vennila_book_release_640

சென்னை.ஜன.12. அகநி வெளியீட்டகத்தின் சார்பில் கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய 'பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும்' சிறுகதை நூல் வெளியீட்டு விழா சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்வியாளர் ஆண்டாள் கிள்ளிவளவன் தலைமையேற்றார். பதிப்பாளர் மு.முருகேஷ் அனைவரையும் வரவேற்றார்.

அ.வெண்ணிலா எழுதிய சிறுகதை நூலை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட, ஆனந்தி சீனிவாசனும், பத்திரிகையாளர் கவிதா முரளிதரனும் பெற்றுக் கொண்டனர்.

நூலைப் பெற்றுக் கொண்ட பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் பேசுகையில், ‘இன்றைக்கு எழுதுகிற பெண்கள் பெண் உறுப்புகள் குறித்தும், பாலியல் குறித்து மட்டுமே எழுதுவதாக சிலர் பேசுகிறார்கள். பெண் இந்த சமூகத்தின் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகிறாள். இது பற்றி பெண்கள் எழுதுவதைப் படிக்க வேண்டும். விரிந்த தளத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட வேண்டும். இளம்வயதில் பெண் குழந்தைகள் படுகிற பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை இந்த தொகுப்பிலுள்ள வெண்ணிலாவின் கதைகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன’ என்று பேசினார்.

நூலை வெளியிட்ட கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், ’ஒரு உயிர் நம் சமுதாயத்தில் பெண்ணாய் பிறந்ததாலேயே படுகிற பெண் பிறப்பின் வலியை இன்றைக்கு எழுதுகிற பெண் எழுத்தாளர்கள் வெகுநுட்பமாக பதிவு செய்து வருகிறார்கள். பெண் குழந்தையாய் வீட்டிலும், கல்விக் கூடங்களிலும், பணி செய்யும் இடத்திலும் சக ஆண் நண்பர்களோடு தோழமையோடு பழகினாலும், அவளது உடலின் மீது ஆண் என்கிற ஆணாதிக்க உணர்வோடு ஏற்படுத்துகிற பாலியல் வன்முறை இன்னமும் வெளியே சொல்லப்படாத வலியாக உள்ளது.

இன்றைக்கு இந்தியா முழுக்க பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் நடக்கிற துயரமாக நம்மை பெருங்கவலை கொள்ள வைக்கின்றன. இந்த சூழலில் வெளிவரும் வெண்ணிலாவின் இந்தத் தொகுப்பு இது குறித்த மிகுந்த அக்கறையோடு நம்மை பேச வைக்கின்றது. வெண்ணிலாவின் சிறுகதை இதுவரை தமிழில் பெரிதும் கவனப்படாத திருவண்ணாமலை மாவட்டத்து நெசவாளர்கள் குடும்பத்துப் பெண்களின் வாழ்வியல்பாடுகளை உயிர்த் துடிப்போடு நம் கண்முன்னே காட்சிப்படுத்தியுள்ளது. இந்தக் கதைகள் நம்மிடம் கோருபவை அன்பையும், சக மனுஷி என்கிற பால் அடையாளமற்ற நேசத்தையும்தான்’ என்று குறிப்பிட்டார்.

விழாவில், டாக்டர் பிருந்தா, புதுவை வானொலி நிலைய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உமாமோகன், இரத்தினம்மருது, இயக்குனர்கள் ஜெயராமன், பாரதிஜிப்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிறைவாக, கவிஞர் அ.வெண்ணிலா ஏற்புரையாற்றினார்.

- மு.முருகேஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It