சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் சேர்வை எனப்படும் அகமுடையார் சாதி இந்து வெறியர்களால் தேவேந்திர சமுக மக்கள் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல்களில் மூன்று பேர் உயிர் இழந்தனர், 5 பேர் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்தவுடன் மதுரை நோக்கி விரைந்தேன். அண்ணா நிலையம் அருகே சில அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தப் படுகொலை சம்பவத்தை விசாரிக்க சிபிசிஐடி விசாரனை வேண்டும் என்ற ஒரே கோரிக்கையோடு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொன்டு இருந்தனர். மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, பங்கெடுத்த அமைப்புகளின் கருத்துக்களின் படி கோரிக்கை மனு ஒன்றைத் தயார் செய்தோம். இதனிடையே பாதிக்கப்பட்ட மக்கள் மதுரையில் போராட்டத்தில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரோ அல்லது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரோ நேரில் இன்னும் பார்வையிடவில்லை, ஆகையால் அவர்களுக்கு தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தெரிவித்தோம். அவரின் தகவல் பரிமாற்றம் மூலமாக சிவகங்கை மாவட்ட டிஆர்ஓ நேரில் வந்து பார்வையிட்டு கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.

katchanatham malaichamy and his wife pachaiammal

கோரிக்கை மனு விபரம்

கச்சநத்தம் கிராமம் போன்று கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக ஆலடிநத்தம், மாரநாடு, திருப்பாசேத்தி, ஆவரங்காடு பகுதிகளில் காவல்துறை துணையோடு சாதிவெறித் தாக்குதல்களுக்கு தாழ்தத்தப்பட்ட மக்கள் உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது உச்சகட்டமாக நடந்த கொலைவெறித் தாக்குதலில் மூன்று பேர் படுகொலையும், 5 பேர் படுகாயமும் அடைந்துள்ளனர். எனவே இப்பகுதியை தாழ்த்தப்பட்ட மக்கள் வாழத் தகுதியற்ற வன்கொடுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும். மேலும் இப்பகுதியை தலைமைச் செயலாளர் அல்லது உள்துறைச் செயலாளர் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவேண்டும். கச்சநத்தம் பகுதியில் நடைபெறும் தொடர் தாக்குதல்களுக்கும் தற்போது நடைபெற்றுள்ள கொலைவெறித் தாக்குதல்களால் நிகழ்ந்த படுகொலைகளுக்கும் துணையாக இருந்த பழையனூர், திருப்பாசேத்தி காவல்நிலையங்களின் உயர் அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும். மேலும் இவ்வழக்கை உள்ளுர் காவல்நிலையமோ அல்லது மாவட்ட காவல்துறையோ விசாரித்தால் குற்றவாளிகளுக்கு சாதகமாக அமையும் என்பதால் இவ்வழக்கை 32/18 தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் . மேலும் இவ்வழக்கில் நீதியை நிலைநாட்ட வழக்கினை முற்றிலுமாக சிவங்கை மாவட்டம் தவிர்த்து வேறு ஏதேனும் ஒரு மாவட்ட நீதிமன்றத்தில் நடத்திடவும் உத்தரவிட வேண்டும்.

கச்சநத்தம் வன்கொடுமைக் குற்றவாளிகள் அனைவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை குற்றவாளிகளுக்குப் பிணை வழங்காமலேயே சிறையிலேயே வைக்க வேண்டும். திருப்பாசேத்தி, பழையனூர் வட்டாரத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சாதிய வன்கொடுமைத் தாக்குதல்களை முறையாகத் தடுக்காததன் விளைவே கொலைவெறித் தாக்குதல்களால் மூவர் படுகொலையுண்டதற்குக் காரண‌மாகும். எனவே இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டிய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களை தேசிய எஸ்சி/எஸ்டி ஆணைய விசாரனைக்கு உட்படுத்த வேண்டும். கச்சநத்தம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூபாய் 25 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் வீதம் வழ‌ங்கிட வேண்டும். கச்சநத்தம் கிராம மக்கள் சாதிவெறி சக்திகளின் தொடர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் இனி வாழ முடியாத மிகுந்த அச்சத்துடன் இருக்கிறார்கள். ஆகவே மாவட்டத்தின் பிற பகுதியில் ஒரு பாதுகாப்பான இடம் தேர்வு செய்து தலா 5 சென்ட் வீதம் குடிமனைப் பட்டா வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளோடு கச்சநத்தம் கிராம மக்கள் மற்றும் போராட்டக் குழுவின் சார்பாக மனு அளிக்கப்பட்டது. இப்போராட்டத்தை மக்கள் விடுதலைக் கட்சி முருகவேல்ராஜன், மூவேந்தவர் புலிப்படை பாஸ்கர், தேவேந்திர சமுக பாதுகாப்பு கூட்டமைப்பு பொறுப்பாளரான நானும் இணைந்து முன்னெடுத்தோம்.

கட்சிகள், இயக்கங்களின் பங்கேற்பு

கச்சநத்தம் படுகொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து தியாகி இம்மானுவேல் பேரவை, இந்திய கம்யுனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி , தொல்தமிழர் முன்னணி இயக்கத் தோழர்களும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய தமிழகம் கட்சி, எழுத்தாளர் தோழர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களும் நேரில் வந்து கலந்து கொண்டனர். போராட்டம் இரண்டாவது நாள் தொடர்ந்து நடைபெற்றது. இரண்டாவது நாள் போராட்டத்தின் போது சிவகங்கை மாவட்ட எஸ்பி மற்றும் டிஆர்ஒ உடனான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் தொடர்ந்த இரண்டாவது நாள் போராட்டத்தின் போது கூடுதலாக தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு, சுப.அண்ணாமலை மற்றும் இயக்குனர்கள் ரஞ்சித், மாரிசெல்வராஜ், நடிகர் கலையரசன் போன்றவர்கள் பங்கெடுத்து போராட்டத்திற்கு வலிமை சேர்த்தனர். மூன்றாம் நாள் போராட்டத்திற்கு தமிழக விடுதலைப்புலிகள் இயக்கத் தோழர் தமிழ்மாறன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் வந்தனர். புதிய தமிழகம் கட்சியினர் வரவில்லை. மூன்றாம் நாள், இரண்டு முறை நடந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம ஏற்பட்டு, போராட்டத்தின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு கச்சநத்தம் சாதிவெறியர்களின் கொலைவெறித் தாக்குதல் சம்பவத்தை சிபிசிஐடி விசாரணைக்கும், திருப்பாச்சேத்தி மற்றும் பழையனூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியை வன்கொடுமை மண்டலமாக அறிவிக்க ஆவண செய்வதாக‌வும், பழையனூர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்தும் மற்றும் குற்றவாளிப் பட்டியலில் சேர்ப்பதாகவும், குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு பணி மற்றும் தலா 15 லட்சமும், படுகாயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4.5 லட்சமும் கொடுத்திட உத்திரவாதம் அளிக்கப்பட்டது. கூடுதலாக கச்சநத்தம் பெண்கள் அனைவருக்கும் தாட்கோ லோன் ஒப்புதல் வழங்கப்பட்டது. போராட்டம் முடிவுக்கு வந்து மறுநாள் காலை இறந்தவர்களின் உடல்களை வாங்குவது என்று முடிவானது. நான்காம் நாள் விசிக தலைவர் திருமாவளவன், இயக்குனர்கள் சீமான், அமீர், பாரதிராஜா, ராம் உள்ளட்டோர்கள் வந்து இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். தோழர் திருமாவளவன் நான்காம் நாள் முழுவதும் கச்சநத்தம் மக்களோடு இருந்து சென்றார்.

கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சியினரின் அநாகரிகப் போக்கு

முதல் நாள் போராட்டத்தின் போது மக்களுக்கான கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வாயிலாக அவசர மனுவாக முதலமைச்சருக்குக் கொடுத்தோம். அப்போதே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு பதிவிடக் கூடாது என்று எதிர்த்தனர். ஆனால் ஒருங்கிணைப்பாளர்களும், மக்களும் ஏற்காதததால் புதிய தமிழகம் கட்சியினர் கலைந்து சென்றனர். இரண்டாம் நாள் விசிக, சிபிஎம், தமிழ்ப் புலிகள் உள்ளிட்ட கட்சியினர் வரக்கூடாது என்று கூறியுள்ளனர். அதனால் விசிக தனியாக தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினார்கள். இந்தத் தகவல் எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. முதல் முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்போது தெரியவந்தது. அதன் பின்னரே விசிகவினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றோம்.

பேச்சுவார்த்தையின்போது விசிகவினர் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு பேச்சுவார்த்தை நடக்கும் இடத்திலேயே கொஞ்சம் கூட பொதுப்புத்தி இல்லாமல் புதிய தமிழகம் கட்சியினர் நடந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியே வந்தவுடன் புதிய தமிழகம் கட்சியின் பொறுப்பாளர்களிடம் மக்களின் தேவையை உணர்ந்து பாதுகாப்பு கருதியே இந்தக் கோரிக்கைள் வைத்துப் போராடுகிறோம். மக்கள் நலனில் அக்கறை இருந்தால் அமைதியாகப் போராட்டத்தை ஆதரிக்கும் ஜனநாயக சக்திகளுக்கு இடையூறு செய்யாமல் இருந்து உதவுங்கள் என்று கூறினேன். அதன் பின்னே விசிகவினரை அவர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு சென்று ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு அழைத்துச் சென்றோம். அன்று மாலை வரை புதிய தமிழகம் கட்சியினர் அமைதியாக இருந்தனர். அவர்கள் சென்ற பின்னரே இயக்குனர்கள் இரஞ்சித், மாரிசெல்வராஜ் மற்றும் நடிகர் கலையரசன் ஆகியோர்கள் வந்து மக்களிடம் உரையாடினார்கள்.

மூன்றாம் நாள் புதிய தமிழகம் கட்சியினர் வரவில்லை. ஆனால் கிருஷ்ணசாமி வந்து மருத்துவ‌மனையில் சிகிச்சையில் உள்ளவர்களைப் பார்வையிட்டு விட்டு மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து ஒரு மனுவைக் கொடுத்து, பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விட்டு, பாதிக்கப்பட்டவர்கள் மூன்று நாட்களாக சாலையில் கிடந்து போராட்டம் நடத்துகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் சென்றார். அதோடு, கச்சநத்ததில் நடந்தது இரு சாதிகளுக்கான மோதல்கள், அதனை வன்கொடுமையாகப் பார்க்கக் கூடாது என்று கூறியதோடு, மக்களின் உண்மையான வாழ்வுரிமைக்காகப் போராட்டம் நடத்தியவர்களையும் அதில் கலந்து கொண்டவர்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசி வருகிறார். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத இயக்கமும், தலைமையும் மக்களிடம் இருந்து அந்நியப்படும் என்பதே உண்மை.

கச்சநத்தம் மக்களுக்கு நிகழும் சாதியக் கொடுரங்கள்

சாதிய இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சாதிய வன்கொடுமைகளின் வடிவம் குறித்து அரசு ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருக்கிறது. ஆனால் யாதார்த்த சாதிய சமுகமோ காலத்திற்கு ஏற்றார்போல தங்களின் சாதிய வடிவங்களை பல்வேறு புதிய வகைகளில் உருவாக்கிக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களை வதைக்கிறார்கள். மூன்று மாதம் முன்பு கோழி திருடியதற்கு காவல்துறையில் புகார் அளித்ததை காவல்துறை அதிகாரியே மிரட்டி புகாரை திரும்பப் பெற வைப்பதும், குற்றவாளிகள் 'எங்க மேலயே புகார் கொடுப்பியா பள்ளத் தேவிடியா முண்ட அவ்வளவு திமிர் வந்து விட்டதா' என்று பெண்ணின் தொடையில் கத்தியை வைத்து குத்தியிருக்கிறார்கள். பெண்கள் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது 'என்னடி பள்ளச் சிறுக்கிகளா தண்ணியா பிடிக்கீக வாங்கடி நாங்க எங்க தண்ணியை தருகிறோம்' என்று வேட்டியைத் தூக்கி காட்டியிருக்கிறார்கள். தனியாக நடந்து போகும் பெண்களிடம் 'ஏய் நீ அவன் பொண்டாட்டியா ஆளு ஒரு மாதிரி இருக்க சேலையை உரிச்சுப் பார்த்தா எப்படி இருக்கும். சேலையை உரிச்சிக் காட்டுடி' என்று மிரட்டல்கள் நடந்துள்ளது. தேர்தலில் தங்களுக்கு ஓட்டு போடவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர், யாரெல்லாம் தேர்தலில் நின்றார்களோ அவர்களில் பள்ளர்களின் வாக்கு யாருக்குப் பதிவாகியுள்ளதோ அவர்களைத் தவிர மற்றவர்கள் வந்து ஒவ்வொரு நபரையும் தனித் தனியாக அழைத்து பள்ளத் தேவிடியாயுள்ளயா என்று கூறியே அடித்து துன்புறுத்தியுள்ளார்கள்.

விவசாய வேலைகளை தங்கள் நிலங்களில் செய்து கொண்டு இருந்தாலும் அகமுடையார்கள் அழைத்தால் தங்கள் வயல் விவசாய வேலைகளை பாதியில் விட்டு விட்டு போய் செய்து கொடுக்க வேண்டும். மீறினால் கட்டி வைத்து அடிப்பதும், கத்தியால் கை கால்களில் கீறுவதும் செய்துள்ளார்கள். இது போன்று கச்சநத்தம் மக்கள் பலவகையான சாதிய வன்கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். இதன் உச்சபட்சமாக இராணுவ வீரர் தேவேந்திரன் என்பவர் அகமுடையார்கள் கஞ்சா வியாபாரம் செய்வதைக் கண்டித்து புகார் அளித்த பின்னர், இரவு நேரத்தில் கிராமத்தில் புகுந்து தூங்கிக் கொண்டு இருக்கும்போது 'எங்களுக்கு எதிராகவே புகார் கொடுப்பீர்களா' என்று ஒவ்வொருவரின் விரல்களைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார்கள். சிலரை மிகக் கொடுமையாக வெட்டியுள்ளனர். தொடர் சாதிய வன்கொடுமைகள் நிகழ்ந்து வருகிறது. கச்சநத்தம் சாதி இந்துக்களின் சாதவெறியின் தொடர் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தேவையை உணர்த்தியிருக்கிறது. அதுவும் குறிப்பாக பள்ளர் சமுகத்திற்கு எந்த அளவுக்குத் தேவை என்பதை பள்ளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சிலரை மாற்றியுள்ளது. அதே வேளையில் மக்களிடம் பட்டியல் வெளியேற்றக் கருத்துக்கு எள்ளளவும் ஆதரவு இல்லை என்பதும் இதன் மூலம் உறுதியாகியுள்ளது. எத்தனை காலத்திற்கு நாம் சாதியக் கொடுரங்களைப் பற்றியே பேசப்போகிறோம்?

அய்யோ கொன்னுட்டாங்க, கொன்னுட்டாங்க என்ற மரண ஓலங்களும், படுகொலை, சாதியப் படுகொலை என்ற முற்போக்கின் ஆதரவுக் கருத்துக்களும், சமுக ஆர்வலர்களின் ஆவேச எதிர்ப்புகளும் காதுகளில் தினம் தினம் கேட்டு, செவிகளில் சேர்த்து வைத்தது தான் மிச்சம். எதுவும் ஓய்ந்த பாடில்லை. சாதியின் கொடூரத் தன்மையை நாங்கள் உணராதவர்கள் இல்லை. அது எங்களை எவ்வாறு வஞ்சிக்கிறது, வதைக்கிறது, வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கிறது என்பதை நன்கு அறிவோம். அதனைப் பற்றி பேசச் சொன்னால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவனும் பேச்சாளனே, எழுதச் சொன்னால் ஒவ்வொருவனும் எழுத்தாளனே. சிறந்த பன்முகத் தன்மையுடைய வாழ்வியலைக் கொண்ட சமுகமே, இந்த சேத்தின் சமத்துவத்தை நேசிப்பதால் ஒடுக்குமுறையை அனுபவிக்கும் மக்கள் கூட்டம். ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் மக்களின் பாதிப்புகளைப் பேசும் நாம் ஒடுக்குமுறை நிகழ்த்துகின்ற சாதிவெறி கொண்ட கூட்டத்தின் தொழில், கலாச்சாரம் உள்ளடக்கிய வாழ்வியல் பற்றியே பொதுச் சமூக‌த்தில் பேசி அந்த கொடூரத் தன்மையினை சுட்டிக் காட்டி அவமானத்திற்கு உள்ளாக்கி, சாதியைத் தகர்க்கும் பணியை செய்யத் தொடர்ந்து மறுத்தே வருகிறோம். கச்சநத்தத்தில் கொடூரப் படுகொலைகள் என்று பேசும் நாம், கொலை, கொள்ளை போன்றவைகளையே தங்களது குலத் தொழிலாகக் கொண்ட சாதிவெறி கஞ்சாக் கூட்டத்தின் கொடூர மனநிலை பற்றிப் பேச மறுக்கிறோமே ஏன் ? நாமே சாதியையும், சாதிய வல்லாதிக்கத்தையும், மேலாதிக்கத்தையும் பாதுகாக்கிறோமா ?

- முருகன்கண்ணா, தேவேந்திரர் சமூகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு