தமிழ் இலக்கியப் பரப்பிற்கு, தலித் கதை சொல்லிகளின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. தலித் இலக்கிய எழுச்சிக்குப் பிறகு அதன் மீதான விவாத வன்மங்கள் குறைந்து, அதன் தேவையை உணர்ந்த பொதுப் பரப்பின் வெளிகளை, தலித் கதைக்காரர்கள் தமிழுக்குக் கொண்டு வந்தனர். ஓர் எதிர்பார்ப்பின் வெற்றிடத்தை நிறைவு செய்யும் எழுத்தை யார் தந்துவிட முடியும்? பழங்கதைகளில் வரும் கிளிகள் ஏதேனும் கதைகளைக் கொத்தி வரும் என்று கூற இயலாது. Ammani

இதனிடையேதான் "தலித் சிறுகதைகள்' என்ற துணைத் தலைப்புடன் "சொப்பு' நம் கைகளில் கிடைக்கிறது.

அம்மணி என்ற இளைஞரின் கதைத் தொகுப்பு அது. திருச்சியில் தனியார் கல்லூரி ஒன்றில் தமிழ்த் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் அம்மணியின் இயற்பெயர் சந்திர மவுலி. தன் பெயரிலிருந்தே தலித் நுண் அரசியலை முன் வைக்கிறார் இவர். அம்மணி என்ற பெயர் நேரடியான ஒரு கிராமத்தானை நினைவுக்குக் கொண்டு வருகிறதே என்றபோது, புனைப் பெயர்களின் அழகியல் குறித்துப் பேசுகிறார்.

"பலருடைய பெயர்கள் அழகியல் பொருந்தியவையாக இருக்கின்றன. ஆனால் என்னுடைய புனைப் பெயர் தலித் அழகியலை முன்வைக்கிறது'' என்று கூறும் அம்மணியின் பார்வை நோக்கத்தக்கது. எதிர் அழகியலை, பொது மரபுக்கு மாற்றாக வைக்கும் தலித் இலக்கியத்தின் கூர் இங்குதான் உள்ளது.

அம்மணி எழுத வந்ததே ஒரு கதை! எப்பொழுதும் மது அருந்தும் அவருடைய தந்தை ஒரு வழக்குரைஞர்; குடும்பச் சூழல் பற்றி அக்கறை இல்லாதவர். அவருடைய அம்மா ஆறாம் வகுப்பு வரை படித்தவர். தன் கணவரை எதிர்த்துப் பேச÷வா, ஆலோசனை கூறவோ முடியாத தன் ஆற்றாமையை வெளிப்படுத்த, அம்மணியிடம் கூறி அதை அப்படியே எழுதச் சொல்வார். அம்மணியும் அம்மா சொல்வதை அச்சுப் பிசகாமல் எழுதுவார். அம்மா தன் உறவுகளுக்குச் சொல்ல வேண்டிய செய்திகளையும் அம்மணியை விட்டே எழுதச் சொல்வார். இப்படி எழுதுவதே அம்மணியை கதைக்காரனாக மாற்றி இருக்கிறது.

அம்மணியின் எந்தக் கதையைப் படித்தாலும், பக்கத்தில் யாரோ உட்கார்ந்து கதை சொல்லிக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவது இதனால்தான். தன்னுடைய அய்ந்து வயது வரை, தான் பிறந்த ஊரான பசும்பலூரில் இருந்திருக்கிறார் அம்மணி. அதற்குப் பிறகு நகர வாழ்க்கை. தான் பிறந்த ஊரின் மனிதர்களையும் அவர்களின் வாழ்வினைப் பதிவாக்கும் ஆக்கங்களையும்தான் அம்மணி உருவாக்குகிறார்.

வாழ்வின் அபத்தங்களை கதைகளாக்கும் தன்மை, தலித் கதைச் சொல்லிகளுக்கு கூடுதல் பலம். ஆகச் சிறந்த ஆக்கமான "கோண மூஞ்சி' என்ற அம்மணியின் கதை, வாழ்வின் அபத்தத்தைதான் பேசுகிறது. தன் வாழ்விலிருந்தும், தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களின் வாழ்விலிருந்தும் புரளும் வலிகளை கதைகளாக்குவதே தலித் இலக்கியத்தின் வெற்றி. அறுக்கப்பட்ட பன்றிக் கறியின் பங்கு கிடைத்தும், அது குழம்பாக சட்டியிலிருந்தும் – அதைச் சாப்பிட முடியாத அபத்தம் குறித்து நாம் கவலைகொள்ளா மல் இருக்கலாகாது.

""சின்னாந் தலையில இடி வுளுந்திச்சி... அவனோடக் கனவெல்லாம் மண்ணாப் போச்சி. குத்துப்பட்ட அப்பனப் பாக்க டவுசரப் புடிச்சிக்கிட்டு வேகமாக ஓடினான். ஆனா, அவன் மனசு மட்டும் வூட்ல இருந்த கோணமூஞ்சி கறிக் கொளம்பு மேலேயே இருந்துச்சி''

தன் ஊரில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவே தன் எழுத்தையும் மாற்றும் உறுதி அம்மணியிடம் இருக்கிறது. இதை எழுதிக் கொண்டிருக்கும் இத்தருணத்திலும் அவருடைய கிராமத்தில் அடிமைகளாக தலித் மக்கள் ஆண்டைகளிடம் அடிபணிந்து கிடக்கின்றனர். தேர்தல் நேர வாக்குரிமைகளைக்கூட, ஆண்டைகளின் வார்த்தைகளுக்கு பலியாக்க நிர்பந்திக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஊரில் படிக்கத் தொடங்கி இருக்கும் தற்போதைய தலைமுறைக்கு, விடுதலை உணர்வை ஊட்டுவதற்காகவும், ஓர் எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவும்தான் எழுதுகிறேன் என்கிறார் அம்மணி.

எதார்த்த பாணியில் சொல்லப்படும் அம்மணியின் கதைகள் மிகவும் எளிமையானவை. அளவிலும்கூட சிறியதாகவே உள்ள அவருடைய கதைகள் முடிவு பெறும் தருணத்தில், ஒரு பாத்திரத்தின் அடுத்த பகுதியை தொடங்கி வைக்கும் உத்தி மிகவும் பாராட்டுக்குரியது. "இருட்டு' சிறுகதை, பெண்ணுடலை வதைக்கும் ஆணின் இருப்பின் மீது கேள்வியாக வைக்கப்படுகிறது. "கோபாக்னி' என்னும் கதை, அவருடைய அம்மாவின் குணத்தை வெளிப்படுத்துகிறது. அடிக்கடி வாடகை வீடு மாறும் வழக்கமுடைய அவருடைய குடும்பத்தில், புதிய இடங்களில் வாடகைக்கு வீடு தேடி அலையும்போது, வீட்டு உரிமையாளர்கள் தங்களை என்ன ஜாதி என்று கேட்கும்போது, அவருடைய அம்மாவின் முகம் நெருப்பாக மாறும் என்று அம்மணி கூறுகிறார்.

நகர வாழ்க்கையில் நவீன வடிவமெடுக்கும் சாதிக் கொடுமைகளைப் பதிய வைக்கும் ஆக்கத்தை, அவர் வாழ்விலிருந்தே உருவி இலக்கியமாக்கும் தன்மை அம்மணியுடையது. அம்மணியின் கதைகள் வழக்குச் சொற்களைக் கொண்டவை. அவர் எடுத்துக் கொண்ட கதைக்களம் அப்படி. மக்களின் வாழ்வைப்பற்றி பேசவந்த ஒரு கலைஞன், மக்களின் மொழியில் பேசுவதுதான் இயல்பானது.

அவருடைய "இருட்டு' கதையும் "சொப்பு' கதையும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். "சொப்பு' கதையில் குழந்தைகள் அப்பா அம்மா விளையாட்டு விளையாடுவதும், அப்படி விளையாடும்போது அவர்கள் நடுத்தெருவில் நடக்கும் கணவன் – மனைவி சண்டையைப் பார்க்க நேரிடுவதும் சொல்லப்பட்டிருக்கும். இப்படி ஒரு காட்சியைப் பார்த்த குழந்தைகள் மனதில் அடிவாங்குபவராக பெண்ணும், அடிக்கின்றவனாக ஆணும் சித்திரமாகி, காலங்காலமாக அடிமை யாக்கப்பட்ட பெண்ணினத்தின் சுயமும், அதனால் குடும்ப அமைப்பின் ஜனநாயகமற்ற தன்மையும் – வாசகன் கண்முன் வந்துபோக வைப்பது, அவருடைய கதை சொல்லலுக்கு கிடைத்த வெற்றி.

அம்பேத்கரியலையும், பெரியாரியலையும் உள்ளடக்கியதாக தலித்தியம் இருக்கும் என்று ஆழமாக நம்புகிறõர் அம்மணி. பெரியாரின் அருந்தொண்டால்தான் இத்தகைய நிலையை நாம் எய்தி இருக்கிறோம். அதிலிருந்தே சாதியை வீழ்த்தும் ஆயுதத்தை நாம் தயாரிக்க வேண்டும். அம்பேத்கரை ஒரு படமாக அறிந்ததைத் தவிர, தலித்துகள் அவரு டைய கருத்தியலை அவ்வளவாக அறியவில்லையே என்னும் ஏக்கம் அவருள் விரிகிறது. தலித் எழுத்து அதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறார் அம்மணி.

கட்சி அரசியலில் இன்றைக்கு தலித்துகள் நவ அடிமைகளாக இருக்கின்றனர். அன்றைக்கு ஆதிக்க சாதியினரிடம் பட்டை சாராயத்திற்கு அடிமையாக இருந்தவர்கள், இன்றைக்கு அரசியல்வாதிகளிடம் "டாஸ்மாக்' அடிமைகளாய், ஏவலாட்களாய் இருக்கின்றனர் என்பது அவருடைய ஆதங்கம். இதை மாற்ற தலித் எழுத்தாளர்கள் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்கிறார். கருத்தியலும் ஆய்வியலும் பண்பாட்டு மாற்றங்களுக்கு மக்களைத் தயாராக்கு வதாக இருக்க வேண்டும். அதற்கு இன்றைய தலைமுறையினருக்குக் கிடைத்திருக்கும் கல்வி வாய்ப்பினைக் குறைந்த பட்சமாவது பயன்படுத்தி, அவர்களை விடுதலையின் பால் உந்த வேண்டும் என்பது அம்மணியின் கோபமான வேண்டுகோள்.

தற்போதைய தலித் எழுத்தாளர்களில் அழகிய பெரியவனையும், பாமா வையும் முன்னிறுத்தும் அம்மணி, முன்வரிசைக்கு வர வேண்டிய ஆக்கத்திறன் கொண்ட ஓர் ஆளுமை. அதற்காக அவர் இன்னும் தன் ஆக்கங்களை செதுக்க வேண்டும். அதற்கான உத்தி, அவருடைய மற்றும் அவருடைய மக்களுடைய வாழ்வியலிலேயே இருக்கிறது என்பதே உண்மை.

– யாழன் ஆதி

Pin It