கீற்றில் தேட...

"பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ்" மூன்று பேரின் கனவுகளும் ஒரு புள்ளியில் இணையும் இடங்களே அதிகம். அது தான் இன்றைய பல்வேறு கட்டுகளில் இருந்து இந்த மானுட குலம் விடுபடும் இடம். சுய சிந்தனையே ஒருவரின் அறிவுபூர்வமான வளர்ச்சி என்பதை நான் இன்னும் பலமாக நம்ப காரணமாக இருந்தது இந்த மூவர் கூட்டணி தான். இந்த வாழ்வின் மீது சாதியும் சமயமும் எந்த இடத்தில் தன் பங்கை செலுத்துகிறது என்ற பெரிய வினாவை என்னை நோக்கி நானே கேட்க இவர்களே விதையாகி இருக்கிறார்கள்.

இவர்கள் மூவரின் தேவை முன்பை விட இப்போது தான் அதிகமாக இருக்கிறது. அத்தனை குளறுபடிகள் இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சகிக்க முடியாத அரசியல் கூத்துக்களை தவிர்க்க வேண்டுமானால்... டிஜிட்டல் அறியாமையை போக்க வேண்டுமானால்.... சாமி சமயம் வெட்டி சுமை என்று அறிய வேண்டுமானால்.... ஆன்லைனில் இவர்கள் மூவரும் வந்துதான் ஆக வேண்டும்.

அந்த வகையில் 'பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ்' சிந்தனைக்களம் வெகு நேர்த்தியாக...சுய நேர்மையாக... தன் இலக்கிய மற்றும் அரசியல் பணியை அறிவியல் பூர்வமாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பது பாராட்டப்பட வேண்டியது. அதோடு துணை நிற்பது நமது சமூக கடமை என்று கருதுகிறேன்.

'பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ்' சிந்தனைக்களம் தொடர்ந்து இணைய வழி கருத்தரங்குகளை நடத்திக் கொண்டிருப்பது பிரமிக்க செய்கிறது. அது அத்தனை சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு போராட்டம் தான். அந்த வகையில் அமைப்புக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்ளலாம். அதே நேரம் இன்று நாமும் 'பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ்' சிந்தனைக்களத்தில் கால சாட்சியாக 08.01.2022 ல் - சனி மாலை 7 மணிக்கு- இணைய வழி இலக்கிய நிகழ்வில் உடன் நின்றது... அன்புக்குரியது. நன்றிக்குரியது.

முதலில் இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த வில்வம் சார்... அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். மற்றும் தோழர்கள் அன்பர்கள் நண்பர்கள் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பாராட்டுகளும் பேரன்புகளும்.

பொங்கல் சிறப்பு நிகழ்வாக இன்றைய இலக்கிய விழா... இரண்டு அமர்வுகளாக இருந்தன.

முன்னதாக நல்லதொரு வரவேற்புரையை தோழர் "சித்தாரா" நிகழ்த்த... நிகழ்வுக்கு தலைமை தாங்கிய கல்வியாளர் தோழர் "காந்தி ஜெயந்தி" அவர்கள் இயற்கையோடு சேர்ந்த வாழ்வு முறை தான் இன்றைய தேவை என்று பேசினார். பொங்கலின் சிறப்புகள் பற்றி சிலாகிக்கையில்.... முன்பொரு காலத்து பொங்கலை விட்டு நாம் வெகு தூரம் நகர்ந்து விட்ட உண்மை சுட்டது. கால ஓட்டத்தில் மாறிக் கொண்டே இருக்கும் வாழ்க்கை முறையில்... நாம் நம் பாரம்பரிய கொண்டாட்டங்களை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று புரிந்து கொண்டோம். நற்சிந்தனையின் வழியே நயம் மிகு பேச்சு.

அடுத்து... நூல் உரைக்கும் நேரத்தின் முதல் நூலாக பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்" நூல் குறித்து கவிஞர் "சுகன் சேகுவேரா" பேசினார்.

முன்பே சொன்னது போல பெரியாரின் தேவை பெருமளவு இன்றும் தேவை என்பது தான் தீர்க்கம். பெரியார் பூமி என்பதாலேதான் தமிழ்நாட்டில் அது நிதானமாக சுழல்கிறது என்று சொல்லலாம். அந்த வகையில் நூல் குறித்து விரிவாக... செறிவாக பேசிய சுகன் சேகுவேராவின் சொல்லாடல்கள்... வெட்டு ஒன்னு துண்டு நான்கு என்பது போல தான். எதையும் நேரடியாக பேசி அதிரடி காட்டும்... ஆழ்ந்த படிப்பாளி... அன்பில் தேன் துளி... அரவணைப்பில் வான்வெளி...சதா சிந்திக்கும் சாக்ரடீஸ் பேரன்...கிடைக்கும் சந்தில் எல்லாம் அறம் பேசும் சண்டைக்காரன்... சுகன் சேகுவேராவின் பேச்சில் நம் சிந்தனைக்களம் இன்னும் விரிவாய் திறந்து கொண்டது என்றால் அது கொண்டாட்டம் தான். எப்போது எந்த தலைப்பில் பேச வாய்ப்பு கிடைத்தாலும் அதில் தன் அரசியல் முன்னெடுப்பை லாவகமாக வைத்து விடும் பாங்கு வாய்த்தவர் சுகன் சேகுவேரா. நிறுத்தி நிதானமாக ஆறு பந்துகளையும் ஆறாக்கி... காட்டறாக்கி ஓட விடும் சிவப்பு சிந்தனையாளர். மிக சாதுரியமாக இன்றும் கூட தனக்கு கொடுத்த தலைப்பை தரம் கெடாமல் மனம் சேர்த்து விட்டார். பேச்சுக்கள் தொடர வாழ்த்துகிறோம். பேசியவைகள் இன்னும் நம் காதில் ஒலித்துக் கொண்டிருப்பது காலத்தின் தேவை.

போராட்டம்... சிவப்பு சிந்தனை... உரிமை என்று மட்டுமே இருப்பதில் ஒரு வகையான இறுக்கம் சூழும் வாழ்வு தான் நமது. அதை அவ்வப்போது சுவாரஸ்யப்படுத்த "சிப்ஸ் உதிர் காலம்" மாதிரியான நூல்கள் குறித்தும்... பேச.... விவாதிக்க.... பகிர.... தேவை இருக்கிறது. அதன் வழியே கவிஜியின் சிப்ஸ் உதிர் காலம் நூல் குறித்து.... இயல்பின் வழியே இலக்கியம் செய்யும் அன்பின் பிள்ளை...சக மனிதர்கள் மூலம் தன் இருப்பை நிகழ்த்தும் பக்கத்து வீட்டு முல்லை...வெள்ளந்தி மனுஷி.... பெண்ணியத்தை சரியாக புரிந்து கொண்ட வீட்டரசி.... தோழி...கதை சொல்லி... பூங்கொடி பேசினார்.

பூங்கொடியை பற்றி வழக்கமாக நான் சொல்வது தான். கொடுத்த வேலைக்கு உண்மையாக இருப்பதை பூங்கொடியிடம் கற்றுக் கொள்ள வேண்டும். எடுத்துக் கொண்ட செயலுக்கு நேர்மை செய்வது அவரின் குணமாகவே இருக்கிறது. அதன் போக்கில் சிப்ஸ் உதிர் காலத்தில் மீண்டும் என்னை நிற்க வைத்து விட்டார். பால்ய நினைவுகளே பெரும்பாலைய எழுத்துக்களின் ஆரம்ப சொற்கள். அதிலிருந்து மெல்ல மேலெழும்புவது தான் உலக இலக்கியங்கள் என்றால் அதில் உண்மை உண்டு. அந்த வகையில் என் எழுத்துக்களின் வழியே அவர் கண்டைந்து... காட்டிய காலத்தில்... நொறுங்க மணக்கும் சிப்ஸ்கள் மட்டும் அல்ல... ஒரு குட்டி பையனின் தூரத்து நிலவுகளும் சூரியன்களும் தான். ஈர மண்ணும் பார உணர்வுகளும் தான்.

தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் வார்த்தையில் நடனமிடும் பூங்கொடிக்கு இன்னும் பெரிய மேடைகள் காத்திருக்கின்றன.. வாழ்த்துவோம்.

இருவேறு துருவங்களின் தனித்தன்மையில் பளிச்சிட்டு பூத்து குலுங்க... நூல் உரைப்போம் பகுதி நிறைவடைந்தது.

அடுத்து அதே வேகத்தோடு கவிதை அரங்கேறும் நேரத்துக்குள் சென்று விட்டோம். கவிதையும் கதையும் காலத்தின் இரு கைப்பிடிகள். அதன் வழியே நிகழ்வது தான் பரிணாமம். நிகழ்ந்து கொண்டிருப்பது தான் பண்பாட்டு தத்துவம். ஆக... கதையும் கவிதையும் இரு கண்கள் என்றாலும் தகும். இரு கைகள் என்றாலும் மிகா. கவிதை என்பது என்ன என்று கேட்டால் அதை சட்டென ஒற்றை வரியில் சொல்லி விட இயலாது. ஒவ்வொரு வரியிலும் சொல்லலாம் என்பது என் முயற்சி. கவிதை என்று சொல்லும் போதே உள்ளுக்குள் எதுவோ செய்கிறது இல்லையா...அது தான்.. கவிதையின் மகத்துவம்.

கவிதை ஒரு கொண்டாட்ட மனநிலை. அதற்குள் ஆசை.. அன்பு.. சோகம்.. சுகம் எதுவும் இருக்கலாம். கவிதை என்பது ஒருவகை உணரல்... ஒரு வகை எண்ணம்.. ஒரு வகை புரிதல். ஒரு வகை உள்ளீடு.. ஒருவகை வெளிப்பாடு. கவிதை என்பது சாதாரணமானது அல்ல. அது ஓர் ஆயுதம். அது ஒரு வெளிப்பாடு. அது ஓர் எதிர்வினை. ஆக கவிதையையும் கத்தி போல தான் கையாள வேண்டும்.

அந்த வகையில் நம் கவிஞர்கள் அவரவர் பாணியில் கவிதை பாடி அசத்தினார்கள். கவிதை அரங்கேறும் நேரத்தில் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு கருத்தில் நம்மை மிரள செய்தது.

முதலில் நாம் அழைத்தது... ஒரு பக்கம் இல்லத்தரசி... இன்னொரு பக்கம் இலக்கியத்தில் அரசி. சிறந்த படிப்பாளி. புதுக்கவிதையில் புதுமை செய்யும் அதே அளவுக்கு மரபிலும் மாற்றி யோசிப்பவர். கவியரங்கம்... நூல் ஆய்வு என்று இலக்கிய உலகத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்... அக்கா 'கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி' அவர்களைத்தான். வழக்கம் போல வாழ்வியல் நுட்பம் தெறிக்கும் சொற்கள். இயல்பின் நடப்பில் கிடைக்கும் வாக்கியம்... என்று அட்டகாசப்படுத்தினார். அடுத்து கவிதையில் மட்டும் அல்ல... வாழ்விலும் சொற்களை அடுக்கினாற் போன்ற நிதானம் உள்ளவர்.. ஒவ்வொரு சொல்லுமே அகத்தில் இருந்தே எழும்பும் அன்பின் மானுடர்.. தம்பி ஜெய் அவர்கள் கவிதை வாசித்து அமர்க்களப்படுத்தினார். அடுத்து கிராமத்து குயில்... கெணத்து வெயில் தம்பி காதலாராவை கவிதை வாசிக்க அழைத்தேன். ஈர சொற்களில் பாலை நினைவுகள்.

அடுத்து பேரன்பின் வடிவம்...சின்ன சின்ன விஷயங்களிலும் கடவுள் காட்டும் அன்பர் மணி அமரன் கவிதையை நானே வாசித்தேன். கண்ணகியின் கோபம் வாங்கி வா...என்று தலைப்பில் இருந்தே உள்ளிருக்கும் சமூக கோபத்தை...நெல்லை மொழியில் நெல் மணி உதிரல் போல ஒவ்வொரு வரியிலும் உணர்ந்தோம். அடுத்து பேராயுதமே மொழி... கூராயுதுமே கவிதை..... என்று நெருப்பு சுமந்தலையும்...டியர் கோபி சேகுவேரா கவிதை வாசித்தார். சமகால அரசியல் பார்வை.. சமூக பகடி என்று தனக்கான மொழியில் தாண்டவம் தான் எப்போதும். இப்போதும்... அப்படியே. அடுத்து அன்பின் அபின்... குடை வேண்டாத மழை... மழையை துளிகளில் கவிதை சொட்ட அழைத்தேன். மெல்லின மேற்பரப்பில் மெய் சிலிர்க்க கொட்டும் மே மாதமும் புது மழை. அப்படி தான் மழையின் கவிதையும்.

அடுத்து உள்ளே புகுந்து கொண்ட கவிதை நெருப்பை ஒரு போதும் அணைய விடாமல்... நேர்த்தியின் வழியே சுடர் காக்கும் தோழர் மகேஷ் சிபி கவிதை வாசித்தார். இலைகளின் இசைவென இளங்காற்றின் அசைவென தோழரின் கவிதைகள். இயங்குதலே உலக நியதி. அடுத்து வாக்கியத்தின் வழியே எளிமையை கண்டு பிடிக்கும் யுக்திக்காரி... அறிவின் சாரலை வரிகளில் தெளித்து விடும் பேரன்புக்காரி... தோழி சரவண கார்த்திகா கவிதை வாசிக்க... குரல் வழியே அருள் வந்தது கவிதைக்கு. அத்தனை அழகு. அடுத்து கவிதைகளின் வழியே உறவானவர்... கவிதைகளால் உருவானவர் என்றும் சொல்லலாம்.. அன்பன்.. விவெவை கவிதை வாசிக்க அழைத்தேன். சின்ன சின்ன வளைவுகளில் சித்திரம் வரைந்து விட்டு ஓடி விடும் ஓவிய விரல்கள் விவெவின் கவிதைகள். தொடரட்டும் சித்திர சுவர்கள்.

அடுத்து என்னை பற்றி நானே என்ன சொல்ல.. என் கவிதை சொல்லட்டும்... என்று என் கவிதையை நானே வாசித்தேன்.

அடுத்தவனுக்கும் சேர்த்து...போராடு

****************************************************

சிலுவையில் அறைந்த

பிறகுதான் முழுமையானார்

'ஏசு'...

பதவியைத் துறந்த பிறகுதான்

'புத்த'ரானார்

சித்தார்த்தன்...

மகானுக்கே விட்டுக்

கொடுப்பதில்தான்

மனிதம் ஆனார் 'அம்பேத்'...

அடுத்த செருப்பையும் அள்ளிக்

கொள்கையில்தான் இன்னும்

பெரியவர் ஆனார் 'பெரியார்'...

ஆஸ்துமாவிலும் சோசலிசம்

கற்கையில்தான்

சுதந்திரம் புரிந்தது 'சே' வுக்கு...

வயது ஒன்றுமே இல்லை

செத்தும் வாழ...என்கையில்

'பகத்' கிடைத்தார்

விஷம் சாகட்டும் என

சாகையிலும் புது கேள்வியோடு

சமூகம் திறந்தார் 'சாக்ரடிஸ்'...

சரி, இன்னமும் ஆத்தாவுக்கு

மண் சோறு தின்பவனை

விட்டுவிட்டா போக முடியும்..

அள்ளி அணை தோழா.....

கவிதை அரங்கேறும் நேரமும் முடிய நிகழ்வு முடிவடையும் நேரத்தில் ஒரு திருப்தி வந்திருந்தது. இணைய வழியில் இலக்கியம் செவ்வனே வளர அருள் பெற்றோம். தொடர்ந்து இயங்குதலே நம்மை நாம் கண்டடையும் வழி. அதன் வழியே தான் வாழ்வின் அர்த்தம் முழுமை அடைகிறது.

கரகாட்டம் கோயில் வாசலில் வண்ணம் பூத்து கன்னம் சிவந்திருக்கும். எம்மதமும் சம்மதம் தான் ஊர் கூடி பானை நிரம்பும் பொங்கலுக்கு.

பிழைப்பு தேடி போனோர் எல்லாம்... களைப்பு நீங்க அவரவர் ஊரில் இருப்போம். மனம் நிரம்பித் தத்தளிக்கும். புன்னகை உடல் மொழி. பூமணம் தேன் குணம்.

கரகாட்டம் பார்த்துக் கொண்டே நண்பர்களோடு ஒரு வருட கதை பேசுவோம். வருட வரும் காற்றுக்கும் ஈர மனம் துளிர்த்திருக்கும். வாசலில் கரும்பு நிற்க... வாழ்க்கையே அருமை ஆகும். வாசலில் கோலமிட வசந்தமே அருகில் வரும். காரணமின்றியும் கால்கள் நடை போடும். காவியமின்றியும் காலம் புது உடை தேடும்.

கரகாட்டம்... சினிமா.... நாடகம்....நடன நிகழ்ச்சி... ஆர்கெஸ்டரா.... விளையாட்டு நிகழ்ச்சிகள்... சட்டி உடைக்கும் போட்டி... கோல போட்டி... ஓட்டப்பந்தயம்... பலூன் உடைத்தல்...ஸ்பூனில் லெமன் வைத்து ஓடுதல்... சாக்கு பை ஓட்ட பந்தயம்.... என்று ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு நிறம். ஊர் கூடி இழுக்கும் தேருக்கு உள்ளிருக்கும் கடவுள் பொது. பொங்கல் என்றாலே பொங்கும் எண்ணம் தான். கிட்டத்தட்ட நிகழ்வு முடியும் தருணம். முதல் அமர்வில் உரைத்த கதைகளும் சரி.. இரண்டாம் அமர்வில் உணர்ந்த கவிதைகளும் சரி.. காலத்தின் தேவை என்றே நம்புகிறேன். முன்பே சொன்னது போல கதைகளின் வழியே கவிதைகளின் வழியே இலக்கியம் படைப்பது வாழ்தலின் வழியே மானுட முறைமைகளை கற்றுக் கொள்வது.

அறம் சார்ந்து யோசிக்க... ஆழ் மனதோடு நேசிக்க.... காலத்துக்கும் இலக்கியம் தேவை. அதன் வழியே அரசியல் மாற்றமும் சமூக சிந்தனையும் கூடும் என்பது திண்ணம்.

தோழர் கதிரவன் அவர்கள் இணைய ஒருங்கிணைப்பை செய்ய...தோழர் நிலா நன்றியுரை வழங்கினார்.

அமைப்பாளர்கள் தோழர்கள் சூரியமூர்த்தி... வில்வம்... கதிரவன்... நந்தகுமார்... விஸ்வநாதன் மற்றும் கவிஞர்கள்.. நண்பர்கள் அன்பர்கள்... பேச்சாளர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்த 'பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ்' சிந்தனை களத்துக்கும்... வில்வம் சார் அவர்களுக்கும் இன்னொரு முறை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்வுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

மீண்டும் இன்னொரு அற்புதமான நிகழ்வில் சந்திப்போம்.

- கவிஜி