சங்பரிவார் தரப்பில் எழுப்பப்படும் பல்வேறு கற்பனைக் கட்டுகதைகளுக்கு வரலாற்று அடிப்படையில் மறுக்கிறது இக்கட்டுரை.
ஒட்டுமொத்த உலகமே வலதுசாரி பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கும் காலகட்டம் இது. பல்வேறு இடதுசாரி நாடுகள் வலதுசாரியாக மாறிவிட்டன. முற்போக்கு அரசியலைக் கொண்ட பிரிட்டனிலும் செங்கொடி கீழே இறங்குகிறது; தொழிலாளர் கட்சி தோற்கிறது. இந்தியாவும், தீவிர வலதுசாரிகளிடம் 2014இல் இருந்து சிக்கித் தவிக்கிறது. உலகம் முழுவதும் வகுப்புவாத வன்முறைகள் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு நாட்டிலும், சிறுபான்மையினரை பெரும்பான்மையினருக்கு எதிரிகளாக சித்தரித்து, வெறுப்புணர்வு வளர்க்கப்படுகிறது. சிறுபான்மையினரின் மதத்தால், நம்பிக்கையால், பெரும்பான்மையினருக்கு ஆபத்து என்று வதந்திகள் பரப்பப்படு கின்றன. பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உரிமை மறுக்கப்படுகின்றன. இந்தியாவில், சிறுபான்மையினரான இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
அனைத்து கலவரங்களுக்கும், சிறுபான்மையினர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களே அடிப்படையாகும். ஜாதிக் கலவரங்களையோ, ஆணவப் படுகொலைகளையோ தூண்ட ஒரு அமைப்பு தேவையில்லை. மக்களே ஜாதியாகத் தான் இருக்கின்றனர். ஆனால், மதக் கலவரங்கள் அப்படியல்ல. மதக் கலவரங் களைத் தூண்ட மத அடிப் படைவாத அமைப்புகள் தேவைப்படுகின்றன. கலவரங் களைத் தூண்ட வெறுப் புணர்வே அடிப்படை. வெறுப் புணர்வை வளர்க்க, பல வதந்திகளை ஆர்.எஸ்.எஸ். போன்ற சனாதன அமைப்புகள் காலங்காலமாக பரப்பி வருகின்றன. அந்த வதந்திகளில் சில முக்கியமான வதந்தி களையும், அவற்றுக்கு எதிரான உண்மைகளையும் விரிவாக பார்ப்போம்.
கலவரங்களை ஆரம்பிப்பது யார்?
கலவரங்களை ஆரம்பிப் பது இஸ்லாமியர்களே! என்ற கருத்து சங் பரிவாரங்களால் பரப்பப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை? உண்மையை தெரிந்துகொள்ள, கலவரங்களுக்கு பின்பு அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் நமக்கு பெரிதும் பயன்படும். 1969 இல் குஜராத் மாநிலத்திலுள்ள அஹமதாபாத்தில், ஹிந்து- முஸ்லிம் கலவரங்கள் நடந்தன. இதனை விசாரித்த ஜெகன் மோஹன் ரெட்டி ஆணையம், ஆர்எஸ்எஸ்ஸும், ஜனசங்கமும் கலவரங்களைத் தொடங்கி வைத்தவர்கள் என்று அறிக்கை யளித்துள்ளது. இந்த ஒரு அறிக்கையை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வந்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது.
1970இல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிவன்டீ நகரத்தில், ஹிந்து – முஸ்லிம் கலவரங்கள் நடந்தன. டி. பி. மேடோன் விசாரணை ஆணைய அறிக்கையில், ஹிந்துத்துவ அமைப்புகள் முதலில் மோதீ மஜ்ஜித் மீது தாக்குதல் நடத்தியதும், கற்களை வீசிய தும், காவல்துறை அனைத்தை யும் வேடிக்கைப் பார்த்ததும், பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களோடும் ஒப்பிட லாம். மசூதி வழியாகத் தான் சிலைகளை எடுத்துச் செல் வோம் என்று அடம் பிடிப்ப தும், வாய்ப்பு கிடைத்தால் கல்லெறிவதும், காவிகளின் வழக்கமாகும்.
1971இல் கேரளத்து தலச்சேரியில், ஹிந்து – முஸ்லிம் கலவரம் நடந்தது. ஜோசப் விதயத் விசாரணை ஆணைய அறிக்கையில், மக்கள் மத வேற்றுமையின்றி ஒற்றுமையாக இருந்ததாகவும், ஆர் எஸ் எஸ் தலச்சேரியில் கிளை அமைத்து செய்த பிரச்சாரங்களின் விளை வாக, இஸ்லாமியர் மீதான ஹிந்துக்களின் பார்வையே மாறியதாகவும் கூறப்பட் டுள்ளது. இதே போன்ற ஒரு முடிவு தான், 1982இல் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி யில் நடந்த கலவரங்களின் போதும், நீதிபதி வேணு கோபால் விசாரணை ஆணைய அறிக்கையிலும் கூறப்பட் டுள்ளது. மதமாற்றங்களினால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றும், மதம் மாற்றவே வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்றும், ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்தது என்கிறார் நீதிபதி வேணுகோபால். இதற்கான தீர்வு, திராவிட இயக்கப் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதே ஆகும் என்றும் கூறியுள்ளார்.
சங் பரிவாரங்கள் நடத்தும் ஊர்வலங்கள் ஆன்மீகத்தை வளர்க்கவா?
சுதந்திரத்துக்கு பின், எந்த பெரிய ஹிந்து கோயிலையும் இஸ்லாமியர்கள் இடித்ததாக செய்திகள் இல்லை. ஆனால், 06/12/1992 இல் கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதே மாதத்தில், 26ஆம் நாள் முதல், மஹாராஷ்டிராவில், மஹா ஆரத்தி மத நிகழ்வை சிவசேனா நடத்தியது. பல இஸ்லாமியர்கள் வீடுகளும் கடைகளும் சேதப்படுத்தப் பட்டன. கோவையில் சசிகுமார் என்ற இந்து முன்னணி பொறுப்பாளர் கொலை செய்யப்பட்ட போது, இறுதி ஊர்வலத்தில் பிரியாணி அண்டா திருடிய சங்கிகள், இத்தகைய நிகழ்வுகளை காலங் காலமாக செய்து வருகின்றனர். ஒரு சாதாரண திருடன் இரண்டு முறை திருடினாலே அவனைத் தீவிரமாகக் கண்காணிக்கும் காவல்துறையோ, ஒரு இயக்கத் தலைவர் அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் ஒரு முறை பேசினாலே அவருடைய அனைத்து எதிர்கால பேச்சு களையும் பின் தொடரும் உளவுத்துறையோ, ஹிந்துத்துவ வாதிகள் ஊர்வலம் நடத்தி னாலே கலவரம் நடக்கும் என்பதுகூடத் தெரியாதவர் களை போல, அவர்களை ஊர்வலம் நடத்த அனுமதித்து, கலவரத்தை வேடிக்கையும் பார்க்கின்றனர்.
தென்னிந்திய தலைவர்கள், மக்கள் அனைவரும் இன்புற்று இருக்க புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், மஹாராஷ்டிராவிலோ, நிலைமை தலைகீழாக இருந்தது. பாபர் மசூதியை இடித்து ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், 01.01.1993இல், சிவ சேனாவின் பத்திரிக்கையான “ஷாம்னா” இதழில், “ஹிந்துக்கள் முரட்டுத்தனமாக இருக்க வேண்டும்” என்பதே புத்தாண்டுச் செய்தியாக இருந்தது. அம்பேத்கர் கூறிய தென்னிந்திய – வட இந்திய சிந்தனை வேறுபாடுகள் இதன் மூலம் தெளிவாக தெரிகின்றன.
இத்தகைய புத்தாண்டுச் செய்தியின் விளைவாக, 04/01/1993இல், ஹிந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லையென்று கூறி, மிகப்பெரிய கலவரத்தை வானரப்படைகள் நிகழ்த்தின. தமிழ்நாட்டு ஆதிக்கவாதிகள், “எங்கள் வீட்டு பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. நாடகக் காதல் வலையில் எங்கள் பெண்கள் சீரழிகின்றனர்” என்பதை போன்ற முனை மழுங்கிய வாதமே, “ஹிந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை” என்ற வாதமும். 2012ஆம் ஆண்டில், National Crime Records Bureau சேகரித்து வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ஒரு பெண்ணை அதிகமாக வன்கொடுமை செய்வது குடும்பத்தினரும், சொந்தபந்தங்களும், நன்கு அறிமுகமானவர்களுமே ஆவர். அதாவது, ஒரு ஜாதிக்காரர் அதிகம் பாதிக்கப்படுவது, தன் சொந்த ஜாதிக்காரர்களால் தான். ஒரு மதத்துக்காரர் அதிகம் பாதிக்கப்படுவது, தன் சொந்த மதத்துக்காரர்களால் தான். உண்மை நிலை இவ்வாறு இருக்க, காவிகளோ, ஜாதி ஆதிக்கவாதிகளோ கூறுவதைப் போல, பெண்களும், ஹிந்துக்களும், வேற்றுமதத்தினராலோ, ஒடுக்கப்பட்டோராலோ அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது ஏமாற்று வேலையாகும்.
“ஷாம்னா” புத்தாண்டுச் செய்தியின் விளைவாக, 04/01/1993இல் நடந்த கலவரத்தில், சாச்சா நகர் மசூதி தாக்கப்படு கிறது. இஸ்லாமியர்களின் குடிசைகள் கொளுத்தப்படு கின்றன. ஸ்ரீகிருஷ்ணா விசாரணை ஆணைய அறிக்கையில், அனைத்து கல வரங்களுக்குமான காரணங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட தால், மிகுந்த அதிர்ச்சிக் குள்ளான இஸ்லாமியர்கள், தங்களுடைய கடுங்கோபத்தை ஊர்வலங்களின் மூலமும், போராட்டங்களின் மூலமும் வெளிப்படுத்தினர். அதற்கு போட்டியாக சிவசேனா நடத்திய கொண்டாட்ட ஊர் வலங்கள், இஸ்லாமியர்களை எரிச்சலூட்டின. இது ஹிந்து- முஸ்லிம் மோதலுக்கு வழி வகுத்தது. எத்தனையோ கோயில்களில் தேர்த் திரு விழாக்களை பொதுமக்கள் அமைதியான முறையில் நடத்து கின்றனர். கிறுஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் அமைதி யாக மத நிகழ்வுகளை நடத்து கின்றனர். அப்போதெல்லாம் வராத கலவரம், சனாதன வாதிகள் ஊர்வலம் நடத்தும் போது மட்டும் வருகிற தென்றால், ஆர்எஸ்எஸ் ஊர் வலம் நடத்துவது கலவரத்தை உருவாக்கவா? ஆன்மீகத்தை வளர்க்கவா?
கோத்ரா தொடர் வண்டியை எரித்தது யார்?
ஹிந்துத்துவ அமைப்பு களில் செயல்படும் இளைஞர் களை மூளைச் சலவை செய்ய பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய கருத்து, கரசேவகர்கள் பயணம் செய்த கோத்ரா தொடர் வண்டியை எரித்து, அனை வரையும் கொன்றவர்கள் இஸ்லாமியர்கள் என்பதாகும். இது உண்மையா என்பதை கண்டறிய, அருணா ராய், கிருஷ்ணா அய்யர் போன்ற சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழு Concerned Citizens Tribunal (சிரத்தையுள்ள குடி மக்கள் தீர்ப்பாயம்) என்பதை உருவாக்கி விசாரிக்க ஆரம்பித்தனர். தனிநபர் சாட்சியங்களையும், குழு சாட்சியங்களையும் சேர்த்து, மொத்தம் 2094 சாட்சியங்களை பெற்றனர். இதன் மூலம் அவர்கள் சில முடிவுகளுக்கு வந்தனர்.
தொடர்வண்டி எரிப்பை இஸ்லாமியர்கள் ஒரு சமூகமாக இருந்து செய்யவில்லை என்பது முதல் முடிவாகும். இந்த சம்பவம் நன்கு திட்டமிடப் பட்ட சம்பவம் இல்லை என்பது இரண்டாவது முடிவு. மூன்றாவதாக அவர்கள் கண்டறிந்த உண்மை மிகவும் முக்கியமான தாகும். தொடர்வண்டிக்கு தீ வெளியில் இருந்து வைக்கப்படவில்லை; உள்ளிருந்து தான் வைக்கப்பட்டுள்ளது என்பதே அவ்வுண்மை. எனவே இந்த முடிவுகளை வைத்துப் பார்க்கும் பொழுது, இந்த காலத்து தொடர்வண்டி நிலையங்களில் உள்ளதைப் போல, Metal Detector போன்ற கருவிகள் அந்த காலகட்டத்தில் பெரிய அளவில் இல்லாத சூழலில், எந்த பொருளை வேண்டுமானாலும் கரசேவகர்கள் எடுத்துச் சென்றிருக்க முடியும். எனவே, இஸ் லாமியர்கள் மீது பழி போடுவதற்காகவே, காவிகள் இந்த சதி வேலையை செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
கிறிஸ்துவ மதமாற்றம்
காவிகள் பரப்பும் மற்றொரு வதந்தி, கிறிஸ்துவ மதமாற்றத்தின் மூலம், கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை ஆபத்தான அளவுக்கு அதிகரித்து விட்டது என்பதாகும். இது உண்மையா? பொய்யா? என்பதை கண்டறிய, மக்கள்தொகை கணக்கெடுப்பே போதுமானதாகும். ஆனால், இப்படியெல்லாம் சிந்திக்க இயலாத, கல்வியறிவற்ற மக்களை, வர்ணதர்மவாதிகள் குறிவைத்து ஏமாற்றி அடியாள் களாக மாற்றிக் கொள்கின்றனர். படித்த முட்டாள்களும் சுயலாபத்துக்காக அடியாள்களாக இருக்கின்றனர். கல்வியறிவு பெற்றால் மக்கள் சிந்தித்து விடுவார்கள் என்பதற்காகவே, வதந்தி பரப்பும் அதே கூட்டம் இட ஒதுக்கீட்டையும் தடுக்கிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1971இல் கிறிஸ்தவர் எண்ணிக்கை 2.6%, 1981இல் 2.44%, 1991இல் 2.34%, 2001இல் 2.3%, 2011இலும் 2.3%. கிறிஸ்தவர் எண்ணிக்கை விழுக்காடு, கடந்த நாற்பது ஆண்டுகளில் குறைந்துள்ளதையே இப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
1999இல் ஒரிசாவில், ஸ்டெயின்ஸ் என்ற ஆஸ்திரேலிய பாதிரியாரையும், அவருடைய மகன்களையும் ஹிந்துமத அடிப்படைவாதிகள், காரில் தீ வைத்து கொன்றனர். கொலைகாரர்களின் பிரச்சாரம் இன்றும் வலுவாக உள்ளது. கிறிஸ்தவ மதமாற்றங்களை செய்து, ஹிந்து மதத்தை அழிக்கப் பார்த்தார் அந்த பாதிரியார் என்கின்றனர். மதம் மாறுவது அவரவர் சொந்த உரிமை என்பது ஒருபுறம் இருந்தாலும், ஆர்எஸ்எஸ் தீவிர வாதிகள் கூறுவது உண்மையா? என்று பார்த்தால், நீதிபதி வாத்வா விசாரணை அறிக்கை, காவிகளின் முகமூடியை கிழிக்கிறது. பாதிரியார் ஸ்டெயின்ஸ் வாழ்ந்து சேவையாற்றிய இடத்தில், கிறிஸ்தவர் எண்ணிக்கை 0.008% அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில், ஹிந்துக்களின் எண்ணிக்கை, 2.52% அதிகரித்துள்ளது. இதற்காகத் தான் இந்த பச்சைப் படுகொலையும், பிரச்சாரங்களும்!!
ஹிந்து கோயில்களை இடித்தது யார்?
இஸ்லாமியர்கள் தான் ஹிந்து கோயில்களை இடித்ததாக மதவாதிகள் கூறுகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை? கஜினி முகமது சோம்நாத் கோயிலை சேதப்படுத்தி, கொள்ளையடித்ததாக ஆ.ர்எஸ்.எஸ். கூறுவது உண்மையா? ஆம். உண்மை. ஆனால் இது முழு உண்மையா? நிச்சயமாக இல்லை. கஜினி முகமது இந்திய நிலப் பரப்புக்குள் நுழைந்தபோது, அப்துல் தாவுத் என்ற மன்னனுடைய நாட்டை கடக்க வேண்டியிருந்தது. கொள்ளை யடிக்கப் போவது ஹிந்து கோயில் தானே!! அப்துல் தாவுத் முஸ்லிம் தானே!! கஜினிக்கு வழிவிட்டிருக்கலாமே!! வழிவிடவில்லை. மாறாக இரு படைகளுக்கும் இடையே போர் நடக்கிறது. போரில், கஜினி, அப்துல் தாவுத்தின் ஜமா மசூதியை இடித்து விடுகிறான். ஒரு முஸ்லிம், மசூதியை இடித்ததை எந்த இந்து முன்னணிக்காரனாவது சொல்வானா? சொல்ல மாட்டான்.
அப்துலை வீழ்த்திய கஜினி, அடுத்த நாட்டுக்குள் நுழைகிறான். அந்த நாட்டின் மன்னன் ஆனந்த்பால். சங் பரிவாரங்களின் பார்வையில், இவர் ஒரு ஹிந்து. ஒரு ஹிந்துவாக இவர் என்ன செய்திருக்க வேண்டும்? கஜினியை தடுத்திருக்க வேண்டும். ஆனந்த் பால் தடுத்தாரா? இல்லை. இந்த உண்மையை எந்த இந்து மக்கள் கட்சிக்காரனாவது சொல்வானா? சொல்ல மாட்டான். ஆனந்த்பால் வழி விட்டதால், கஜினியால், சோம்நாத் கோயிலை கொள்ளையடிக்க முடிந்தது. கொள்ளை முடிந்தவுடன், ஒரு ஹிந்துவையே மன்னனாக நியமித்தார் கஜினி. நாணயங்கள் சமஸ்கிருதத்தில் வெளியிடப்பட்டன. கஜினியின் கொள்ளை படையின் 12 தளபதிகளில் 5 பேர் ஹிந்துக்கள் என்பது கூடுதல் சிறப்பு.
அடுத்ததாக பூணூல் கும்பல் மறைத்த ஹர்ஷதேவ் மன்னனின் மறுபக்கத்தை காண்போம். ஹர்ஷதேவ் மன்னன் தன்னுடைய அவையில் “தேவோத்பன் நாயக்” என்ற பதவியை உருவாக்கியிருந்தான். கோயிலில் உள்ள விலையுயர்ந்த சிலைகளையும், படங்களையும் கவர்ந்து வருவது தான் இந்த ஹிந்து மன்னன் வழங்கிய பொறுப்பு. பண்டைய இந்தியாவில் கோயில் அழிப்பை பற்றி ஆய்வு செய்த ரிச்சர்ட் ஈடோன், இரண்டு ஹிந்து மன்னர்களுக்கு இடையே போர் மூண்டால், வென்ற மன்னன், தோற்ற மன்னனின் குலதெய்வ கோயிலை அழிப்பது வழக்கம் என்று நிறுவியுள்ளார். இது தோற்ற மன்னனை அவமானப்படுத்துவதற்கும், மன உறுதியைக் குலைப்பதற்கும் செய்யப்படும் காரியமாகும். இன்னொரு உதாரணத்தையும் இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும். ஸ்ரீரங்கப்பட்டணம் கோயில், இஸ்லாமிய திப்பு சுல்தான் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டத்தில், ஹிந்து மராத்தா மன்னன் படையெடுத்து வந்து, இந்த ஹிந்து கோயிலைச் சேதப்படுத்தினான். அதை சீராக்கி, பழைய நிலைக்குக் கொண்டு வந்தது முஸ்லிம் திப்பு சுல்தான்.
அகண்ட பாரத கனவு காண்பவர்களால், அதிகம் எதிர்க்கப்படும் மன்னர்களில் முக்கியமானவர் அவுரங்கசீப். இவரை ஹிந்து விரோதி என்று மதவாதிகள் கூறுகின்றனர். இது உண்மையா? அவுரங்கசீப் ஆட்சியின் கீழ் பல நவாப்கள் செயல்பட்டனர். மக்களிடம் வசூலித்த வரியின் ஒரு பகுதியை அவுரங்கசீப்புக்கு தர வேண்டும் என்பது உத்தரவாகும். எல்லா நவாப்களும் இதை பின்பற்றி வந்த நிலையில், கோல் கொண்டா நவாப் தர மறுத்தார். மூன்று ஆண்டுகளாக இந்நிலை தொடர்ந்ததால், அவுரங்கசீப் தன் உளவுத்துறை மூலம், நவாப் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைப் பார்வையிடச் செய்தார். நவாப் தன்னுடைய செல்வங்களை ஒரு மசூதிக்கு அடியில் ஒளித்து வைத்திருப்பது தெரிய வருகிறது. இஸ்லாமியரான அவுரங்கசீப், அந்த மசூதியை உடைத்து புதையலை எடுத்து வர உத்தரவிடுகிறார். இவ்வாறாக அவுரங்கசீப், மசூதிகளையும் கோயில்களையும் அரசியல் காரணங்களுக்காக இடித்துள்ளார். அதே அவுரங்கசீப் பல கோயில்களுக்கு தங்க ஆபரணங்களை பரிசாக அளித்துள்ளார். கிருஷ்ண மந்திரில், இன்றும் அவுரங்கசீப் கொடுத்த ஆபரணங்கள், நவராத்திரியன்று சிலைகளுக்கு அணிவிக்கப்படுகின்றன. உஜ்ஜைனில் உள்ள மஹாகல் மந்திருக்கும், குவஹாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோயிலுக்கும் நன்கொடைகளை வழங்கியுள்ளார். கோயில்களைக் கட்ட காசி, பிருந்தாவன் ஆகிய இடங்களில், குறிப்பிட்ட அளவு நிலங்களும் வழங்கி யுள்ளார்.
தாஜ்மஹால் என்பது சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டது என்பது பாஜக வகையறாக்களின் குற்றச் சாட்டாகும். ஆனால் அது உண்மையா என்றால் இல்லை என்பதே பதில். ராஜா ஜெய் சிங் என்ற மன்னனிடம் இருந்து அந்த நிலத்தை வாங்கியதை வைத்து தான், காவிகள் இந்த வதந்தியை பரப்புகின்றனர். ராஜா ஜெய்சிங் ஒரு வைஷ்ணவ மன்னன். அவன் ஒரு சிவன் கோயில் கட்டி, அந்த இடத்தை ஷாஜஹானுக்கு கொடுத்ததாக எந்தவித தரவுகளும் இல்லை.
பாபர் மசூதி இருந்த இடத்தில், ராமர் கோயில் இருந்ததாக ராமநந்தி பார்ப்பன சாமியார்கள் பரப்பிய வதந்தியை, ஹிந்துத்துவ அமைப்புகள் ஏற்றுக்கொண்டு, மசூதியை இடித்துத் தள்ளும் அளவுக்கு சென்று விட்டனர். நம்பிக்கையின் அடிப்படையில் மிக மோசமான தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. ராமன் பிறந்ததாக கூறப்படும் ராமாயண அயோத்திக்கும், இன்றைய அயோத்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைய அயோத்தியின் உண்மையான பெயர் “ஸாகேதா” தான். குப்தர்களின் வர்ணாசிரம தர்ம ஆட்சியில் தான், “சாகேதா”, “அயோத்தி” என்று போலியாகப் பெயர் மாற்றப்பட்டது. உண்மை இவ்வாறு இருக்கையில், நம்பிக்கையின் அடிப்படையில் பார்ப்பனர்களுக்குச் சாதகமாக தீர்ப்பை வாங்குவது மோசமான முன்னுதாரணமாகும்.
பாபரை ஹிந்து விரோதியாக சித்தரிக்கும் நபர்களை நம்பும் மக்கள் மனம்மாற, டெல்லி அருங்காட்சியகத்தை ஒருமுறை பார்வையிட்டாலே போதும். அங்கு பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு எழுதிய உயில் உள்ளது. அதில், வேற்றுமதத் தலங்களை இடிக்கக்கூடாது என்றும், பசுக்களை கொல்லக் கூடாது என்றும் பாபர் எழுதியுள்ளார். இவற்றுள் எது இந்து மதத்துக்கு எதிரான கருத்து? பாபர் எப்படி ஹிந்து விரோதியாவார்? இராமாயணத்தைப் பற்றி அவதி ஹிந்தியில் “ராம சரித மனாஸ்” எழுதிய துளசி தாசை, சம்ஸ்கிருத இராமாயணத்தை பற்றி தேவபாஷையை தவிர, வேறொரு பாஷையில் எப்படி எழுதலாம் என்று கேட்டு, அவரை ஜாதியை விட்டு விலக்கி வைத்த ஆரியர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா? தன்னுடைய இறுதி நாள்களை துளசிதாஸ் ஒரு மசூதியில் கழித்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர்.
இவ்வாறாக, கஜினி, திப்பு சுல்தான். அவுரங்கசீப், ஷாஜஹான், பாபர் போன்ற இஸ்லாமிய மன்னர்கள் ஹிந்து எதிர்ப்பாளர்களாக ஆட்சி செய்யவில்லை என்பது தெளிவாகிறது. சில மன்னர்கள் மசூதிகளையும், கோயில்களையும் இடித்திருந்தாலும், அவற்றுக்கு மதம் முதன்மை காரணமாக இல்லை என்பதும் தெளிவாகிறது. ஆனால், ஹிந்துத்துவ குழப்பவாதிகளோ, முஸ்லிமல்லாத பெயர்களைக் கொண்ட இந்திய மன்னர்களை, ஹிந்துக்களுக்கு நன்மை செய்த ஹிந்து மன்னர்களாகவும், முஸ்லிம் பெயர்களைக் கொண்ட மன்னர்களை, ஹிந்துக்களுக்கு கெடுதல் செய்தவர்களாகவும், மதத்தின் அடிப்படையில் போலியாக சித்தரிக்கின்றனர். இதையே தான் பெரியார் எதிர்ப்பு தமிழ் தேசியவாதிகளும் செய்கின்றனர். மொழியின் அடிப்படையில் அண்ணாவை ஏற்றுக் கொள்வதாகவும், கலைஞரை எதிர்ப்பதாகவும் அறிவிக்கின்றனர். எல்லைப் போராட்டத்தில், ம.பொ.சி.யை ஏற்பதாகவும், பெரியாரை எதிர்ப்பதாகவும் அறிவிக்கின்றனர். தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டாற்றிய சான்றோர்களின் பங்களிப்பைக் கருத்தில் கொள்ளாமல், சான்றோர்களின் தாய் மொழி என்று இவர்கள் நினைப்பதை வைத்து, சிலரை ஏற்கின்றனர்; சிலரை எதிர்க்கின்றனர், காவிகளைப் போலவே!
ஜாதியை உருவாக்கியது யார்?
தீண்டாமையை உருவாக்கியது இஸ்லாமியர்கள் தான் என்பதே ஹிந்துத்துவ அமைப்பினரின் கருத்தாக உள்ளது. 1900 ஆண்டுகளுக்கு முன்பே தீண்டாமை இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. இஸ்லாம் என்று ஒரு மதம் உருவாகி 1400 ஆண்டுகள் தான் ஆகின்றது. பிறகெப்படி இஸ்லாம் தீண்டாமையை உருவாக்கியிருக்க முடியும்? அதே போல ஜாதி வேற்றுமைகளை உருவாக்கியது 400 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் நுழைந்த வெள்ளைக்காரர்கள் தான் என்றும் நம்புகின்றனர். ஆனால், 2600 ஆண்டுகளுக்கு முன், புத்தர் ஜாதி அமைப்பை எதிர்த்ததைப் பற்றிய எந்த வரலாற்று அறிவும் பார்ப்பன அடிமைகளுக்கு இருப்பதில்லை. மனு ஸ்ம்ருதியை ஆதரிக்கும் இந்த அடிமைகள், ஒருமுறை கூட மனுஸ்மிரிதியை படித்திருக்க மாட்டார்கள். இந்தியாவின் முதல் 5 மாட்டுக்கறி நிறுவனங்களும் பாஜகவினருடையது தான். ஆனால், நிறுவன பெயர்களோ இஸ்லாமிய பெயர்களாக இருக்கும். இந்த பெயர்கள், வெளிநாட்டில் இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், உள் நாட்டில் இஸ்லாமியர்கள் பசுக்களை கொன்று ஏற்றுமதி செய்கிறார்கள் என்ற பிம்பத்தை உருவாக்கவும் பயன்படுகின்றன. காந்தியைக் கொன்றவர்களே “இஸ்மாயில்” என்று தானே பச்சை குத்தி இருந்தனர்!!
“லவ் ஜிகாத்” என்ற பெயரில் இஸ்லாமிய ஆண்கள், ஹிந்து பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, அவர்களை முஸ்லிம்களாக மாற்றுகின்றனர் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை சங் பரிவாரங்கள் வைக்கின்றனர். ஹிந்து- முஸ்லிம் திருமணம் என்பதே மிகவும் அபூர்வமானது. லவ் ஜிகாத் என்று ஒன்று இருந்தால், முஸ்லிம் ஆணுக்கும், ஹிந்து பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணங்கள், அதிக எண்ணிக்கையில் இருந்திருக்க வேண்டும். ஆனால், உண்மை என்பது ஆர் எஸ் எஸ் சொல்வதற்கு நேர்மாறாக உள்ளது. முஸ்லிம் ஆணின் குடும்பத்தினரே இத்தகைய திருமணங்களை எதிர்ப்பதை பல இடங்களில் பார்க்கிறோம்!
இஸ்லாமியர் மக்கள் தொகை கூடுகிறதா?
மதமாற்றத்தின் மூலம் இஸ்லாமியர் எண்ணிக்கை கூடிவிட்டதாக காவி பயங்கர வாதிகள் கூறுகின்றனர். இது பாதி உண்மை; பாதி பொய். எப்போதுமே, பாதி உண்மை என்பது பொய்யை விட ஆபத்தானது. ஏனெனில், ஒரு பாதி உண்மை, மீதி பாதி பொய்யையும் உண்மையாக்கி விடும். இஸ்லாமியர் எண்ணிக்கை கூடியிருப்பது உண்மை தான். ஆனால் அதற்கு முதன்மை காரணம் மதமாற்றமல்ல. ஜாதி அமைப்பு தான் மதமாற்றத்துக்கு காரணம் என்று இவர்கள் பெரிதும் மதிக்கும் விவேகானந்தரே கூறியுள்ளார். (Collected Works of Vivekanandha தொகுதி 8).
இருந்தபோதிலும், இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு முதன்மைக் காரணம் மதமாற்றமல்ல; கல்வியறிவின்மையே முதன்மை காரணமாகும். கடந்த 50 ஆண்டு களில், கல்வியறிவு குன்றியிருக்கும் சமூகங்களின் மக்கள் தொகை விழுக்காடு கூடியிருப்பதையும், கல்வியறிவு மிகுந்திருக்கும் சமூகங்களின் மக்கள் தொகை விழுக்காடு குறைந்திருப்பதையும் காண முடிகிறது. உதாரணமாக, 1951இல் 7.5% ஆக இருந்த பழங்குடியினர் (ST), 2001இல் 8.5%ஆக உயர்ந்துள்ளனர். இதற்கு காரணம் மதமாற்றம் என்று கூற முடியுமா? தனித்து வாழும் பழங்குடியினரின் மதம் என்ன வென்றே பொதுச் சமூகத்தினருக்கு தெரியாத நிலையில், எப்படி மதமாற்றங்கள் நடக்க முடியும்? எனவே கல்வியறிவின்மையே மக்கள்தொகை பெருக்கத்துக்குக் காரணமாகும்.
இஸ்லாமியர்கள் 4 பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனரா?
1000 இஸ்லாமிய பெண்களுக்கு, 1068 இஸ்லாமிய ஆண்கள் உள்ளனர். ஒரு ஆண், ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் கூட, 68 ஆண்களுக்கு பெண்கள் இல்லாத நிலை தான் நீடிக்கும். ஒரு ஆண், 4 பெண்களை திருமணம் செய்து கொண்டால் என்னவாகும்? 250 ஆண்கள், 1000 பெண்களை திருமணம் செய்துகொண்டால், மீதி 750 ஆண்களுக்கு (75%) திருமணம் ஆகுமா? நம்மை சுற்றி வாழும் இஸ்லாமியர்களைப் பார்த்தாலே, 75% பேர் துணையில்லாமல் வாழ்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பது தெரியும். 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நிறைய பெண்களை திருமணம் செய்து கொள்வதில், ஆதிவாசிகள் முதலிடத்திலும், புத்தர்கள் இரண்டாம் இடத்திலும், ஜைனர்கள் மூன்றாம் இடத்திலும், ஹிந்துக்கள் நான்காம் இடத்திலும், இஸ்லாமியர்கள் அய்ந்தாவது இடத்திலும் உள்ளனர். அதாவது, இஸ்லாமியர்களை விட ஹிந்துக்கள் முன்னணியில் உள்ளனர். ஆனால், காவிகளின் கண்களுக்கு மட்டும், இஸ்லாமியர்கள் 4 பெண்களைத் திருமணம் செய்துகொள்வதைப் போல தெரிகிறது. இதுவரை நாம் பார்த்த வதந்திகள் மிகக் குறைவே! இன்னும் ஆயிரக்கணக்கான வதந்திகளை சனாதனவாதிகள் பரப்பியுள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம் வளராத காலகட்டத்திலேயே காவிகள் இவ்வளவு வதந்திகளை வெற்றிகரமாக பரப்பியிருக்கும் சூழலில், இன்றைய வாட்சாப், ஃபேஸ்புக் உலகத்தில், ஃபோடோஷாப் மூலம் இன்னும் பல்லாயிரக்கணக்கான வதந்திகளை பரப்புகின்றனர். நமக்கு வரக்கூடிய வாட்சப் செய்திகளை அப்படியே நம்பி, பிறருக்கும் அதை அனுப்பாமல், செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பிறருக்கு பகிர்வது நல்லது. ஏனெனில், பகுத்தறிவாளர்கள் மத்தியிலும் கூட, காவிகள் பரப்பிய செய்தி களின் தாக்கம் உள்ளது. சங் பரிவார் அமைப்பினர் என்ன என்ன பொய்களைப் பரப்பி யிருக்கிறார்கள் என்பதையும், அவர்களின் செயல் திட்டம் என்னவென்பதையும் நாம் புரிந்து கொண்டால் தான், மக்க்ளுக்கு உண்மைகளை எடுத்துச் செல்ல முடியும்.
‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் நிகழ்த்திய உரை