கும்பகோணம் சாக்கோட்டையில் சுயமரியாதைத் திருமணம்

சகோதரிகளே! சகோதரர்களே! இன்று இங்கு நடக்கும் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகின்றது. இதை நான் முழு சுயமரியாதைத் திருமணம் என்று ஒப்புக் கொள்ள முடியாது. பார்ப்பான் வரவில்லை என்பதையும், அர்த்தமற்ற சடங்குகள் அநேகமாயில்லை என்பதையும், வீண்மெனக்கேடான காரியமும் வீண் செலவுமான காரியமும் இல்லையென்பதையும் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் தாலி கட்டத் தயாராயிருப்பதாகத் தெரிகிறேன். பெண் உட்கார்ந்திருக்கும் மாதிரியைப் பார்த்தால் பெண்ணும் மாப்பிள்ளையும் இதற்கு முன் அறிமுகம் கூட ஆனதில்லை போல் காணப்படுகின்றது.

periyar 306சுயமரியாதைக் கல்யாணத்தின் முறைகள் இன்னின்னது என்று இப்போது வரையறுப்பது என்பது காதால் கேட்பதற்கே முடியாத காரியமாயிருக்கும். கல்யாணம் என்பதே வேண்டியதில்லை என்று சொல்லக்கூடிய திட்டம் சுயமரியாதை இயக்கக் கொள்கையில் ஒரு காலத்தில் வரக்கூடும். எந்தப் பெண்ணும் எந்த மாப்பிள்ளையும் புருஷன் பெண் ஜாதிகளாகப் போகிறார்கள் என்று பெற்றோர்களுக்குக் கூடத் தெரிய முடியாத நிலைமை ஏற்படும். இந்த மாப்பிள்ளைக்கு இதற்கு முன் எத்தனை பெண் கல்யாணமாயிற்று? இந்தப் பெண்ணுக்கு இதற்குமுன் எத்தனை புருஷன் கல்யாணம் ஆயிற்று? என்கின்ற கணக்குப் போடக்கூடிய காலம் வரும். மற்றும் அதைப் பற்றியே மக்கள் விசாரிக்க - யோசனை செய்யக்கூடிய அவசியமே இல்லாமலும் போகக்கூடும். அந்த மாதிரி கல்யாண முறையும் இன்றைய குடும்ப வாழ்க்கை முறைகள் ஒழிந்து ஆணும் ஆணும் சிநேகமாய், அன்பாயிருப்பது போலவே ஏதோ ஒரு பெண்ணும் ஏதோ ஒரு ஆணும் பெண்ணும் சிநேகமாயிருக்கின்றார்கள் என்கின்ற அளவில் மாத்திரமே சம்பந்தமிருக்கும்படியான காலமும் வரும். இதெல்லாம் அநேகமாய் பெண் மக்களுக்கு பகுத்தறிவு உணர்ச்சியும், சுயமரியாதை உணர்ச்சியும், உண்மைச் சுதந்திரம் என்பது என்ன என்கின்ற உணர்ச்சியும் வந்தவுடனே ஏற்பட்டுவிடும்.

இப்போது பெண்கள் அடிமைப் பொருள்கள் என்றும் தாங்கள் மற்றவன் அனுபவிக்கும் பொருள் என்றும்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ள நினைப்பதே அவர்களின் அடிமை உணர்ச்சியின் அறிகுறியாகும். அந்தக் கருத்துக் கொண்டுதான் அவர்களுக்கு நடை, உடை அணி முதலியவைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு தாசி என்பவள் அதாவது தான் பிறர் அனுபவிப்பதற்காக இருக்கின்றவள், அதன் பயனாய் ஜீவிக்கின்றவள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒருத்தி தன்னை அலங்கரித்துக் கொள்வதில் இருக்கும் மனோபாவத்திற்கும் மற்றப் பெண்கள் அலங்கரித்துக் கொள்ளுவதில் இருக்கும் மனோபாவத்திற்கும் அதிக வித்தியாசமிருப்பதாக நான் கருதுவதில்லை.

மிருகம், பட்சி ஆகியவைகள் ஆணைவிட பெண் தாழ்ந்ததென்று கருதுவதில்லை. “ஆணுக்காகத்தான் பெண் இருக்கிறோம்” என்று கருதி, தங்கள் மீது ஆண்கள் ஆசைப்பட வேண்டும் என்று சிறிதும் முயற்சிப்பதில்லை. ஆண்கள் ஆசைப்படும்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கருதுவதுமில்லை. ஆனால் பெண் ஜன்மம் எடுத்து தாங்கள் அலங்கரித்துக் கொண்டு ஆண்கள் ஆசையை எதிர்பார்ப்பதற்கே ஏற்பட்டதென்பதாய் கருதுகிறார்கள். தன் சொந்தப் புருஷனை சந்தோஷிக்கச் செய்யவோ திருப்தி அடையச் செய்யவோ என்று செய்யுங் காரியங்களும் கூட ஒரு வித அடிமை எண்ணத்தில் பட்டதே ஆகும். நடை, உடை பாவனைகளில் புருஷனை விட மாறுபட்டிருக்க வேண்டும் என்கின்ற மனப்பான்மையும் அடிமை மோகமே யாகும். இவைகள் எல்லாம் இயற்கைக்கு மாறுபட்டவையே யாகும். எப்படியோ ஆதியில் இம்மாதிரி ஏற்பாடு செய்து விட்டதால் அந்த பத்ததிகள் இனியும் நடந்து வருகின்றன. ஆண்களும் அனேகமாய் தனது வீட்டை, வண்டியை, மாட்டை அலங்கரிப்பதில் என்ன மனோபாவம் கொள்ளுகின்றார்களோ அதே மனோபாவம்தான் தன் பெண் ஜாதியை சிங்காரிப்பதிலும் கொள்ளுகிறான். ஆகையால் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வது என்கின்ற மனப்பான்மையை ஒழிக்க வேண்டியது பெண்கள் விடுதலையில் - சுதந்திரத்தில் ஒரு திட்டமாகும்.

தவிர திருமணம், கல்யாணம் என்பவைகள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வது என்பது தவிர மற்றபடி இதில் வேறு ஒன்றுமே இல்லை. இந்த ஒப்பந்தமும் இருவர் சௌகரியத்தை பொருத்த காரியங்களுக்கு மாத்திரமே அல்லாமல் மற்றொன்றுக்கும் இல்லை. அதுவும் இருவருடைய சமமான சௌகரியத்திற்குத் தானேயொழிய ஒருவருக்கு அதிக சௌகரியம் ஒருவருக்கு குறைந்த சௌகரியம் என்பதாக சிறிது வித்தியாசங்கூட கொண்டதாயிருப்பதல்ல. அதிலும் இருவரது சுதந்திரங்களும் சமமாய்க் கருதப்பட்டதாகவும் அதற்கு எவ்விதத்தடையும் இருப்பதாகவும் இருக்கக் கூடாததாகும். அனேகமாய் இந்த ஒப்பந்தங்கள் எழுதி ரிஜிஸ்டர் செய்வதுதான் இனிப் பொறுத்தமானதாக இருக்கும். வேண்டுமானால் புதுவீடு குடிபோதல், புதிய தொழில் வியாபாரம் முதலிய காரியங்கள் துவக்கப்படுபவை ஆகியவைகளுக்காக எப்படி முதலிலேயே சற்று விளம்பரம் இருந்தால் அனுகூலம் என்று கருதுகின்றோமோ அதுபோல் நண்பர்கள், நான்கு பந்துக்கள், அக்கம் பக்கத்தார்கள் ஆகியவர்களுக்கு தெரியக்கூடியதாய் இருப்பதும் நன்மையானதுதான். அதிலும் ரிஜிஸ்டர் இல்லாத திருமணங்களுக்கு சாக்ஷிகள் இருக்க வேண்டியது அவசியம் என்கின்ற முறையில் பலர் அழைக்கப்படு வதும் சரிதான். ஆனால் இதற்காகவே அதிகச் செலவும் மெனக்கேடும் கூடாது என்பது மாத்திரம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். திருமணச் சடங்கு என்று ஒன்றை தனிப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

மணமக்கள் சபைக்கு வந்து தங்கள் தங்கள் ஒப்பந்தங்களைச் சொல்லி ஒப்புக் கொண்டதற்கு அறிகுறியாய் தங்கள் தங்கள் சுருக்கெழுத்துள்ள மோதிரம் மாற்றிக் கொள்வதோ மாலை மாற்றிக் கொள்வதோ போதுமானதே யாகும். இதற்காகவென்று ஏன் அதிகப் பணச்செலவு செய்ய வேண்டும்? என்பதுதான் எனக்கும் புரியவில்லை. புதுச்சேலை, புதுநகை தாம்பூலம் இவைகளெல்லாம் பயனற்ற செலவாகவே ஆகின்றன. அனேக சுயமரியாதை கல்யாணங்களில் மாப்பிள்ளை சாதாரண உடுப்புடன் இருந்திருக்கிறார்கள். பெண்கள்தான் உயர்ந்த சேலையும், விலையுயர்ந்த நகைகளும் அணிந்து ஒரு ஆணானவன் பெண் வேஷம் போட்டிருப்பது போல் விளங்குகின்றார்கள். இவையெல்லாம் நாகரீகம் என்பதோடு பெண் மக்களின் தன்மையையே குறைத்து விடுகின்றது. பெண்கள் சுதந்திரத்துக்கும், பெண்கள் விடுதலைக்கும் அவர்கள் மனப்பான்மை சற்று மாறியேயாக வேண்டும். “நான் அடிமையாய்த்தான் இருப்பேன் நீ மாத்திரம் எனக்கு எஜமானனாய் இருக்கக் கூடாது” என்பதில் அர்த்தமேயில்லை.

தவிர பெண்களுக்கு பிள்ளைப் பைத்தியம் இருப்பது மிகவும் புத்தி கெட்டத்தனமாகும். பிள்ளைகள் பெறாமல் இருப்பதற்கு எவ்வளவு சௌகரியம் செய்து கொள்ளக்கூடுமோ அவைகளை செய்து கொள்ள வேண்டும். கொஞ்சுவதற்கென்று பிள்ளைகளைப் பெற்று அவற்றைக் காப்பாற்றுவதற்கு என்று அதற்கு நேர் விரோதமாய் என்னென்னமோ செய்து அஞ்ச வேண்டியதாகி விடுகிறது. எவ்விதத்திலும் பொறுப்பில்லாதவர்கள் வெகுதாராளமாய் “16 பிள்ளைகள் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்” என்று ஆசீர்வாதம் செய்துவிடுகிறார்கள். பிள்ளை பெற்று வளர்க்கக் கஷ்டப் படுகின்றவர்கள் யார் என்பதை யோசித்துப் பாருங்கள். நமது அறிவீனமானது இக் கஷ்டங்களை உணரச் செய்யாமல் செய்து விடுகிறது. உணர்ந்தாலும் அதற்கு நாம் ஜவாப்தாரியல்ல என்று நினைத்துக் கொள்வதால் அக்கஷ்டத்திலிருந்து விலக முடிவதில்லை.

(குறிப்பு : கும்பகோணம் சாக்கோட்டையில் 12-06-1931 அன்று நடந்த ‘ராகு காலத்’ திருமணத்தில் ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 21.06.1931)