ஊழலை எதிர்த்தும், ஒரு வலுவான லோக்பால் மசோதாவுக்காகவும் தில்லியில் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் நாடாளுமன்றத்திற்கு அப்பால் வெளியேயும் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்க, மற்றொரு போராட்டமும் அங்கே ஆகஸ்ட் 25 அன்று பெரும் உணர்ச்சிப் பிரவாகத்துடன் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சியின் கீழ் திரிணாமுல் குண்டர்கள் நடத்தும் இடது முன்னணி ஊழியர்களுக்கு எதிரான கொலை பாதகச் செயல்களைத் தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் ஜனநாயகத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க வலியுறுத்தியும் மேற்குவங்க இடது முன்னணி சார்பில் நடத்தப்பட்ட போராட்டமாகும் அது.

இடது முன்னணித் தலைவர்களின் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஊர்வலம் அது. வங்க இடது முன்னணியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்; திரிணாமுல் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டு உயிர்த்தியாகம் செய்த மார்க்சிஸ்ட் கட்சி- இடது முன்னணி ஊழியர்களின் விதவைத் தாய்மார்களும் அவர்களது உறவினர்களும் கூட இவ் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இவர்களெல்லாரும் நாடாளுமன்றத் தெருவிலே தர்ணா போராட்டம் நடந்தது. தலைவர்கள் பிரதமரைச் சந்தித்து கோரிக்கை விண்ணப்பமும் அளித்தனர்.

திரிணாமுல் ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று மாதங்களில் 30க்கும் மேலான இடது முன்னணி ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். கொலைவெறித் தாக்குதலுக்கு அஞ்சி 40 ஆயிரத்திற்கும் மேலானோர் தங்கள் வீடுகளையும் ஊரையும் விட்டு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். குண்டர்களால் மார்க்சிஸ்ட் கட்சியின், தொழிற்சங்கங்களின், விவசாய சங்கங்களின் ஏராளமான அலுவலகங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன; தாக்கிச் சிதைக்கப்பட்டன.

இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கு நிலச்சீர்திருத்தச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட விவசாய நிலங்களை முன்னாள் நிலப்பிரபுக்களுக்காக- போலீஸ் துணையுடன்- திரிணாமுல் குண்டர்கள் கைப்பற்றும் வன்செயலில் ஈடுபட்டனர். இதனால் 17 ஆயிரம் விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்தனர். (பின்னர், பறிக்கப்பட்ட தங்கள் நிலங்களை பல விவசாயிகள் சங்கத் துணையோடு கைப்பற்றினர்)

ஜனநாயகத்திற்கு எதிரான திரிணாமுல்லின் வன்செயல்களை அம்பலப்படுத்திச் செய்தி வெளியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் "கணசக்தி" நாளிதழை மக்களுக்கு விநியோகிக்க விடாமல் திரிணாமுல் வன் கூட்டம் பறித்துச் செல்வதும் நிகழ்கிறது.

தேசத்திற்கே முன்மாதிரியாய்த் திகழ்ந்த வங்கம் இன்று ஜனநாயகமும் சட்டம்-ஒழுங்கும் சீர்குலைந்து பாழ்பட்டுக் கிடக்கிறது. அங்கே மாநில அமைச்சரவையில் பங்கேற்றுள்ள கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி கூட இவர்களின் வன்செயலிலிருந்து தப்பவில்லை. திரிணாமுல் காரர்களின் தாக்குதலுக்கு பயந்து 61 காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் திறக்க முடியாமல் மூட வேண்டிய நிலைமை.

மம்தா பானர்ஜியின் ஆட்சி, 34 ஆண்டுகளாக இடது முன்னணி ஆட்சி காப்பாற்றி வந்த வங்கத்தின் பெருமையையும் சிறப்பையும் சீரழிக்கிறது. கடும் விமர்சனத்திற்குள்ளாகி அதன் நூறு நாள் ஆட்சி.

மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன்னணி மக்களின் பேராதரவுடன் 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடத்தியது என்பது மட்டுமல்ல; 'அரசியலில் ஊழல் சகஜமப்பா' என்று சொல்லுகிற இந்திய அரசியல் சூழலில் அந்த 34 ஆண்டுகளில் எவராலும் விரல் நீட்டி ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியாத அளவுக்கு நேர்மையான தூய ஆட்சியை வழங்கியது. வங்கம் பெற்ற உயர் பெருமை அது.

திரிணாமுல்லும் காங்கிரசும் வங்க முதலாளித்துவ சுயநல சக்திகளும் பெரு உடைமை வர்க்கமும் ஏகபோக ஊடகங்களும் ஏகாதிபத்திய சக்திகளும் சேர்ந்து பின்னிய சதி வலையில் சிக்கிய வங்க மக்கள் எதிர்காலத்தில் அனுபவம் வழங்கும் அறிவாயுதத்தால் சதி வலையைக் கிழித்துக் கொண்டு மீண்டும் விழித்தெழுவர்.

பாதிக்கப்பட்டுள்ள வங்கத் தோழர்களுக்கு நாடு முழுதும் நிதி திரட்டி வழங்கப்பட்து. திரிணாமுல்லின் வன்முறையைத் தடுக்கவும் ஜனநாயகமும் உரிமையும் சீரழிக்கப்படுவதை நிறுத்தவும் போராடுகிற வங்கத் தோழர்களுக்கு நாட்டின் இடதுசாரி நுனநாயக சக்திகளும் மக்களும் ஒருமைப்பாட்டுணர்வுடன் பக்கத் துணையாய் செயல்படுவர்.

Pin It