இந்த நூல் ஆராய்ச்சிக் கட்டுரை என்ற பொருளடக்கத்தில் எழுதப்பெற்றுள்ளது. ஆசிரியர் மெர்வின் அவர்கள் இயேசுவரமாட்டார் என்பதற்கு ஆதாரமான உண்மை நிலையினைத் தெளிவுடன் படம் பிடித்துக்காட்டியுள்ளார். கிறிஸ்தவர்களின் வாழ்க்கைமுறையில் இருக்கும் பழக்கங்களை சுட்டிக்காட்டி, தவறுகளைத் தோலுரித்துக்காட்டியுள்ளார். தனது உரையில் இந்தியாவிலே இதுமாதிரியான நூல் வருவது முதல் முறை எனப் பதிவிட்டுள்ளார். பொதுவாக பல்வேறு கிறிஸ்துவ சபைகள் தான் பாதிரியார்கள்குழு மூலமாக சுயசோதனை அடிப்படையில் அறிக்கைகளைத் தலைமையிடத்தில் வாங்குவார்கள். ஆனால் இயேசுவரமாட்டார் என்னும் நூல் பொதுமக்களின் தளத்தில் இருந்து தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ள உதவும்.

mervin bookஇந்நூலில் பல்வேறு துணைத் தலைப்புகளில் இயேசுவரமாட்டார் என்பதற்கான உண்மை நிலையினைப் பதிவு செய்கின்றார். குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவர்கள் அவர்கள் சார்ந்துள்ள பல்வேறு சபைக்குழுக்களையும் ஆராய்ந்து இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.

இயேசு முன்பு ஏன் வந்தார்? இப்பொழுது ஏன் வரமாட்டார்? பிதாவானவர் இயேசுவை அப்பொழுது மட்டும் மனித அவதாரம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? உலகிலுள்ள எத்தனையோ வகுப்புப் பிரிவினர்கள் இருக்கும்பொழுது யூதர் பிரிவில் மட்டும் தோன்றியது ஏன்? என்ன காரணம்? இதற்கெல்லாம் விடை காண வேண்டிய அவசியத்தினை பகுத்தறிவோடு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவதாரங்களில் நமக்கு உடன்பாடு இல்லை. இயேசுவந்தபின் என்ன சொன்னாரோ அதன்படியே வாழ்ந்துள்ளார். சொல் ஒன்று செயல் வேறு ஒன்றாக அவர் நடந்து கொள்ளவே இல்லை. உன்னைப் போல் பிறரை நேசி என்ற உயர்ந்த பண்பாட்டை உலகெங்கும் பறை சாற்றினார் என்று அன்பு ஒன்றுக்காக தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.

இயேசு பூமியில் நடமாடிய முப்பத்திமூன்று ஆண்டுகள் முற்போக்கான கருத்துகளைக் கூறியபோதும் அன்று இருந்த மக்கள் எந்த நிலையில் செயல்பாடுகளில் இருந்தார்களோ அதைவிட மோசமான நிலையில் இன்று கிறிஸ்தவர்கள் இருப்பதைக் காண முடிகிறதாக எழுதியுள்ளார்.. பாவிகளை மீட்க வந்துள்ள இயேசு ஒரு முறை வந்துவிட்ட போதும் ‘இயேசுவரப்போகின்றார்’ என்ற சொல்லாடலை பல்வேறு தரப்பினரும் எடுத்துக்கொண்டு, தங்களின் வளமான வாழ்க்கைக்கும் கிறிஸ்துவ மக்களின் மூடத்தனத்தினை தக்க வைக்கவும் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டுகின்றார்.

கிறிஸ்தவர்களும் பாஸ்டர்களும் செய்யும் அட்டூழியங்களைப் பதிவு செய்துள்ள ஆசிரியர், இயேசு, உன்னைப்போல பிறரை நேசி என்று கூறுகிறாரே தவிர, உன்னைப் போல உன்னையே நேசி என்று கூறவில்லை என அவர்களின் சுயநலப்போக்கினை கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும் பிறமதத்தினரை எள்ளி நகையாடித் தாங்கள் மட்டும்தான் உன்னதமானவர்களாகக் காட்டிக் கொள்பவர்கள், வாய்க்கு வந்தபடி பேசுவது முறையல்ல என்று பதிவிடுகிறார். மற்ற மதத்தினர் பாவிகள் என்றும் அவர்கள் மனந்திரும்பி கிறிஸ்தவர்களாக மாற வேண்டும் என்கிறார்கள் “நீ உன் கண்ணிலிருக்கிற உதிரத்தை உணராமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன” என்று இயேசு கேட்பதாகப் பதிவிட்டுள்ளார்.

பொதுவாகக் கிறிஸ்தவர்கள் கடமைக் கிறிஸ்தவர்களாகத் தான் உள்ளனர். சுயநலமே முக்கியமான நோக்கமாக மாறிப்போய் உள்ளது. மனத்தின் எண்ணம் மாற வேண்டும். நல்ல எண்ணம் தோன்றாத பொழுது இவர்கள் எப்படி ஒற்றுமையாக ஒரே கூட்டமாக இருப்பார்கள் என்ற கேள்வியை முன் வைக்கிறார்.

மேலும் குருட்டு நம்பிக்கை என்னும் சித்திரக்காரனால் அறியாமை என்னும் காகிதத்தில் பயனற்ற எழுதுகோலால் தீட்டப்பட்ட வாசகமே இயேசு வருவார் என்பது என்றும் - ஒரு இயேசுவை வணங்கும் மக்களிடையே இத்தனை பிரிவுகள் ஏன்? எதற்காக? எல்லாமே சுயநலம் தான் தங்களின் பெயர் பிரபலமாகவும் பணம் சம்பாதிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இவ்விதம் இருக்கின்றார்கள் என்றும் - போப்பின் பாவமன்னிப்புச் சீட்டு என்ற பணம் பறிக்கும் அநியாயத்தை எதிர்த்து அவனியெங்கும் புரட்சி செய்து அறிவுக்கண்ணைத் திறந்த மார்ட்டின் லூதர் இருந்த போதே இயேசு வந்திருக்க வேண்டும் என்றும் - உயிருடன் பிறப்பது ஒருமுறைதான், உலகில் மறுபிறப்பு என்பது மாய்மாலத்தன்மையே தவிர வேறில்லை என்றும் அழுத்தமாகப் பதிவு செய்கின்றார்.

கிறிஸ்துவப் பெண்களின் நிலையினையும் பாலியல் துன்புறுத்தல்களையும் பதிவு செய்துள்ள ஆசிரியர் இவ்வாறாகப் பெண்ணை இழித்தும் பழித்தும் கூறுவதிலே காலத்தைக் கடத்திவிட்டு கட்டில்லறைக்கு துணைசேர்க்கும் காளையர்களின் மனது என்று மாறும்? எனப் பதிலிடுகிறார். “என்னுடைய வீடு ஜெபவீடாக இருக்கிறதென்று எழுதியிருக்கின்றது. நீங்களே அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்” என்ற இயேசுவின் வார்த்தை இன்றளவும் உண்மையாக இருக்கின்றதென ஜெபக் கூடாரங்களையும் கோவில்களையும் சாடுகின்றார்.

எத்தனையோ குற்றங்களையும் குறைகளையும் உள்ளே வைத்துக்கொண்டு வெளிப்பார்வைக்கு நல்லவனாக நடித்து மற்றவர்களின் நியாயம் தீர்க்கும் திமிர் பிடித்தவர்களின் இடத்தை முதலில் பெறுபவர்கள் பாஸ்டர்கள்! பிரதர்கள் என எழுதியுள்ளார்.

அநீதியை எதிர்த்துப் போராடுவதும் இயேசுவின் ஆணைதான்; எதிர்ப்பு ஏற்படலாம் ஏளனம் கூறப்படலாம் . ஆனால் இவைகளைக் கண்டு அசந்து போய்விடக்கூடாது. உண்மைக்கு உரைக்கல்லாய் இருக்கின்றோம் என்ற உணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் இந்த நூலின் மூலமாக அறைகூவல் விடுக்கிறார்.

பெரியாரியலாளர்கள் இயேசுவின் பிறப்பு இறப்பு உயிர்ப்பு போன்றவைகளில் உடன் பாடானவர்கள் இல்லை. ஆசிரியர் இந்த நூலில் அதிகமாகப் பாஸ்டர்கள், பாதிரியார்கள், இறைமக்கள் ஆகியோர்களின் செயல்பாடுகளைக் கோடிட்டு காட்டியுள்ள போதிலும் - அருட்சகோதரிகளின் நிலையினையும் அவர்களுக்குள்ளான இடையூறுகளையும் பதிவுசெய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்கின்ற தவறுகளை வைத்து கிறிஸ்தவர்களை மதிப்பிட வேண்டாம் என்றாலும் சமூகச் செயற்பாட்டாளர்களாகப் பொது மக்களுக்காகச் செயல்படும் கிறிஸ்துவ ஆர்வலர்கள் மற்றும் அருட்பணியாளர்களின் எண்ணிக்கை சிறிதளவாகும்.

கத்தோலிக்கத் திருச்சபையில் நடக்கும் ஊழல்கள், பழமைவாத கருத்துக்களைத் திணித்தல், சாதியப் பாகுபாட்டுடன் செயல்படும் அருட்சகோதரர்களையும், தலைமைக்குருக்களையும் சுட்டிக் காட்டியிருந்தால் இந்த நூல் முழுமைபெற்றிருக்கும். கத்தோலிக்கத் திருச்சபையைக்காட்டிலும் ஏனைய பிரிவுகளில் சாதியப் பாகுபாடு குறைவே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் மெர்வின் அவர்கள் நூலில் பெண்களின் கற்பு நிலைப் பாதுகாப்பு குறித்தும் கூறப்பட்டுள்ள கருத்து ஏற்புடையதல்ல. “கற்புக்காக காதலற்ற இடத்தை கட்டிஅழுதுகொண்டிருக்க செய்யும்படியான நிர்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும். கற்புக்காக புருஷனின் மிருகச்செயலை பொறுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும்.” (தோழர் பெரியார் 08.01.1928 குடி அரசு)

கற்பு என்கின்ற பதமே பெண்களை ஆண்களுக்கு நிரந்தர அடிமைகளாக்குகின்ற தன்மையே தவிர வேறொன்றும் இல்லை. இயேசுவரமாட்டார் என்னும் இந்த நூல் ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் அகவாழ்க்கை முறையினைப் பதிவுசெய்யும் சுயசரிதை என்பது மிகையாகாது.

நூல் ஆசிரியர்: மெர்வின் , 911 இ முதல் மெயின்ரோடு, ஏரித்திட்டம் முகப்பேறு மேற்கு, சென்னை 600 037, கைப்பேசி: 93827 18678.

Pin It