'என்ன சார் இன்னைக்கு ஒரே குஷியா இருக்கீங்க .....' செக்யூரிட்டி சக்திவேல் கேட்க,

'ஒன்னும் இல்லை இல்லை ஒரு முக்கிய வேலை இருக்கு நாளைக்கு வந்து சொல்றேன் ...' என்று அவசர அவசரமாய் அலுவலகத்தை விட்டு தன் ஹீரோ ஹோண்டா வண்டியைக் கிளப்பினார் வெங்கடேசன்.

மணி ஐந்து முப்பதை எட்டியிருந்தது .. சூரியன் மங்கிக் கொண்டிருந்தான் ..

நூறடி சாலையில் வண்டி உறுமிக் கொண்டிருந்தது.

'அப்பாடா எப்போடா ஏழாம் தேதி வரும்னு காத்திருந்தேன் ...ஒருவேளையா வந்துருச்சு ....எப்படியாவது இன்னைக்கு அத வாங்கிரனும் ....' என்று தன்னுடைய இன்னொருவனுடன் பேசிக்கொண்டிருந்தார் வெங்கடேசன்.

வயது அறுபதை எட்டி இருந்தாலும் நடை தளராமல், நரை மட்டும் கூடியிருந்தது. தன் மகளுக்கும், மகனுக்கும் வாழ்க்கை அமைந்து விட்டதை வாழ்நாள் சாதனையாக நினைத்தார். தன் மனைவியை இனிவரும் காலங்களில் சுமக்க தன் சொந்த காலில் பயணிக்கிறார்.

வண்டி ஒரு இருசக்கர ஷோரூம் ஒன்றில் நின்றது.

'சார் வாங்க ...உங்களத்தான் எதிர்பார்த்தது இருந்தேன் ... நீங்க பார்த்துட்டு போன அந்த பழுப்பு நிற ஜுபிடர் வண்டியை உங்களுக்காகவே யாருக்கும் கொடுக்காமல் வச்சுட்டு இருக்கேன் ..' என்றான் வாழ்நாளில் உண்மையே பேசுவது கிடையாது என்று சத்தியப்பிரமாணம் செய்து வேலையில் சேரும் விற்பனையாளர் வரிசையில் தானும் ஒருவன் என்று மார்தட்டிக் கொள்ளும் கார்த்திகேயன்.

எதுவும் காதில் வாங்கிக் கொள்ளாமல் 'வண்டியப் பார்க்கலாமா' என்று உற்சாகமாக இருந்தார் வெங்கடேசன்.

வண்டியின் பழுப்பு நிறமும்,விளக்குகளும், வெள்ளிக் கம்பிகளும் கவர்ச்சியின் உச்ச நிலையை விரித்திருந்தது. அதுவும் ஒரு கொம்பு போல இருந்த இரு பக்கவாட்டு கண்ணாடிகளும் வெங்கடேசனை மேலும் பூரிப்படையச் செய்தது.

'அந்த பழைய வண்டிய ஒரு பதினைந்து ரூபாய்க்குத் தான் எடுத்துக்க முடியும்... மீதிப் பணத்தைக் கட்டி வண்டியை எடுத்துருங்க ...' என்றான் கார்த்திகேயன்.

'இப்போ ஒரு இருபதாயிரம் தரேன். அப்பறம் மீதி டியூவா கட்டிக்கிறேன்' என்றார் வெங்கடேசன்.

வண்டியை ஒரு குழந்தை தொடுவது போல தொட்டு இயக்கினார் வெங்கடேசன்.

வண்டியில் அமர்ந்ததும் ஒரு குதிரையில் ஒய்யாரமாகப் பறப்பது போல இருந்தது. வண்டியை குழியில் விடும் பொழுது ...வண்டியோடு சேர்ந்து வருந்திக் கொண்டார்.

வண்டி வீட்டை அடைந்தது ..

மனைவி மங்கள‌த்திடம் வண்டியைக் காட்டி, சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.

ஆறுமாத காலமாக முளைத்துக் கொண்டிருந்த கனவு மெல்ல தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது ..

'அந்த கண்ணாடி இருக்கில்ல அது குதிரைக்கு முளைச்ச கொம்பு மாதிரி ...சே ..என்ன அழகு ...' என்று இரவின் வெளிச்சத்தில் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தார் வெங்கடேசன்.

'ஏங்க.... போதும் படுத்து தூங்குங்க மணி பதினொன்னு ஆகுது' என்றாள் மங்களம்.

இரவு அவன் கனவை விழுங்கிக்கொண்டிருந்தது.

'மங்களம் டிபன் கட்டியாச்சா மணி எட்டாச்சு... ஏன் வண்டியவே அப்படி பாக்கற?'

'இல்லைங்க எனக்கு காலேஜ் படிக்கும் போதிருந்து இதே மாதிரி சொந்தமா வண்டி வாங்கி ஓட்டணும்னு ஆசை.. எப்போ நிறைவேறப்போதுன்னு தெரியல... அதுதான்' என்ற மங்களத்தின் வார்த்தை காற்றைக் கனத்தது.

வெங்கடேசன் வண்டில் ஏறும் போதெல்லாம் இரு கொம்பு வைத்த குதிரை மீது சவாரி செய்வது போல எண்ணிக் கொண்டிருந்தார்.

மாலை குழந்தைகள் பள்ளியை விட்டு வீட்டுக்குப் போகும் உற்சாகம் இப்போதெல்லாம் வெங்கடேசனுக்கு இருந்தது. உற்சாகத்தின் நீட்சி வண்டியை விட்டு இறங்கும் போது மட்டும் வெங்கடேசனுக்கு குறைந்தே காணப்பட்டது.

வெங்கடேசனின் விடியல், வண்டியின் அந்த இரண்டு கண்ணாடியில் தான் விடிந்தது... அப்படி இருக்கும் போது ஒரு நாள் கண்ணாடி இரண்டும் திசை மாறி வடதுருவம், தென்துருவமாக திரும்பி இருந்தது.

வெங்கடேசன் பதறிப் போனார். உடனே பக்கத்தில் இருக்கும் பணிமனையில் வண்டியைக் கொண்டு சென்று சரி செய்தார்.

அன்று அந்த விழிப்பு காலையை மிக அழகாக்கியது போல இருந்தது. அப்படி ஒரு திடீர் விழிப்பு... வெங்கடேசன் வழக்கம் போல தன்னைப் பார்க்க வண்டி அருகில் போனார். ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அதே போல கண்ணாடி திரும்பி இருந்தது ...

'இது வேண்டுமென்றே யாரோ செய்த சதி' என்று தனக்குள் ஒரு கோபத்தோடு புலம்பினார் வெங்கடேசன்.

அன்றிரவு இரவு அவரோடு சேர்ந்து விழித்திருந்து, 'என்னங்க தூக்கம் வரலையா .....' என்றாள் மங்களம்

பதில் சொல்லாமல் தூங்கிப் போனார் வெங்கடேசன்.

விடிந்தும் விடியாததுமாய் இருந்தது வெளிச்சம்..

'இல்ல நான் யாருக்கு என்ன துரோகம் செஞ்சேன் .... ஏன் எனக்கு எப்படி ' என்று வீட்டிற்குள் மங்கள‌த்திடம் கொதித்து கொண்டிருந்தார் வெங்கடேசன்.

அன்றும் தன் கனவுக்குதிரையின் கொம்பு முறுக்கப்பட்டிருந்தது..

வெங்கடேசனுக்கு அலுவலகத்தில் மனம் நிலைப்பாட்டில் இல்லாமல்... சடுகுடு ஆடியது.

இந்த தடவை தப்பிக்க முடியாது நான் ஒரு ஐடியா வெச்சுருக்கேன்... அதெப்படி நைட்டு சரியாய் பதினோரு மணிக்கு மேல இந்த மாதிரிப் பித்தலாட்டம் நடக்குது... நான் ஒரு அலாரம் செட் பண்ணியிருக்கேன். இன்னைக்கு நைட்டு அது அடிக்கும்…… களவாணி சிக்குனான் என்று அன்று இரவு காதைக் கூராக தீட்டி இருந்தார்.

திரும்பவும் காலை.

வண்டியை உறைந்து போய் பார்த்துக் கொண்டிருந்தார் .கொம்புகள் அதே கோலத்தில் இருந்தது. அலாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. திடீரென மேலே நின்று கொண்டிருந்த சிறுவன் சிரித்த படி .. வீட்டினுள் ஓடிச் சென்று கதவை அடைத்தான்.

‘எனக்கு என்னமோ அந்தப் பையன் மேல தான் சந்தேகம் வருது. நாம காம்பௌண்டுல இருக்கறது மொத்தம் மூணு வீடு. அதுல கீழ் வீட்டுக்காரக் கிழவி, அந்த கிழவி இந்த மாதிரி செய்யாது, மேல நம்ம வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற பையன்' என்று மங்கள‌த்திடம் ஆதங்கமாய்க் கொட்டினார். ஒரு நாள் இரவு முழுவதும் விழித்தும் வண்டியைக் கண்காணிக்க அவர் உடம்பில் இருக்கும் சர்க்கரையும், ரத்தக் கொதிப்பும் அனுமதிக்கவில்லை .

இரவு பதினொன்று. திடீரென விழிப்பு வந்த வெங்கடேசன் பக்கத்தில் மனைவியைத் தேடினார். இப்போதெல்லாம் இரவு தனியாகத் தூங்குவது கூட பயமாக இருந்தது. கழிப்பறையில் விளக்கு எரிந்ததால், மனைவி இருப்பதை உறுதி செய்து கொண்டு இருளில் இருளாகிக் கொண்டிருந்தார்.
அன்றிரவும் தூக்கம் தொலைந்து. விடியக் காத்திருந்தார். மனைவியும் இவரால் தூக்கம் தொலைத்திருந்தாள்.

அன்று காலை வண்டியை உற்றுப் பார்த்தவாறு நெருங்கினார். இந்த முறை மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமரா காணாமல் போயிருந்தது. இந்த முறை வண்டியின் இருக்கையில் ஒரு ஸ்டிக்கர் பொட்டு இருந்தது. அந்த விலை உயர்ந்த பொட்டை மங்கள‌த்திற்கு நேற்று அவர் வாங்கித் தந்தது, திரும்பிக் கொண்டிருந்த இரு கண்ணாடிகளின் முதுகுப்புற‌த்தில் வந்து போனது.

- சன்மது

Pin It