அய்யுறு வெளியீட்டின் முதல் நூலாக வெளிவந்துள்ளது 'மக்கள் ரசித்த திரைப்படங்களும் மார்க்சிய விமர்சனமும்' என்ற நூல்.
இந்நூலில் வெகுமக்கள் ரசித்துப் பார்த்த, வணிக ரீதியாக வெற்றிபெறச் செய்த, புத்தாக்கங்கள் என்று புகழப்பட்ட 16 திரைப்படங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. மாற்றுத் திரைப்படங்கள், கலைப்படங்கள் போன்ற வகையறாக்கள் அவற்றில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அந்த வகையில் வெகுமக்களின் மத்தியில் வெற்றி பெற்ற திரைப்படங்களை எடுத்துக் கொண்டது வெகுமக்கள் திரள் கருத்துருவாக்கத்தினைப் பண்பாட்டு ரீதியிலான புரிதலுக்கு வழிவகுக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பதை விட, அத்திரைப்படங்களுக்கு அவ்வமயத்தில் தீவிர இடதுசாரி இதழ்களில் வெளிவந்த விமர்சனங்களும் மதிப்புரைகளுமே மறுவாசிப்பின் பொருட்டு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. மேற்கண்ட 16 திரைப்படங்களில் 'பாலம்' என்ற படம் மட்டும் எனக்குத் தனிப்பட்ட முறையில் நினைவில் இல்லை அல்லது பார்க்கவே இல்லையா என்று தெரியவில்லை. மற்ற 15 படங்களும் பார்த்து நன்கு நினைவில் இருக்கும் படங்கள்தான். சிவப்பு மல்லி (1981)-ல் தொடங்கி ஏழாம் அறிவு (2012) வரையிலான காலவரிசையில் படங்களும் படவிமர்சனங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
மேற்படி திரைப்படங்களையும் திரைப்பட விமர்சனங்களையும் ஒருசேர தொகுப்பாக வாசிக்கும்போது இடதுசாரி சிந்தனைப் போக்கினையும் வளர்ச்சியையும் காலவரிசை ஏற்றத்தில் உணர முடிகிறது. மட்டுமின்றி மணிகோ. பன்னீர்செல்வத்தின் மறுவாசிப்பானது, மேற்படி திரை விமர்சனங்கள் எவ்வாறு அமைப்புரீதியான இடதுசாரி சிந்தனைமரபுக்குள் கட்டுண்டு இருந்தது என்பதையும், எந்தெந்த இடங்களில் விமர்சனம் முழுமையற்று இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. மேலும் ஆசிரியர் தன்னுரையில் குறிப்பிடுவது போல, 'புரட்சிகர இயக்கப் பத்திரிகைகளுக்கு அரசியல், பொருளியல் துறையில் எதிர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்து ஏற்பட்டிருந்த தெளிவு, கலாச்சாரத் துறையில் இல்லை' என்ற கோ. கேசவனின் கூற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
ஆசிரியரின் தன்னுரையும் நிழல் திருநாவுக்கரசின் முன்னுரையும் நூலுக்கு வாசகர்களைக் கருத்தியல்ரீதியாகத் தயார்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
மார்க்சின் 'தத்துவத்தின் வறுமை' என்ற புகழ்பெற்ற கோட்பாட்டைப் போல, ஆசிரியர் குறிப்பிடும் மாலெ போன்ற நக்சல்பாரி இயக்கங்களின் குறிப்பிட்ட நடவடிக்கைகளால் 'அரசியலின் தலைமறைவு' ஏற்பட்டதாக 'பாலம்' பட விமர்சனத்திற்கான மறுவாசிப்பில் ஆசிரியர் கூறுவது ஏற்கத்தக்கதும் விரிவான உரையாடலுக்கு உட்பட்டதும் ஆகும்.
இவ்வாறு தனது மறுவாசிப்பில் பெரும்பான்மையாக உள்ள குறையாக ஆசிரியர் குறிப்பிடுவது, மார்க்சிய இயங்கியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையிலும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையிலும் வெகுமக்கள் கலாச்சார வடிவமான திரைப்படத்தை அவ்வப்போதைய இடதுசாரி விமர்சகர்கள் அணுகவில்லை என்பது ஒட்டுமொத்த மறுவாசிப்பின் சாராம்சமாகத் தெரிகிறது.
கூடுதலாக, மேற்படி திரைவிமர்சனங்கள் மார்க்சியத்தை இறுக்கமான ஒரு கருத்தியலாகவும், எவ்விதமான மாற்று விமர்சனங்களும் மார்க்சியத்திற்கு எதிரானதாகத் திரும்பி விடுமோ என்ற உள்ளுறை அச்சமும் ஐயமும் விமர்சனங்களில் இருப்பதையும் இந்நூலில் மணிகோ. பன்னீர்செல்வத்தின் மறுவாசிப்பின் மூலம் தெரியவருகிறது. இது உண்மையும்கூட.
2000-த்தின் முதல் பத்தாண்டுகளின் இறுதிகளிலேயே இடதுசாரிகளின் திரைவிமர்சனங்களில் வளர்ந்து வரும் அனைத்து விதமான விமர்சனப் போக்குகளையும் கைக்கொண்டு, வெகுமக்கள் கலாச்சாரப் பண்பாட்டுத் தள வெளிப்பாடான திரைப்படத்தை விமர்சிக்கும் போக்கு உருவாகிறது.
இங்கு பேரா. வீ. அரசு அவர்களின் கூற்றினைக் கவனத்தில் கொள்ளலாம் – 'வெகுஜனப் பண்பு என்பது சமகால மனிதர்கள் பற்றிய புரிதலாக அமைகிறது. வெகுஜனப் பண்பாடு என்பது வெகுமக்களின் ஊகங்கள், நம்பிக்கைகள், உணர்வுகள், அவர்களது சிந்தனைப் போக்குகள் ஆகிய பல கூறுகளை உள்வாங்கிச் செயல்படுபவை. இவற்றைக் காட்டுவனவாகவே வெகுஜன ஊடகங்கள் செயல்படுகின்றன.' (மாற்றுவெளி - ஜூன் 2010).
90-களின் இறுதியில் நிறப்பிரிகை போன்ற இதழ்கள் வழி முன்னெடுக்கப்பட்ட வெகுமக்கள் பண்பாட்டு ஆய்வு குறித்த சொல்லாடல்கள் தமிழ்ச்சூழலில் குறிப்பிடத்தகுந்தவை.
மேட்டிமை விளையாட்டாக (Elite Game) அறியப்பட்ட மட்டைப்பந்து (கிரிக்கெட் விளையாட்டு) தற்போது வீதிதோறும் ஊர்தோறும் அனைத்துத் தரப்பினராலும் விளையாடப்படுவதை எவ்வாறு எதிர்கொள்வது? இப்போதும் கிரிக்கெட்டை அது மேல்தட்டினர் விளையாட்டு என ஒதுக்கிவிட முடியுமா? அது ஒரு இடதுசாரியாக மார்க்சிய இயங்கியலை மறுதலிப்பதாகிவிடாதா?
அதுபோலவே திரைப்படங்களையும் வெகுமக்கள் பண்பாட்டுக் கருவி என்ற புரிதல் அடிப்படையிலும் மார்க்சிய இயங்கியல் அடிப்படையிலும் கவனித்து விமர்சிப்பதோடு, மாற்றம் என்பதைக் கருத்தளவில் மட்டுமின்றி நமது செயல்பாடுகளிலும் ஏற்பதே இடதுசாரிகளின் அடிப்படைப் பணியாக இருக்க முடியும் என்றே ஆசிரியர் மணிகோ. பன்னீர்செல்வம் உணர்த்திச் செல்வதாகவே ஒட்டுமொத்த வாசிப்புக்குப் பின் எனக்குத் தோன்றுகிறது.
மற்றொரு எண்ணமும் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. அதாவது நூலில் வரிசைப்படுத்தப்பட்ட படங்கள் வெளியான காலத்தில் அமைப்புரீதியாக இடதுசாரிகளின் கருத்தியல் வளர்ச்சி போன்றவையும் கவனத்தில் கொண்டிருக்கலாமோ என்று தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை. தற்போதைய வளர்ந்துபட்ட விமர்சன அளவுகோல்களின்படி மறுவாசிப்பு நிகழ்ந்துள்ளதோ என்று தோன்றுகிறது.
ஒரு வெளியீட்டின் முதல் நூல் என்ற அடிப்படையில் நோக்கும்போது பிழையற்ற அச்சு நேர்த்தி பாராட்டுதலுக்குரியது.
ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். 10-ம் பகுதியில் பூலான்தேவி (1996) என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்துள்ளது. அப்பகுதி பேசும் படமானது சேகர் கபூர் இயக்கத்தில் வெளியான 'பண்டிட் குயின்' என்ற படத்தின் விமர்சனமே. மாறாக அச்சிடப்பட்டுள்ள தலைப்பு 'பூலான்தேவி' என்றும், அச்சிடப்பட்ட படமானது 1989-ல் மசூத் பட் இயக்கத்தில் வெளிவந்த பழைய பூலான்தேவி படத்துடையதாகும். புதிய தலைமுறை வாசிப்பாளர்களுக்கு தவறான தகவலை அளித்திடும் அல்லது சிறு குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் அடுத்த பதிப்பினில் இக்குறை களையப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறேன்.
ஒரு தொகுப்பாகக் காத்திர இடதுசாரி திரைப்பட விமர்சனங்களைப் பதிப்பாக்கியது காலத்தின் தேவையாகும். அவற்றை மறுவாசிப்புக்குட்படுத்தி பதிப்பித்தது புதுமை முயற்சியாகும். தொடரட்டும் அய்யுறுவின் பணி.
ஆசிரியர் மணிகோ. பன்னீர்செல்வம் சூளுரைத்துள்ளதை மீள இங்கு குறிப்பிட்டு அறிமுகவுரையை முடிப்பது சாலப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்:
'மாற்றத்திற்கு உட்படாததைச் சந்தேகி'.
'சந்தேகிக்கும் உரிமையைச் சனநாயகப்படுத்துவோம்'.
மக்கள் ரசித்த திரைப்படங்களும் மார்க்சிய விமர்சனமும் - பதிப்பும் மறுவாசிப்பும்
மணிகோ. பன்னீர்செல்வம் - அய்யுறு வெளியீடு, 12, பிள்ளையார் கோவில் தெரு, அண்ணாதெரு, கழிகுன்றம், தரமணி, சென்னை - 600 113 - விலை ரூ.120.00 - தொடர்புக்கு: 9344501919, மின்னஞ்சல்:
- அன்புச்செல்வன்