taxi rain

அந்த வீட்டின் வாசல் தகர கேட் காற்றில் ஆடிக் கொண்டிருக்கிறது. மழைநீர் தெருவை மறைத்து ஓடிக் கொண்டிருக்கிறது. என் காரின் மேல்தகட்டில் தடால் தடாலென்று விழுகின்றன துளிகள்.

நான் சொல்வது அபத்தமாக இருக்கலாம். ஆனாலும் இதுதான் உண்மை. இல்லை. முழுக்க உண்மை என்றும் சொல்லிவிட முடியாதுதான். இப்போது நான் ஒரு கொலை செய்யப் போகின்றேன். உண்மையில் ஒன்றல்ல இரண்டு. ஒரு பொமரேனியன் நாயையும் சேர்த்து. ஒரு வகையில் நான் ஏற்கனவே அந்தக் கொலைகளை செய்துவிட்டேன். இப்போது நான் செய்யக் கூடியதெல்லாம் அந்தக் கொலைகளை செய்துவிட்டேனா என்ற பரிசோதிப்பது மட்டும்தான். நான் தான் செய்தேன் அல்லது செய்யப் போகிறேன் என்பதை உணர்ந்தே இருக்கிறேன். இருந்தும் சற்று சந்தேகம். நிறைய குழப்புகிறேனோ? எனக்கும் தெளிவில்லாத குழப்பமாகத்தான் இருக்கிறது எல்லாம். மன்னித்துக் கொள்ளுங்கள். விபரமாக சொல்கிறேன்.

நான் ஒரு டாக்ஸி டிரைவர். பெயர் ஊரெல்லாம் தேவையில்லை. டிரைவர் என்பதை மட்டும் நினைவில் இருத்துங்கள். அன்று காலை பதினோரு மணி இருக்கும். அட்டகாசமான இடியும் மின்னலுமாக அடித்து ஊற்றியது மழை. முதல்நாள் தொலைவுவரை ஒரு டிராப் சவாரி சென்று வந்ததால் போனை அணைத்துவிட்டு நன்றாக உறங்கிவிட்டேன். கண்விழித்து எழுந்து பார்த்தால் மழையான மழை. சரி ஸ்டாண்டிற்கு சென்றால் ஏதேனும் சவாரி கிடைக்கும் என்று உறங்கிக் கொண்டிருந்த மனைவி பிள்ளையைக் கொஞ்சிவிட்டு வண்டியை நகர்த்தினேன்.

காருக்குள் ஏஸியின் குளிர் நடுக்கம் கூட்டியது. மெல்ல ஒரு இடத்தில் காரை ஓரங்கட்டிவிட்டு, படுதாவிற்குள் ஒளிந்திருந்த ஒரு பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்துக் கொண்டேன். நான்கு இழுப்புகளுக்குப் பின்புதான் நான் அவளைப் பார்த்தேன். பிடித்திருந்த ரோஸ்நிறக் குடையையும் கடந்து, அவளது பிளாக் ஜீன்ஸும் டைட் டஷர்ட்டும் திட்டுத்திட்டாக நனைந்திருந்தன. சட்டென்று பார்த்ததும் எவரையும் வசீகரிக்கும் அவள் மெருகூட்டிய புருவங்கள். அவள் என் காரை நெருங்கி, டிரைவர் பக்கத்து கண்ணாடி ஜன்னலுக்குள் தேடினாள். நான் புரிந்து கொண்டேன்.

தலையை கைகளால் மறைத்தபடி மழையிலிறங்கி அவளை நெருங்கினேன். கதவைத் திறந்து உள்ளே ஏறிக் கொள்ளச் சொன்னேன். "இல்ல ரஞ்சிதம்மாள் காலனி போகனும். எவ்ளோ ஆகும்?” என்றாள்.

"மொதல்ல உள்ள ஒக்காந்துக்கங்க. மத்ததெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்" என்றேன் நான். என் அக்கறை புரிந்திருக்க வேண்டும் அவளுக்கு. புன்னகைத்தபடியே ஏறிக் கொண்டாள். பிறகு அவளுடன் பரஸ்பர பேச்சுவார்த்தை பேரங்கள் முடிந்தபின் கிளம்பினோம். வைப்பர் கண்ணாடியில் வரக் வரக்கென்று ஒலியுடன் தேய்ந்தது. அவளிடமிருந்து ரம்மியமான நெடி வந்தது. பர்ப்யூமாக இருக்கலாம். நான் மூக்கை ஒருமுறை நிரடிக் கொண்டேன். ரஞ்சிதம்மாள் காலனிக்குள் நுழைந்ததும் அவள் வழிகாட்டினாள்.

தெருக்கள் குண்டுங்குழியுமாக இருந்தன. அதிகம் வளர்ச்சியடையாத பிரதேசம். நிறைய காலிமனைகள் புதர் மண்டிக் கிடந்தன. நாலைந்து குறுக்குத் தெருக்கள் வளைந்து நெளிந்து சென்று, செம்பருத்திப் பூக்கள் அடர்ந்த ஒரு தனிவீட்டின் வாசலில் நிறுத்தினேன். மகிழ்ச்சி பொங்கும் மனதுடன் பணம் கொடுத்தாள். எண்ணாமல் வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். அதுதான் நான் செய்த முதல் பிசகு. வாசல் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்று விட்டாள். நான் அங்கிருந்து நகர்ந்து அடுத்த தெருவரை வந்துவிட்டு ஏதோ எண்ணத்தில் பணத்தை எண்ணிப் பார்த்தேன். அதிர்ந்தேன். ஆயிரம் ரூபாய் அதிகமாய் கொடுத்திருந்தாள். அடப்பாவமே என்று நினைத்துக் கொண்டு வண்டியைத் திருப்பினேன். அது இரண்டாம் பிசகு.

மழை விடாமல் தடதடத்துப் பெய்து கொண்டிருக்க, நான் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தேன். இதற்குள் நான் முழுவதுமாக நனைந்துவிட்டேன். காலிங் பெல்லை அழுத்தினேன். அது ஒலித்ததா இல்லையா என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. மறுபடி அழுத்திவிட்டு காத்திருந்தேன். தொலைவில் எங்கோ தட்டீலென்று பெரிய இடிவிழுந்த ஓசை கேட்டதில் சற்று நடுங்கினேன்.

இம்முறை கதவைக் கைகளால் தட்டினேன். அது படக்கென்று திறந்து கொண்டது. மெலிதாக கதவைத் திறந்து உள்ளே குரல் கொடுத்தேன்.

"மேடம்..... மேடம்...."

உள்ளிருந்து பதில் வரவில்லை. மழைச்சாரல் அதிகமாக மேலே தெறித்தது. நான் மெல்ல உள்ளே நுழைந்தேன். அது எனது மூன்றாம் பிசகு. அதன்பின் நான் செய்த அனைத்துமே பிசகுதான்.

திறந்திருந்த கதவின் வழி மழைநீர் நுழையாமலிருக்க வேண்டி கதவை மென்மையாக சாத்தினேன். கிளக்கென்று லாக் ஆனது. மறுபடி இரண்டு மூன்று முறை குரல் கொடுத்தேன். பதிலேதும் வரவில்லை. சரி பாத்ரூம் சென்றிருக்கக்கூடும் என்று யோசித்து கதவினருகிலேயே நின்றபடி வீட்டை ஒரு பார்வை பார்த்தேன்.

ஹால் நடுவே ஒரு ஊஞ்சலிருந்தது. மூலையிலிருந்த புத்தம் புதிய பெரிய பிரிட்ஜில் குழந்தைகள் ஒட்டி விளையாடும் ஸ்டிக்கர்கள் ஒட்டியிருந்தன. சுவரில் ஒரேயொரு பெரிய புகைப்படம் தொங்கிக் கொண்டிருந்தது. என் காரில் வந்த அந்தப் பெண் ஊஞ்சலில் ஆடியபடி எடுக்கப்பட்ட படம். மிக அழகான தத்ரூபமான அந்த புகைப்படம் துல்லியமாக இருந்தது. தொங்கிக் கொண்டிருந்த ஜன்னல் திரைச்சீலைகளில் ஒரு வசீகரம் தெரிந்தது. வழுக்கும் டைல்ஸ்களில் விதவிதமான வண்ண வடிவங்கள் நெளிந்து கொண்டிருந்தன. தாமதத்தை உணர்ந்து மறுபடி ஒருமுறை குரல் கொடுத்தேன்.

கிச்சனிலிருந்து மொசுமொசுவென்று தரையை முகர்ந்தபடி ஒரு பொமரேனியன் நாய் வந்தது. நல்லவேளையாக நான் பயந்ததுபோல் குரைக்கவெல்லாம் இல்லை. சாதுவாக என் கால் சுண்டுவிரல்களை நக்கிவிட்டு சோபாவில் ஏறி உட்கார்ந்து கொண்டது. வெளியே மழை இன்னும் வலுவாகப் பெய்து கொண்டிருந்ததை அவ்வப்போது விழும் இடியொலிகளை வைத்துத் தெரிந்துகொண்டேன். காரில் அந்தப் பெண்ணிடமிருந்து வெளிப்பட்ட அந்த மணம் வந்தது இப்போது. மூடியிருந்த ஒரு அறையிலிருந்து வெளிவந்தது.....

அது அந்தப் பெண்ணல்ல. ஒரு கிழவர். அவர் என்னை வினோதமாகப் பார்த்தார். பிறகு, "என்ன?” என்றார்.

"இல்ல சார். கொஞ்சமின்ன ஒரு அம்மா வந்தாங்களே. உங்க பொண்ணா? காசு ஜாஸ்தி குடுத்துட்டுப் போயிட்டாங்க"

அவர் குழம்பியது முகத்தில் தெரிந்தது. "என்ன சொல்ற?”

நான் மறுபடி விளக்கமாகக் கூறிவிட்டு, அந்தப் புகைப்படத்தை காட்டினேன். அவர் சிரித்தார். என்னை உட்காரச் சொல்லிவிட்டு நாயை மடியில் எடுத்து வைத்துக் கொண்டார். அது முசுக்கென்பதுபோல் ஒரு சப்தம் செய்துவிட்டு சுகமாக தன் கண்களை மூடிக்கொண்டது. நான் உட்கார்ந்து கொண்டு பணத்தை அவரிடம் நீட்டினேன்.

"அது என் பொண்ணுதான் தம்பி. அஞ்சு வருஷமாச்சு. ஒரு ஆக்ஸிடண்டுல செத்துட்டா"

நான் அதிர்ந்து போய்விட்டேன். நான் இதுபோன்ற கதைகளை ஏற்கனவே பலமுறை கேட்டிருக்கிறேன் என்பதால் சுதாரித்துக் கொண்டேன்.

"சார் வெளையாடாதீங்க. இப்பத்தான் என் கார்ல வந்தாங்க. இல்லாட்டி நா ஏன் சார் இங்க வரப்போறேன்?”

அவர் அருகிலிருந்த ஷோக்கேஸை என்னிடம் காண்பித்தார்.

"அதை கொஞ்சம் தொற தம்பி" என்றார்.

"எதுக்கு சார்?”

" தொறயேன். தொறந்து உள்ளே ஒரு பிளாஸ்டிக் டப்பா தெரியுது பாரு அதை எடுத்திட்டு வா"

நான் குழப்பங்களுடன் எழுந்து சென்று அதை எடுத்து வந்தேன். நல்ல கனமாக இருந்தது. அவர் என்னிடமிருந்து அதை வாங்கி, எனக்கும் அவருக்கும் நடுவிலிருந்த டீப்பாயில் அதைக் கவிழ்த்தார். நிறைய சாவிகள் விழுந்தன. விதவிதமான கீச்செயின்களுடன் கூடிய ரகரகமான சாவிகள். அனைத்துமே கார் சாவிகள். எனக்கு சற்று திகில் கூடத் தொடங்கியது.

"என்ன சார் இதெல்லாம்?”

"எல்லாமே என் பொண்ணோட கலெக்‌ஷன்ஸ் தம்பி. என் பொண்ணுக்கு சாவிகள்னா அவ்ளோ உயிரு. விதவிதமா சாவிகளைப் பொறுக்கிட்டு வருவா. சின்னவயசுல இருந்தே அப்டி ஒரு வினோதமான பழக்கம். எவ்ளோ சொல்லியும் அவ மாத்திக்கல"

நான் சிரித்து வைத்தேன். வேறென்ன செய்ய.

"சரி சார். அவங்க வந்தா இந்தப் பணத்தை குடுத்திருங்க. எனக்கு டைமாச்சு. நா கெளம்பறேன்" என்றபடி எழுந்து கொண்டேன். அவர் கண்கள் சிவக்க, தொண்டை நரம்புகள் வெளிப்பட வினோதமான குரலில் ஒரு கர்ஜனை செய்தார். நான் மிரண்டுபோய் மறுபடி சோபாவில் உட்கார்ந்து விட்டேன். அத்தனை மெலிதான அவர் உருவத்திலிருந்து அப்படியொரு கர்ஜனையை நான் எதிர்பார்த்திருக்காததால் எனக்கு அதிர்ச்சியில் உடல் சிலிர்த்துவிட்டது. என்ன பேசுவதென்று தெரியாமல் என் சாவியை கையின் விரலிடுக்கில் நுழைத்து அழுக்கைச் சுரண்டிக் கொண்டிருந்தேன். இப்போது எங்கிருந்தோ மெல்லிய இசை வழியத் துவங்கியது. இதற்குமுன் அவ்விதமான இசையை நான் கேட்டதேயில்லை. ஆனால் நன்றாக இருந்தது.

"உங்கிட்ட நா வெளிப்படையாவே சொல்லிடறேன் தம்பி" என்றார் கிழவர் மிக சாந்தமான குரலில்.

நான் மவுனமாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"எனக்கு நீதான் உதவி செய்யனும்"

"சொல்லுங்க சார்"

"என்னால என் பொண்ணு இல்லாம வாழ முடியல தம்பி. திரும்புற பக்கமெல்லாம் அவ நியாபகமாவே இருக்கு"

பிண்ணனியில் இசை மெல்ல மெல்ல ஒலி கூடிக் கொண்டிருந்தது.

"நா என்ன சார் செய்யனும்?”

"கஷ்டமா எல்லாம் ஒன்னுமில்ல. என்னைக் கொஞ்சம் சுட்டுட்டா பெரிய ஹெல்ப்பா இருக்கும்" என்றபடி சோபாவினடியிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து டீப்பாய்மீது வைத்தார். எனக்கு திகில் கூடியதுடன் இது என்னடா அபத்தம் என்றும் தோன்றியது. நான் ஏதோ பைத்தியக்கார விடுதிக்குள் தவறாக நுழைந்து விட்டேனோ என்று தோன்றியது. நான் பதறினேன். சிரிப்பு வியப்பு அச்சம் எல்லாம் கலந்து என்னை பிசைந்து கொண்டிருந்தது உள்ளுக்குள். ஒரு மாதிரி சாமாளித்துக் கொண்டு, குரலில் மிடுக்கை வரவழைத்துக் கொண்டேன்.

"சாவறதுன்னா தனியாச் சாவுங்க சார். நா புள்ளகுட்டிக்காரன். நா கெளம்பறேன்" என்று எழுந்தேன். அவ்வளவுதான். பின்புறத்திலிருந்து வலுவான இரண்டு கைகள் என் தோள்பட்டைகளைப் பிடித்து பலமாக அழுத்தி மறுபடி சோபாவில் உட்கார வைத்தது. பயத்தில் எனக்கு மூத்திரம் முட்டிக் கொண்டது. மெல்ல பின்புறமிருந்து வந்தவன் குத்துச்சண்டை வீரன் கணக்கில் நல்ல திடகாத்திரமாக இருந்தான். கன்னங்கரேலென்னும் முகத்தில் சிவந்து தெறித்துவிடுவதுபோன்ற விழிகளால் என்னை எரித்துக் கொண்டிருந்தான்.

நான் என் நிலைமையின் சிக்கலைப் புரிந்துகொண்டேன். கிழவர் அட்டகாசமான வெற்றிப் புன்னகையுடன் என்னிடம் மறுபடி பேசினார்.

"ஒனக்கு வேற வழியேயில்ல தம்பி. நீ என்னை சுட்டுத்தான் ஆவனும். பயப்படாம துப்பாக்கிய எடுத்துக்க. டப்புன்னு சுட்டுட்டு போயிட்டேயிரு"

நான் கால்கள் நடுங்க மிரட்சியான குரலில் சொன்னேன்.

"நெசம்மா எனக்கு சுடத் தெரியாதுங்க. என்னை விட்ருங்க நா போயிடுறேன்" என்று கெஞ்சினேன். கிழவர் என்னை பார்த்ததில் அருவருப்பு தெரிந்தது.

"வெக்கமாயில்ல ஒனக்கு? வயசான கெழவன் நானே சுடுங்கிறேன். நா என்ன உன்ன சாகவா சொன்னேன்? கொல்லாத்தானே சொன்னேன்?”

"என்ன சார் இப்டிலாம் பண்றீங்க ? எனக்கு பயமாயிருக்குங்க. நீங்க..... நீங்களாவே செத்துக்கங்க சார். தயவுசெஞ்சு என்ன விட்ருங்க. வேன்னா தோ இவுரை வச்சு செத்துக்கோங்களேன்" என்றேன், குண்டனை கை காட்டி. என் மூச்சில் படபடப்பு அதிகமிருந்ததை உணர்ந்துகொண்டேன். வெளியில் நாலைந்து இடிகள் பலமாகக் கேட்டன.

"முட்டாள். அவன் எப்புடி சுடமுடியும்? அவந்தான் ஏற்கனவே செத்துட்டானே?”

எனக்கு நடப்பது எல்லாம் கனவா நிஜமா என்று புரிந்துகொள்ள முடியாதபடி குழப்பமாக இருந்தது. சரி அவர்கள் போக்கிலேயே செல்வோம் என்று துப்பாக்கியை கையிலெடுத்துக் கொண்டேன்.

"குட் பாய்" என்றார் கிழவர். பிறகு அவரே என் கைகளில் ட்ரிக்கரை எப்படி விலக்க வேண்டும் விசையை எப்படி அழுத்த வேண்டும் என்று பாடமெடுத்தார். நடுங்கிக் கொண்டிருந்த என் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ளச் சொல்லி உறுமினார். "இப்போது சுடு தம்பி" என்றார். இசை இப்போது மிகப்பெரிய அலறலாக கேட்டுக் கொண்டிருந்தது. நான் அவர் சொன்னபடியே எதையோ பிடித்து அழுத்தினேன். அழுத்த முடியவில்லை.

பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்திருந்த குண்டன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் தோற்றுவிட்டதை உணர்ந்து கொண்ட பெரியவர் சலிப்புடன் துப்பாக்கியை பிடுங்கிக் கொண்டார். தன் கையில் வைத்து மறுபடி சுடுவதற்கான வகுப்பெடுத்தார். எனக்கு வியர்வையில் உடையெல்லாம் நனைந்து விட்டது. குண்டன் மென்று கொண்டிருந்த சுவிங்கத்தை பக்கத்து போன்சாய் தொட்டியில் துப்பினான். நான் மறுபடி சுட முயற்சித்து தோற்றதும் கிழவர் பயங்கரமான ஆத்திரத்துடன் துப்பாக்கியை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டார். பிறகு நான் எதிர்பாராத விதமாக பட்டென்று அந்த குண்டனைக் குறிவைத்துச் சுட்டார்.

நான் உறைந்துபோய் பார்க்க, தரையில் சரிந்த குண்டனின் நெற்றியிலிருந்து குபுகுபுவென ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. என் அடிவயிறு கலங்கிவிட்டது. கத்த நினைத்த என் வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை. கிழவர் துளியும் பதற்றமின்றி துப்பாக்கியை என் கையில் திணித்தார். முன்பைவிட அதிகமாக நடுங்கின என் கைகள்.

"நா என் பொண்ணைப் பார்க்கனும். கமான் ஷூட் டேமிட்" என்றார். நான் நாற்காலியில் டேபிள் பேன் அதிர்வதுபோல உடல் விடுவிடுக்க உட்கார்ந்திருந்தேன். என்னை ஒருமுறை என் பிறப்பு குறித்த கெட்டவார்த்தையால் திட்டிவிட்டு, நாயை எடுத்து டீப்பாய்மீது வைத்தார். அது வாலை மட்டும் ஆட்டியபடி குறுகிய விழிகளால் என்னைப் பார்த்தது. கிழவர் என் கைகளைப் பிடித்து இழுத்து துப்பாக்கியை நாயிற்கு நேராக குறிவைத்தார்.

"சுடு முட்டாளே" என்றார் சத்தமாக.

நான் சுட்டதும் நாய் டீப்பாயிலிருந்து எகிறி சோபாவில் போய் சொத்தென்று ரத்தவெள்ளமாய் விழுந்தது. நான் எதையுமே சிந்திக்கும் நிலையைக் கடந்து விட்டிருந்தேன். ஒருமாதிரி ரோபோ போல கிழவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இசை இப்போது அளவில்லாத நாராசத்துடன் சகித்துக் கொள்ளமுடியாதபடி வழிந்து கொண்டிருந்தது.

கிழவர் வேகமாக எழுந்துவந்து என்னைக் கட்டிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மறுபடி எதிர்ப்புறம் சென்று உட்கார்ந்துகொண்டு சுடும்படி உத்தரவிட்டார். நான் சுட்டேன். கிழவர் சிரித்தபடியே சோபாவில் சரிந்தார். அதன் பிறகு நான் அங்கிருந்து அவசரமாக வெளியேறினேன். கையிலிருந்த துப்பாக்கியை என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி அந்த வீட்டு வாசல் செம்பருத்திச் செடியின் கிளையொன்றில் சொருகிவைத்தேன். மெல்ல கேட்டைச் சாத்திவிட்டு வேகமாக காரிலேறியபோதுதான் நினைவுவந்தது. கார் சாவியை உள்ளேயே மறந்துவிட்டேன். உள்ளே சென்று சாவியை எடுத்து வருவது தவிர வேறுவழியில்லை. காரை எடுத்தாக வேண்டுமே என்று மறுபடி வீட்டிற்குள் நுழைந்தேன். இறுகிக்கிடந்த கதவை பலங்கொண்ட மட்டும் அழுத்தித் திறக்க, அது கிறீச்சிட்டு திறந்துகொண்டது. உள்ளே பார்த்த காட்சியில் அதிர்ந்து போனேன். உள்ளே ஹால் பாழடைந்து துப்புறவாக இருந்தது.

சுவர்களில் புகைப்படம் பிரிட்ஜ் ஊஞ்சல் எதுவுமில்லை. சோபா நாற்காலி ஜன்னல் திரைச்சீலைகள் இல்லவேயில்லை. கிழவர், குண்டன், நாய், இசை, என் கார் சாவி எதுவுமில்லை. தரைமுழுக்க புழுதிபடிந்து கிடந்தது. தலை மதுவருந்திய மறுநாள் காலைபோல பாரமாக இருந்தது. கண்கள் இருட்டிக் கொண்டுவர அப்படியே படாரென்று மயங்கி விழுந்தேன்.

யாரோ உலுக்கியதுபோல கண்விழிக்க வெளியே இடியிடித்து மழை கொட்டிக் கொண்டிருந்தது. மனைவியும் பிள்ளையும் உறக்கத்திலிருந்தார்கள். எல்லாம் கனவா என்று நிம்மதியடைந்து முகம் கழுவி அவர்களை தொந்திரவு செய்யாமல் ஸ்டாண்டிற்குக் கிளம்பினேன். சாலையில் மழை ஆறாக ஓடிக்கொண்டிருக்க, வழக்கமான பெட்டிக் கடையில் நிறுத்தி சிகரெட் வாங்கிப் பற்ற வைத்தேன். அந்த ரோஸ் நிறக்குடையுடன் பிளாக் ஜீன்ஸ் பெண் காருக்குள் தேடினாள். காருக்குச் சொந்தக்காரி போல உரிமையுடன் உள்ளே ஏறி உட்கார்ந்து கொண்டாள். நான் அவசரமாக காருக்குள் ஏறி அவளிடம் சொன்னேன்.

"இல்லங்க. நா வீட்டுக்குப் போறேன் வண்டி வராது"

அவள் அழகாக சிரித்தாள்

"என்ன சார் நேத்துக்கூட நீங்க வந்தீங்களே. நல்லாத்தானே ஓட்டினீங்க" என்றாள். எனக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ என்று யோசித்தேன். உள்ளுக்குள் பயமிருந்தாலும், ஒரு ஓரத்தில் உந்தித் தள்ளிய ஆர்வத்தில் காரைக் கிளப்பி ரஞ்சிதம்மாள் காலனி நோக்கி ஓட்டினேன். வீடு வந்ததும் என்னை உள்ளே வரச் சொல்லிவிட்டு தன் பாட்டில் இறங்கி வீட்டிற்குள் சென்றுவிட்டாள். நான் இதையெல்லாம் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இப்போது என் சந்தேகமெல்லாம் நான் கிழவரையும் நாயையும் கொன்றுவிட்டேனா? அல்லது இனிமேல்தான் கொல்லப் போகிறேனா என்பதுதான். நான் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தேன். எதேச்சையாக இடதுபக்கம் திரும்பி செம்பருத்திச் செடியின் அடியில் பார்த்தேன். அதன் கிளையில் ஒரு துப்பாக்கி சொருகியிருந்தது 

- ஶ்ரீரங்கம் மாதவன்

Pin It