womens strike 350‘அமைதிக்கான உரையாடல்’ எனும் இந்தியா முழுவதுமான பரப்புரைப் பயணம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்தியாவில் பாசிசப் போக்கு அதிகரித்துள்ளது சமீபகாலமாக வெகு வெளிப்படையாகப் புலப்படுகிறது. இந்துத்துவ ஆதிக்கம் என்பது ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்கள் மீது அதிகார அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தும் ஷரத்து 19 (1) (ய),பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை என்பது ஆளும் இந்துத்துவ அரசாங்கத்தால் திருடப்பட்டு வருகிறது. பெண்களின் நிலை என்பது கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது மிகவும் அச்சுறுத்துவதாய் உள்ளது.

பாலியல் வன்முறை தன்னுடைய கோர முகத்தைச் சின்னஞ்சிறு குழந்தைகளிடமும் காட்டத் துவங்கியுள்ளது.  “பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிப்பதாக” ஒரு புள்ளிவிவர ஆய்வறிக்கை கூறியுள்ளது. இந்தப் புள்ளிகளில் தான் இந்தியாவில் உள்ள நெருக்கடி நிலையை உணர்ந்து இதற்கான வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தவும் இந்தப் பாசிசப் போக்கினைப் பொது மக்களிடம் கொண்டு சென்று நமக்கான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வையும், அன்பையும், பாசிச எதிர்ப்பையும் குறித்து அவர்களை உணர வைக்கும் பொருட்டு இந்தப் பரப்புரைப் பயணம் குறித்த எண்ணம் உருவானது.

இந்திய மகளிர் சம்மேளனம் (NFIW) மற்றும் அன்ஹத் (ANHAD) என்ற அமைப்புகள் ஒன்றிணைந்து தோழர்கள் அன்னி (NFIW) ஷப்னம் ஹாஷ்மி, (ANHAD) லீனா டேப்ரூ, போன்றவர்கள் கலந்து பேசி, டெல்லியில் இந்தப் பரப்புரைப் பயணம் குறித்த முடிவு எடுக்கப்பட்டது. முழுக்க முழுக்கப் பெண்களால் திட்டமிடப்பட்டு, துவங்கப்பட்டு, வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட இந்தப் பரப்புரைப் பயணத்தில் பல்வேறு பெண்கள் அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பெண்கள் அமைப்புகள் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பரப்புரைப் பயணமானது இந்தியாவின் ஐந்து முனைகளிலிருந்து துவங்கியது. கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களைக் கடந்து வந்த இந்தப் பரப்புரைப் பயணமானது சுமார் 100 பெண் பயணிகளைக் கொண்ட 500 நிகழ்ச்சிகளை, 200 இடங்களைக் கடந்து வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாகும். இந்தப் பயணம் நெடுகிலும் 500 பெண்கள் அமைப்புகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்திற்காகப் பல பெண்கள் அயராது உடலுழைப்பையும், சிந்தனை களையும், நேரத்தையும் அளித்துள்ளனர். பெண்களின் ஒற்றுமைக்கான மிகப் பெரிய ஒன்றுகூடலாக இது உருவானது.

இந்தியாவின் ஐந்து முனைகளிலிருந்து கிளம்பிய இந்தப் பயணம் 22 நாட்கள் பல்வேறு மாநிலங்களைக் கடந்து பிரச்சாரம் முடித்து அக்டோபர் 13 அன்று டெல்லி நாடாளுமன்றத் தெருவில் பொதுக்கூட்டமாக நிறைவடைந்தது. ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம், கேரளா, டெல்லி, தமிழ்நாடு போன்ற ஐந்து முனைகளிலிருந்து ஒரு குழுவிற்கு சுமார் 15 - 25 பெண்கள் என ஐந்து குழுவிற்கு கிட்டத்தட்ட 100 பெண்கள் பயணிகளாக இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு குழுவிலும் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அறிமுகமில்லாத பெண்கள் இருப்பார்கள். தமிழ்நாட்டில் இருந்து தோழர்கள் கவிதா கஜேந்திரன், இராஜலட்சுமி (NFIW), தேவி (NFIW), லில்லி (பறையிசை கலைஞர்), அனு$ (திருநங்கை செயற்பாட்டாளர்) மற்றும் நான் (திலகவதி, மனிதி) ஆகியோர் ஐந்து வெவ்வேறு குழுக்களோடு பயணித்தோம்.

ஐந்து குழுக்களும் ஒவ்வொரு பேருந்தில் தங்களுக்கு வகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையிலான வழித்தடங்களில் பயணித்தோம். பல்வேறு மக்களை, மொழிகளை, பண்பாட்டை, பிரச்சனைகளைக் கடந்து வந்தோம். எங்களின் பிரச்சாரப் பயணத்தின் நோக்கமான பாசிச எதிர்ப்பு, ஜனநாயகப் பாதுகாப்பு, பெண்கள், சிறுபான்மையின ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரான வன்முறை எதிர்ப்பு மற்றும் அரசியலமைப்புச் சட்டப்பாதுகாப்பு ஆகியவற்றை அவர்களிடம் கொண்டு சேர்த்தோம். “உங்கள் உதடுகள் சுதந்திரமாகத்தான் இருக்கிறது! பேசுங்கள்” என்பதை ஒருமித்த கருத்தாக முன்வைத்தோம். எங்களின் கருத்துகளை உரையாடல் மூலமும், நாடகங்கள், பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலமும் கொண்டு சேர்த்தோம். பல இடங்களில் நடைப்பயணமாக ஊர்வலமாக முழக்கங்களோடு பொதுமக்களைச் சென்றடைந்தோம். பல்வேறு அனுபவங்களையும் அரசியல் புரிதல்களையும் பெற்றோம்.

ஜம்மு காஷ்மீரில் துவங்கிய பயணம், ஹிமாசலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா வழியாக டெல்லி வந்தடைந்தது. இதில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த  திருநங்கைத் தோழர், இந்த வழி மிகவும் சவாலாக இருந்ததாகவும் குறிப்பாக, காஷ்மீரில் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் எங்கும் சூழ்ந்துள்ளதால் பதற்றம் நிலவியதாகவும், எல்லாப் பகுதிகளிலும் இந்தியா பாகிஸ்தான் எல்லைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். சுட்டுக் கொல்லப்படுதல் அங்கே வெகு சாதாரணமானதாக இருப்பதாகவும் கூறினார்.

கட்டைகளாலான வீடுகளிலேயே வசிப்பதாகவும் ஒரு பாதுகாப்பற்ற சூழலிலேயே காஷ்மீரிகள் வாழ்வதாய் அவர் உணர்ந்ததாகக் கூறினார். கேரளா வழியாகக் கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் வழியாக டெல்லி வந்த தோழர் லில்லி, கேரளாவில் செய்த நிகழ்ச்சிகளுக்கும் குஜராத்தின் நிகழ்ச்சிகளுக்கும் நிறைய வேறுபாடு இருப்பதை உணர முடிந்ததாகக் கூறினார். கேரள இடதுசாரி அரசு அளித்த ஆதரவும் குஜராத்தின் இந்துத்துவ அரசு அளித்த மன உளைச்சல் மற்றும் பதற்றமும் கொள்கை ரீதியாக மாநிலங்கள் எப்படி வேறுபடுகின்றன என்பதனைத் தெளிவாய் உணர்த்தியதாகக் கூறினார். தமிழ்நாட்டிலிருந்து கிளம்பிய குழு தெலுங்கானா, ஆந்திரப்பிரதேஷ், ஒடிஷா, சட்டீஸ்கர் வழியாக டெல்லி வந்தடைந்தது. அதில் கலந்து கொண்ட தோழர்கள் இராஜலட்சுமி மற்றும் தேவி, தென்னிந்திய மக்கள் அளித்த ஆதரவையும் அரசியல் விழிப்புணர்வையும் வட மாநிலங்களில் உணர முடியவில்லை எனவும் ஒரு தனி நாடு போல் உள்ள வேற்றுமைகளையும் உணர்ந்த தாகக் கூறினார்.

நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், மேகாலயா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், பீகார் வழியாக டெல்லி வந்த குழுவில் பங்கேற்ற தோழர் கவிதா கஜேந்திரன் “வடகிழக்கு மாநில மக்கள் இந்தியாவில் இருந்து மிகவும் தனிமைப்படுவதாக உணர்கிறார்கள். தேசிய இனங்களை இந்திய அரசு அலட்சியப்படுத்துவதும் ஆதிக்கம் செலுத்துவதும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பற்ற உணர்வின் மூலம் புலப்படுகின்றது” என்றார். அங்கேயும் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினரைப் பரவலாகப் பார்க்க முடியும். குறிப்பாகப் பெண்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். இந்தியாவை வேறு நாடாக அம்மக்கள் பார்க்கிறார்கள்.

நான் (திலகவதி), டெல்லியிலிருந்து கிளம்பி உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் வழியாக மீண்டும் டெல்லி சென்றடைந்த குழுவோடு பங்கேற்றேன்.

இந்தக்குழு இந்தியாவின் மையப் பகுதியில் பயணித்ததால் பல்வேறு வகையான வாழ்க்கை முறைகளையும் மக்களையும் நாங்கள் சந்திக்க  நேர்ந்தது. என்னுடைய அனுபவங்களைச் சற்று விரிவாகப் பகிர்கிறேன்.

முக்கியப் பிரச்சனைகள்:

1.வறுமை:

வட இந்திய மக்கள் மிகவும் வறுமையில் வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கைத்தரம் தென்னிந்திய மக்களைக் காட்டிலும் மோசமாக உள்ளது. நகர வளர்ச்சி, மற்றும் கிராமப்புற வளர்ச்சி முரணாக உள்ளது. உழைப்புச் சுரண்டல் அதிகமாக உள்ளதால் அங்கே வர்க்க வேற்றுமை மிகுதியாக உள்ளது. அவர்களின் வீடுகள், கல்வித்தரம், உணவு அனைத்துமே கவலைப்படும் அளவிற்கு அவர்களின் நிலை உள்ளது. வறுமையில் வாடும் மக்களை அடிமட்ட வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். பெட்ரோல் ரிக்ஷாக்களுக்கு நிகராக மனிதர்கள் இயக்கும் ரிக்ஷாக்கள் உள்ளது. உடலை வருத்தி சக மனிதர்களை ஏற்றிக்கொண்டு மூச்சு வாங்கி மிதித்து எழும் அந்த ஒட்டிய வயிறுகளில் வட இந்தியாவின் வறுமையையும் சுரண்டலையும் நாம் காணலாம்.

தெருவுக்குத்தெரு வாழைப்பழக் கடைகளும், சமோசா, கச்சோரி கடைகளும் உள்ளன. அது ஏன் என்று பார்த்தால் வறுமையின் பிடியில் உள்ள மக்கள் வாழைப்பழத்தையும், சமோசாவையும் கொண்டே மதிய உணவை முடித்துக் கொள்கிறார்கள். 20 ரூபாய் தான் அவர்களால் மதிய உணவிற்காக ஒதுக்க முடிகிறது. குறைந்த செலவில் மதிய உணவுத் திட்டங்கள் எதுவும் வறுமையின் பிடியில் உள்ள அந்த மக்களுக்கு இல்லை.வேலை வாய்ப்பும் மோசமான நிலையில் உள்ளதால் படித்த இளைஞர்கள் படிப்பிற்கான வேலைகள் செய்யாமல் ‘பான்’ கடைகளில் போதைப் பொருட்களை விற்பதையும் பார்க்க நேர்ந்தது. வளமற்ற வறட்சியான வாய்ப்பற்ற மாநிலங்களாக அவை உள்ளன.

2.இந்துத்துவமும் இஸ்லாம் வெறுப்பும்

நாங்கள் சென்ற மாநிலங்களிளெல்லாம் ‘இந்து - முஸ்லிம்’ பிரச்சனைகள் இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். இது வடஇந்தியாவில் மிக முக்கிய ஆழமாக வேரூன்றிய பிரச்சனையாக உள்ளது. இஸ்லாம் மக்கள் மீது இந்துத்துவ சக்திகளால் திட்டமிடப்பட்ட வெறுப்பு பரப்பிவிடப்படுகின்றது. அமைப்பு சார்ந்த இஸ்லாம்-இந்துத்தோழர்கள் ஒற்றுமையாகச் செயல்படுகின்றனர். ஆனால் வெகுஜன மக்களிடையே பரவலான வேற்றுமையும், இந்து மக்கள் - இஸ்லாம் மக்கள் தனித்தனியாக வாழ்வதும் தொடர்பற்று இருப்பதும் தெளிவாகக் காணமுடிகிறது.

விநாயகர் ஊர்வலத்தை ஒரு அராஜகப் போக்கோடு நடத்துவதும், மொஹரம் ஊர்வலங்களில் தேவையில்லாமல் பிரச்சனைகளை உருவாக்குவதும் இந்துத்துவ சக்திகளால் நடத்தப் படுகின்றது. இஸ்லாமியர்களோடு சேரக்கூடாது, இஸ்லாமியர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது போன்ற எழுதப்படாத சட்டங்கள் இருக்கின்றன. சின்னஞ்சிறிய குழந்தைகளும் “எங்களுக்கு இஸ்லாமிய நண்பர்கள் கிடையாது. எனக்கு இஸ்லாமியர்களை பிடிக்காது” என்ற போது மதவெறி எந்த அளவிற்கு வேரூன்றி உள்ளது எனக் காண முடிந்தது.

தங்களை “இந்துக்கள் என்றோ இஸ்லாமியர்கள் என்றோ சொல்லாமல் இந்தியர்கள் என்று சொல்லும் மக்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள் சிலர் பர்தா அணிவதுடன், பொட்டு வைத்துக் கொள்வதும், இந்துப் பெண்கள் “அஸான்” ஓதும் போது தங்கள் தலைகளை மூடிக்கொள்வதும் அவர்கள் எந்த அளவிற்கு மதங்கள் கடந்து ஒற்றுமையை வலியுறுத்துகிறார்கள் எனப் புரிய வைக்கிறது.

3.சாதியம்

இஸ்லாம் - இந்துப் பிரச்சனைகள், மதவெறிச் சண்டைகள் அங்கே பூதாகரமாக வெடிப்பதைப் போல் ‘சாதி’ ஒரு பிரச்சனையாகக் கருதப்படுவதில்லை.

ஏனென்றால் “நாம் அடிமையல்ல” என்ற சிந்தனையையே அந்த மக்களிடம் கொண்டு சேர்க்க ஆதிக்க சக்திகள் விடுவதில்லை. சாதி அடுக்குகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும், அதுதான் அவர்களின் கலாச்சாரம், கடவுள் நம்பிக்கை என்றும் மக்களிடம் திணிக்கப்பட்ட நம்பிக்கையாக உள்ளது. அதிலிருந்து வெளியேறுவது குறித்து அவர்கள் யோசிக்க  அனுமதிக்கப்படுவதில்லை. அமைப்பு களில் மக்கள்பணி செய்யும் தோழர்கள் கூட சாதிப் பெயரைப் பின்னால் இணைத்துக் கொள்கிறார்கள் என்பது எத்தனை அவலம். இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மனநிலையும் சமூகநீதி குறித்த விழிப்புணர்வின்மையும் மிகுந்த ஆபத்தான கட்டத்தை நோக்கி அம்மக்களை இழுத்துச் செல்கிறது. மதச்சண்டைகளைவிட மிக முக்கியப் பிரச்சனை சாதிஅடுக்கு என்பதையும் அதன் ஆபத்தையும் உணராத பகுதியாகத்தான் வட இந்திய மாநிலங்கள் உள்ளன. எனவேதான் சாதிக்கு எதிராய் வெகுஜன மக்களின் குரல்கள் ஒலிக்காமலேயே அழுத்தப்படுகிறது.

4.பெண்கள்:

எல்லாப் பகுதிகளிலும் பெண்கள் அடிமை களாகவும் சமையல் அறைக்கான, பிள்ளைப் பெறுவதற்கான இயந்திரங்களாகவும் நடத்தப் பட்டாலும், வட இந்திய பகுதிகளில் அவர்களின் நிலை இன்னும் மோசமானதாகவும், அதீத வன்முறைக்கு உட்பட்டதாகவும் இருக்கிறது. தலைகளை முக்காடுகள் போட்டு மூடிக்கொண்டு, சமையலறையில் சப்பாத்தி சுட மட்டுமே தகுதியானவர்கள் பெண்கள் என்ற சிந்தனை அங்கே வலுவாக உள்ளது. தென்னிந்தியப் பெண்களிடம் உள்ள உரிமைக்கான விழிப்புணர்வும், சுயமாக வேலைக்குச் சென்று சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்புகளும் அந்தப் பெண்களுக்கு மறுக்கப் படுகின்றது.

பிரச்சாரப் பயணத்திற்கான தெருமுனைக் கூட்டங்களுக்கு அழைத்தால் கூட “வீட்டின் கேட்டைத் தாண்டி நாங்கள் செல்லக்கூடாது. இது எங்களின் கணவருக்கும் மாமனார்களுக்கும் பிடிக்காது” என்று மறுக்கிறார்கள். இரவு ஏழு மணிபோல் நகரங்களில் உள்ள மார்க்கெட்களில் கூடப் பெண்களைக் காண முடிவதில்லை. குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள் மீது பர்தாக்கள் திணிக்கப்பட்டு வெளியே வரும்போதும் நிச்சயமாக ஆண் துணை இல்லாமல் வரக்கூடாது என்ற அவல நிலையும் உள்ளது. இராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்களில் இளவயதுத் திருமணங்களும், இளவயதில் குழந்தை பெறுவதும் அதிக அளவில் உள்ளது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் அதிகமாக, பெரிய குற்றமாகக் கருதப்படாத போக்கும் உள்ளது.

5.சுகாதாரம்

“தூய்மை இந்தியா” எனப்படும் (சுவச் பாரத்) திட்டம் தென்னிந்திய நகரங்களில் ஒலிக்கும் வாசகமாக இருந்தாலும் சுகாதாரத்தில் வட இந்தியா மிகவும் பின்னடைந்துள்ளது. திறந்த வெளிக் கழிப்பிடம்தான் மக்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டித் தரப்பட்ட கழிப்பறைகள் பொருட்கள் போட்டு வைக்கும் கிடங்குகளாகவும், ஒட்டடை நிறைந்த அறைகளாகவும் உள்ளன. கழிப்பறைக்கான தண்ணீர் வசதி இல்லாமலும், கழிப்பறைப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லாமலும் வெறும் கழிப்பறைகள் கட்டுவதால் பயனில்லை என்பதை அரசு உணரவில்லை. துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை இன்னும் மோசம் அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்படுவதுகூட இல்லை. இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. மாசடைந்த நகராக தலைநகர் இருப்பதும், குப்பைகளுக்கு நடுவே மக்கள் வசிப்பதும் சுகாதாரத்தைக் கேள்வி கேட்பதாக உள்ளது.

6.நிலம்

“நிலம் எங்கள் உரிமை” என்ற கருத்தாக்கம் தென்னிந்தியாவில் பரவிய அளவிற்கு வட இந்திய மக்களைச் சென்றடையவில்லை. ஜார்கண்ட் மாநிலத்தில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட ஏழை விவசாயிகளை ஏமாற்றி, அரசே நிலங்களைப் பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்கு விற்கிறது. இதனை “நில வங்கி” (Land Bank) என அழைக்கிறார்கள். இந்தியாவிலேயே ஜார்கண்ட் மாநில மக்கள் தான் வேறு மாநிலங்களுக்கு அதிகமாக இடம்பெயர்கிறார்கள். இதற்கு நில அபகரிப்பும், வளம் சுரண்டுதலும் மிக முக்கியக் காரணம்.

7.மொழி

“இந்தித் திணிப்பு எதிர்ப்பு” என்பது மிகப் பெரிய புரட்சி இயக்கமாக வெடித்ததற்குக் காரணமான பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களும் திராவிடக் கொள்கைகளும் இல்லாமல் வட இந்திய மக்கள் இந்தி மாயைக்குள், திணிப்பிற்குள் சிக்கித் தவிக்கிறார்கள். ஒவ்வொரு 500 கி.மீக்கும் ஒரு மொழி உள்ளது. தேசிய இனங்களின் மொழி முற்றிலும் வேறாக உள்ளது. குஜராத்தி, இராஜஸ்தானி, அஸாமி, பழங்குடியின மக்களின் மொழிகள் போன்றவை இந்தியிலிருந்து முற்றிலும் வேறுபட்டும், இந்தி தெரியாத பிற மொழிகளைத் தாய் மொழிகளாய்க் கொண்டுள்ள மக்கள் இந்தி தேசிய மொழி எனும் மாயைக்குள் தள்ளப்பட்டு அதைக் கற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள். தாய்மொழிக் கல்வி ஆறாம் வகுப்போடு நிறுத்தப்பட்டு இந்தியும் ஆங்கிலமுமே திணிக்கப்படுகின்றது.

8.உணவு

‘மாட்டுக்கறி’ சாப்பிடக்கூடாது எனத் தடை விதித்ததே முட்டாள்தனமான பாசிசப்போக்கு. இதில் அரசு மாட்டுக்கறியை தடை செய்யாத மாநிலங்களிலும் மாட்டுக்கறித் தடை என்பது நிலவுகிறது. மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். படுகொலை செய்யப்படுகிறார்கள். (Mob lynching)) உணவுரிமை என்பது மக்களின் கைகளிலிருந்து முழுவதுமாகப் பிடுங்கப்படுகின்றது. அதே சமயம் பசு மாட்டின் இறைச்சி தடை செய்யப்படும்போது எருமை மாட்டு இறைச்சி பரவலாக உண்ணப் படுவது குறிப்பிடத்தக்கது.

9.மாற்று தேவை

மக்களிடம் குறைகளைக் கேட்டால் “ரேஷன் கார்டே எங்களுக்கு இல்லை, வறுமையில் வாடுகிறோம், வேலை இல்லை” எனப் புலம்பு கிறார்கள். இந்த அரசு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? யாருக்கு ஓட்டுப்போட விரும்புகிறீர்கள் எனக் கேட்டால், ஆளும் பா.ஜ.க.வைக் கை காட்டுகிறார்கள்.

அரசிற்கும் தங்களின் பிரச்சனைகளுக்கும் சம்பந்தம் இல்லை என நம்புகிறார்கள். பா.ஜ.க.வைத் தவிர வேறு மாற்று இல்லை என எண்ணுகிறார்கள். வறுமையின் பிடியில் உள்ள மக்கள் தங்களைச் சுற்றி நிகழும் அரசியலைத் திரும்பிப் பார்க்கக்கூட இயலாதவர்களாக, உரிமைகள் பற்றியும் அரசியல் பற்றியும் விழிப்புணர்வு அற்றவர்களாக இருக்கிறார்கள்.

joursets across the nation 450ஓங்கி ஒலித்த பெண்கள் குரல்:

இதே நிலையில்தான் பெண்கள் தங்களின் குடும்பம், கணவன், குழந்தை என அனைத்தையும் துறந்து 22 நாட்கள் சமூகப் பிரச்சனைகளுக்காகவும், உரிமைகளுக் காகவும் கரம் கோர்த்து நடைபோடத் தொடங்கினார்கள். உணவு, நீர், இருப்பிடம், கழிப்பறை என அத்தனை சவால்களையும் கடந்து சமூகத்திற்காக ஒன்றிணைந்து மொழி எனும் பெரும் சிக்கலை உடைத்து அன்பால் இணைந்தார்கள்.

அக்டோபர் 25, சென்னையில் தமிழகப் பெண்கள் ஆயிரம் பேர் ஒன்று கூடி, காஷ்மீர் வழித்தடத்தில் வந்த பெண்களை வரவேற்று ஒரு மிகப்பெரிய அரங்கக் கூட்டத்தை நடத்தி முடித்தார்கள். அதில், NFIW, AIDWA, மனிதி, வி.சி.க, தி.க, இந்தியக் கிறித்துவப் பெண்கள் இயக்கம், தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் கழகம், பெண் தொழிலாளர் சங்கம் என நூற்றுக்கணக்கான அமைப்புகள் இணைந்து 1000-க்கும் மேற்பட்ட பெண்களைத் திரட்டி “அமைதிக்கான உரையாடல்” அரங்கக் கூட்டத்தினை, பாசிசத்திற்கு எதிராக வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள்.

டெல்லியில் அனைத்துக் குழுவும் அக்டோபர் 13 அன்று வந்தடைந்து மிகப்பெரிய பெண்கள் சக்தியால் ஒன்றிணைந்து பாசிச, ஆணாதிக்க, முதலாளித்துவ போக்குக்கு எதிராக ஓங்கி ஒலித்தனர்.

“நம்பிக்கை மனிதிகளால்” திளைத்து நின்றது நாடாளுமன்ற சாலை. பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், ஆணாதிக்கத்திற்கு எதிராகவும் மட்டும்தான் போராடுவார்கள் என்ற கருத்தைச் சுக்கு நூறாய் உடைத்து, ஒட்டுமொத்த மக்களுக்கான நீதிக்காய், ஜனநாயகத்திற்காய், உரிமைக்காய் அன்பால் இணைந்த பெண்கள் கூட்டம், பேசாத உதடுகளைப் பேசத் தூண்டிய ஒரு எழுச்சிக் கூட்டமாய் “பாத்தே அமன் சீ” எனும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தேசிய அளவிலான பரப்புரை பயணத்தை முடித்துத் திமிறி நிற்கிறது.

Pin It