பொதுவாக பூனைகள் என்பவை கள்ளத்தனம் மிகுந்தவை. சோம்பல் நிறைந்தவை. ஊடுறுவும் அதன் கண்களில் அத்தனை துரோகமும் ஒளிந்திருக்கும். தன் எஜமானர்களை அன்பால் ஏமாற்றுபவை. பூனைகளைப் பற்றி ஏராளமாக சொல்லிக் கொண்டே போகலாம். புகார்பெட்டியில் படுத்துறங்கும் பூனைகளை என்ன செய்யலாம். ஒவ்வொரு பூனையாக எடுத்து வந்து வாசித்து அழகு பார்க்கலாம். தலைப்பிற்கான கவிதைப் புத்தகத்தில் எங்கும் இல்லை. தலைப்பே ஒரு கவிதையாக எழுதியிருக்கின்றார் கவிஞர் சீனுராமசாமி.

அழுத்தமான தன் திரைப்படங்களால் மக்கள் இயக்குநராக அறியப்பட்ட சீனுராமசாமி அவர்கள் கனத்ததொரு கவிதை புத்தகம் மூலம் சிறந்ததொரு கவிஞராக இலக்கிய உலகிலும் பிரவேசித்துள்ளார். யதார்த்தமான கதை சொல்லும் பாணியில் தனக்கென்று ஒரு மொழிநடையை உருவாக்கி அனைத்து கவிதைகளையும் சகலரும் வாசிக்கும் வண்ணம் எளிமைப்படுத்தியுள்ளார். இருண்மைவாத மொழியும் இல்லை. இலக்கிய சமரசம் இல்லவே இல்லை. மனமொத்த சிநேகிதர்களின் தோளில் கைபோட்டுக் கொண்டு சகலவிதமான உரையாடல்களையும் கவிதை சொற்களால் காலார நடந்து கொண்டு கைவீசிச் சென்றுள்ளார் கவிஞர் சீனுராமசாமி.

seenu ramasamy bookமுதல் கவிதையே சுனாமியின் கோரதாண்டவங்களைப் பேசுகின்றது. பெரும்பாலான கவிதைகளில் குறும்படத்திற்கான விதையையும் வீசுகிறார். இயற்கையும், மரங்களும், வனங்களும், பறவைகளும், கண்மாய்கரைகளும், ஆறுகளும், ஓடைகளும் பொங்கி பிரவாகமெடுத்து பாய்கின்றன. திருப்பரங்குன்றம், நாகமலை இவர் நடைபயின்ற மண் யாவையும் காட்சிப்படுத்தியுள்ளார். இயல்பான காட்டாறாய் புதிய கவி வழித்தடத்தை ஏற்படுத்தியிருக்கின்றார். இவரது கவிமொழியில் எவரிடத்தும் இல்லாத புதுப்பாணியில் எதார்த்தவாதத்தை இலகுவாக்கி கவி நெய்திருக்கின்றார். வாசிக்கச் சுகமாக இருக்கின்றது.

பிரபல நடிகரிடம் கதை சொல்ல சென்ற துன்பவியல் அனுபவத்தை கவிதை வழி காட்சிப்படுத்தியுள்ளார்.

"ஒரு குதிரைக்கு கதை சொல்லவேண்டியிருந்தது
அதன் விருப்பத்தின் இசை என்னிடம் இல்லை
கால்களை நம்புகிறவன்
குதிரையை நம்பக்கூடாதென அவ்விடத்தைவிட்டு வெளியேறினேன்"

சுயமரியாதையுள்ள படைப்பாளிகள் லாயக்காரனாக சாணியள்ள மாட்டார்கள் என்பதற்கான அழுத்தமான பதிவு இது.

கடக்காமலேயே பின்தொடரும் மனைவிக்கும் ஒருகவிதை எழுதியிருக்கின்றார். பெரும்பாலான ஆண்களை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிவிடுகிறது இச்சிறு கவிதை.

"பின்தொடர்ந்து
பின்தொடர்ந்து
பின்தொடர்ந்து
என்னை கடக்காமலேயே நிற்கிறாள்
குற்றமற்றவன் போலவே
நடப்பது என் சுபாவம்"

புளியமரத்திற்கு 5 பக்கத்தில் ஒரு நெடுங்கவிதையை எழுதி இருக்கின்றார். அவர் பட்டியலிடும் அத்தனை செய்திகளையும் வைத்து ஒரு ஆவணப்படமே எடுத்துவிடலாம். அத்தனை கூர்மையாக அவதானித்து இருக்கின்றார் கவிஞர்.

ஜன்னலை திற கவிதையில் தற்கொலைக்கு முயன்ற முதிர் கன்னிக்கு கூறும் ஆறுதல் அத்தனையும் தன்னம்பிக்கை வரிகள். வாழ்வதற்கான அத்தனை நியாயங்களையும் அழகாக அடுக்கி இருக்கின்றார்.

வடமாநில தொழிலாளர்களின் வாழ்க்கை பிரச்சனையையும் மண்ணிற்கே உரிய கவலையையும் எழுப்பியிருக்கின்றார். நிலமை மேலும் சிக்கலாகும் என்று எச்சரிக்கின்றார். நிலத்தின் வயிற்றுக்குள் ரயிலும் திராவிடப் பகையும் என்ற கவிதையில் அரசியல் சிக்கலையும் கவிபாட முடிகிறது.

கலை வியாபாரம் எனும் கவிதையில் ஒரு திரைப்படம் வெற்றி பெறத் தேவையான அத்தனை விதிகளையும் அடுக்கிச் செல்கின்றார். அனைத்தும் பார்வையாளன் பார்வைகள் இத்தனை தெளிவு இருப்பதால்தான் அவரின் படங்கள் வெற்றி பெறுகின்றன போலும். பிற இயக்குநர்களுக்கும் திரைத் துறையினருக்கும் இதுவொரு முக்கியமான வெற்றிச் சூத்திரத்திற்கான கையேடு.

குழம்பில் /செத்தும் மணக்கின்றன/ கம்மாய் கெளுத்தி மீன்கள் /கவிதை சுவையாயிருக்கின்றது.

கட்டண தார்ச்சாலையின் விரைகின்ற சக்கரத்தின் அடியில் உருண்ட ஜீவராசிகளை பட்டியலிட்டு நவீன யுகத்தின் கோரமுகங்களை தோலுரிக்கின்றார்.

நவீனக் கிணறு கவிதையில் கையளவு கிணற்றுக்குள் விழுந்த வாழ்க்கையை அழகாக சொல்லுகிறார். மது அடிமைகளின் மறுவாழ்வு மையம் போல் கைபேசியில் காணாமல் போனவர்களின் வாழ்வை மீட்க வேண்டும் என்கிறார். எதிர்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்காலப் பிரச்சனை இது.

புறம் பேசுபவர்களைப் பற்றியும் ஒரு அற்புதமான கவிதை இருக்கின்றது. லேசான அறிவுரையின் சாயல் இருந்தாலும் அனுபவபூர்வமான வார்த்தைகளால் இக்கவிதை உண்மையாகிறது.

"பெரும்பாலும்/ உண்ட இடத்திலும்/ வாய்ப்பு பெற்ற இடத்திலும்தான் /இதன்
பல்முளைக்கும்"

கம்மல் /மூக்குத்தி /தாலிக்கொடி /மூன்றும் மீட்கப்படும் இந்நாளில்
/இவையனைத்தையும்/ கழட்டித்தந்த/ பின்னனி இசை /பெரும் துக்கம்.

எளிய மனிதர்கள் யாவரும் சந்திக்கும் வாழ்க்கையின் பேரவலத்தை காட்சிப்படுத்தியிருக்கின்றார் கவிஞர். வலிமிகும் வரி.

"கீரை தந்து /தொட்டு வணங்கும்/ பெரியவரை /அண்ணாந்து பார்த்தது/
மார்க்கெட் பசு"

சாத்திர சம்பிரதாயங்களில் வாழ்கின்ற கருணையைப் படம் பிடிக்கின்றார் கவிஞர்.

பெரும்பாலான கவிதைகள் மிகச் சிறப்பாக இருந்தாலும் ஒரு சில கவிதைகள் உரைநடையாகவும் ஆலோசனை சொல்பவைகளாகவும் நீர்த்துப் போன உரையாடல்களாக இருப்பது சற்று பலகீனமாக இருக்கின்றது. புத்தகத்தின் அடர்த்தி என்பது பக்கங்களில் மட்டும் அல்லாது கவிதையின் உள்ளடக்கத்திலும் இருக்க வேண்டும். அவற்றை மட்டும் பாரபட்சம் இல்லாமல் எடுத்து இருந்தால் புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை இன்னும் சிறந்திருக்கும். வளமான மொழி கைவசமிருக்கின்றது. கவிதைப் பூனைகள் துயில் எழுந்து தொடர்ந்து உலா வருமென்று நம்பலாம். கவிஞர் சீனுராமசாமிக்கு வாழ்த்துக்கள்.

- செ.தமிழ்ராஜ், வண்டியூர்