“சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வண்டி எண் 07117 தடம் நான்கில் பனிரெண்டு மணிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப் படுகிறது …”

“மணி இப்போ பதினொன்னு தான் ஆச்சு... இன்னும் ஒருமணிநேரம் இருக்கு... தீர்த்தாவை நான் தூங்க வைக்கிறேன். நீங்களும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க" என்றாள் அஷ்வினி.

சென்னை மத்திய ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில உள்ள காத்திருப்பு அறையில் சுமார் நாற்பது பேர் இருந்தனர். அதில் அனைவரும் தொலைந்த தூக்கத்தை இறுக்கிப் பிடிக்கும் ஆராய்ச்சியில் இருந்தனர்.

அம்பத்தூரில் இருக்கும் தன் அத்தை மகன் அருண் வீட்டிற்கு பொங்கல் விடுமுறையில் தன் மனைவி மற்றும் ஒரு வயது மகளுடன் வந்திருந்தான் அருள்.

அவனுடைய வாழ்நாள் முழுவதும் துன்பமும் துயரமும் பல உயரங்களைக் கண்டிருந்தது. அவன் யார் வீட்டிற்கும் போவது கிடையாது. மாறாக வீடு - வேலை, வீடு - வேலை என்ற ஒரு சுழற்சிக் கோட்பாட்டில் வாழ்ந்து வருபவன். இந்த பொங்கல் விடுமுறையில் அருண் அழைப்பினை ஒட்டி தன் மனதில் இருக்கும் பணி இறுக்கத்தை தளர்த்துவதற்காக சென்னை வந்தான்.

வாழ்க்கையின் எங்கோ ஒரு மூலையில் ஒரு நாள் அவனுக்காக வாழ்ந்து விடக் கூடாதா என்று ஏங்கியவனுக்கு இங்கும் ஏமாற்றம் தான். அவன் சென்னையில் முதல் நாள் இறங்கியதும், அது ஆரம்பமானது. அருண் எதைச் செய்தாலும் அது தன் மனைவியின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது என்பதைத் தெரிந்து கொண்டான். தனக்காக கேட்டுக் கொண்ட அனைத்தும் அப்படி நிராகரிக்கப் பட்டதைப் புரிந்து கொண்டு அன்று இரவே முன்பதிவு இல்லாத வகுப்பில் பயணிப்பது என்று தீர்மானித்துக் கொண்டு வேறொரு காரணம் காட்டி கிளம்பினான் அருள்.

“என்னங்க அதையே நினைச்சிட்டு இருக்கீங்களா… விடுங்க இது நமக்கு ஒரு பாடம் ..” என்று எப்போதும் போல அவனைத் தேற்றினாள் அஷ்வினி.

“இல்ல… அங்கிருக்கப் பிடிக்காம நான் பாட்டுக்கு வீராப்பா கிளம்பி வந்துட்டேன். உன்னையும் நம்ம குழந்தை பத்தியும் நான் யோசிக்கவே இல்ல… எப்படி உங்க ரெண்டு பேரையும் கோயம்பத்தூர் வரை இந்த கூட்டமான முன்பதிவில்லாத வகுப்புல கூட்டிட்டு போகப் போறேனு தெரியல…..” என்றான் அருள் சற்று கலக்கத்தோடு.

“என்னமா இது எல்லா வீட்டுலையும் நடக்கிறது தான…. இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்படி…” என்றது அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஒரு பாட்டி.

“எந்த ஊருமா… நீங்க?" என்றாள் அஷ்வினி.

“நமக்கு எங்க ஊரு… சேலத்தில இருக்கற மகன் வீட்டுல ஒரு மாசம் அப்பறம் ஆவடில இருக்கிற மவ வீட்டுல ஒரு மாசம்…. இப்படி காலத்தைத் தள்ளிட்டு இருக்கேன்...”

“நான் பார்க்கிறது கேக்கிறது எல்லாம் துன்பமயமாகத்தான் இருக்கு பாட்டி….” என்றான் ஆறுதல் தேடிய அருள்.

“கொஞ்சம் கால் எடுங்க கூட்டிக்கிறேன் …” என்றான் அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்களின் கனவுகளைக் கலைக்காமல் குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்த ஒருவன்.

“பாட்டி நீங்க தனியா எப்படி….” என்று அரைத் தூக்கத்திலேயே கேட்டாள் அஷ்வினி.

“இல்லமா.. அதோ அங்க சால்வ பொத்தி படுத்திட்டு இருக்காரே... அவரு தான் என் வீட்டுக்காரர் “

“ஏங்க... எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது. எங்காவது தைலம் இருந்தா வாங்கிட்டு வாங்க…” என்றாள் அஷ்வினி.

தான் இருந்த முதல் நடைமேடையிலிருந்து வெளியே செல்ல புறப்பட்டபோது, ஐந்தாவது நடைமேடையில் தனியே ஒரு ரயில் வண்டி நின்றிருப்பதைப் பார்த்தான். யாருமில்லாத, நின்றிருக்கும் ரயில் வண்டியில் ஏறி அமர வேண்டும் என்பது அவனுக்கு நீண்ட காலக் கனவாக இருந்தது. இந்த முறை அதை அனுபவிக்க வேண்டும் என்று முடிவெடுத்தான். இன்னும் அவன் வண்டி வருவதற்கு அரைமணி நேரம் இருந்தது.

நடைமேடையின் ஓரத்தில் இருந்த படிக்கட்டுகள் வழியே ஐந்தாம் நடை மேடையை அடைந்தான். நள்ளிரவு என்பதால் அங்கு ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. அந்த ரயில் இருட்டின் ஒரு பகுதியை போர்த்திக் கொண்டு இருந்தது.

அவனுக்கு அது மனதிற்கு ஒருவிதமான அமைதியைப் போதித்தது. அவன் தன் அருகில் இருந்த ஒரு பெட்டியில் ஏறினான். சிறுநீர் நாற்றம் குடலைப் புரட்டியது .

இது இந்திய ரயில்வேயின் சாபக்கேடு.

அது தொடர் பெட்டி என்பதால் மூக்கை இருவிரலில் பிடித்தவாறு உள்ளே வேகமாக நடந்தான். உள்ளே சிறிது தூரத்தில் விளக்கின் வெளிச்சம் குறைந்து கொண்டே இருந்தது. சிறிது தூரத்தில் முழுவதுமாய் வெளிச்சம் இல்லாமல் இருந்தது.

ரயிலில் இதுபோன்ற அனுபவம் இனி வாய்க்கப் போவது இல்லை என்று கிடைத்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டான் அருள்.

ஒரு நீண்ட இருக்கையில் ஜன்னல் ஓரம் அமர்ந்து கொண்டான். விளக்குக்கான பொத்தான்களை அழுத்திப் பார்த்தான். எந்த ஒளியும் தன்னை பாய்ச்சிக் கொள்ள விரும்பவில்லை. இந்த ரயிலில் எந்தப் பயணியும் இருப்பது போலத் தெரியவில்லை. தோராயமாகப் பார்த்தால் இது தற்காலிகப் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது போன்று தென்பட்டது. கண்களை மூடிக் கொண்டு அந்த அமைதியைத் தியானித்தான். உலகின் ஒரு மூலையில் அவனுக்கான மகிழ்ச்சியின் ஒரு பகுதியாய் அதை உணர ஆரம்பித்தான்.

திடீரெனெ… ஒருவர் தன்னைக் கடப்பது போல உணர்ந்தான்.

கண்விழித்தவன் ஒருவரும் இல்லாததை உறுதி செய்து கொண்டு மீண்டும் தவநிலையை அடைய முயற்சிக்கும் போது, திரும்பவும் ஓர் உருவம் தன்னைக் கடப்பது போன்று உணர்ந்தான் . தன் இருக்கையை விட்டு எழுந்து பக்கத்து இருக்கைக்கு நகர்ந்தான். இருட்டின் விழி சிமிட்டலில் தன் பாதத்தைப் பதித்து கொண்டு முன்னேறினான். யாரோ இருவர் பேசிக் கொண்டு இருப்பது போன்று ஒலி தன் செவிகளில் சிறிது பயத்தைக் கடத்தியது .

“யாரு?…. யாரு?….. என்று பேய் படங்களில் வரும் வசனம் போன்று தன் உண்மையான குரலை மறந்து வேறு தொனியில் கேட்டுப் பார்த்தான்.

 பதில் வரவில்லை… சத்தம் அடங்கியது.

 தன் நடையை மட்டும் குறைத்துக் கொள்ளாமல் முன்னேறிக் கொண்டிருந்தான்.

இருட்டின் கோரம் இங்கு தலை விரித்துக் கொண்டிருந்தது…

சிறிதுநேரம் கழித்து பேச்சு சத்தம் கேட்கத் துவங்கியது.

 இப்போது பயத்தின் கிளை விரியத் தொடங்கியது…..

திரும்பி ஓடலாம் என்று கதவுகளைத் தேடினால் திரும்பும் இடமெல்லாம் நாற்காலிகளும், கம்பிகளும் தான் தட்டுப்பட்டது. மூச்சை இறுக்கி பிடித்துக் கொண்டு தன் நடை வேகத்தைக் கூட்டினான்.

எப்படி தேடினாலும் வெளியில் செல்லும் பகுதி அவன் கைகளுக்கு அகப்படவில்லை.

மீண்டும் ஒரு குரல் கேட்கிறது.

அந்த குரல் திசையை பிடித்துக் கொண்டான். அது ஒரு குழந்தையின் குரல்.

அவன் நெருங்கிய அறையில் விளக்கு எரிந்தது. அருகில் சென்று பார்த்தபோது, திடீரென விளக்குகள் அணைந்தது. இரண்டு உருவங்கள் அந்த இருளுக்குள் ஊர்ந்து ஓடின.

திடுக்கிட்டவன் அந்த அறையில் குழந்தையைத் தேடினான்.

குழந்தை இருப்பது போலத் தெரியவில்லை.

மெதுவாக அந்த உருவங்கள் நகர்ந்த பகுதியை நோக்கி நகர்ந்தான்….

இருட்டில் ஊசிமுனை கொண்டு குளிர் குத்திக் கொண்டு இருந்தது.

மெதுவாக நகர்ந்தான்….

“ஜருகண்டி… ஜருகண்டி….." என்று ஒரு குரல் அந்த இருட்டில் அதிர்ந்தது.

பின்னோக்கி ஓட முடிவெடுத்தவன் தடுக்கி கீழே விழுந்தான். விழுந்த இடத்தில் தன் கைக்கு ஒரு கதவின் கம்பி தென்பட்டது. அதைப் பிடித்து இழுத்தான். கதவு திறந்து ரயிலின் வெளியே வந்து விழுந்தான்.

தன் ஓட்டத்தைத் தொடர்ந்தான்.

மூச்சிரைக்க அங்கிருந்த மணியைப் பார்த்தான்.

பன்னிரெண்டை எட்டி இருந்தது.

அஸ்வினி அமர்ந்திருந்த முதல் நடை மேடையை நோக்கி விரைந்தான்.

“ஏங்க.. எங்க போனீங்க? உங்க மொபைல இங்கேயே வெச்சுட்டுப் போயிட்டிங்க.. கூப்படவும் முடியல… என் பக்கத்துல இருந்த பாட்டி நான் குழந்தையைப் பார்த்துக்கிறேன் நீ தூங்குன்னு சொல்லுச்சு, எனக்கு தூக்கமே வரலே. அப்பறம் அந்த பாட்டியையும் காணோம்…"

“சரி சரி அப்பறம் சொல்லறேன்… வண்டி ரெடியா நிக்குது. பாப்பாவைத் தூக்கு போகலாம்..” என்றான் அருள்

அவன் குழந்தையுடன் இருந்ததால் ரயிலில் அஸ்வினிக்கு இடம் கிடைத்தது.

இவனும் ஒரு கதவு அருகில் கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டான்.

ரயில் புறப்பட்டது.

"என்ன வெளில ஒரே போலீஸா இருக்கு" என்றான் அருள், பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம்.

“அது எதோ குழந்தை கடத்துறவுங்க இந்த ஸ்டேஷன்ல தான் இருக்காங்க என்ற தகவல் கிடைச்சதுனால போலீஸ் வந்திருக்காங்க…"

அருள் இரவு நடந்த சம்பவத்தில் இருந்து மீளாமல் இருந்தான்.

அடுத்த நிறுத்தம் வந்தது.

“ஜருகண்டி….. ஜருகண்டி……” என்று குரல் கேட்டது.

அவன் இரவில் அந்த ரயிலில் கேட்ட குரல். அது வேறு யாரும் இல்லை. அது அந்தப் பாட்டி மற்றும் அவளுடைய கணவர் மற்றும் அங்கே குப்பையை கூட்டிக் கொண்டு இருந்தவன்.

அவர்கள் மூவரும் இறங்கி அங்குள்ள முதல் நடைமேடையை நோக்கி ஓடினார்கள்.

- சன்மது

Pin It