ஜப்பானிய இலக்கியங்கள் முற்காலத்திலிருந்தே எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் முறையாகத் தொகுக்கப்பட்டு முழு வடிவம் கொண்ட தொகுப்புகளாக உருவம்பெற்றன. கொஜிகி (Kojiki), நிஹொன்ஷொகி (Nihonshouki), ஃபுதொகி (Fudoki), கைஃபுஸொ (Kaifuso), மன்யோசு (Manyoshu) ஆகியன ஜப்பானிய தொடக்ககால இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவை முறையே கி.பி. 712, 720, 733, 751, 759 ஆகிய ஆண்டுகளில் முழுவடிவம் பெற்றன. இவ்விலக்கியங்களுக்குப் பின்னர் தோன்றிய இலக்கியங்களைச் செவ்விலக்கியங்களாகக் கருதுகின்றனர். அவற்றுள் சிலவற்றை அறிமுகம் செய்து அவற்றின் தோற்றப் பின்னணியையும் உள்ளடக்கத்தையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

japanese artஜப்பானிய இலக்கிய வரலாற்றில் கி.பி. 794 முதல் கி.பி. 1186 வரையிலான காலம் செவ்வியல் காலமாக அறியப்படுகிறது. இதனை ஹேயியன் (Heian) காலம் அல்லது செவ்வியல் காலம் என்பார் ஜப்பானிய இலக்கிய வரலாற்றாசிரியர் டபிள்யூ. ஜி. அஸ்டன். ஹேயியன் என்பது தற்போதுள்ள கியோடோ பகுதியைக் குறிப்பது. இக்காலத்தில் கியோடோவைத் தலைமையிடமாகக் கொண்டு நிலையான அரசு அமைந்தது. ஜப்பானிய இலக்கிய வரலாற்றாசிரியரான ஷுஇச்சி காதொ (Shuichi Kato) செவ்வியல் காலத்தின் தொடக்கமான ஒன்பதாம் நூற்றாண்டை முதல் திருப்புமுனை (The First Turning Point) என்றே கூறுகிறார். ஏனெனில் இக்காலத்தில் அரசியல், பொருளாதாரம், சமூகம், மொழி, அழகியல் என அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டதோடு அதனை மேம்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்றன (2002: 92). குறிப்பாக, இலக்கியங்களைப் பொறுத்தவரையில் கவிதை வகைகளோடு புனைகதைகள், நாவல், நாட்குறிப்புகள், கட்டுரைத் தொகுதி, கதைத் தொகுதி எனப் பல இயற்றப்பட்டன. இவ்வகையான வளர்ச்சிக்கு பௌத்த சமயமும் பங்காற்றியுள்ளது. மேற்குறிப்பிட்ட இலக்கிய வகைகள் நவீன வகைப்பாடுகளே என்றாலும் புரிதலுக்காக இங்கு பயன்படுத்தப்படுகின்றன.

பௌத்தம்

பௌத்த சமயத்தைத் தவிர்த்துவிட்டு ஜப்பானிய இலக்கிய வரலாற்றை அணுக இயலாது என்பதனால், இச்சமயத்தின் பங்களிப்பினை ஷுஇச்சி காதொ பின்வருமாறு குறிப்பிடுகிறார். ஹேயியன் காலத்தில் பௌத்த சமய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. இக்காலத்தில் பௌத்தில் இரு பிரிவுகள் காணப்பட்டன. சாய்சோ (SAICHO) துறவியால் தென்டாய் (TENDAI) பிரிவும், ஷின்கொன் (SHINGON) துறவியால் கூகாய் (Kukai) பிரிவும் தோற்றுவிக்கப்பட்டன. இவர்கள் இருவரும் சீனா சென்று கல்வி கற்றுத் திரும்பியவர்கள் ஆவர். அரசவையில் முக்கியப் பங்குவகித்த இவ்விரு பிரிவு பௌத்தர்களும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதில் கவனம் செலுத்தினர். எடுத்துக்காட்டாக கூகாய் பிரிவு பௌத்தர்கள் மேற்கொண்ட பணிகளைக் குறிப்பிடலாம். நீர்ப்பாசன முறைகளை ஒழுங்குபடுத்துதல், சாதாரண மக்கள் கல்வி கற்பதற்காகப் பள்ளிகளைத் தொடங்குதல் எனப் பல பணிகளைச் செய்துள்ளனர். எப்பிரிவு பௌத்தர்களாக இருப்பினும் நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர்களாகவும், நாட்டிற்குத் துன்பம் ஏற்படும் வேளைகளில் அதனை அறிவுக்கூர்மையுடன் சரிசெய்தவர்களாகவும் இருந்துள்ளனர்.

ஜப்பானில் பௌத்தம் பரவியிருந்த காலத்தில் சீனாவில் தாவோயிஸத்தின் தாக்கத்தால் பௌத்தம் அங்கு அழிய ஆரம்பித்தது. அப்பொழுது சீனாவில் நடந்த நிகழ்வுகளை என்நின் (ENNIN - 794 -864) என்ற ஜப்பானிய பௌத்தத் துறவி தனது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். சமய விருப்புவெறுப்பின்றி சீனாவில் நடந்த நிகழ்வுகளை உள்ளது உள்ளபடி பதிவுசெய்துள்ளதால் இது முக்கிய வரலாற்று ஆதாரமாகத் திகழ்கிறது. இவர் சீனாவிலிருந்து திரும்பியவுடன் அங்கு தனக்குக் கிடைத்த அனுபங்களை வைத்து தென்டாய் பிரிவை (TENDAI) வளப்படுத்துகிறார். இவரைப் போன்றே வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய ஜப்பானியர்கள் தாங்கள் பெற்ற அனுபங்களின் வழி நாட்டைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தினர். சீனாவில் நிலவிய குழப்பமான சூழ்நிலையால் சீனாவுடனான உறவுகள் படிப்படியாகக் குறைந்தன (Shuichi Kato, 2002: 96-98).

இலக்கியங்களின் தன்மை

ஹேயியன் காலத்தில் இலக்கியம் எழுதுதல், வாசித்தல் என அனைத்தும் அரசவை சார்ந்த மக்களாலேயே மேற்கொள்ளப்பட்டன. அடித்தட்டு மக்களின் பங்களிப்பு எதுவும் இடம்பெறவில்லை. அரசவை சார்ந்தவர்கள் அதிலும் குறிப்பாகப் பெண்களின் பங்களிப்பு அதிக அளவில் காணப்பட்டது. பெண்கள் இயற்றிய இலக்கியங்களே இக்காலத்தின் சிறந்த இலக்கியகளாகத் திகழ்கின்றன. ஜப்பானில் பெண்களின் நிலைகுறித்து விளக்க முற்படும் அஸ்டன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘பழங்கால ஜப்பானில் பெண்கள் அரசர்களாக இருந்த நிலை சீனாவின் தலையீட்டால் மாறியது. அதன்பின் ஹேயியன் காலத்தில்தான் பெண்களுக்குக் கல்வி, எழுத்து உரிமைகள் வழங்கப்பட்டன. அதனால் பெண்கள் பல நூல்களை எழுதினர்’ (1986:55-56) என்கிறார்.

சீன மொழியில் எழுதுவதையே விரும்பிய ஜப்பானியர்கள் 9ஆம் நூற்றாண்டு முதல் ஹிரகானா, கதகானா ஆகிய ஜப்பானியர்களுக்கான எழுத்துகளையும் பயன்படுத்தி அதிக அளவில் எழுதத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக, பெண்கள் ஹிரகானாவின் மீட்டுருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினர். இது மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. ஹிரகானா எழுத்துகள் பழங்கால ஜப்பானில் பயன்பாட்டில் இருந்ததாகத் தெரிகிறது. முன்னர் குறிப்பிட்டதைப் போன்று ஹிரகானாவில் எழுதிய அதே காலகட்டத்தில் ஏய்குவா கதை (Yeigwa Monogatari), கண்ணாடிக் கதை (o-kagami) போன்றவற்றை சீன மொழியில் எழுதினர். ஹிரகானா என்பது பெண்களின் எழுத்துமொழியாகவே தொடக்கத்தில் பார்க்கப்பட்டது. காலப்போக்கில் ஆண்களும் ஹிரகானாவில் இலக்கியங்களை எழுதினர்.

கொகின்வாகாஷு (அல்லது) கொகின்ஷு

கொகின்வாகாஷு (அல்லது) கொகின்ஷு (Kokin Wakashu or Kokinshu) என்ற கவிதைத் தொகுதியை அரசரின் ஆணைக்கிணங்க செவ்வியல் காலத்தின் தொடக்கத்தில் தொகுத்துள்ளனர். 20 தொகுதிகள் கொண்ட இதில் 1100 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகளில் ஐந்து மட்டுமே நீண்ட கவிதைகளாகும் (Naga - uta). பிற அனைத்தும் 31 அசைகள் கொண்ட வாகா வகைக் கவிதையைச் சார்ந்தவை. இக்கவிதைகள் 150 வருடங்களாக ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் நடந்த போட்டிகளில் வாசிக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் கானா வகை எழுத்துகளைக் கொண்டவை. இயற்கையின் அழகு கொகின்ஷுயின் பாடுபொருளாக அமைந்துள்ளது. கொகின்ஷு பாடல்களை அரசவைக் கவிஞர்களும் மன்னர்களும் அரண்மனையில் இருந்த பிறரும் இயற்றியுள்ளனர். கொகின்ஷுவை அரசவைப் பாடல்களின் தொடக்க கால வடிவம் என்பர்.

கதைகள்

செவ்வியல் காலத்தில் புகழ்பெற்ற கதைகளாக மூங்கில் வெட்டியின் கதை (Taketori Monogatari), இசே கதை (Ise Monogatari), கெஞ்சி கதை (Genji Monogatari) ஆகியன திகழ்கின்றன. இவைதவிர பிற கதைகளும் இருந்துள்ளன.

மூங்கில் வெட்டியின் கதை

ஜப்பானியக் கதைகளுள் மூங்கில் வெட்டியின் கதை மிகவும் பழமையானது. இதன் காலம், இயற்றியவர் பெயர் ஆகியவை கிடைக்கவில்லை. பிற கதைகளிலிருந்து சற்று மாறுபட்ட கதைப்போக்கினைக் கொண்டுள்ளது. முங்கில் வெட்டும் தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தது. ஒரு நாள் மூங்கில் வெட்டச் சென்றபோது ஒரு மூங்கிலின் அடிப்பாகம் ஒளிர்ந்தது. அதனை வெட்டிப்பார்த்த போது அதில் ஒர் அழகிய சிறு பெண் காணப்பட்டாள். அவளை வீட்டிற்குக் கொண்டுவந்து பாதுகாப்பாக வளர்த்தனர். அவள் வளர்ந்து அழகிய இளம்பெண்ணான பின் அவளை மணந்துகொள்ள ஏற்பட்ட போட்டிகள், பின் அவள் தனது சொந்த இடமான நிலவிலிருந்து இங்கு வந்ததாகக் கூறி அங்கு திரும்பிச் செல்லுதல் என்று கதை அமைந்துள்ளது. இதன் கதைப்பின்னல், கரு ஆகியவை பழைய சீன மரபிலிருந்தும், பௌத்த மரபிலிருந்தும் வந்தனவாகக் கருதப்படுகின்றன (Group of Editors, 1956: 35). இக்கதையின் ஒரு வடிவம் ‘மூங்கில் வெட்டியின் கதை’, ‘மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும்’ ஆகிய தலைப்புகளில் தமிழில் மொழிபெயர்ப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இசே கதை (Ise Monogatari)

முங்கில் வெட்டியின் கதையைப் போன்றே இதுவும் பழமையானதாகச் சுட்டப்படுகிறது. இக்கதையின் காலம், இயற்றியவர் பெயர் ஆகியவற்றை அறிய இயலவில்லை. கதைத் தலைவனான இசேவின் பல்வேறு காதல் நிகழ்வுகள் இக்கதையில் இடம்பெற்றுள்ளன. ஏதேனும் ஒரு வகையில் இந்நிகழ்வுகள் அல்லது கதை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. சிறு குறிப்போடு தொடங்கும் ஒவ்வொரு கதையிலும் ஒன்றோ அல்லது இரண்டு வாகா பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மொத்தம் 143 பகுதிகள் உள்ளன. ‘அரிவரா நொ நொரிஹிரா’வே (Ariwara no Norihira) இக்கதையின் கதைத் தலைவனாக இருக்கலாம் என்றும், இவரே இக்கதையின் கதைத் தலைவனாகவும் ஆசிரியராகவும் இருந்திருக்கலாம் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன. இசே கதைக்குப் பின்னர் தோன்றிய கதைகளுக்கு இது முன்மாதிரியாகத் திகழ்கிறது. ஏதேனும் ஒரு வகையில் இக்கதையைப் பின்பற்றியோ அல்லது தழுவியோ கெஞ்சி கதை (Genji Monogatari), உதுபோ கதை (Utubo Monogatari), யமடொ கதை (Yamato Monogatari) போன்ற பிற்கால கதைகள் அமைந்தன.

கெஞ்சி கதை (Genji Monogatari)

கெஞ்சி கதையை முரசாகி ஷிகிபூ (Murasaki Shiki­bu) என்னும் பெண் எழுதியுள்ளார். இதனை உலகின் முதல் நாவல் என்று குறிப்பிடுபவரும் உள்ளனர். கெஞ்சி கதையை சாகித்திய அகாதெமி வெளியீடாக கா.அப்பாத்துரையார் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கதையாசிரியரான முரசாகி, ஹேயியன் கால அரசவையில் பணிப்பெண்ணாக இருந்தவர். இவர் குறித்த விரிவான தகவல்கள் அவரே எழுதிய நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன. கெஞ்சி கதையில் மொத்தம் 54 இயல்கள் உள்ளன. இது ஹிகாரு கெஞ்சி (Hikaru Kenji) என்ற இளவரசனின் வாழ்க்கையை விவரிக்கும் கதையாகும். அழகும், அறிவும், திறமையும் கொண்டவனாகச் சித்திரிக்கப்படும் கெஞ்சியின் பல்வேறு காதல் கதைகள் இதில் இடம்பெறுகின்றன.

ஹேயியன் கால ஆட்சிமுறையில் நடந்த பல்வேறு நிகழ்வுகள் கெஞ்சி கதையில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதனை ஜப்பானிய எழுத்துகளான கானாவில் முரசாகி எழுதியுள்ளார். 54 இயல்களுள் இறுதியாக உள்ள மூன்று இயல்கள் கெஞ்சியின் மகனான காவொரு (Kaoru) குறித்து விளக்குகின்றன. அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சிறு வயது முதலே கெஞ்சி அனுபவித்தத் துன்பங்கள், காதலில் ஏற்பட்ட தோல்விகள், அவனது நிறைவேறாத ஆசைகள், தனக்கான உண்மையான காதலைத் தேடி அலைதல் எனப் பல நிகழ்வுகள் இக்கதையில் இடம்பெற்றுள்ளன.

நாட்குறிப்புகள் (Diaries)

செவ்வியல் காலத்தில் நான்கு நாட்குறிப்புகள் கிடைக்கின்றன. எழுதியவர்களுள் மூவர் பெண்கள். இந்நாட்குறிப்புகள் ஒவ்வொன்றும் பல்வேறு வகைகளில் வரலாற்று ஆவணங்களாகக் கருதப்படுகின்றன. அவற்றுள் டோசா நாட்குறிப்பே (Tosa Nikki) முதன்முதலில் எழுதப்பட்டது. அதன்பின் ககெரொ நாட்குறிப்பு (KAGERO NIKKI), முரசாகி ஷிகிபூ நாட்குறிப்பு (Murasaki Shikibu Nikki), சரஷினா நாட்குறிப்பு (Sarashina Nikki) ஆகியன எழுதப்பட்டன.

டோசா நாட்குறிப்பு (Tosa Nikki)

டோசாவின் நாட்குறிப்பு குறித்து டபிள்யூ. ஜி. அஸ்டனின் (W.G. Aston) விளக்கமே இங்கு இடம்பெறுகிறது. டோசாவின் நாட்குறிப்பு சுராயுகியின் (Tsurayuki) பயணக்குறிப்பேடாகும். இவர் டோசா என்னும் பகுதியில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் தலைநகரான கியோடோவை நோக்கிய தனது பயண அனுபங்களைப் பதிவுசெய்கிறார். ஒரு பெண்ணின் நாட்குறிப்பு போன்று எழுதத் தான் முயற்சி மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டு எழுதத் துவங்கும் சுராயுகி கானா வகை எழுத்துகளையே பயன்படுத்தி எழுதியுள்ளார். தான் பயணம் மேற்கொள்ளத் தொடங்கிய முதல்நாள் தொடங்கி ஏறக்குறைய ஒன்றரை மாதகால அனுபவங்களைப் பதிவுசெய்துள்ளார். கடலில் பயணம் செய்யும்போது ஏற்பட்ட இடர்பாடுகள், விரத நாட்களில் கிடைத்த உணவுகள், பயணத்தின் இடையிடையே தங்கிச்சென்ற இடங்கள் எனப் பலவற்றைப் பற்றி எழுதியுள்ளார். நிகழ்வுகளை மிகைப்படுத்திக் கூறாமல் உள்ளது உள்ளபடி கூறும் தன்மை இப்பிரதியின் சிறப்புகளுள் ஒன்றாகச் சுட்டப்படுகிறது (1986:67-76).

ககெரொ நாட்குறிப்பு (KAGERO NIKKI)

டோசா நாட்குறிப்பு எழுதப்பட்டு நாற்பது ஆண்டுகளுக்குப் பின் ககெரொ என்பவரின் நாட்குறிப்பு எழுதப்பட்டது. தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இப்பெண் பதிவுசெய்துள்ளார். இதனை நாட்குறிப்பு என்பதைவிட தன்வரலாறு என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்ற கருத்தினை இலக்கிய வரலாற்றாசிரியர்கள் பரவலாகப் பதிவு செய்கின்றனர். ஹேயியன் கால நிகழ்வுகளை அறிந்துகொள்ள இந்நூல் துணைநிற்கிறது. இவரது தங்கையின் மகளான சரஷினாவும் ஒரு நாட்குறிப்பினை எழுதியுள்ளார். ககெரொ தனது இருபதாவது வயதில் காதல் வயப்பட்டபோது இந்த நாட்குறிப்பினை எழுதத் துவங்கியதாகக் குறித்துள்ளார். ஏனெனில், பெண்களுக்குக் காதல் வந்தாலும் அதனைக் கடிதத்தின் மூலம் வெளிப்படுத்த இயலாத சூழல் இருந்துள்ளது. ஆண்கள் கடிதங்கள் எழுதினால் அதற்குப் பதில் எழுதுவது பெண்களின் நிலையாக இருந்ததேயன்றி பெண்களாக முதலில் கடிதம் எழுதும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. சிறிது காலத்திற்குப் பின்னர் தனது காதலன் கடிதம் எழுத, இவரின் காதல் வெற்றிபெறுகிறது. அடுத்த வருடத்திலேயே ஒரு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்தவுடன் கணவனின் காதல், கடிதம் இரண்டுமே குறைந்துவிடுகின்றன. தனது கணவரின் மீது தனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள், அவரை வேவு பார்த்தல், வேறு ஒரு பெண்ணுடன் கணவருக்கு இருந்த தொடர்பு, அவளுக்கும் குழந்தை பிறந்தவுடன் அவளையும் தனது கணவன் விட்டு விலகுதல், அந்தப் பெண்ணின் துன்பத்தை ககெரொ நினைத்தல் ஆகிய மனப் போராட்டங்களை இந்நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.

தனது கணவன் மீதுள்ள காதல் சிறிதும் குறையாத போது, அவர் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்ற கோபம், அதனால் பௌத்தத் துறவியாகலாமா அல்லது இறந்துவிடலாமா என்பன போன்ற மனப் போராட்டங்களைத் தெளிவாகப் பதிவுசெய்கிறார். தனது மகனின் இருபதாவது வயதில் நாட்குறிப்பு எழுதுவதனை நிறுத்திக்கொண்டுள்ளார். நாட்குறிப்பில் பெரும்பாலான பகுதிகள் இவரது காதல் தொடர்பாகவே உள்ளன. நாட்குறிப்பின் இறுதியில் உள்ள பகுதிகள் செறிவானவையாகவும், அவரின் அனுபவங்களைத் தெளிவாக விளக்குவனவாகவும் அமைந்துள்ளன. ககெரொ கி.பி.996இல் தனது அறுபதாவது வயதில் இயற்கை எய்தினார்.

முரசாகி ஷிகிபூ நாட்குறிப்பு (Murasaki Shikibu Nikki)

கெஞ்சி கதையை எழுதிய முரசாகி ஷிகிபூவின் நாட்குறிப்பு 1008ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. முரசாகியின் கணவர் இறந்தபின் அரண்மனையில் பணிப்பெண்ணாகச் சேர்கிறார். அரண்மனை வழக்கப்படி மகப்பேறு காலத்திலும் குழந்தை பிறப்புக்குப் பிறகும் செய்யப்படும் சடங்குகளை நாட்குறிப்பில் விரிவாக விளக்கியுள்ளார். அரண்மனை­யிலிருந்த பல்வேறு பெண்களின் நிலை, அரசியர் நிலை ஆகியவற்றை விளக்கியதோடு தனது சொந்த வாழ்வில் நிகழ்ந்தவைகளையும் விவரித்துள்ளார். தனது சகோதரருடன் சீனமொழி பயின்றபோது, அவரைக் காட்டிலும் முரசாகி சிறந்து விளங்கினார். அதனைக் கண்ட அவரின் தந்தை, ‘நீ ஏன் ஒரு ஆணாகப் பிறந்திருக்கக் கூடாது’ என்று கூறியதாகவும் பதிவுசெய்துள்ளார்.

ஒருவர் தான் கல்வியறிவு பற்றிப் பெருமையாகக் கூறுவது அழகல்ல என்ற தனது தந்தையின் வார்த்தைகளைப் பின்பற்றி எங்கு சென்றாலும் பணிவுடன் நடந்துகொண்டது, தனக்கு சீனம் தெரிந்திருந்தாலும் தனக்குத் தெரியாது என்றே பிறரிடம் கூறியது, இதனால் சீன புத்தகங்கள் வாசிக்கும் போது பல்வேறு கேலிகிண்டல்களுக்கு ஆளானது போன்ற செய்திகளை முரசாகி தனது நாட்குறிப்பில் பதிவுசெய்துள்ளார். மேலும், கெஞ்சி கதையை வாசித்தவர்கள் முரசாகியைச் சந்திக்க விரும்பியதாகவும், அதைக் கண்ட அரண்மனை­யிலிருந்த பிற பெண்கள் பொறாமை கொண்டதாகவும் பதிவுசெய்கிறார். கணவனை இழந்து வாழ்க்கையில் நிம்மதியின்றி அரண்மனைப் பணிக்குச் சென்ற இவருக்கு அங்கும் நிம்மதி இல்லாததால் துன்பப்பட்டார். தனது குழந்தையின் பொருட்டு பௌத்தத் துறவியாகாமல் அரசவையில் பணியாற்றினார். முரசாகி தனது சமகால எழுத்தாளர்கள் குறித்தும் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். கெஞ்சி கதையை வாசித்த அரசர் மிச்சினாகாவுக்கு ஆசிரியர் ஆற்றிய எதிர்வினையோடு நாட்குறிப்பு நிறைவடைகிறது.

சரஷினா நாட்குறிப்பு (Sarashina Nikki)

கி.பி.1020இல் தொடங்கும் இந்நாட்குறிப்பு, 12 வயது முதல் 51 வயது வரை சரஷினா என்னும் பெண்ணின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக இந்நாட்குறிப்பு அமைந்துள்ளது. சரஷினாவின் கற்கும் ஆர்வம், அவரது தந்தையின் பணியின் காரணமாகத் தடைபடுகிறது. கஸுஸ (Kazusa) என்கிற பகுதியில் இருந்ததால் அவருக்குப் புத்தகங்கள் கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. எனவே விரைவில் தலைநகருக்குப் பணிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று புத்தரிடம் வேண்டியதாகவும் அதன்பின் ஓராண்டில் பணிமாற்றம் கிடைத்ததாகவும் குறிப்பிடுகிறார். சரஷினாவின் தலைநகர் நோக்கிய பயணம் மூன்று மாதகாலம் நீடிக்கிறது. அப்பொழுது தான் சந்தித்த புது அனுபவங்களைப் பதிவுசெய்துள்ளார். தலைநகருக்குச் சென்றவுடன் ஏராளமான நூல்களைக் கற்றார். படிப்பது மட்டுமே வாழ்க்கையின் நோக்கம் என்று கருதினார்.

கெஞ்சி கதையைப் படிக்க விரும்பிய சரஷினா அதன் ஒரு பிரதி தனக்கு எப்படியாவது கிடைக்க வேண்டும் என்று புத்தரிடம் வேண்டியதாகக் குறிப்பிடுகிறார். அதன்பின் வியக்கத்தக்க வகையில் அவரது சித்தி கெஞ்சி கதையின் ஒரு பிரதியைப் பரிசாகக் கொடுக்கிறார். அதனால் தனக்கு ஏற்பட்ட எல்லையில்லா ஆனந்தத்தை நாட்குறிப்பில் பதிவுசெய்துள்ளார். மேலும், தான் கண்ட கனவுகள், கனவுகளுக்கு எந்த அர்த்தமும் இல்லாதிருந்தாலும், தானாக ஒன்றினை அர்த்தப்படுத்திக்கொள்ளுதல் முதலிய செய்திகளைக் குறிப்பிடுகிறார். புத்தகங்களே வாழ்க்கை என்று நினைத்த இவர், தனது 33வது வயதில் ஒரு அரசக் குடும்பத்தில் பணிப்பெண்ணாகச் சேர்ந்தபோதே உண்மைக்கும் எழுத்திற்கும் உள்ள இடைவெளியை உணர்ந்தார். அடுத்த வருடத்தில் திருமணம் செய்துகொண்டார். இவ்வாறு இவரது நாட்குறிப்பு கி.பி. 1059 வரை தொடர்கிறது.

கட்டுரைத் தொகுதி - மகுரா நொ சோஷி (Makura no Soshi)

மகுரா நொ சோஷி என்பது கட்டுரைத் தொகுப்பாகும். இதனைச் செய் ஷோனகோன் (Sei Shonagon) என்னும் பெண் எழுதியுள்ளார். அரசவையில் பணிப்பெண்ணாக இருந்த இவர் சீன இலக்கியத்தில் சிறந்து விளங்கியதால் மிகவும் பிரபலமானவராக அரண்மனையில் வலம் வந்ததாகக் குறிப்பிடுகிறார். இவர் பத்தாண்டுகள் அரசவையில் பணியாற்றிய பின் தனது 24ஆம் வயதில் துறவியானார். தனது அரண்மனை அனுபவங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் சிறியதும், பெரியதுமாக 300 கட்டுரைகளாக எழுதியுள்ளார். இதனை நான்கு வகைகளில் பிரித்துள்ளனர்.

  1. பல்வேறு துறைசார்ந்த கட்டுரைகள்
  2. பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் கட்டுரைகள்
  3. திக்கற்ற வாழ்வின் குறிப்புகளை விளக்கும் கட்டுரைகள்
  4. தன்வரலாற்றுக் கட்டுரைகள்

இந்தத் தலைப்புகளுக்குள் பல்வேறு உட்தலைப்புகளும் உள்ளன. இந்நூலிற்குப் பல்வேறு மூலப்பிரதிகள் காணப்படுகின்றன.

உயர்ந்த கண்ணாடி (Okagami)

உயர்ந்த கண்ணாடி என்ற இந்த உரையாடல் நூலில் மொத்தம் பதினான்கு தலைமுறைகள் குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன. 150 வயதுடைய ஒருவரும், 140 வயதுடைய மற்றவரும் தங்களின் வாழ்க்கை அனுபங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது அதனை ஒரு சமுராய் ஆர்வமுடன் கேட்கிறான். பல்வேறு செய்திகளை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் சமுராய் அவர்களைக் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறான். உண்மைத் தன்மைக்காகப் புகழ்பெற்ற இந்நூலின் சில செய்திகள் நகைச்சுவையாகவும் அங்கதமாகவும் உள்ளன. இயற்றியவர் பெயர் அறியப்படாத இந்நூல் ஹேயியன் கால இறுதியில் எழுதப்பட்டதாகும்.

கதைத் தொகுதி

நிகழ்கால, இறந்த கால கதைகளின் தொகுதி ‘கொன்ஜாக்கு’ கதைகளாகும் (Konjaku Monoga­tari). இக்கதைகள் ஹேயியன் கால இறுதியில் 31 புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டன. அவற்றை மூன்று பிரிவுகளுக்குள் அடக்குவர்.

  1. இந்தியப் பிரிவுக் கதைகள் - 1 முதல் 5 ஆம் புத்தகம் வரை - 187 கதைகள்
  2. சீனப் பிரிவுக் கதைகள் - 6 முதல் 10 ஆம் புத்தகம் வரை - 180 கதைகள்
  3. ஜப்பான் பிரிவுக் கதைகள் - 11 முதல் 31 ஆம் புத்தகம் வரை - 736 கதைகள்

இவ்வாறு 1103 கதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இக்கதைகளை இந்திய புத்த ஜாதகக் கதைளோடு ஒப்பிடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது (Group of Editors, 1956:97).

கி.பி. 794ஆம் ஆண்டு தொடங்கும் ஜப்பானிய செவ்விலக்கியங்கள் முற்கால இலக்கியங்களிலிருந்து வெகுவாக மாறுபட்டு அமைந்துள்ளன. சமூகம், மொழி என அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்ட இக்காலத்தில் இவ்வகை இலக்கியங்கள் தோன்றியுள்ளன. மொழி, சமூக முன்னேற்றத்தில் பௌத்த சமயம் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளது. கவிதைத் தொகுதிகள், பல்வேறு கிளைக்கதைகளைக் கொண்ட கதைகள், ஒரு மையப்பொருள் கொண்ட கதைகள், பல்வேறு செய்திகளை விளக்கும் நாட்குறிப்புகள், கட்டுரைத் தொகுதிகள், கதைத் தொகுதிகள் போன்ற வகைகளில் இலக்கியங்கள் அமைந்துள்ளன. கேள்வி, பதில் முறையில் அமைந்த நூலும் காணப்படுகின்றது. சமூக நிர்வாகம், மொழி, இலக்கியங்கள் என அனைத்திற்கும் சீனாவினை பின்பற்றிய ஜப்பானியர்கள், செவ்வியல் காலத்தில் தங்களுக்கான இலக்கியத்தினை தங்கள் மொழியின் வரிவடிவத்திலே கட்டமைப்பதில் முனைப்பாகச் செயல்பட்டுள்ளனர் என்பதையும் அறியமுடிகிறது.

குறிப்புகள்

  1. ஜப்பானிய செவ்வியல்கால இலக்கியங்கள் குறித்த கருத்துகள் டபிள்யூ.ஜி. அஸ்டன் (W.G. Aston), ஷுஇச்சி காதொ (Shuichi Kato) ஆகியோரின் இலக்கிய வரலாற்று நூல்கள், கொகுசாய் புங்கா ஷின்கொகய் (Kokusai Bunka Shinkokai) நிறுவனப் பதிப்பாசிரியர் குழு வெளியிட்ட ஜப்பானிய இலக்கியம் குறித்த அறிமுக நூல், கொலம்பியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஜப்பானிய மரபிலக்கியம் - ஒரு தொகுப்பு, தொடக்கம் முதல் 1600 வரை (Traditional Japanese Literature - An Anthology, Beginnings to 1600), அனிதா கன்னாவின் (Anita Khanna) பழங்கால ஜப்பானிய இலக்கியம்: ஒரு நுண்ணாய்வு (Ancient Japanese Literature: A Critical Survey) ஆகிய நூல்களிலிருந்து பெரும்பாலும் பெறப்பட்டவை.
  2. 1868 வரை கியோடோவே ஜப்பானின் தலைநகராக இருந்தது.
  3. துறவி சாயிச்சோ (SAICHO) - கி.பி. 767- 822.
  4. துறவி கூகாய் (Kukai) - கி.பி. 774 - 835.
  5. முரசாகி: ஜோடோ மொனின் (Joto Monin) அரசியிடம் பணிப்பெண்ணாகப் பணியாற்றியவர்.
  6. கெஞ்சி கதையை வாசித்த அரசர் மிச்சினாகா (Michinaga), இக்கதையை எழுதிய ஆசிரியருக்கு நிச்சயம் பல காதலர்கள் இருந்திருப்பார்கள் என்று கருதி ஒரு கவிதை எழுதி அதை முரசாக்கிக்கு அனுப்புகிறார். அந்தக் கருத்து தனக்குப் பிடிக்கவில்லை என்பதனையும் அந்தக் கவிதை எழுதப்பட்ட அந்நாள் இரவு தனது கதவு தட்டப்பட்டதையும் அதற்கு அவர் ஆற்றிய எதிர்வினையையும் தனது நாட்குறிப்பின் இறுதிப் பகுதியில் முரசாகி பதிவு செய்துள்ளார்.

பயன்பட்ட நூல்கள்:

  1. Anita Khanna. (2002). Ancient Japanese Literature: A Critical Survey, Delhi: B. R. Publishing Corporation.
  2. Aston, W. G. (1978). Nihongi (Chronicles of Japan from the Earliest Times to A.D. 697). Japan, Tokyo: Charles E. Tuttle Company.
  3. Aston, W. G. (1986). A History of Japanese Literature. Japan, Tokyo: Charles E. Tuttle Company.
  4. Brower Robert H, Earl Miner. (1975). Japanese Court Poetry. California: Stanford University Press.
  5. Group of Editors. (1956). Introduction to Classic Japanese Literature. Tokyo: Kokusai Bunka Shinkokai (The Society for International Cultural Relations).
  6. Group of Editors. (1965). The Manyoshu (The Nippon Gakujutsu Shinkokai Translation of One Thousand Poems). New York: Columbia University Press.
  7. Janeira, Armando Martins. (1970). Japanese and Western Literature - A Comparative Study. Tokyo: Charles E. Tuttle Company.
  8. Kato, Shuichi. (2002). A History of Japanese Literature. Tokyo: Kodansha International Ltd.
  9. Keene Donald (comm & ed). (1975). Anthology of Japanese Literature. Japan, Tokyo: Charles E. Tuttle Company.
  10. Philippi, Donald L (tr). (1980). Kojiki. Japan, Tokyo: University of Tokyo Press.
  11. Shirane, Haruo (ed). (2006). Tranditional Japanese Literature - An Anthology, Beginnings to 1600. New York: Colombia University Press.

முனைவர் இரா.ரம்யா, ஜப்பானிய செவ்வியல் இலக்கியங்கள் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்.