A different language is different vision of life – Federico Fellini
‘தூரத்துக் காதல் என் கோப்பைத் தேநீர் அல்ல…’ என்னும் மதன் கார்க்கியின் வரியை முதன்முதலாகக் கேட்க நேர்ந்த அந்த நொடியில்தான் Metagrafiophobia ( Transliteration கண்டு மேலெழும் வெறுப்புணர்ச்சி எனக் கொள்ளலாம்; என் கற்பனையில் உதித்த இவ்வார்த்தை அநேகமாக கூடிய விரைவில் Oxfordல் சேர்ந்துவிடும்) என்னும் நோயால் தாக்கப்பட்டேன். அன்றிலிருந்து மொழியுடன் ஒட்டாமல் நிற்கும் சொல்லாடல்களைக் காணும்போதெல்லாம் மனம் அனிச்சையாக அது மொழிபெயர்க்கப்பட்ட லட்சணத்தை இனங்காண முயன்று அதில் கொஞ்சமே கொஞ்சம் வெற்றியும் அடைந்திருக்கிறது. அதன் விளைவுதான் இக்கட்டுரை. Translation என நினைத்துக் கொண்டு பெரும்பாலானோர் செய்வது Transliteration.
ரபீந்திரநாத் தாகூரின் சில சிறுகதைகளை வங்காளத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த சுகந்தா சௌத்ரி ‘The Visitor’ என்னும் கதையில் ஓரிடத்தில் இவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறார். Annapurna, her eyes brimming with tears, wished she could set this boy on her lap, hold him to her heart and inhale the scent of his hair. தாய் குழந்தையை உச்சி முகர்தல் என்னும் மரபுச் சொற்றொடர் வங்காளத்திலும் இருக்கும் போலும். அதற்காக இப்படியா? மான்டோவின் ‘A Man of God’ என்னும் கதையின் மொழிபெயர்ப்பில் மௌல்வி என்னும் ஒரு கதாபாத்திரம் , “We will take a nap”, “We will pray…” என்று கூறுவதாக வரும். அவர் தன்னைப் பற்றி மட்டுமே கூறும் போது கூட I இல்லாமல் we பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிறகுதான் மூளையில் மின்னல் வெட்டியது. பிஹார் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் ‘நான்’ என்பதற்கு இந்தியில் ‘ஹம்’ – நாங்கள் என்னும் பொருள் தரும் இச்சொல்லை பயன்படுத்தும் வழக்கம் உண்டு. மொழிபெயர்ப்பு ஆசிரியர் (அத்தொகுப்பில் மொழிபெயர்த்தவர் பெயர் இல்லை) இதைக் கவனிக்கத் தவறி விட்டார். தாகூர், மான்டோ எல்லாம் அவரவர் தாய் மொழிகளில் எழுதியவை பிறரால் மொழிபெயர்க்கப்பட்டன. முல்க் ராஜ் ஆனந்த் என்பவர் எழுதியதே ஆங்கிலத்தில்தான். ஆனால் எழுத்து அவரது மூளையில் மொழிமாற்றம் செய்யப்பட்டே வந்திருக்கிறது போலும். கேட்டால் Indian English என்பார்கள். உதாரணமாக அவரது ‘கூலி’ நாவலில் “You son of an owl!, You son of a pig!” (Son of a bitch என்பதுதானே வழக்கம்!) என்று எழுதியிருப்பார். “Ullu da paththa! , Suvar ki auladh!” என்னும் இந்தி வசவுகளே இப்படி ஆகியிருக்கின்றன.
அன்றாடம் இதைப் போல பலவற்றைக் கடக்க நேர்ந்தது. ‘எங்கு எண்ணமோ அங்கு கழிவறை’ (Jahaan soch wahaan shauchaalay – ‘சொச்ச பாரத்’க்குகான அரசு விளம்பரம்!), ‘நாங்கள் வென்றோம்; சச்சினுக்கு நன்றி’ (We won thanks to Sachin), ‘Just now we heard from the mouth of him’ (இப்போதுதான் அவர் வாயிலாக அறிந்தோம்), ‘First first….’ (முதன்முதலாக…) என ஆங்காங்கு காணுற நேர்ந்த பல முத்துக்களை அள்ளி வீசலாம். பல மொழிபெயர்ப்புப் புத்தகங்களில் தென்படும் அபத்தங்களைக் கொண்டு ஒரு ஆய்வு ஏடே தயார் செய்யலாம். ஆனால்…. எனக்கென்ன வேற வேலைக் கழுதை இல்லையா? சமீபத்தில் வாசித்த ஒரு மொழிபெயர்ப்பு நாவலை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். அருமையான கருத்துச் செறிவும் மானுடத்திற்கு மிகவும் தேவையான கொள்கைகளையும் உள்ளடக்கிய ‘தாய்’ நாவலை வாசிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திற்குத்தான் மொழி கொஞ்சம் நெருடலாகவும் துருத்தலாகவும் தெரிந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு…… அதுவே பழகிவிட்டது! ஆனாலும் தொ.மு.சி இப்படி மொழிபெயர்த்து இருக்க வேண்டாம். கீழ்காணும் பட்டியல் கொஞ்சம் நீளம்தான். பரவாயில்லை. உங்களை முழு நாவலையும் வாசிக்கச் சொல்லவில்லையே. (வாசிக்க வேண்டாம் என்றுதானே சொல்ல வருகிறேன்!) யான் பெற்ற இம்மொழிபெயர்ப்பின் இன்பத்தை(!) நீங்களும் சற்றே அனுபவிப்பீர்களாக! வாசித்த பின், ‘இது ஒன்றும் அவ்வளவு மோசமான மொழிபெயர்ப்பாகத் தெரியவில்லையே! சரியாத்தானே இருக்கு’ என்பவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்! ஆமென்!
‘தாய்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பே சில இடங்களில் அசட்டுத்தனமாகத்தான் இருக்கிறது. இதில் தமிழ் மொழிபெயர்ப்பு வேறு! மாக்ஸிம் கார்க்கியின் புதினம் நமது விமர்சனத்திற்கான பொருளன்று; தொ.மு.சி யின் மொழிபெயர்ப்பே.
பகுதி 1
‘Good night – நல்லிரவு’. (நாம என்னைக்கு ‘நல்லிரவு’ன்னு சொல்லிட்டு தூங்கப் போனோம்?!)
‘Long live free speech! – பேச்சு சுதந்திரம் நீடூழி வாழ்க!’ (பேச்சு சுதந்திரம் ஓங்கட்டும்/தழைக்கட்டும் என்பது இன்னும் பொருத்தமாய் இருந்திருக்குமே!)
So, here you are one of the innocently slain – அந்த ‘அறியாது கொலையுண்ட’ பேர்களில் நீங்களும் ஒருவர்.
I am shrewd – நான் ஒரு சாமர்த்தியமான கிழட்டுக் குள்ளநரிப் பிறவி (என்னாது?)
‘You, wagonload – ஏ பாரவண்டி’. (‘பொதிமூட்டை’ என்று மொழிபெயர்த்தால் மாக்ஸிம் கார்க்கி கோபித்துக் கொள்வார் போலும்.)
Bayonets – துப்பாக்கிச் சனியன்கள் (?!)
It’s not easy for me – அது ஒன்றும் சாமானியமான சிரமம் அல்ல.
Cigarette stump – சிகரெட் கட்டை. (சிகரெட், துண்டுகளாக இல்லாமல் ருசிய நாட்டில் மட்டும் கட்டைகளாக விற்கப்படுகிறதோ என்னவோ?)
They sat around the fire, which consumed the wood quickly – தீ நாக்குகள் விறகுக் கட்டைகளைப் பேராசையோடு நக்கிக் கொடுத்தன. (ஆத்தீ! இது புதுசாவுல்ல இருக்கு!)
The peasant is on fire – இந்த முஜீக் ஓர் உருகிக் கொண்டிருக்கும் பேர்வழி. (அப்படீன்னா உடனே Fridgeகுள்ள வைங்க….! அவனது உற்சாகத்தைக் குறிக்கும் வரியைத்தான் உருகி உருகி எழுதியிருக்கிறார்)
…..a sudden dry shooting attack - … ஒரு வறண்ட குத்தலான பயபீதி
பகுதி 2
Behind the window, grey, heavy flakes of spring snow fluttered and settled softly and noiselessly upon the pane – ஜன்னலுக்கு வெளியே இலையுதிர் காலத்தின் கனத்த சாம்பல் நிறப் பனித்துண்டுகள் விழுந்து கொண்டிருந்தன. அந்தப் பனித்துண்டுகள் ஜன்னல் கண்ணாடிகளில் விழுந்து உருகி வழிந்து சத்தமின்றி நழுவி விழுந்தன.
It seemed as if the blare of a mighty brass trumpet were rousing men and… - ஏதோ ஒரு பிரம்மாண்டமான பித்தளையாலான எக்காளம் தனது அகன்ற வாயின் வழியாக, அந்தப் பாடலைப் பொழிந்து தள்ளுவது போலவும்…
Pavel’s bronzed face – பாவெலின் தாமிர நிற முகம்
…she gazed into vacancy without winking – அவள் தன் கண்களை இமை தட்டாமல் (கண் கொட்டாமல் என்றுதானே சொல்லுவோம்!) எதையுமே காணாமல் வெறுமனே விழித்துக் கொண்டு நின்றாள்.
Another note, breathing a deep full breath joined itself to the first and together they formed a vast fullness of sound that trembled beneath its own weight. Strange limpid notes rang out from under the fingers of her right hand and darted off in an alarming flight, swaying and rocking and beating against one another like a swarm of frightened birds – ஒரு தாழ்ந்த (‘ஆழ்ந்த’ என்பதே சரி என நினைக்கிறேன்) பெருமூச்சோடு மற்றொரு ஸ்வரமும் முதல் ஸ்தாயியோடு சேர்ந்து ஒலித்தது. அவளது வலது கைவிரல்களிலிருந்து ஸ்வரநாதம் பளிச்சிட்டுக் குபுகுபுவெனப் பொங்கிப் பிறந்தது. அந்த ஸ்வரங்கள் அந்தத் தாழ்ந்த ஸ்வரங்களின் இருண்ட சூழ்நிலையிலேயே பயந்தடித்துப் படபடத்துச் செல்லும் பறவைக் கூட்டம் போல் சிதறிப் பறந்தன.
The greed in your breasts has harrowed the people with iron claws – நீங்கள் உங்களது இரும்பாலான கோர நகங்களால் மக்களது மார்பகங்களை உழுது பிறந்தீர்கள். (ப்ச்…ஒண்ணும் சொல்றதுக்கில்ல!)
They stabbed the heart with a thousand pricks and called forth in her a quiet wrath, opening her eyes and straightening her backbone – சோக உணர்ச்சி முஷ்டியால் ஓங்கிக் குத்தித் தரையிலே மோதி விழச் செய்யும் உணர்ச்சியை மெதுமெதுவாகத் தூண்டி, முதுகை நிமிர்த்தி நேராக நிற்கச் செய்யும் உணர்ச்சியாக இருந்தது.
The sky will be sprinkled with blood and the earth will froth and foam with it like the suds of soap water – வானத்தில் இரத்த வெள்ளம் பரவும்; பூமி ஒரு சோப்பு போல இதில் நுரை தள்ளும் (என்ன ஓர் இரத்தக்களறியான மொழிபெயர்ப்பு!)
They saw their desires and thoughts in the distance, overhung with the dark bloody curtain of the past amid strangers unknown to them – அந்த மனிதர்களிடமிருந்து தங்களை ஒரு கரிய ரத்தம் தோய்ந்த கடந்த காலத்தின் இருள் படிந்த திரை பிரித்து நிற்பதாகவும் கண்டார்கள்.
பகுதி 3
‘உன் முகத்தில் மூக்கு இருப்பது எவ்வளவு தெளிவாயிருக்கிறதோ அவ்வளவு தெளிவானது இது’ – இதை வாசித்த உடன் ‘as plain as the nose on your face’ என்ற ஆங்கில மரபுச் சொற்றொடர் நினைவுக்கு வந்தது. இதைத்தான் அப்படியே தமிழாக்கம் செய்திருக்கிறார் என்றெண்ணி ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்தால் அதில் ‘It’s so plainly evident that it’s downright ridiculous’ என்றிருக்கிறது. வேறு ஆங்கில மொழிபெயர்ப்பில் இருந்து தமிழாக்கம் செய்தாரா அல்லது ருசிய மொழியில் இருந்தே மொழிபெயர்த்தாரா என அறிய வழியில்லை. ருசிய மொழி கற்ற பின்பு சொல்கிறேன்!
The grey-haired woman with the large honest eyes in her kind face attracted them powerfully – அகன்று விரிந்த பிரகாசமான கண்களோடு அந்த அன்புருவமான கிழவியைக் கண்டு எல்லோரும் தவிர்க்க முடியாதபடி கவர்ச்சி கொண்டார்கள் (எல்லோரின் கவனமும் தாயின் மீது திரும்பியதைத்தான் கவர்ச்சியாக(!) மொழிபெயர்த்திருக்கிறார்!)
You draw the heart after you talk – உங்கள் வார்த்தைகள் இதயத்தை இழுத்து நீட்டுகின்றன.
“You’ve bad luck, Nilovna”
“Oh, Well”
“You’re getting used to it?”
“நீலவ்னா, உனக்கு அதிருஷ்டமே கிடையாது”
“ஆமாம், எல்லாம் சரியாய்த்தான் இருக்கிறது” (நல்லவேளை, கிணறு என்று எழுதாமல் விட்டாரே!)
“பழகிப் போய்விட்டதா?”
தொ.மு.சி அவர்களுக்கு முரணான வார்த்தைகளைக் கோர்ப்பதில் (oxymorons) அலாதி பிரியம் போலும்!
His eyes were sunk deep beneath his forehead and glittered feverishly in their dark hollows – அவனது கண்கள் ஆழ்ந்து குழிந்து இருண்டு பள்ளத்தில் பதிந்து ஜுரத்தில் பிரகாசித்தன. (பொறுமை! பொறுமை! பொறுமையோ பொறுமை!)
Troubled sound – ஓல நாதம், கூச்சல் நாதம்
‘The red flag trembled in the air, moving to the right and to the left, then rose again – கொடி வானில் நடுங்கியது. முன்னும் பின்னும் ஆடியது. பின் நேராக நின்றது’.
கொடிக்கும் நடுக்கத்திற்கும் என்ன எழவு சம்பந்தம்? ‘செங்கொடி’ என்பதே உத்வேகத்தையும் மன எழுச்சியையும் உருவாக்கும் சொல் என்று ‘தோழர்’ தொ.மு.சி அவர்களுக்குத் தெரியாதா என்ன? இந்த மொழிப்பெயர்ப்பிற்கு வாசகர்கள் நிச்சயம் நடுங்கியிருப்பார்கள். ‘கொடி நடுங்கியது’ என்ற முரணை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.
இப்படியாக தொ.மு.சி அவர்களின் மொழிபெயர்ப்பு நடை(!) கொஞ்சம் கொஞ்சமாகப் பழகித் தொலைக்க ஆரம்பித்த பிறகு, மனம் தானாகவே சில இடங்களைப் புரிந்து கொள்ளத் துவங்கியது. ‘வசந்த கால வெங்காயம்’ என்ற அன்னாரது கூகுளுக்கு நிகரான மொழிபெயர்ப்பைக் கண்டதும் தானாகவே விளங்கிற்று… அது Spring Onion என்று. “அதற்கு ‘வெங்காயத் தாள்’ என்ற பெயர் உண்டே?” என்றெல்லாம் நாவலில் இவ்வளவு தூரம் கடந்து வந்த பிறகு அபிஷ்டு மாதிரி கேட்கப்பிடாது. “My dear ones!” என்பதை “அட! என் அருமைக் குஞ்சுகளே” என்று அவர் எழுதியிருந்ததைப் பார்த்தவுடன் அவரது குருநாதரின் ‘நியாயம்’ சிறுகதையில் வரும் தேவ இற(!)க்கம் நாடாரின் “விரியன் பாம்புக் குட்டிகளே!” ( “You brood of vipers!” – Matthew 12:34) என்னும் பிரசங்கம் நினைவிற்கு வரவே, பைபிளிலும் இது போன்ற பல மொழியாக்கங்கள் இருப்பது நினைவிற்கு வந்தன. “Woe to me if I do not preach the gospel!” – Corinthians 9:16. இயேசு நாதரே இன்னொரு அவதாரம் எடுத்து வந்தாலும் இதன் மொழியாக்கத்தைக் கண்டு மீண்டும் சாட்டையைத் தூக்குவார். “சுவிஷேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ!”
எந்த ஒரு படைப்பையும் நூறு சதவிகிதம் கச்சிதமாக மொழிபெயர்க்க இயலாதுதான்; அவ்வாறு மொழிபெயர்க்கவும் கூடாது. ‘மொழி’ என்பதில் நீண்ட நெடிய பாரம்பரியம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் என அனைத்தும் பொதிந்திருக்கும். எனவே அம்மொழிக்கே உரிய மரபுச் சொற்றொடர்கள், வசவுகள், உரிச்சொற்கள் என இருக்கும். அவற்றின் தனித்தன்மையை மதிக்க வேண்டும். ஒரு படைப்பு மொழியாக்கம் செய்யப்படும்போது வாசகன் அறிந்திராத ஒரு புதிய உலகம் அவனுக்கும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த அறிமுகப்படுத்தும் வைபவம் அவனது மொழியில் மிக இயல்பானதாகவும் ரசனையானதாகவும் இருப்பின், அப்புதிய உலகில் அவனையறியாமலேயே ஓர் அங்கமாகிப் போவான். எல்லா மொழிகளிலும் எல்லா மொழிகளுக்கும் உணர்வுகள் உண்டு. அவற்றின் வெளிப்பாடு மொழிக்குத் தகுந்தாற்போல் மாறலாம்.
‘உணர்வுகளுக்கு ஏது மொழி?’ என்றெல்லாம் வைத்துக் கொண்டு வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி அப்படியே மொழிபெயர்த்துத் தொலைத்துக் கைவரிசையைக் காட்ட முயல்வதால் உணர்வுகள் காணாமல் போய் விடுகின்றன. ‘புதிய களத்தைக் காட்டுகிறேன் பேர்வழி’ என்று துருத்தலாகவும் செயற்கையாகவும் தோன்றும் (மொழிபெயர்ப்பாளர்களுக்கு அவ்வாறு தோன்றவில்லையோ என்னவோ?) சொற்களையும் வாக்கியங்களையும் பொழிந்து வாசகனின் மொழியைக் குற்றுயிரும் குலையுயிருமாக்குதல் எல்லாம், அந்தப் படைப்பிற்கு மட்டுமல்ல… அதன் படைப்பாளிக்கு, இரு மொழிகளுக்கு, வாசகனுக்கு செய்யப்படும் பெருந்துரோகம். மொழியாக்கத்தின் போது பல சமரசங்கள் செய்யத்தான் வேண்டும். எந்தெந்த இடங்களில் என்று தெரிவு செய்வதே சான்றாண்மை. மூலப்படைப்பில் இருக்கும் உணர்வுகளையும் கருத்துக்களையும் மொழியாக்கம் செய்யும் மொழியின் அழகிய ரசனையான நடையில் அதே வீரியத்தோடு மீள் உருவாக்கம் செய்வதே ஒரு நல்ல மொழிபெயர்ப்பாகும்.
மூலப்படைப்பில் ஒரு கதாபாத்திரம் வருத்தத்தில் அழுகிறது; கண்ணீர் தரையைத் தொடும் முன்பே அப்பனிப்பிரதேசத்தில் அதுவும் உறைந்து விடுகிறது என்று கொள்ளுங்கள். இதன் மொழிபெயர்ப்பை கரிசல்காட்டில் உச்சி வெயிலில் அமர்ந்து வாசிக்கும் நமக்கும் கண்களின் ஓரம் நீர் பெருக வேண்டும். அது உறைந்து போகும் அளவிற்கு நமக்கும் குளிர் அடிக்க வேண்டும். அதை விடுத்து ‘ஸ்ஸ்ஸ்ஸப்பா…. இந்த மொழிபெயர்ப்பிற்கு இப்புழுதிக்காட்டின் புழுக்கமே பரவாயில்லை’ என்று புத்தகத்தை தூக்கி எறிய வைக்க அல்லவா செய்கின்றன பல மொழியாக்கங்கள்? நல்ல கருத்துச் செறிவுள்ள பாடலைக் கர்ண கொடூரமாக அபஸ்வரமாக ஒருவர் பாடினால் ‘ஆஹா… கருத்தா பாடுறாரே…பிரமாதம்!’ என ரசிக்கவா முடியும்? ‘மொழிபெயர்ப்பதற்கு இரு மொழிகளும் தெரிந்தால் மட்டும் போதாது; இரண்டிலும் ஆளுமை பெற்றுத் திகழ வேண்டும்’ என்பதை யாரேனும் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் புரியும்படி மொழிபெயர்த்துச் சொன்னால் தேவலை.
எனது விமர்சனத்தை ஆங்கிலத்தில் யோசித்து இவர்களின் பாணியில் மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான்………
மொழிபெயர்ப்பு என்பதே ஒரு கலை. அதை ‘மத’மாகச் செய்யக்கூடாது! ‘தாய்’ நாவலை வாசித்து முடிப்பதற்குள் மெழுகுவர்த்தியின் இரு முனைகளையும் எரிக்க வேண்டியதாயிற்று! இந்த நாவலுக்காக அவருக்குப் புறங்கைப் பாரட்டுக்கள் ஒன்றும் குவிந்ததாகத் தெரியவில்லையே! ‘மொழியாக்கம்’ என்பதை ‘கேக்’ துண்டு என நினைத்துவிட்டார் போல! இது ஒன்றும் தேநீர் கோப்பைக்குள் புயலடிக்கும் விஷயமல்ல! இம்மொழிபெயர்ப்பைப் படித்தெல்லாம் ஒருவனுக்குள் போராட்ட குணம் வந்துவிடும் என்றால் அது வெள்ளைப் பொய்! (ஆமாமா…. பச்சைப் பொய்னுதான் தமிழ்ல உண்டு. ஆங்கிலத்தில் White lies தானே? ஆங்…. வலிக்குதா… அப்படித்தான் எங்களுக்கும் இருந்துச்சு…..) இப்படியெல்லாம் விமர்சனம் எழுதி தொ.மு.சி யின் இடியை ஒன்றும் நான் திருட முயலவில்லை!
இவ்வுலகில் புனிதமானது என்றோ புனிதர்கள் என்றோ யாரும் கிடையாது. அனைத்தும் அனைவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே. தொ.மு.சி யை விமர்சனம் செய்ய எனக்கு வயது காணாது, சான்றாண்மை பத்தாது என்ற என் மீதான விமர்சனங்கள் தாராள மனதோடு வரவேற்கப்படுகின்றன. ஆனால் தொ.மு.சி யின் ‘தாய்’ மொழிபெயர்ப்பை வாசிச்சிட்டு வாங்க!
‘தாய்’ மொழிபெயர்ப்பில் இரு வேறு இடங்களில் இவ்வாறு எழுதியிருப்பார்….
“வார்த்தை அலங்காரமும் உணர்ச்சியின் வறட்சியும் கொண்ட அந்த பேச்சு பாவெலையும் அவனது தோழர்களையும் கொஞ்சம்கூடத் தொட்டதாகத் தெரியவில்லை. எந்த விதத்திலும் பாதிக்கவில்லை”
“நீ நன்றாகத்தான் பேசுகிறாய். ஆனால் உன் பேச்சு இதயத்தைத் தொடவில்லை. ஆமாம், நீ அவர்களது இதயங்களைத் தொடுகிற மாதிரிப் பேச வேண்டும்! இதயத்தின் மத்தியிலேதான் தீப்பொறி விழ வேண்டும். உன் வார்த்தைகளை இரத்தத்தில் தோய்த்தெடுக்க வேண்டும் பாவெல்”
– இது தொ.மு.சியின் மொழிபெயர்ப்புக்கும் பொருந்தும்.
- சோம.அழகு