சென்ற புதிய முன்னோடி இதழில் அய்க்கியம் பற்றி ஒரு பக்க கருத்துரையை வெளியிட்டிருந்தோம். அதில் தமிழ்த் தேச நடுவத்திற்கான முயற்சிகள் பற்றி விமர்சனம் வைத்திருந்தோம்.

இதற்கு தோழர். அரங்க. குணசேகரன் எதிர்வினையாற்றியுள்ளார். அவர் நேசக்கரம் நீட்டியுள்ளார். அதை பற்றிக் கொள்கிறோம். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய முன்னோடியில், “தமிழ்த் தேச நடுவம் போன்ற முயற்சிகள் தங்களுக்கு நெருக்கமான சக்திகளை இணைப்பது என்ற குறுங்குழு அடிப்படையை கொண்டிருக் கின்றன. அரசியல் அடிப்படை கிடையாது” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தோழர். அரங்க. குணசேகரன் கடைசி வரிகளை “அடிப்படை அரசியல் கிடையாது” என்று மாற்றி குறிப்பிட்டுள்ளார். இரண்டுக்கும் பொருள் வேறுபாடே உண்டு.

நெருக்கமான சக்திகளை மட்டும் இணைப்பது, அரசியலை அடிப்படையாக கொண்டு இணைப்பது இல்லை என்றே விமர்சிக்கப்பட்டது. இவர்களுக்கு அடிப்படை அரசியல் கிடையாது என்று விமர்சிக்கவில்லை.

2014 ஆம் ஆண்டு மே முதல் வாரத்திலிருந்து அய்ந்து கட்டங்களாக கூடியதாக குறிப்பிட்டுள்ளீர்கள். முதல் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட சக்திகள் எந்த அடிப்படையில் அழைக்கப்பட்டார்கள் என்பதுதான் கேள்வி! இதற்கு நீங்கள்தான் யாரை அழைக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறீர்கள். அதற்கு அளவு கோல் என்ன?

சரியாக சொன்னால், நீங்கள் உங்கள் வரையறைகளை பரவலாக அனுப்பி பல அமைப்புகளை அழைத்து இருக்க வேண்டும். அதன் செயல் போக்கில் அரசியல் இணக்கமானவர்கள் அய்க்கியத்தை நோக்கி நகரமுடியும். ஒன்றுக்கு மேற்பட்ட அய்க்கியங்கள் கூட நடக்கலாம். இதுவே சனநாயகபூர்வமானது; இயல்பானது; அரசியலை அடிப்படையாக கொண்டது.

ஆனால், இணக்கமான உறவுள்ளவர்களை மட்டும் அழைப்பது நிலவுடமை தன்மை யிலானது. குறுங்குழு போக்கை கொண்டதாகும். நீங்கள் அரசியல் வரையறைகளை வைத்திருக்கலாம் அல்லது பின்னர் உருவாக்கி இருக்கலாம். ஆனால், முதலில் எந்த அடிப்படையில் அழைத்தீர்கள்? ஏன் பரவலாக அழைக்கவில்லை? அல்லது மற்றவர்கள் பொருத்தமற்றவர்களா? இதில்தான் உங்களது சனநாயகத் தன்மை அல்லது குறுங்குழுவாதம் உள்ளது.

இரு தரப்பு உறவுகள் என்பது வேறு. ஆனால், பொது தளத்தில் அய்க்கியத்திற்கான முறைகள் வேறு. அது சனநாயகத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அதை முழுமையாக தனிப்பட்ட முறையில் கட்டுப்படுத்த முடியாது. அதன் செயல் போக்கே தீர்மானிக்கும்.

மேலும், “தாங்கள் சொல்லும் குறுங் குழுவாதப் பொருளில் இயங்குவதற்கு ஒரு அய்க்கிய முன்னணித் தேவையே இல்லை.”  என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது ஒரு எந்திரகதியான பார்வையாகும். அய்க்கிய முன்னணி செயற்பாட்டில்தான் சந்தர்ப்ப வாதமும், குறுங்குழுவாதமும் முக்கிய போக்குகளாக நமது வரலாறு முழுவதும் விரவி உள்ளது.

இறுதியாக,

எங்களது கட்டுரையில் “அய்க்கியம்” பற்றி எங்களது நிலைப்பாடுகளை, எங்கள் மூளையில் படிந்திருப்பதை தெளிவாகவே குறிப்பிட் டுள்ளோம். அதை தாங்கள் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். முதலில் அரசியல் அய்க்கியம், நடைமுறை அய்க்கியம் இறுதியாக அமைப்பு அய்க்கியம் என்பதே சரியான செயல் போக்காக குறிப்பிட்டுள்ளோம்.

எங்களது விமர்சனத்திற்கு எதிர்மறையாக வினையாற்றாமல் ஆக்கப்பூர்வமாக எதிர் வினையாற்றிய தோழர். அரங்க. குணசேகரனுக்கு மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகச் சூழலே வன்மம் நிறைந்ததாக உள்ளதால்தான் மீண்டும் அழுத்தம் தருகிறோம்.

ஆக்கப்பூர்வமான விவாதங்களே சரியானவைகளை அடையாளங்காட்டும்.

Pin It