‘கடந்து நிலைக்கும் காலம்’ இந்நூலினை தோழர் செந்தாரகை இயங்கிய புரட்சிகர அமைப்புகளோ. அல்லது அத்தகைய அமைப்புகளில் செயலாற்றி இன்று பதவி, பணவசதிகளில் திளைக்கும் தோழர் சிலரோ தொகுத்து நூலாக்கி தொகுத்திருக்க வேண்டும். ஆனால் மாறாக இந்த நூலாக்கப்பணியில் தம்மை இணைத்துக் கொண்ட தோழரின் புதல்விகள் செங்கொடி, தமிழ்ச்சிட்டு மற்றும் ‘கருப்பு பிரதிகள்’ தோழர் நீலகண்டன் ஆகியோருக்கு முதன்மையாக அன்பும் நன்றியும் வாழ்த்துக்களும்..

ஒரு மனிதனின் வாழ்க்கையை அளப்பதற்கு அவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதல்ல அளவுகோல். அவர் வாழ்ந்த ஆண்டுகளில் எத்தனை இதயங்களைத் தொட்டார், எத்தனை உயிர்களுக்கு வெளிச்சம் தந்தார், எத்தனை மனிதர்களின் வாழ்வில் மாற்றத்தின் விதைகளை விதைத்தார் என்பதுதான் உண்மையான அளவுகோல். அந்த வகையில் தோழர் செந்தாரகையின் வாழ்க்கை, ஒரு தனிமனிதரின் வாழ்க்கை வரலாறாக மட்டும் அல்லாமல், ஒரு காலத்தின் சமூக வரலாறாகவும், ஒரு தலைமுறையின் கனவாகவும், ஒரு கொள்கையின் உயிரோட்டமான வடிவமாகவும் திகழ்கிறது.senthaarakai bookவிமர்சனப் பார்வைக்காக வாசித்த போது தான் புரிந்தது கவிஞர் செந்தாரகை எந்த ஒரு விருதுக்காகவும் பரிசுக்காகவும் இந்த பாடல்களை எழுதவில்லை என., ‘தீக்கொன்றை’ ‘இந்த வாழ்வுக்காகவே’ மற்றும் இதுகாறும் தொகுத்து வெளியிடப்படாத பிற கவிதை மாறும் பாடல்களை ‘கடந்து நிலைக்கும் காலம்’ எனும் நூலாக வாசித்த போதுதான், ஒரு உன்னதமான சங்கதி புரிந்தது, ஒரு புரட்சிகர அரசியலை எளிய மொழியில் இளைய சமுதாயத்துக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு கடத்த முடியும் என நிகழ்த்தி காட்டியிருக்கிறார் செந்தாரகை.

தோழர் செந்தாரகை எப்படிப்பட்டவர்..?

சில மனிதர்கள் இறந்த பிறகு அவர்களின் புகைப்படங்கள் மட்டுமே மிஞ்சுகின்றன. சிலருக்கு நினைவுச் சின்னங்கள் மிஞ்சுகின்றன. ஆனால் சிலரின் வாழ்க்கை மக்களின் நினைவில் உயிரோடு வாழ்கிறது.

அவர் எழுதிய பாடல்கள் இன்னும் காற்றில் மிதக்கின்றன. அவர் விதைத்த சிந்தனைகள் இன்னும் மனங்களில் துளிர்க்கின்றன. அவர் நடந்த பாதைகள் இன்னும் தியாகத்தின் கதைகளைச் சொல்லுகின்றன.

அவர் உடலால் மறைந்திருக்கலாம். ஆனால் ஒரு கொள்கையாகவும், ஒரு பாடலாகவும், ஒரு நினைவாகவும், ஒரு நம்பிக்கையாகவும் அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்.அவரது வாழ்க்கை நமக்குச் சொல்வது ஒன்றே ஒன்று:மனிதன் வாழ்ந்த ஆண்டுகள் மறைந்துவிடலாம். ஆனால் மனிதர்களுக்காக வாழ்ந்த வாழ்க்கை ஒருபோதும் மறைவதில்லை.

அவரது வாழ்க்கையின் ஆரம்ப அத்தியாயங்கள் கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் என்ற சிற்றூரில் தொடங்கின. அந்த ஊர் வெறும் புவியியல் இடம் அல்ல; அது ஒரு கருத்தியல் பள்ளிக்கூடம். அங்கு வாழ்ந்த கம்யூனிஸ்ட் பெரியோர்கள், சாதி மறுப்புச் சிந்தனைகள், உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் ஆகியவை அவரை மெதுவாகச் செதுக்கின. ஒரு சிறுவனின் மனதில் விதைக்கப்பட்ட அந்த விதைகள் பின்னாளில் பெரும் ஆலமரமாக வளர்ந்தன.

தோழர் செந்தாரகை குறித்து நினைக்கும்போதெல்லாம் முதலில் நினைவிற்கு வருவது அவரது கொள்கை உறுதியே. வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகள் வந்தன. வறுமை வந்தது. நோய் வந்தது. நண்பர்களின் பிரிவும், இயக்கத்தின் பின்னடைவுகளும் வந்தன. ஆனால் அவர் நம்பிய பாதையிலிருந்து அவர் ஒருபோதும் விலகவில்லை. ஒரு மரம் எவ்வாறு புயலுக்கு முன் தலைகுனியாமல் தனது வேர்களை மேலும் ஆழமாகப் பதித்துக் கொள்கிறதோ, அதுபோல ஒவ்வொரு சோதனையும் அவருடைய கொள்கை உறுதியை மேலும் வலுப்படுத்தியது.அவருக்கு இயற்கை மீது அளவற்ற காதல் இருந்தது. மரங்களை அவர் வெறும் தாவரங்களாகப் பார்க்கவில்லை. அவை உழைக்கும் மக்களைப் போலவே மண்ணோடு உரையாடும் உயிர்களாக அவருக்குத் தோன்றின. மலர்களின் மலர்ச்சியில் கூட அவர் சமூக நீதியின் மொழியைக் கண்டார். காற்றின் இசையில் சமத்துவத்தின் பாடலைக் கேட்டார். மழைத்துளிகளில் உழைப்பாளியின் வியர்வையின் புனிதத்தை உணர்ந்தார். அதனால்தான் அவர் கவிஞராகவும், இயற்கை மருத்துவராகவும், சமூகப் போராளியாகவும் ஒரே நேரத்தில் வாழ முடிந்தது.

அவரது வரிகள் வெறும் நினைவுகள் அல்ல. அவை ஒரு தலைமுறையின் அரசியல் விழிப்புணர்வு எவ்வாறு உருவானது என்பதற்கான ஆவணங்கள். கம்யூனிஸ்டாக மாறியது அவருக்கு ஒரு புத்தகத்தின் தாக்கத்தால் நிகழ்ந்ததல்ல. மக்களின் வாழ்க்கையை நேரில் கண்டதன் விளைவாக நிகழ்ந்தது.

திருவாமூர் அவரது வாழ்க்கையில் முக்கியமான அத்தியாயம். அங்கு அவர் சென்றபோது மக்கள் பெரும்பாலும் கல்வியறிவற்றவர்களாக இருந்தனர். நிலமற்ற விவசாயக் கூலிகளாக வாழ்ந்தனர். ஆதிக்கச் சாதியினரின் நிலங்களில் உழைத்து, அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தனர். தலைமுறைகள் கடந்தும் தொடர்ந்த அடிமைத்தனத்தை இயல்பான வாழ்க்கையாகவே கருதினர்.

அந்த மக்களிடம் தோழர் செந்தாரகை முதலில் விதைத்தது அரசியலை அல்ல; சுயமரியாதையை. "நீங்கள் மனிதர்கள். நீங்கள் தலைநிமிர்ந்து வாழத் தகுதியானவர்கள்" என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் உருவாக்கினார்.

தோழர் செந்தாரகையின் அரசியல்பணிகள் பொருளாதார மாற்றத்தோடு முடிந்துவிடவில்லை. மக்களின் அடையாளங்களையும் அவர் மாற்ற முயன்றார். ஏளனத்தையும் அவமதிப்பையும் சுமந்த பெயர்களுக்குப் பதிலாக தமிழ் மரபையும் புரட்சிச் சிந்தனைகளையும் பிரதிபலிக்கும் பெயர்களைச் சூட்டினார். பெயர் என்பது வெறும் அழைப்பு அல்ல; அது அடையாளம் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

அவருடைய மற்றொரு பெரிய ஆயுதம் கலை.

மக்கள் கலை மன்றத்தின் மேடைகளில் அவர் எழுதிய பாடல்கள் ஒலித்தன. தெருவிளக்கின் வெளிச்சத்தில் நடைபெற்ற நாடகங்கள் மக்களின் மனங்களில் புரட்சியின் தீயை ஏற்றின. தோழரின் பாடல்கள் மேசைமீது பிறக்கவில்லை. வயல்வெளிகளில் பிறந்தன. உழைக்கும் மக்களின் மூச்சில் இருந்து பிறந்தன.

"காலமெல்லாம் வறுமைதானே சொந்தமாச்சு...
இழப்பதற்கு ஒண்ணுமில்லை..." - 
என்ற வரிகள் வெறும் பாடல் வரிகள் அல்ல. நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டு அனுபவத்தின் குரல்.

அவர் எழுதிய பாடல்களில் நாட்டுப்புற இசையின் இயல்பான ஓட்டம் இருந்தது. "தன்னானே", "தில்லாலே" போன்ற எளிய சந்தங்கள் இருந்தன. அதனால் அவை நேரடியாக மக்களின் இதயங்களில் சென்று அமர்ந்தன. வயலில் வேலை செய்யும் பெண்கள் அவற்றைப் பாடினர். குழந்தைகள் அவற்றை முணுமுணுத்தனர். போராட்ட ஊர்வலங்களில் அவை முழக்கங்களாக மாறின.

ஒரு படைப்பாளிக்கு இதைவிடப் பெரிய விருது என்ன இருக்க முடியும்?

அவருடைய பாடல்களை மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொண்டனர். எந்த அரசாங்க விருதும் தர முடியாத அங்கீகாரத்தை அவர்கள் வழங்கினர்.

குழந்தைகளுக்காக அவர் எழுதிய பாடல்களில் கூட சமூக நீதி ஒலித்தது.

"பாலின்றி தீயிங்கு துடித்திடும் போது
பாலாபிஷேகம் செய்வதைப் பார்த்து
பதறுதே என்னுள்..."- 
என்ற வரிகள் அவரது மனிதநேயத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன. ஒரு பக்கம் பசியால் வாடும் குழந்தை; மறுபக்கம் வழிபாட்டின் பெயரில் வீணாகும் வளங்கள். இந்த முரண்பாட்டை அவர் அமைதியாக ஏற்றுக்கொள்ளவில்லை. பாடலாக்கி மக்களின் முன் வைத்தார்.

செந்தாரகையின் பாடல்களில் வெளிப்படுவது ஒரு உயர் நேசம், கூடவே சக மனிதன் மீதான உண்மையான அக்கறையும், தோழமையும். இங்கு மனிதன் எனக் குறிப்பிடுவது அவருக்கு சம வயது இல்லை என்றாலும் வயதில் குறைந்தவர்களான ‘குழந்தைகள் உலகம்’ எனக் கொள்ளலாம்

 “புரட்சிகர வாழ்வில் ஊன்றி நிற்கும் ஒரு போராளியின் பூபாளங்கள் இவை நேரடியாக அறிமுகமாக முகங்களுக்கும் செவி முகமாக அறிமுகமான கனல் மணக்கும் பாடல்கள் என ‘தீக்கொன்றை’ நூலின் முன்னுரையில் தோழர் வே.மு.பொதியவெற்பன் அணிந்துரைப்பது நூறு சதவீத உண்மை. ‘தீக்கொன்றை மரத்திற்குத் தமிழில் 'இலைப்புரசு' என்றொரு அழகிய பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் 'Flame of the Forest' (காட்டின் சுடர்) என்றும், இந்தியில் 'பலாசு (Palash)' என்றும், தாவரவியல் பெயராக 'Butea monosperma' என்றும் இது அழைக்கப்படுகிறது.வசந்த காலத்தில் இந்த மரம் இலைகளையெல்லாம் உதிர்த்துவிட்டு, செக்கச்சிவந்த பூக்களைக் கொண்டு பூத்துக் குலுங்கும். தூரத்திலிருந்து பார்க்கும்போது காடே தீப்பற்றி எரிவது போலத் தோன்றுவதால்தான், ஆங்கிலத்தில் இப்பெயர் பெற்றது.

செந்தாரகையின் கவிதைகள் மிக நேரடியாக வாசகனிடம் பேசுபவை. படிமம், குறியீடு போன்ற எந்த அலங்காரங்களும் இல்லாமல் நேர்மையாய், நேரடியாய் வாசகனோடு உரையாடுபவை. இப்பாடல்களின் அரசியல் ஒரு ஆவணப்பதிவு எனில் அவற்றின் அழகியல் ஆய்வு செய்யப்பட வேண்டியது. இன்றைக்கும் செந்தாரகையின் பாடல்களை வாசிக்கும் பொழுது சற் றேறக்குறைய ஒரு 50 ஆண்டுகால சமூக அரசியல் வரலாற்றின் ஆவணமாக இருப்பதை நாம் உணர முடிகிறது.

இந்தப் பாடல்களில் அரசியல் ஆழமும், அழகியல் பார்வையும் இணைந்து ஒரு நதியின் இரு கரைகளாக இணைந்தே பயணிப்பதை நான் அவதானிக்கிறேன் .அதனால் இந்த பாடல்களை நான் சிறந்ததென உங்களுக்கு மட்டுமல்ல, சமகாலத்தின் நமது குழந்தைகளுக்கு பரிந்துரைக்கிறேன். மீண்டும் சொல்கிறேன் இந்த பாடல்கள் மத்திய அரசின் சாகித்திய பாலபுரஸ்கார் அல்லது சிறார் பாடல்கள் சிறார் படைப்புகள் என கும்மியடிக்கும் கும்பல் கலாச்சாரத்தில் சேராத பாடல்கள்

அழகியல் :

மக்கள் மொழியான பேச்சு மொழியை கையாளுவதில் செந்தாரகை, தன் பாடல்கள் வழியாக பெரிய வெற்றி கண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும். “நம் கைகள் ஒன்று சேர்ந்தால்” பாடலில் தில்லாலே நன்னானே எனும் சொல்லாடல்கள் பாடலுக்கு வலிமை சேர்க்கும் இசைக்கோர்வையாக மாறுவதை எளியவாசகனும் உணர முடியும்.

‘ காடுகளை அழித்து நிலமாக மாற்றி கொடுத்தது யார் என்று தெரியாதோ

 மழை நீரை தேக்கி அணைகளைக் கட்டி மறித்தது நீங்கள் என்று புரியாதோ? தண்ணீரை மறித்தது நீங்கள் என்று புரியாதோ?’ என்ற வரிகள் சித்திரச் சோலைகளே என்னும் பாவேந்தர் பாடலுக்கு இணையானவை.

 பொங்கியெழு என்னும் கவிதையின் குறிப்பு மிக சுவாரசியமானது.” இக்கவிதை ஏழாம் வகுப்பில் நான் படிக்கும்பொழுது எழுதியது. 1962 இல் இக்கவிதையை புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனிடம் காண்பித்து அவரால் திருத்தம் செய்யப்பட்டது” என்ற குறிப்பு மிக முக்கியமானது. 1. ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன், அரசியல் உள்ளடக்கத்தோடு கூடிய பாடலை எளிய மொழியில் எழுதுவதும், 2. அப்பாடலை அந்த நாளின் மிகப்பெரிய படைப்பாளி எவ்வித ஈகோவும் இன்றி திருத்தி திருத்தம் செய்யப்பட்டு வெளியிட வைத்ததும் மிக முக்கியமான நிகழ்வு என நம்புகிறேன்.

‘இன்னொரு பிறவி கிடையாது

அறிவியல் முடிவுக்கு தடை ஏது’ என்னும் வரிகள் ஒரு கவிஞனின் அறிவியல் பூர்வமான சிந்தனையை பதிவு செய்பவை, கூடுதலாய் தோழரின் பகுத்தறிவு பார்வை இது. .கடவுள் மதம் சாதி வேண்டாம் கழுத்தறுக்கும் கொடுமை வேண்டாம் உலகெங்கும் மனித இனம் ஓரினம் அதுதானே சிறந்ததொரு பேரினம்’-எனும் வரிகள் அறிவியல் பூர்வ தர்க்கம் நிறைந்தவை.

‘ஆவாரம்பூ’வுக்கு கவிப்பாடல் எழுதிய முதல் கவிஞன் செந்தாரகை-யாகத்தான் இருக்க வேண்டும். கபிலர் 99 மலர் வகைகளை சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டு இருப்பதாய் ஒரு சங்கப்பாடல் உண்டு . 

இன்னொன்று செம்பருத்தி குறித்த பாடல்.

“ இருதய நோயினை அகற்றிடும் உடலை நோய் இன்றி தேற்றிடும் செரிமான குருதியின் அழுத்தம் சென்று மறைந்திடும்” . செம்பருத்தி, ஆவாரம் பூவுக்கும் கவிதை எழுதும் படைப்பாளி செந்தாரகை கபிலரையும் வெல்லுபவர்.

சர்க்கரை நோய்க்கு பல படைப்பாளிகளை பலியாக கொடுத்திருக்கிறது தமிழ் இலக்கியம். கோவை ஞானியின் பார்வை பறிபோனது இதயவேந்தன் .பரீக்ஷா ஞாநி போன்றவர்களை சர்க்கரை நோய் மென்று தின்றது. சர்க்கரை நோய்க்கு ஒரு பாடலை எழுதிய தமிழில் புது சரித்திரம் படைப்பவராக தோழர் செந்தாரகை... சரி ஏன் இந்த சர்க்கரை நோயிடம் இவர் மன்றாடுகிறார்?

“மக்களுக்காக வாழ்ந்து விட்டேன் மகள்கள் மனைவியும் வாழனுமே” அதனால்

“சர்க்கரை நோயை கெஞ்சுகிறேன் சீறி எழுவதால் அஞ்சுகிறேன்

 வர்க்க நிலையில் எளியவன்

 வறியவன் மீது மோதாதே

 வாழப் போவது கொஞ்சமே வீழ்த்தி விடாதே என்னை “

 2024 இல் இதய நோய் என்னை தீண்ட 2025 இல் அந்த ஐ சி யு அனுபவங்களை ‘நன்னம்பிக்கை முனை’ என்னும் குறுநாவலாய் எழுதினேன். ஆனால் ‘16 8 2011 அன்று இருதய அறுவை சிகிச்சை பிரிவில், படுக்கை எண் 24’ என்கின்ற குறிப்போடு இருதய நோய் குறித்த வரிகளை எழுதி இருக்கிறார் தோழர்.

 “இருதய குருதியின் குழாயில் குருதியோ தடை யானது 

மூன்றிடம் அடைப்பானது

மிரட்டும் குருதி அழுத்தமே

 சேர்ந்தே மூவரும் ஐக்கியமே

எப்படி ஆனாலும் ஆகட்டும்

 உயிரே போனாலும் போகட்டும்” என அரசுக்கும் அரசின் படையினருக்கும் ஆள்பவருக்கும் அஞ்சாத ஒரு தோழர், பின்னாளில் சர்க்கரை நோயின் பிடியில் இருதய நோயால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு தனிமனித புலம்பலாக எழுதி இருக்கும் வரிகளை வாசிக்கும் பொழுது. ஒரு சமூகமனிதன் எவ்வாறு தனிமனிதனாய் வீழ்கிறான்? அப்படி அவன் வீழ்வதற்கான பொருளியல் காரணங்கள், சமூக காரணிகள் எவை? ஏன் அவன் பராமரிக்கப்படவில்லை? ஒரு சமூகத்திற்காக வாழ்ந்தவனை ஏன் இந்த சமூகம் கைவிட்டது? என பல கேள்விகள் எழுகின்றது. லத்தீன் மொழியில் ஒரு சொல்லாடல் உண்டு.

‘ஏலி ஏலி சபக் தானே’, பொருள்:

‘என் தேவனே என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர்? என்று கிட்டத்தட்ட அத்தகைய இறைஞ்சலின் வழியாக தோழர் செந்தாரகையின் வரிகள் இங்கே ஒரு சமூகம் மனிதனுக்கும் தனி மனிதனுக்குமான போராட்டத்தில் தனி மனிதன் தோற்பது என்பது மிக கொடூரமானது .எந்த ஒரு அமைப்போ அல்லது அமைப்புக்களால் பிற்காலங்களில் பதவியை சுகமும். பணம் முதலான செல்வச் செழிப்பை கண்டவர்கள், செந்தாரகை போன்ற தோழர்களை கைவிட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது முற்போக்கு அமைப்புகள் ஆயினும் அவற்றின் மீது ஒரு மூர்க்கமான கோபம் எழுகிறது .

 இந்த நூலின் மிக முக்கியமான ஒரு குறிப்பு, வெண்மை நிலா எனும் பாடல்.

 “ உண்ண மறக்கும் சேயினை உண்ண வைக்கும் வட்ட நிலா கருமுகிலாம் எழில் திரையை கிழித்து வரும் புதிய நிலா” “அரிவாள் போன்று காட்சி தரும் உலக மக்களின் அன்பைப் பெறும்” வெண்மை நிலாவை குறித்த ஒரு அழகியல் பாடல் வரிகளில் இதன் பின்குறிப்பு மிக மிக முக்கியமாக ப்படுகிறது 23. 7. 1961 என்ற தேதியில் எழுதப்பட்டது. ஆறாம் வகுப்பு பயின்ற வேளையில் இந்த பாடல் எழுதப்பட்டது என்கின்ற குறிப்பு மிக முக்கியமானது.

 இளம் வயதில் இருந்தே அவர் எப்படிப்பட்ட குடும்பத்தில் சூழலில் அவர் பிறந்து வளர்ந்து இருக்கிறார் என்பதை இன்னொரு பாடல் கிட்டத்தட்ட அவருடைய சுயசரீதியாக மறந்திருக்கிறது ‘ஜென்னியின் மரணம்’ என்னும் கவிதை அவருடைய ஒரு குடும்ப வரலாற்றின் ஒரு துண்டாக இருக்கிறது. அதைப்பற்றி குறிப்பு அதில் அந்த பாடலின் கீழே காணப்படுகிறது. ‘ஜென்னி என்னும் நான்கு வயது குழந்தை இறக்கும் பொழுது ஆறு வயது எனக்கு’ என்று குறிப்பிடுகிறார் செந்தாரகை. அந்த துயரத்தையும் பாடலாக்கி இருப்பது மிக சோகம் சொல்வது.

 பரிணாமம் என்ற என்கின்ற பாடல் முழுக்க முழுக்க அறிவியல் சிந்தனையால் ஆனது .அதேபோல அரபு மண்ணில் என்ற பாடல் இன்றைக்கு நிகழும் ஈரான் அமெரிக்க யுத்தத்தை நினைவூட்டுவது.

இருதயம் என்ற ஒரு தலைப்பில் ஒரு கவிதையும், இருதய நோயாளிகள் என்ற ஒரு கவிதையும் துயரம் நிறைந்தது. அந்த துயரத்தையும் நாளை வரலாம் சாவு நினைத்தே வருந்திட மாட்டோம் என்ற என்ற வரிகள் காலா என் அருகில் வாடா உன்னை காலால் மிதிப்பேன் என்கின்ற பாரதியின் அசாதாரண தைரியத்தை போலவே இங்கே தன்னம்பிக்கையை பறைசாற்றுவது 

 பிஞ்சு வயதினில் என்கின்ற ஒரு பாடல் பால்ய காலத்தை பதிவு செய்வது .

‘ஊதி ஊதி பிரித்தெடுப்போம்

 பாதி அரிசி கிடைத்துவிடும்

 சாதியக் கோடு இல்லாமல்

மோதல் இன்றி அள்ளித்தின்போமே’ என்றும் வரிகள் ஒரு காலத்தில் சாதியின் நிழலும் இல்லாத சிறுவர் சிறுமியர் இருந்ததை வரலாற்று குறிப்பாக சொல்கிறது 

 ஒரு தனி மனிதன் தன்னுடைய பேத்திகளுக்காக பாடல் கவிதையோ எழுதுவது எல்லோருக்கும் உணரக்கூடியது தான். அதை செந்தாரகையும் செய்திருக்கிறார் .யாழிசை செல்லமே கண்ணுறங்கு என்று பெரியபெயர்த்தி யாழிசைக்கும், அக்காவை பார்த்து யாழிசை என்றே உரிமையாய் சொல்லும் என இளையவள் நற்றிணைக்கும், நற்றிணை என்ற தலைப்பிலேயே ஒரு பாடலும் எழுதுவது இயல்பானது தான் . ஆனால் ஜிப்மர் மருத்துவமனையில் இருந்த பொழுது ஜூலை 2011 இல் தனது அருகில் இருந்த நந்தினி மால் என்னும் சிறுமிக்கும் நிமித்தா என்ற குழந்தைக்கும் பாடல் எழுதியிருப்பது தான் செந்தாரகை என்கிற சமூக மனிதனின் சிறப்பு.

தோழர் செந்தாரகையின் பாடல்கள் சாதிய பாகுபாடு, அரசு எதிர்ப்பு, பெண்ணிய விடுதலை ஆகிய கோட்பாடுகள், சமூக விடுதலை,, இயற்கை நேசம் போன்ற பல்வேறு சங்கதிகளை உள்ளடக்கங்களாக கொண்டவை. எளிய மொழியே இந்தப் பாடல்களின் வெற்றி எனக் கொள்ளலாம். மிக இலகுவாக கேட்பவரை அல்லது வாசிப்பவரை சென்றடையும் வகையில் அழகியலும் அரசியலும் சரிசமமாய் கலந்த சொல்லாடல்கள் நிறைந்த பாடல்களால் கவனம் ஈர்க்கும் தொகுப்பிது.

அரசியல் :

குழந்தைகளை உறங்கச் செய்வதற்காக தாலாட்டு பாடல்களை கேட்டு இருப்போம். ஆனால் “புரட்சியாளர் வழியில், புரட்சிவழியினர் கனவை நினைவாக்கவே சீக்கிரம் உறங்கி விழித்து எழு என் மகளே” எனும் அன்புக் கட்டளை, தோழர் செந்தாரகையின் புதுமை சிந்தனையை உணர்த்துவது

“ உன்னுடைய உணர்வை அரசியல் ஆக்கு

அதுதான் கொள்கையின் மாபெரும் நோக்கு” [20.7. 82 ]

 . ஒரு கிராமத்தின் மக்கள் நூற்றுக்கு 95 விழுக்காடு பொதுவுடமை கருத்தியின்பால் ஈர்க்கப்பட்டார்கள். புரட்சிகர பாடல்களை முழங்கினார்கள். மகிழ்ச்சி வெள்ளமாய் அவர்கள், குழந்தைகள் முதல் முதியவர் வரை தோழமை உணர்வில் அந்த நேரத்தில் உழைப்பில் ஈடுபட்ட சிறுவர்களுக்காக எழுந்த பாடல் இது. அவர்களின் உணர்வு எழுச்சி மிக்கதாய் இருந்தது .இன்று அந்தக் கிராமம் சலுகையால் வீழ்ச்சி. பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆக்கிரமிப்பில்...எனும் இந்தப் பாடலின் பின்குறிப்பு மிக முக்கியமானது. எனில் தேர்தல் அரசியலில் சாபமாக இந்த மாற்றத்தை கொள்ளலாமா?

 “ஓநாயிடம் ஆட்டுக்குட்டிக்கு

நீதி கிடைக்குமா? தம்பி

 நீதி கிடைக்குமா?

 வல்லூறும் பருந்தும்

 வகுத்தசட்டங்கள் கோழிக்குஞ்சுக்கும் குயிலுக்கும் உரிமையாகுமா? தம்பி உரிமையாகுமா?” –

இந்த வரிகளை சிந்தித்துப் பாருங்கள்.குழந்தைகளுக்கு மட்டுமா எழுதியது இப்பாடல்?

 “ பொது வெனும் இயற்கையினைத்

தனதாக்கிக் கொண்ட வர்க்கம்

அரசின் வடிவம் தந்தது-அண்ணே

ஆதிக்கக் கருவியானது”

அரசு எனும் அமைப்பின் தோற்றத்தை, நான்கே வரிகளில் கச்சிதமாய் சொல்லிவிடுகிற வரிகள் இவை .

 மக்கள் சக்தி எனும் பாடலில் “கிணற்று தண்ணீரிலும்

 குளத்து நீரிலும்

சாதிகள் பார்ப்பது

 சண்டாளர் செயலல்லவா? இச்செயலினை நீ கொல்ல வா வா!” -என்ற வரிகளில் சண்டாளர் என்னும் சொல்லாடல் ஒரு சாதியை குறிப்பது. ஆனாலும் இங்கே வசை சொல்லாக பயன்படுகிறது. மேலும் இந்த பாடல் மக்கள் கவிஞர் இன்குலாப்-பின் மனுசங்கடா பாடலுக்கு இணையான ஒரு பாடலாக நாம் கொள்ள முடியும். இதே பாடலில் “மேல் சாதி பெண்ணொருத்தி

கீழ் சாதி இளைஞனை

 கீழ் சாதி பெண்ணொருத்தி

 மேல் சாதி இளைஞனை திருமணம் புரிந்து கொண்டால் குரங்கு குட்டி பிறப்பதில்லை

கீரிப்பிள்ளை பிறப்பதில்லை!” -என்ற வரிகள் அறிவியல் பூர்வமானவை, கூடுதலாய் தர்மு சிவராமின் புகழ்பெற்ற ஒரு கவிதையை நினைவூட்டும் வரிகள் .

 ஓட்டுக்காக நம்மிடம் ஓடி வருகின்றார் நாம் ஓட்டளித்து ஜெயித்ததுமே தொல்லை தருகின்றார் காட்டுகின்றோம் நல்ல பாதை என்று உரைக்கின்றார் ஜெயித்து காணும் பொழுது யார் என்று நம்மை முறைக்கின்றார் 42 தேர்தல் அரசியலில் கலை யதார்த்தத்தை உரைக்கும் உணர்த்தும் உண்மை வரிகள் இவை அதனால் தான் தேர்தல் பாதை திருடர் பாதை என்ற கொள்கையில் தோழர் செந்தாரகை உறுதியாக இருந்திருக்கிறார் 

‘ பச்சோந்தி கவிஞர்களே’ என்னும் பாடல் இன்றைக்கும் நவீனபடைப்பாளிகளாய் தம்மைச்சொல்லிக் கொள்ளும் பலரை அம்பலப்படுத்தும் பாடல் .

“பெருமைக்கும் பணத்திற்கும் எழுதி குவிக்கின்ற

பச்சை துரோகிகளே பச்சோந்தி கவிஞர்களே

 பட்டம் பதக்கங்கள் பெற்றிட வேண்டிய புகழாரம் பாடுகின்றீர் “ என்ற வரிகள் இன்றும் பொருந்தும் இலக்கியப் போலிகளை தோலிரித்து காட்டும்.

 இதர பாடல்கள் என்னும் தொகுப்பில் தோழர் செந்தாரகையின் இறுதி நாட்கள் பதிவாகி இருப்பதாக உணர்கிறேன். கூடுதலாய் அவருடைய உறவுகளின் மீதான உணர்வு ரீதியான பார்வையும் இப்பாடல்களில் பதிவாகி இருக்கின்றன 

 கருகிய ரோஜா என்னும் பாடல் திருக்கோவிலூர் அருகே சிறு மதுரை கிராமத்தில் 1989 ஆம் ஆண்டு முருகன் என்கின்ற ஒன்பது வயது தாழ்த்தப்பட்ட சிறுவன் ஒரு பணி நிமித்தமாக இருந்த பொழுது பண்ணையார் வீட்டில் சின்ன அடிமையாக பணிபுரிந்த செய்தியையும் அவன் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவத்தையும் பதிவு செய்கிறது 

பலபாடல்களில் தான் சந்தித்த மனிதர்கள், தன்னைப் பாதித்த சமூக, அரசியல் நிகழ்வுகள் குறித்து உடனடியாக எதிர்வினையாற்றியிருப்பது செந்தரகையை சமகால படைப்பாளி என பறைசாற்றும்.

அவரது வாழ்க்கையை முழுவதுமாகப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகிறது. அவர் மக்களுக்காக வாழவில்லை; மக்களோடு சேர்ந்து வாழ்ந்தார். அவர் அவர்களுக்காகப் பாடவில்லை; அவர்களின் குரலாகப் பாடினார். அவர் அவர்களுக்காகப் போராடவில்லை; அவர்களோடு சேர்ந்து போராடினார்.

அதனால்தான் அவரது மறைவு ஒரு குடும்பத்தின் இழப்பாக மட்டும் இருக்கவில்லை. ஒரு கிராமத்தின் இழப்பாகவும், ஒரு இயக்கத்தின் இழப்பாகவும், பல தலைமுறைகளின் நினைவிழப்பாகவும் மாறியது.

 தோழர் செந்தாரகையின் பாடல்களில் கவிதைகளில் சொல்லியிருக்கும் உள்ளடக்கங்களை நாம் உணரத் தலைப்படுகையில், எழுதிய காலத்தின் அரசியல் சமூக நிகழ்வுகளை உணர்ந்து கொள்ள ஏதுவான ஆவணமாக மாறிவிடுகின்றன இக்கவிதைகள் அல்லது பாடல்கள். அந்த வகையில் இந்த நூல் ஒரு ஆவணக் காப்பகம் என்றும் குறிப்பிடலாம்.

அன்பாதவன்