கிழக்கு

“சிட்டுக் குருவிகளைக் காணவில்லை”

birds 330திடுக்கென விழித்தேன்! உடலெங்கும் வியர்வை வெள்ளம்! வழக்கம் போல மின்வெட்டினால் மின்விசிறி தன் இயக்கத்தை நிறுத்தி இருந்தது.

அறைக்கதவைத் திறந்து வெளியே வந்து நின்று சற்றே நிதானித்தேன்! மனைவியும் மகளும் தன்னிலை மறந்து இந்த புழுக்கத்திலும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க... அவர்களைத் தாண்டி புழக்கடை சென்று முகம் கழுவி... பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தவனை வரவேற்றது வெளுக்காத வானம்!

சாம்பலும் கருமையும் கலந்து பரவிய வானத்தில் மேகப் பொதிகள் பஞ்சுகளாய் மிதந்து கொண்டிருந்தன.

இந்த விடியலிலும் பறவைகள் விழித்து தம் கொண்டாட்டங்களைத் தொடங்கியிருந்தன.

வீட்டுக்கு முன் கிடந்த காலிமனை முள் தோப்பாய் மாறியிருந்ததில் பலவகை பறவைகளுக்கும் அடைக்கல நகராகியது.

முகங்காட்டா செம்போத்து ஒன்று ஒற்றைக் குரலில் கீதமிசைக்க ஏதோ ஒருதென்னை மரத்திலிருந்து பதிலாய் வந்தது ‘எசப்பாட்டு’ பக்கத்து வீட்டு வேப்பமரத்தில் ‘புல்புல்’ கிளைகள் சீழ்க்கை அடித்து சில்மிஷம் செய்ய, தேன் சிட்டொன்று தாவித் தாவி வேப்பம்பூவில் தேனருந்தி மகிழ்ந்தது..

“வேம்பூவின் தேன் இனிக்குமா கசக்குமா…?

தேன் சிட்டின் மொழி தெரிந்தால் கேட்டுப் பார்க்கலாம்... எனக்குள் ஓடியது எப்படி தேன் சிட்டுக்கு கேட்டிருக்க முடியும்...?

“மானிடரே… கசப்பு… இனிப்பு என்பதெல்லாம் உமக்குத்தான் - எமக்கு இது உணவு...”

- அட... தேன்சிட்டும் பேசுமா…!

காட்டுவாகை மரத்திலிருந்த கல்குருவிகள் என்னைப் பார்த்து கலாய்ப்பது போலவே இருந்தது.

மனசுக்குள் தோன்றிய வரிகளைத் திரித்து திரித்து கவிதையாக்க முயற்சித்து வெற்றியும் பெற்றேன்!

சிட்டுக் குருவிகளைக் காணவில்லை

வாசலில் அமர்ந்து வாசிப்பவனுக்கு

வணக்கம் சொல்கின்றன காலைப் பறவைகள்

வாகை மரத்தில் தாவித் ததும்பும்

சாம்பல் குருவிகள்

கூட்டமாய் விவாதிப்பதென்னவோ…?

மைனாக்களின் மொழித் தெரிந்தால் வினவலாம்

முள் மரத்தில் மறைந்திசைக்கும் செம்போத்து

தேடுகிறது காதலிணையை...

நுணாம் பழமுண்ட திருப்தியில்

குபீரெனப் பறக்கின்றன பச்சைக்கிளிகள்

தேங்கியக் கழிவு நீர்க் குட்டைக்குள்

தேடுவதெதனை நீர்க் கோழிகளும் நாரைகளும்

மின்சாரமில்லா கம்பிகளின் மீது

பத்துமணி நேர மின்வெட்டை

விவாதிக்கும் காக்கை கூட்டம்

வேப்பம் பூவில் தேனெடுக்கும்

தேன் சிட்டுக்கலும்... புல்புல்களும்

பாடும் கானங்களுக்கு வழங்கலாமே

பாதி ராஜ்யம்

சிட்டுக்குருவிகளைத் தான் காணமுடியவில்லை

செல்போன் கோபுரம் தாண்டி

உக்கிரமாய் எழுகிறான் செஞ்சூரியன்”

 

கவிதை சிறப்பாகவே வெளிப்பட்டிருக்கிறது என்ற திருப்தியில் திளைத்தவனுக்கு கேட்டது ஏகாந்தமான சிரிப்பொலி…

மஞ்சள் பூ மரமொன்றில் அமர்ந்திருந்த மைனா தான் சிரித்தா... மைனா சிரிக்குமா…

ஏன் சிரிக்காது… கவிதை எழுதுறீரா கவிதை… அக்கா குருவியக்கா எல்லாரும் இங்க வாங்களேன்.

சொல்லுடா மைனாக்குட்டி... என்ன சேதி…

இதோ கவித்த… எழுதுராரே… கவித்த… இந்த ஆளோட வண்டவாளம் தெரியுமா… இவர் பேர்ல தான் அன்பிருக்குது.. ஒரு காலத்துல இந்த ஆளும் இவரோட கூட்டாளிகளும் நம்ம கூட்டத்துக்கு எத்தன துரோகம் பண்ணியிருக்காங்க தெரியுமா..

வியர்க்க ஆரம்பித்தது எனக்கு… மைனாவுக்கு கூட பிளாஷ்பேக் உண்டா… பறவைகளும் பழசை மறக்காதா… இதென்ன சோதனை…

எதுக்குய்யா மறக்கணும்… அக்கா… எங்க பாட்டி சொல்லி யிருக்காங்க… இந்தாளும் இவரோட சிநேகித காரன்களும் செஞ்ச அக்கிரமம்… அநியாயத்த…

ஆமாமா… என்னோட கொள்ளுத் தாத்தா கூட சொல்லி சொல்லி மாஞ்சிப்போவாரு… இந்த மனுசப் பயலுவள நம்பாதீங்க..ன்னு ஒத்து ஊதியது ஒரு புல்புல்..

இவரு இப்போ நல்லவராம். பறவைகள் மேல ரொம்ப அக்கறை உள்ளவராம்.. எல்லாம் வெளிவேஷம்..

என்னய்யா… கம் முனு இருக்க. ஏதாவது ஞாபகம் வருதா.. இல்ல மொத்தக் கதையையும் நாங்களே சொல்லணுமா..

அதில்ல ஒரு கதையை யோசிச்சுட்டு இருந்தேன்.

கதை எழுதுறியா.. கதை.. ஒங்கதையும்.. உன்னால முடிஞ்சு போன எங்க கதையையும் எழுது.

இவுனுவோ எல்லாம் இலக்கியவாதியில்ல க்கா.. இலக்கிய வியாதி..

பட்சிகளே... உங்கள் கோபம் புரிகிறது.. ஆனால் அதெல்லாம் என் பள்ளிப் பருவம்... பால காண்டம்!

எங்களுக்கெல்லாம் அது கொள்ளிப் பருவம்.. போய்யா.. நீங்களும் ஒங்க எலக்கியமும்

மறந்து போய் விட வில்லை.. அந்த நாட்கள்.. குறிப்பாக.. அந்த நாள்.. வெள்ளிக்கிழமை.. வாழ்வின் திருப்புமுனையாக அமைந்த வெள்ளி.. ம்ஹீம்.. விடிவெள்ளி..

அப்போது நான் பத்தாம் வகுப்பு மாணவன்

அந்த வெள்ளி தினத்தன்று மாலை பள்ளி முடிந்து வந்தவனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி...

ஏம்பா புஸ்தகத்த வச்சிட்டு... ஒடனே ரயில்வே ஆஸ்பிட்டலுக்கு ஓடு…

ஏம்மா… யாருக்கு... என்னாச்சி..

நம்ப ராமலிங்கமும் விஜயனும்… மரத்துல இருந்து விழுந்து.. ரயில்வே ஆஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போயிருக்காங்களாம்.. மோகனம்மா சொன்னாங்க.. என்னன்னு பாத்துட்டு வா.

சரிம்மா.. என்றவன் முகம் கூட கழுவாமல் ஓடினேன்.

நாங்கள் வசித்தது விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனி... ரயில்வே மருத்துவமனையோ வடக்கு ரயில்வே காலனி பத்து நிமிட ஓட்டம்...

மூச்சு வாங்க நின்றவனை எதிர் கொண்டது என் சிநேகித கும்பல்..

அருள் அண்ணன். பிரான்சிஸ் அண்ணன். கலியன் ரங்கசாமி.. மோகன் என எங்கள் பட்டாளம்.

வாடா.. இப்பத்தான் தெரியுமா.. - அருள் அண்ணன்

ஆமாண்ணா.. ஸ்கூல் வுட்டு வீட்டுக்கு வரச் சொல்ல அம்மா சொன்னிச்சி... என்னாண்ணே ஆச்சு!

மருத்துவமனையின் ஒரு புறத்தில் ராமலிங்கம் அண்ணனின் அம்மாவும், தம்பியும் அழுது கொண்டிருக்க விஜயனின் அப்பா எங்களை வசவு வார்த்தைகளால் இழிந்தார்.

படிக்கிற பசங்களா.. இதுங்க.. உருப்படாததுங்க.. எம்புள்ளயக் கெடுக்குறதே இவுனுவோ தான்..

டேய்.. வாங்கடா.. கொஞ்சம் தள்ளிப்போய் நிப்போம் என்றார். பிரான்சிஸ்..

மெதுவாக.. அங்கிருந்து விலகி.. அருகிலிருந்த கால்பந்து மைதானத்துக்காய் ஒதுங்கினோம்!.

என்ன தாண்ணே.. ஆச்சு.. யாராவது வெவரம் சொல்லக் கூடாதா..

இவன் ஒருத்தன்.. என்னா ஆச்சி ஏண்ணா ஆச்சின்னு சலித்துக் கொண்டன் ரங்கசாமி..

குரு.. நீயாவது சொல்லு குரு.. கலியனிடம் கெஞ்சினேன்.

ராமலிங்கமும், விஜயனும் இன்னைக்கு தனியா வேட்டைக்கு போயிருக்காங்கடா..

ஏன்.. தனியா... போனாங்க

அடங்.. குறுக்க பேசாம.. விசியத்த கேளுடான்னா..

சரிசரி சொல்லு

நல்லா மத்யானம் உறும நேரத்துல ரெண்டு பேரும் நோனி பம்பு செட் தாண்டி கருப்பண்ணசாமி கோயிலுகிட்ட பனந்தோப்பு இருக்குமில்ல

ஆமா.. குட்டை பனந்தோப்பு...

அதுதான்.. அங்கம் போய்.. ராமலிங்கம் பனம்பழம் பறிக்க மரத்துல சரியிருக்கான்... என்னாச்சு.. ஏதாச்சின்னு தெரியல... பனமரத்துல இருந்து பொதோ’னு விழுந்திருக்கான். விழுந்தவனுக்கு அசையக் கூட முடியல.. பின்மண்டைல வேற ரத்தம்.

விஜயண்ணன் கூட இருந்துச்சுல்ல.

கேளுடாண்ணா.. இத பாத்ததும் விஜி.. அய்யய்யோ என்று கத்திக் கிட்டு கருப்பண்ணசாமி கோயிலுக்கு போயிருக்கான் அங்க சாமிகும்பிட வந்தவங்க.. ராமலிங்கத்த கயித்துக் கட்டில்ல கொண்டாந்து வீட்டாண்ட எறக்கியிருக்காங்க..

வீட்டுக்கு வந்ததும் விஜி விஷயத்த சொல்லிட்டு மயக்கம் அடிச்சி விழுந்துட்டான்.

அப்புறம் வீட்ல இருந்து கயித்து கட்டில்ல போட்டு ஆஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு வந்தோம்.

இப்ப எப்பிடி இருக்குதாம்

தெரில.. யாரையும் உள்ள வுடல..! பெரிய டாக்டரே வந்து பாக்குறாராம்...

அதுசரி.. ராமலிங்கம் அண்ணந்தான் மரத்துல இருந்து விழுந்துச்சி.. விஜியண்ணனுக்கு என்னவாச்சாம்...

அவன் திடீர்னு கண் முழிக்கிறானாம்.. திகிலாப் பாக்குறானாம்.. அய்யோ..ன்னு கத்திகிட்டு மயக்கமடிச்சி வுளுந்துர்ராணாமா...

சரி யாராவது போய் ராமலிங்கம் அண்ணனின் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லுங்க..

அய்யய்யோ... இப்போ போனா... அம்மா நம்மள திட்டுவாங்க...

டேய்.. லூசு மோகன்.. இப்போ போகாட்டி தான் எல்லாரும் நம்மளத் திட்டுவாங்க..

ஆமாண்டா.. கலியன் சொல்றதும் கரெக்ட் தான் நல்லா இருந்தப்போ ஒண்ணா இருந்துட்டு.. இப்போ கஷ்டத்தல வெலகி இருக்கிறது நல்லதில்ல.

டேய்.. மோகன்.. சீக்கிரமா எவனாவது வாங்கடா.. தூரத்திலிருந்த மோகனம்மா கத்துவதைப் பார்த்து எல்லோருமே ஓடினோம்.

மோகனு.. அண்ணி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க நீ ஓடிப்போய் பிளாஸ்க்ல காபியும் ஒரு சோடாவும் வாங்கிக்கினு ஓடியா.

டேய் அருளு. ஆஸ்பிட்டல் உள்ள போயி.. ஒரு தம்ளர்ல தண்ணி எடுத்தா..

சம்பவத்தோடு கலக்க இது போதுமானதா இருந்ததால் ஆளாளுக்கு ஒரு வேலையாக ஓடினோம்.

மேற்கு

தெற்கு ரயில்வே காலனியில் ஐந்தாவது வரிசை தெருவில் எண் 463 -ல் வசித்து வந்த எங்கள் குடும்பம் என் அப்பாவின் மரணத்துக்குப் பிறகு நான்காம் வரிசை தெரு357 க்கு குடியேறியது.

ஐந்தாம் வரிசைத் தெருவில் எனக்கு ஆண் சிநேகிதமே கிடை யாது.. எதிர்வீட்டு மல்லிகா.. கலையரசி.. அன்னபூரணி. கடைசி வீட்டு கலா.. தனலட்சுமி இப்படி பெரிசும் சிறுசுமாய் தோழியர் கூட்டந்தான்.

பெண் பிள்ளை விளையாட்டுகளில் பாஸ் மார்க்குக்கும் மேல் வாங்கும் நிலையில்.. கூட்டாஞ்சோறு.. கல்பாரி.. டொக்பாரி.. கண்ணாமூச்சி.. பாண்டியாட்டம்.. கல்லாங்காய் என விற்பன்னாக திகழ்ந்தவனுக்கு பக்கத்து தெருவில் காத்திருந்தது புதிய உலகம்.

தேவராஜ்.. சேகர்.. தியாகராஜன் என ஒரு சமவயது அணி, கோலி, பம்பரக்குத்து, பட்டம், கில்லித்தாண்டு என வீர விளையாட்டுகளை எனக்கு அறிமுகப்படுத்தியது. வாடகை சைக்கிளில் குரங்கு பெடலடிக்க தேவராஜ் தான் சொல்லிக் கொடுத்தான்.

இன்னொரு அணியில் என்னை விட சற்றே வயசு மூத்த அண்ணன்கள் அணி... அந்த குழாமுக்கு ராமலிங்கம் அண்ணன் தான்... தல!

அருளண்ணன், பிரான்சிஸ் அண்ணன், விஜியண்ணன் இவர்களோடு பெயிலாகி பெயிலாகி நான் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்களாக மோகன்.. ரங்கசாமி.. கலியன் இந்தக் குழாமின் உறவினர்கள் ஏதோ ஓர் வகையில் ரயில்வேதுறையில் பணியாற்ற. நாங்கள் குறைந்த வாடகை கருதி ரயில்வே காலனியில் வாடகைக்கு வசித்தோம்.

ராமலிங்கம் அண்ணன் எங்களுக்கு ‘தல’ன்னு சொன்னல்ல.. நெசமாகவே தலைமைப் பண்புகள் மற்றும் பல்வேறு திறமைகள் கொண்டவர்..

பீம நாயக்கன் தோப்பு பள்ளியில் படிக்கும் போது மாவட்ட அளவிளான கோப்பையை.. கபடிப் போட்டியில் கேப்டனாக இருந்து வென்று கொடுத்தவர்.

“கபாடி.. கபாடி”ன்னு மூச்சை பிடித்து கைகளைத் துழாவி... தொடையில் சளாரென ஒரு தட்டு தட்டி காலை வீசி எதிராளி முகத்தில் பயமுண்டு பண்ணி.. ஆடி வருகையில்.. “ஆகா.. !” ன்னு இருக்கும்.

பீம நாயக்கன் தோப்பு ஸ்கூல்ல.. கால்பந்து குழுவின் கோல்கீப்பரும் அண்ணன் தான்!

சிலம்பத்தின்.. கம்பு சுழற்றினாரென்றால் காலனியின் அத்தனைக் கண்களும் அவர் மேல் தான்.. கம்பு சுழற்றும் போது எழும் விஸ்.. விஸ்! என்ற காற்றின் ஒலி.. சூப்பர்ல!

அண்ணன் நீச்சலிலும் விற்பன்னன்!

கிணத்து நீச்சல்.. ஏரி நீச்சல்.. ன்னு என்னன்னவோ கத்து வச்சியிருந்தாரு..

ஒரு குரு போல.. பாவித்து அவரிடம் சிலம்பம் பயின்றோம்.. நீச்சல் பயின்றோம். கால்பந்து கற்றுக் கொண்டோம்..

அணியில் சிலர் ஒழுங்காக கற்றுக் கொள்ள இந்த பயந்தாங் கொள்ளி.. எதையும் கத்துக்காம கத எழுதிக்கிட்டு இருக்கு.. உருப்படாதது!

ராமலிங்கம் அண்ணன் தான் ‘வேட்டை’க்குப் போவதை அறிமுகம் செய்து வைத்தது!

வேட்டைன்னா.. பயந்துடாதீங்க.. துப்பாக்கி வில்லுனு காட்டுக்குப் போவறதில்ல.. இது உண்டிவில் வேட்டை.. உண்டி வில்.. லுனா தெரியும் தானே!

ஒரு வசதிக்காக.. உங்களுக்குப் புரியனு’மேன்னு தான் உண்டிவில்..லுன்னு சொன்னான்!

எங்களுக்கெல்லாம் அதன் பேரு உண்டிக்கோல்.. இல்லன்னா.. கேட்டாபெல்ட்.. அர்த்தமெல்லாம் இப்போ கேக்காதீங்க!

உண்டிவில் தயாரிக்கிறதே ஒரு பெரிய கலை!ராமலிங்கம் அண்ணனும்,கலியன், ரங்கசாமியும் இதுல மாஸ்டருங்க.. ஒரு ‘உண்டிவில்’ செய்து குடுங்கண்ணா.. கலியனும் ரங்கசாமியும் காட்டுன பந்தா இருக்கே.. ரொம்ப ஓவர்.

உண்டிவில் தேவையான உபகரணங்கள்

1. நொச்சி மரக்கவை

2. ரப்பர் துண்டுகள்

3. சின்னதாக தோல் துண்டு

4. மெல்லியதாக சைக்கிள் டியூப் இழைகள்!

நண்பா.. சலிப்பு தட்டலல்ல..! பால்ய பருவக் கதைன்னு தால.. கொஞ்சம் விரிவா.. விளக்கமா.. சொல்லிகிட்டு போறேன். அட்ஜட்ஸ் பண்ணிக்குங்க பாஸ்!

நொச்சி மரத்திலிருந்து ஆங்கில எழுத்தான ‘Y’ (ஒய்) வடிவக் கிளையாகப் பார்த்து கவனமாக வெட்ட வேண்டும். கிளை ரொம்ப முத்தலாகவோ ரொம்பவும் எளசாகவோ இருக்க கூடாது.

வெட்டி வந்தக் கிளையில் தேவையில்லாததை கழித்து விட்டு ‘Y’ வடிவத்துக்கு கொண்டு வந்து மேல்தோலை உரித்து அதன்மீது விளக்கெண்ணெய் தடவி லேசான தணலில் காட்ட வேண்டும். இப்போது கவை முறுக்கேறி பழுப்பேறி வலியதாய் கம்பீரமாய் தெரியும்!

ரப்பர் துண்டுகள் சொன்னேனல்லவா. அது ரயில்வே லோகா ஷெட்டில் தான் கிடைக்கும். லோகா ஷெட்டில் பணிபுரியும் எவரையாவது சந்திப்பதாக பேர் பண்ணி உள்ளே நுழைந்து ரெண்டு மூணு ரப்பர் பெல்ட்டுகளை லாவிக் கொண்டு வருவதில் மன்னன்ங்க பாஸ்!. நாங்க..

பிறகு அந்த பெல்ட்டை இரண்டாக பிளேடால் அறுத்து நமக்கு தோதான அளவில் வெட்டிக்கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக தோல் துண்டு.. இதற்குத்தான் கொக்கைப் போல காத்திருக்கணும்..

ரயில்வே காலனி நுழைவில் செருப்பு தைக்கும் மூர்த்தி அண்ணனிடம் கெஞ்சிக் கூத்தாடி.. ஒரு துண்டு செவ்வகத் தோலுக்காக தவமிருக்கணும்.

அந்த காலத்துல செருப்பு பயன்படுத்துனவங்க எத்தனை பேர். அதிலும் தோல் செருப்பு அபூர்வம்! அதுவும் ரிப்பேராகி மூர்த்தி அண்ணனிடம் வர வேண்டும்.

ஒரு செவ்வகத் துண்டு தோல் 25 பைசா பாஸ்! அன்றைய 25 பைசா.. இன்றைய மதிப்பு எத்தனை ரூபாய்! அடேங்கப்பா!

பிறகு ஏதாவது சைக்கிள் ரிப்பேர் கடையில் சைக்கிள் டியுப் துண்டுகள் பொறுக்கி மெல்லிய இழைகளாக தயாரித்து வைத்துக் கொள்ளனும்.

இந்த உதவி இயக்குநர்.. செட் பிராப்பர்டி வேலையெல்லாம் என்னுடையது!

சைக்கிள் கடையில் சின்னசின்ன ஈயக்குண்டுகள் கிடைக்கும்... அதையும் பொறுக்கிக் கொள்வேன். சைக்கிள் குண்டுகள் சிட்டுக்குருவி ஸ்பெஷல்! அந்த அத்தியாயம் பிறகு..

நொச்சி கவையில் ரப்பா துண்டுகளை சமஅளவில் இருபுறமும் கட்டி, பிறகு செவ்வகத் தோல் துண்டில் இரு புறமும் துளையிட்டு ,அந்த ரப்பர் துண்டுகளை இணைத்து ,டியூப் இழைகளால் கட்டி விட்டால் ,உண்டி வில் தயார்.

இதற்கிணையான இன்னொரு பணி உண்டு!

‘உண்டிவில்’ சைஸுக்கு ஏற்றாற்போல் கற்கள் பொறுக்கி , அது கூழாங்கல்லோ.. ஜல்லி கல் துண்டோ பொறுக்கி,சேகரித்து, சீனியர்கள் கேட்கிற போது, கொடுக்க வேண்டிய பணி எனக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இப்போதும் என்னை யாரும் பொறுக்கி பையன் என்றால் கோபமே வருவதில்லை! உண்மை தானே மக்களே!

இந்த உண்டிவில் - வகையறாவிலிலேயே சிட்டுக்குருவிகளுக்கான சிறிய சைஸ்-ஸில் தயாரிக்கும் விஜியண்ணன்!

விஜியண்ணன் எப்போதும் சிட்டுக்குருவி தான் ரொம்ப பிடிக்கும். அதற்காகத் தான் அந்த சைக்கிள் குண்டுகள்..

எங்க வேட்டை குறித்து நீங்க தெஞ்சிக்கிட்டே ஆகணும்!

வேட்டைக்குப் போகறதுண்ணா! பறவை வேட்டை தான்! எங்கோ.. இரைதேடி இணைகளுடன் காதல் மொழி பேசி களி செய்யும் பட்சிகளை உண்டிவில் கொண்டு கல்லால் தாக்கி விழச்செய்து... கொஞ்சம் கடுமையாகச் சொன்னால் கொன்று.. அதை எடுத்து வந்து சமைத்து தின்று.. ருசி காண்பதில் லயித்த காலமது!

கருட புராணத்தில் என்ன தண்டனையோ இதற்கெல்லாம்! அதை அப்புறமா பாத்துக்கலாம்!

முதலில் கல் பொறுக்கி ஒரு ஜோல்னா பை நிறைய எடுத்துக் கொண்டு கிளம்புவோம்!

பாண்டிச்சேரி செல்லும் ரயில்வே லைனை ஒட்டி வனஸ்பதி கம்பெனியின் முள்வேலி நீண்டு கிடக்கும்!

அதில் தான் தொடங்கும் சிட்டுக்குருவி வேட்டை! நிழலுக்காக தத்தித்தாவும் சிட்டுக்குருவிகள் தனக்கு அருகில் பறந்து வரும் கல்லின் ‘விர்’ ரென்ற ஓசைகேட்டே பயத்தில் வீழ்ந்து விடும்.. அப்படியும் தப்பிக்க யத்தனிக்கும் சிட்டுகளை சைக்கிள் குண்டால் பரலோகம் அனுப்பும் விஜியண்ணன்!

வீழ்ந்த குருவிகளை எடுத்து பையில் பாதுகாக்க வேண்டியதும் என் கடமைகளில் ஒன்று!

வனஸ்பதி கம்பெனி தாண்டி நடந்தால் கொஞ்சம் தூரத்தில்... கருப்பண்ணா சாமி கோவில்! நீண்டு நெடிதுயர்ந்த மரங்களுக்கு நடுவில் கூரையின்றி வசித்து வந்தார் கருப்பண்ணசாமி!

அந்த தோப்பு மரங்களில் வகை வகையான பறவைகள் இருக்கும்.!

கிளி... மைனா... கல்குருவி... பய்ரி... இப்படி பலவும்!

போகும் வழியில் கோவைப்பழம். கள்ளிப்பழம் இவையெல்லாம் கிடைக்கும்!

கருப்பண்ண சாமி கோயிலுக்கு பக்கத்திலேயே குட்டை பனந்தோப்பு! அந்த தோப்பின் பனை மரங்கள் ரொம்பவும் உயரமாக இருக்காது!

அதிகபட்சம் 15லிருந்து 20 அடி உயரம் மட்டுமே இருக்கும்! அந்த தோப்பின் பனம்பழம் தனீருசி!

அதுக்கப்புறம் மெதுவாக நடந்து நோனிக்கிணற்றில் குளித்து.. அங்கிருந்து ஆனாங்கூர் ஏரியின் வால் பகுதி.. அங்கு வெள்ளரிப்பழம் மலிவாகக் கிடைக்கும்.

போகிற வழியெல்லாம் மின் கம்பங்களில், மரங்களில் ,புதர்களில், இருக்கும் பறவைகளை உண்டிவில்லால் தாக்கி வீழச் செய்து வெற்றி கொள்வதே எம் வீரப் பராக்கிரமங்கள்!

அங்கிருந்து ரொம்ப தூரம் நடந்தால் மருதூர் ஏரி.. உள்ளே புகுந்தால் அண்ணாநகர் எனும் நகரின் விரிவு.

அங்கே தான் மைனாக்களும்.. பாப்பார மைனாக்களும் சல்லீசாக கிடைக்கும்.. எங்களுக்காகவே உயிர் விடக் காத்திருக்கும்.

எல்லாம் கலந்து 20 பறவைகளாவது சேர்ந்தால் தான் எங்கள் வேட்டை முடிவுக்கு வரும்!

ஆனா.. ஆச்சர்யம் பாருங்க.. யாருமே ஓணானையோ அரணையையோ வயல்வெளிப்பக்கம் தண்ணீர் பாம்பையோ தாக்குவதில்லை.!

வடக்கு

இந்த பறவைகளை வேட்டையாடுவது முக்கியமில்லை! நேரத்துக்குள் அதை சமைத்து உண்ணவேண்டும்! கொன்றால் பாவம் தின்றால் போச்சு! கவிஞர் சொன்ன தில்லையா!

அவரசரமவசரமாய் வீடு திரும்பியதும் ராமலிங்கம் அண்ணன் வீட்டிலிருந்து வாணலிவரும்!

பெரும்பாலும் சமையல் என் வீட்டில் தான் நடக்கும்! அம்மா பகல் நேரங்களில் வேலைக்குச் சென்று விடுவதால் சாத்தியமாகும்!

மோகன் எண்ணெயும் மிளகாய்த்தூளையும் கொண்டு வர கலியனும் ரங்கசாமியும் பறவைகளின் சிறகுகளைப் பிய்த்து தோலுறித்து பறவையின் தேவையில்லாத கழிவுகளை நீக்கி அரிந்து சமைக்கத் தோதாய் சுத்தம் செய்து தர...

அருளண்ணனும் பிரான்சிஸ் அண்ணனும் பொரிக்க ஆரம்பிப்பார் கள்! அதுவும் ராமலிங்கம் அண்ணன் பறவைகளின் தொடைத் துண்டுகளாக சுவைப்பார்.!

ராமலிங்கம் மட்டுமல்ல ... விஜியண்ணன்.. அருள்.. கலியன் வகையறாவுக்கு தொடைத்துண்டுகள் என்றால் உயிர்!

அதனால் அடுப்பைமூட்டி மசாலாவில் பொரித்த இறைச்சித் துண்டுகளை பாகம் பிரித்து பொரிக்க வேண்டிய கடமையும் ராமலிங்கம் அண்ணனுக்கு இருந்தது!

அண்ணன் முதலில் இறைச்சித் துண்டுகளை வகைப்படுத்தி பிரிப்பார்!

கால்துண்டுகளாக முதலில் பொறுக்கி எடுத்து மசாலாவில் திளைத்து எண்ணெயில் பொரித்தெடுப்பார்!

பிறகு இதர பாகங்கள்! அதற்கு தனி இட ஒதுக்கீடு! அந்த வயசில் எல்லாமே சுவையாயிருந்தது!

எல்லாம் முடிந்த பிறகு நானும் ரங்கசாமியும் பாத்திரங்களைக் கழுவி சுத்தப்படுத்தி தர வேண்டியது!

“நம்ம இனத்தையே அழிச்சிட்டு அந்தக் காரியத்தை என்ன ஒரு கம்பீரமா பேசுறான் பாத்தியா..”

“இவனுவளை எல்லாம் ஆல்பிரட் ஹிட்க்காக் கோட BIRDS படத்துல வர்ற மாதிரி கூட்டமா பறந்து வந்து இவனுவ தலையில.. கண்ணுல கொத்தியிருக்கணும் நம்ம பெருசுங்களுக்கு வெவரம் பத்தாது அஹிம்சை பேசிக்கிட்டு அமைதியா எல்லாத்தையும் பொறுத்துக்கிச்சிங்க!”

இதனிடையில் ரயில்வே ஆஸ்பிட்டலில் சேர்ந்திருந்த ராமலிங்கம் அண்ணன் சென்னை பெரம்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். விஜியண்ணன் திருச்சி பொன்மலை மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

பெரம்பூர் மருத்துவனை கடுமையான அதிர்ச்சியைத் தகவலாகத் தந்தது.

அண்ணனுக்கு இடுப்புக்கு கீழே உணர்வு தொலைந்திருந்தது.

ரெண்டு கால்களும் தொய்ந்து போய், எப்போதும் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

விஜியண்ணனுக்கோ இந்த விபத்தையும் ரத்தத்தையும் பார்த்த அதிர்வில் புத்தி பேதலித்து விட்டது. திடீரென அலறுவதும் ஏதோ ஓர் இடத்தை வெறித்துப் பார்ப்பதும் சம்பந்தமின்றி உளறுவதுமாய்... குடும்பத்தினர்க்கு பெரும் தொல்லையாய் மாறியிருந்தது விஜியண்ணன்.

அருளண்ணன் வீட்டில் வாங்கிய திட்டில் ‘சரசர’வெனக் கிளம்பிப்போய் ராணுவத்தில் சேர்ந்து விட்டது..

பிரான்சிஸ் அண்ணன் பாண்டிச்சேரியிலுள்ள உறவுக்காரர் வீட்டிற்கு அனுப்பப்பட்டது.

கலியனோ செங்கல்பட்டு அக்கா வீட்டில் ஒப்படைப்பு ரங்கசாமி அந்த சம்பவத்தோடு படிப்பை நிறுத்தி விட்டு லிங்காரெட்டி பாளையம் சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக சேர்ந்து விட...

மோகன் அவனுடைய அண்ணன் சோமுவிடம் வாங்கிய பெல்ட் விளாசல் காலத்துக்கும் மறக்காது.

எனக்கு வேறு வழியில்லை.. வாடகை வீடு வெளியேற வாய்ப்பில்லை.

ஒரே ஒரு முறை பெரம்பூர் மருத்துவமனை சென்று ராமலிங்கம் அண்ணனைப் பார்க்கப் போனோம். நானும் அம்மாவும்..

எங்களைப் பார்த்தவுடன் ‘வாடா... வாங்கம்மா... என்று கூப்பிட்ட அண்ணன் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர்.

ராமலிங்க அண்ணனின் அம்மா காது கழுத்தில் ஒன்றுமில்லை எல்லா நகையும் மார்வாடி கடைக்கு போயிட்டுதாம்.

அம்மா தான் ஆறுதலாய் சொன்னாங்க..

“ஒண்ணும் கவலைப்படாதீங்க அண்ணி... எல்லா சரியாயிடும் ஏதோ கெட்ட நேரம்.”

“அப்டி தாம்மா நெனச்சிகிட்டு எல்லாத்தையும் தாங்கிகிட்டு இருக்கேன். எனக்கு ஏறப்பட்ட கஷ்டம்.. என்னோட எதிரிக்கு கூட நடக்க கூடாது.. சொல்லிவிட்டு தேம்ப ஆரம்பித்தவர்களை அம்மா தான் தோள் தொட்டு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினோம்.

மூட்டை மூட்டையா பாவம் பண்ணிட்டு காசியில போய் கரைக்கிற மாதிரி... பாதிரியார் கிட்ட பாவமன்னிப்பு கேட்குற மாதிரி. ஒத்த கவிதை எழுதிட்டு என்னம்மா பாவலா காட்றான் பாரு இந்த ஆளு.

“நாம ஏதோ நம்ம பொழப்புக்காக எந்தெந்த திசைக்கோ பறந்து போயி இரை தேடுறோம். இந்த மனுசப் பயல்களுக்கு என்ன வந்திச்சி..”

“ஒரு காலத்துல அம்பு.. இன்னொரு காலத்துல உண்டிவில்.. வேறொரு காலத்துல துப்பாக்கி குண்டு.. எப்படித்தான் வாழறது இந்த பூமியில..”

“இந்தக் கூட்டத்துலயும் மகாமனுசனா இருந்த ஒருத்தன் தானே எழுதினான்.”

காக்கை குருவி எங்கள் சாதி-நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்”

-அவன் மனுஷன்! இதுங்க தின்றதுக்குகாகவே உயிர் வாழறதுங்க...

“சரி... இதெல்லாம் இப்போ பேசுறோம்... அப்போ என்ன நடந்துச்சி..

“யோவ் சொல்லுய்யா... அப்படியே ரொம்ப நல்லவன் மாதிரி ஒக்காந்து இருக்க...

- குற்ற உணர்வில் குமைந்து தலை குனிந்து கிடந்தவனை எழுப்பியது மரங்கொத்தியொன்றின் குரல்

“சொல்லுய்யாண்ணா”

- மனநிலை பாதிக்கப்பட்ட விஜியண்ணன் ஒரு நாள் வீட்டை விட்டு ஓடி விட்டது.

மறுநாள். தண்டவாளத்துக்கருகே தலை தனியே உடல் தனியே கண்டெடுக்கப்பட்டது.

ஒரு கட்டத்துக்கு மேல் பெரம்பூர் மருத்துவமனையிலும் வைத்து பராமரிக்க முடியவில்லை.

தொடர்ச்சியாக படுக்கையிலேயே கிடந்ததால் அண்ணனுக்கு படுக்கைப் புண் வந்து மிகுந்த சிரமத்துக்குள்ளானது..

 சரியாக இடுப்பெலும்பில் அடிபட்டு நொறுங்கிப் போனதால் இடுப்புக்குக் கீழான இயக்கம் கேள்விக்குறியானது. கால்கள் இரண்டும் துவண்டு போயின.

கக்கத்தில் கட்டை வைத்து மெதுவாக நடக்க ஆரம்பித்திருந்தார் அண்ணன்.

மேலும் எவ்வளவு கடன் வாங்க முடியும்? பணம் என்பது அந்த நாட்களில் பெரியதொரு பிரச்னையாக உருவாக்கி இருந்ததில் அண்ணன் மீண்டும் விழுப்புரம் ரயில்வே காலனிக்கே திரும்பினார்.

எங்கள் தெருவில் வசித்தவர்களும் விஷயம் தெரிந்த பிற தெருக்காரர்களும் ராமலிங்கம் அண்ணனைப் பார்த்து செல்வது வாடிக்கையானது.

ஒரு நாள் அண்ணன் தனிமையில் இருந்தபோது பார்க்கப் போனேன்.

வாடா... படிப்பெல்லாம் எப்படி இருக்கு நீயாவது ஒழுங்கா படி..

சரிண்ணே... படிச்சிட்டு தானே இருக்கேன்.

என்னண்ணே இது... என்றேன்..

அண்ணனுடைய கட்டிலில் பேப்பர் கத்தரிக்கோல் என ஏதேதோ..

இதப்பாருடா.. ஏதோ ஜப்பானியக் கலையாம்..

பேப்பர்ல குருவி பூ எதுவேணும்னாலும் செய்யலாமாம் ஆஸ்பத்திரில இருந்தப்போ கத்துகிட்டேன்... இதோ பாரு குருவி பொம்மை..

அதை சொன்ன போது அண்ணனின் கண்களில் நீர் தளும்பியது போல எனக்குத் தோன்றியது.

அண்ணன்கள் கூட அழுவார்களா... என்ன?

பறவைகளே பட்சிகளே...

இறக்கை முளைத்த

இயற்கையின் நண்பர்களே!

குற்ற உணர்வோடு எழுதுகிறேன்

இன்று!

இந்த உலகம்

உங்களுக்குமானது

என்பதறியாப் பருவத்தில்

உங்கள் இறகுகளைப் பிய்த்தெறிந்திருக்கிறோம்!

உங்கள் எச்சங்களிலிருந்து

வீழ்ந்த விதையில் தான்

விருட்சங்கள் மலர்கின்றன

என்பதறியாமல்

இறைச்சிக்காக துன்புறுத்தி

சொல்லவொண்ணாத் துயர் தந்திருக்கிறோம்!

காதல் செய்யும் களிப்பொழுதில்

உங்கள் இறணையைக் கொன்று

சாபத்துக்குகளாகி இருக்கிறோம்.

கு...சுகள் பசியில் தவிக்க

இரைக்காக பறந்த தாயை

ருசிக்காக புசித்திருக்கிறோம்!.

பரந்த இவ்வுலகில் வாழ்வதற்கான

அனைத்து உரிமைகளும்

உமக்குமுண்டு என்ற போதிலும்

உங்கள் வாழ்வை இறப்பை

தீர்மானித்ததே எங்கள்

உண்டிவில்...!

சாபங்களுக்கு இருக்கலாம்

விமோச்சனம்!

அடிவயிற்று கோபத்துக்குண்டோ

சமாதானம்!

பறவைகளே பட்சிகளே

குற்ற உணர்வில் குமைகிறேன்

இன்று...

“நீ பாவமன்னிப்பு கவிதை எழுதறது.. குற்ற உணர்ச்சியில மிதக்கிறது.. இதெல்லாம் செத்துப்போன எங்கள் தொப்புள் கொடி உறவுகளை மறுபடியும் உசுரோட கொண்டு தருமா என்ன...”

வாகை மரத்து மைனா ஒன்று கோபத்தோடு கேட்டது.

“தராது தான்! ஆனா இத்தனை வருடங்கள் கழித்து நான் என்ன பிராயச்சித்தம் செய்ய முடியும்? அதுவும் கல்பொறுக்கி தந்ததுக்கு இத்தனை மிரட்டல் அதிகமில்லையா!”

“மொதல்ல இந்த கதைக்கு தப்பான தலைப்பு வச்சிருக்க... அத மாத்து! சிறகுகளின் சாபம்! நாங்க எங்க சாபம் கொடுத்தோம்!”

“வரம்.. சாபம்.. சாபவிமோச்சனம் எல்லாம் மனிதர்கள் கண்டு பிடித்தவை! எங்களைப் பொறுத்தவரைக்கும் இருப்பதை பகிர்ந்து இல்லாதவர்க்கும் கொடுப்போம்! தானும் வாழ்ந்து மற்றவரையும் வாழவைப்போம்.. புரியுதா?”

புரிந்தது என்பது போல தலையாட்டினேன்.

வீட்டினுள்ளேயிருந்து வெளியில் வந்த என் சகதர்மினி ஆரம்பித்தாள்.

“காலைல பேப்பரும் பேனாவும் எடுத்துகிட்டாச்சா.. சர்தான்! இந்த காக்கா குருவி.. சூரியன் நிலா கவிதை எல்லாத்தையும் ஓரமா வச்சிட்டு கடைக்கு போய் வாங்க...

நாட்டுக்கோழி ஒன்னை அப்படியே உரிச்சி பெரிய துண்டாக்கி வாங்கிட்டு வாங்க..மந்தக்கரை பாய்க்கடைல.. காடை கெடைக்குதாம்! மூணு காடை.. க்ளீன் பண்ணி வாங்கிட்டு வந்துடுங்க

அப்படியே.. கொஞ்சம் காய்கறி..

-என்ன சமைக்கப் போற

-நாட்டுக்கோழி கொழம்பும் காடை வறுவலும் தான்!சீக்கிரம் கௌம்புங்க!

உள்ளேப் போய் ஆடை மாற்றி பை எடுத்துக் கொண்டு படியிறங்கியவனை உக்கிரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது ஒரு காகம்.!

- அன்பாதவன்

Pin It