1835ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சட்டம் படிப்பதற்காக ஜெர்மனியிலிருந்த பான் பல்கலைக் கழகத்தில் கார்ல் ஹென்ரிச் மார்க்ஸ் (KARL HENRICH MARX) சேர்ந்தார்.

ஆனால் இரண்டு செமஸ்டர்களுக்குப் பிறகு, அங்குள்ளதைவிட பிரெஷ்ய நாட்டின் தலைநகரமான பெர்லினில் இருந்த பெர்லின் பல்கலைக்கழகத்தில் சிறந்த ஆசிரியர்கள் இருந்ததாக அவரது தந்தை ஹென்ரிச் மார்க்ஸ் கருதியதால் அவரது ஆலோசனைப் படி 1836ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெர்லினுக்குச் சென்று அப்பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.

1839ஆம் ஆண்டிலிருந்து உலக தத்துவ ஞானங்களின் வரலாற்றினை அவர் தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தார். இதனால், ஏற்கனவே அவரிடமிருந்த நாத்திகக் கண்ணோட்டமானது மேலும் வளர ஆரம்பித்தது.

1840ஆம் ஆண்டு பிரெஷ்யாவின் மன்னர் பட்டத்திற்கு வந்த நான்காம் பிரடெரிக் வில்ஹெம், அதற்கு முன்னர் தான் மாட்டியிருந்த முற்போக்கு முகமூடியினைக் கழற்றினான். அரசைப் பற்றி விமர்சனம் செய்பவர்கள் மீது பாய்ந்தான்.

1841 ஏப்ரல் மாதத்தில் கார்ல் மார்க்ஸ் படிப்பை முடித்தார். பெர்லின் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான கட்டணங்கள் அதிகம் என்பதால், அவர் தனது ஆய்வுரையை ஜெனா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார். அவரது ஆய்வுரையை ஜெனா பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டது. அவருக்கு டாக்டர் பட்டமும் வழங்கியது. ஆனால், தனது வாழ்நாளில் ஒருபோதும் அவர் அப்பட்டத்தினைப் பயன்படுத்திக் கொண்டதேயில்லை.

தொடக்க காலங்களில் ஹெகல் என்பவரது கருத்துக்களினால் மார்க்ஸ் தாக்கம் பெற்றிருந்தார். ‘இடதுசாரி ஹெகலியவாதி’களின் குழுவிலும் அவர் இருந்தார். பான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிய வேண்டும் எனும் விருப்பமும் அவருக்கு இருந்தது. அவரது நண்பர் புரூனோபாயரும் அங்கு

தான் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். ஆனால், பிரெஷ்ய அரசாங்கமானது, மதத்திற்கு எதிராகக் கூறப்படும் கருத்துக்களை ஒடுக்கும் வகையில், இளம் ‘இடதுசாரி ஹெகலியவாதிகள்’ மீது கடும் நடவடிக்கை களை எடுத்தது.

அதனடிப்படையில், ஏற்கனவே 1832ஆம் ஆண்டில் பான் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வந்த பேராசிரியர் லுட்விக் ஃபாயர்பாஹை பதவி நீக்கம் செய்தது. 1836இல் அவர் மீண்டும் பணிக்குத் திரும்புவதையும் தடுத்தது. அதன்பின்பு, அவர் இறையியலை விமர்சிக்கத் தொடங்கினார்.

1841ஆம் ஆண்டு அவருடைய ‘கிறிஸ்தவ மதத்தின் சாரம்’ எனும் புகழ்பெற்ற நூல் வெளிவந்தது. அடுத்ததாக, ஏப்ரலில் மார்க்ஸின் நண்பரான இளம் பேராசிரியர் புரூனோபாயரை பல்கலைக்கழகத்தில் உரையாற்ற நிர்வாகம் தடை விதித்தது.

ஜூலை மாதத்தில் மார்க்ஸ் ‘கிறிஸ்தவ மதத்தின் சாரம்’ நூலைப் படித்தார். பொருள் முதல்வாதக் கருத்துக் களின் பக்கம் ஃபாயர்பாஹின் கவனம் திரும்பியிருப்பதை மார்க்ஸ் அறிந்துகொண்டார். 

பான் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும் எனும் மார்க்ஸின் விருப்பமானது அரசின் போக்கினால் மாறியது. அவர் பத்திரிகைத் துறையின் பக்கம் தனது விருப்பத்தைப் திருப்பினார்.

1843ஆம் ஆண்டில் லுட்விக் ஃபாயர்பாஹின் ‘எதிர்காலத் தத்துவஞானத்தின் கோட்பாடுகள்’ எனும் நூல் வெளியானது. அந்நூலின் கருத்துக்களால் தாக்கம் பெற்ற மார்க்ஸ், எங்கெல்ஸ், புரூனோபாவர் உள்ளிட்ட இடதுசாரி ஹெகலியவாதிகள் அனைவரும் ஃபாயர்பாஹ் வாதிகள் ஆனதாக எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்.  

1842ஆம் ஆண்டு ஜனவர் 1ஆம் நாள் ரைன்லாந்தி லுள்ள கோலோன் எனும் நகரத்தில் ஸிலீமீவீஸீவீsநீலீமீ ஞீமீவீtuஸீரீ (ரெய்னிஷ் ஜீய்ட்டுங்) அதாவது, ரைனிஷ் பத்திரிகை எனும் பெயரில், அந்நகரத்தில் மேலாதிக்கம் பெற்றுக் கொண்டிருந்த சட்டசபையில் எதிர்க்கட்சியினராகவும் இருந்த ‘தீவிரவாத முதலாளித்துவ’த்தின் பிரதிநிதிகளான இருந்த சில முதலாளிகளால், ஒரு தினசரிப் பத்திரிகை யானது ஆளுகின்ற அரசை, கட்சியை விமர்சிப்பதற் கென்றே தொடங்கப்பட்டது.

‘ரெய்னிஷ் ஜீய்ட்டுங்’ பத்திரிகையின் முதலாளிகள் சிறந்த எழுத்தாளர்களைப் பத்திரிகையில் சேர்ப்பதற்காக இடதுசாரி ஹெகலியவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். மார்க்ஸையும் புரூனோபாவரையும் வெகுவாக அறிந்திருந்த அவர்கள் அப்பத்திரிகையின் ஆசிரியர் குழுவிற்குத் தலைவராக இருக்குமாறு மார்க்ஸிடம் கோரினர். 1842 மே மாதம் முதல் அப்பத்திரிகையில் எழுதத் தொடங்கியிருந்த மார்க்ஸ், அக்டோபர் மாதம் 15ஆம் தேதி அப்பத்திரிகையின் தலைமை ஆசிரியர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். அதற்காக கோலோன் நகருக்குக் குடிபுகுந்தார்.

மார்க்ஸின் தலைமை ஆசிரியப் பொறுப்பில் பத்திரிகையானது புரட்சிகரமான ஜனநாயகப் பாதையில் பாய்ந்தோட ஆரம்பித்தது. ரைன்லாந்து சட்டசபையில் அப்போது நடைபெற்று வந்த, பத்திரிகை சுதந்திரம் எனும் பொருள் குறித்த விவாதத்தைக் குறித்து, தனது முதல் கட்டுரைத் தொடரை, மார்க்ஸ் அதில் எழுதினார். பத்திரிகைச் சுதந்திரத்தை அழுத்தமாக வலியுறுத்தி எழுதப்பட்டிருந்த அவரது கட்டுரை பெருமளவில் வரவேற்பையும் விவாதத்தையும் கொண்டு வந்தது. விற்பனையையும் அதிகரித்தது. 1842 அக்டோபரில் ஆசிரியராக மார்க்ஸ் பொறுப்பேற்பதற்கு முன் 885 பிரதிகள் மட்டுமே விற்பனையாகி வந்த பத்திரிகை யானது 1843 ஜனவரியில் அதாவது மூன்றே மாதத்தில் 3400 பிரதிகள் விற்பனையானது. இது அக்காலத்தில் பெரும் சாதனையாகும்.

தனது இரண்டாவது கட்டுரைத் தொடருக்கான விசயத்தினையும் அவர் சட்டசபை விவாதங்களிலிருந்தே எடுத்துக்கொண்டார். சட்டசபை உறுப்பினர்கள் பேசிக்கொள்கிற அலுப்பூட்டுகின்ற, அற்பத்தனமான மொக்கை விவாதங்களைத் தன்னுடைய கட்டுரையில் எடுத்தாள்வது குறித்து அவருக்கு அருவருப்பு உண்டாகி யதாக மார்க்ஸே கூறியிருக்கிறார். 

ஆனால், இரண்டாவது கட்டுரைத் தொடருக்காக அவர் எடுத்துக்கொண்ட விசயமானது அவரை வேறொரு திசைக்கு மாற்றிப் பயணம் செய்ய வைத்தது. அவருள்ளிருந்த வேறொரு புதிய சிந்தனையாளனையும் வெளிக் கொண்டு வந்தது.

அதுவரை இளம் ஹெகலியவாதியாக இருந்து, தத்துவஞானத் துறையில் அதிரடியான வாதங்களை முன்வைத்துக் கொண்டிருந்த மார்க்ஸை, அதிலிருந்து முறித்துக் கொண்டு தன்னுடைய தனித்துவத்தை நோக்கி அவர் செல்லவேண்டிய சந்தர்ப்பத்தை இக் கட்டுரைத் தொடருக்கான தயாரிப்பு அவருக்கு வழங்கியது. ‘மரத் துண்டுகளைத் திருடுவது குறித்த சட்டத்தின் மீதான விவாதங்கள்’ என்பது அக்கட்டுரைத் தொடரின் தலைப்பாகும். இக்கட்டுரையை எழுதும் போதுதான் மார்க்ஸ் என்பவர் “மார்க்ஸ்” ஆகத் தொடங்கியிருந்தார்.

* * *

1840களில் பிரஷ்ய நாட்டின் பெரும் பிரச்சினை களுள் ஒன்றாக, ‘காடுகளில் மரம் திருடுதல்’ பிரச்சனை இருந்தது. பிரஷ்யாவின் நீதிமன்றங்களில் ஆறில் ஒரு பங்கு வழக்குகள், காடுகளிலிருந்த விறகுகளை மக்கள் திருடுவதான குற்றச்சாட்டுகள் குறித்தே நடந்தன. ரைன்லாண்டில் அவ்வழக்குகள் இன்னும் அதிகமாக நடைபெற்று வந்தன.

அரசுக்குச் சொந்தமான தேக்கு மரக் காடுகள், அப்பகுதியிலிருந்த சிறு நிலவுடமையாளர்களான எழை விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்தன. முதிர்ந்து பட்டுப்போன தேக்கு மரங்களையும் பச்சைத் தேக்கு மரங்களிலிருந்து கீழே விழுகின்ற சுள்ளி விறகுகளையும் உணவு சமைக்கவும், வெப்பப்படுத்தவும் விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். அவர்களின் சிறு குழந்தைகள் அக்காட்டில் விளைந்த கிரன்பெர்ரிப் பழங்களைச் சேகரித்து வந்தனர். தங்கள் வனப் பகுதியினைப் பாதுகாக்கும் பொருட்டு அங்கேயே தங்கி வாழவும்; பட்டமரங்களின் சுள்ளி விறகுகளைச் சேகரித்துக் கொள்ளவும்; அன்னியர்கள் காடுகளுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கவும்; விலங்குகள் வேட்டையாடப் படுவதைத் தடுக்கவும்; பச்சைத் தேக்கு மரங்களை வெட்டுவதைத் தடுக்கவுமாகிய உரிமைகளை ஏற்கனவே அவர்கள் பெற்றிருந்தனர். அந்த உரிமையானது, அவர்களுக்கு யாராலும் வழங்கப்பட்டதில்லை. வரலாறறியாக் காலத்திலிருந்தே அவ்வுரிமை அவர் களுக்குத் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்தது.

காடுகளின் பராமரிப்பிற்காக, வனத் துறையினை உருவாக்கிப் பாதுகாத்தபோதும், மேற்கண்ட உரிமை களைத் தடுக்கும் கட்டளையினை வனப் பாதுகாவலர் களுக்கு அரசு வழங்கவில்லை. அதுவரையிலும் பிரச்சினை ஏதுமில்லை.

இப்போது ரைன்லாந்தை தொழில்மயமான மாநிலமாக ஆக்கப் போவதாக அரசு கூறத் தொடங்கி யிருந்தது. பிரச்சினைகள் ஆரம்பித்தன. காடுகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டன. பெரும் நிலவுடமையாளர்கள் காடுகளில் சட்டப்படியாகவே, அத்துமீறிப் புகுந்தனர். அதனால், அதுவரை இயற்கை யாகவே விவசாயிகளுக்கு இருந்துவந்த பயன்பாட்டு உரிமைகள் நிலவுடமையாளர்களால் பறிக்கப்பட்டன. இதுவரை பாரம்பரியமாக இருந்துவந்த அவர்களது உரிமைகள் இப்போது அரசால் ‘சட்டவிரோதம்’ என குற்றம் சாட்டப்பட்டன. காலங்காலமாக அவர்கள் செய்துவந்த செயல்கள் அரசால் ‘குற்றங்கள்’ என அறிவிக்கப்பட்டன. அதனால், வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நீதிமன்றங்கள் அக்குற்றங்களுக்கான கடுமையான தண்டனைகளை ஏழை விவசாயிகளின்மீது சுமத்தின.

இத்தனை காலமாக, சுள்ளி விறகுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த ஏழைகளாகப் பார்க்கப்பட்ட விவசாயிகள், இப்போது, நில உடமையாளர்களுக்காக அரசால் கொண்டு வரப்பட்ட வனத் துறைச் சட்டத்தின் வழியாகப் பார்த்தபோது, ‘மரத்துண்டுத் திருடர்’களாக மாறி விட்டனர். அரசு ஊழியர்களாக இருக்கும் வனப் பாதுகாவலர்கள், விவசாயிகளைப் பெரும் நில உடமை யாளர்கள் வசம் ஒப்படைத்தனர். அவர்களுக்காகக் கட்டாயமாக வேலை பார்க்குமாறு ஏழை விவசாயிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். சட்டசபையில் இப்பிரச்சினையின் மீதான உறுப்பினர்களின் விவாதம் பெரும் பிரச்சினை யாகக் கிளம்பியது. இப்பிரச்சினையையே மார்க்ஸ் தனது அடுத்த கட்டுரைத் தொடருக்கான விசயமாக எடுத்துக் கொண்டார்.

* * *

இப்பிரச்சினையை முழுமையாக அறிந்து கொள் வதற்காக அவர் மோஸெல் நகரில் வாழுகின்ற விவசாயி களைச் நேரடியாகச் சென்று சந்தித்தார். வறுமையில் சிக்கித் தவிக்கின்ற, உரிமைகள் பறிக்கப்பட்ட அவர் களுடன் உரையாடினார். அவர்களின் வேதனையை முழுமையாக உணர்ந்தார். ‘என்றுமே மறக்க முடியாத, சொந்த நாட்டில் பொது மக்கள் படுகின்ற வேதனையின் மொழியை, மிக அதிகமான மனசாட்சியுடன், அவர் களிடமிருந்து கேட்டதுபோலவே, பத்திரிகையின் பக்கங்களில் எழுதுவது தனது அரசியல் கடமை என அனைவரும் கருத வேண்டும்.’ எனப் பத்திரிகையில் எழுதுபவர்களுக்கான விசயம் குறித்து எழுதும்போது பின்னர் மார்க்ஸ் எழுதினார்.

தத்துவச் சிக்கல்கள் குறித்த விவாதங்களில் வானில் பறந்து வாளைச் சுழட்டி எதிரிகளை வீழ்த்திக் கொண் டிருந்த இளம் ஹெகலியவாதியான மார்க்ஸ், முதன் முறையாக பூமியில் நின்று மக்களின் வேதனைக் குரலைப் புரிந்துகொள்ள முயன்றார்.

பத்திரிகையில், ‘வனத் திருடர்கள் பற்றிய சட்டத்தின் மீதான விவாதங்கள்’ எனும் தலைப்பில் தனது கட்டுரைத் தொடரைத் தொடங்கினார் மார்க்ஸ். வழக்கம்போல, அத்தொடரில் ஆழமான விவாதங் களை அவர் எடுத்து வைத்தார்.

அறிவுப்பூர்வமானது எனக் கருதப்படும் அரசின் சட்டங்களும் சட்டசபையும் நில உடைமையாளர்களின் கருவிகளாகச் செயல்படுவதை அக்கட்டுரைத் தொடரில் மார்க்ஸ் அம்பலப்படுத்தினார். தனிச் சொத்துடமை யானது மனித விரோதமானது; அது தனி மனிதருக்கும் எதிரானது; தனி நபருக்கு எதிரான அனைத்துக் குற்றங் களையும் நியாயப்படுத்துகிறது; மனிதனை மிருகத்தின் நிலைக்குத் தாழ்த்திவிடுகிறது என்பதில் அவர் தெளிவாக இருந்தார் என்பதை அவரது எழுத்துக்கள் வாசகர் களுக்குப் புரிய வைத்தன.

இயற்கைப் பிராணிகள் உலகில், ‘உழைக்கும் தேனீ’க்களானது ‘சோம்பேறித் தேனீ’க்களைக் கொன்று விடுகின்றன. மனிதப் பிராணிகள் உலகில், ‘சோம்பேறி மனிதத் தேனீ’க்கள், ‘உழைக்கும் மனிதத் தேனீ’க்களை உழைக்க வைத்தே கொன்று விடுகின்றன என்றார்.

வன விதிகளை மீறுபவர்களைப் பற்றிக் கூறும் போது, சட்டசபையானது, மரம் திருடுபவர்களுக்கும் சுள்ளி விறகு பொறுக்குபவர்களுக்கும் வேறுபாடு இல்லை, சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் என்கிறது. ஆனால், நில உடைமையாளர்கள் மரங்களை வெட்டி அழிப்பதைப் பற்றிக் கூறும்போது, அதே சட்ட சபையானது, மரம் திருடுபவர்களுக்கும் சுள்ளி பொறுக்கு பவர்களுக்கும் வேறுபாடு உள்ளதாகக் கூறுகிறது, எனும் அரசினுடைய நில உடைமையாளர்களின் பக்கமான சார்பை அம்பலப்படுத்தினார்.

அதுவரை “அரசு” என்பதை, ‘மனிதனுடைய இனக் குழு வாழ்க்கைச் சாராம்சத்தின் வெளிப்பாடு’ என்றே மார்க்ஸ் கருதியிருந்தார். அது ஹெகலியக் கண்ணோட்ட மாகும். இந்த கட்டுரை எழுதுகின்ற முயற்சியின் போதுதான் “அரசு” என்பது ‘உடமையாளர்களின் ஊழியன்’ என்பதை மார்க்ஸ் கண்டுகொண்டார்.

நில உடமையாளர்களின் சுயநலத்தைக் கடுமை யாகச் சாடினார். சுயநலமானது தனக்காக முன் வைக்கின்ற தர்க்கத்தினைப் போன்ற பயங்கரம் வேறெதுவும் இல்லை என்றார். அந்தத் தர்க்கமானது, அரசினுடைய அதிகாரத்தை, நில உடைமையாளர் களுடைய வேலைக்காரனாக மாற்றிவிடுகிறது என்றார்.

நில உடைமையாளர்களின் நலன்களானது, அரசின் உறுப்புகள் அனைத்தையும் தனக்கான காதுகளாக, கண்களாக, கைகளாக, கால்களாக மாற்றி, அதன் மூலமாகப் கேட்கின்றன; பார்க்கின்றன; மதிப்பிடு கின்றன; பாதுகாக்கின்றன; நீட்டுகின்றன; ஓடுகின்றன எனக் கடுமையாகச் சாடுகிறார்.

சுயநலம் உருவாக்குகின்ற தர்க்கவாதங்களானது, சாதாரணமான, அற்பமான பொருள்களுக்கும்கூட அதிசயமான குணங்களைக் கொடுக்கின்றன. இங்கு திருடப்பட்ட ‘சுள்ளி விறகு’ எனும் சாதாரணமான, அற்பமான பொருளானது, நிலவுடைமையாளரை ‘அரசா’கவே மாற்றிவிடுகிறது. எப்படியென்றால், விறகினை எடுப்பதன் மூலமாக ஒரு திருடனுக்கு எதிராக அரசு இதுவரை வைத்திருக்கின்ற உரிமையை இப்போது நில உடமையாளர் பெற்றுவிடுகிறார். அவரே அரசாகவும் ஆகிவிடுகிறார். இதைத்தான், “நிலவுடைமையாளரானவர் ‘விறகு திருடனை’ப் பயன்படுத்தி ‘அரசை’யே திருடி விடுகிறார்” என மார்க்ஸ் துல்லியமாகக் குறிப்பிடுகிறார்.

சுள்ளி விறகினை விவசாயி எடுத்துச் செல்வதால் அதன் மீதான உரிமையை நிலவுடைமையாளர் இழந்து விடுகிறார். ஆனால் அரசினுடைய சட்டத்தின் மூலமாக, விவசாயி எனும் ஒரு மனிதனின் மீதான உரிமையையே நிலவுடைமையாளர் பெற்று விடுகிறார் என்கிறார் ஹென்ரி வோல்கவ். ஒரு முட்டாள்தனமான சட்டத்தின் மூலமாக அரசானது, தன்னுடைய வழக்கமான உரிமைப் பயன்படுத்தும் ஒரு தனிமனிதனை காட்டின் எதிரி யாகவும் குற்றவாளியாகவும் மாற்றுகிறது என்கிறார் ஜான் பெல்லமி ஃபாஸ்ட்டர்.

இதன்மூலமாக, ஏழை, எளிய மக்களுக்கும் இயற்கைக்குமான உறவைத் தனி உடைமையாளர்கள் துண்டித்து விடுகின்றனர் என, மார்க்ஸ் குற்றம் சுமத்துவதோடு, ‘விறகு என்பது ரைன்லாந்தைச் சேர்ந்தவருடைய மூட பக்தி’ எனத் தனது கட்டுரையை முடிக்கிறார்.

இருப்பினும் மார்க்ஸிற்கு ஒரு உறுத்தல் இருந்தது. அறிவுப்பூர்வமானது எனக் கூறப்படுகின்ற அரசின் சட்டத்தை விமர்சித்து அவர் ஆழமான, புறக்கணிக்க முடியாத வாதங்களை முன்வைத்தார். அந்தவகையில் அது சரிதான் என்றும் அவர் நினைத்தார். ஆனால், அரசானது நாட்டைத் தொழில்மயமாக்கி அனைத்து மக்களையும் முன்னேற்றுவதற்காகத்தான், காடுகளை நிலஉடைமையாளர்களுக்குக் கொடுக்கின்றது. இதில் தவறொன்றும் இல்லை. இது அரசின் சட்டப்படியான, தவிர்க்க முடியாத நிகழ்ச்சிதான். ஆனால், அரசு இப்படி சட்டப்படியாக நடந்துகொள்ளும்போது, ஏழை விவசாயிகளின் பொருளாதார வாழ்வு ஏன் பாதிக்கப் படுகிறது? அதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? இவைகளைக் குறித்து கட்டுரையில் தான் முன்வைத்த வாதங்கள், வெளிப்படுத்தத் தவறிவிட்டன, எனும் முடிவிற்கு அவர் வந்தார்.

இந்த இடத்தில் நாம்கூட சிந்திக்கலாம். இந்திய அரசானது நாட்டைத் தொழில்மயமாக்கி முன்னேற்று வதற்காகத்தான் காடுகளை, மலைகளை, கடல்களை, விவசாய விளைநிலங்களை பன்னாட்டு முதலாளிகளிடம் கொடுத்து தொழில் நடத்தச் சொல்வதாக மக்களிடம் சொல்கிறது. ஆனால், மலைவாழ் பழங்குடி இன மக்களும் மீனவர்களும் விவசாயிகளும் தாங்கள் பாதிக்கப்படுவதாக அலறுகிறார்கள். ஏன்? எதை ஆதரிப்பது? நாட்டு முன்னேற்றத்திற்காக எனக் கூறுகின்ற அரசையா? அல்லது பாதிக்கப்படுகிறோம் எனக் கதறும் மக்களையா? உங்களுக்கு ஏதேனும் விடை தெரிகிறதா? அதேபோலத்தான் மார்க்ஸ§ம் அப்போது அதற்கான விடையைத் தேடினார்.

மேலும் அதுவரையிலும் அரசு எனும் நிறுவன மானது, மொத்த சமூகத்திற்கும் நன்மை செய்யும் பண்பினைக் கொண்ட, பொதுவான ஒரு அமைப்பு என்றே மார்க்ஸ் நம்பிக் கொண்டிருந்தார். பணக்காரர்களுக்குத் தருகின்ற பாதுகாப்பு மற்றும் ஆதரவு மற்றும் போலீசின் அமைப்பு முறை ஆகியவை காரணமாகத்தான் அரசானது தனது நற்பண்பினை இழந்துவிட்டது எனவும் அவர் நம்பிக் கொண்டிருந்தார். அன்று மார்க்ஸ் நம்பிக் கொண் டிருந்ததைப் போலத்தான் இன்று நாமும் அரசைக் குறித்து நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மார்க்ஸ் தனது நம்பிக்கையை விரைவில் தூக்கி எறிந்துவிட்டார். நாம்?

தான் இதுவரை செய்துகொண்டிருந்த தத்துவ விவாதங்களின்போது அவருக்குத் தேவைப்படாத, அதேசமயம் மக்களுக்கு உண்டாக்கப்படுகின்ற வேதனை களையும் பிரச்சினைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்வதற்காகத் தேவைப்படுகிற ஒரு கருவி - ஒரு கல்வி - தம்மிடம் இல்லை என்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார். அது, ‘அரசியல் பொருளாதாரக் கல்வி’ என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.

அதன்படி, மனிதர்கள் தனிச் சொத்து வைத்துக் கொள்வதற்கான பொருளாதார உரிமைக்கும் அரசின் கொள்கையான அரசியலுக்கும் இடையில் உள்ள இணைப்பு குறித்து அவர் ஆராயத் தொடங்கினார். அரசானது, தனது பண்பினை இழந்து பணக்காரர்கள் பக்கமாகச் செயல்படவில்லை. மாறாக, அரசின் தோற்றமே, அதன் இயல்பே, பணக்காரர்களின் நலன்களுக்காகச் செயல்படுவதுதான் எனும் விடையை அவர் தேடித் தெரிந்து கொண்டார். நமக்கும் அதுதான் விடை என்பதையும் அவர் தெரிய வைத்தார்.

அவரின் அடுத்த கட்டுரையானது, மோஸேல் நகரில் திராட்சை பயிரிடும் விவசாயிகளுக்கு ஏற்படும் துன்பங்கள் பற்றியும் அரசானது அவர்களுக்கு உதவி செய்வதற்கு விருப்பமில்லாமல் இருப்பது பற்றியும் இருந்தது. விவசாயிகளின் துன்பங்களுக்குக் காரணமாக, பருவகாலங்களையும் அதிகாரிகளுடைய தவறுகளையும் அரசும் மற்றும் பலரும் கூறினர். அவர்களையெல்லாம் கடுமையாகக் கண்டித்தார் மார்க்ஸ்.

அவர் அக்கட்டுரையில், “அரசாங்கத்தின் ஒரு விசயம் குறித்த நிலைப்பாடினைப் பற்றி விசாரித்து ஆராயும்போது அதற்கான சூழ்நிலைமைகளின் புறநிலைத் தன்மையைப் பற்றிச் சிலர் புறக்கணித்து விடுகிறார்கள். அதைச் சரியாகப் பார்க்கத் தவறி விடுகிறார்கள். (நடப்பது) எல்லாம் சம்பந்தப்பட்ட தனிநபர்களின் சொந்த விருப்பு என்பதன் அடிப்படை யிலேயேதான் வியாக்கியானம் செய்யப்படுகிறது. எனினும், தனிநபர்கள் மற்றும் தனிப்பட்ட அதிகாரி களின் செயல்களையும் (சொந்த விருப்புகளையும்) நிர்ணயிக்கக்கூடிய சூழ்நிலைகள் இருக்கின்றன. சுவாசிக்கும் முறைகளைப்போல அவைகளும் சுயேட்சைத் தன்மை கொண்டவை” என எழுதினார்.

நாமும்கூட, மத்திய அரசு, மாநில அரசு, முதலமைச்சர், பிரதம மந்திரி ஆகியோரின் நோட்டு மாற்றம், ஜி.எஸ்.டி, மான்ய ரத்து போன்ற முடிவு களெல்லாம் அவர்களின் சொந்த சிந்தனையின் முடிவுகள் எனப் பார்த்துவிடக் கூடாது. அவர்களின் முடிவுகளை நிர்ணயிக்கும் நிலைமைகள் தனியாக இருக்கின்றன. அது என்னவென்று மார்க்ஸைப்போல ஆராய்ந்து அறிய வேண்டும்.

 ‘ரெய்னிஷ் ஜீய்ட்டுங்’ பத்திரிகையில் மார்க்ஸின் இந்தக் கட்டுரைத் தொடர் வெளிவந்ததும், எதிர் பார்த்தது போலவே, அரசாங்கத்தின் அடக்குமுறையும் வந்தது. பங்குதாரர்களின் எதிர்ப்பும் வந்தது. அதுவரை முற்போக்கான பத்திரிகை முதலாளிகளாக இருந்தவர்கள் அப்போது பல்டியடித்தனர். சுதியைக் குறைத்திருக்கலாம் என மார்க்ஸிடம் அறிவுரை கூறினர். ஏற்கனவே, அரசாங்கம் இரட்டைத் தணிக்கை முறையைக் கொண்டு வந்து பத்திரிகையைக் கண்காணித்தும் பலனில்லை. பிறகு, மும்முறைத் தணிக்கை முறையைக் கொண்டு வந்து கண்காணிக்கத் தொடங்கியபோதும் பலனில்லை. மார்க்ஸிடம் அரசின் தணிக்கை முறையெனும் ‘பருப்பு’ வேகவில்லை. ஆகவே, அரசு பத்திரிகையைத் தடை செய்ய முடிவு செய்தது. அதற்கு முன்பாகவே 1843 மார்ச் 18ஆம் தேதியன்று ஆசிரியர் பொறுப்பிலிருந்து மார்க்ஸ் விலகினார். ஆயினும் மார்ச் 31ஆம் தேதியுடன் அந்நாளிதழ் நிறுத்தப்பட்டுவிட்டது.

அதேசமயம், தான் கற்க எண்ணியிருந்த, தனக்கு மிகவும் தேவையானது எனக் கருதியிருந்த ‘அரசியல் பொருளாதார’த்தைக் மிகவும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் கற்கத் தொடங்கினார் மார்க்ஸ்.

ஒரு நாட்டின் அரசானது, சட்டப்படிதான் திட்டங்களைத் தீட்டுகிறது. ஆனால், அதன் விளை வானது ஏழை, எளிய மக்களைப் பலியாடுகளாகவும் குற்றவாளிகளாகவும் ஆக்கித் தண்டிக்கின்றது. கல்பாக்கம், நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட நிலப்பரப்பு களிலும் கூடங்குளம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் இவ்வாறுதான் நடந்துகொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம், அரசின் ‘தன்மை’தான் என்பதை மார்க்ஸ் புரிந்து கொண்டதைப்போல நாமும் புரிந்துகொள்ள வேண்டும்.

இதை ‘அரசியல் பொருளாதாரக் கல்வி’தான் அவருக்கு முழுமையாக விளக்கியது. அக்கல்வியின் மூலமாக உலக மக்களின் துன்பங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது, ‘தனிஉடைமை’ எனும் சூத்திரம் தான் என்பதை அவர் கண்டடைந்தார். அதைத் தொடர்ந்தார். மார்க்சியம் எனும் விஞ்ஞானக் கண்ணோட்டத்தை மனித குலத்திற்குத் தந்தார். இதிலிருந்துதான், அதுவரை மார்க்ஸ் என்பவராகயிருந்தவர் “மார்க்ஸ்” ஆக மாறத் தொடங்கினார். உழைக்கும் மக்களின் பேராசான் ஆனார்.

Pin It