அவள், அவனைக் காணவே விரும்பவில்லை... காணும் தரிசனங்களிலெல்லாம் தன்னை காற்றில் மறைத்துக் கொண்டு அவ்விடம் விட்டுப் பறந்துவிடுகிறாள். இது அவளுக்கு வாய்த்திருக்கும் மாய தந்திரங்களில் ஒன்று. ஆனால் அவன் இவளைத் தேடி காற்றெல்லாம் அலைகிறான். இருவருக்கும் தற்போது உயிரும் இல்லை. உடலும் இல்லை. உருவம் மட்டும் தான். அந்த உருவங்களுக்கும் கூட அவர்கள் வாழ்ந்திருந்த காலங்களில் இயற்கையில் பிறப்பிக்கப்பட்ட மாய தந்திர வித்தைகள் அழிவின்றித் தொடர்கின்றன.

இவ்விருவரும் எதற்காகப் பூலோகம் அண்டுகிறார்கள் என்றால் , பொருத்தமற்றுப் பிறந்திருக்கும் தங்களது மகனுக்காகவே. அதென்ன பொருத்தமற்ற மகன் என்றா கேட்கிறீர்கள்... ஆம் இருவருக்குள்ளும் காதல் பொருத்தமற்றது. மணம் பொருத்தமற்றது. இவர்களின் பொருத்தமற்ற கதை ஒரு கல்லூரியில் ஆரம்பமாகிறது.

ஒரு கல்லூரியில் தான் இவன் அவளைச் சந்தித்தான். . பார்த்ததும் காதல் வயப்படக்கூடிய பெண்ணவள். இவனுக்கும் பார்த்ததும் காதல் கனிகின்றது. அவள் பின்னால் அலைந்து திரிவதே பெரும் வாழ்வென தன் குடும்பம், படிப்பு , சுற்றம், நண்பர் கூட்டம் என எதுவும் அவன் கண்களுக்குப் புலப்படுவதில்லை. காற்று போல அவள் செல்லும் இடமெல்லாம் பரவ வேண்டுமென்கிற காதலின் கண்களை மட்டுமே வரமாக வாங்கி இருப்பவன் போல் ஒரு முகம் அவனுடையது. அவன் உடல் நவீன உடையிலும் கம்பீரத்தைப் புடைக்கிறது. சிந்தனை நேர்கோடாயிருக்கிறது. பார்வை விலகாத பார்வை. இவற்றையெல்லாம் தாண்டி இவனுள் இவன் யாரென்ற கேள்விக்குரிய விடையையும் பலமாகச் சுமந்து திரிகிறான். இந்தக் காதல் அவன் கண்களை மட்டுமல்ல தான் யாரென்பதையும் சேர்த்தே பித்தாக்கியிருக்கிறது.

அவள் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இதே அழகும் தோற்றமுமாய் பிறப்பவள் போலானவள். அவளிடம் பெண்மை நளினங்களாய் மின்னுகிறது. கோபம் கூரியதாய் மின்னுகிறது. இவள் எப்போதோ ஏதோ ஒரு ஜென்மப் பிரளயத்தில் அழிந்தொழிந்த அரசிளங்குமாரி. பிரளயத்தில் முற்றிலும் பொலிவுபெற்ற இப்பூமியின் மீது பல ஜென்மங்கள் எடுத்து நவீன கலியுகத்திலும் நவயுக மங்கையாக வாழப் பிறந்தும் விட்டாள். ஆனால் இவளிடம் காலங்காலமாய் மாறாத விசேடத் தன்மைகள் இவள் யாரென்பதையும் அறியவொண்ணாத ஒரு காரணத்தை ஒரு விபத்தை ஒரு அவசியத்தை உருவாக்கவில்லை.

இவ்விருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகளில் அவளுக்கு இவனைத் துளியளவும் பிடித்ததாயில்லை. இவளது காதல் மனம் விரும்ப விழைவது ஒரு நாயகனைத் தானே தவிர ஒரு வில்லனை அல்ல என்பது போலத்தான் அவனை அறவே வெறுத்து மறுக்கிறாள் அவன் நோக்கமறிந்தவளாய், அவன் நெருங்கிவரும் சமயமெல்லாம்... .

ஒரு சந்தர்ப்பத்தில் வெறுப்பின் உச்சகட்டத்தில் இவனது கண்களில் அகப்படவே கூடாதென்கிற எண்ணமாய் , காற்றைக் கிழித்துக் கொண்டு எங்காவது பறந்துவிடுவாள் பயணமாய்... . . இவளது வாகனங்கள் அப்போது எத்தனை வேகம் பிடிக்குமென்பது அவளே அறியாதது.

அவன் விடவில்லை. . அப்போதும் அவளின் பின்னே பயணிக்கத் தொடங்குவதில் எந்தத் தாமதமும் , சோர்வும் கொள்ளவில்லை... ஒரு கட்டத்தில் அவள் மாயமாவதைப் போல் உணர்ந்தவன் செய்வதறியாது ஒரு நெடுஞ்சாலையோரத்தில் அமர்ந்திருக்கிறான். அச்சமயம் ஒரு கம்பீரமும் ராஜ கலையுமான காட்டுவாசியுருவம் அவன் தோள் தொட்டு,

அவள் உன் கண்களுக்குத் தோன்றவில்லையா... .

அவன் அதிகபட்ட வேதனையின் குரலையெடுத்து, என்னால் இயலவில்லை என்கிறான். . இவ்வாசகத்தின் பின்னே அவனது பலம் எதிரொலிக்கிறது...

உன்னாலும் மாயமாக முடியும். இதன் பொருள் என்னவென்று தெரியுமா... . அவள் மட்டுமே மாயமானால் உன் கண்களுக்கு விழமாட்டாள். நீயும் காற்றில் கலந்துவிடு. . உன் கண்களுக்கு அவள் மட்டுமே தோன்றுவாள்... .

இப்போது அவன் மாயமானைப் போல துள்ளியெழுந்தான். அவள் எதிரே ஒரு மகிழுந்தில் சீறிக்கொண்டு காற்றைக் கிழித்தபடி வருகிறாள்...

என்ன ஆச்சரியம் அவளுக்கு அவன் மட்டுமே தெரிகிறான்... ஏனெனில் அவன் மாயமான பின்னே தான் அவள் பயணிப்பதே தெரிந்தது.

இவள் வளமண்டல வாசத்தைவிட்டு நிகழ் உலகிற்கு திரும்பினாள். . கல்லூரிக்குச் சென்றாள்... அங்கு தான் இன்னொருவனைச் சந்திக்கிறாள் எதிர்பாரா விதமாக. அவன் பரம சாதுவாக இவளின் அரக்க பறக்க ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் மனதிற்குகந்த திவ்வியமாய் நின்றிருந்தான்.

இவளைக் கண்டதும் அந்த இன்னொருவனுக்கு என்ன தோன்றியதோ மெய்ம்மறந்துகொண்டிருந்தான். மிக மிக இயல்பாய் இவர்களிடம் காதல் மலரும் தருணத்தில் ஒரு சூறைக்காற்றைப்போல் குதித்தான் வளிமண்டலத்திலிருந்து அவன்.

பார்த்த மாத்திரத்தில் நேர்வதென்ன என்பதை ஊகித்தவனாய் தன் சேனைக் கூட்டத்தை அரங்கேற்றிக் கொண்டு ஒரு பராக்கிரமசாலியாய் நின்று அவளை எதிர்கொள்ளத் துணிந்தவாறு வரவேற்கிறான் அரசிளங்குமாரியாக. அவளிடமுள்ள சேனைகளும் அக்கல்லூரியைத் தோலுரித்துக்கொண்டு வீர தீரமாய் வாட்களையேந்திப் புத்துயிர் பெற, அவளது கையிலும் ராஜ வாள் போர்க்கோலமாய் உருமாறினாள். இவளுக்கு தன்னிடமுள்ள விசேச தன்மைகளை உணர்ந்து ஏற்கும் தருணமிது. இவளின் பின்னேயொரு குளத்தில் சிறு பெண் படையொன்று ஈரிதழ்கள் குறுக்காகக் கோர்த்தபடி ஒரு நேர்வரிசையாய் தங்களின் மகரந்த வாள்களை சுழற்றியபடியான , நீரிலிருந்து தாக்கும் வியூகமாக அமைந்து தயாராக, அவன் தன் பிறிதொரு மாய வித்தையின் மூலம் அப்பெண்களின் கழுத்தை அவர்களே அறுத்துக்கொள்ளும்படி செய்கிறான்.

இதைக் கண்டு துணுக்குற்றுத் திரும்புமவளின் கண்களுக்குள் அவனது கொடிய மிருகத்தனமான சிரிப்பொலியும் சேனையுமாக அசுரபலம் பொருந்தியவனாய் எதிரொலிக்கின்றான்.

ஆனால் அவள் மீதான காதல் மட்டுமே இவையனைத்திற்கும் காரணமாய் வலுவாது ஓங்கியிருக்கிறதென்பதை அவன் தனது கண்களின் மூலம் ஆன்மாவாக நிரூபித்துக் கொண்டிருந்தான் எக்கணமும்... .

கையறு நிலையாக நிற்குமவளின் முன்பு இரு சேனைகளும் மோதிக்கொள்கிறது... வாளை மண்ணுக்குள் ஊன்றி அவனை ஏறிடுமவளின் விழிகள் பல யுகங்களை மூடிக் கொள்வதாய் சோர்ந்தன...

இவர்கள் இருவரும் பின் என்ன ஆனார்கள் ?அந்த இன்னொருவன் என்ன ஆனான்? தற்போது ஆன்மாக்களாக அலைவுறும் இவர்கள் தன் மகனுக்காக பூலோகம் சஞ்சரிக்கிறார்கள் என்றால் இவர்களின் மோதலுக்குப் பின் நடந்தது திருமணமா... அதனால் பொருத்தமற்ற மகனா?ஒரு நாயகி மற்றும் வில்லன் என்பதற்காக உருவாகிறானா பொருத்தமற்ற மகன்? மகன் அந்த இன்னொருவன் போல் தோற்றமளிக்கக் காரணமென்ன? அந்த இன்னொருவனின் கதை என்ன? இப்போதும் காற்றில் கரையும் மாயமறியாதவனாய் அவளின் ஆன்மா எங்காவது தென்பட்டால் அசுர வேகத்தில் நெருங்குகிறானே... . அவளோ அவனைக் கண்டதும் மறைந்துகொள்கிறாள்... . செய்வதறியாது ஒரு காற்றாகவே எங்கும் அவளையடைய விரும்பும் இந்தக் காதலையுடையவன் நிஜமாய் வில்லன் தானா... ?அந்த மகன் இவர்களுடையது தானா... . இவள் கண்களில் மட்டும் தான் தாயின் கனிவு இருக்கிறது... ... ஆனால் வில்லனைக் கண்டு மாயமாகும் சமயங்களில் , வெறுப்பகன்ற ஒரு கனிவும் வேண்டாத சலனமுமாய் ஒரு முகத்தை ஒளித்துப் போவதேன்?

கேள்விகள் பலவற்றுக்கும் விடை தெரியும்முன்னே விழித்துக் கொண்டேன் ஒரு கனவு முடிவற்றுக் கலைந்தவளாய்...

- புலமி

Pin It