கவிஞர் ப. செல்வகுமாரின் "ஒரு மழை வந்து போகவேண்டும்"
கவிதை நூலின் மீதான வாசிப்பனுவம்

இசைக்கருவிகளிலேயே எம்மை மிகவும் வசீகரிப்பது பறை. அதன் ஒழுங்கற்ற வட்ட வடிவமும், காய்ச்சக் காய்ச்ச "விண்"ணென்று ஏறும் முறுக்கும், ஆட்ட மனோபாவத்ததை ஏற்படுத்தும் அதன் துள்ளலிசையும் என எம்மை மிகவும் ஈர்ப்பது பறையிசை. அந்தப் பறையின் மீது நான் அடிகுச்சி கொண்டு அடிக்கிறேன். சப்தம் எழுகிறது. அதேசமயம் ஒரு பறையிசைக் கலைஞனின் கரங்களின் விசையில் அதே சப்தம் இசையாகிறது. எது சப்தத்தை இசையாக்குகிறது? பறையா? அல்லது சப்தமா? அல்லது பறையிசைக் கலைஞனா?

pa selvakumar bookஅதேபோல கூத்து எம்மை மிக வசீகரித்த வடிவம். அதன் ஆகிருதியான ஒப்பனையும், செவ செவ என்றிருக்கும் வண்ண மேனியின்றி, எம் உழைக்கும் மக்களின் கருத்த சுருங்கிய மேனியும், கொழு கொழு என்று உப்பியிராத கன்ன மேடுகளின்றி, உள் ஒட்டி, குழி விழுந்து, அந்த ஒட்டிய குழி விழுந்த கன்ன கதுப்புகளில் மேடை ஒளிபட.... ஒருவித படிம உணர்வை என்னுள் எழுப்பும். அதன் வகையில் கூத்து எம்மை மிக ஈர்த்த கலைவடிவம். நான் கூத்துப் பார்க்கையில் பளபளக்கும் கண்ணாடிச் சில்லுகள் கொண்ட புஜ கீர்த்திகள், கிரீடங்கள் கொண்டு கூத்துக் களத்தை மட்டுமல்ல, பார்க்கிற பார்வையாளர்களையும் ஆக்கிரமித்துக் கொள்கிற அந்த கூத்துக்கலைஞனின் குரல். தெளிவற்ற அவன் வசன உச்சரிப்பு, சுதி பிசகும் பாடலொலி, உச்சம் தொடும்போது குரல் கம்மி கரகரக்கும் அல்லது கீறீச்சிடும் சங்கீதப் பிழை என கூத்துப் பாத்திரங்களின் பேசு மொழி எனக்குப் புரியவில்லை. வெறும் சப்தங்களாகத்தான் எம் செவியுரசிப் போகிறது என்றாலும், ஏன் என்னை அந்தக் கூத்து வசீகரிக்கிறது? ஈர்க்கிறது? பளபளக்கிற வண்ண உடைகளா? கூத்துக் களமா? அல்லது கூத்துக் கலைஞனின் குறைகள் நிறைந்த குரல் மொழியா? அன்றி.... அடவுகளால் சுற்றிச் சுழன்றுவரும் லாவகம் கொண்ட உடல் மொழியா? எது?

பெரம்பலூர் மண்ணின் படைப்பு வரிசையில் தன் முதல் அடியை எடுத்து வைத்திருக்கும் ப. செல்வகுமாரின் "ஒரு மழை வந்து போகவேண்டும்" என்கிற கவிதைத் தொகுப்பினை வாசிக்கும் போது எழுந்த சிந்தனைகளே இவை. ஏன் இந்தத் தொகுப்பு நம்மை வசீகரிக்க வேண்டும்? ஈர்க்க வேண்டும்?

பேச்சு மொழியைக் கொண்டும், படைப்பு மொழியைக் கொண்டும் என இரண்டு தளங்களிலும் கவிதைகள் பயணிக்கின்றன. "சாதி புதைத்த / கல்லறையில் தெளித்த பாலில் / ஈரமெடுத்துப் பூக்கிறது / காதல்" என்கிற கவிதை படிக்கும்போது, (ப.23) எம் முதல் அனுபவத்திற்கு விடை கிடைக்கிறது. சொல் என்னிடமும் இருக்கிறது. உங்களிடமும் இருக்கிறது. ஒரு கவிஞனிடம் வெளிப்படுகிறபோது அதே சொல் கவிதையாகிறது. ஆக, பறையா? சப்தமா? பறையிசைக் கலைஞனா? என்கையில், பறையிசைக் கலைஞன் என்றாகிறது. சொற்களா? கவிதையா? என்கிறபோது, கவிஞன் என்றாகிறது.

"பாட்டு என்னத்த படிக்கிறது? (ப.14-15) என்கிற கவிதைதான் இந்தத் தொகுப்பின் உக்கிரம். உச்சம் என்பது எமது மதிப்பீடு. அதத் தரட்டா? இதத் தரட்டா? என்று கேட்டு கேட்டு தருவதாகச் சொல்லும் பொருட்கள் நம்மை உலுக்கி எடுக்கிறது. பொருள்களைவிட அதன் பின்னிருக்கும் வலிகளும், வாதைகளும் நிறையவே அதிர்வுகளை ஏற்படுத்துபவை என கவிதை உச்சம் தொட்டாலும், முடிப்பில் அந்த உக்கிரம் இல்லை. அதிர்வு இல்லை. மெல்ல மெல்ல வேகமெடுத்து, உக்கிரமாகி, முடிப்பில் உச்சம் தொடுகிறபோதுதான் கவிதை தன்னளவில் முழுமையடையும். ஆனால், இங்கே தன்னளவில் முடிப்புக் குறைபாட்டோடு கவிதை முடிகிறது. முன்னதாக நாம் சொன்ன கூத்துக் கலைஞனின் குறைகள் நிறைந்த குரல் மொழி போன்று. என்றாலும்..... ஏன் ஈர்க்கிறது? கூத்துக் கலைஞனின் வசன உச்சரிப்புகள் தெளிவாக இல்லாவிட்டாலும், புரியா விட்டாலும், கூத்தின் அடிப்படைக் கதை நமக்கு முன்னமே தெரிந்ததுதான். கூத்தின் புராண, இதிகாச கதைகள் அறிந்த, ஏற்கெனவே முன்தயாரிக்கப்பட்ட பார்வையாளனாகத்தான் நாம் கூத்தின் முன் அமர்கிறோம். அதனால்தான் கூத்துக் கலைஞனின் குறைபாடுகளுள்ள குரல் மொழி, கூத்தின் போக்குக்கு இடையூறாக இருப்பதில்லை. அதுபோலவேதான், தன்னளவில் உக்கிர அவலங்களின், வலிகளின், வாதைகளின் அடுக்குதல்களில் கவிதை நம்மை கோபமூட்டி, வேகமூட்டிப் போவதால்.... முடிப்பின் குறைகளை நாம் பொருட்படுத்துவதில்லை.

தொகுப்பில் அடுத்து குறிப்பிடத்தக்க, நல்லதொரு சிறுகதையாகவும் உருமாறுகிற கவிதை, "என் பேரு லெட்சுமிங்க" (ப.37-40) என்கிற கவிதை. எனக்கென்னவோ கவிதையில், லெட்சுமி அக்காவின் அலைக்கழிப்புகளைவிட, அதன் அவலங்களைவிட, வேறொரு தளப் பாய்ச்சலில் பாய்கிறது இக் கவிதை. இங்கு வீடும், சமையலறையும் தாண்டி பெண்களின் வெளி விரிவதில்லை. விரிவுபடுதலை மறுத்து, அடக்கி, சுருக்கி, குறுக்கி வைத்திருக்கிறோம் நாம். விவசாய உழைக்கும் பெண்கள் என்றால், வீடு, சமையலறை தாண்டி அவர்களின் விளைநிலம் என்பதாய்க் குறுக்கப்பட்டு விடுகிறது. சத்திரத்திற்கோ சாவடிக்கோ மந்தைகளுக்கோ போன்ற பொது வெளியற்ற நமது சக உயிரிகள் அவர்கள். இது ஏதோ கிராமப்புறத்தில் மட்டுமல்ல. நகர்ப்புறங்களிலும் இதுதான் நிலை. இங்கு ஒரு நகர்ப்புற ஆண் என்றால், அவன் மின்சாரக் கட்டணம் செலுத்தும் அலுவலுகத்துக்கு, தொலைபேசிக் கட்டணம் கட்டும் அலுவலகத்திற்கு, அல்லது நகராட்சி அலுவலகத்திற்கு என அவனது வெளியை நிர்ணயித்துக் கொள்வதும், பெண் என்றால் ரேசன் கடைக்கு, அரிசி வாங்க, மண்ணெண்ணை வாங்க, பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல என மீண்டும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட பொதுவெளிகளும் குடும்பப் பராமரிப்பு சார்ந்த, சமையலறை சார்ந்ததாகவே நிர்ணயிக்கப்படுகின்றன. இதில் லெட்சுமி அக்காக்கள், இதைவிடக் கொடூரமாக அலைய நேரிடும் என்பது கவிதை பயணிக்கும் வேறொரு தளப் பாய்ச்சல் ஆகும்.

தொகுப்பில் நிறைய நிறைய குறுங்கவிதைகளும், சில நீள் கவிதைகளும், இப்படிச் சொல்வது எமக்கு உடன்பாடில்லை என்றாலும்..... பொதுவாக, ஒரு கவிதை அளவில் சிறியதாகவோ, அன்றி நீளமாகவே அமைவது என்பது அந்தப் படைப்பு கோரும் அளவுதானே தவிர, கவிதை கவிதையாக இருக்கிறதா என்பதுதான் இங்கே முகாமை. அதன்வழி புறவடிவில் நிறைய நிறைய குறுங்கவிதைகளும், சில நீள் கவிதைகளுமாய்த் தொகுப்பு காட்சியளித்தாலும், அவைகள் கவிதைகளாக மலர்ந்திருப்பது ப. செல்வகுமாரின் படைப்பாக்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்றே நாம் மதிப்பிடலாம்.

இறுதியாக குறிப்பிட்டேயாக வேண்டிய ஒன்று. புறவடிவில், குறைந்த அடிகளில் அமைந்த கவிதையை, ஒரு பக்கத்தில், ஒரு ஓரமாக வடிவமைத்து, மீதி நிறைய வெற்றுப்பக்கங்களாகத் தந்திருப்பது மனதை சங்கடப்படுத்துகிறது. ஒரு பக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குறைந்த அடிகளால் அமைந்த கவிதைகளை அமைத்திருக்கலாம். ஏனெனில், காகிதங்கள் சூழலை அழித்து நாம் உருவாக்கிக் கொள்பவை. எதிர்காலத்தில் சூழலை அழிக்காத, செயற்கைமுறை காகிதங்கள் தயாரிக்கப்படுகிறபோது இது மாதிரி வடிவமைத்துக் கொள்வதில் தவறில்லை. மாறாக, மரங்களை அழித்து, சூழலைக் கொன்று தயார் செய்யப்படும் நிலையில், இப்படியான பக்க வீணடிப்புகளால் மனதில் சோகங் கவிகிறது.

எமது கவிதை ஒன்றை சொல்லி நிறைவு செய்கிறேன்.

"எழுதிக் குவிக்கும்
நண்ப....

மரங்களைக் கொன்று
அதன் மேனி அடுக்கில்
எழுதிக் குவிக்கும்
நண்ப.....

ஒன்றன்
அழிவிலிருந்து
புதியன பூக்கும்
நிறைவைத் தந்ததா
படைப்பு?"

***

"ஒரு மழை வந்து போகவேண்டும்"
ப. செல்வகுமார்
பூங்குயில் பதிப்பகம். 100, கோட்டைத் தெரு, வந்தவாசி - 604 408.
முதற்பதிப்பு டிசம்பர் 2015.
விலை ரூ. 80/

- பாட்டாளி

Pin It