஆம் பிரிவில் ஒரு கூறு சேர்க்கப்பட்டிருப்பதால் அச்சட்டத்தின் அத்தியாயம் V இன் ஆட்சியெல்லையிலிருந்து சல்லிக்கட்டுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. அதாவது படைத்துறையும் காவல்துறையும் நாய், குதிரை போன்ற விலங்குகளைத் தங்கள் பணிகளுக்குத் துணையாகப் பயன்படுத்திக் கொள்வது எப்படி விலங்குவதையாகக் கருதப்படாதோ, அதேபோல் சல்லிக்கட்டும் விலங்குவதையாகக் கருதப் படாது என்பதே இதன் பொருள். இப்படி விலக்களிக்கப் பட்டிருப்பதால் விலங்குவதைத் தடுப்புச் சட்டத்தின் 22ஆம் பிரிவின்படியான எந்த அறிவிக்கையாலும் சல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க முடியாமற்போகும்.

7) இந்தச் சட்டத்தின் எந்தப் பிரிவின் படியும் சல்லிக்கட்டு நடத்துவது குற்றமாகாது என்று பிரிவு 28க்குப்பிறகு 28-A தெளிவாக்குகிறது.

ஆகவே, இது சல்லிக்கட்டு உரிமையைப் பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த சட்டம். நமது உறுதியான அறப் போராட்டத்தால் கிடைத்திருக்கும் அருமையான சட்டம். இந்தச் சட்டத்தைத் தமிழ்ப் பண்பாட்டின் பகைவர்கள் நேர்வழியில் வந்து வீழ்த்த முடியாது. நீதிமன்றத்திலும் வெளியிலும் அவர்கள் வேறு வழியில் வருவார்களானால், வரட்டும், விழிப்போடிருந்து முறியடிப்போம். அப்போது இந்தச் சட்டமும் நமக்கொரு போராட்டக் கருவியாகப் பயன்படும். உறங்கா விழிப்பே உரிமைவாழ்வுக்கு விலையன்றோ?