ஒபாமா தனது மனைவி மிசெல்லே உடன் இந்தியா வந்தார்..சென்றார்.. என்பதை நமது டி.வி. சேனல்களின் புண்ணியத்தில் எல்லோரும் பார்த்துப் பரவசப்பட்டார்கள். மும்பை ஹோலி நேம் பள்ளி மாணவர்களோடு சேர்ந்து தீபாவளி நடனத்தையும், மீனவர்களின் கோலி ஆட்டத்தையும் ஒபாமாவின் மனைவி ஆடிய போது இந்தியர்கள் பலர் இமை கொட்டாமல் பார்த்தார்கள். ஆனால் ஒபாமாவோடு 200 அமெரிக்கத் தொழிலதிபர்கள் வந்ததும், அவர்கள் செய்ததும் நம்முடைய கண்களுக்கும், செவிகளுக்கும் எட்டியதா என்பது சிந்தனைக்குரியது.
ஒபாமாவும், அவரது மனைவியும் இப்படி இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருந்தபோது அமெரிக்க தொழில் அதிபர்கள் பரபரப்பாக இந்திய சகாக்களோடும், அதிகார வர்க்கத்தோடும் அமர்ந்து வியாபாரம் பேசிக்கொண்டிருந்தார்கள். இது ஏதோ தற்செயலான நிகழ்வு அல்ல.
சந்தைச் சுற்றுலா
6 நவ 2010 பதிவைப் போய் பாருங்கள். ஒபாமாவின் இந்திய வருகை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு அது. விமானத்திலேயே வெள்ளை மாளிகையின் உயர் மட்ட அதிகாரிகள் பேசுகிறார்கள்.
கேந்திரத் தகவல் தொடர்புக்கான தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகர் ரோட்ஸ் பயண விவரங்களை விளக்கும்போதே
முதல் நாள் நம்மோடு பொருளாதார, தொழில் சம்பந்தமாக விவாதிக்கிற அதிபர், இரண்டாவது நாள் இந்திய மக்களுக்கு செய்திகளைச் சொல்லப் போய் விடுவார், அன்றைக்கு நாம் விவசாயம் உள்ளிட்ட விவாதங்களை நடத்த வேண்டியுள்ளது என்று கூறுகிறார்.
அச்சந்திப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் தோனிலோன், ஒபாமா வருகையின் நோக்கத்தை அப்பட்டமாகச் சொல்வதைப் பார்க்கலாம்.
2002 லிருந்து 2009 வரையிலான காலத்தில் உலக மொத்த உற்பத்தி 3.6 சதவீதமாகவே இருந்துள்ளது. ஆனால் ஆசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதமாக இருந்திருக்கிறது.
இப்படி பொருளாதார விருந்தின் மெனுவை விளக்குகிற அவர், இன்றைய ஸ்பெஷல் போல ஒரு தகவலை இலையில் எடுத்து வைக்கிறார்.
இந்த 7 ஆண்டுகளில் இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதி பல மடங்கு கூடியுள்ளது. சரக்கு ஏற்றுமதி 4 மடங்கும், சேவைத் துறை ஏற்றுமதி 3 மடங்கும் கூடியிருக்கிறது.
இப்படி நாக்கில் லிட்டர் கணக்கில் உமிழ்நீர் சுரந்த 200 தொழிலதிபர்களோடுதான் ஒபாமா மும்¬பயில் வந்து இறங்கினார். இடையில் ஒரு ஜோக், போன மாதம் நமது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வாஷிங்டனில் உலகவங்கி ஐ எம் எப் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட போது என்ன சொன்னார் தெரியுமா !
நாங்கள் இங்கு யாரையும் சந்திக்கவில்லை. எங்களது சொந்தப் புரிதலின் அடிப்படையிலேயே சீர்திருத்தங்கள் அவசியம் எனக் கருதுகிறோம்.அது நமது பொருளாதாரத்திற்கு நல்லது. யாருடைய வருகையோடும் எங்களது இந்த விருப்பம் இணைந்தது இல்லை " ( தி ஹிந்து, 11 அக் 2010 )
ஒபாமா வருகைக்கு 25 நாட்களுக்கு முன்பாக பிரணாப் அளித்த பேட்டி இது. கறுப்புச் சால்வையை ஆக்ரோஷமாக ஏற்றி இறக்கி அருவித் தமிழில் அழகாகப் பேசுகிற வைகோ ஒபாமா வருகைக்கு பின்னால் இருக்கிற பொருளாதார நோக்கங்களையும் சேர்த்து விவாதிக்க வேண்டும். அதற்குப் பின்னர் அவர் இடதுசாரிகளுக்கு அறிவுரை சொல்லலாம்.
வியாபாரம் அமோகம்
ஒபாமா வெளிப்படையாகவே சொன்னார். அவரது கஷ்டம் அவருக்கு. இந்திய வருகைக்கு சற்று முன்புதான் அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபை தேர்தல் முடிவுகள் வந்திருந்தன. பாவம், அவரது கட்சி தோல்வியைச் சந்தித்திருந்தது. ஆம்! நம்மால் முடியும் என்று நம்பியிருந்த இளைஞர்கள் , சிறுபான்மையினர், போர் எதிர்ப்பாளர்கள். தொழிலாளர்கள் என எல்லோரின் எதிர்பார்ப்புகளும் வடிந்து போய் இருப்பதன் விளைவுதான்.அமெரிக்க வேலையில்லாத் திண்டாட்டம் 9.6 சதவீதத்தை தொட்டிருக்கிறது. எனவே அவர் மன்மோகன்சிங் சிரமத்தைப் பற்றி கவலைப்படாமல்,
நாங்கள் இந்தியாவை அமெரிக்க பொருட்களை விற்பதற்கான வேகமாக வளரும் சந்தையாக பார்க்கிறோம்.இது எங்கள் நாட்டின் வேலைவாய்ப்புகளை பெருக்குகிற திட்டம் என்று இந்திய வருகை பற்றி வெளிப்படையாக சொன்னார்.
மள மளவென்று 10 பில்லியன் டாலர் அமெரிக்க ஏற்றுமதிக்கு வழி செய்கிற உடன்பாடுகள் கையெழுத்து ஆகியுள்ளன. 54000 அமெரிக்க வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று ஒபாமா பெருமை கொப்பளிக்க சொன்னார். இந்தியாவில் வந்து அவுட் சோர்சிங் வேலை வாய்ப்புக்கள் பற்றி அறிவிப்பார்; நிறைய பேருக்கு அமெரிக்க கனவுகள் ஈடேறும் என்று காத்திருந்த பலரும் அதிர்ந்து போனார்கள். வாயளவில் அவர், 54000 வேலைகளை இநதியா உருவாக்கித் தந்திருப்பதை அவுட் சோர்சிங்கை எதிர்ப்பவர்களிடம் சொல்வேன் என்று அவர் சொன்னதையே பெரிய வரமாக கொண்டாடி விட்டன சில மீடியாக்கள்.ஒபாமாவை கொஞ்சமும் புண்படுத்தாமல் அவுட் சோர்சிங் பிரச்சனையில் அவரை தணிய வைக்கவேண்டும் என்பதற்காக இந்தியத் தொழிலதிபர்கள் மிகுந்த சிரத்தை எடுத்தார்கள். ‘இன்போசிஸ்’ நாராயண மூர்த்தி " விருந்தாளி கடவுளுக்குச்சமானம்" என்றெல்லாம் சூடம் கொளுத்திய நகைச்சுவை அரங்கேறியது. இன்போசிஸ் வருவாயில் 66% அமெரிக்க மண்ணிலிருந்துதான் வருகிறது என்றால் தனலெட்சுமிதானே.
ஆனால் ஒபாமா வாங்கியிருக்கிற ஏற்றுமதிக்கான ஆர்டரில் ஜெனரல் எலெக்ட்ரிக் போன்ற அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகள் காட்டில் மழை.
கோவணத்திற்கும் ஆபத்து:
ஒபாமா வருகையில் விவசாயிகளின் சுருக்குப் பைக்கும் , சிறு வியாபாரிகளின் கல்லாப்பெட்டிக்கும் குறி வைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நவ 6 அன்று உடனும், நவ 8, 9 தேதிகளில் புது டெல்லியில் மூன்று கூட்டங்கள் நடந்தேறியுள்ளன, அமெரிக்க _ இந்திய பிசினஸ் கவுன்சில், மூன்று முன்னுரிமை இலக்குகளை அறிவித்தன.
1) பல பிராண்டு சிறு வணிகத்தை திறந்து விடல்
2) வரி மற்றும் வரியில்லாத வணிகச் சுவர்களை குறைத்தல்
3) அமெரிக்க கம்பெனிகள் இந்திய "நித்திய பசுமைப் புரட்சிக்கு" செய்ய வல்ல உதவிகளை மக்களுக்கு எடுத்துரைப்பது
சிறு வணிகத்தில் வால் மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்தால் விவசாயிகளுக்கு லாபமாம். இப்போது கடைசி வாடிக்கையாளர் தருகிற விலையில் மூன்றில் ஒரு பங்குதான் விவசாயிகளுக்கு போய்ச் சேருகிறதாம். சுதந்திரம் பெற்று இவ்வளவு காலமான பிறகுதான் இந்த உண்மை தெரிந்திருக்கிறதாம். உலகத்திலேயே அதிகமான பால் கறக்கிற நாடாக இருக்கிற இந்தியாவில், 40 % பால் சரியான பராமரிப்பு ஏற்பாடு இல்லாததால் கெட்டுப்போகிறதாம். வால் மார்ட் பூனை வந்தால் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாம். இப்படியெல்லாம் இரு நாட்டின் தொழிலதிபர்களும் உட்கார்ந்து பேசி சிறு வணிகத்தைத் திறந்துவிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்து, விவசாயிகள் தலையில் கை வைத்திருக்கிறார்கள். "எங்கேயும் எப்போதும் சந்தோசம்" என்பது போல நித்திய பசுமைப் புரட்சி பற்றி கவலையோடு ஒபாமாவும், மன்மோகனும் பேசியிருக்கிறார்கள். 2004 லேயே மன்மோகன், புஷ் உருவாக்கிய knowledge initiive ஐ மீண்டும் முனைப்போடு அமலாக்க முயற்சிக்கிறார்கள். அப்போது நமது கோவை விவசாயப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட மூன்று விவசாய, கால்நடை கல்வி நிறுவனங்களை அழைத்து மான்சாண்டோ, வால் மார்ட் போன்ற நிறுவனங்களோடு அறிவு பகிர்வுக்கு ஏற்பாடு செய்தார்கள்.
மான்சாண்டோ பருத்தி விளைச்சலை 6 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கிவிட்டதாகவும், பெப்சி நிறுவனம் பஞ்சாபின் விவசாயத்தை ஆரஞ்சு விளைச்சலை நோக்கி வெற்றிகரமாக திருப்பியிருப்பதாகவும் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். வெற்றிக் கதைகளை மக்களுக்குச் சொல்வது என்பது முடிவல்லவா! நாடாளுமன்றத்தில் விதைச் சட்டத்தை விரைவில் நிறைவேற்றி விவசாயிகளின் ஜீவாதார விதை உரிமையைப் பறிப்பது பற்றிய நிர்பந்தமும் தரப்பட்டுள்ளது.
உள்ளுரில் விலை போகாதவர்கள்
யாரும் எங்களின் கைகளை முறுக்கவில்லை. நாங்களாகவே கைகளை அப்படி வைத்துக் கொண்டோம் என்கிறார் அல்லவா பிரணாப் முகர்ஜி! ஆனால் நவ 10 அன்று ஒபாமா 20 நாடுகளின் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தைப் பாருங்கள்.
நமது நிகழ்ச்சி நிரலில் அடுத்த கட்ட நிதித்துறை சீர்திருத்தங்கள் இடம் பெற வேண்டும். நாம் எல்லோரும் ஒரு முகத்தோடு அமல்படுத்தி சீர்த்திருத்த வேகத்தினை உறுதிப்படுத்த வேண்டும்"
2010இல் மட்டும் நவ 12 வரை 146 வங்கிகள் அமெரிக்காவில் திவாலாகி உள்ளன. 2009 இல் 140 வங்கிகள் மஞ்சக் கடுதாசி கொடுத்தன. 2008 இல் 27 வங்கிகள். நெருக்கடி கடுமையாகவே இன்றைக்கும் நீடிக்கிறது. இந்த லட்சணத்தில் உலகம் முழுக்க நிதித்துறை சீர்த்திருத்தங்களுக்கு கூச்ச நாச்சமின்றி ஆலோசனை வழங்குகிறது அமெரிக்கா.
அமெரிக்காவின் பகாசுர இன்சூரன்ஸ் கம்பெனியான ஏ.ஐ ஜி , ஐரோப்பிய போர்டிஸ், ஐ என் ஜி , ஏகோன் ஆகிய நிறுவனங்களை வீழ்ச்சியிலிருந்து அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள்தான் பெயில் அவுட் மூலம் காப்பாற்றின. ஆனால் இந்திய நாட்டின் எல் ஐ சியை பலவீனப்படுத்த ஒரு மசோதா, இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை உயர்த்த ஒரு மசோதா என இரண்டு கத்திகள் நாடாளுமன்றத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. எல்.ஐ.சி மசோதாவுக்கு எதிராக நாடாளு மன்ற நிலைக் குழுவே ஒரு மனதாக பல பரிந்துரைகளைத் தந்திருந்தும் அதை கைவிடவோ, மாற்றம் செய்யவோ முனையவில்லை.
இளைய பங்காளிகள்
இந்தியத் தொழில் அதிபர்கள் இளைய பங்காளிகள் ஆகிற உற்சாகத்தில் மிதக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் 143 அமெரிக்க கம்பெனிகளை இந்தியத் தொழிலகங்கள் கையகப்படுத்தியுள்ளன. இவர்களுக்கு இது ஜாக்பாட். அமெரிக்காவிற்கோ இவையெல்லாம் மீன்களுக்கு போடுகிற பொரி மாதிரி.
எச்.சி.எல் நிறுவனம் அமெரிக்க போயிங் ஜெட் விமானங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை செய்து தருகிற ஆர்டரை பெற்றுள்ளதாம். பதிலுக்கு ஜெட் ஏர் வேஸ், 72 போயிங் விமானங்களை வாங்கப் போகிறதாம்.
டாடா குழுமம் அமெரிக்காவில் ரூ 13500 கோடிகளை முதலீடு செய்துள்ளது. எயிட் ஒ கிளாக் நிறுவனத்தை 900 கோடிகளை கொடுத்து வாங்கியிருக்கிறது. 16 தொழில்களை அது அமெரிக்காவில் வைத்திருக்கிறது.
இவர்கள் ஏன் அமெரிக்காவுடன் நெருங்கத் துடிக்கிறார்கள் என்பது புரிகிறதா ? தானாடவில்லையம்மா! லாப வெறியாடுது! அது விவசாயமென்றாலும். சிறு வணிகம் என்றாலும் பாய்ந்து குதறுது!
ஒபாமா வந்ததும், சென்றதும்
சந்தைக்காக.. சந்தைக்காக.. சந்தைக்காக..