தமிழகத்தில் கொரானா தொற்று காரணமாக மார்ச் 24 முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு 100 நாட்களைத்தாண்டி விட்டது. நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் எப்போது இயல்பு நிலை வரும் என்பது தெரியாது. தமிழகத்தில் உள்ள முக்கிய தொழிலான நெசவு, பட்டாசு, தீப்பெட்டி, மீன்பிடி கட்டுமானம் ஆயத்த ஆடை தயாரிப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் பணி முடங்கிப் போய் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் வட்டிக்கு கடன் வாங்கி சமாளித்து வருகின்றனர். அன்றாடத் தேவைகளுக்கு ஏழை, எளிய நடுத்தர மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் இச்சூழலில் மக்களை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய-மாநில அரசுகளின் கடமையாகும்.
எனவே மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் இந்த கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக செயல்படும் மத்திய மாநில அரசுகளை அனைத்து பெண்கள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. அதே நேரத்தில் அமைப்பு முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக அடுத்து வரும் நான்கு வாரம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் போஸ்டர்கள் வெளியிட்டு ஆன்லைன் போராட்டத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
1) பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக
ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் பல மடங்கு அதிகரித்து இருப்பது தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் தமிழக பெண்கள் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஜிபி திரு. ரவி மார்ச் 25 முதல் மே 31 வரை 13, 447 வழக்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளார். குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு சம்பந்தமாக 372 வழக்குகள் பாக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அறிக்கையில் அறிவித்துள்ளார். இன்னும் ஏராளமான வழக்குகள் காவல்துறையின் கவனத்துக்கு வராமலேயே உள்ளன. பாதிக்கப்படுபவர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ வழக்கு பதிவு செய்தால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை முன்வரவேண்டும் என அனைத்துப்பெண்கள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
பாக்சோ சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து கண்காணிப்புக் குழுவை அமைத்திடு! குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு தண்டனைகளை கடுமையாக்கிடு! மேலும் வன்முறைகளை தடுக்கும் ஏற்பாட்டில் தமிழகத்தில் உள்ள பெண்கள் அமைப்புகளையும் பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் வன்முறைகளை தடுத்து நிறுத்திட வேண்டுமாய் அனைத்து பெண்கள் சார்பாக வலியுறுத்துகிறோம்.
2. பொதுவிநியோக முறையை பலப்படுத்துக
கடந்த 3 மாதகாலத்தில் 12 கோடிக்கு மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். ஏற்கனவே ஜூலை மாதம் வரை ரேஷன் கடைகள் மூலம் சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில், அரிசி ஆகிய 4 பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டது. மேலும் ஜூலை மாதம் வரை தான் விலையில்லாத பொருட்கள் என தமிழக உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேற்கண்ட பொருட்கள் மட்டும் ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இருக்காது. எனவே பருப்பு, கடுகு, மிளகு, ஜீரகம், புளி, வத்தல் உள்பட 21 வகையான அத்தியாவசியப் பொருள்கள் கொண்ட ஒரு தொகுப்பை இலவசமாக டிசம்பர் மாதம் வரை வழங்க வேண்டும். ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்களுக்கும் இலவச பொருட்கள் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறோம்.
3. நுண் நிதி நிறுவனங்கள்
தமிழகம் முழுவதும் பல நூற்றுக்கணக்கான நுண் நிதி நிறுவனங்கள் செயல்படுகிறன. அவை குழுக்கள் மூலம் பெண்களுக்கு கடன் கொடுத்து வட்டியுடன் வசூலித்து வருகின்றனர். குடும்ப செலவுகள், கல்வி, மருத்துவம், சுகாதாரம், விவசாயம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக கடனை பெற்று வட்டியுடன் முறையாக கட்டி வருகின்றனர். சமீபகாலமாக நோய் தொற்றின் காரணமாக வேலையிழந்து வருமானம் இல்லாத சூழ்நிலையில் வாங்கிய கடனை வட்டியுடன் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (ஆர்பிஐ) ஆகஸ்ட் 31 வரை கடன் தவணையை வசூல் செய்யக்கூடாது வட்டியும் வசூல் செய்யக்கூடாது என அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பல மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இந்திய ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கக்கூடிய அறிவிப்புகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள்.
இருந்த போதிலும் அடியாட்களை பயன்படுத்தியும், குழு தலைவர்களை பயன்படுத்தியும் இரவு 11 மணி வரை வீட்டில் உட்கார்ந்து கடனை வசூல் செய்வதற்கு கடுமையான நடவடிக்கைகளை நுண் நிதி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதாகும்.
எனவே தமிழக அரசு கட்டாய வசூல் செய்யும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பிரச்சனைகள் குறித்த வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு அதிகாரிகளை மாவட்டம் தோறும் நியமித்து நுண் நிதி நிறுவனங்கள் குறித்து வரும் புகார்களை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசு வங்கிகள் மூலம் குழு கடன் வழங்குவதை அதிகரித்து நுண்நிதி நிறுவனங்களை தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
4. அரசியல் கைதிகளை விடுதலை செய்
ஜனநாயக நெறிமுறைக்கெதிராக பொதுமக்களும், அரசியல் மற்றும் ஜனநாயக செயல்பாட்டாளர்களும் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என மத்திய மாநில அரசுகளை அனைத்து பெண்கள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
குறிப்பாக தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக, சிஏஏவுக்கு எதிராக, கொரானா காலத்தில் நிவாரணம் வேண்டுமென்ற கோரிக்கைகளுக்காக, தொழிற்சங்கச் சட்டம் திருத்தப்படுவதற்கெதிராக, அத்தியாவசிய பொருட்கள் மீதான தடையை நீக்கிய அவசர சட்டத்துக்கு எதிராக என ஏராளமான அரசின் மக்கள் விரோத அறிவிப்புகளை எதிர்த்து ஜனநாயக ரீதியான போராட்டத்தை நடத்தும் போது பல மாவட்டங்களில் பலர் கைது செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து பெண்கள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமையும், போஸ்டர்கள் வெளியிட்டு ஆன்லைன் போராட்டங்கள் மூலம் அரசுக்கு வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் பெண்உரிமை , மனித உரிமை செயல்பாட்டாளர்கள், மற்றும் ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் ஆதரவு தரும்படி அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
போராட்டத்திற்கு ஆதரவு தரும் தோழமைகள்:
1. வசந்தி தேவி - கல்வியாளர்
2. R. வைகை - வழக்கறிஞர்
3. B.S அஜிதா - வழக்கறிஞர்
4. சுதா ராமலிங்கம் - வழக்கறிஞர்
5. D அரிபரந்தாமன் - Retd Justice
6. பாலபாரதி - முன்னால் சட்ட மன்ற உறுப்பினர்
7. மங்கை - நாடகவியலாளர்
8. ஓவியா புதியகுரல்
9. லீனா மணிமேகலை - எழுத்தாளர்
10. சுந்தரவள்ளி - தமுஎகச
11. தீபா - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
12. அஸ்வினி - அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்(AIYF)
13. திருமுருகன் காந்தி - மே17
14. சுந்தர்ராஜன் - பூவுலகின் நண்பர்கள்
15. வ. கீதா - எழுத்தாளர்
16. தீபக் நாதன் - டிசம்பர் 3
17. கிருஷ்ணவேணி - தீண்டாமை ஒழிப்பு முன்னனி
18. ஆதவன் தீட்சண்யா - தமுஎகச
19. ஆழி. செந்தில்நாதன் - தன்னாட்சி தமிழகம்
20. நித்யா - கலை இலக்கிய பெருமன்றம் இராஜபாளையம்
21. தோழர் ப்ரியா பாபு - திருநங்கைகள் ஆவண மையம், மதுரை
22 மீனாக்ஷி - Equals, Chennai
23. ராஜீவ் ராஜன் - செயற்பாட்டாளர், Chennai
24. பிருந்தா அடிகே - செயற்பாட்டாளர், Bengaluru
25. கவிதா ராஜமுனீஸ் - மதுரை
26. ஆனந்தி - இன்னர் வீல் கிளப் -சென்னை விருக்க்ஷம்
27. கவிதா - அனைத்து இந்திய புரட்சிகர பெண்கள் அமைப்பு
28. ம. சேகர் - தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்
29. முனைவர் சுப செல்வி - குறிஞ்சி மகளிர் இயக்கம் கோவை
30. சந்திரிகா - தொழிலாளர் கூடம்
31. இரவிபாகினி ஜெயநாதன் - பொதுவுடைமை இயக்கம்
ஆதரவில் இணைய விரும்பும் தோழர்கள் கூட்டமைப்பு தோழர்களை தொடர்புகொள்ளவும்.
- அனைத்து பெண்கள் கூட்டமைப்பு
90805 35115 - 98406 51361