rosa lookmanbark 450நமது திட்டம் சோஷலிஸ நோக்கம் கொண்டதே தவிர முதலாளித்துவத்தைச் சீர்படுத்துவது அல்ல! வறுமை என்பது உற்பத்தியின்மையே! தொழி லாளர் வர்க்கத்தினரை முதலாளி வர்க்கத்தினர் முன்பாகக் கைகட்டி அடிபணிந்து நிற்க வைக்கிறது வறுமை! முதலாளித்துவக் கட்டமைப்பில் எந்தச் சட்டமும் உற்பத்தி சாதனத்தை பாட்டாளி வர்க்கத் தினருக்கு உடைமையாக்குவதில்லை.

பொருளாதாரக் காரணிகள் தான் ஊதியத்தை நிர்ணயிக்கின்றன. முதலாளித்துவச் சுரண்டல் என்பது சட்ட வளையத் துக்குள் மட்டும் தீரும் பிரச்சினை அல்ல! சட்ட சீர்திருத்தங்கள் மூலமாகச் சமூக முரண்பாடுகள் தீர்ந்துவிடாது.

பசிக்கொடுமையைப் போக்கி உழைக்கும் தொழிலாளர்கள் பின்னால் சாட்டையைச் சுழற்றி வேலை வாங்கும் முதாளித்துவம் அல்ல சோஷலிஸம். அனைவரும் தொழிலாளர்கள்! சமமானவர்கள்! பொது நலன் கருதி பணியாற்று வோம் எனும் உயரிய எண்ணத்தோடு ஒழுங்கு, கட்டுப்பாடுடன் பணி புரியும் தொழிலாளர் வர்க்கத்தினரை உருவாக்குவதுதான் சோஷலிஸம்!

சந்தர்ப்பவாதக் கொள்கையே எவ்விதக் கொள்கையும் இல்லாமல் இருப்பதுதான்! நிலைமைக் கேற்ப அது தனது வழிகளை எடுத்துக் கொள்ளும். அனைத்து வகை சந்தர்ப்பவாத முறைகளுக்கு எதிரான ஆயுதங்களை மார்க்ஸியம் நமக்கு வழங்கு கிறது. எந்த இயக்கமும் முன் கூட்டியே சந்தர்ப்ப வாதத்திற்கு எதிரான கலகங்களை உருவாக்கிக் கொண்டுவிட முடியாது. இயக்கப் போக்கில்தான் அதைச் சந்தித்து முறியடிக்க வேண்டும்.

போராட்டங்கள் இல்லாமல் தொழிற்சங்கங்கள் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் தொழிற்சங்கங்களே போராட்டத்தின் விளைபொருளாக இருக்கின்றன. ஒவ்வோர் உண்மையான வர்க்கப் போராட்டமும் பரந்து பட்ட மக்கள் திரளின் ஒத்துழைப்பையும் ஆதர வையும் சார்ந்தே உள்ளது. இந்த ஒத்துழைப்பை கணக்கில் எடுக்காமல் நல்ல பயிற்சி இருந்தாலும் ஒரு சிலரின் திட்டமிட்ட புரட்சிகர நடவடிக்கை தோல்வியையே தரும்.

“திரட்டப்படாத பாட்டாளி வெகுஜனங்களை அவர்களின் அரசியல் பண்புகளை குறைத்து மதிப் பிடுவது சரியல்ல. நெருக்கடியான நேரங்களில் எது திரட்டப்படாத பகுதியோ, பின் தங்கிய பகுதியோ அவர்கள் போராட்டத்தில் தங்களை நிரூபிப்பார்கள்! மிகப் புரட்சிகரமான உந்து சக்தி கொண்டவர்கள்! இன்று நன்றாகத் திரட்டப்பட்ட பகுதியை விட திரட்டப்படாத பகுதியாக இருக்கின்றவர்கள் தங்களது மாபெரும் செயல்திறமையை வெளிப்படுத்துவார்கள்.”

மேற்கண்ட சிந்தனைக் கருத்தைக் கூறியவர் போலந்து கம்யூனிஸ்ட் வீராங்கனை ரோசா லுக்ஸம் பர்க்.

ரோசா லுக்ஸ்ம்பர்க் யார்? கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காகவும் தொழிலாளர் வர்க்கத்தினருக் காகவும் குறிப்பாக 1918ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெர்மானிய புரட்சிக்காகவும் அவர் ஆற்றியுள்ள பணிகள் குறித்து இன்னாளைய கம்யூனிஸ்ட் தோழர்கள் அறிந்துகொள்ளவேண்டும். ஜெர்மன் சர்வாதிகாரி வில்ஹெல்ம் கெய்ஸரால் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு களப் பலியான கம்யூனிஸ இயக்க முதல் புரட்சிப் பெண்மணி ரோசா லுக்ஸம்பர்க்!

உலகளாவிய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூலவர்களான பொது உடைமைச் சிந்தாந்த சிற்பிகள் தோழர்கள் கார்ல்மார்க்ஸ் - பிரெடரிக் ஏங்கல்ஸ், மகத்தான ரஷ்யப் புரட்சியின் நாயகன் விளாதிமிர் லெனின் ஆகிய மூவரையும் தொடர்ந்து தத்துவத்திலும் நடைமுறையிலும் தலைசிறந்து விளங்கிய மேதைமையருள் ஒருவர் ரோசா. ரஷ்யப் புரட்சி ஐரோப்பிய நாடுகளில் புரட்சி அலையை உருவாக்கிய சமயத்தில் மார்க்ஸிய வகைப்பட்ட சோஷலிஸத்தின் மிகச் சிறந்த படைப்பாளி ரோசா லுக்ஸம்பர்க்!

“சோஷலிஸத்தின் இலக்கு மனிதன்தான்! ஒவ்வொரு மனிதனின் சுதந்திர வளர்ச்சியும் அனைவரின் சுதந்திர வளர்ச்சியோடு இணைந் துள்ளது” எனும் கம்யூனிஸ்ட் பிரகடனத்தை உயர்த்திப் பிடித்தவர் ரோசா! இல்லற வாழ்க் கையைத் துறந்தவர்! ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவர்! பெரு மைகள் பல வாய்க்கப் பெற்ற ரோசா லுக்ஸம் பர்க்கின் சேவைகள் குறித்தும், தியாகம் குறித்தும் தமிழகத்தில் தெளிவான முறையில் அறிமுகம் செய்யப்படாதது கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே பெரும் இழப்பாகும்!

1918ம் ஆண்டு ஜெர்மானிய கம்யூனிஸ்ட் கட்சி துவக்கத்தின் போது செங்கொடிகளை உயர்த்திப் பிடித்த தோழர்கள் மத்தியில் பேசும்போது “சமூகப் புரட்சி கருக்கொண்டுவிட்டது ஜெர்மனியில்! உலகின் நிரந்தர சமாதானத்திற்கு சோஷலிஸமே தீர்வாகும். மனிதகுலம் பட்ட காயங்களுக்கும். சிந்திய செங்குருதிக்கும் சோஷலிஸமே மருந்தாகும். மக்களிடையே நல் இணக்கத்தையும் நல்உறவையும் தோற்றுவிக்க சோர்வின்றி அயராது பாடுபடும் உழைக்கும் வர்க்கமே, கரம் கோர்த்திடுவீர்! போராட எழுவீர்! செயல்பட விரைவீர்” என உணர்ச்சிப் பிழம்பாக மாறி அறைகூவல் விடுத்தார் வர்க்கப் போராளி ரோசா லுக்ஸம்பர்க்!

‘போலனி’ எனும் ஸ்லாவிக் இனப்பிரிவி லிருந்து காரணப் பெயர் வரப் பெற்றதும் ரஷ்ய ஆளுகைக்குட்பட்ட பகுதியுமான போலந்து சமோஸ்க் நகரில் மரவணிகம் செய்துவந்த எலியாஸ் லுக்ஸம் பர்க் - லோன்ஸ்பெய்ன் தம்பதியினருக்கு மகளாக 1871ஆம் ஆண்டு மார்ச் 1 -ம் நாள் பிறந்தார் ரோசா லுக்ஸம்பர்க்! நவம்பர் புரட்சி நாயகன் லெனின் பிறந்தது 1870ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் நாள். சமகாலத்தவர்களான இருவரது சிந்தனைகளும் ஒரே கோணத்தை நோக்கியதாக அமைந்திருந்தன.

சர்வதேச மகளிர் தின காரணகர்த்தாவான ஜெர்மன் சோஷலிஸ்ட் கிளாரா ஜெட்கின் ரோசாவை லெனினுக்கு அறிமுகம் செய்து வைத்தார். 1901ஆம் ஆண்டு முனிச் நகரில் லெனின் - ரோசா இருவரும் முதன்முதலாகச் சந்தித்துக் கொண்டதோடு 1907-ம் ஆண்டு ஸ்டர்ட்கட் என்னுமிடத்தில் நடைபெற்ற மூன்றாவது அகிலத்தில் கலந்து கொண்டனர். கொள்கை ரீதியாக அரசியல் ரீதியாக சந்தர்ப்ப வாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என் பதில் ஒரே நிலைப்பாட்டை மேற்கொண்டனர் இருவரும்.

ஜீரிச் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மற்றும் சட்டக் கல்வியினை 1898-ம் ஆண்டுகளில் முடித்து வழக்குரைஞர் பட்டம் பெற்றதோடு அரசியல் விஞ்ஞானத்தில் ‘டாக்டர்’ பட்டம் பெற்றார் ரோசா! கல்லூரியில் படிக்கின்ற காலத்தி லேயே மார்க்ஸியத்தின் மீது தாக்கம் ஏற்பட்டு மனிதரின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டி மார்க்ஸிய தத்துவமே என மார்க்ஸியத்தை முன்வைப்பதுடன் மற்ற எவரையும் விட யதார்த்தத்தின் பெரும் விரிவுரையாளர் கார்ல் மார்க்ஸ்தான் என அழுத்தம் திருத்தமாக எடுத்துரைப்பார் ரோசா லுக்ஸம்பர்க்!

லியோஜோகி செஸ் எனும் போலந்து புரட்சி யாளரை ஜீரிச்சில் சந்தித்து அவரோடு அறிமுக மானார் ரோசா. அறிமுகம் நட்பாக வளர்ந்தது. நட்பு காதலாக மலர்ந்தது (ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. லியோ ஜோகிசெஸ், ஜீலியன் மார்ச் ஆகியோருடன் இணைந்து போலந்து சமூக ஜனநாயகக் கட்சியைத் துவக்கி ஒன்றுபட்ட ரஷ்யாவுக்குள் போலந்து தனிக்கட்சி உரிமை, சுதந்திரம் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தினார் ரோசா.

ஜெர்மன் சோஷலிஸ்டுகளான லீப்நெக்ட், ஆகஸ்ட்பெபல், பெர்ன்ஷ்டைன், கால்ல் காட்ஸ்கி ஆகியோர் துவக்கியது ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி. தாம் தொடங்கிய நியுஜெயிட் இதழில் ரோசாவை போலந்து நிரூபராக்கினார் கார்ல் காட்ஸ்கி. சில நாட்களில் ஜெர்மன் சென்றார் ரோசா! ஜெர்மானியரைத் திருமணம் செய்து கொண்டால்தான் குடியுரிமை பெற முடியும். ரோசாவின் நண்பர் கார்லுபெக் - ஒலிம்பியா தம்பதியினர் தங்களது மகன் காஸ்டாவை ரோசாவுக்கு மணமகனாக்கி திருமணம் எனும் நாடகம் ஒன்றை பதிவாளர் அலுவலகத்தில் அரங்கேற்றினர். ‘கணவன் வேடம்’ ஏற்ற காஸ்டாவ் ரோசாவின் புரட்சிப் பணிகளைப் புரிந்து கொண்டார். இருவரும் கைகுலுக்கி ஒருவருக்கொருவர் நன்றி கூறி நிரந்தரமாகப் பிரிந்தனர்.

குடியுரிமை பெற்று பெர்லினில் குடியேறிய ரோசா ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்தார். கட்சியில் அதிகாரம் பெறுவதை விடவும் தமது சிந்தனை செல்வாக்கினை கட்சியில் செலுத்தவே விரும்பினார் ரோசா. அப்போது ஏற்பட்டதுதான் ரோசா - கிளாராஜெட்கின் இடையேயான நட்பு!

ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியில் 1899ல் பிரான்ஸ் முதலாளித்துவ அரசில் சோஷலிஸ்டுகள் பங்கு பெறுவது குறித்த விவாதம் எழுந்த போது “பாரிஸ் கம்யூன் படுகொலையாளர்களுடன் இணைந்து சோஷலிஸ்ட் தலைவர் அலெக்ஸாந்தர் மில்லரண்ட் ஆட்சிப் பொறுப்பேற்பது தொழி லாளர் வர்க்கத்தை பூர்ஷ்வாக்களோடு சங்கிலியால் பிணைத்துக் கட்டும் வேலையாகும்.

பூர்ஷ்வா சமூகத்தில் சமூக ஜனநாயக பாத்திரம் என்பது எதிர்க் கட்சியாக இருப்பதே! பூர்ஷ்வா அழிவில் தான் வீறுகொண்டு எழும் சோஷலிஸம்!” தேர்தல் புறக்கணிப்பு குறித்த விவாதத்தின் போது “புறக் கணிப்பு சரி அல்ல! நாடாளுமன்றம் போன்ற பேச்சுக் கூடங்களில் சோஷலிஸ்டுகள் தங்களது கடமைகளை வரையறுத்துக்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் சோஷலிஸ்டுகள் பேசும் கருத்துக்கள் மக்களிடம் போய்ச் சேர வேண்டும்” எனத் தமது கருத்தைப் பதிவு செய்தார் ரோசா லுக்ஸம்பர்க்! வெகுஜன வேலை நிறுத்தம் குறித்துப் பேசிய போது “நமது சமூக ஜனநாயகவாதிகள் சிந்திய செங்குருதி விலை மதிப்பற்றது.

வரலாற்றில் அனைத்துப் புரட்சிகளுமே மக்கள் சிந்திய செங்குருதி தோய்ந்தவையே! ஆளும் வர்க்கத்தினருக்காக இது நாள் வரை உழைக்கும் வர்க்கத்தினரின் செங்குருதி சிந்தப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போது தங்களது சொந்த நலனுக்காக செங்குருதி சிந்த வேண்டியுள்ளது. தொழிற்சங்கங்களின் இறுதி இலக்கு தொழிற்சங்கப் பணிகள் மட்டும் அல்ல! புரட்சி! புரட்சி! வெகுஜனப் புரட்சியே! ரஷ்யப் புரட்சியி லிருந்து எப்பொழுதுதான் நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம்? ரஷ்யாவில் வெகுஜனங்கள் புரட்சியை நோக்கித் தள்ளப்பட்டனர். போராட்டத்தின் ஊடாகவே ஸ்தாபனத்தைக் கட்டிக்கொள்ள முடியும்! மார்க்ஸ் - ஏங்கல்ஸ் இருவரும் வெளி யிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையின் இறுதி வாசகம் கூட்டங்களில் பேசுவதற்காக மட்டும் அல்ல!

ரோசாவின் தீவிரமான திருப்பித் தாக்கும் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் குறிப்பிட்டு “வேண்டாமே, இவைகளைத் தவிர்க்கலாமே” என கார்ல் காட்ஸ்கி கேட்ட போது “மார்க்ஸ் - ஏங்கல்ஸ் இருவரும் தங்கள் மீது வசைபாடிய எவரையும் விட்டு வைத்ததில்லை. தங்களது வாழ் நாள் முழுமையுமாகத் தங்களது ‘மை யுத்தத்தை’ (INK WAR)க் கை விட்டதில்லை. என்னை மட்டும் தவிர்க்கச் சொல்லுகிறீர்களே, நண்பரே!” என அடக்கமாகக் கூறுவார் ரோசா!

கட்சிக் கூட்டத்தில் “செங்குருதி”, “புரட்சி” வெகுஜன வேலை “நிறுத்தம்” என ரோசா பேசியதை உளவாளிகள் வாயிலாக அறிந்து “புரட்சியைத் தூண்டுகிறார் ரோசா என ஆளும் வர்க்கத் தினருக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. “ரோசாவைக் கைது செய்ய வேண்டும்” “நாடு கடத்த வேண்டும்” என ரீச் ஸ்டாக் எனும் பாராளு மன்றத்தில் எதிர்ப்பும், கண்டனக் குரலும் எழுந்ததைக் கவனித்து எப்பொழுதும் ரோசா காப்பாற்றப்பட வேண்டும் என நினைத்து ‘வோர் வார்ட்ஸ்’ எனும் இதழில் நிருபராக்கி அதன் ஆசிரியர் குழுவில் ரோசாவைச் சேர்த்து அவரை வார்சாவுக்கு அனுப்பி வைத்தார் கார்ல் காட்ஸ்கி!

1905-ம் ஆண்டு அக்டோபர்! ரோசா வார்சா சென்ற வேளையில் ரஷ்யாவில் ரயில்வே தொழி லாளர்களும், பிற தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். கொடுங்கோலன் ஜார் இரண்டாம் நிக்கோலஸிடம் கோரிக்கை மனுஅளிப்பதற்காக ஆயிரக்கணக்கில் பொது மக்கள் புனித பீட்டர்ஸ்பர்க்கில் திரண்டிருந்தனர். அப்பாவியான பொதுமக்களின் கூட்டத்தைக் கலைப்பதற்காக அடக்கு முறையை ஏவியது சர்வாதி காரி ஜாரின் அரசாங்கம். இராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனமான தடியடியினால் ஏராள மானோரின் மண்டைகள் உடைந்து பலியான பொது மக்கள் பலர். ரஷ்யாவின் முதல் புரட்சி யான இப்போராட்டத்தின் கொடூரமான நிகழ்வு தான் “இரத்த ஞாயிறு” என ரஷ்ய வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது!

ரஷ்ய புரட்சியைத் தொடர்ந்து வார்சாவில் உறவினர் இல்லத்தில் தங்கியிருந்த ரோசா புரட்சி யாளர்களோடு கைது செய்யப்பட்டு சிறையேறினார். பல நாட்கள் சிறைக் கொடுமையை அனுபவித்ததன் காரணமாக ரத்த சோகை, வயிற்றுப்புண், கல்லீரல் வீக்கம் போன்ற நோய்களுக்காளாகி மோசமான உடல்நிலையில் 1906ம் ஆண்டு ஜூலையில் விடுதலை யானார் ரோசா! அதே காலகட்டத்தில் பின்லாந்து குவாக்கலா எனும் பகுதியில் தலைமறைவு. வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த லெனினைச் சந்தித்தார் ரோசா. ரஷ்யப் புரட்சி குறித்த முழுமையான பார்வை கொண்ட முதல் மார்க்ஸிஸ்ட் ரோசா எனக் கூறினார் ரூப்ஸ்காயா!

“வெகுஜனங்கள் தீவிரமாக இருக்கும் போராட்டங் களில் கட்சி தயாராகி விட வேண்டும். ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தினரை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற நடவடிக் கைகளைக் கடந்து அரசியல் நோக்கங்களைத் தெளிவாக வரையறுத்திட வேண்டும்” எனக் கட்சித் தலைமையை வலியுறுத்திக் கொண்டே யிருப்பார் ரோசா! ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியில் ரோசாவின் மீது நம்பிக்கையின்மை அதிகரித்துக்கொண்டே வந்தது. கட்சியைப் பிளப் பதற்கு தீவிரமாக இருக்கிறாள் ரோசா என்றும், ஜாரின் உளவாளி ரோசா என்றும் அவர் மீது அநியாயமாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவரது எழுத்துக்களையும் பிரசுரிக்க மறுத்தனர். ரோசா - ஜோகிசெஸ் உறவிலும் இடைவெளி ஏற்பட்டது.

1915-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாள்! ஹாலந்தில் நடைபெறவிருந்த சர்வதேச மகளிர் முதல் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி ரோசாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார் கிளாரா ஜெட்கின்! ஆனால் பிப்ரவரியிலேயே கைது செய்யப்பட்டு சிறை சென்று 1916-ம் ஆண்டு ஜனவரி 22-ம் நாள் விடுதலை செய்யப்பட்டார். இரண்டரை ஆண்டுகள் கடந்து 1918-ம் ஆண்டு ஜூலையில் கைது செய்யப் பட்டு நவம்பரில் விடுதலையானார் ரோசா. இது போன்று பல முறைகள் கைது செய்யப்பட்டு சிறை சென்று சர்வாதிகாரி கெய்ஸர் அரசினால் கொடு மைகள் பலவற்றை அனுபவித்துள்ளார் புரட்சிப் பெண்ணான ரோசா லுக்ஸம்பர்க்!

இக்கொடுமைகளுக்கெல்லாம் மேலாக ரோசா அனுபவித்தது 1918-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஜெர்மன் புரட்சியின் போதுதான். கெய்ஸரின் சர்வாதிகாரத்தை எதிர்த்தும், ஏகாதி பத்திய கெய்ஸர் அரசைத் தூக்கியெறிய வேண்டும் என்றும் பல பொதுக் கூட்டங்களில் முழக்க மிட்டார் ரோசா. அவரது வீர உரைகளைக் கேட்டு மக்களிடையே எழுச்சியும் தொழிலாளர் களிடையே வேலை நிறுத்தமும் தொடங்கியது. அடக்குமுறை ஆட்சியில் கைதுப் படலமும் தொடர்கிறது. புரட்சியைத் தூண்டுவதாகக் கருதி ரோசாவைக் கைது செய்ய அரசாங்கம் ஆணை யிடுகிறது. ரோசா உட்பட தலைவர்கள் பலர் தலைமறைவாகினர்.

தனது இறுதிக் கட்டுரை என அறியாமலேயே “பெர்லினை ஒழுங்கு ஆளட்டும்” என எழுதி யிருந்தார் ரோசா! அனைத்துக்கும் பிறகு எனும் கட்டுரையை எழுதியிருந்தார் கார்ல் லீப்நெக்ட். இருவரது மறைவிடம் குறித்து தகவல் கூறினான் உளவாளி ஒருவன். பெர்லினில் மக்கள் பெருக்கம் அதிகமிருந்த ‘வில்மர்ஸ்டார்ட்’ எனுமிடத்தில் மறைவாக இருந்த கார்ல் லீப்நெக்ட் முதலில் கைது செய்யப்பட்டான்.

1919ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள்! இரவு 9 மணி. சீறும் சிங்கம் என பாயும் புலி எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வர்க்கப் போராளி ரோசா கைது செய்யப்பட்டார். இராணுவத் தலைமையகத்தில் விசாரணை! என்ன குற்றம்? மாட்சிமை பொருந்திய மன்னர் கெய்ஸரின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக மக்களையும் தொழி லாளர்களையும் தூண்டினார் எனும் குற்றம்!

“இன்றைய தினம் வெகுஜன வேலை நிறுத்தங் களை நான் தூண்டிவிடுவதாக இந்த எளிய பெண்ணின் மீது பெருங்குற்றத்தைச் சுமத்தி யுள்ளீர்கள். அரசாங்கத்திற்கு ஆபத்தானவர். மிகவும் இழிவாக ‘சிவப்பு ரோஜா’ என்கிறீர்கள். சமூக ஜனநாயகத்தைக் குறித்து என்ன தெரியும் உங்களுக்கு? எதுவுமே தெரியாது. தண்டனைக்குப் பயந்து ஓடி ஒளிபவள் அல்ல நான்! ஒருவேளை நீங்கள் அவ்வகையைச் சார்ந்தவர்களாக இருக்கலாம். சமூக ஜனநாயகவாதிகள் கோழைகள் அல்ல! எத்தனை தடைகள் வந்தாலும், தண்டனைகள் கிடைத்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவர்கள்தான் சமூக ஜனநாயகவாதிகள்.” “நீதிமன்ற விசாரணையில் சொற்களை நெருப்புத் துண்டுகளாய் அள்ளி வீசினார் ரோசா.

அப்போதுதான் கொடூரமான நிகழ்வு கணப் பொழுதில் நடந்தேறியது. விசாரணையில் முன் பக்கமாக நின்று விசாரணை செய்வோரிடம் பேசிக்கொண்டிருந்தார் ரோசா! ‘ரைபிள்’ எனும் துப்பாக்கியை மாற்றிப் பிடித்தபடியே வந்த ஒரு மனித மிருகம் ரோசாவின் தலையில் ஓங்கி அடித்தான். ரோசாவின் மண்டை ஓடு பிளந்தது. மற்றொரு கொடூரன் துப்பாக்கியினால் ரோசாவைச் சுட்டான். அவர் மீது சீறிப் பாய்ந்தன தோட்டாக்கள்.

அகிலம் எங்கிலும் செங்கொடி பட்டொளி வீசிப் பறந்திட வேண்டும்! மார்க்ஸியம் ஓங்கித் தழைத்திட வேண்டும் என அயராது பாடுபட்ட கம்யூனிஸ்ட் வீராங்கனை ரோசா லுக்ஸம்பர்க் தலையிலிருந்து வடிந்த செங்குருதியும், உடலில் தோட்டாக்கள் பாய்ந்த காயங்களிலிருந்தும் வடிந்த செங்குருதியும் ஒன்றாகக் கலந்து ஆறாக ஓடியது தரையில், நள்ளிரவிலேயே உயிரற்ற ரோசாவின் உடலை எடுத்துச் சென்று ‘லேண் வேர்’ எனும் வாய்க்காலில் வீசியெறிந்தனர் அரக்க குணம் கொண்ட இரக்கமற்ற கொடியோர். புரட்சி யாளர் லீப் நெக்ட்டையும் அதே போன்று பலி வாங்கினர் சர்வாதிகாரி கெய்ஸரின் சோஷலிஸ எதிரிகள்!

ஏகாதிபத்தியம் குறித்த ஆய்வில் மார்க்ஸியப் பொருளாதாரம் குறித்து தனக்குத்தானே தெளிவு தேவைப்படுகிறது எனும் வகையில் மார்க்ஸின் ‘மூலதனம்’ இரண்டாவது நூலை அடிப்படை யாகக் கொண்டு ‘மூலதன திரட்சி (குவியல்) Accumulation of Capitalஎனும் நூல் எழுதினார் ரோசா.

தமது பிறந்த நாளின் போது ஜெர்மனியின் புகழ்பெற்ற பொருளாதார எழுத்தாளர் ரோர்ட் பர்டஸ் எழுதிய புத்தகம் ஒன்றைப் பரிசாக ஜோகி செஸ் தந்த போது “எனக்குள்ளே எனக்கான மனிதன் நீ!” எனத் தனது காதலை வெளிப்படுத்தி “நாம் விரைவில் உலகறிய கணவன் மனைவியாக நமக்கென்று ஓர் எளிய அறையில் வாழ வேண்டும். ஒன்றாகக் கை கோர்த்து நடந்திட வேண்டும்” எனக் குறிப்பிட்டு குழந்தை ஒன்றைப் பார்த்தவுடன் தனது மனதில் எழுந்த ஆசையை “நேற்று பூங்காவில் அந்த மூன்று வயது குழந்தையின் தளிர் நடையைப் பார்த்து என்னை இழந்தேன். கேசங்கள் ஆடிட அழகான சட்டை அணிந்த அக்குழந்தையை அப்படியே தூக்கிக் கொண்டு ஓடிவிடலாமா?

என மனம் பதை பதைத்தது! என் அருமை காதலனே, எனக்கென குழந்தை ஆசை இருக்காதா? வீட்டில் நான் உன்னுடன் வாயாட மாட்டேன். அமைதி யான நிம்மதியான வாழ்க்கையை நாம் பெற முடியும். எனக்கும் வயது ஏறிவிட்டது. வசீகர மற்ற மனைவியுடன்தான் நீ கைகோர்த்து நடக்க வேண்டும். உலகில் எந்த தம்பதியினருக்கும் வாய்க் காத மகிழ்ச்சியை நாம் நினைத்தோமெனில் பெற முடியும்” எனத் தமது உள்ளத்து உணர்ச்சிகளையும் ஆசைகளையும் கடிதமாக எழுதினார் ரோசா! ஆனால் அந்த தியாகப் பெண்மணியின் ஆசை நிறைவேறாமலேயே முற்றுப் பெற்றுவிட்டது.

1925ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள்! கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவக்கத்தின் போது, “நம்மிடமிருந்து மறைந்தவர்களுக்காக மற்றொரு துயரம் தருகின்ற கடமை. அண்மைக் காலத்தில் பெரும் துன்பத்துக்கிரையான புகழ்பெற்ற பெண்ணி னத்தின் ரோசா லுக்ஸம்பர்க். பெர்லினில் கொந் தளிக்கும் கூட்டத்தின் சினத்தைத் தனித்துக் கொண் டிருக்கும் போது அவர் குரூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். மறைந்த நமது சகோதரி ரோசாவின் நினைவாக மரியாதை காட்டும் முறையில் அமைதியாக நாம் நின்று கொண்டிருக் கிறோம். ஜெர்மன் தொழிலாளர்களுக்காக பணியாற்றிக் கொண்டிருந்த கார்ல் லீப் நெக்ட் கொல்லப்பட்டார். அதனால் நமக்கேற்பட்ட இழப்பும் இதற்கிணையான ஆழமுடையது” எனத் தமது தலைமையுரையில் குறிப்பிட்டார் தோழர் சிங்காரவேலர்!

Pin It