மிகச் சரியான நேரத்தில் இப்படி முற்போக்கான கோரிக்கைகளை வைத்து சமூகத்தை சிந்திக்க வைத்த காட்டாறு குழுவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
காதலின் பெயரால் பெண்கள் கொல்லப் படுவதை மிகச் சாதாரணமாக கடக்கக்கூடிய சமூகத்தில் நாம் உள்ளோம். ஒருதலைக் காதல், நிராகரிப்பு, பிரிந்து செல்லுதல் போன்றவை இதற்கு காரணமாகக் கூறப்படுகின்றன. ஆசிட் வீசுவது, பாலியல் சீண்டல் செய்வது, வன்புணர்வது, குத்திக் கொல்வது, எரித்துக் கொல்வது என பெண்களின் மீதான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்படி ஒவ்வொரு வன்முறை நடக்கும் போதும், குற்றவாளியைத் திட்டித் தீர்ப்பது, அவனின் ஆண் குறியை அறுத்து எறிய சபதம் எடுப்பது, சாகும் வரை தூக்கிலிட ஆர்ப்பாட்டம் செய்வது, முகநூலில் முகப்புப் படம் மாற்றிக் கொள்வது சில நாட்களில் மறந்து கடந்து செல்வது. இது தான் பெண்கள் மீதான வன்முறைக்குப் பிறகான சுழற்சி.
இவற்றுக்கெல்லாம் ஆண்களை மட்டுமே குறை சொல்லி இந்தக் குற்றங்களின் அடிப்படையாக இருக்கும் சமூகத்தை நாம் ஒளித்து வைக்கக்கூடாது. ஆணையும் பெண்ணையும் சரிசமமாய் வளர்க்கா மலும் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பழக விடாமலும் ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி என்று தொடர்ந்து இருபாலினரையும் பிரித்து வைக்கும் விளைவுதான் இது.
ஒரு ஆணும் பெண்ணும் சராசரியாக கண்ணைப் பார்த்துப் பேசிக்கொள்வது நம் கலாச்சார கட்டமைப்பில் கடினமாக உள்ளது. இருவரின் ஐ காண்டேக்ட் எனப்படும் அந்தப் பார்வைத் தொடர்பு ஏற்படுத்த முடியாமலேயே போகிறது. கீழே பார்த்துப் பேசுவது, செல்போனைப் பார்த்துப் பேசுவது, விட்டத்தைப் பார்த்துப் பேசுவது இது போன்ற உரையாடல்கள் தான் நாம் சமூகத்தில் பார்க்கிறோம். கண்களைப் பார்த்துப் பேசும் தைரியமும் திடமான உளவியலும் இங்கே இல்லவே இல்லை.
கல்வி நிலையங்களில் பாலினப் பாகுபாடு
சில ஆண்டுகள் பின்நோக்கிப் பார்த்தால் அரசுப் பள்ளிக்கூடம் என்பதே கிராமப்புறங்களில் சவாலாக இருந்தது. 30 கி.மீ க்கு ஒரு பள்ளி என்பது போன்ற நிலை இருந்தது. ஆண்களுக்கு - பெண் களுக்கு தனித் தனிப் பள்ளி என்ற எண்ணமோ வசதியோ இல்லாத நிலையில் ஒரு கிராமத்தின் அனைத்து ஆண் - பெண் மாணவர்களும் ஒரே பள்ளிக்கோ கல்லூரிக்கோ ஒரே பேருந்தில் செல்லும் நிலைமை இருந்தது. ஒருவருக்கொருவர் உதவி செய்துக்கொள்ளும் மனப்பான்மை, விளையாட்டு, அரட்டை, நட்பு என அந்தப் பள்ளிப்பருவத்தின் ஆண் - பெண் உறவுகள் புரிதலோடிருந்தது. “இவன் என் பள்ளிக்கூட நண்பன்” என்று பெண்கள் சொல்லும் நிலைமை இருந்தது. ஆனால் இன்று?
பள்ளிகள் ஆண்கள் பள்ளிகள் - பெண்கள் பள்ளிகள் எனப் பிரிந்திருக்கும் விளைவு, பெண்கள் பள்ளிக்கூட வாசல்களில் அவர்களிடம் பேச ஆண் மாணவர்கள் காத்துக்கொண்டும், பின் தொடர்ந்து கொண்டும் இருக்கிறார்கள். இந்த இடைவெளி மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்குகிறது.
பேசிவிட்டால் காதல், பின்தொடர்ந்தால் காதல், பார்த்தால் காதல், சிரித்தால் காதல் என காதல் பற்றிய புரிதல் இல்லாமல் போனதற்கும் காதலின் பெயரால் வன்முறை நடைபெறுவதற்கும் இந்தப் பிரிவினைகளும் புரிதலற்ற தன்மைகளுமே காரணம்.
ஆண்களுக்கென பெண்களுக்கென தனித்தனிப் பள்ளிகள், கல்லூரிகள் இருக்கக்கூடாது. அது பாலியல் புரிதலுக்கு மிகப்பெரிய கேடு. இருபாலர் கல்வி முறைகளும் அவர்களுக்கான “இருபால் பொதுவிடுதிகளும்” அமைக்க வேண்டும். இது சாத்தியமில்லை என கூறுபவர்களுக்காகவே ஜே.என்.யு எனப்படும் ஜவஹர்லால் பல்கலைக் கழகமும் எய்ம்ஸ்ஸ்போன்ற கல்வி நிலையங்களும் ஒரு முன்னோடியாக இயங்கி வருகின்றன.
ஆண் மாணவர்களும் பெண்மாணவர்களும் பேசிக் கொள்ளக் கூடாது என்கிற கேவலத்தைக் கல்வி நிலையங்கள் வெளிப்படையாகச் செய்கின்றன. விலங்கினங்கள் கூட குறிப்பிட்ட இனத்தோடு பழகக் கூடாது என்ற நாகரிகமற்ற செயலைத் திணிக்காது. ஆனால் அதை இங்கே பெரிய நியாயம் போல் கல்வி கற்றுக்கொடுக்கும் நிறுவனங்களே அதிலும், அரசுக் கல்வி நிலையங்களும் செய்வது அபத்தம். மீறிப் பேசி விட்டால் அவர்களை அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டுவது, அபராதம் வசூலிப்பது, பெற்றோரை அழைத்துப் புகார் செய்வது, குற்றவாளிகளைப் போல் விசாரிப்பது போன்ற அசிங்கங்கள் வெளிப்படையாகவே நடக்கிறது. இந்தச் செயல்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்தும் இவ்வாறு பாலியல் பேதத்தை, பிரிவினையை ஊக்குவிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தையும் அரசு இரத்து செய்ய வேண்டும்.
காது குத்துதல் குழந்தைகள் மீதான வன்முறை
பெண்களை போகப்பொருளாக மட்டுமே வளர்க்கும் எண்ணம் நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. காதணிகள் பெண்களுக்காகவே வடிவமைக்கப்படுவதும், காதில் தொங்க தொங்க ஜிமிக்கிகள் மாட்டி விடுவதும் ஒரு பெண் வேகமாக தலையை ஆட்டிப் பேசக்கூட கூடாது என்ற திட்டமே. தங்கத்தின் பால் பெண்களை ஈடுபாடு கொண்டவர்களாக உருவாக்குவதில் இந்தச் சடங்குகள் பெரும் பங்கு வகிக்கின்றன. தொங்கத் தொங்க காதணிகள் அணிவது என்பது பெண்களுக்கு அசெளகரியமானதும் தங்கம் எனும் பட்சத்தில் ஆபத்தானதுமாகும். அதில் ஒரு விற்பனைச் சந்தையை உருவாக்கி பெண்ணை அதன் பேரில் திருப்பி விட்டு போகப்பொருளாகப் பாவிக்க வைக்கும் அபத்தமானதும் ஆகும். அதற்கு ஆரம்பப் புள்ளியாக இருக்கும் இந்த முட்டாள்தனமான காது குத்தும் விழாக்களை தடை செய்ய வேண்டும். அழகாகத் தெரிவதற்காக சின்னஞ் சிறு குாந்தை களுக்குக் காது குத்திக் கதறவைக்கும் இந்த முட்டாள் தனம் குழந்தைகள் மீதான வன்முறையே!
மஞ்சள் நீராட்டு விழா ஒரு கேவலம்
மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் நடக்கும் சாதாரண சுழற்சி. இதை அசிங்கமாகவும் அவமானமாகவும் பார்க்கும் மனநிலையும் பாலியல் கல்வி அற்ற சமூகத்தில் பரவி நிற்கிறது. மாதவிடாய் என்பது எளிதாக கடக்கக்கூடிய ஒன்றுதான் என்ற பார்வை அறவே இல்லாமல் போயிருக்கிறது. விண்வெளியில் சாட்டிலைட் விடும் காலத்திலும் சானிட்டரி நாப்கின்களை கருப்புக் கவரில் சுற்றி வைத்து ஒரு அணு குண்டைப் போல் வீட்டிற்கு எடுத்து வரும் நிலை யில் தான் சமூகம் உள்ளது. மாத விடாய் பற்றி பேசவே கூடாது “ஷ்ஷ்...” என்கிறார் கள். ஆண்கள் இதைப் பற்றி தெரிந் துக் கொள்ளவே கூடாது அது பாவம் என்கிறார்கள். மாதவிடாய், மென்சஸ், பீரியட்ஸ் போன்ற வார்த்தைகளைச் சத்தமாக சொல்ல முடியாத சமூகம் இது. “தலைக்குக் குளித்தல் தீட்டு, வீட்டுக்குத் தூரம், ஹேப்பி பர்த்டே” எனும் குறிப்புப்பெயர்கள் இன்றளவும் உள்ளதே நமக்கு அசிங்கம்
பூப்புனித நீராட்டுவிழா என்பது குழந்தைகள் மீதான உரிமை மீறல். ஒரு சிறுமியின் தனிப்பட்ட உடல் நிகழ்வை ஊராரை அழைத்து தெரியப் படுத்துவது என்பது அச்சிறுமியின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு நடக்கும் ஒரு வன்முறை. அப்படியே அவள் சம்மதித்தாலும் ஒரு மைனர் சிறுமியின் சம்மதம் என்பது தெளிவான சிந்தனையற்ற முடிவாகவே கருதப்படும். மாட்டைச் சந்தையில் அறிமுகப்படுத்துவது போல் “என் மகள் குட்டிபோடத் தயாராகிவிட்டாள்” என ஊராரிடம் அறிவித்து ஆண்களின் மத்தியில் அவளைக் கூனிக்குறுகி அமரவைக்கும் அந்த இழிசடங்கு தடை செய்யப்படவேண்டியது. அதை நிகழ்த்துபவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள். ஒரு மனிதனின் அகவுரிமையை (Right to Privacy மீறும் செயலாக உள்ள இந்தச் சடங்கு அடிப்படை உரிமைக்கே எதிரானது. பெண்கள் காட்சிப்படுத்த வேண்டிய அலங்காரப் பொருட்கள் அல்ல. அவர்களின் முதல் மாதவிடாய் நிகழ்வு மாநாடு போல் பேனர் அடித்து கூட்டம் சேர்த்து சாப்பாடு போடும் நிகழ்வல்ல. “பேட் மேன் சேலன்ஜ்“ செய்யும் இதே சமூகத்தில் தான் “அப்பா பேட் வாங்கிட்டு வாங்க” என ஒரு மகள் தந்தையிடம் கேட்க முடியாத நிலை உள்ளது. இந்நிலை மாற பெண்களை சந்தை மாடுகளைப் போல் பாவிக்கும் பூப்புனித நீராட்டு விழா போன்ற குப்பைகளைச் சமூகத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும்.
நோ மீன்ஸ் நோ
பெண்கள் “ஆம்” என்றே சொல்லப் பழக்கப் படுத்தப்பட்ட உயிரினங்கள். “இல்லை” என்பது அவர்கள் அகராதியில் இல்லையென்றால் தான் அவர்கள் நல்ல பெண்கள். “நோ மீன்ஸ் நோ” என்பது திரையில் மட்டும் தான். ஆனால் இங்கே பெண்ணின் மெளனம் கூட சம்மதமே! பெரும் பான்மையான பெண்களின் திருமணங்கள் அவர் களின் சம்மதமில்லாமலேயே நடக்கிறது. கிழித்த கோட்டைத் தாண்டாதவளாய், அலங்காரப் பொம்மைகளாகத் திருமணத்தை ஏற்றுக் கொள்பவளே சமூகம் எதிர்பார்க்கும் “குடும்பப் பெண்”.
பெண்களுக்குக் காதலிக்கும் உரிமையே இல்லை. அதிலும் சாதி மாறி, வர்க்கம் மாறிக் காதலித்துவிட்டாலோ, மாப்பிள்ளைகளின் தலைகள் தண்டவாளத்திலோ தெருவோரத்திலோ இரத்த வெள்ளத்தில் மிதக்கும். இதுவே இங்கே பெண்களின் திருமண உரிமை. பெண்களின் சம்மத மில்லாத திருமணம் ஒரு குற்றம் என்பதை உணர வேண்டும்.
பொருளாதார விடுதலையே சுயமரியாதை
திருமணத்திற்குப் பிறகு பெண்கள் வேலைக்குச் செல்வது, குடும்ப கெளரவத்திற்குக் கேடாகப் பார்க்கப்படுகின்றது. பொருளாதார விடுதலையே பாலியல் விடுதலைக்கு, பெண் விடுதலைக்கு இட்டுச் செல்லும். வேலைக்குச் செல்லும் பெண்களைத் தடுத்து நிறுத்தி அவர்களை வீட்டுக்குள்ளே அடைத்து வைப்பது ஒரு குற்ற மாகவே பார்க்கப்படுவதில்லை. சுயமாக சம்பாதித்து தன் தேவைகளை நிறைவேற்றுக்கொள்ளும் பெண் அடுத்த கட்டமாக சமூகம் நோக்கிச் சிந்திப்பாள். ஆனால் சிறு சிறு தேவைக்கும் கணவனை எதிர் பார்த்துக் கையேந்தும் பெண்ணின் நிலையைத் தான் ஆணாதிக்கச் சமூகம் விரும்புகிறது. அதனை இனியும் அனுமதியோம். திருமணத்தில் பெண்ணின் சம்மதத்தையும், சுயமாகச் சம்பாதிப்பதையும் பெயரளவில் இல்லாமல் காவல் அலுவலர்கள் வழக்கறிஞர்கள் கொண்ட குழுவின் மூலம் உறுதிச் சான்றிதழ் வழங்க வழி செய்ய வேண்டும்.
சிவப்பழகு என்னும் சிறை
பெண் ஒரு போகப்பொருள். எங்கேயும் அவள் போகப் பொருள்தான். பணியிடத்தில் திரைப்படத்தில் விளம்பரத்தில் என எல்லா இடத்திலும். அவளின் அழகிற்காகத் தான் இந்தியாவில் எத்தனை வணிகம் நடக்கிறது! உலகின் அழகு சாதனங்கள் ஏன் நம்மை நோக்கிப் படை எடுக்கின்றன. அவர்களின் முதலீடு எதற்காக நம்மை நோக்கி உள்ளது? ஏனென்றால் நாம் தான் அழகே பெண்ணின் தகுதி என நினைக்கிறோம். அதுவே அவளின் குறிக்கோள் அதுவே அவளுக்கு அனைத்தையும் பெற்றுத் தருகிறது என்ற பிம்பத்தை வளர்க்கிறோம். சிவப்புத் தோல் நீளமான முடி ஒல்லியான தேகம் இதன் பின்னால் போட்டிக் குதிரையென ஓட வைக்கிறோம். தோற்ற குதிரைகளைச் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கிறோம். இந்த வணிகம் பெண்ணின் மீதுதான் தன் மூலதனத்தை நிறுத்தியுள்ளது. அவள் அறிவார்ந்து சிந்தித்து கொஞ்சம் நகர்ந்தாலும் வியாபார அடித்தளம் ஆட்டம் கண்டுவிடும். அதனால் அவளைச் சிந்திக்கவிடாமல் சினிமா சீரியல் விளம்பரங்கள் என அனைத்திலும் அவளுக்கான உடலமைப்பை அவர்கள் கவனமாகப் பதிவு செய்கிறார்கள்.
பெண் உடல் எனும் சந்தை
இதற்கெல்லாம் மூலக்காரணம் பெண் என்றால் எப்படி இருக்க வேண்டுமென்ற சமூக வரையறையே. ஒல்லியான, வெள்ளையான பெண்களை உருவாக்குவதையே தலையாய கடமையாகச் செய்யும் வாணிபமும், பாலியல் பண்டமாகத் தான் பார்க்கப்படுகிறோம் என்பதை உணராமல் அழகென்ற மாயையை நோக்கி நகரும் பெண்ணினமும் ஆபத்தானதுதான். ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும்? தலைமுடியில் இடும் ஷாம்பூவிலிருந்து கால் நகத்தில் இடும் நெயில் பாலீஷ் வரை அனைத்தும் சமூகத்தால் முடிவு செய்யப்பட்டு வடிவமைக்கப்படும் விஷயங்கள் தான்.
பெண்ணை மென்மையாக, பூ மாதிரி, எந்த கடின வேலைகளையும் செய்ய விடாமல் அப்படியே திருமணம் என்ற பெயரில் ஒரு ஆணிடம் தாரை வார்க்கவே கவனமாக வளர்க்கிறார்கள். இதில் ஒரு பெண்ணின் தன் நம்பிக்கை என்பதே அவளின் சிவப்பழகுதான் என்கிற அளவில் விளம்பரங்கள் மூலம் பதிய வைக்கிறார்கள். சிகப்பழகு கிரீம்களில் வரும் அபாண்டப் பொய்களை நம்பி அதை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒரு பெண்ணின் அறிவும் திறமையும் அவளின் சிகப்பழகில் தான் உள்ளது என நம்பவைக்கிறார்கள்.
முகத்தில் சிறு பருக்கள் வந்தாலும் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டிய உயிரினமாகச் சித்தரிக் கிறார்கள். கருப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டின் பெண்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளி அதன் மூலம் மன உளைச்சலை ஏற்படுத்தி ஏமாற்றி லாபம் பார்க்கும் சிவப்பழகுக் கிரீம் வாணிபத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
நகை, பட்டு வணிகங்களும் தடைசெய்யப்பட வேண்டியவையே
பெண்களையே மையமாக வைத்துச் செயல்படும் நகைகள் ஆபரணங்கள் பட்டு ஆடைகள் புடவைகள் பெண்களை மேலும் அலங்கார பொம்மையாகக் காட்டும் அனைத்து வணிகத்தையுமே தடை செய்ய வேண்டும். ஒரு பெண் என்ன அணிய வேண்டும் என்பதை ஏதோ ஒரு மூளையில் அமர்ந்துள்ள ஒரு முதலாளி முடிவு செய்கிறான். பெண்ணை சுயமாகச் சிந்திக்கக்கூடிய உயிரினமாகக் கருதாமல் சுயமரியாதையற்று தன் அழகைத் தவிர வேறு எதைப்பற்றியுமே யோசிக்க விடாமல் சிறைபடுத்தவே இந்த வணிகங்கள் களை கட்டுகிறது. இப்படி ஜவுளிக் கடை பொம்மைகளைப் போல் அலங்காரப்படுத்தி தன் வாழ்வைப் பற்றி சிந்திக்கவிடாமல் செய்யும் அத்தனை பொருட் களையும் தடை செய்ய வேண்டும். அதிலும் உபயோகமே அற்ற அலங்காரத்திற்காய் மலர் வணிகத்தையும் மல்பெரி விவசாயத்தையும் தடை செய்து இயற்கையைக் காத்திடல் வேண்டும்.
திருமணம் விலக்குதல் என்னுரிமை
எந்தத் துணையின்றியும் பெண்ணால் தனித்து வாழ முடியாது என்ற மடமையான கருத்து நம் சமூகத்தில் உள்ளது. ஒரு ஆணின் துணையின்றி, திருமணமின்றி வாழும் பெண்ணை கேவலமாகப் பார்ப்பது, அவதூறாகப் பேசுவது உட்பட பல வன்முறைகளை செலுத்துவது போன்றவை நிகழ்கிறது. ஒரு பெண் என்பவள் தனித்து வாழலாம் அவளால் அப்படி வாழ முடியும் அல்லது அப்படி ஒரு தேர்வு இருக்கிறது என்பதே இங்கே பலருக்கு தெரியாது. பெண் என்பவள் ஆனால் பாதுகாக்கப் பட வேண்டிய ஒரு பொருளென்று தான் மதங்களும் புராணங்களும் தெரிவிக்கின்றன. ஆண் காக்க வேண்டிய அவள் தன்னைத்தானே காத்துக்கொள்ள முடியாது, கூடாது என்பதே இங்கு ஊறிப்போனக் கருத்து. ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த கெளரவமும் அந்த குடும்பத்தின் பெண்களிடம் தான் உள்ளதாம். ஆண் பிள்ளை எந்தத் தவறு செய்தாலும் அது குடும்பத்தைப் பாதிக்காதாம்.
ஒரு பெண் எப்படி வளர்க்கப்படுகிறாள் எப்படி பேசுகிறாள் எப்படி சிரிக்கிறாள் யாரை கல்யாணம் செய்து கொள்கிறாள் என்பதில் தான் அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த மானமும் உள்ளதாம். இப்படி அயோக்கியத்தனத்தை பெண்கள் மீது திணித்துவிட்டு அவளை அவளாக இருக்கவிடாமல் விரும்பியவனை மணக்கவிடாமல் கெளரவத்திற்காய் எத்தனை பெண்களின் கழுத்துகளை அருவாக்கள் ருசிபார்த்திருக்கிறது. இந்த மடமை ஒழிய வேண்டும். ஒரு குடும்பத்தின் கெளரவம் என்பது அதன் உறுப்பினர்களின் மன உணர்வுகளை மதிப்பதிலும் அடுத்தவரை ஏமாற்றாமல் சுரண்டாமல் ஆதிக்கம் செலுத்தாமல் வாழ்வதிலும் தான் உள்ளது.
பெண் வெறும் பெண் தான். உங்களின் ஆணவங்களுக்கு அவளை பலியாக்காதீர்கள். பெண்ணிற்குத் திருமணம் முடிவெடுக்கும் உரிமை யுள்ளது அதில் உங்கள் கெளரவத்தை திணிக் காதீர்கள். அப்படி திருமணமே வேண்டாமென்று முடிவெடுக்கும் பெண்களும் அதை பல நேரங்களில் தைரியமாக செயல்படுத்த முடியாமல் போவதற்கு சமூக பாதுகாப்பற்ற தன்மையும், பொருளா தாரமுமே முக்கிய காரணங்களாக உள்ளன. ஒரு பெண் யாரையும் சாராமல் தன் வாழ்க்கையை எந்த ஒரு குடும்ப அமைப்பும் அற்று சுயமாகவும் சுதந்திரமாகவும் சுயமரியாதையுடனும் வாழ உரிமையுடையவள். அதை உறுதி செய்வது அரசின் கடமை. எனவே தனித்து வாழ முடிவெடுக்கும் பெண்களுக்கு மாவட்டம் தோறும் தங்கும் விடுதிகளை உருவாக்க வேண்டும்.
திருமண சமத்துவத்திற்குத் தனிக்குடித்தனம்
பலகாலமாக குற்ற உணர்வே இல்லாமல் பெண்கள் மீது செலுத்தப்படும் ஒரு வன்முறைதான் திருமணத்திற்குப் பிறகு பெண்கள் கணவன் வீட்டுக்குச் செல்லும் வழக்கம். ஆரம்பத்தில் இந்த அமைப்பு முழுக்க முழுக்க பெண்களின் பத்தினித் தன்மையைப் பாதுகாக்கவே உருவாக்கப்பட்டது. தொழிலுக்காக கணவன் வெளியில் செல்லும்போது அந்த மனைவி தனியே இருப்பதைத் தவிர்க்கவே இந்த ‘ஏழு அடுக்கு பாதுகாப்பு’ குடும்ப முறை. ஆணும் பெண்ணும் சமமானவர்களே! இருவரும் ஒரே திருமண முறையின் வழியாக வரும்போது பெண் மட்டும் தான் இத்தனை வருடம் வாழ்ந்த வீடு உறவுகள் உணர்வுகள் அனைத்தையும் துறந்து முன் பின் தெரியாத ஒரு வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பது என்ன நியாயம்?
புதிய வீட்டில் வாழ்வது, உறங்குவது, உண்பது, அங்கு இருப்பவர்களே இனி நம் வாழ்க்கையின் உறவுகள் என ஏற்றுக்கொள்வது போன்றவே எவ்வளவு பெரிய உளவியல் வன்முறை! அதிலும் காலம் காலமாக இவ்வாறு கணவன் வீட்டுக்குச் சென்று அங்கு ஏற்படும் பிரச்சனைகளால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட பெண்கள் ஏராளம் இல்லையா? கணவன் சார்பாக ஒரு குடும்பமே இருக்க தனக்கு ஆதரவாக யாருமே இல்லாத நிலையில் ஒரு பெண்ணின் மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறைகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. இதன் நீட்சியாய் வரதட்சணை, எதிர்த்துப் பேசுதல், அடங்கிப் போகாமலிருத்தல் போன்ற காரணங்களுக்காக குடும்ப வன்முறைகள் கொலைகள் வரை நீண்டிருப்பது நமக்குத் தெரியாதா?
இதுபோன்ற கொடுமைகள் இனியும் நடக்கக் கூடாது. திருமண பந்தத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வேண்டுமெனில் தனிக்குடித்தனம் வேண்டும். மனைவியுடன் இணைந்து வேலை பார்க்கும் எந்த கணவனையும் கணவன் வீட்டில் கூட்டுக்குடும்பமாய் வாழ்பவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். கணவன் மனைவி வேலை பகிர்தல், சம உரிமை, ஒருவரை ஒருவர் மதித்தல் போன்றவை கூட்டுக்குடும்பத்தில் சாத்தியமில்லை. அதோடு திருமணம் முடிந்தவுடன் ஒரு பெண் தன் உரிமைகளை விட்டுக்கொடுத்து சுயமரியாதையை விடுத்து கணவனின் வீட்டிற்குச் சென்று வாழ அவசியமும் இல்லை. எனவே தனிக்குடித்தன முறையைக் கட்டாயமாக்குதல் வேண்டும்.
பெண் பிள்ளைபெரும் எந்திரமல்ல
இயற்கை வளங்கள் சீரழிந்து போவதற்கும், பூமி அழியத் தொடங்கியதற்கும் மக்கள் தொகை பெருக்கமே முழுமுதற் காரணம். பிள்ளை பெருதல் மட்டுமே வாழ்க்கையின் நோக்கமாகவும் அதுவே தலையாயக் கடமையாகவும் பெண்கள் வளர்க்கப் படுகிறார்கள். ஒரு பெண் பிள்ளை பெறாமல் இருக்க அவளுக்கு உரிமையும் தேர்வும் இருக்கிறது என்பதையே ஏற்றுக்கொள்ள முடியா சமூகம் நம்முடையது. “பெண்கள் பிள்ளை பெறும் எந்திரங்கள் அல்ல, பெண்களே! கருப்பையை அறுத்தெறியுங்கள்” என்றார் பெரியார். இந்த அளவிற்கு முற்போக்கு விதை தூவப்பட்ட இந்தச் சமூகத்தில் பகுத்தறிவோடு சிந்தித்துப் பிள்ளை பெறுதல் நம் வாழ்வின் இலட்சியம் அல்ல என உணர்ந்து பெண்கள் வெளிவர வேண்டும். “என் இரத்தத்திலிருந்து வாரிசு வேண்டும். என் சொத்திற்காக வாரிசு வேண்டும். என் பெயர் சொல்ல வாரிசு வேண்டும்” என்கிற பிற்போக்குத்தனமான வாரிசு வெறி மனநிலையிலிருந்து ஆண்களும் வெளியே வர வேண்டும்.
ஆயிரக்கணக்கில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளையும் கணக்கில் கொண்டு அவர்களை வளர்க்கலாம் அல்லது குழந்தைகள் இல்லாமலும் தனித்து வாழலாம். அது இந்த பூமிக்கும் சமூகத்திற்கும் நாம் செய்யும் மிகப்பெரிய கடமை.
வேலை பகிர்வு - ஆண்களின் கடமை
எந்த ஒரு உயிரினமும் தன்னுடைய தேவை களுக்குப் பிறரைச் சார்ந்து இருப்பதில்லை. உணவு, நீர், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளுதல், இருப்பிடத்தை பார்த்துக்கொள்ளுதல் போன்ற அனைத்துமே ஆடு, மாடு, குதிரை, நண்டு, பறவை என அனைத்துமே சுய தேவையை தாமாகவே நிறைவேற்றிக்கொள்கின்றன. ஆனால் மனிதனுக்கு மட்டும், இருவர் சேர்ந்து வாழும் ஒரு வீட்டில் அந்த ஆண் வெளியில் வேலைக்குச் சென்றாலும் செல்லாவிட்டாலும் அவனுக்குச் சமையல் பெண் தான் செய்ய வேண்டும், துணியைப் பெண்தான் துவைக்க வேண்டும். அவன் சாப்பிட்ட பாத்திரத்தைப் பெண் தான் கழுவ வேண்டும். வீட்டைப் பெண் மட்டுமே பராமரிக்க வேண்டும். தன் தேவைகளைத் தானே நிறைவேற்றிக் கொள்ள வக்கற்ற உயிரினமா ஆண் என தோன்றுகிறது. அதிலும் பிள்ளை வளர்ப்பில் ஆணுக்கும் பங்குண்டு என்பதை அவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. பிள்ளைபெறும் அமைப்பை பெண்கள் இயற்கையிலேயே கொண்டிருக்கிறார்கள் என்பதற்காகவே அவர்களை குழந்தை வளர்ப்பில் தள்ளிவிட்டு அதுவே அவர்களின் கடமையெனச் சொல்வது அயோக்கியத்தனம். பிள்ளை வளர்ப்பென்பது பெற்றோரின் சம பங்களிப்பு சார்ந்தது. அதை பெண்களிடமே தள்ளிவிடுவதும் பெண்கள் பிறக்கும் போதே பிள்ளை வளர்ப்பை பயின்றவர்கள் போன்றும் சித்தரிப்பது சரியல்ல அது நிச்சயமாக இருவரின் கடமை.
சமையலறையைப் புறக்கணிப்போம்
“சமையலறை உடைப்புப் போராட்டம்” என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க சமகாலப் போராட்டம் என்பது திண்ணம். இந்தத் தீவிர போராட்டம் என்பது சமையலறைகள் பெண்கள் மீது பட்டா போடப்பட்டது போன்ற பிம்பத்தை சுக்குநூறாக உடைக்க வல்லது. எழுத்துப்பூர்வமாக இருந்த சமையலறை எதிர்ப்பை போராட்டமாகக் கொண்டு வந்தது பெருமைமிகு செயல்.
“பார்ன் வித் சில்வர் ஸ்பூன்” என்கிற பழமொழி கேள்விப்பட்டிருப்போம். இங்கே பெண்கள் அனைவருமே “பார்ன் வித் டீ ஸ்பூன்” என்பது போலப் பார்க்கப்படுகிறார்கள். பிறக்கும்போதே சமைப்பதற்கான கரண்டியுடனே பிறந்தவர்கள் பெண்கள் என்ற கண்ணோட் டத்திலேயே பார்க்கப் படுகிறார்கள்..
சமையலறை என்பது சிறைச்சாலை! சமையல் என்பது வன்முறை! எத்தனையோ பெண் எழுத்தாளர்கள், விளையாட்டு வீராங்கனைகள், கலைஞர்கள், விஞ்ஞானிகளின் கனவுகள் சமைய லறையின் அடுப்புத் தீயில் பொசுக்கப்பட்டிருக்கும். இன்றும் கூட ஒரு பெண் சமைக்கத் தெரியாது எனக் கூற வெட்கப்பட வேண்டுமாம்! சமையல் என்பது ஒருவரின் உணவுத்தேவையைத் தானே நிறைவேற்றிக் கொள்ளும் வழிமுறை அது தெரியாது எனும் பட்சத்தில் ஆணோ பெண்ணோ அதைக் கற்றுக் கொள்வது அவரவரின் வாழ்க்கைக்கு உதவுமே அன்றி அது பெண்ணுக்கான கடமை என்பது மடமையே.
ஒரு பெண் சமைக்கத் தெரியாது என்றால் “என்ன...உனக்கு சமைக்கத் தெரியாதா?” என ஹார்ட் அட்டாக் அடையும் சமூகம் தான், ஆண் சமைக்கத் தெரியாது என்றால் “நீ சமைக்கக் கத்துக்கிட்டு என்ன பண்ணப் போற” என்கிறது. சாப்பிட்ட தட்டைக் கூட எடுக்கப் பழக்கப்படுத்தாத ஆண் பிள்ளைகளிடமிருந்து தான் நாம் சமத்துவத்தையும் பெண்ணை மதிக்கும் தன்மையையும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்...“இப்பலாம் யாருங்க சாதி பாக்குறா?” பாணியில், “இப்பலாம் எங்கங்க பொம்பளைங்க சமைக்குறாங்க எல்லாம் ஆண்கள் தான், ஹோட்டல்ல விழாக்களில் ஏன் சென்னைல வசிக்கும் பாதி பேச்சுலருங்க அவங்களே தான் சமச்சுகிறாங்கன்” னு ஒரு கோஷ்டி சுத்துது...
அவங்களுக்கெல்லாம் நாம் நினைவு படுத்த வேண்டியது, இது அனைத்துமே பொருளாதார லாபத்திற்காகத் தவிர கடமைக்காக அல்ல. ஆம்.. வெளியூரில் வேலைப் பார்க்க வரும் ஆண்கள் தினமும் வெளியில் வாங்கி சாப்பிட முடியாது என்ற பொருளாதார நெருக்கடிக்காய் சமைக்கிறார்கள். ஹோட்டல்களில் சமைக்கும் ஆண்கள் சம்பளத் திற்காய்ச் சமைக்கிறார்கள். சமையல் மட்டும் அல்ல ஆண்கள் செய்யும் பிற வேலைகளும் உதாரணத்திற்கு துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல் போன்ற அனைத்து வேலைகளையும் பொருளாதார நோக்கத்தோடும் தங்களது சுய தேவைக்காகவும் விருப்பப்பட்டும் தான் செய்கிறார்கள்.
ஆனால் பெண்களோ அதைப் பிறவிக்கடமை போலவும் அதற்கான கூலி எதையும் குடும்பத்தில் வாங்காமலும் விரும்பாவிடினும் சமையலறைக்குள் தள்ளப்பட்டுக் கட்டாயமாகச் சமைக்க வைக்கப்படுகிறார்கள். விளம்பரங்களும், சமையல் பெண்ணுக்கானது என்பது போல் சமையல் பொருட்களைப் பெண்களை வைத்து மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள். ஏதேனும் சமையல் பற்றிய விவாதம் வந்தாலும் ஒரு பெண்ணிற்குச் சமைக்கத் தெரியுமா தெரியாதா என்பதை தெரிந்து கொள்ளாமலேயே, “இந்தச் சமையலுக்கு இத தானங்க அதிகம் போடனும்?” என மிகச் சாதாரண மாக - பெண் என்றால் இது தெரிந்திருக்கும் என்ற புரிதலோடு கேட்கிறார்கள்.
சமையலைப் பற்றிய சந்தேகங்களை ஒரு குழுவில் உள்ள பெண்ணிடம் ஏன் கேட்க வேண்டும். அதோடு, “அவ நல்லா சுடுதண்ணி சமைப்பா” என்று இளம்பெண்களை கேலி செய்யும் வழக்கம் உள்ளது. ஏன் இப்படி ஆண்களைக் கேலி செய்வதில்லை? பெண்கள் தான் சமைக்க வேண்டும் என்ற உளவியல் குழந்தைகளிடமும் உள்ளது. பால்பேக்கட்டை அம்மாவிடமும் நியூஸ் பேப்பரை அப்பாவிடமும் குழந்தைகள் குடுப்பதாய் எழுதப்பட்ட கவிதையும் ஒரு பெண் தன் வாழ்நாளில் எத்தனை இட்லி களையும் தோசைகளையும் சமைக்கிறாள் என்ற கவிதையும் தான் நினைவுக்கு வருகிறது. இளம் வயது முதல் கல்விக்கு முழுக்கு போட்டுச் சமையலறையில் தள்ளிவிடப்பட்ட பெண்களின் வரலாறுகளும் அடுப்படியின் கரிச்சுவரில் எழுதப்பட்டிருக்கும். இனியும் சமையலறை பெண்களுக்கானது என்ற உளவியலை உடைப்போம். சமையலறையைப் புறக்கணிப்போம். அரசும் வீட்டு வேலைகளில் பிள்ளை வளர்ப்பில் சரிபாதி பங்களிக்காத ஆண்களைத் தண்டிக்க வேண்டும்.
கணவன் செய்தாலும் வன்புணர்வே
“காதலற்ற முத்தம் ஒரு வன்முறை” என்கிற தோழர் செங்கவியின் வரிகளை நினைவுப் படுத்துகிறேன். இந்தியாவில் பல பெண்களுக்கு காதலற்ற முத்தங்களே சம்மதமில்லாத் திருமணங் களின் மூலம் வன்முறையாக வழங்கப்படுகின்றது. திருமணம் என்பது வன்புணர்விற்கு ஒரு லைசென்ஸாகப் பார்க்கப்படுகின்றது. “நான் உன் தாயை எப்படி வன்புணர்ந்தேன்” (How I raped your Mother) என்னும் குறும்படத்தில் திருமண பந்தத்தில் நடத்தப்படும் வன்புணர்வைப் பற்றிப் பேசியிருப் பார்கள். அதில் ஒரு பெண் தன் கணவனால் தான் வன்புணரப்பட்டதாகச் சொல்லும்போது அனை வரும் சிரிப்பார்கள். அப்படித்தான் நம் சமூகம் உள்ளது.
கணவனால் செய்யப்பட்டால் அது வன்புணர்வல்ல; உடலுறவு என்ற புரிதலைத்தான் கலாச்சாரம் கொடுத்துள்ளது. கணவன் மட்டுமல்ல ஒரு பெண்ணின் விருப்பமின்றி அவளுடன் யார் உறவு கொண்டாலும் அதன் பேர் வன்புணர்வு தான். கணவனால் வன்புணரப்பட்டுப் பெறப்பட்ட குழந்தைகள் ஏராளம்! இவை ஒர் குற்றமாகவே கருதப்படுவதில்லை. ஒரு பெண்ணின் உடல் மீது அவளின் கணவனுக்கு முழு உரிமையும் உள்ள தென்கிறது கலாச்சாரம். அதனை வன்மையாகக் கண்டித்து தண்டனைகளை வலுவாக்க சட்டமோ மழுப்பலாக தீர்ப்புகள் எழுதுகிறது. திருமண பந்தத்திற்குள் நடக்கும் பாலியல் குற்றங்கள் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
சொத்துரிமை பெயரளவிலா?
பெண்களுக்குச் சரிசமமான சொத்துரிமை உள்ளது எனச் சட்டம் சொன்னாலும் இன்றும் அவை முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படுவ தில்லை. திருமணம் செய்து வைத்த பிறகு அந்தப் பெண்ணிற்குப் பிறந்த வீட்டின் சொத்தில் எந்தப் பங்குமில்லை அதைச் சட்டரீதியாக பெற்றுக் கொள்ளும் விழிப்புணர்வும் அவர்களிடமில்லை. ஆணாதிக்கம் சொத்து விவகாரத்தில் ஓங்கியுள்ளது. சொத்தில் சமவுரிமை என்பது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. எனவே சொத்தில் பெண்களுக்கு சரிபாதி பங்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப் படுத்த தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். மேலும் அவ்வாறு பெண்களுக்கு அளிக்கப்படாமல் ஏமாற்றி வைத்துள்ள சொத்துகளை ஆண்களிட மிருந்து பிடுங்கி பெண்களுக்குப் பகிரிந்தளிக்க வேண்டும். திருமணக் காலங்களில் பிள்ளைகள் பெற்றோரிடம் பணம் நகை கேட்பதையும் குற்ற மாக்க வேண்டும்.
பெரியாரின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட இக்கோரிக்கைகளை ஒரு கருத்துக் கணிப்பாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் காட்டாறின் இந்த முயற்சியையும் யாருமே முன்னெடுக்கத்துணியா இத்தனை முற்போக்கான கோரிக்கைகளையும் வரவேற்கிறேன். பாலியல் சமத்துவத்திற்கான அடித்தளமான இந்த கோரிக்கைகள் நிச்சயமாக சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த கருத்துக் கணிப்புகளை பரப்புவோம் பாலியல் சமத்துவம் கொண்ட சமூகம் படைப்போம்.