இலங்கையின் பெரும்பான்மைச் சிங்களரிடையே பிரபலமாகவுள்ள நாடோடிக் கதைகளுள் ‘மாதன முத்தா’வின் கதையும் ஒன்றாகும். இது தமிழர்களிடையேயும் பிரசித்தமான ஒன்றுதான். என்றாலும், இக்கதையினையும் இந்திய தேசிய காங்கிரஸின் இளைஞர் அணிச் செயலாளர் ராகுல் காந்தியின் அண்மைய பேச்சொன்றினையும் ஒப்பிட்டு தமது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார் இலங்கையின் இடதுசாரிச் சிந்தனையாளரும், சிங்களர்களிடையேயும் தமிழர்கள் மீதும் அவர்களது உரிமைகள் மீதும் அக்கறைகொண்ட சிலரில் ஒருவராக விளங்கும் கலாநிதி விக்கிரமபாகு அவர்கள்.
முதலில், அவர் குறிப்பிட்ட ‘மாதன முத்தா’வின் கதையைப் பார்ப்போம்.
இந்த மாதனமுத்தா, ‘அனைத்தும் அறிந்தவ’னாக, பிறரால் தீர்க்கமுடியாதவற்றை எல்லாம் தீர்த்து வைப்பவனாக; உருவகம் செய்யப்பட்டுள்ள ஒருவன். அவன் தொழில் மட்பாண்டங்களைச் செய்வது. ஒரு நாள் அவன் செய்த பானை ஒன்றினுள் அவனது ‘செல்ல’ ஆடொன்று தன் தலையை நுழைத்துக் கொண்டது. ஆட்டின் தலையில் இருந்த அதன் கொம்புகள் இரண்டும் பானையுள் வசமாக மாட்டிக் கொள்ளவே அது தன் தலையை வெளியே எடுக்க முடியாமல் போயிற்று. அனைத்திலும் வல்லவனான மாதன முத்தா; ஆட்டின் தலையை பானையைலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபடலானான்... அப்போது அவனது மூளையில் அபூர்வமான எண்ணம் ஒன்று உதித்தது. ஆட்டின் தலையை வெட்டி, முதலில் அதன் உடலையும், பானையையும் காப்பாற்றி விடலாம், பின்னர் தலையை வெளியே எடுத்து அதன் உடலுடன் பொருத்திவிடலாம் என்னும் தனது சிந்தனைக்குச் செயலுருக் கொடுக்க முனைந்தான் அவன்!. விளைவு என்னவாயிருக்கும் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்குமல்லவா?
கடைசியில் ஆட்டையும் இழந்து, பானையுள் அகப்பட்ட அதன் தலையை வெளியே எடுக்க இயலாமல் பானையையும் உடைத்தான் அந்த அதிபுத்திசாலி.
ராகுல் காந்தி அவர்கள், அண்மையில் தமிழகத்துக்கு வருகை தந்த சமயம், ஈழத்தமிழர்களது துயர் இன்னும் தீரவில்லை என்பதையிட்டுத் தாம் கவலைப் படுவதாகக் குறிப்பிட்டிருந்ததையும்; இந்த ‘மாதன முத்தா’வின் செயலையுமே கலாநிதி விக்கிரமபாகு ஒப்பிட்டிருந்தார்.
இலங்கைத் தமிழர்களது அரசியல் உரிமைகளைப் பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்க்கும் வலிமை இந்திய அரசிடம் உண்டு, என்றாலும் அது ஏனோ அவ்வாறு செயல்பட முயன்றதில்லை. இந்திரா காந்தியின் காலத்திற்குப் பின்னர் அதன் அணுகுமுறையில் பாரிய வேறுபாடு உருவாகிவிட்டது. உண்மையில் இலங்கையின் மிதவாதத் தமிழ்த் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து; அந்நாட்டின் இரு தேசிய இனங்களும் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்காத வகையில் இலங்கை அரசுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் வலிமையினை இந்திய அரசு பெற்றிருந்தது. அவ்வாறு உருவாகும் ஒப்பந்தங்களை உரிய வகையில் செயல்படுத்துவதன் மூலமாக - எந்த உரிமைகளுகாக புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தினார்களோ அதனை வலுவற்றதாக்கி - அந் நாட்டில் இத்தனை கொடிய உயிரிழப்புகள் ஏற்படாவண்ணம் தடுத்திருக்க முடியும்.
ஆனால், இந்தியாவோ இலங்கை அரசின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக அதற்கு ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் வழங்கியது. இலங்கை அரசுடனான உறவு என்னும் பானையைக் காப்பாற்றும் முயற்சியில் தமிழர்களான அப்பாவி ஆடுகளை அது ‘பலி’யாக்க முனைந்தது. ஆனால் இன்று அந்தப் பானையைக் கூடக் காப்பாற்றுவதற்கு அது திண்டாடிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை!
இந்த சந்தர்ப்பத்தில்தான், ராகுல் காந்தி அவர்கள் ஈழத் தமிழர் துயர் கண்டு; ‘கலைஞர் பாணியில்’ கவலைப் பட்டிருக்கிறார். ஆனால், இன்னும்கூட காலம் கடந்துவிடவில்லை.
ராகுல் காந்தி கூறியது போல், அவர் உண்மையிலேயே ஈழத் தமிழர்களுக்காகக் கவலைப்படுபவராக இருந்தால்… தமது அன்னையும் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவியுமான சோனியாகாந்தியின் மூலம், இலங்கையின் மிதவாத அரசியலாளர்கள் 1977 க்கு முன்பிருந்தே கோரிவந்த ‘சமஷ்டி அரசியல்’ அமைப்பினை அந் நாட்டில் ஏற்படுத்தி; அங்கு வாழும் தமிழர்கள் தமது பிரதேசத்தில் - அதே சமையம் பிளவுபடாத ‘இலங்கை’யில் உரிமையுடன் வாழ அரசியல் ரீதியாக அழுத்தங்களை உருவாக்கமுடியும்.
1984ம் ஆண்டின் ஆரம்பத்தில், அன்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த அத்துலத்முதலி, இந்தியாவுக்கு வருகை தந்த சமயத்தில், அன்றைய பாரதப் பிரதமரும், ராகுல் காந்தியின் பாட்டியுமான இந்திராகாந்தி அவர்கள், “இன்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் உங்கள் கட்சியே [யு.என்.பி] அறுதிப் பெரும்பான்மையுடன் இருக்கிறது, அவ்வாறிருக்கையில் நீங்கள் எமக்குத் தரும் வாக்குறுதிகளை உங்கள் அதிபரால் [ஜே.ஆர் ] எவ்வாறு நிறைவேற்றமுடியாதிருக்கும்?” எனக் கடிந்து கொண்டதாக அப்போது செய்தி வெளியாகியிருந்தது. ஜி.பார்த்தசாரதி மூலம் முன்னெடுக்கப்பட்ட அன்றைய முயற்சிகள், ஒரு வேளை இந்திராகாந்தி கொல்லப்படாதிருந்தால் வெற்றி பெற்றிருக்கக் கூடும். இன்று ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ‘அவல நிலை’யும் உருவாகாதிருந்திருக்கும்.
இன்றும், இலங்கையின் ‘செல்வாக்கு மிக்க’ அதிபராக மீண்டும் தெரிவாகித் தமது அதிபர் பதவியின் இரண்டாவது ‘தவணை’யை ஆரம்பித்திருக்கும் மஹிந்த ராஜபக்ஷ நினைத்தால் அங்கு வாழும் தமிழருக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றினை வழங்க முடியும்.
அன்று ஜே.ஆர்-க்கு இருந்தது போன்ற அரசியல் நிலைத்தன்மை இன்றைய அதிபரிடமும் இருக்கிறது.
எனவே, தனது ‘பாட்டி’யின் எண்ணத்திற்கு இன்று ராகுல் காந்தியால் செயலுரு வழங்குவது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல. ஆனால், அதற்கு அவர் ஈழத்தமிழர்களுக்காகக் கவலைப்படுவது உண்மையாக இருக்கவேண்டும்!
என்றாலும்….
அரசியல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பேசும் ‘மாதன முத்தா’க்கள் இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும்…. ஏன்… இப் பூமிப்பந்தின் இன்னும் பல நாடுகளிலும் தலைவர்களாக உலாவிக் கொண்டுதானிருக்கிறார்கள்!
மக்கள்; அரசியலில் விழிப்புணர்வு அடையும் வரை இவர்களது ஆட்டம் தொடரவே செய்யும் என்பது மட்டுமல்ல 'மாதன்முத்த வாரிசு’களும் உருவாகவே செய்வார்கள். இதில் ராகுல் எந்த ரகம் ?!
*******************************
[www.sarvachitthan.wordpress.com]