ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்து பார்ப்பன-பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், ‘எங்கள் பார்வையில் மக்களைப் பிளவுப் படுத்தும் பார்ப்பனீய மதவாதம்’ என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘இசுலாமியர் பார்வையில்’ என்கிற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசினார். அவரது உரையின் தொடர்ச்சி -
முஸ்லீம்கள் வீடுகட்டினால் யார் வேண்டு மானால் வாடகைக்கு வரலாம். ஆனால், பார்ப் பனர்கள் வீட்டில் வேறுயாரும் வசிக்க முடியாது. இந்த நாட்டில் அனைத்து பயங்கரவாத செயல்களையும் செய்வது பார்ப்பனீயம். ஆனால், பழியை சுமப்பது முஸ்லீம்கள். இந்த சூழ்ச்சி அரசியலை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
அடுத்த குற்றச்சாட்டு, முஸ்லீம்கள் தீவிர மதநம்பிக்கை உடையவர்கள் அவர்களது குரானில் நான்கு பெண்டாட்டிகளைத் திருமணம் செய்ய சொல்லியிருக்கிறது. எவ்வளவு வேண்டுமானலும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என சொல்லியிருக்கிறது. அதனால் அவர்கள் அந்த மதக் கருத்தை பின்பற்றி நிறைய திருமணம் செய்துகொண்டு நிறைய குழந்தைகளை பெற்றுக் கொண்டு இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் முஸ்லீம்களின் எண்ணிக்கையை அதிகமாக்கு கிறார்கள் என்ற குற்றச்சாட்டை பார்ப்பனீயம் தொடர்ந்து வைக்கிறது. இது முஸ்லீம்கள் மீது பார்ப்பனீயம் வைக்கின்ற நச்சு கருத்துக்கு நிகராக பொது சமூகம் முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு வெறுப்பைக் கட்டமைத்திருக்கிறது. மக்கள் தொகை அதிகரிப்பால்தான் நாட்டில் பல பிரச்சனைகள் என ஒரு உளவியல் சிந்தனையை பார்ப்பனீயம் உருவாக்கு கிறது. மக்கள் தொகை பிரச்சனைக்கு யார் காரணம் என்றால் அது முஸ்லீம்கள் தான் என்று பார்ப்பனீயம் கூறுகிறது. இது உண்மையல்ல அந்த காலகட்டத்தில் இஸ்லாம் மதத்தில் விதவைகள் அதிகமிருந்ததால் இஸ்லாம் ஆண்கள் அதிகமாக பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என ஒரு அனுமதியை வழங்கியது. விதவை மறுமணத்தை ஆதரித்து தான் அத்தகைய முடிவை அது எடுத்தது. ஆனால் பார்ப்பன இந்து மதம் கணவனை இழந்தால் அந்த பெண் வேறு திருமணம் செய்யக்கூடாது, மேலும் கணவனுடன் உடன்கட்டை ஏறவேண்டுமென கூறியது.
அதிகம் திருமணம் செய்யவேண்டும் அதிக குழந்தைகள் பெற வேண்டும் என இந்தியாவில் முஸ்லீம்கள் முடிவெடுத்திருந்தால் இந்திய மக்கள் தொகையில் மிகவும் முன்னேறியிருப்பார்கள். ஆனால் இந்தியாவில் இன்றைக்கு இந்திய முஸ்லீம் ஆண்பெண் விகிதம் சரிசமமாக இருக்கிறது. எனவே அப்படி சொல்லியிருந்தால் அதுஒரு பொய்யான அவதூறாகும் அதிக மனைவி அதிக குழந்தைகள் என்பதை ஒரு சமூகத்துடன் மட்டும் பொருத்த முடியாது அதை ஒரு மதத்தோடு பொருத்திப் பார்ப்பது பாசிச பார்ப்பனீயம். இத்தகைய பாசிசத்தைத்தான் ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
அடுத்து முஸ்லீம்கள் வந்தேறிகள் அயல்நாட்டிலிருந்து அரபிகளாக ஊடுருவியவர்கள் எனவே அவர்களை அடித்து விரட்ட வேண்டும் என்று சொல்லி அதை ஒரு பரப்புரையாக எடுத்து செல்கிறார்கள் பார்ப்பனீய இந்துத்துவ பாசிச கொள்கை உடையவர்கள். பல மாநிலங்களில் குறிப்பாக அசாம் போன்ற மாநிலங்களில் முஸ்லீம்களை தனிமைப்படுத்த மேற்கு வங்க மக்களிடம் ஆர்எஸ்எஸ் சொல்லி வருவது என்னவென்று பார்த்தால் முஸ்லீம்கள் ஊடுரு விகள்; நம்மண்ணின் மகத்துவத்தை கெடுக் கிறார்கள்; நம் மண்ணின் வளத்தை சூறை யாடுகிறார்கள். அதனால் இவர்களை விரட் ண்டும் என்று சொல்கிறார்கள். முஸ்லீம்கள் மட்டுமா வந்தேறிகள். இந்த நாட்டில் யூதர்களும் வந்தேறிகள் தான் அதுபோல் பார்சிகள், நேபாளிகள் பலரும் வந்தேறிகளாகத்தான் உள்ளனர். ஆனால் அவர் களைப் பற்றி ஆர்எஸ்எஸ் வாய்திறந்ததே கிடையாது. முஸ்லீம்களை மட்டும் தனிமைப் படுத்த அசாம் போன்ற மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கிறது. இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
அண்மையில் ஒருவர் தொலைக்காட்சி விவாதத்தில் கூறுகிறார். இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களின் உருவம் தான் இங்கிருக்கிறது. உள்ளமெல்லாம் பாகிஸ்தானில் இருக்கிறது. இவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றால் இங்கு வெடி வெடிக்கிறார்கள் என்று நச்சு விதைகளை இந்த நாட்டில் விதைக்கிறார். இது எவ்வளவு பெரிய அபாண்டம்; இது ஒரு மோசமான மோசடியான அரசியல்; வெறுப்பான அரசியலை முஸ்லீம்களோடு பொறுத்தும், பாசிச வேலைகளைப் பார்ப்பனீய கும்பல் தொடர்ந்து செய்துவருவதன் நோக்கம் பொது சமூகத் திலிருந்து முஸ்லீம்களைத் தனிமைப்படுத்துவதுதான்.
தலித்துகள் மீது இராமதாஸ் போன்றவர்கள் இங்கு செய்யும் வெறுப்பு அரசியலை முஸ்லீம்கள் மீது இந்திய அளவில் செய்கிறது பார்ப்பனீயம். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டும் காவி, பாசிச சிந்தனையின் வெளிப்பாடுதான்.
எனவே, இந்த அரசியல் உடைத்தெறியப்பட வேண்டும் என்றால் ஒரு அரசியலைத்தான் நாம் முன்னெடுக்க வேண்டும். அது என்னவென்றால் பெரியார் - அம்பேத்கர் ஆகியோரின் அரசியலை நாம் உள்வாங்கவேண்டும். அதுதான் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பான அரசியல் ஆகும். இதுதான் முஸ்லீம் அரசியலையும் செழுமைப்படுத்தும். மோடிக்கும் பார்ப்பனர் களுக்கும் திகைப்பை ஏற்படுத்தும்.
மோடி விரும்புவது முஸ்லீம்கள் முஸ்லீம் தலைமையில் திரளவேண்டும். அப்படி திரண்டால் அதையே காரணம் காட்டி இந்துக்களை அணி திரட்டலாம் என திட்டமிடுகிறார். அதை உடைக்க வேண்டும் என்றால் நாம் பெரியார், அம்பேத்கர் கருத்துக்களோடு தொடர்ந்து பயணித்து அந்த கருத்தியலை வலிமை படுத்தவேண்டும். உலகில் பல நாடுகளில் முஸ்லீம்களுக்கென அகதிகள் முகாம் நிறைய உள்ளன. பலநாடுகளில் முஸ்லீம்கள் அடித்து துரத்தப்படுகின்றனர். ஆனால் தமிழகத்தில் முஸ்லீம்களுக்கென தனி அகதி முகாம் இல்லை; காரணம் பெரியார். எனவே பெரியார் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் கருத்துக்களை நாமும் உள்வாங்குவதன் மூலம்தான் இந்து பார்ப்பன பயங்கரவாதத்தை வேரறுக்க முடியும். ஏனென்றால் பார்ப்பனீயத்தால் அழிக்க முடியாத ஒரு தலைவர் பெரியார் ஒருவரே என தனது உரையில் குறிப்பிட்டார்.
உரைத் தொகுப்பு: மன்னை இரா.காளிதாசு