மெல்ல அந்தக் கை மார்பில் ஊறியது. நெளிந்தேன். அப்படித் தானே பழக்கப் படுத்தப்பட்டிருந்தேன். காதில் மூச்சின் ஒலி துல்லியமாகக் கேட்டது. ஆண் வாசனை தெள்ளத் தெளிவாக வீசியது. அந்தக் கை அப்படியே கீழிறங்கிப் போக முற்படுகையில் சட்டென்று விழிப்புத் தட்டியது. சுற்றிலும் ஒரே இருள். இருளை இழுத்துப் போர்த்திக் கொண்டாற் போல் இருள். சூழல் பிடிபட சில நொடிகள் ஆனது. மெல்ல வெளியில் உறைந்திருந்த குளிர் உறைத்தது. உடல் மட்டும் வியர்த்திருந்தது. வியர்த்து ஈரமாகியிருந்த உடலின் மேல் குளிர் லேசாகப் படர்ந்ததும் உடல் லேசாகச் சிலிர்த்து அடங்கியது.

porn posterஅது என்னவோ தூங்கும் போது தெரியாத குளிர் நடுக்கம் விழித்ததும் வந்து ஒட்டிக் கொள்கிறது. மெல்லத் தலையைக் குலுக்கிக் கொண்டேன். எத்தனை வருஷங்களாகி விட்டன. இருந்தும் இது போல் சொப்பனங்கள் அவ்வப்போது வருவதைத் தவிர்க்க முடியவில்லை. மனக் கட்டுப்பாடு கை வரவில்லையோ என்னவோ. இது மாதிரிக் கனவின் சமயங்களில் இறுக்க மூடியிருக்கும் கண்களுக்குள் வெளிச்சம் பீய்ச்சியடிக்கும்.

அப்போதைய ஞாபகங்கள் அலையலையாய் வந்து மூழ்கடிக்கப் பார்க்கும். உடல் வேறு இன்னதென்று தெரியாத இம்சை கொடுக்கும். அது தாள முடியாததாயும் விரும்பத்தகாததாயும் இருக்கும். ஆனால் நல்லவேளை சட்டென்று எப்படியோ விழிப்பு வந்து காப்பாற்றி விடும். அந்தச் சொப்பனங்களை அப்படியே தொடர விட்டுப் பின் சென்றால் என்ன ஆவேனோ தெரியாது.

சில சமயங்களில் கைகள் ஊர்வதோடு குரல்களும் கேட்கும். கேட்டுக் கேட்டுப் பழகிய சலித்துப் போன வார்த்தைகளை உதிர்த்தபடியே இருக்கும் குரல்கள்.

“மேடம்... ஜாக்கெட்டையும் கழட்டிடுங்க.... அப்டியே அதையும்..... இந்தாப்பா ... எல்லாரும் வெளில போங்கப்பா. கூப்புடறோம்... ரெடியா மேடம்? யோவ்.. நல்லா எக்ஸ்பிரஷன் குடுக்கணும். மேடம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. ரெடி? ரெடி. ஸ்டார்ட்.. கேமரா.... ஆக்ஷன்.... மேடம் கொஞ்சம் இந்தப் பக்கம்... லெப்ட் ஹாண்டை அப்டியே தூக்குங்க.... யோவ் என்னய்யா பாக்கற.. சொல்லிக் குடுத்தத செய்யா”

தலையை உலுக்கிக் கொண்டு மீண்டும் நிகழுக்கு வந்தேன். ஏன் துணியில் பட்ட வாழைக் கறை போல் எத்தனை துடைத்தாலும் இந்த நினைவுகளின் கறைகள் என்னை விட்டுப் போகவே மாட்டேனென்கிறது? துரத்த முயற்சித்துச் சோர்ந்து வீழ்ந்தது தான் மிச்சம்.

பெருமூச்சுடன் மெல்ல எழுந்து காலைக் கிரியைகளை முடித்து விட்டுக் காபி போட்டுக் கொண்டேன். இப்போதெல்லாம் சர்க்கரை இல்லாத காபி. சர்க்கரை சேர்க்க வேண்டாமென்று டாக்டரின் அறிவுரை. என் உடலை நினைத்தால் எனக்கே சிரிப்பாக வந்தது. ஒரு காலத்தில் வெளிச்சத்திலேயே நிர்வாணமாக மிதந்த உடல். கேமராக் கண்களை வளமாகக் கவனித்த உடல், கோடி ஆண்களால் திரையில் ரசிக்கப்பட்டு கண்களாலேயே புணரப்பட்டு, அவர்களின் கனவுகளில் எல்லாம் சர்ப்பம் போல் புகுந்து ஆட்டி வைத்த உடல். பெரும் நட்சத்திரங்களின் திரைப்படங்களை ஓரம் கட்டி ஓடோ ஓடென்று ஓடிய படங்களுக்கு அப்பெருமையைத் தேடித் தந்த உடல். சுற்றிலும் ஆண்கள் வேடிக்கை பார்த்தபடியிருக்க எத்தனையோ ஆண்களின் ஈர உதடுகளின் தடங்கள் பதிந்த உடல்.

ஒரு நிமிஷம் கீழே குனிந்து இப்போதைய என் உடலைப் பார்த்தபடியே இருந்தேன். இடுப்பு பெருத்திருக்கிறது, மார்பகங்கள் தளர்ந்து விட்டிருக்கின்றன. பத்தடிகள் நடந்தால் மூச்சு வாங்குகிறது. வயிற்றில் மடிப்புகளாகச் சதை தளர்ந்து வளர்ந்து கிடக்கிறது. ரத்த அழுத்தம் இருக்கிறது. சர்க்கரையும் கூட. அடிக்கடி கிறுகிறுப்பு வருகிறது. நெஞ்சில் கபம் கட்டிக் கொண்டால் அவ்வளவு எளிதில் போக மாட்டேனென்கிறது.

ஒரு வேளை இந்தக் குளிர் மலைப் பிரதேசத்திலிருந்து சமவெளிப் பகுதிக்குக் குடி பெயர்ந்தால் உடல் கொஞ்சம் சமநிலை அடையுமோ என்னவோ. ஆனால் இங்கே உணரும் பாதுகாப்பை நான் முற்றாக இழக்க நேரிடும். இந்த ஊரில் யாருக்கும் என்னைத் தெரிவதில்லை. மொழியும் வேறு. ஆனால் இங்கு வந்து சேர்ந்த இந்த நான்கு வருஷங்களில் இந்த பாஷை பழகி விட்டிருக்கிறது. தப்பும் தவறுமாகப் பேசினாலும் பேச முடிகிறது.

என்னுடைய உலகமானது ரொம்பவே சுருங்கி விட்டிருக்கிறது. அந்தத் தனி வீடு. வீட்டின் சொந்தக்காரர் இந்தப் பக்கத்து ஆள். முழுமையான கிராமத்தான். வசதியானவர். மலை வீடு வாங்க வேண்டுமென்று ஆசைப்பட்டு வாங்கியிருக்கிறார். அந்தச் சமயம் பார்த்து நான் வந்து சேரவே வீட்டைப் பார்த்துக் கொள்ள என்னை சொல்லி விட்டார். அவருக்கும் என் கடந்தகாலம் தெரிந்திருக்கவில்லை என்பது நிம்மதியாக இருந்தது.

வீட்டுக்கு எப்போதேனும் யாரேனும் விருந்தினர்கள் வரவு உண்டு. வருடத்தில் ஓரிரு முறை வீட்டின் சொந்தக்காரர் குடும்பத்துடன் வருவார். அவ்வளவே. மற்ற நேரங்களில் நானும் என் தனிமையும் மட்டுமே. அதற்காகவே இந்த இடம் எனக்கு மிகப் பிடித்தமானதாக மாறியிருந்தது. பிடித்தமானது என்பதை விடவும், என்னை இம்சிக்காத, கடந்த காலத்தின் சுவடுகளை மீண்டும் மீண்டும் சேற்றில் அழுந்திய பூட்ஸ் கால்களைப் போல் என் மேல் பதிக்க முயற்சிக்காத சுற்றுப்புறம் எனக்கு நிம்மதியாயிருந்தது.

இது வரைக்கும் வந்த விருந்தினர்களுக்கு என் முகம் பிடிபடாமல் இருந்தது என் அதிர்ஷ்டமே. முன் காலங்களில் இருந்த சாயல் பெருமளவில் அகன்று முகமே முற்றாக மாறிப் போய் விட்டது காரணமாயிருக்கலாம். இருந்தும் ஒவ்வொரு முறையும் விருந்தினர் வருகை சிறு பயத்தை உண்டு பண்ணாமலிருந்ததில்லை. பெரும்பாலும் வருபவர்கள் முழுவதும் குடித்துக் கும்மாளமிடுவதிலேயே கவனமாக இருப்பதாலும் நான் கவனிக்கப் படாமல் போயிருக்கலாம்.

எது எப்படியோ இந்த வீடும் அவ்வப்போது ஐந்து மைல் தொலைவிலிருக்கும் அருவிக்கரையும், கீழே மூன்று கிலோமீட்டர்கள் இறங்கிப் போனால் வரும் இரண்டு தெருக்கள் கொண்ட பஜார் பகுதியும் என் சிதைந்த வாழ்க்கைக்கு மருந்திட்டுப் பாதுகாக்கப் போதுமானதாயிருக்கிறது.

பஜார் பகுதியை அடையும் முன் சற்றே வளைந்து மேலேறும் அந்தத் திருப்பத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் வேயப்பட்டு காலத்தின் சுவடு அழுந்தப் படிந்து களைத்து நிற்கும் கட்டிடத்தின் பெயர் ஜேகே டாக்கீஸ் என்று பெயர்ப்பலகை மாட்டியிருக்கும். அது இந்த ஊரின் இரண்டாவது திரையரங்கம். முதல் திரையரங்கம் கடைத்தெருப் பகுதியைத் தாண்டி சற்று தூரம் போக வேண்டுமாம். கேள்விப்பட்டது தான். கடைத்தெருவைத் தாண்டிப் போனதேயில்லை.

இந்த அரங்கை மட்டும் தான் எப்போதும் பஜார் செல்கையில் கடக்க வேண்டி இருக்கும். ஓரளவு புதிதான வெகுஜனப் படங்கள் முதல் திரையரங்கில் தான் எப்போதுமே திரையிடப்படும். இதுவும் கேள்விப்பட்ட தகவல் தான். இந்த இரண்டாம் அரங்கில் எப்போதும் மொழி மாற்றம் செய்யப்பட்ட இரண்டாம்தர பேய்ப்படங்களும் சண்டைப் படங்களும் மட்டுமே திரையிடப் படும்.

போஸ்டரில் யாரேனும் நடிகை கவர்ச்சியாய்த் தெரிந்து விட்டால் போதும். மனம் பதைபதைக்கும். அந்த முதல் நாள் தவறாமல் ஞாபகம் வந்து இம்சிக்கும்.

“சார் இதுக்குன்னு தெரிஞ்சிருந்தா....”

“என்ன? வந்திருக்கவே மாட்டேங்கறியா... அதெல்லாம் சும்மாம்மா... இப்ப என்னாங்கிற...இது தான் சீனு., எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டு தானே நடிக்க வந்திருக்க? கழட்டும்மா.. யோவ்.. தேன் பாட்டில் ரெடியா....”

“இல்ல சார்... அது....” கண்களில் கண்ணீர் முட்டி நின்றது.

“அடடா.... இன்னிக்கு இருக்கற பெரிய ஹீரோயின்ல நிறைய பேரு இங்கருந்து போனவங்க தாம்மா.. நானே எத்தன பேர ஏத்தி விட்டிருக்கேன் தெரியுமா.. எல்லாமே உன் நல்லதுக்கு தான். போ போய் கழட்டிட்டு வா. யப்பா லைட்டிங்கு ரெடியா,... சீக்கிரம்யா... இன்னிக்கு முடிச்சாவணும். நாளைக்கு அந்த பொண்ணு வருது”

வாதப் பிரதிவாதங்களைக் கடந்து வறுமையும் அதைப் பூசி மெழுகி அடைக்கும் வல்லமை படைத்த பணமும் பிரதானம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிதர்சனமாகிக் கொண்டே வந்தது. முழுசாய் உதித்தது முதல் வெளிச்சம் திறந்த மார்பின் மேல் விழுந்த போது. அதற்குப் பிறகு அந்த வெளிச்சம் அணைய பத்து ஆண்டுகள் பிடித்தது.

முடிந்த வரை அந்தத் திரையரங்கைக் கண்டும் காணாமல் கடந்து விட முயற்சிக்கும் மனசின் முயற்சிகளுக்கு மனசின் ஆழத்திலிருந்தே இன்னும் வெளிச்சத்துக்கு ஏங்கும் ஏதோ ஒரு சிறு பகுதி வேட்டு வைக்கும். கண்கள் குறுகுறுவெனத் திரும்பிப் பார்க்கும். சட்டென கண்களில் ஒரு சிறு பொறி எழுந்து அடங்கும்.கால்கள் விடுவிடுவெனக் கடக்கும்.

இன்று கடக்கவில்லை. அப்படியே கல்லைக் கட்டிப் போட்டாற் போல் நின்றது. முதல் முறையாக இந்த மாதிரிப் படம் போட்டிருக்கிறார்கள். அந்தப் போஸ்டரில் இருப்பது... நானே தான். என் படத்தைப் போட்டிருக்கிறார்கள். இந்தப் படம் நன்றாக நினைவிருக்கிறது. ஏதோ ஒரு பாழடைந்த கோவிலில் காட்டுக்குள் வைத்து எடுத்தார்கள். கோவிலுக்குள் இந்த மாதிரிக் காட்சிகளெல்லாம் எடுக்கலாமா என்று நான் கேட்ட போது எல்லாருமாய் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். மெல்ல நினைவுகளின் மாயப் பிடியில் லயிக்கத் துவங்கிய என்னைப் பிடித்து இழுத்து நிகழுக்குக் கொண்டு வந்தது அந்தப் பையனின் பார்வை.

அரங்கின் வாசலில் நின்றிருந்தான். சீருடை அணிந்திருந்தான். இங்கிருக்கும் ஏதோ ஒரு பள்ளியின் சீருடை. நிமிர்ந்து போஸ்டரைப் பார்த்தவன் திரும்பி என்னைப் பார்த்தான். குப்பென்று உடல் வியர்த்தது. என்னைத் தான் பார்க்கிறான் என்று தீர்மானமாய்த் தெரிந்த போதும் சுற்றும் முற்றும் பார்த்தேன். என்னைத் தான் .

சட்டென்று பார்வையை விலக்கி நடக்கத் துவங்கினேன். அவன் என்னைப் பின் தொடர்வது திரும்பிப் பார்க்காமலேயே உள்ளூரத் தெரிந்தது. வியர்வை பெருக்கெடுத்து கக்கங்கள் நனைந்து நசநசக்கத் துவங்கி விட்டன. மூச்சு இளைத்தது. ஏதேதோ சந்துகளில் புகுந்து புறப்பட்டபடியிருந்தேன்.

சற்று நேரம் கழித்து இளைப்பு அதிகமானதும் முடியாமல் நின்று திரும்பிப் பார்த்தேன். அவன் காணாமல் போயிருந்தான். வயிறு குழைந்தடித்தது. தொண்டைக் குழியிலிருந்து காற்று வெளிவர சிரமப்பட்டது. சிரமப்படுத்தியது. வெறுப்பாக இருந்தது. ஆளே இல்லா அச்சாலையில் ஆயிரம் பேர் என்னைக் கண் கொண்டு பார்ப்பது போலிருந்தது.

அதே பழைய பார்வைகள். அதே எதிர்பார்ப்புகள். அதோ அந்த மூலையில் இரண்டு பேருக்கு பின்னால் நின்று கொண்டு என்னைப் பார்க்கிறானே கருத்த உருவம் கொண்டவன். அவனைக் கண்டால் பயம் பிடுங்கித் தின்கிறது. கால்கள் நடுங்குகின்றன. யாரோ என்னை நெருங்கி வருகிறார்கள். வந்து விட்டார்கள். கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் நெருங்கி விட்டார்கள். இதோ.... மூச்சுக்காற்று இவர்களெல்லாரும் வெறி கொண்ட ஆண்கள் என்பதை தெள்ளத் தெளிவாக்ச் சொல்கிறது. ஓட வேண்டும். முடியவில்லை. கால்கள் கட்டப்பட்டது போல் கட்டுண்டு கிடக்கின்றன. எங்கிருந்தோ கேமரா முளைக்கிறது. வெளிச்சம் பீய்ச்சியடிக்கும் ராட்சத லைட்டுகளை எடுத்து வருகிறான் அந்த தாடிக்காரன்.

கண்கள் சொருகுகிறாற் போல் இருந்தது. ஓடு ஓடு.,,.. சட்டென்று திடுக்கிட்டு கண்களைத் திறந்தேன். தூரத்தில் ஏதோ ஒரு வேலையற்ற குயில் அகவிக் கொண்டிருந்தது. வேறு சப்தங்களில்லை. மெல்ல நிதானத்துக்கு வந்தேன். பின் கூந்தலை சரி செய்து கொண்டு முகத்தைத் துடைத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.

அரங்கின் வழி மீண்டும் போக முடியாது. நான்கு மைல்கள் சுற்றித் தான் போக வேண்டும். மெல்ல நடக்கத் துவங்கினேன். மனசு அடுத்த பெயர்விற்கான இடத்தைத் தேடத் துவங்கியிருந்தது.

- ஹரீஷ்

Pin It