ஏப்.27. அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் கவிஞர் வசீகரன் எழுதிய ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழாவில், வேற்றுமைகளால் பிரிந்து கிடக்கிற மனித மனங்களை இலக்கியத்தின் வழியே இணைக்கிற பணியை படைப்பாளர்கள் செய்திட முன்வர வேண்டும் என்று அகநி வெளியீட்டகத்தின் இயக்குநரும் கவிஞருமான மு.முருகேஷ் கேட்டுக் கொண்டார்.

vaseegaran book release

இவ்விழாவிற்கு தொழிலதிபர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். ச.மகாலெட்சுமி அனைவரையும் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் வ.விஜயன், நல்வழிகாட்டியின் வந்தவாசி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வெ.ஹரிகிருஷ்ணன், கவிஞர் பிரகாஷ் கார்க்கி, இர.கார்த்திகேயன், து.ரகுநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னையைச் சேர்ந்த கவிஞர் வசீகரன் எழுதிய ‘ பற...பற...’ ஹைக்கூ கவிதை நூலை வந்தவாசி ரோட்டரி சங்கத் தலைவர் அ.ஜ.இஷாக் வெளியிட, வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் பெற்றுக் கொண்டார்.

கவிதை நூலை அறிமுகம் செய்து கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது, சங்க கால தமிழ்க் கவிதை மரபு சார்ந்ததாய் இருந்தது. மகாகவி பாரதி போன்ற சிறந்த தமிழ்க் கவிஞர்களால் தமிழ்க் கவிதை புதிய வீச்சினை அடைந்தது. இன்றைக்கு மரபுக்கவிதை, வசன கவிதை, புதுக்கவிதை என தமிழ்க் கவிதை புதுப்புது வடிவங்களில் எழுதப்படுகின்றன.

இன்றைக்கு எழுதப்படும் ஹைக்கூ கவிதைகள் ஜப்பானியர்களால் உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டவை. மூன்றே வரிகளில் இயற்கை அழகும், வாழ்வியல் பதிவுமாய் வாசிப்பவரை வசீகரிப்பவை ஹைக்கூ கவிதைகள். 2007-ஆம் ஆண்டில் உலக ஹைக்கூ கிளப்பின் ஒன்பதாவது உலக மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தமிழகப் பிரதிநிதியாக நான் கலந்துகொண்டேன். அம்மாநாட்டில் இடம்பெற்ற கண்காட்சியில் வைக்கப்பட்ட நூல்களை ஒப்பீடு செய்து பார்க்கையில், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான ஹைக்கூ கவிஞர்களும், ஏராளமான ஹைக்கூ நூல்களும் வெளிவருகின்றன என்பது தெரிய வந்தது. இது நம் தமிழ் மொழியின் வளத்தை காட்டுவதாய் அமைந்திருக்கிறது.

கவிஞர் வசீகரனின் ஹைக்கூ கவிதைகள் மூன்றே வரிகளில் சுருக்கென மனதைத் தைக்கின்றன. இவ்வுலகில் அழிந்து வருகிற பறவையினம் குறித்த ஆழ்ந்த அக்கறையுடன் எழுதப்பட்டுள்ள கவிஞர் வசீகரனின் இந்த ஹைக்கூ கவிதைகள், மொழி கடந்தும் பேசப்படும் கவித்துவ செறிவுமிக்கவை என்று பேசினார்.

கவிஞர் வசீகரன் ஏற்புரையாற்ற, நிறைவாக, கு.கல்பனா நன்றி கூறினார்.

Pin It