இந்து பாசிஸ்டு கும்பலான ஆர்எஸ்எஸ்சின் அரசியல் கட்சியான பாஜகவானது தனிப் பெரும்பான்மையாக ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு ஆகிறது. அது ஆட்சிக்கு வந்த பின்னரும் சரி வருவதற்கு வாய்ப்பு இருந்த போதும் சரி அதன் அபாயத்தை அதை எதிர்ப்போரால் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டே வந்துள்ளது. ஆனாலும் அது இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. எச்சரித்தால் மட்டும் போதுமா? அது ஆட்சிக்கு வருவதை ஏன் தடுக்க முடியவில்லை? அதைப் பற்றியே இக்கட்டுரை.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் வளர்ந்த இந்து பாசிசம்

பாஜகவானது இன்று தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சிக்கு அமருவதற்கு முன்பே 1998-&2004ல் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வாஜ்பாயின் தலைமையில் இரண்டு தடவைகள் ஆட்சியை பிடித்தது. அதற்கு முன்பே, 1991ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்து பின்னர் உத்திரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, கஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கூட்டணி அரசாங்கங்களிலும் சத்தீஸ்கர், உத்தரகாண்ட், ஜார்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் தனிப் பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கங்களிலும் இருந்தது. அதற்கு முன்பு டெல்லி மாநகரமானது யூனியன் பிரதேசமாக இருந்தபோது அதனுடைய சட்டமன்றத்தையும் மாநகராட்சியையும் ஆண்டுவந்தது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அருணாச்சலப் பிரதேசத்தை ஆண்டு கொண்டிருந்த கட்சியை பாஜகவில் சேரவைத்து அங்கும் பாஜகவின் ஆட்சி அப்போது அமைந்தது.

 (அ) கூட்டணி ஆட்சிகளின் மூலம்  தனியாக ஆட்சியை பிடித்த பாஜக

பாஜகவானது கூட்டணி கட்சிகளின் மூலம் தனி ஆட்சியை அமைப்பதற்கு முடிவெடுத்து வெற்றிகரமாக கர்னாடகா, அரியானா ஆகிய மாநிலங்களில் நடைமுறைக்கு கொண்டுவந்தது. மத்தியிலும் அவ்வாறே.

பாஜகவின் கூட்டணி ஆட்சியின் வரலாறு 1967ல் தொடங்குகிறது. அதன் முந்நாளைய அரசியல் கட்சி அமைப்பான பாரதிய ஜன சங்கமானது 1967ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பின் பஞ்சாபில் அமைந்த கூட்டணி ஆட்சியில்  இடம் பெற்றது.

நாடாளுமன்றத்தை எடுத்துக் கொண்டோ மானால் 1952ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடமோ என்னவோ பாரதிய ஜன சங்கம் வென்றது. அதன் பின்னர் நீண்ட இடை வெளிக்குப் பிறகு 1984ல் இரண்டு இடங்களை பாரதிய ஜனதா கட்சி வென்றது. 1989ல் 89 இடங்களையும் 1991ல் மற்றும் 1996ல் மேலும் கூடுதல் இடங்களை பெற்றது. 1998ல் மற்றும் 1999ல் கூட்டணி ஆட்சிகளை அமைத்தது. 2014ல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து கூட்டணி கட்சிகளையும் அரசாங்கத்தில் சேர்த்துக் கொண்டது.

தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டோ மானால் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவின் தோழமை அமைப்பான இந்து முன்னணியின் சார்பில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவியை இரண்டு தடவைகள் கைப்பற்றியது. அதன் பின்னர் 1998 மற்றும் 1999ல் முறையே அதிமுக மற்றும் திமுக கூட்டணியுடன் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை பாஜக பிடித்தது. தற்போது ஜெயலலிதா கும்பலின் மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தீர்மானித்ததன் வாயிலாக அதிமுக கூட்டணியில் இடம் பெற்று பின்னர் தனியாக ஆட்சியில் அமர்வதற்கான எத்தனிப்பில் இறங்கியுள்ளது.

இவ்வாறு இந்து பாசிசமானது நாடாளுமன்ற ஜனநாயக முறையை அறவே மறுக்கும் இந்து இராஷ்டிராவை அமைப்பதற்கு நாடாளுமன்ற ஜனநாயக முறையையே பயன்படுத்தி தனிப்பெரும்பான்மையுடன் இட்லரை போலவே ஆட்சியில் அமர்ந்தும் விட்டது.

 அரசு எந்திரத்தை பயன்படுத்தி அரசாங்கத்தில் அமர்ந்த இந்து பாசிசம்

இந்து பாசிஸ்ட் கும்பலானது இந்து இராஷ்டிராவை அமைப்பதற்கு நாடாளுமன்ற ஜனநாயக முறையை மட்டுமல்லாது இராணுவம், நீதித்துறை, நிர்வாகம் உள்ளிட்ட அரசு எந்திரம், அரசாங்கம், வரலாறு, மதம், கலை/ இலக்கியம், நாடாளுமன்ற ஜனநாயகம் வழங்கும் வெளியை (ஷிஜீணீநீமீ) பயன்படுத்தி வருகிறது. மேலும் அனைத்து அரங்குகளிலும் பணிபுரிவதற்கு 64 அமைப்புகளை கட்டி மேய்த்து வருகிறது. அத்துடன் பல மொழிகளிலும் இதழ்களையும் பதிப்பகங் களையும் நடத்தி வருகிறது. இவ்வாறு இந்து இராஷ்டிராவை அமைப்பதை நோக்கியே அதன் அனைத்துச் செயற்பாடுகளும் வெற்றிகரமாக நிறைவேறி வருகின்றன. சில நிலைமைகள் கனிந்தால் அல்லது இந்து பாசிச கும்பலுக்கு பின்னுள்ள இந்திய ஏகபோக முதலாளி வர்க்கமானது ஆணையிட்டால் இந்து இராஷ்டிரா பிரகடனப்படுத்தப்படும்.

வெறுமனே இந்து பாசிசத்தை (பெயரளவில்) எதிர்ப்பதோடு சிக்கல் தீர்த்துவிடாது. அதன் வளர்ச்சி எவ்வாறு சாத்தியமானது என்பதை புரிந்து கொள்ளாத கருத்தியல் ஓட்டாண்டித்தனத்தால்தான் அது வளர்ந்தது. அதனால் அதை எதிர்ப்போரே அது  வளருவதற்கான வாய்ப்பை தட்டில் வைத்து வழங்கியுள்ளனர். அதன் அக மற்றும் புற அம்சங்களை காண்போம்.

இந்து பாசிசமானது அதிகாரத்திற்கு வந்திருப்பதை ஆய்வதன் ஊடே அரசு என்ற எந்திரத்திற்கும் அதன் மீது அமர்கின்ற அரசாங்கம் என்ற கட்டமைப்பிற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு புரிந்து கொள்ள   முடியும்.

இந்து பாசிசமானது மோடியின் தலைமையில் நாடாளுமன்ற முறையின் மூலம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி அரசாங்கத்தை அமைத்துள்ளது என்றாலும் உண்மையில் அரசு எந்திரத்தில் 1947க்கு முன்பிருந்தே ஆர்எஸ்எஸ் தோற்றம் முதற்கொண்டே ஏன் இந்து மகா சபா தோற்றம் முதற்கொண்டே தன் செல்வாக்கை செலுத்தி வருகிறது.

பார்ப்பனியத்தை கருத்தியலாக உடைய இந்து பாசிசமானது இந்திய துணைக்கண்ட அளவில் தோன்றிய பெரு முதலாளிய வர்க்கத்தின் அரவணைப்பில் உருவானது. இத்தகைய பார்ப்பனியமானது காலனிய ஆட்சிக்கு முன்பேயே சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரசு எந்திரத்தில் செல்வாக்கை செலுத்தி வருகிறது. அத்தகைய பார்ப்பனீயத்தின் தொடர்ச்சியேயான நவீன பிராமணீயத்தின் அரசியல் வழியே இன்றைய இந்து பாசிசம் ஆகும்.

அதே வேளையில் பார்ப்பனீயமும் இந்து பாசிசமும் ஒன்றல்ல. இந்து பாசிசம் என்பது முதலாளிய சமூகத்தில் இந்திய பெரு முதலாளியத்தின் நலனுக்காக உருவான ஒன்று. முதலாளியத்திற்கு முன்பிருந்த சாதிய நிலவுடைமை சமூகத்தையும் கட்டியமைப்பதற்கு உருவானதே பார்ப்பனிய கருத்தியல் ஆகும். பார்ப்பனியம்/இந்து பாசிசம் எதிர்க்கும் முகலாயர் ஆட்சி, சுல்தான்கள் ஆட்சி, ஆற்காடு நவாப் ஆட்சி ஆகியனவற்றிலும் பார்ப்பனிய மானது ஆட்சியாளர்களுடன் கூட்டு வைத்து சாதிய நிலவுடமை சமூகத்தை கட்டியமைத்து மையத்திலும் வட்டார அளவிலும் அரசு எந்திரத்தில் செல்வாக்கைச் செலுத்தியது அல்லது நிலைமைகளுக்கு ஏற்ப அதைக் கட்டுப் படுத்தியது.

இவ்வாறு தொடர்ச்சியாக அரசு எந்திரத்தில் செல்வாக்கு/ஆதிக்கம் செலுத்தி வருவதால் அந்த எந்திரத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்தை அமைப்பதற்கு இப்போது இந்து பாசிசத்திற்கு எளிதாயிற்று.

இந்து பாசிச சக்திகளின் செல்வாக்கில் உள்ள அரசு எந்திரத்தை மொத்தமாக பார்ப்பதைவிட அதன் கூறுகளான இராணுவம், நிர்வாகம், நீதித்துறை ஆகியனவற்றை தனித்தனியே பார்த்து எவ்வாறு அவை செயற்பட்டு வருகின்றன என்பதை அறிவோம்.

* முதலாவதாக இராணுவம் என்பது இராணுவம், போலீஸ், உளவுப்பிரிவு என்பதாக கொள்வோம். இதில் இராணுவத்தில் விகிதாச்சாரரீதியாக சீக்கியர்களைத் தவிர முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மிகவும் குறைந்த விகிதாச்சாரத்தில் தான் இருக்கின்றனர். போலீஸ் மற்றும் உளவுப் பிரிவுகளிலும் மதச்சிறுபான்மையினர் மிகவும் குறைந்த விகிதாச்சாரத்தில்தான் இருக்கின்றனர். திட்டமிட்டே இது நடந்து வருகின்றது.

இதன் வாயிலாக இந்து பாசிசமானது பல்லாயிரக்கணக்கான மதச்சிறு பான்மையினரை (முதன்மையாக முஸ்லிம்கள்) பலரை சிறையிலடைத்து கொன்றொழிக்கிறது.

இவற்றைச் செய்வதற்கு இத்துறைகளுக்கு அதிக அதிகாரங்களை கோருகிறது.

இது குடிமை அதிகார வர்க்கத்திற்கு இருக்கும் அதிகாரத்தை இராணுவ அதிகார வர்க்கத்திற்கு ஒப்படைக்கும் அதன் இலக்கின் அங்கமாகவே இருக்கிறது.

விளைவாய் இந்தியாவின் முப்படை தலைமை தளபதிகளில் எவரும் தனியரு தலைமை தளபதியாக முப்படைக்கும் சேர்ந்து இருக்கக்கூடாது என நேருகாலம் முதற்கொண்டு இருந்துவந்த விதியை வாஜ்பாயின் ஆட்சியில் மாற்ற முனைந்தது இந்து பாசிசம். மேலும் அந்த முப்படை தலைமை தளபதிகள் குடிமை நிர்வாகத்தை மீறி எதையும் செய்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் மூவரும் தனியே தமக்குள் சந்திக்கக்கூடாது எனவும் மாறாக ஆட்சியாளர்களுடன் மட்டுமே சந்திக்க வேண்டும் என்பதும் உள்ள விதி.

முப்படைகளின் தலைமை தளபதிகள் தர வரிசைப்படி (rank) சமமே. அதனால் இந்து பாசிசமானது முப்படை தலைமை தளபதிகளில் எவராவது ஒருவரை முப்படைக்கும் ஒரே தலைமை தளபதியாக (Chief of Defence Staff) நியமிக்குமாறு கோரியது. அப்பொழுதுதான் இராணுவ ஆட்சியின் மூலம் இந்து இராஷ்டிராவை பிரகடனப்படுத்துவது எளிது என எண்ணியது. ஆனால் முப்படை தலைமை தளபதிகள் தம் இடையேயான தளபதி ஒருவரின்கீழ் பணிபுரிய தயாராக இல்லாததால் அதை இந்து பாசிசமானது கொண்டுவர முடியாமல் இருக்கிறது.

இந்து பாசிசம் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால் இதை கொண்டு வரப்போவதாக தற்போதைய மத்திய இராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

இப்பொழுதோ இராணுவத்தில் மேலும் ஆழமாக ஊடுருவி உயரதிகாரிகள் மத்தியில் ‘அபினவ் பாரத்’ என்ற இந்து பாசிச இராணுவ பயங்கரவாத கும்பல் ஒன்றை உருவாக்கி யிருக்கிறது இந்து பாசிசம்.  இந்தியாவெங்கும் ஆங்காங்கே மசூதி, தொடர்வண்டி போன்ற இடங்களில் குண்டுகளை வைத்து பலரை பலிவாங்கி முஸ்லிம்களின் மீது பழி உருவாகுமாறு செய்து வந்துள்ளது. இதை கண்டு பிடித்த கர்காரே என்ற உயர் அதிகாரியை 26/11 சம்பவத்தில் கொன்றுள்ளது.

அத்துடன் ஸிகிகீ, மிஙி,விமி போன்ற மைய உளவுப்பிரிவுகளிலும் னி பிரிவு போன்ற மாநில உளவுப்பிரிவுகளிலும் இந்து பாசிசம் செல்வாக்கை செலுத்தி வருகிறது.

* இரண்டாவதாக அரசு நிர்வாகத்தை அரசாங்கம் இயக்குவதற்கு மாறாக தலைகீழாக மாறிவருகிறது. மேலும் குடிமைத் தன்மையுடன் இருக்க வேண்டிய அரசு நிர்வாகமானது தனது அதிகாரத்தை படிப்படியாக பொதுவாக போலீஸ்/உளவுப்பிரிவிடம், குறிப்பாக, ஆயுத மோதல் (Armed conflict) இருக்கும் இடங்களான சத்தீஸ்கர் போன்ற மாவோயிஸ்ட் கட்சி செல்வாக்குள்ள பகுதிகள், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் இராணுவத்திடம் வழங்கி வருகிறது. இவ்வாறுதான் அரசு நிர்வாகமானது இந்தியாவை ஆளமுடியும்/ஆளவேண்டும் என சமூகப்- பொருளாதார அரசியல் சிக்கல்களை கையாள்கிறது.

* மூன்றாவாக நீதித்துறையானது மக்களின் போராட்டங்களினாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இயக்கங்களினாலும் 1980களில் கொடுத்த அரசியல்/ஜனநாயக உரிமைகளை பறித்து வருவதோடு இந்து பாசிசத்தின் வளர்ச்சியோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தனது வேடத்தை கலைத்து கொண்டு அதற்கேற்ப தனது தீர்ப்புகளை வழங்கி வருகிறது.

பிற கட்சிகளில்/ஆட்சிகளில்/அமைப்புகளினால் வளர்ந்த இந்து பாசிச சக்திகள்

இந்து பாசிசத்தின் பிடியில் அரசு எந்திரம் படிப்படியாக போய்ச் சேர்ந்துள்ளதை பார்த்த நாம் ஏனைய கட்சிகளில்/ஆட்சிகளில் அது செல்வாக்கு செலுத்தி வருவதை/ஊடுருவி உள்ளதை இப்போது காண்போம்.

இந்தியாவில் அரசியல் கட்சிகளுக் கெல்லாம் தலைமை கட்சியாக தோற்றமெடுத்த காங்கிரஸ் கட்சியானது தொடக்கத்திலிருந்தே இந்து பாசிச சக்திகளை தன்னகத்தே கொண்டிருந்தது. அனைத்திற்கும் மேலாக ஆர்எஸ்எஸ்&இன் நிறுவனரான ஹெட்கேவார், காந்தியை கோட்சே கொன்ற பின்னரும் ஆர்எஸ்எஸ்&இன் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டே காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக நீடித்தார். இந்து பாசிசமானது தனக்கான காங்கிரஸ் கட்சித் தலைவர்களாக வல்லபாய் பட்டேல், மதன் மோகன் மாளவியா, லாலா லஜபதி ராய், கோவிந்த் வல்லப பந்த், இராஜேந்திர பிரசாத், நரசிம்மராவ் முதலானோரை இன்றுவரை பாவித்து வருகிறது. அதற்காக நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா போன்ற காங்கிரஸ் பிரதமர்கள்/தலைவர்கள் இந்து பாசிசத்தை எதித்தவர்கள் அல்ல. மாறாக அதனுடன் சமரசம் செய்து கொண்டு அது படிப்படியாக வளருவதற்கு அவகாசம் அளித்து இன்று மோடி பிரதமராவதற்கு வாய்ப்பு கொடுத்தவர்களே ஆவர்.

அடுத்ததாக காங்கிரஸ் ஆட்சியின் அவசர நிலைக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனதா அரசாங்கத்திலும் இந்து பாசிசத் தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோர் இடம் பெற்றனர். பின்னர் வி.பி. சிங் அரசாங்கமும் இந்து பாசிசத்தின் ஆதரவோடே அமைந்தது. அந்த ஆட்சியை அது கவிழ்த்தது என்பது வேறு விசயம்.

அடுத்து வந்த நரசிம்மராவ் ஆட்சி குறித்து கேட்கவே வேண்டாம். அது பாபர் மசூதியை  இடிக்க அனுமதித்தது என்பது அனைவரும் அறிந்ததே.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 1980வரை ஆர்எஸ்எஸ்., ஷாக்காக்களை மட்டுமே வெறுமனே நடத்திக் கொண்டிருந்தது அதன் அரசியல் கட்சியான பாரதிய ஜன சங்கமோ கேட்பாரற்று கிடந்தது.

1980&-87 வரையிலான எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கம், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., ஆகியவற்றின் மூலம் வீச்சோடு தனது வேலையை வெற்றிகரமாகத் தொடங்கியது இந்து பாசிசம். கோவிந்தாச்சார்யா ஆய்வு அணுகுமுறை (Govindacharya Thesis) -(இது குறித்து இக்கட்டு ரையில் பின்னர் பார்க்கலாம்)யை வெற்றி கரமாக பரிசோதிக்கும் வண்ணம் தாணுலிங்க நாடாரையும் ரங்கசாமி தேவரையும் முறையே இந்து முன்னணிக்கும் தமிழக ஆர்எஸ்எஸ்சுக்கும் தலைவர்களாக நியமித்து மண்டைக்காடு இந்து மதவெறி கலவரத்தை நடத்தி தனது கணக்கைத் தொடங்கியது இந்து பாசிசம்.

சோவை ராஜகுருவாக கொண்டு தனது கட்சியைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். இந்து பாசிசம் தமிழகத்தில் கால் பதிக்க விதையை இட்டார். இந்து பாசிசத்தோடு சமரசம் செய்துகொண்டு அரசு பாசிச ஆட்சியை நடத்திய எம்.ஜி.ஆரின் இயல்பான வழித் தோன்றலான ஜெயலலிதாவின் தலைமையிலான ஆட்சி/கட்சியானது இந்து பாசிஸ்டாகவே கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போதைய அதிமுக ஆட்சியின் திடீர் தமிழ்த் தேசிய செயற்பாடு என்பதும் இந்து பாசிசத்தின் அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு உட்பட்டதே ஆகும்.

ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட 4 ஆண்டு கால தண்டனையே இந்து பாசிசத்தின் லட்சுமண ரேகையை மீறியதற்கே என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. எனவே அந்த திடீர் தமிழ்த் தேசிய நாடகத்திற்கு திரையிடப்பட்டு இந்து பாசிசத்திற்கு தனது விசுவாசத்தை மீண்டும் முழுமையாக உறுதிப்படுத்தும் செயல்களில் இறங்கி இருக்கிறது அதிமுக ஆட்சி.

வீரமணி தி.க.வின் தாலி கழற்றும் நிகழ்ச்சிக்கு தடை, பெருமாள் முருகன் விவகாரத்தில் அரசு எந்திரமே கட்டைப் பஞ்சாயத்து செய்தது போன்றவை அதற்கான அண்மைய எடுத்துக் காட்டுகளாகும். தீர்ப்பிற்கு பின் இந்து பாசிசத்தின் பிடி அதிமுக ஆட்சியின் மீது மேலும் இறுகும்.

* திமுகவின் ஆட்சியோ அதிமுகவின் ஆட்சியோ இத்தகைய இந்து பாசிச விவகாரத்தில் பெரிதும் வேறுபட்டதல்ல. 1997&-98ல் இந்து பாசிச கூட்டணியில் இல்லாமல் இருந்தாலும் முஸ்லிம்களின் மீது மிகப் பெரியளவில் பயங்கரவாதத்தை ஏவி தனது இந்து பாசிச ஆதரவுச் செயற்பாட்டை அப்பட்டமாகத் தொடங்கியது திமுக ஆட்சி. 1999&2004ல் வாஜ்பாயின் ஆட்சியின் அமைச்சரவையில் அமர்ந்தது திமுக.

* பாமகவும் மதிமுகவும் இந்து பாசிசத்தின் கூட்டணி கட்சிகளே/கூட்டாளிகளே ஆகும். பாமகவானது வாஜ்பாயின் ஆட்சியில் இடம் பெற்றதே ஆகும். அதன் அண்மைய வன்னிய சாதிய அரசியலும் அனைத்து சாதி(ய) கூட்டமைப்பு என்ற எத்தனிப்பும் இந்து பாசிசத்திற்கு உவப்பே ஆகும்.

2001ல் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆதிக்கச் சாதிய சங்கங்கள் அரசியல் கட்சிகளாக உருமாறி திமுகவுடன் கூட்டணி சேர்ந்து அத்தேர்தலில் போட்டியிட்டன. இக்கட்சிகள் அடுத்து நடைபெற்ற சட்டமன்ற/நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக/திமுக கூட்டணியில் இணைந்தன.

இவை தமது அரசியலின் இயல்பான பரிணாம வளர்ச்சியாக இந்து பாசிச பாஜக அணியில் இணைந்து சென்ற ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இட்டன.

* அந்த அணியில் உள்ள இந்திய சனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து நடத்தும் புதிய தலைமுறை தொலைக்காட்சிதான் முன்னெப்போதும் இல்லாதவாறு தொலைக்காட்சி ஊடகத்தில் இந்து பாசிச பாஜகவிற்கு/கருத்துகளுக்கு இடமளித்து அரசியல் அங்கீகாரத்தையும் வாங்கித் தந்தது.

* அத்துடன் அந்த அணியில் உள்ள கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன்தான் இந்து பாசிசத்தின் வழிகாட்டுதலின் பேரில் பெருமாள் முருகனுக்கு எதிராக கொங்கு வேளாள கவுண்டர்கள்/கொங்கு மண்டல ஆதிக்கச் சாதிகள் தமது சாதி அடையாளத்தை தக்க வைத்துக்கொண்டே இந்து அடையாளத்தின் கீழ் அணிதிரட்டுவதற்கு செயற்பட்டார்.

* கடந்த 20&-25 ஆண்டுகளாக புற்றீசல் போல் முளைத்து உள்ள எண்ணற்ற வெள்ளாளிய தமிழ்த் தேசிய அமைப்புகளும் இந்து பாசிசத்தை வளர்க்கும் விதமாகவே செயற்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு என்ற நிலப்பரப்பு சார்ந்த காரணியை தவிர்த்து சாதி, பாலினம், மதச் சிறுபான்மையினர், வர்க்கம் ஆகிய சிக்கல்களில் ஒற்றைப் பரிணாம தமிழ்த் தேசிய அரசியலின் அடிப்படையில் இந்து பாசிசத்தின் நிலைப்பாடுகளோடு ஒத்துப்போய் தமிழ்த் தேசியத்தின் முதன்மை எதிரியான இந்து பாசிசத்தை எதிர்ப்பதைவிட திராவிடத் தேசியத்தையே முதன்மையாக எதிர்க்கின்றன. இந்தியப் பெரு முதலாளிகள், ஏகாதிபத்திய வாதிகள் போன்றோரின் மூலதனக் குவிப்பே இங்கு தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது என்பதை புறக்கணித்து தெலுங்கர் ஆதிக்கமே முதன்மை எதிரி என சித்தரித்து இந்து பாசிச இந்து தேசிய சந்தைக்கு சேவை செய்து வருகின்றன.

பெரியார் மீதான இன்றைய கருத்தியல்/அரசியலின் தாக்குதலின் முன்னணியில் உள்ள இவர்கள் இட்ட அடித்தளத்தினாலும் இந்து பாசிசமானது பெரியார் திடல் சம்பவத்தை அரங்கேற்றி இந்து பாசிசத்தின் கருத்தியலான பார்ப்பனீயத்தின் மீதான அவற்றை எதிர்க்கும் பெரியாரின் கருத்துகளின் தாக்கத்தை அறவே அகற்றப் பார்க்கிறது.

* மறு புறத்தில் பெரியார் அமைப்புகளில் ஒன்றான வீரமணி தி.க.வானது இந்து பாசிச தன்மையில் ஆட்சி நடத்திய ஜெயலலிதாவின் முதல் இரண்டு ஆட்சிகளை ஆதரித்தது. மூன்றாவது ஆட்சியிலோ அவர் நடித்த திடீர் தமிழ்த் தேசிய நாடகத்தில் ஏமாந்து போனதோடு இந்து பாசிசம் கொடுக்கும் நெருக்கடியினால் ‘துண்டைக் காணோம்’ துணியைக் காணோம்’ என அலறியடித்து இந்து பாசிச உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு அடிபணிந்து விட்டது.

ஏனைய பெரியார் அமைப்புகளான முந்நாளைய பெரியார் தி.க/இன்றைய தி.வி.க./த.பெ.தி.க. வீரமணியின் இந்து பாசிச ஜெயா ஆதரவை எதிர்த்து தோன்றினாலும் ஒற்றைப் பரிணாம அடிப்படையில் இந்து பாசிச தேசியத்தை கட்டியமைப்பதற்கு ஜெயாவால் சென்ற அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விலங்குகளை வழிபாட்டிடங்களில் பலியிடுவதை தடுக்கும் சட்டத்தை வறட்டு நாத்திகத்தின் பேரில் முந்நாளைய பெரியார் தி.க. ஆதரித்தது. பின்னர் அதே சட்டத்தை திரும்ப பெற்ற போது அதே அடிப்படையில் எதிர்த்தது.

மேலும் இந்த பெரியார் அமைப்புகள் இந்து பாசிசம் வளர்ந்து வந்த கடந்த 20 ஆண்டுகளில் இந்து பாசிசத்தை எதிர்க்கும் பெரியாரின் கருத்துகளை முதன்மையாக செயற்படுத்துவதற்கு மாறாக ஈழ ஆதரவு வேலைகளிலேயே மூழ்கி இந்து பாசிச ஜெயாவின் திடீர் ஈழ ஆதரவு நாடகத்தில் ஏமாந்து 2009/2011ல் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயாவை ஆதரித்து இந்து பாசிசம் தமிழகத்தில் வளர்ந்ததற்கு மறைமுகமாக பங்காற்றின.

எனினும் ஈழமும் கிடைத்தபாடில்லை; பெரியார் விரோத இந்து பாசிச/ வெள்ளாளிய தமிழ்த் தேசியத்தை முறியடித்த பாடில்லை; இன்றோ பெரியார் சிலையை/படத்தை அவமதிப்பதை தடுப்பதற்கு நிஜ உலகத்திலும் இணைய உலகத்திலும் பாடாய் பட வேண்டியிருக்கிறது.

 இந்து பாசிசத்தின் வளர்ச்சிக்கு உதவிய சமூக & பொருளாதாரத்தின் பொருளாயத அடிப்படை

நாடாளுமன்ற முறையையும் அரசு எந்திரத்தையும் அரசாங்கங்களையும் ஏனைய நாடாளுமன்றவாதக் கட்சிகளையும் மற்ற படியாகவும் பயன்படுத்தி வளர்ந்த இந்து பாசிசத்தின் வளர்ச்சிக்கு உதவிய சமூகம்/ பொருளாதாரத்தின் பொருளாயத அடிப் படைகளை காண்போம்.

இந்து பாசிசம் ஒப்பீட்டளவில் வலு குறைந்த 1947&-1980 காலக்கட்டத்தில் 1967வரையில் காங்கிரசுக்கு மாற்றாக சிபிஐ தொடக்கத்தில் இருந்த நிலைபோய் பின்னர் மாநிலக் கட்சிகள் அவ்விடத்தை பிடித்தன. 1977ல் ஜனதா ஆட்சியானது வந்தது. ஆனால் ஓரிரு ஆண்டுகளிலேயே அக்கட்சியானது உடைந்து ஆட்சியும்  கவிழ்ந்தது. காங்கிரஸ்  1980ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அவசர நிலைக் காலத்திற்கு பின்னர் ஜனதா கட்சியில் சங்கமித்த இந்து பாசிசத்தின் அந்நாளைய நாடாளுமன்ற அரசியல் அமைப்பான பாரதீய ஜன சங்கமானது ஜனதாவிலிருந்து பிளவுற்று 1980ல் பாரதீய ஜனதா கட்சியாக அவதாரமெடுத்தது.

வாஜ்பாயின் தலைமையில் அமைந்த அக்கட்சியின் கொள்கையாக காந்திய சோச லிசம் என முன் வைக்கப்பட்டது. அப்போது கம்யூனிச இயக்கமானது இந்தியாவெங்கும் உழைக்கும் மக்கள்/நடுத்தர மக்கள் இடையே ஒப்பீட்டளவில் வலுவாக இருந்தது. அதை கணக்கில் கொண்டே இந்து பாசிசமானது தனது கொள்கையாக காந்திய சோசலிசத்தை பாரதீய ஜனதா கட்சியின் வாயிலாக வேடமிட்டது.

1980களில் மாநிலங்களில் காங்கிரசுக்கு மாற்றாக ஒரு சில மாநிலங்களில் மட்டும் மாநிலக் கட்சிகள் ஆட்சியை பிடித்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரசே ஆட்சியைப் பிடித்தன. இந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் மீதான அதிருப்தியினால் 1989ல் இந்தியளவிலும் மாநிலங்களவிலும் காங்கிரசுக்கு மாற்றாக மாநிலக் கட்சிகளும் இணைந்தோ மாநிலளவிலான பிளவுற்ற கட்சிகளும் இணைந்தோ தனித்தனியாகவோ ஆட்சியைப் பிடித்தன. அதே வேளையில் அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்து பாசிச கட்சியான பாஜகவானது 89 இடங்களைப் பெற்றது.

அடுத்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அதே வேகத்தைப் பராமரித்து 1998, -1999ல் கூட்டணி ஆட்சியை அமைத்த  அக்கட்சியானது இறுதியாக 2014ல் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதற்கிடையில் 1990களில் மேற்கு மற்றும் வட இந்திய மாநிலங்களில் (பீகார் தவிர்த்து) கூட்டணியாகவும் தனியாகவும் ஆட்சியில் அமர்ந்த அது கடந்த 10 ஆண்டுகளில் தென்னிந்தியாவில் கர்னாடகாவில் முதலில் கூட்டணியாகவும் பின்னர் தனியாகவும்  ஆட்சியில் அமர்ந்தது.

காங்கிரஸ் மீதான அதிருப்தியினால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது என்பது ஒரு புறமிருக்க மறு புறத்தில் வர்க்க கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் அதற்கு பங்களித்து உள்ளன என்பதும் கவனிக்கப்பட வேண்டும். அதைப் பார்ப்போம்.

1980களில் நடைபெற்ற மக்கள் திரள்களின் போராட்டங்களினாலும் அவற்றை முதன்மையாக வழிநடத்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின் அவர்கள் மேலும் அணி திரண்டுவிடக் கூடாது என்பதனாலும் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் ஊதிய உயர்வை வேறு வழியின்றி வழங்கியது. அதையட்டி மாநில அரசாங்கங்களும் அதை வழங்கின. மறு புறத்தில் இதற்கு முந்தைய ஆண்டுகளில் அதிகார வர்க்க மூலதனத்தின் அரவணைப்பில் வளர்ந்த இந்தியப் பெரு முதலாளிய வர்க்கமும் தனது சந்தைக்கான ஒரு பெரும் வாய்ப்பை எதிர்பார்க்கும் வண்ணம் ஒரு வளர்ச்சியை அடைந்திருந்தது. இந்த ஊதிய உயர்வுகள் அவ்வாய்ப்பை வழங்கின.

இந்த ஊதிய உயர்வுகள், இரு சக்கர வாகனங்கள், மிக்சி, பிரிட்ஜ், தொலைக்காட்சி பெட்டி போன்றவற்றை தவணை முறையிலோ ரொக்கமாகவோ வாங்குவதை சாத்தியமாக்கின. அதன் பின்னர் நடைமுறைக்கு வந்த ஊதிய உயர்வுகளையும் இதைக் கணக்கில் கொண்டே புரிந்துகொள்ள வேண்டும். இதனால் ஒப்பீட்டளவில் சந்தையானது மேலும் விரிவடைந்து வழங்கப்பட்ட ஊதிய உயர்வுகள் அனைத்தும் மீண்டும் இந்தியப் பெரு முதலாளிய வர்க்கத்தின் கைகளுக்கே முதன்மையாகச் சென்றன.

இந்த ஊதிய உயர்வுகளின் விளைவாய் இந்திய மக்கள் தொகையில் 1947&80ல் ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்த நடுத்தர வர்க்கமானது கடந்த 30 ஆண்டுகளில் பல்கிப் பெருகி வீங்கிப் போய் உள்ளது. ஒரு படித்தாக இருந்த இந்திய நடுத்தர வர்க்கமானது பல அடுக்குகளாக ஆகியுள்ளது.

இந்திய நடுத்தர வர்க்கத்தின் இத்தகைய வளர்ச்சியினால் அது உடமை சிந்தனையில் மிகவும் மூழ்கி தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்காக, தனக்கேற்ற அரசியல் பிரதிநிதியாக பாஜகவின் பக்கம் சாயத் தொடங்கி அதையே படிப்படியாக மாநிலங்களவில் முதலில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி பின்னர் இந்தியளவில் கொண்டு வந்துள்ளது. எனினும் இந்து பாசிசமானது சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் 31 விழுக்காட்டை மட்டுமே பெற்றுள்ளது என்றாலும் அது ஆட்சிக்கு வந்துள்ளதை அபாயம் நிறைந்ததாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதில் நடுத்தர வர்க்கத்தின் வாக்குகளே விகிதாச்சார அளவில் அதிகம் ஆகும்.

 கல்வி, வேலைவாய்ப்பு, கடன் திரட்டல், மூலதனத் திரட்டல் ஆகியவற்றிற்காகவும் இந்திய கட்டமைப்பை விரும்பும் இந்திய நடுத்தர வர்க்கமானது அக்கட்டமைப்பை எவ்விலை கொடுத்தாகிலும் காக்கும் பாசிச அரசியலை ஆதரிப்பது ஆச்சரியமல்ல. மேலும் அத தனது நடுத்தர வர்க்க நிலையை தக்க வைத்துக் கொள்வதில் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர் நோக்குவதாலும் இந்தியக் கட்டமைப்பை ஆதரிக்கும் அவசியம் அதன் வர்க்க நிலைக்கு வந்துள்ளது. அதனால்தான் அது தனது வளர்ச்சிக்கு வித்திட்ட அரசியல் மற்றும் சனநாயக உரிமைகளை பறிக்கும் சட்டங்களை/ஆட்சிக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு வந்துள்ளது.

இத்தகைய நடுத்தர வர்க்கம் மட்டுமல்லாமல் கணிசமான எண்ணிக்கையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, உற்பத்தியில்/உழைப்பில் ஈடுபடாத உதிரி வர்க்கமும் இந்து பாசிசத்தின் அடியாளாக வேலை செய்யத் தயாராக இருக்கிறது. இந்த சமூக அடிப்படையில் தான் பாசிசம் வளருகிறது என ஜார்ஜ் டிமிட்ரோவ் எச்சரித்ததை 1930களில் ஜெர்மனியிலும் இத்தாலியிலும் கண்டோம். அதே போல் இதே அடிப்படையில்தான் நடுத்தர/கீழ் நடுத்தர மக்களின் அதிருப்தி/கோபத்தைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளில் வெள்ளை நிறவெறி கட்சிகள் வளருவதையோ ஆட்சிக்கு வருவதையோ காணலாம்.

அதேபோல் பெரும்பான்மையான தமிழக நடுத்தர வர்க்கத்தினர் தமிழ்த் தேசிய அரசியலுடன் இயல்பாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கு தயாராக இல்லாது இருந்து வருவதுடன் இந்திய தேசிய அரசியலுடனேயே முதன்மையாக அடையாளப்படுத்திக் கொள் கின்றனர். தமிழ்த் தேசிய அரசியலை முன்வைப்போரில் பெரும்பாலோர் அவர்களின் நிச்சயமற்ற இன்றைய/நாளைய எதிர் காலத்திற்கான செயல் திட்டத்தோடு அவர்களிடம் பரவலாக செல்லத் தயாராக இல்லாது இருந்து வருவதும் இதற்கு காரணம் ஆகும்.

நாடாளுமன்ற சனநாயக முறையில் ஆட்சியாளர்களின் சிவப்பு நாடாத்தனமான அதிகாரவர்க்க நிர்வாகத்தாலும் சாதாரண அடிப்படையான சிக்கல்களையும் தீர்ப்பதற்கு அவர்கள் தயாராக இல்லாததாலும் விளையும் ஸ்திரமற்ற, நிச்சயமற்ற இன்றைய/நாளைய எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி போன்ற உணர்வினால் அதற்கு காரணமாக போர் அபாயம், பயங்கரவாதம், உள்நாட்டு/வெளிநாட்டு எதிரி (மாவோவியம், முஸ்லிம்கள், பிரிவினைவாதம்/ பாகிஸ்தான், சீனா), பலவீனமான நாடாளுமன்ற சனநாயகம், வலிமையற்ற தலைவர்/பிரதமர் ஆகியவற்றை காட்டி அவற்றிற்கு தீர்வாக வலிமையான தலைவர்/பிரதமர், எதிரி நாடு/உள்நாட்டு எதிரி (இங்கு மாவோயிஸ்டுகள், பிரிவினைவாதிகள், முஸ்லிம்கள்) மீதான படையெடுப்பு/ அரசு பயங்கரவாதம் ஆகியனவற்றை வளர்ச்சி, போர்வெறி, முன்முடிவுகளை முன்வைத்து வாய்ச்சவடால் (demagoguery) செய்யும் இந்து பாசிசத்தை நம்பும் அளவுக்கு சமூகப் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர் நடுத்தர/கீழ் நடுத்தர மற்றும் உதிரி வர்க்கத்தினர்.

இந்து பாசிசமானது இவ்வர்க்கத்தினரின் நிறைவேறா எதிர்பார்ப்பு மற்றும் ஆசைகள், அதிருப்தி, கோபம் ஆகியவற்றை தமதாக்கி மோடியை கதாநாயகனாக்கி அவரை ஆட்சியில் அமர வைத்துள்ளது.

***

ஜார்ஜ் டிமிட்ரோவ் மேலும் கூறுவதுபோல் இந்திய ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்காகவே இந்து பாசிசமானது ஊட்டி வளர்க்கப்பட்டு இன்று ஆட்சியிலும் அமர்ந்துவிட்டது.

மக்கள் திரள் அடித்தளத்தை காங்கிரஸ் கட்சியானது கொண்டிருந்ததால் அதை ஆதரித்து இந்திய ஏகபோக முதலாளிகள் ஆட்சியில் அமர்த்தினர். பாஜகவானது 1980கள் முதற்கொண்டு மக்கள் திரள் அடித்தளத்தை பெறத் தொடங்கியுள்ளதால் அதை காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக வளர்த்து வந்தனர். மறு புறத்தில் காங்கிரஸ் கட்சியானது 1984க்கு பின்னர் இந்திய நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாதவாறு மக்கள் திரள் அடித்தளத்தை இழந்துவிட்டதாலும் 2004& -09 காலக்கட்டத்தில் சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிகளை நடத்தி அக்கட்சிகளின் அழுத்தத்திற்கு சற்று விட்டுக்கொடுத்து ஒரு சில நலவாழ்வுத் திட்டங்களை நடைமுறைப் படுத்தியதோடு இந்திய ஏகபோக முதலாளிகள் விரும்பும் அளவிற்கு ஸ்திரத்தன்மையையும் அடக்குமுறையையும் கொண்டு வர சக்தி இல்லாததாலும் 2009ல் நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியான கையோடு, எல்லா வகையிலும் சிபிஐ, சிபிஎம் ஆகியவற்றுடன் கூட்டுச் சேரவே தயாராக இல்லாத, மேலும் சுதேசி நாடகத்தை கிடப்பில் போட்டுவிட்ட, நவ தாராளவாத (neo-liberalism) அடிப் படையிலான உலகமயமாக்கலை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்து பயங்கரவாதத்தை மேற்கொண்டு மக்களின் கோபத்தை திசை திருப்புவதற்கு தயாராகவுள்ள இந்து பாசிச பாஜகவை அம்பானி போன்ற ஏகபோக முதலாளிகளின் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியப் பெரு முதலாளியக் குழுமமான டிவிஎஸ் குழுமம் உள்ளிட்டோர் 2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியில் அமர்த்துவ தென்று மேற்கொண்ட முடிவில் வெற்றியை அடைந்துவிட்டனர்.

மேற்காணும் சமூக & பொருளாதார-அரசியலின் பொருளாயத அடிப்படையில் வளர்ந்த இந்து பாசிசமானது அதனை சாத்தியப்படுத்திய கருத்தியல் மட்டத்திலான தயாரிப்புகளை காண்போம்.

செவ்வியல் பிராமணீயத்தை வென்ற நவீன பிராமணீயம்

1980 வரையில் மேல் சாதியினரை மட்டுமே சமூக அடித்தளமாக கொண்டிருந்த இந்து பாசிசமானது அடுத்த கட்டத்திற்கு வளர்க்கும் முகமாக அதனை பரவலாக்கும் ஆய்வை முன்வைத்தார் ஆர்எஸ்எஸ் கருத்தியலாளர் கோவிந்தாச்சார்யா. 1970களின் இறுதியில் வைக்கப்பட்ட இந்த ஆய்வு கோவிந்தாச்சார்யா ஆய்வு அணுகுமுறை (Govindacharya Thesis) என அழைக்கப்படும். அதன்படி, பிற்பட்ட சாதியினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகளின் மத்தியில் சென்று அவர்களையும் இந்து பாசிசத்தை முன்வைக்கும் இந்து தேசியத்தின் பங்காளிகளாக ஆக்குவதே ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தில் மத்தியக் காலத்தில் சாதிய நிலவுடமைச் சமூகத்தை கட்டியமைப்பதற்கு சாதியக் கட்டமைப்பிற்கு வெளியே இருந்த இனக்குழுக்களையும் பழங்குடிகளையும் அக்கட்டமைப்பிற்கு உள்ளே இழுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான எத்தனிப்போடு இது ஒப்பிடத்தக்கது.

கோவிந்தாச்சார்யா அணுகுமுறையின் அங்கமாக/தொடர்ச்சியாக காஞ்சி மடத்தின் ஓடிப்போன சங்கராச்சாரியான ஜெயேந்திர சரஸ்வதியோ இந்து பாசிசத்தின் அங்கமாக உள்ள இந்து மதத்தை கீழே கொண்டு போய் பரவலான செல்வாக்கிற்கு தயார்படுத்த வேண்டும் என்பதற்காக ஜன கல்யாண், ஜன ஜாக்ரன் ஆகிய இயக்கங்களை 1980களின் மத்தியில் தொடங்கினார். செவ்வியல் பிராமணீயத்தை நவீன பிராமணீயமாக வளர்த்தெடுப்பதன் அங்கமாக இதை மேற்கொண்ட அவருக்கு அவ்வாறு நவீன பிராமணீயமாக உருமாற்றக்கூடாது என அம்மடத்தின் மூத்த சங்கராச்சாரியாக அப்போதிருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி முரண்பட்டதால் ஜெயயேந்திர சரஸ்வதி மடத்தை விட்டு ஓடிப் போனார். எனினும் இறுதியாக  செவ்வியல் பிராமணீயத்தை நவீன பிராமணியம் வென்றது.

தமிழகத்தில் பார்ப்பனரல்லா சாதி களிடையே வளர்ந்த இந்து பாசிசம்

நவீன பிராமணீயத்தின் அரசியலான இந்து பாசிசமானது பிற்பட்ட சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியினர், பழங்குடிகளின் மத்தியில் உள்ளோரையும் பொறுக்கி எடுத்து இந்து தேசியத்தின் நலனோடு தமது நலனையும் இணைத்துக் கொள்ள முடியும் என்று அவர்கள் கருதும் வகையில் அதற்கான பொருளாயத அடிப்படையில் உள்ள பிரிவை இலக்கு வைக்கத் தொடங்கியது.

பிற்பட்ட சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியினர், பழங்குடிகளுக்கு பதவிகளை கொடுத்தது. மார்வாரி கட்சி, பனியா கட்சி என்றே அறியப்பட்டிருந்த பாரதீய ஜன சங்கத்தின் புதிய அவதாரமான பாரதிய ஜனதா கட்சியானது உண்மையில் இந்து (?) கட்சியாக தன்னை தகவமைத்துக் கொள்ளத் தொடங்கியது.

இன்றைக்கு பாஜகவின் முதலமைச்சர்களில் பெரும்பாலோர் பிற்பட்ட சாதியினரும் பழங்குடிகளுமே ஆவர். அக்கட்சியின் நிர்வாகிகளில் பலரும் பிற்பட்ட சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியினர், பழங்குடிகள் என்பதாகவும் இருக்கின்றனர். அனைத்திற்கும் மேலாக பிரதமர் மோடியே பிற்பட்ட சாதியை சேர்ந்தவரே ஆவார்.

தமிழகத்திலோ இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்து பாசிசமானது 1980களின் தொடக்கத்தில் தாணுலிங்க நாடாரின் தலைமையில் இந்து முன்னணியை தொடங்கியதோடு ரங்கசாமி தேவரின் தலைமையில் ஆர்.எஸ்.எஸ்-சின் தமிழகக் கிளையையும் முடுக்கிவிட்டது.

* இந்து பாசிசமானது வணிகத்தில் முஸ்லிம்களோடு முரண்பாட்டை உடைய இந்து நாடார்களை அணிதிரட்டத் தொடங்கியது. அதன் முதல்படியாக மண்டைக்காடு இந்து மதவெறிக் கலவரத்தை அரங்கேற்றியது. அது முதற்கொண்டு இந்து நாடார்கள் இடையே திடப்பட்டு அச்சாதியைச் சேர்ந்தோரை நிர்வாகிகளாக ஆக்குகிறது. மத்திய அமைச்சராக இரண்டாம் தடவையாக ஆக்கியுள்ளது.

நாடார்கள் செறிவாக வாழும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை சுடுகாடாக்கப் போகும் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்ததை ஒட்டி 2011ல் அதற்கு எதிராகத் தொடங்கிய நீண்ட போராட்டத்தில் தொடக்கத்தில் பரவலாகப் பங்கேற்ற நாடார்களும் அச்சாதியின் சாமியாரான பால பிரஜாபதி அடிகளும் பின்னாளில் இந்து பாசிசத்தின் வழிகாட்டுதலின் பேரிலும் தமது வர்க்க நலனின்பேரிலும் பின்வாங்கினர். அணுமின் நிலையம் அமைந்து அதன் தொடர் விளைவாக ஏற்படக்கூடிய பொருளாதார பலன்களை தாம் அனுபவிக்க முடியும் என பல நாடார் சிறு/நடுத்தர தொழில்/ வணிக முதலாளிகள் கருதுகின்றனர்.

நாடார்கள் இடையே உருவான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, ஆச்சி மசாலா குழுமம், எச்.சி.எல். குழுமம், சிவசங்கரன் நாடாரின் குழுமம், தந்தி குழுமம், வி.வி.மினரல்ஸ் குழுமம் போன்றவை இந்திய/உலகச் சந்தையில் இடம் பிடித்துவிட்டன.

தந்தி குழுமத்தின் தொலைக்காட்சியானது இந்து பாசிச அரசியலையே உயர்த்திப் பிடிப்பதை யாவரும் அறிந்ததே. நாடார்கள் இடையே தமது அடித்தளத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு அவர்களின் தொழில்/வணிக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் அவர்களுக்கே சொந்தமான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை 20 ஆண்டுகளுக்கு முன்பு பிர்லா குடும்பத்தின் எஸ்ஸார் குழுமமானது வாங்கிய போது ஏற்பட்ட சலசலப்பை போக்குவதற்கு இந்து பாசிசத்தின் கருத்தியலாளரும் தணிக்கையாளருமான குருமூர்த்தி இதில் மத்தியஸ்தம் செய்து அவ்வங்கியை மீண்டும் நாடார்களின் கட்டுப்பாட்டிற்கே சென்று சேருமாறு சிவசங்கரன் நாடாரிடம் மீண்டும் விற்க வைத்தார்.

* நாடார்கள் இடையே 1980களின் தொடக்கத்தில் செயற்படத் தொடங்கிய இந்து பாசிசமானது அதே கணத்திலேயே தேவர்கள் இடையேயும் செயற்படத் தொடங்கி ரங்கசாமி தேவரை தமிழக ஆர்.எஸ்.எஸ் கிளையின் தலைவராக்கியது.

தேவர்கள்/முக்குலத்தோர் இடையேயான மேட்டுக்குடிகள் திருவுருவாக காட்டும் முத்துராமலிங்கத்தின் வாசகமான ‘தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்’ என்பதை தனக்கு பொருத்தமானதாக காண்கிறது இந்து பாசிசம். அவரது காங்கிரஸ் எதிர்ப்பிலான தலித் விரோத ஆதிக்கச் சாதிவெறி அரசியலும் அதற்கு உவப்பானதே ஆகும்.

நாடார்கள் அளவுக்கு தொழில்/வணிக முதலாளிகளாக முக்குலத்தோர் வளரா விட்டாலும் தமிழக அரசு எந்திரமானது அவர்களின் கட்டுப்பாட்டில் பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக இருக்கிறது. இந்தியாவை ஆட்டுவித்து வரும் பார்ப்பன ஆளும் வர்க்கத்தின் கூட்டாளியாக இருந்துதான் தாங்கள் மேலும் வளர முடியும் என்று கருதுவதால் முக்குலத்தோரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுகவின் பொதுச் செயலரான ஜெயலலிதாவின் முதலாம் ஆட்சியில் தொடங்கிய இரு சாதிகளின் ஆளும் வர்க்க கூட்டணியானது இந்து பாசிசத்தை செயற்படுத்துவதாகவே இருந்து வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

* நாடார்கள், தேவர்கள்/முக்குலத்தோர் ஆகியோர் இடையே 1980களில் காலூன்றிய இந்து பாசிசமானது பின்னர் கோவையில் வணிகத்தில் களமிறங்கிய மார்வாரிகள், குஜராத்தி பனியாக்கள் ஆகியோரை திடப்படுத்தவும் மூஸ்லிம்களோடு தொழில் போட்டியிலான முரண்பாட்டை உடைய கொங்கு வேளாள கவுண்டர்களிடையே காலூன்றவும் 1990களில் அங்கு தனது கவனத்தை குவித்து முஸ்லிம்களின் மீது அரசு பயங்கரவாதத்தை ஏவி கொலை வெறி யாட்டத்தை நடத்தி தனது இரத்தக் கணக்கைத் தொடங்கியது. இந்த 20-&30 ஆண்டுகளில் மேற்குத் தமிழ் நாடானது இந்திய அளவிலான பொருளாதாரத்தில்/சந்தையில் கொங்கு வேளாள கவுண்டர்கள் நடத்தும் 15க்கும் மேற்பட்ட தொழில் துறைகள் இடம் பிடித்துள்ளதை திடப்படுத்திக் கொள்ளவும் அதை ஒட்டி உள்ள சிக்கல்களிலிருந்து வெளியே வரவும் இந்து பாசிசத்தின் பின்னால் அவர்கள் செல்கின்றனர்.

* உணவில் சைவத்தை பலவந்தமாக திணித்து உணவுச் சுதந்திரத்தையே காலில் போட்டு மிதிக்கும் இந்து பாசிசமானது தமிழகத்தில் அசைவத்தையே உணவாக உடைய மீனவர்கள் இடையேயும் வளர்ந்து வருகிறது.

1980-&90களில் வினாயகச் சதுர்த்தி ஊர்வல நிகழ்வுகளை ஒட்டி அவர்களிடையே கால் பதிக்கத் தொடங்கிய இந்து பாசிசமானது கிறிஸ்தவ மீனவர்கள் அதிகம் வாழும் இராமேஸ்வரத்தில் மீன்பிடித் தொழிலிலும்  அதனைச் சார்ந்துள்ள தொழில்களிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளதால் ஒப்பீட்டளவில் திடப்பட்டுள்ளது.

தவிர, ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்தோர் நடத்தும் அரசு உதவி பெறும்/சுய நிதி கல்வி நிறுவனங்கள் பலவற்றில் ஷாகாக்கள் கடந்த 20-30 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.

* * *

கோவிந்தாச்சார்யா அணுகுமுறையின்படி, தமிழகத்தில் காஞ்சி மட சங்கராச்சாரியான ஜெயேந்திர சரஸ்வதி ஜன் ஜாக்ரன், ஜன் கல்யாண் ஆகிய இயக்கங்களை ஏழை மக்கள் வாழும் பகுதிகளுக்கு கொண்டு சென்றார்.

மாவோயிஸ்ட் கட்சியானது வலுவாக இருந்துவரும் சத்தீஸ்கர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து பாசிசத்தின் பழங்குடி அமைப்பான வனவாசி கேந்திராவுடன் இணைந்து மேற்காணும் இயக்கங்கள் செயற்பட்டு வருகின்றன. பழங்குடிகளுக்கு இடையில் செல்வாக்கில் உள்ள மாவோயிஸ்ட் கட்சியை பலவீனப்படுத்தவும் அவர்களை கிறித்தவ மதச் செல்வாக்கிலிருந்து மீட்டெடுக்கவும் இவ்வாறு செயற்பட்டு வருகின்றன. விளைவாய் மாவோயிஸ்ட் கட்சியானது வலுவாக இருந்துவரும் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பழங்குடிகள் இடையே இந்து பாசிசமும் வலுவாக இருந்து வருவதோடு பாஜகவானது சத்தீஸ்கரில் மூன்றாவது தடவையாகவும் ஜார்கண்டில் விட்டுவிட்டும் ஆட்சிக்கு வருகிறது.

                                                * * *

இவ்வாறு பிராமணீயமானது இந்திய ஆளும் வர்க்கத் தேவைகளுக்கேற்ப நவீன பிராமணீயமாக தன்னை தகவமைத்து கோவிந்தாச்சார்யா அணுகுமுறை போன்று தன்னை புதுப்பித்து கொண்டே வருகிறது. இத்தகைய நவீன பிராமணீயத்திற்கு ஏதுவாகவே  வரலாறு, சமூகம் போன்ற அரங்குகளில் கடந்த 20&-25ஆண்டுகளிலான இந்து பாசிசத்தின் எழுச்சியோடு விளிம்பு நிலை ஆய்வுமுறை (Subaltern studies), பின் காலனியம் (Post-colonialism), பின் நவீனத்துவம் (Post-modernism) போன்ற ஆய்வு முறைகள் இந்திய ஆய்வு/அறிவு உலகில் செல்வாக்கை செலுத்தி வருகின்றன.

காலனியத்திற்கு முன்பிருந்த சமூகத்தை உன்னதப்படுத்தவும் பின் காலனியமும் சமூகம்/வரலாற்றை பேரியல் மட்டத்திற்கும் (macro-level) நுண் மட்டத்திற்கும் (micro-level) இடையேயான சரடு/இழை துண்டிக்கப்பட்டதாக காணும் விளிம்பு நிலை ஆய்வு முறையும் பொருளாதாரம், அரசியல், பண்பாடு ஆகியவற்றிற்கு இடையிலான இயங்கியல் உறவுகளை காண மறுக்கும் பின் நவீனத்துவ ஆய்வு முறையும் இந்து பாசிசம் வளருவதற்கு துணை போயின என்பதில் ஐயமில்லை. வர்க்க முரண் நிலவுதலை மறுக்கும் இந்த ஆய்வு முறைகளும் அதையே கண்ணோட்டமாக உடைய இந்து பாசிசமும் அக்கம்பக்கமாக ஒன்றையன்று வளர்த்து இறுதியாக இந்திய ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்தே வருவதாக இருக்கின்றன.

                                                * * *

கருத்தியல்/அறிவு/ஆய்வுலகில் இவ்வாறு இந்து பாசிசமானது தன்னை புதுப்பித்துக் கொண்டு மக்கள் திரள் இடையே தனது செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்வதன் அங்கமாக ஜனரஞ்சக அரசியலையும் (populist politics) மேற்கொண்டு வருகிறது. அதை பொருளாதாரம், மதம், வரலாறு ஆகிய அரங்குகளில் கடந்த 35 ஆண்டுகளாக செயற்படுத்தி வருகிறது.

* பாரதீய ஜனதாக் கட்சியின் முந்தைய அவதாரமான பாரதீய ஜன சங்கமானது நேரு, இந்திராகாந்தி ஆகியோரின் காலத்தில் அதிகார வர்க்க மூலதன அரவணைப்பிலான தனியார் பெரு மூலதன வளர்ச்சிக்கான கொள்கைகளான பொதுத்துறைக்கு கேந்திர துறைகளில் தலையாய பாத்திரம், திட்டக் கமிஷன் தலைமையிலான நிதி ஒதுக்கீடு, நலவாழ்வுக் கொள்கைகளின் அமலாக்கம் ஆகியவற்றை ஜனதா கட்சியில் அது சேரும்வரை மத்திய 1970கள் வரை சுதந்திரப் பொருளாதாரக் கொள் கையின் அடிப்படையில் எதிர்த்து வந்தது. இதனால் நாடாளுமன்ற தேர்தல் முறையில் குறைந்தது ஒற்றை இலக்க இடத்தையும் பெற முடியாமல் மக்கள் திரள் இடையே அன்னியப் பட்டு கிடந்தது.

ஆனால் பாரதீய ஜன சங்கமானது பாரதீய ஜனதா கட்சியாக அவதாரமெடுத்தபோது தனது கொள்கையாக காந்திய சோசலிசம் என குறிப்பிடும் அளவுக்கு இந்து பாசிசம் ஜனரஞ்சக வேடமிடத் தொடங்கி மக்கள் திரள்களை அன்றாடம் பாதிக்கும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகளை எதிர்த்து வடிகாலாகச் செயற்பட்டு வருகிறது.

* ஆட்சியாளர்களின் மீதான மக்கள் திரள்களின் கோபத்தை மடைமாற்றும் நோக்கிலும் அதுவரையிலும் இந்து பாசிசத்தால் புறக்கணிக்கப்பட்டு வந்த தெருவோர அம்மன் கோவில் விழாக்களுக்கு நிதியுதவி வழங்குமாறு அல்லது அவற்றை பொறுப்பேற்றுச் செய்யுமாறு வணிகர்களை பணித்தது. அதே போல் வினாயக சதுர்த்தி விழாவை ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் நடத்தி அவர்களை பங்கேற்க வைத்து முஸ்லிம் மக்கள் மீதான வன்முறை தாக்குதல்களில் ஈடுபடுத்தி வருகின்றது.

* கடந்த 20&-25 ஆண்டு கால உலக மயமாக்கலின் விளைவாக எழும் நிச்சயமற்ற நிகழ்கால/எதிர்கால நிலைமைகளினால் ஏற்படும் உளவியல் சிக்கல்களினால் அல்லலுறும் பரந்துபட்ட மேல்நடுத்தர/ நடுத்தர வர்க்கத்தின ருக்கான கவுன்சலிங்குக்கு இந்து ஆன்மிகம் கலந்த உளவியல் சிகிச்சையை கும்பல் தன்மையில் (mob psychology)தரும் கார்ப்பரேட் மயமான நவீன பிராமணீய சாமியார்களான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சாய்பாபா, பாபா ராம் தேவ் ஆகியோர் மகாபாரதம், இராமாயணம் ஆகியவற்றிலிருந்தே தீர்வுகளை தந்து இந்து பாசிசத்தை மேற்காணும் வர்க்கத்தினரிடையே வளர்த்து வருகின்றனர்.

இதே பணியையே சுவாமி சுகபோதானந்தா போன்றோரின் ‘கதவைத் திற’ காற்று வரட்டும்’ வகையிலான தொடர்களை வெளியிட்டு விகடன், குமுதம் போன்ற ஜனரஞ்சக இதழ்களும் செய்து வருகின்றன.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோரின் 70/80களின் காலத்திய மேட்டுக்குடிமயமான ஆன்மிக குருவான ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கருத்தியல் சீடர்களே இவர்கள்.

(தொடரும்)

Pin It