ஆர்.கே.எஸ். சம்சுகனி, டி.மாரியூர்

கடவுள் நமது புத்திக்கு எட்டாதவர், எவ்வளவு பெரிய ஆஸ்திகனின் பிடியிலும்அகப்படாதவர், நாத்திகவாதி கண்டும் கலங்காதவர், எத்தகைய முயற்சியாலும் அறிய முடியாதவர் என்கிறார்களே?

அப்படியா? பிறகு எதற்கு இத்தனை கோவில்கள்? இவ்வளவு பக்தி பாடல்கள், துதிகள், அர்ச்சனைகள், சடங்குகள், யாகங்கள், நேர்த்திக் கடன்கள், தட்சணைகள், உண்டியல்கள்? கடவுள் பற்றிய உங்களின் தத்துவரீதியான கேள்விக்கும், இந்த நடைமுறை ரீதியான வாழ்வுக்கும் இடையிலான விசித்திர முரண் பற்றி சகலரும் சிந்திக்க வேண்டும்.

உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டே என்று திமுகவும் காங்கிரசும் மாறிமாறி ஒருவரையொருவர் குறைகூறுகிறார்களே?

தேர்தல் தோல்வி எனும் சாவு வீட்டில் இப்படி இவர்கள் மாரடித்துக் கொண்டாலும் இன்னும் சொந்தபந்தமாகத்தான் இருக்கிறார்கள். ஊழல்களும், அவற்றிலிருந்து தப்பிக்கும் முயற்சியும் இவர்களை இன்னும் பிணைத்து வைத்திருக்கிறது.

ரா.தட்சிணாமூர்த்தி, கடலூர்

உலக நாயகன் அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவடைந்து வருவது பற்றி..?

முதலாளித்துவம் என்றாலே முரண்கள் நிறைந்தது. "அம்பானி ஆவது எப்படி?" என்று புத்தகம் போட்டு நமது இளைஞர்களைக்கனவு காண வைக்கும் நூலாசிரியர்களுக்கு ஓர் அம்பானி உருவாக ஒரு கோடி ஏழை பாவைகள் வேண்டும் என்கிற உண்மை தெரிவதில்லை; அல்லது தெரிந்தாலும் சொல்வதில்லை. ஏற்றத்தாழ்வான வாழ்வையே அடித்தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பில் சரிவுகளும், அவற்றிலிருந்து மீளும் முயற்சிகளும், அவற்றில் தோல்விகளும், அல்லது அறைகுறை வெற்றிகளும், சர்வ சாதாரண விஷயமாகிப் போயின. இவற்றில் பலியாவது ஏழை நாடுகளே, அவற்றின் உழைப்பாளி மக்களே. பாருங்கள், அமெரிக்காவின் இந்தப் பொருளாதாரச் சரிவால் நமது நாட்டில் பங்குச் சந்தை தடுமாறுகிறது. இதற்கு நேர்மாறாகத் தங்கத்தின் விலை வானுக்கு எட்டி விட்டது. தொழிற்சாலைகளை, அவற்றின் பொருள் உற்பத்தியை நம்புவதை விட இயற்கையாகக் கிடைக்கும் ஓர் உலோகத்தை நம்புகிற போக்கு அதிகரிப்பது முதலாளித்துவ அமைப்பின் இயலாமையை அல்லது போதாமையைப் பளிச்சென உணர்த்துகிறது. அது என்ன அமெரிக்காவைப் போய் "உலக நாயகன்" என்று சொல்லி விட்டீர்கள்? கமலஹாசன் ரசிகர்கள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்.

ஜோ.சோமசுந்தரம், ஈசாந்தி மங்கலம்

"புதிய கோடாங்கி" ஆகஸ்ட் இதழில் சிவகாமி ஐ.ஏ.எஸ் பேட்டி வந்திருக்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தலித் போராட்டம் பற்றிய கேள்விக்கான அவரின் பதில் அனைத்தையும் உண்மையாகவே கருதுகிறேன். தெளிவுபடுத்தத் தங்களை அன்புடன் வேண்டுகிறேன். தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் கம்யூனிஸ்ட்டுகளின் மவுனம் இன்றுவரை களையவில்லை. அதையும் விளக்குங்கள்.

முதலாளித்துவத்தை எதிர்த்த அளவுக்கு கம்யூனிஸ்ட்டுகள் பிரமாணியத்தை எதிர்த்ததில்லை என்றும், இப்போதுதான் அதில் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். பிராமணியத்தை எதிர்த்த அளவுக்கு அம்பேத்கரியவாதிகள் முதலாளித்துவத்தை எதிர்த்ததில்லை என்றும், இப்போதும் அதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் நம்மால் கூற முடியும். இந்த வாதப் பிரதிவாதத்திற்குள் இறங்குவதைவிட "மார்க்சியமும் அம்பேத்கரியமும் ஒன்றிணைவது இன்றைய மக்கள் இயக்கத்திற்கு மிகவும் அவசியம்" என்று அவர் கூறியிருப்பது நல்ல விஷயமாகப் படுகிறது. இதில் சிவகாமி அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் கம்யூனிஸ்ட்டுகளைக் குறைகூறுவதை விட்டுவிட்டு மக்கள் இயக்க ஒற்றுமைக்கு அவர் பாடுபட வேண்டும். அது என்ன, தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு பற்றி கம்யூனிஸ்ட்டுகள் மவுனம் சாதிப்பதாகச் சொல்லுகிறீர்கள்? அதுபற்றி ஓங்காரக் குரல் எழுப்புகிறவர்கள் அவர்களே.

ஏ.சி.எஸ். மணி, மதுராந்தகம்

கல்விப் பாதையில்-பார்வையில் நேற்றைய, இன்றைய முதல்வர்களின் பேச்சும் செயலும் எப்படி?

அந்த இருவருக்குமே முழுமையான சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவதில் ஆர்வம் இல்லை. பொதுப்பாடத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கே நேற்றைய முதல்வரை எதிர்த்து மாணவர்கள்-வாலிபர்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டியிருந்தது. அப்படி வந்த திட்டத்தை இன்றைய முதல்வரிடமிருந்து காப்பாற்ற நீதிமன்ற வளாகங்களில் கல்வியாளர்கள் போராட வேண்டியிருந்தது. கல்வியில் அசமத்துவம் என்பது வருணாசிரமம் கட்டிக் காத்து வந்த பாரம்பரியம். அதை உடைப்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் அநீதிகள் ஒருநாள் உடைபடும் என்பதும் வரலாற்று நியதியே.

எம்.கே.பக்தவச்சலம், சின்னமனூர்

பிரதமர் தனது சுதந்திரதின உரையில் காந்திஜி பெயரையும், நேரு பெயரையும் குறிப்பிடத் தவறி விட்டாராமே..?

அவர்களது கொள்கைகளைக் காங்கிரஸ் தலைவர்கள் மறந்து எவ்வளவோ நாளாயிற்று, இப்போது பெயர்களையும் மறந்து போனார்கள். பிரதமரின் கவலை எல்லாம் ராகுல் காந்தியின் பெயரைச் சொன்னோமா இல்லையா என்பதாக இருக்கும்!

எஸ்.சின்னச்சாமி, திருவள்ளூர்

"ஆரக்ஷன்" என்ற இந்திப் படம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறதே...?

ஆரக்ஷன் என்றால் இடஒதுக்கீடாம். படம் அதை எதிர்த்துத்தான் என்று பலரும் சொல்லுகிறார்கள். பட்டியல் சாதியினருக்கான தேசிய கமிஷனின் தலைவர் பி.எல்.புனியா படத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னது- "படத்தின் பொதுவான கருத்து ஆட்சேபணைக்குரியது அல்ல என்றாலும், தலித் எதிர்ப்பு மற்றும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு உரையாடல்களால் நிறைந்திருக்கிறது". இத்தகைய படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பது அமிதாப்பச்சன். தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவைக் கொண்டுதான் அமிதாப் பச்சன்கள் "சூப்பர்ஸ்டார்கள்' ஆகிறார்கள். ஆனதும் அவர்கள் செய்கிற நன்றிக்கடனைப் பார்த்தீர்களா? புழுதியிலே கிடந்தவர்கள் நட்சத்திரங்கள் ஆனதும் வருணாசிரமத்திற்கு சேவைசெய்யப் போய் விடுகிறார்கள். இதை அடித்தட்டு மக்கள் பகுதி ரசிகர்கள் புரிந்திருக்க வேண்டும். ஆனாலும், படத்தைத் தடை செய்யக் கோர முடியாது. இது ஜனநாயக நாடு; இடஒதுக்கீடை எதிர்த்துப் படம் எடுக்கவும் தங்களுக்கு உரிமை உண்டு என்பார்கள் வருணாசிரமவாதிகள். விஷயம் என்னவென்றால், இட ஒதுக்கீடை ஆதரித்து காத்திரமான திரைப்படங்கள் வரவேண்டும் என்பது தான். சமூகநீதி பற்றி மேடையில் பேசுகிற தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஏன் அதற்காகப் படங்கள் எடுக்கக்கூடாது?

கே.புனிதவதி, சென்னை

அண்மையில் தாங்கள் படித்த நூல் பற்றிச் சொல்லுங்களேன்...?

அதன் பெயர் "இந்தியாவின் சாதுக்கள்" பி.டி.திரிபாதி என்பவர் தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக உத்தரப்பிரதேசத்தின் ஐந்நூறு சந்நியாசிகளைப் பேட்டி கண்டார். அதுமட்டுமல்ல, ஆய்வாளரே முதலில் சைவச் சாமியாராகவும், பின்னர் வைணவச் சாமியாராகவும் மாறி அவர்களின் வாழ்வை நேரடியாக அறிந்தார். இவற்றிலிருந்து அவர் பெற்ற முடிவுகள் சுவாரசியமானவை. சாதுக்களில் பெரும்பாலோர் வயிற்றுப்பாட்டுக்காகவே சாமியாராக ஆகியிருந்தார்கள், தங்கள் குடும்பங்களுடனான தொடர்பை இப்போதும் வைத்திருந்தார்கள், சாதிய உணர்வில் மூழ்கியிருந்தார்கள், அடித்தட்டு சாதிகளிலிருந்து வந்த சாதுக்கள் அதைச் சொல்லவும் கூச்சப்பட்டார்கள். இப்படிப் பல உண்மைகளை அவர் வெளிக்கொணர்ந்திருக்கிறார். இந்த ஆய்வு 1965ல் நடத்தப்பட்டது என்றாலும் இப்போதும் அந்த நிலையே பொதுவாகத் தொடர்கிறது என ஊகித்தால் அது தவறாகாது.

ஜே.வினாயக மூர்த்தி, கோவை

"மார்க்சிஸ்ட்" ஆகஸ்ட் இதழில் வந்துள்ள "மார்க்சியத்தின் பார்வையில் நாட்டுணர்வு"எனும் கட்டுரை படித்தீர்களா? உங்கள் அபிப்பிராயம்...?

மார்க்சியத்தின் பெயரால் பிரிவினைவாதம் பேசுகிற தணிகை, மணியரசன், சுனிதிகோஷ், தியாகு ஆகியோருக்கு பதில் சொல்லுகிறார் கட்டுரையாளர்.

பிரிந்து போகிற உரிமையுடனான சுய நிர்ணயக் கோட்பாடு இந்தியா போன்ற நாடுகளுக்குப் பொருந்தாது என்று சரியாகவே விளக்குகிறார். ஆனால், அந்த வேகத்தில் நமது நாட்டில் தேசிய இனச் பிரச்சனைகளே இல்லை, எல்லாம் தீர்ந்து போயிற்று என்று எழுதிச்செல்கிறார். உதாரணமாக, "மொழி வழி மாநிலங்கள் அமைந்ததும், தாய் மொழியில் ஆரம்பக் கல்வி புகட்டலும், மாநில மொழிகள் அரசின் அலுவலக மொழிகளாக ஆக்கப்பட்டதும் ஜனநாயக வழியில் பிரச்சனை தீர்க்கப்பட்டதற்கு அறிகுறி. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 22 மொழிகள் மட்டுமல்லாது இதர எந்த மொழியிலும் குடி மக்கள் தங்கள் குறைகளை அரசுக்குத் தெரிவிக்கலாம்" என்று குறிப்பிடுகிறார். ஆனால், மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே உள்ளது, போனால் போகிறது என்று ஆங்கிலமும் தொடர்கிறது, நாடாளுமன்றத்தில் நினைத்தவுடன் இந்தி-ஆங்கிலம் அல்லாத மொழிகளில் பேசிவிட முடியாது, உடனுக்குடனான மொழி பெயர்ப்பு வசதி கிடையாது,

மருத்துவம்-பொறியியல் படிப்பிலும் உயர்நீதி மன்றங்களிலும் அந்த 22 மொழிகளில் இல்லை, அந்த மொழிகளை வளர்க்க மத்திய அரசு சிறிதும் அக்கறை காட்டுவதில்லை, இங்கே மெய்யான கூட்டாட்சி முறை கிடையாது. மாநில அதிகாரங்கள் மெல்ல மெல்ல பறிக்கப்பட்டு வருகின்றன எனும் யதார்த்தங்களைக் கட்டுரையாளர் கணக்கில் கொள்ளாதது ஆச்சரியமாக உள்ளது. சிபிஎம் கட்சி உருவான காலத்திலிருந்து மொழிச் சமத்துவத்திற்காகவும் மெய்யான மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்து வருகிறது. 1968 மற்றும் 1980ல் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவிற்கு கட்சி சமர்ப்பித்த அறிக்கைகளிலும், ஜனதா கட்சி ஆட்சி விதவிதமான வழிகளில் இந்தியைத் திணித்த போது அதை எதிர்த்து 1977ல் அது நிறைவேற்றிய தீர்மானத்திலும், 1983ல் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் மாநாட்டிற்கு மத்திய-மாநில உறவுகள் பற்றி அது தந்த ஆலோசனைகளிலும் இதைத் தெளிவாகக் கேட்கலாம்.

மேற்கு வங்கம்-கேரளா-திரிபுராவின் சிபிஎம் தலைமையிலான அரசுகள் தங்களுக்காக மட்டுமல்லாது, அனைத்து மாநிலங்களின்- உரிமைகளுக்காகவும் குறிப்பாக நிதி விஷயத்தில்- விடாது குரல் கொடுத்தது மிக முக்கியமான வரலாற்றுப் பதிவாகும். மார்க்சியத்தின் பெயரால் இந்தியாவைப் பிளக்க வேண்டும் எனப் பேசுவதை ஒரு நாளும் ஏற்க முடியாது. அதே நேரத்தில், மெய்யான மாநில சுயாட்சிக்கான மொழிச் சமத்துவத்துக்கான போராட்டம் தொடர வேண்டியதும் அவசியமாகும். அது இந்திய ஒற்றுமைக்கு உட்பட்டும், அதை வலுப்படுத்தும் வகையிலும் நடைபெற வேண்டியது இன்னும் அவசியமாகும். இதுவே மார்க்சியப் பார்வையிலான சரியான நாட்டுணர்வு!

எல்.கோகுலகிருஷ்ணன், திருநெல்வேலி

அன்னா ஹசாரேயின் ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் தாங்கள் நேரடியாகப் பங்கு பெறப் போவதாக ஆர்.எஸ்.எஸ். அறிவித்திருக்கிறதே..?

அண்மையில் தனது பரிவாரத்தைக் கூட்டிய ஆர்.எஸ்.எஸ். இப்படி முடிவெடுத்திருப்பதாகக் (இந்து 21-8-11) கூறியுள்ளது. டில்லியில் மக்கள் திரள் கூடுவதற்கான காரணத்தையும், ஊடகங்களில் இதற்குத் தரப்படுகிற அளவற்ற விளம்பரத்திற்கான காரணத்தையும் இந்தப் பின்புலத்தில் புரிந்து கொள்ளலாம். சில மாதங்களுக்கு முன்பு இதே டில்லியில் ஒரு மாபெரும் பேரணியைத் தொழிற்சங்கங்கள் நடத்தின. அதை இந்த ஊடகங்கள் கொஞ்சமும் கண்டு கொள்ளாததையும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். நிற்க. ஊழல் எதிர்ப்பு பற்றிப் பேச ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அருகதை உண்டா? கர்நாடகத்தில் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சுரங்க ஊழல் நடந்திருக்கிறது. அதை அது கண்டு கொண்டதுண்டா? லோக் அயுக்தா நீதிமன்றம் கண்டித்த பிறகு தானே எடியூரப்பா ராஜினாமாச் செய்தார்? அதற்கு முன்பு ஆர்.எஸ். எஸ். என்ன செய்து கொண்டிருந்தது? ஊழல் எதிர்ப்பு என்பதெல்லாம் அதற்கு ஒரு திசை திருப்பும் தந்திரமே. இந்த நாட்டில் ஊழலை எதிர்த்துப் பேச உண்மையான தகுதி கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கே உண்டு. இ.எம்.எஸ், ஜோதிபாசு, நாயனார், அச்சுதானந்தன், புத்ததேவ், மாணிக் சர்க்கார் என்று பல முதலமைச்சர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் மீது அவர்களின் எதிரிகளும் ஊழல் குற்றச்சாட்டு சொன்னதில்லையே!

கோ. பாண்டியராஜன், சின்னமனூர்.

சித்திரையே மீண்டும் தமிழ் வருடப் பிறப்பு என்று ஜெயலலிதா அரசு அறிவித்து விட்டதே..?அது சரியா?

தையைத் தமிழ் வருடப் பிறப்பாகக் கலைஞர் அரசு அறிவித்த போது அதை வரவேற்காதவர் தான் ஜெயலலிதா. அவர் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சித்திரையைக் கொண்டு வந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் பழைய வருடக் கணக்கு முறைக்குத் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபணைகள் பற்றி அவர் யோசிக்க வேண்டும். அவை- 1. தமிழ் வருடங்களின் தோற்றம் பற்றிச் சொல்லப்பட்டுள்ள புராணக் கதை ஆபாசமானது. நாரதர் பெண்ணாக மாறி, அவருடன் கிருஷ்ணன் கூடி பிறந்த 60 பிள்ளைகளே வருடங்கள் எனப்பட்டன. 2. இந்த 60 வருடப் பெயர்களும் சமஸ்கிருதமயமானவை. உதாரணமாக, இப்போது நடப்பது ஸ்ரீவிக்ருதி-ஸ்ரீகர வருடம். 3. இதைவிட முக்கியமானது இவை 60 வருடங்கள் மட்டுமே, அவற்றுக்கான பெயர்களே மீண்டும் மீண்டும் வருகின்றன. இதனால் வரலாற்றுப் பதிவில் ஏகப்பட்ட குழப்பங்கள். அதனால் தான் பெரியார் இப்படிக் கோபத்தோடு எழுதினார்- "இனியாவது தமிழர்கள் இந்த 60 வருஷ காலமுறையைக் காறித் துப்பிவிட்டு கி.பி.யையோ, ஹிஜிரியையோ, கொல்லம் ஆண்டையோ விக்ரமாதித்தனையோ, சாலிவாகனனையோ அல்லது வேறு ஏதாவது ஒரு 'சனியனை' யோ குறிப்பு வைத்துக் கொள்வார்களா? அவ்வளவு சூடு சொரணை தமிழனுக்கு உண்டா என்றும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்." (குடி அரசு 8-4-1944)

ஆக, இந்தத் தமிழ் வருட முறையே தவறாக, சரித்திரக் கணக்கிற்குப் போதாததாக உள்ளது. இதை ஏன் கைவிடக்கூடாது என்று தமிழக அரசு யோசிக்க வேண்டும். தமிழ்நாட்டு நாட்காட்டியில் இந்த 60 வருடக் கணக்கு முறையே வரத் தேவையில்லை. கி.பி.காலக் கணக்கே போதும். இதிலே சித்திரையும் வேண்டாம், தையும் வேண்டாம் அரசுக்கு. மதச்சார்பற்ற அரசு என்ற முறையில் இந்தத் தமிழ் வருடப் பிறப்பு விவகாரத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும். மக்கள் இந்துமத நம்பிக்கையாலும் பழக்கத் தோஷத்தாலும் தமிழ் வருடப் பிறப்பு கொண்டாடினால் எந்த மதத்தையாவது வைத்துக் கொண்டுப் போகட்டும். அதை அரசு அங்கீகரிக்க வேண்டாம். அரசைப் பொறுத்தவரை ஜனவரி ஒன்றே புது வருடப் பிறப்பாக இருக்கட்டும். அது சகல மதத்தவரும் கொண்டாடுகிற, மத நம்பிக்கையற்றவரும் கொண்டாடுகிற நாளாக ஆகியிருக்கிறது.

Pin It