The Cheese and the Worms - Carlo Ginzburg (2013)

The Cosmos of a Sixteenth Century Miller

The Johns Hopkins University Press, Boltimore

carlo ginzburg book 350எந்த ஒரு சமயத்திலும் அதைப் பின்பற்றும் சாமானிய மனிதர்களுக்கும் சமயத் தலைவர்களுக்கும் இடையே அவ்வப்போது முரண்பாடுகள் உருவாவது இயல்பான ஒன்று. இதுவே வளர்ச்சி பெற்று, புதிய சமயப்பிரிவுகள் உருவாகக் காரணமாக அமைவதும் உண்டு. இத்தகைய சூழல்களில் தம் அமைப்பைப் பாதுகாத்துக் கொள்ளும் முகமாக, சில நடவடிக்கைகளை சமயத்தலைவர்கள் மேற்கொள்வர். இதுபோன்ற ஒரு நெருடிக்கடியை, போப்பாண்டவரின் உலகத்தலைமையை ஏற்றுக்கொண்டிருந்த ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை மூன்றாவது நூற்றாண்டு தொடங்கி பதினெட்டாவது நூற்றாண்டு வரையிலான காலங்களில் அய்ரோப்பாவில் எதிர்கொள்ள நேரிட்டது.

குறிப்பாக, மார்ட்டின் லூதரின் சமய சீர்திருத்த இயக்கமும் (Reformation Movement) கலை இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் புதிய சிந்தனைகள் உருவாகிப் பரவிய மறுமலர்ச்சி இயக்கக்காலம் (Renaissance Period), புத்தொளிக் காலம்  (Age of Enlightment) என்பனவும், போப்பின் தலைமையை ஏற்றுச் செயல்பட்டு வந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு சவாலாய் அமைந்தன.

பல நூற்றாண்டுகளாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை அறிவுறுத்திப் பரப்பி வந்த சிந்தனைகளுக்கு நம்பிக்கைகளுக்கு எதிரான போக்கு அதற்குள் உருவாகி வலுப்பெறத் தொடங்கியது. இதை எதிர் கொள்ள அது உருவாக்கிய ஓர் அமைப்பே “நம்பிக்கை புலனாய்வு மன்றம்” (Inquisition) ஆகும். ஒன்பதாம் கிரிகோரி என்ற போப் கி.பி. 232-இல் இவ் வமைப்பை நிறுவினார்.

கத்தோலிக்கத் திருச்சபை ஏற்றுக்கொண்டு கற்பிக்கும் கோட்பாடுகளுக்கு எதிராகக் கருத்துரைப் போரைத் தடுத்து நிறுத்தித் தண்டிக்கும் நோக்கி லேயே இது நிறுவப்பட்டது. இதன் செயல்பாடுகள் பின்வரும் கூறுகளைக் கொண்டிருந்தன. 1) இரகசியப் புலனாய்வு 2) ஆட்காட்டிகளை பயன்படுத்துதல் (Informer) (3) பொய்சாட்சிகளை உருவாக்கல் 4) சித்திரவதை செய்தல் 5) இம்மன்றம் தண்டிக்கும் மனிதனின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல் 6) தண்டனைக்கு ஆளானவரின் உறவினரையும் பரம்பரையினரையும் கூடத் தண்டித்தல்.

இவ்விசாரணை முறையில் இருந்து பெண்களும், சிறார்களும் கூடத் தப்பவில்லை. நான்காம் இன்னசெண்ட் என்ற போப் கி.பி.1252-இல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சித்திரவதைகள் நிகழ்த்த அனுமதி வழங்கினார். தண்டனை வழங்கும் உரிமையை பெற்றிருந்த இவ்வமைப்பு பின்வரும் தண்டனைகளை வழங்கியது.

  • உடலை வருத்தும்படியான ஆடை அணியச் செய்தல்
  • பிரம்பு அல்லது சவுக்கால் அடித்தல்
  • கடுமையான தண்டம் விதித்தல்
  • சிறையில் அடைத்தல்
  • வைக்கோல் போரில் வைத்து உயிருடன் எரித்தல்.

அமைப்பு

இவ்வமைப்பின் செயல்பாடுகளுக்கு எதிரான சிந்தனைப்போக்கு பொதுமக்களிடம் உருவாகாதவாறு இதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். நம்பிக்கைப் புலனாய்வு மன்றத்தின் உயர் விசாரணை அதிகாரியாக கடவுளை அறிவித்திருந்தனர். எனவே இம்மன்றத்தை எதிர்ப்பது என்பது கட்புலனாகாத தலைவராக விளங்கும் கடவுளை எதிர்ப்பதற்கு இணையானது என்ற கருத்து மக்கள் உள்ளத்தில் பதியவைக்கப் பட்டது.

கடவுளின் சார்பில் கத்தோலிக்கத் திருச்சபையை நிர்வகிப்பவர் என்று அறியப்பட்ட போப் துணை அதிகாரியாக விளங்கினார். இதன் அடிப்படையில் நம்பிக்கைப் புலனாய்வு மன்றத்திற்கு எதிரான கருத்துநிலை என்பது கடவுளின் சார்பில் கத்தோலிக்கத் திருச்சபையின் கட்புலனாகும் தலைவராக விளங்கும் போப்பிற்கு எதிரானது என்ற கருத்து வலியுறுத்தப் பட்டது.

சாமிநாதர் சபை என்றழைக்கப்படும் டாமினிகன் (Dominicians) துறவற சபையைச் சார்ந்தவர்கள் நடை முறையில் விசாரணை நடத்துபவர்களாக விளங்கினர். அவ்வப்பகுதியில் உள்ள ஆயர்களின் அனுமதியைப் பெற்று நம்பிக்கைப் புலனாய்வு மன்றம் செயல் பட்டது.

சமய விதிமுறைகளை மீறுவோருக்கு எதிரான அமைப்பு என்று இது அறிவிக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில், நிலவுடைமைக்கு எதிரான, மதச் சார்பற்ற மக்கள் இயக்கத்தை ஒடுக்குவதற்கு இவ்வமைப்பு பயன்படுத்தப்பட்டது. மறுமலர்ச்சி இயக்கக் காலமான 16, 17-ஆவது நூற்றாண்டுகளில் மனிதநேயவாதிகள், போப்பின் தலைமையை ஏற்றுக்கொள்ளாதவர்கள், பண்பாடு, அறிவியல் துறை சார்ந்த ஆளுமைகள் ஆகியோருக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளை இவ்வமைப்பு மேற் கொண்டது. புத்தொளிக்காலச் சிந்தனையாளர்கள், பிரெஞ்சுப்புரட்சி ஆதரவாளர்கள் ஆகியோருக்கு எதிராகவும் இவ்வமைப்பு செயல்பட்டது.

நம்பிக்கை புலனாய்வு மன்றம் குறித்த இச் சுருக்கமான செய்திகளின் பின்புலத்திலேயே ‘பாலாடைக்கட்டியும் புழுக்களும்’ என்ற நூலை அறிந்து  கொள்வது பொருத்தமாய் இருக்கும்.

நூலின் மையச்செய்தி

இத்தாலி நாட்டின் மலைப்பகுதி ஒன்றில் உள்ள மாந்தேவில் என்ற சிறு நகரத்தில் பிறந்துவளர்ந்தவர் டொமினிசியோ சாகன் தலா. இவர் மெனுசியோ என்ற சுருக்கமான பெயரில் அழைக்கப்பட்டார். கி.பி.1532-இல் பிறந்த இவர் அரவை ஆலை நடத்தியும், தச்சுவேலை கட்டிட வேலைப்பணிகளை மேற்கொண்டும் வாழ்ந்துள்ளார். இவ்வேலைகளில் பெரும்பாலும் அரவை ஆலை வேலையையே இவர் பெரிதும் மேற்கொண்டிருந்தார். இதனால் அரவை ஆலைப் பணியாளர் உடையிலேயே காட்சியளித் துள்ளார். திருமணமான இவர் பதினோரு குழந்தை களின் தந்தையாவார். இக்குழந்தைகளில் நான்கு குழந்தைகள் இறந்துபோயின. இரண்டு அரவை ஆலைகளை வாடகைக்கு எடுத்தும் இரண்டு விளை நிலங்களைக் குத்தகைக்கு எடுத்தும் பொருளாதார நிலையில் ஏழையாகவே வாழ்ந்துள்ளார்.

1581-ஆவது ஆண்டில் மாந்தேவில் என்ற கிராமத்தின் மேயராகப் பணியாற்றியுள்ளார். அத்துடன் இதே கிராமத்தின் தேவாலய நிர்வாகியாகவும் இருந்ததாகத் தெரியவருகிறது. எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தமையே இப்பதவியை அவர் பெற துணை புரிந்திருக்க வேண்டும். ஓரளவுக்கு இலத்தீன் மொழி அறிவும் அவருக்கு இருந்திருக்க வேண்டும் என்பது நூலாசிரியரின் கருத்தாகும்.

இத்தகைய வாழ்க்கை வாழ்ந்துவந்த மெனுசியோ 1583 செப்டம்பர் 28-வது நாளன்று சமயவிரோத குற்றச்சாட்டுக்கு ஆளானார். இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது நடந்த வழக்கு, அதில் அவருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு, தமக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிரான அவரது மேல்முறையீடு, அதிலும் அவரது தண்டனை

உறுதி செய்யப்பட்டமை என்பனவற்றை இந்நூல் விரிவாகக் கூறிச் செல்கிறது.

நூலாசிரியர்

இந்நூலாசிரியரான கார்லோ கின்ஸ்பர்க் 1939-ஆவது ஆண்டு ஏப்ரல் திங்கள் 15-ஆவது நாளில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள். இவரது தாய் நதாலியா கின்ஸ்பர்க் நாவல் ஆசிரியர். தந்தை லியோனா கின்ஸ்பர்க், சொற்பிறப்பியல், வரலாறு, இலக்கியம் ஆகிய துறைகளில் நூல் எழுதியுள்ளார். மார்க் பிளாங் என்ற பிரான்ஸ் நாட்டு வரலாற்றறிஞரின் தாக்கம் கின்ஸ்பர்கிடம் உண்டு. இத்தாலியின் சிறந்த வரலாற்றாசிரியர்கள் வரிசையில் இவர் இடம் பெற்றுள்ளார். கின்ஸ்பர்க், இத்தாலி நாட்டின் போல்கோனா, அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா, பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றி யுள்ளார். 2010-ஆவது ஆண்டில் உலக அளவிலான பால்சன் விருதைப் பெற்றவர். ‘இரவுச் சண்டைகள்: பதினாறு, பதினோராவது நூற்றாண்டுகளில் பில்லி சூன்யமும், வேளாண் வழிபாடுகளும்’, ‘புராணங்களும் வரலாற்று முறைகளும்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

தன் ஆய்வின் பொருட்டு இத்தாலி நாட்டிலுள்ளயுடின் நகரிலுள்ள ‘ஆஞ்சிலோ தெல்லா பூரியோ ஆர்சியூ கோவில்’ என்ற ஆவணக்காப்பகத்தில்

1962-ஆவது ஆண்டில் ஆவணங்களைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் பார்வையில் பட்ட ஓர் ஆவணமாக மேலே குறிப்பிட்ட மெனுசியோ மீதான வழக்கு ஆவணம் அமைந்தது. இந்த ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதியதே இந்நூல்.

cheeseworns 600நூல் கூறும் செய்தி

மேலே குறிப்பிட்ட மெனுசியோ கத்தோலிக்கக் கிறித்தவர் என்றாலும் அவர் தமக்கென சில சுயேச்சையான சிந்தனைகளைக் கொண்டு வாழ்ந்தார். குறிப்பாக பிரபஞ்சம் (Cosmos) குறித்து கத்தோலிக்கத் திருச்சபை வெளிப்படுத்தி வந்த கருத்துகளுக்கு மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தார்.

இதுவே நம்பிக்கைப் புலனாய்வு மன்றத்தின் பார்வைக்குள் அவரைக் கொண்டு வந்தது. 1583 செப்டம்பர் 28-வது நாளன்று கத்தோலிக்கத் திருச்சபையின் விசாரணைக்கு வரும்படி அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. கிறிஸ்துவுக்கு எதிராக புனிதமற்ற சொற்களைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தன் மதவிரோதக் கருத்துகளை அவர் போதித்ததாகவும், மதகுருவால் குற்றம் சாட்டப்பட்டார். இதை மறைமாவட்ட தலைமைக் குருவிடம் (விகார் ஜெனரல்) அவர் தெரிவித்தார். யாருடனாவது மதவிரோதக் கருத்து களை விவாதிப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்த தாகவும் மதகுருவிடம் கூட இவ்வாறு விவாதித்த தாகவும் குறிப்பிட்டனர். இதை உறுதிப்படுத்தும் வகையிலான சாட்சியங்களும் முன்வைக்கப்பட்டன. சமயக்கருத்துகள் தொடர்பாக மெனுசியோ தன்னுடன் விவாதித்தபோது, Òநான் செருப்புத் தைப்பவன், நீ அரவை ஆலைக்காரன் கற்றறிந்தவன் அல்லன். நாம் இருவரும் விவாதிப்பதால் என்ன பயன்?” என்று கூறியதாக செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர் சாட்சியமளித்தார்.

சமயம் குறித்த அறிவு சராசரி மனிதனுக்கு உரியதல்ல. மதகுருக்களுக்கே உரியது என்ற சிந்தனைப்போக்கின் வெளிப்பாடாகவே இந்தச் சாட்சியம் அமைந்தது. கத்தோலிக்கத் திருச்

சபைக்கு எதிரான சிந்தனைப்போக்குடையவராக மெனுசியோவைக் கருதியதாய் பலர் கருத்துத் தெரிவித்தனர். அவர் போதித்த கருத்துகளாக தலைமைக் குருவிடம் அவர்கள் கூறிய செய்திகள் நம்பிக்கைப் புலனாய்வு மன்றத்தின் விசாரணை ஆவணங்களில் பதிவாகியுள்ளன. அவற்றுள் சில வருமாறு:

காற்று நமது கடவுள். இந்த பூமி நமது தாய். யாரைக் கடவுளென்று நாம் கற்பனை செய் கிறோம். அவரை மனிதர்கள் எப்படிக் கற்பனை செய்த போதிலும் அவர் சிறிதளவு மூச்சுக்காற்று என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. நாம் கண்ணால் காண்பதெல்லாம் கடவுள்தான். நாமும் கடவுள்தான். ஆகாயம், பூமி, கடல், காற்று, சொர்க்கம், நரகம் என அனைத்துமே கடவுள்தான். யேசு கிருத்து கன்னிமேரியிடம் பிறந்ததாக நம்புகிறீர்கள்! அவரைப் பெற்று விட்டு கன்னியாக அவர் இருக்கமுடியுமா? யேசு வானவர் நல்ல மனிதராகவோ நல்ல மனிதர் ஒருவரின் மகனாகவோதான் இருக்க முடியும்.

கத்தோலிக்கத் திருச்சபையால் தடைசெய்யப் பட்ட புத்தகங்கள் மெனுசியோவிடம் இருந்தன. குறிப்பாக வட்டார மொழியில் அமைந்த விவிலியம் அவரிடம் இருந்தது. (இலத்தீன் மொழி விவிலியத்தையே கத்தோலிக்கத் திருச்சபை பயன்படுத்த அனுமதித்திருந்தது).

தமக்கு எதிராகக் கூறப்பட்ட இக்குற்றச்சாட்டுகள் ஆபத்தை ஏற்படுத்தும் தன்மையன என்பதனை மெனுசியோ உணர்ந்து கொண்டார். இதை எதிர் கொள்ளும் வழிமுறை குறித்து அவர் சிந்திக்கலானார். அவரது குழந்தைப் பருவ நண்பரும் தேவாலயம் ஒன்றில் பங்குக் குருவாகப் பணியாற்றி வருபவருமான ஒருவரை அணுகி தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்துக் கூறினார்.

தாமாகவே முன்வந்து திருச்சபை அலுவலகத்திற்கு செல்லும்படி அவர் கூறினார். அல்லது அவர்கள் அறிய விரும்பும் செய்திகளைக் கூறுவதுடன் அதிகமாகப் பேசி விவாதிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அவரைச் சந்தித்த முன்னாள் வழக்கறிஞர் ஒருவர், தாமாக முன்வந்து நீதிபதிகளைச் சந்தித்து தம் குற்றத்தை ஒத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். அத்துடன் தாம் கூறியவற்றை ஒருபோதும் தாம் நம்பியதில்லை என்று வெளிப்படுத்தும்படியும் கூறினார்.

இதன்படி தமக்கு வந்த அழைப்பாணைகளை ஏற்று சமயநீதிமன்றத்திற்கு மெனுசியோ சென்றார். அதற்கு மறுநாள் நம்பிக்கைப் புலனாய்வு மன்றத்தின் நீதிபதியாகச் செயல்பட்ட பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குருவானவர், மெனுசியோவைக் கைது செய்யும்படி ஆணை பிறப்பித்தார். அதன்படி 1584 பிப்ரவரி ஏழாம் நாளன்று மெனுசியோ கைது செய்யப்பட்டு விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டார்.

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மேரி மாதாவின் கன்னிமை குறித்து தனக்கு சில அய்யப்பாடுகள் இருந்ததாகவும், இது குறித்து தனிமனிதர்கள் சிலரிடம் தன் கருத்தை வெளிப் படுத்தியதாகவும் மெனுசியா ஒத்துக்கொண்டார். அதே நேரத்தில் தான் கூறுவதையெல்லாம் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவில்லை என்றும், உண்மையான வழி எதுவென்று தனக்கு அறிவுத்தும்படி வேண்டியதாகவும் கூறினார். கெட்ட ஆவியானது தன்னை இவ்வாறு நம்பச் செய்ததுடன் மற்றவர்களிடம் கூறும்படிச் செய்ததாகவும் குறிப்பிட்டார்.

பாலில் இருந்து உருவாக்கப்படும் பாலாடைக் கட்டியில் புழுக்கள் உருவாவது போல் நிலம், காற்று, தண்ணீர், நெருப்பு என்பன குழப்பமான முறையில் கலந்துள்ளன என்றும் இவற்றில் இருந்தே தேவதைகளும் கடவுளும் உருவாகியுள்ளதாகத் தாம் கருதியதாகவும் குறிப்பிட்டார். இப்படி உருவான கடவுளே, லூசிபர், மிக்கேல், காபிரியல், ரபேல் ஆகிய நான்கு தளபதிகளைப் படைத்துக்கொண்டார். பின்னர் ஆதாம், ஏவாள் என்ற இருவரையும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் திரளையும் படைத்தார். கடவுளின் கட்டளைகளுக்கு இவர்கள் கீழ்ப்படி யாமையால் அவர் தனது குமாரனை அனுப்பினார். அவரைத்தான் யூதர்கள் சிலுவையில் அறைந்தனர். இவர் புனித ஜோசப்புக்கும், கன்னிமேரிக்கும் பிறந்தவர்.

***

இவ்விசாரணையின் போது, சாட்சியமளித்த மக்கள் மெனுசியோவின் கூற்றாகக் கூறிய செய்தி களின் அடிப்படையில், அவர் மனநிலை பிறழ்ந்த வராக இருக்கலாமோ என்ற அய்யம் எழுப்பப் பட்டது. பின்னர் தெளிவான மன நிலையிலேயே மெனுசியோ பேசியுள்ளார் என்ற முடிவுக்கு மறை மாவட்டத் தலைமைக்குரு வந்தார். இதன் அடிப் படையில் அவர் மீதான விசாரணை தொடர்ந்தது.

இவ்வாறு, பிரபஞ்சம் கடவுள் தொடர்பாக மெனுசியோ தெரிவித்த கருத்துகள் அவருக்கு எதிரான மனநிலையை  கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகார வர்க்கத்திடம் உருவாக்கின. ஆனால் இந் நூலாசிரியர் இந்த எல்லைக்குள்  மட்டும் நின்று இந் நூலை உருவாக்கி விடவில்லை. இதுவே இந்நூலின் சிறப்புக் கூறு எனலாம்.  இந்த இடத்தில்  நம்பிக்கைப் புலனாய்வு மன்ற ஆவணங்கள் அடங்கிய ஆவணக் காப்பகத்தை ஆய்வாளர்கள்  பயன்படுத்துவது  தொடர்பாக அவர் மேற்கொண்ட முயற்சியைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

இரண்டாவது  ஜான்பால் என்பவர் போப் ஆக இருந்த போது வத்திகன்  நகரில் இருந்த நம்பிக்கை புலனாய்வு மன்ற ஆவணக் காப்பகத்தை பயன்படுத்த  ஆய்வாளர்களை அனுமதிக்கும்படி  இந்நூலாசிரியரான கார்லோ கின்ஸ்பர்க் வேண்டுகோள் விடுத்தார். இதன் அடிப்படையில் 1979இல் ஆய்வாளர்கள் சிலருக்கு அனுமதி கிடைத்தது. இதன் அடுத்த  கட்டமாக 1991 ஆவது ஆண்டில் இவ் ஆவணக்காப்பகத்தைப் பயன் படுத்தும் உரிமை வரலாற்றாய்வாளர்களுக்கு வழங்கப்பட்டது. சமயநம்பிக்கைக்கு எதிரான செயல் பாடுகளைக் குறித்த விசாரணை என்ற எல்லையைக் கடந்து, குடியானவருக்கும் நிலவுடைமை ஆதிக்கத்தைக் கொண்டிருந்த கத்தோலிக்கத் திருச்சபைக்கும் எதிரான கருத்து முரண்பாட்டை வெளிப்படுத்த  இவ் ஆவணங்கள் உதவின.

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைக்கும் சராசரி, குடியானவர்களுக்கும் இடையிலான பண் பாட்டு உறவையும்,  திருச்சபையின் பொருளாதார  மேலாண்மையையும் மெனுசியோ மீதான  வழக்கை முன் வைத்து நூலாசிரியர்  வெளிப்படுத்துகிறார்.

நுண் வரலாறு என்ற வரலாற்றுப் பிரிவு சார்ந்ததாக இந்நூலைக் கருதுவதற்கு  இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

பிரபஞ்சம் கடவுளர் தொடர்பான கருத்துகளை  அடுத்து மெனுசியோ வெளிப்படுத்திய கருத்துகளில் சில இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எடுத்துக் காட்டாக ஒன்றிரண்டைக் குறிப்பிடலாம்.

1) நிலங்கள் எல்லாமே பாதிரியார்களுக்கும் திருச்சபையினருக்கும் உரியதாக இருக்கிறது. அவர்கள் ஏழைகளை ஒடுக்குகிறார்கள்.  குத்தகைக்கு எடுத்து குடியானவர்கள் பயிரிடும் நிலங்கள் தேவாலயத்திற்கோ ஆயர், கார்டினலுக்கோ உரிமையானதாய் உள்ளன.

2) திருச்சபையின் ஆட்சி மொழியாக விளங்கும் இலத்தீன் மொழியானது ஏழைகளை ஏமாற்றப் பயன்படுகிறது. வழக்குகளின் போது என்ன விவாதிக்கப்படுகிறது என் பதை  இலத்தீன்  மொழி  அறியாத  குடியான வனால் அறிந்து கொள்ள முடியவில்லை. அவன் ஏமாற்றப்படுகிறான். நான்கு வார்த் தைகள்  கூறுவதற்குக் கூட வழக்கறிஞரின் உதவி தேவைப்படுகிறது.

***

கடவுளை நேசிப்பதை விட தன் அண்டை வீட்டுக்காரனை நேசிப்பது மேலானது என்ற கருத்தை விசாரணையின் போது மெனுசியோ வெளிப்படுத்தினார்.  இக்கருத்து விவிலியத்தில்  (மத்தேயூ 25:31-46) பின்வருமாறு இடம் பெற்றுள்ளது:

வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும் போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத் தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.  ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப் பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள். உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.  ஏனெனில்  நான் பசியாய் இருந்தேன். நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன். என் தாகத்தை தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன். என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன். நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள். நோயுற்றிருந்தேன். என்னை கவனித்துக் கொண்டீர்கள். சிறையில் இருந்தேன்;  என்னைத் தேடி வந்தீர்கள் என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள் ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம். அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்? என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், 'மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்  என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’. எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து “சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் (அலகை: பேய்) அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற, என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை: தாகமாயிருந்தேன், என்; தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடை யின்றி இருந்தேன், நீங்கள் ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை” என்பார்.

அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந் தோம்?Õ எனக் கேட்பார்கள்.

அப்பொழுது அவர் மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை, அடையவும் நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்.

இவ்விவிலியத் தொடர் HISTORIA DEL GIUDICIO என்ற நூலில்  இடம் பெற்றிருந்ததை  விசாரணையின் போது மெர்சியோ முன் வைத்ததை நூலாசிரியர்  வெளிப்படுத்தியுள்ளார். இது மெனுசியோவின் சமூகக் கண்ணோட்டத்தை நாம் அறியச் செய்கிறது.

12 ஜுலை 1599இல் நிகழ்ந்த இரண்டாவது விசாரணையின் போது மக்கள் பல்வேறு மதங்களைப் பின்பற்றுவது தொடர்பாக, தாம் கூறிய செய்தி யன்றை மெனுசியோ குறிப்பிட்டுள்ளார்:

கடவுளாகிய தந்தையின் அன்பிற்கு உரியவர் களாக கிறித்தவர்கள், துருக்கியர், யூதர் எனப் பல குழந்தைகள் உள்ளனர். நான் கிறித்தவனாகப் பிறந்தமையால் கிறித்தவனாக வாழ்கிறேன். துருக்கி யனாகப் பிறந்திருந்தால் துருக்கியனாக வாழ்ந் திருப்பேன். ஒவ்வொரு மனிதனும் தான் பின்பற்றும்  சமயமே சரியானது என்று நம்புகிறான் ஆனால் எது சரியானது என்பது அவனுக்குத் தெரிவதில்லை. தன்னுடைய தாத்தா, அப்பா உறவினர்  அனைவரும் கிறித்தவர் என்பதால் கிறித்தவனாக இருக்க விரும்புகிறான்.

கிறித்தவமே உயர்வானது என்ற கருத்தின் அழுத்தம் மெனுசியோவிடம் இடம் பெறவில்லை என்பதை இக்கூற்று வெளிப்படுத்தியுள்ளது. வேறு ஒரு கேள்விக்கு விடையளிக்கும் போது கிறிஸ்து என்பவர் ஒரு மனிதர்தான் என்று அவர்  கூறியதும் அவருக்கு எதிராக அமைந்தது.

உடலை வருத்தும் தண்டனைகளை வழங்கி  அவரது சிந்தனையையத்த சிந்தனையுடையவர்களின் பெயர்களைக் கூறும்படி  கட்டாயப்படுத்தினர். அவ்வாறு கூறினால் அத்தண்டனையில் இருந்து விடுவிப்பதாகவும் கூறினார். ஆனால் மெனுசியோ யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை.

மெனுசியோவைப் போன்ற சிந்தனைப் போக்குடைய பிகினியோ என்பவரைப் பற்றிய குறிப்பும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இருவரும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் இடை வெளியில் வாழ்ந்தவர்கள். ஒருவரையருவர் சந்தித்ததும் கிடையாது.

நரகம், உத்தரிக்கும்நிலை* (Purgatory) என்பன உண்மையில் கிடையாது. பணம் ஈட்டுவதற்காகப் பாதிரியார்களும் துறவிகளும் கண்டுபிடித்தவை என்பது பிகினியோவின் கருத்தாகும்.

மெனுசியோவைப் போன்று எதிர்க்குரல் எழுப்புவோர் இத்தாலியில் வாழ்ந்துள்ளதை இச் செய்தியால் அறிய முடிகிறது.

நம்பிக்கைப் புலனாய்வு மன்ற ஆவணங்களின் துணையுடன் பதினாறாம் நூற்றாண்டு இத்தாலியில் சமயத்தின் பெயரால் நிகழ்ந்த  ஒடுக்குமுறைகளை எடுத்துரைக்கும் இந்நூல், 1601 ஜுலை ஆறாம் நாளன்று மரணதண்டனைக்கு மெனுசியோ ஆட்படுவதுடன் முடிவடைகிறது.

மெனுசியோ என்ற வரலாற்றுப் பாத்திரத்தை மையமாகக் கொண்டெழுதப்பட்ட இந்நூல் அவரது வரலாறாக மட்டும் அமையவில்லை. சமய நம்பிக்கையைப் பாதுகாத்தல் என்ற பெயரால் நிகழ்ந்த, சிதைத்த மனித உரிமைகளையும்,  மனித மாண்புகளையும் மீறிய செயல்களின் ஆவணப் பதிவாகவும் அமைந்துள்ளது.

துணை நின்ற  நூல்கள் – கட்டுரைகள்

1)  Dictionary for Believers and Non-believers.

2) Geoffrey Parrinder (2007) A Concise Encyclopedia of Christianity.

3) Mircea Eliade (1987) The Encyclopedia of Religion,Volume 7.

4) Wikipedia