ஜாதி ஒழிப்பு கண்காணிப்பு (Caste Annihilation Watch) என்கிற பெயரில் (இது தற்காலிகமான பெயர்தான், தேவையிருப்பின் மாற்றிக் கொள்ளலாம்) தமிழகத்தில் நடைபெறும் ஜாதியம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் தொடர்ந்து கண்டறிந்து, அலசி, ஜாதியத்துக்கு எதிராக என்ன செய்யவேண்டும் என்பதை செயல்திட்டங்களாக உருவாக்குவது இதன் முதல் நோக்கமாகும். பின் இரண்டு பிராதன களங்களில் அந்த செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த உழைப்பது இதன் இரண்டாவது நோக்கமாகும்.

இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அரசுகளையும் நடைமுறைப்படுத்த போராடுமாறு அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் கேட்டுக்கோள்வதே இந்த அமைப்பின் வழிமுறையாகும். அதாவது இந்த அமைப்பு ஒரு முன்மொழிகை அமைப்பாக (Advocacy) இயங்கும்.

மேலை நாடுகளி்ல் இதுபோன்ற Advocacy அமைப்புகள் அரசு, சிவில் சமூகம், மீடியா, கல்வித்துறை போன்ற எல்லாத்துறைகளின் மீதும் வலுவான தாக்கங்களை செய்துவருகின்றன. அதைப்போன்ற ஒரு அமைப்பாக இது இருக்கலாம். இவ்வாறு இந்த அமைப்பை முன்மொழிவதின் நோக்கம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமான மக்களை இதில் இணைத்து ஜாதிவெறி சங்கங்களுக்கு எதிராக அணிதிரள்வதும் அணி திரட்டுவதுமே ஆகும். மாறாக இது மற்றுமொரு அரசியல் கட்சியோ அமைப்போ குழுவோ அல்ல. இந்த முன்மொழிகை அமைப்புக்கு ஒரே ஒரு இலக்குதான் உண்டு: ஜாதியை ஒழிப்பதற்கான வழிவகைகளை உருவாக்கி அளிப்பது. எனவே இந்த விஷயத்தில் இது எந்த சமரசமும் செய்துகொள்ளவேண்டிய தேவையும் இருக்காது.

ஜாதி ஒழிப்பு (Caste Annihilation) என்கிற தொடர் அடிப்படையில் ஓர் அம்பேத்கரிய தொடராகும். ஜாதியை முற்றிலும் ஒழிக்கமுடியாது என்பதே யதார்த்தம் எனக் கருதப்படுகிற நிலையில் அம்பேத்கரின் இந்த வாசகத்துக்கு நாம் முக்கியத்துவம் தரவேண்டியவர்களாக இருக்கிறோம். தந்தை பெரியாரின் செயல்பாடுகளிலும் எப்போதுமே ஜாதி ஒழிப்புதான் பிரதானமாக இருந்துவந்திருக்கிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதி, சமூக நல்லிணக்கம் போன்ற தொடர்கள் அதன் பிறகு நடைமுறையில் உருவான தொடர்களாகும். அவற்றுக்கான தேவையும் சூழலும் அரசியல் ரீதியில் இன்னமும் இருப்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் எழுந்துவரும் வெளிப்படையான, அதீதமான ஜாதிவெறி சங்கங்களை எதிர்கொள்ள அந்த முழக்கங்கள் போதாது. நாமும் அதீதமான, உயரிய இலக்கையே ஜாதியத்துக்கு எதிராக வைக்கவேண்டும். அதன் வெற்றி தோல்வி குறித்து அதிகம் கவலைப்படத்தேவையில்லை. கோட்பாடுகளையும் வியூகங்களையும் வகுப்பதற்கு நாம் முக்கியத்துவம் தருவோம். நடைமுறையில் அதன் செல்வழி குறித்தும் நாம் கவலைப்படுவோம். ஆனால் லட்சியவாதம் என்று கூறப்பட்டாலும், அடிப்படை கொள்கைகளை உருவாக்கவதற்கான சிந்தனை முடங்கிவிடக்கூடாது. பாசிஸ்டுகளுக்கு எதிரான யுத்தத்தில் ஜனநாயகம் என்பதுகூட அதீத கனவாகவும் யதார்த்தமில்லாததாகவும் தெரியும். ஆனால் ஜனநாயகத்தைவிட குறைந்தபட்ச திட்டம் வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

தீண்டாமை ஒழிப்பு, தலித் மக்களின் உரிமைகள் மற்றும் உடைமைகளுக்கான பாதுகாப்பு, சாதி மறுப்பு திருமணங்கள், தலித் அரசியல், தலித் பொருளாதாரம், சமூக நீதி திட்டங்களின் தொடர்ச்சியும் மாற்றங்களும், இட ஒதுக்கீடு, எண்ணிக்கைச் சிறுபான்மை காரணமாக போதிய அளவுக்கு பலனடையாத சமூகங்களுக்கான சிறப்புத் திட்டங்கள், பார்ப்பனீய மற்றும் ஜாதிய சமூக-கலாச்சார செயல்பாடுகளுக்கு எதிரான செயல்பாடுகள், அரசியல் சாசனத்துக்கு வெளியே உள்ள எல்லா அமைப்புகளிலும் (மீடியா, கல்வி போல) நிலவும் பார்ப்பனீய மற்றும் ஒற்றை-ஜாதிய ஆதிக்கங்களுக்கு எதிரான செயல்பாடுகள், தனியார் துறையில் இட ஒதுக்கீடு அல்லது அதையொத்த உறுதிப்பாட்டு நடவடிக்கைகள் (Affirmative Actions), ஜாதியத்தை உடைக்கக்கூடிய சமூக-பொருளாதார நோக்கில் ஒவ்வொரு பொருளாதார செயல்பாடுகளையும் வர்த்தக செயல்பாடுகளையும் பார்த்தல், யதார்த்தம் என்கிற பெயரில் கலை, இலக்கிய வடிவங்களில் ஜாதியம் மேலும் மேலும் இறுக்கமுறுவதை கலை, இலக்கியம் சார்ந்து எதிர்கொள்ளுதல், உலகமயமாதல்- தாராளமயமாதல் நடவடிக்கைகள் ஜாதியத்துடன் கொண்டுக்கும் சாதக, பாதக உறவுகளை அலசுதல், தலித், பெண்ணிய, இடதுசாரி, திராவிட, தமிழ் தேசிய அமைப்புகளுடன் ஜாதியம் தொடர்பான விவாதங்களை மேற்கொள்ளுதல், எல்லா நேர்வுகளிலும் பெண்ணிய நோக்குடனும் விளிம்பு நிலை நோக்குடனும் ஜாதிய பிரச்சனையை அலசி முடிவெடுத்தல் என பலவிதமான களங்களில் ஜாதி ஒழிப்பு கண்காணிப்பு அமைப்பு செயல்பட முடியும்.

இங்கே கண்காணிப்பு என்பது களப்பணி ஆய்வு முடிவுகளாக மட்டுமே முன்வைக்கப்படவில்லை. இது மேலுமொரு உண்மை அறியும் குழு அல்ல. மாறாக தொடர்ச்சியான பரவலான செயல்பாடுகளை உள்ளடக்கியது. உதாரணமாக, தமிழ்நாட்டில் எங்கெங்கே இரட்டை குவளை முறைகள் நிலவுகின்றன என்பதை கண்டறிய தமிழகம் தழுவிய சர்வேயை நடத்த இந்த குழுவி்ன் உறுப்பினர்கள் மிகச்சுலபமாக இணைந்து செயல்படமுடியும். அல்லது தாங்கள் பணிபுரியும் ஒரு தனியார் நிறுவனத்தில் எவ்வளவு தலித்கள் பணிபுரிகிறார்கள் என்பதை அறிந்து சொல்லமுடியும். அல்லது, தாங்கள் பிறக்க நேர்ந்த ஜாதியின் சங்கத்தினர் நடத்தும் பத்திரிகையில் எவ்வளவு வன்மம் பொருந்திய கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை சேகரிக்கமுடியும். இவ்வாறாக பலவிதங்களில் ஜாதியத்தின் போக்கினை பதிவு செய்யமுடியும். அதை ஆராய்ச்சி செய்ய முடியும், அவற்றின் அடிப்படையில் ஒரு கொள்கை முடிவை எடுத்து அதை அரசியல் முழக்கமாக மாற்ற முடியும்.

ஆக, பதிவுகள் > ஆராய்ச்சிகள் > கொள்கை முடிவு > அரசியல் முழக்கம் > பிரச்சாரம்-போராட்டம் > சட்டமியற்றுகை மற்றும் சமூக ஏற்பு என்கிற போக்கில் இந்த செயல்பாடுகள் இருக்கலாம். சற்று யோசித்துப்பாருங்கள். இதில் ஒன்று அல்ல பல செயல்தளங்களில் நீங்கள் பங்கேற்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எல்லோரும் எல்லா தளங்களிலும் இருக்க வேண்டியதில்லை.

ஜாதி ஒழிப்புக் கண்காணிப்பு என்கிற இந்த அமைப்பையும் அதன் தேவையையும் செயல்பாட்டு அடிப்படையையும் பற்றி மிகவும மேலோட்டமாகவே இங்கே கூறியிருக்கிறேன். இதை மேலும் வளர்த்தெடுக்க நீங்கள் உதவ வேண்டும்.

இந்தச் செயல்பாடுகள் அனைத்தையும் இலகுவாக செய்யும்வகையில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரு தளங்களிலும் ஒன்றிணைவோம். அதற்காக தனி வலையகம் ஒன்றையும் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும். பல்வேறு அம்சங்களுக்கான பணிக்குழுக்களை (working groups) உள்ளடக்கிய அமைப்பாக அது இருக்க வேண்டும். ஜாதி ஒழிப்பு கண்காணிப்பு என்கிற அமைப்பை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் வரும் டிசம்பர் 15 காலை 10.30க்கு சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறவுள்ளது.

தங்கள் பங்கேற்பை விழைகிறோம்.

- செ.ச.செந்தில்நாதன், தற்காலிக அமைப்பாளர், ஜாதி ஒழிப்பு கண்காணிப்பு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It