தங்கர்பச்சான் நடிகைகளை விபச்சாரிகள் என்ற சொல்லியபோது நடிகைகளின் எதிர்வினைகள் நீங்கலாக தமிழ்ச்சூழலில் வேறு எந்த எதிர்வினையும் உருவாகவில்லை. ஆனால் திருமணத்துக்கு முன்பான பாலியல் நிலைப்பாடு குறித்த குஷ்புவின் கருத்துக்களுக்காக தமிழ்ச் சமூகத்தில் ஆர்ப்பாட்டமான எதிர்வினைகள் உருவாக்கப்பட்டன. இவை உண்மையான மக்கள் எதிர்வினைகள் அல்ல. இவற்றுக்குப் பின்னால் சுயலாபங்களை நோக்கிய ஒரு கூட்டணி அரசியலே செயல்பட்டிருக்கிறது என்பது அப்பட்டமாகவே தெரிந்தாலும் தமிழ் ஆழ்மனத்தில் ஊடுருவியுள்ள ஆண் ஆதிக்க உணர்வின் பல்வேறு கூறுகள் இந்த எதிர்வினைகளில் வெளிப்படுவதை நாம் புறக்கணிக்க முடியாது. முக்கியமாக திராவிட அரசியல் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பிற்போக்குப் பார்வையுடன் பெண்ணின் சுய இருப்பை அவமதித்தது. பெண்ணை ஒரு வியாபாரப் பொருளாகவே முன்நிறுத்தி ஆண் பெண் உறவுகளை கொச்சைப்படுத்தி வந்துள்ளதின் இன்னொரு தொடர்ச்சிதான் இது என்பதை நாம் விமர்சன நோக்கில் பார்க்கவேண்டியுள்ளது. பெரியார் மட்டும்தான் பெண்ணை ஒரு தோழமை உணர்வுடன் அணுகி ஆணுக்குரிய எல்லா உரிமைகளுடனும் சுதந்திரத்துடனும் பெண்கள் சமூக நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்கிற பார்வையுடன் பெண்களுக்கான இயக்கத்தை முன் நின்று நடத்தினார். மற்ற திராவிடத் தலைவர்கள் எல்லோரும் வெளியே பெண் உரிமை பற்றி ஆரவாரமாக பேசினாலும் தங்கள் சொந்த வாழ்க்கையில் ஒழுக்கம் குறித்த இரட்டை அளவுகோல்களுடன் பெண்ணுக்கு விலங்குகள் பூட்டியும், பெண்ணை ஒரு கேளிக்கை வடிவமாகவுமே முன்நிறுத்தினர்.

அவர்களுடைய இலக்கியச் சொல்லாடல்களிலெல்லாம் கண்ணகி மாதவி ஆகிய பிம்பங்களையே முன்நிறுத்தி பெண் குறித்து மனைவி அல்லது விபச்சாரி ஆகிய நிலைப்பாடுகளையே முன்வைத்தனர். நம்முடைய நாட்டுப்புற இலக்கியங்களிலும் சிற்றிலங்கியங்களிலும் காணப்படும் நெகிழ்வான பாலியல் நிலைப்பாடுகள் குறித்தெல்லாம் எந்தவிதமான ஆரோக்கியமான பார்வையும் இல்லாமல் செயற்கையான போலித்தனம் நிறைந்த ஒரு ‘கற்பு’ என்னும் பெருங்கதை யாடலையே அவர்கள் முன் மொழிந்து வந்திருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய பத்திரிகை, சினிமா போன்ற ஊடகங்களில் எல்லாம் பெண்ணை ஒருபுறம் கற்பு எந்திரமாகவும் மறுபுறம் பாலிச்சையைத் தூண்டும் கேளிக்கை வடிவமாகவுமே சித்தரித்து வந்திருக்கின்றனர். சுய இருப்புக்காகவும், உரிமைக்காகவும் போராடும் பெண்ணின் போராட்ட வடிவங்களை அவர்கள் கௌரவப்படுத்தியதில்லை. பெண் குறித்த அவர்களுடைய இந்த பிற்போக்குப் பார்வைதான் இன்றுவரை ஒரு இழிந்த அரசியல் உத்தியாகவும், வியாபார உத்தியாகவும் அவர்களுடைய ஊடகங்களில் செயல்பட்டு வருகிறது.

இத்தகைய கலாச்சார உணர்வற்ற ஒரு வணிகக் கருத்தாக்கத்தை தமிழ்ப் பண்பாடு என்கிற பெயரில் விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் இந்த திராவிடக் கட்சிகளிடமிருந்து இரவல் பெறுவது என்பது உண்மையில் அவமானகரமானது. பண்பாடு என்று இவர்கள் முன் மொழியக்கூடிய எத்தகைய ஒற்றைக் கலாச்சாரமும் தமிழ் வாழ்வில் எந்த காலகட்டத்திலும் நிலவியதில்லை. உண்மையில் நம்முடைய தமிழ்ச் சமூகம் தனிமனித அளவிலும் சமூக அளவிலும் பெண்களின் பங்களிப்பை ஆரோக்கியமாக உள்வாங்கி ஒரு திறந்த சமூகமாகவே இயங்கி வந்திருப்பதை எண்ணற்ற தமிழ் இலக்கியச் சொல்லாடல்களில் பார்க்க முடியும். பலவிதமான பெருங்கதையாடல்களுக்கு இடையே விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைச் சொல்லும் குறவஞ்சியும், பள்ளுப்பாட்டும், நொண்டி நாடகமும் நம்முடைய கலாச்சாரத்தின் பகுதியாக இருந்திருக்கின்றன. கலாச்சாரத்தின் பன்முகத் தன்மைகளை ஏற்றுக்கொள்ளவியலாத இடைநிலை சக்திகள்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த ஆண் பெண் சமன்பாடுகளை சீர் குலைத்துள்ளன. ஆண் பெண் உறவுநிலைகள் குறித்த நெகிழ்ச்சிகளும் சிக்கல்களும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வடிவங்கள் கொண்டிருப்பவை. மனித மனத்தின் எண்ணற்ற சந்தோஷங்களுக்கும் துயரங்களுக்கும் ஊற்றுக்கண்ணாக அமைந்த இந்த நெகிழ்வுகளையும், சிக்கல்களையும் நோக்கியே நம்முடைய கலை இலக்கியங்கள் யாவும் கவனம் கொண்டுள்ளன. ஆண் பெண் உறவு நிலைகளில் நிலவிவரும் ஒருவித புதிர்த்தன்மைதான் வாழ்க்கைக்கு வசீகரத்தையும் உந்து சக்தியையும் வழங்கி வந்திருப்பதை காலம் காலமான எண்ணற்ற அழகியல் வெளிப்பாடுகளில் நாம் நிதர்சனமாகப் பார்க்க முடியும். ஆண் பெண் உறவுநிலைகள் குறித்த கலாச்சாரத்தின் நுண் உணர்வுகளை சில அரசியல் விளையாட்டுகளுக்காக இத்தகைய சக்திகள் கொச்சைப் படுத்துவதை எந்த நாகரிக சமூகமும் அனுமதிக்க முடியாது.

ஒரு சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதில் பெண்ணின் பங்களிப்பு என்பது என்றைக்கும் மேலானதாகவே இருந்து வந்திருக்கிறது. குடும்பத்தை நிர்வகிப்பதிலும், குடும்பத்துக்குத் தேவையான சிறு தொழில்கள் செய்வதிலும், ஜீவனத்துக்கான பல வேலைகளில் ஆணுக்கு பெண் உறுதுணையாக இருப்பதையும் நாம் சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் பார்க்க முடியும். இன்னும் ஆண் தவறான வழிகளில் தன்னுடைய வருமானத்தை விரயமாக்கும்போதும் பெண் கூடுதலான பொறுப்பை ஏற்று குடும்பம் சீர்குலையாமல் காப்பாற்றி வருவதையும் நாம் பார்க்க முடியும். ஆனால் பெண்ணின் பங்களிப்புகளை புறந்தள்ளி ஆண் தன்னுடைய பாலியல் நிலைப்பாடுகளின் ஊடாகவே பெண்ணை மதிப்பிடுவது என்பது ஒரு அப்பட்டமான மேல்தட்டு மற்றும் மத்திய வர்க்க மனநிலையின் வெளிப்பாடே. நம்முடைய மைய நீரோட்ட ஊடகங்களும் பெருங் கதையாடல்களும் இத்தகைய மதிப்பீடுகளையே கலாச்சாரம் என்ற பெயரில் முன் நிறுத்துகின்றன. இத்தகைய மதிப்பீடுகளே நடைமுறை வாழ்க்கையில் பெண்ணை தொடர்ந்து கண்காணிப்புக்கு உரியவளாக்கி அவளுடைய இருப்பை அகௌரவப்படுத்தி வந்திருக்கின்றன. ஆனால் இவை என்றும் உழைக்கும் மக்களின் கலாச்சாரமாக இருந்ததில்லை. இங்கு உறவும், முறிவும் என்றைக்கும் இரு பாலருக்கும் பொதுவானதாகவே இருந்திருக்கின்றன. மனித மனங்களை ஊடுறுவிப் பார்க்கும் வல்லமை கொண்ட கலைஞர்களும், இலக்கிய ஆசிரியர்களும் ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண்ணின் இருப்பு என்பது எல்லாவிதமான மனிதக் கூறுகளின் தன்மைகளுடன் அடையாளம் காணப்பட்டு மதிக்கப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.

இன்று குடும்பம், சமூகம் ஆகிய கட்டமைப்புகள் பெரிதும் மாற்றமடைந்து கொண்டு வரும் ஒரு சூழலில் ஆண் பெண் உறவுநிலைகளில் இறுக்கங்கள் தளர்ந்து நட்புணர்வும் தோழமை உணர்வுகளும் பெருகிக் கொண்டு வருகிற காலகட்டம் இது. முன்னெப்போதைவிடவும் இன்று கல்விக்கூடங்களிலும், அலுவல் பார்க்கும் இடங்களிலும், கலைப்பயிற்சிகளிலும், விளையாட்டுகளிலும், சமூக செயல்பாடுகளிலும் ஆண் பெண் இணைந்து பணியாற்றக்கூடிய எண்ணற்ற சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளன. இந்நிலையில் அவர்களிடையே சரியான புரிதலும், நட்பும் தோழமையும் உருவாகும் நிலையிலேயே அவர்கள் இணைந்து பணியாற்றக்கூடிய சூழல் மேம்பட முடியும். ஆண் பெண் உறவுநிலைகளின் நெகிழ்வுகளும், சிக்கல்களும் போலித்தனமான கற்பிதங்களின் அடிப்படையில் அணுகப்படாமல் அவற்றின் இயல்பான தன்மைகளை அங்கீகரிக்கும் மனநிலையுடன் அணுகப்படும்போதே இது சாத்தியப்படும். பெண் இன்று வீட்டைத் தாண்டி வெளியுலகில் இயக்கம் கொள்ள வேண்டியிருப்பதை அத்தியாவசியமானதாகவும் இயல்பானதாகவும் ஏற்றுக்கொள்ளும் தமிழ்ச் சமூகம் பெண்களின் உடை விசயத்திலும், பழக்க வழக்கங்களிலும் கட்டுப்பெட்டித்தனத்தையும், கண்காணிப்பையும் வலியுறுத்துவது பெண்களின் தன்மான உணர்வுகளையும், சுய கட்டுப்பாட்டையும் அவமதிக்கும் செயலாகும். காலம் காலமாக ஒரு கற்பிதமான ஒழுக்கம் என்னும் சிலுவை பெண்கள் மீதே சுமத்தப்படுவது கேள்விக்குட்படுத்தப்படுவதை மறுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. தனக்குரிய எந்த சலுகையையும் பெண்ணுக்கு மறுக்கும் அதிகாரம் ஆணுக்கு இல்லை. ஆனால் இந்த அதிகார சமன்பாடுகள் முறியடிக்கப்பட்டு ஆணும் பெண்ணும் பரஸ்பர புரிதலும், நேசமும் மதிப்பும் கொண்ட ஒரு இயல்பான கூட்டுணர்வில் இணைந்து செயல்படும்போதே இத்தகைய போலி கற்பிதங்கள் உடைபடும்.

ஆனால் ஆண் பெண் உறவுநிலைகளில் நட்பையும், தோழமை உணர்வுகளையும் மலினப்படுத்தி விஷத்தை பாய்ச்சும் வேலையையே தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் செய்து வருகின்றன. இன்று பெண்களும் ஆண்களுக்கு இணையான கல்விபெற்று சமூகத்தின் எல்லா செயல்பாடுகளிலும் ஆணும் பெண்ணும் இணைந்து நிற்கக் கூடிய சூழல்கள் உருவாகியுள்ளன. பெண்கள் தங்கள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வுடன் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து குரல் எழுப்ப முன் வந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய சமூக நல்லுணர்வை சீர்குலைக்கும் விதமாகவே தமிழக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் செயல்பட்டு வருகின்றனர். கலாச்சாரத்தில் ஏற்பட்டு வருகிற ஆரோக்கியமான மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இவர்கள் முன்வைக்கும் கலாச்சார அடிப்படைவாதம் மத அடிப்படைவாதத்திலிருந்து எவ்வகையிலும் வேறுபட்டதல்ல. பெண்ணின் சமூகவெளியை மறுத்து அநீதிக்கு எதிராக பெண் கிளர்ந்தெழாதபடி அவளை பழமைக் கருத்துக்களால் முடக்கும் வேலையையே இவர்களுடைய ஊடகங்கள் அன்றாடம் செய்து வருகின்றன. தற்போது அது பாஸிச உரு எடுத்துள்ளது.

இதே பிற்போக்கு சக்திகள்தான் அண்மையில் நவீன பெண் கவிஞர்களின் பாலியல் சொல்லாடல்களுக்காக அவர்களுடைய ஒழுக்கத்தை விமர்சித்துப் பேசியவை. பெண்ணை கற்பு எந்திரமாகவும், கேளிக்கை வடிவமாகவும் தவிர வேறு எந்தப் பார்வையையும் அனுமதிக்காத இவர்கள் சுய இருப்பும், விழைவுகளும், தேர்வுகளும் கொண்ட பெண் வெளிப்பாடுகளை சகித்துக்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். பாலியல் நிலைப்பாடு குறித்த குஷ்புவின் கருத்துக்கள் எய்ட்ஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள எந்த சமூகநல ஊழியரும் வெளிப்படுத்தக்கூடிய மிகமிக சாதாரணமான கருத்துக்கள். ஆனால் அவைகளை முன்வைத்து இதை ஒரு பண்பாட்டு போராட்டமாக சித்தரிப்பது இவர்களுடைய கலாச்சார வறுமையைத்தான் காட்டுகிறது. தங்களுக்கு வேறுவிதமான நிலைப்பாடுகள் இருந்தால் அவைகளை கருத்துரீதியாக விவாதிக்கக்கூட வலுவில்லாத இவர்கள் பாஸிச ஒடுக்கு முறைகளைக் கையில் எடுத்துள்ளனர். இன்று திராவிடர் இயக்க ஊடகங்களில்தான் கருத்து சுதந்திரம் கேள்விக்குரியதாகியுள்ளது. இதுபோன்ற அணுகுமுறைகள் பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறித்த போராட்டங்களை மேலும் சீர்குலைக்கக் கூடியவை.

தமிழ்ச் சூழலில் முற்போக்கு சக்திகளும், இடதுசாரி சக்திகளும் தங்களுடைய இருப்பை ஆழமாக உணர்த்த வேண்டிய கால கட்டம் இது. பெண் உரிமை மற்றும் கருத்து உரிமைக்கான போராட்டங்களை இது போன்ற சக்திகள் தொடர்ந்து மலினப் படுத்திக் கொண்டிருப்பதற்கு எதிர்ப்புக் குரல்கள் கல்வி, கலாச்சாரம் மற்றும் அனைத்து சமூக செயல்பாட்டு தளங்களிலும் எதிரொலிக்கும் விதமாக விவாத அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தன்மானத்துக்கும் சுய இருப்புக்குமான பெண்ணின் குரல் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படும் நிலையிலேயே ஒடுக்குமுறைக்கு எதிரான சமூக உரையாடல்கள் விரிவு கொள்ளும்.

Pin It