அந்த ஊர் எல்லையில் அமைதியான சூழலே நிலவியது. அந்த இடமே பசுமை போர்த்திக் கொண்டிருந்தது. நடுவில் ஒருபாதை இருபக்கமும் தலைக் கனத்துடன் தள்ளாடிக் கொண்டிருந்த பயிர்களாய் கிடந்தது.

மெல்ல உள் நுழைய அங்கிருந்த ஒரு தேநீர் கடை ஆட்கள் யாருமில்லாமல் 80களின் பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தக் கடையின் முன் வாசலில் அமர்ந்து கிடந்தார் ஒரு பெரியவர்.

தள்ளாத வயதில் வளைந்து முதுகெலும்போடு முகத்தில் ஒரு ஏக்கம் கவ்வி கிடக்க. முகம் முழுவதும் சோக ரேகைகள் ஆட்கொண்டிருந்தது. ஊருக்குள் வந்தவன் மெல்ல பெரியவரிடம்

“ஐயா இங்க மேற்கு காலணிக்கு எப்படிங்க போகனும்”என்று கேட்க .

நேரே போயி தெக்கால திரும்பி ஒரு நேர் ரோடு போகும் அதுல போகனும் சாமி என்று கூறினார்.

”அங்க யார பாக்கனும் சாமி” என்று அவர் கேட்கவே சற்று மௌனம் காத்து..

“ இல்ல ஒரு ஆள பாக்கனும் என்று சொல்லி மெல்ல அங்கிருந்து நடக்கத் துவங்கினான்.

நடுத்தர வயதில் இருந்த அவனின் நடை சற்று தளர்ந்தே இருந்தது குரலில் சற்று வருத்தம் கலந்திருந்தது. அவன் அந்த தெருவிற்குள் தளர்ந்த நடையுடன் மெல்ல நடந்தான். அந்தத் தெருவின் ஆரம்ப எல்லையில் தாழ்ந்து கிடந்த பார்வையை சற்று உயர்த்தி அங்கிருந்த கன்னி தெய்வம் கோவிலை கண்களை சுருக்கி ஒரு கோபத்துடன் பார்த்தான். அங்கிருந்து தெருவினுள் நடக்கத் துவங்கினான்.

அந்தத் தெருவினுள் நடக்கத் துவங்கியவன் ”இங்க தீபா வீடு எங்க இருக்குமா” என்று அந்த தெரு சாலையில் துணிதுவைத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் கேட்டான். அந்த பெண்ணோ முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் கையை உயர்த்தி இந்தப் பக்கமா போகனும் மூணாவது சந்து இடது பக்கம் என்று கூறி தன் வேலையை தொடர்ந்தாள்.

அவன் அந்த வீட்டைச் சென்றடைந்தான். அது ஒரு குடிசை வீடாகத்தான் இருந்தது. இவன் உயரத்தில் குடிசையின் வாயில்பாதியாகவே இருந்தது. உள்ளிருந்து ஒரு விசும்பல் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தக் குரல் சற்று பழக்கப்பட்டகுரலாகவே இருந்தது அவனுக்கு.

நின்றிருந்தவன் தன் தலையைத் தாழ்த்தி உள் நுழைந்தான். உள் சென்றவன் அந்த குடிசையின்னுள் எட்டிப்பார்க்க. பெண்ணொருத்தி பாவாடை சட்டையை கட்டியணைத்தவாறு அழுது கொண்டிருந்தாள்.

இதனைப் பார்த்த அவன் அவளின் கவனத்தை கலைக்காமல் மெல்ல வெளியில் வந்து எதிர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டான்.

சற்று நேரத்தில் அந்தக் குடிசையின் முன்பு ஒவ்வொரு ஆட்களாய் வந்து சேர ஆரம்பித்தனர். பரட்டை தலையுடன்தள்ளாடிக்கொண்டு வந்த மூதாட்டி அந்தக் குடிசையில் நுழைந்தாள்.
குடிசையினுள் அந்த நடுத்தரத வயதுடைய பெண்பாவாடை சட்டையை கட்டியணைத்தவாறு அழுது கொண்டிருந்ததை பார்த்து, “ஏண்டி சாவித்திரி இப்படியே கிடந்தா எப்படிபோயி அடுத்து ஆக வேண்டிய வேலையை பாருடீ என்று கூறவே விசும்பல் சத்தம் ஒப்பாரியாய் மாறியது.

”ஐயோ அம்மா நான் பெத்த மகராசி என்ன விட்டு போயிட்டயே இப்படியா ஆகனும் இந்த வயசுலயே விட்டுவிட்டுபோயிட்டயேடி பாவி. நான் பெத்த மகளே உனக்கு நான் ஒரு கொறையும் வெக்கலயேடீ” என்று கதறியவாறே உள்ளிருந்தவள் வெளியில் ஓடி வந்து சுருண்டு விழுந்தாள். அங்கிருந்த அனைவரும் ஒன்று கூடினர்.

அங்கு கூடி இருந்த அனைவரின் முகமும் வெதும்பி, அனைத்துக் கண்களும் நிரம்பியே காணப்பட்டது. முன் வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந்தவன் கூட்டத்தில் வந்து கலந்து நின்று அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் பல்லில் பச்சைத் தண்ணி பட்டு நான்கு நாள் ஆகியிருக்கும். கண்கள் வற்றி காதுகள் அடைத்து, குரல் உள்வாங்கிச் சுருங்கிய வயிற்றுடன் நீட்டிப் படுக்க முடியாமல் சுருங்கிக் கிடந்தாள். இதனைப் பார்த்த அவன் மனம் தாளாமல் உள்ளுக்குள் புழுங்கத் துவங்கி திணறி நின்றான். அந்தக் கூட்டத்தில் இருந்து நகர்ந்து குடிசையின் திண்ணையில் சென்று அமர்ந்தவன் எதுவும் புரியாதவனாகவே இருந்தான்.

அந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த நபரைப் பார்த்தான். சுருட்டை முடி, அளவுக்கு அதிகமாக வளர்ந்திருந்த தாடி, அழுக்கேறிய சட்டை.. இப்படி அமர்ந்திருந்த அந்த நபரிடம் ”என்னங்க எப்படிங்க ஆச்சு” என்று வினவினான்.

அவனோ ஒன்று பேசாமல் தான் புகைத்துக்கொண்டிருந்த பீடியினை வேகமாகப் புகைத்தான். செய்வதறியாது அவனையே வெறித்துக் கொண்டிடுருந்தான். சிறிது நேரம் கழித்து பேசத் துவங்கினான்.

“நான் என்னத்தங்க சொல்வேன் இப்படியாங்க நடக்கவேண்டும் நாங்க என்னங்க தப்பு செஞ்சோம். கீழ் சாதியில் பொறந்ததா எங்க தப்பு. இப்படி பண்ணியிக்கானுவளே. சாமினு ஒண்ணு இருக்கா.. அப்படி இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா. அய்யோஎன்னால தாங்க முடியலயே. வேணாங்க போதும். நாங்க வாழ்ந்தது எல்லாம் போதும். இதுக்கு மேல நாங்க வாழ ஒண்ணும்இல்லங்க” என்று கதறிக் கொண்டிருந்தவனை மெல்ல அருகில் இருந்த அவன் தேற்றினான் .

சற்று தேறிய போது சுதாரித்துக் கொண்ட கணேசன் ”ஆமா நீங்க யாருங்க எங்க இருந்து வந்திருக்கீங்க” என்று கேட்கவே, அவன் பதில் ஏதும் கூறாமல் தடுமாறினான். இப்படி ஒரு கேள்வி அவன் எதிர் பார்த்த ஒன்று தான். ஆனால் நம்வாழ்க்கையில் நாம் எதிர் பார்த்த கேள்விகளுக்குப் பதில் சொல்வது தான் கடினமான ஒன்றாக இருக்கிறது. அதற்கு அவன் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. அவனும் அப்படித்தான் திணறிக் கொண்டிருந்தான். சற்று தடுமாறியவன் ”எம்பேரு பெருமாள். நான் கீதா அம்மா முன்னாடி குடியிருந்தாங்கல அந்த ஊர். தகவல் கேள்வி பட்டேன் அதான் பாத்துட்டு போலாம்னு வந்திருக்கேன்ங்க” என்று கூறினான்.

“அப்படிங்களா சரிங்க என்று கூறிய கணேசன் “பாத்திங்களா விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நான் பெக்காத புள்ளயா இருந்தாலும் என்னதான் அப்பா அப்பானு வாய் நிறையா கூப்பிடும் அந்தப் புள்ள. அவள பெத்த அப்பனுக்குக் கூட இதுகுடுத்து வெக்கல. அங்க பாருங்க சுவர் பூரா எப்படி கிறுக்கி இருக்கா. அதுல அவ பேருக்கு முன்னாடி என்ன எழுதி இருக்கா பாருங்க என்று கூறியவுடன் சற்று தன் பார்வையைத் திருப்பிய பெருமாளுக்கு கண்ணில் பட்டது “G. GEETHA – 4std B sec”…எனக்கு இங்கிலீசு படிக்கத் தெரியாதுங்க எனக்கு கீதாங்குற போரு மட்டும் தான் இங்கிலீசுல படிக்க தெரியும்ங்க. எல்லாம் என் பொண்ணு சொல்லி குடுத்தது. வீட்டுக் கதவ பாருங்க என் பொண்ணு என்ன எழுதியிருக்கானு.. ”கணேசன் இல்லமாம்”. இப்படிலாம் என் கால சுத்திட்டு இருந்தவள அந்நியாயமா இப்படி பிரிச்சுட்டானுகளே நான் என்னங்க சார் பண்ணுவேன் என்று கதறினான்.

“என்னங்க ஆச்சு நல்லா இருந்த பொண்ணுக்கு திடிர்னு எப்படிங்க இப்படி நடந்தது” என்று தளதளத்த குரலில் பெருமாள் கேட்கவே,

கணேசன் பேசத் துவங்கினார். “ நான் கேரளாவுல கார்ப்பிரேசன்ல குப்ப அள்ளிட்டு இருக்கங்க”. ஒரு நாள் வேலை செஞ்சுட்டு இருந்தன். அப்போ தான் நம்ம தமிழ் நாட்டு வண்டிங்க எல்லாம் சபரி மலைக்கு போறத பார்த்துட்டு இருந்தேன். அப்போ தான் கார்த்திகை மாசம் ஆரம்பிச்சது ஞாபகம் வந்தது.

சரி மாலை போடலாம்னு முடிவு பண்ணிட்டு லீவு போட்டுட்டு வீட்டுக்கு வந்தேன். இங்க வந்த அப்புறம் தான் பாப்பாக்கு பத்து வயசு ஆகிடுச்சு. இன்னும் ரெண்டு வருஷத்துல எப்படியும் சடங்காகிடுவா அப்புற ஒரு 40 வருஷத்துக்கு அவளால மலைக்குப் போக முடியாம போயிடுமேனு இந்த முறை பாப்பாவுக்கும் மாலை போட்டு ஒரு முறை மலைக்கு கூட்டிடு போயிடலாம்னு நானும் சாவித்திரியும் சேர்ந்து முடிவு பண்ணினோம்.

முடிவு பண்ண அன்னைக்கே வீடுலாம் சுத்தம் பண்ணிட்டு நான் சந்தைக்கு போயி மாலை, புது போர்வை மத்த ஜாமான்லாவாங்கிட்டு வந்தேன்.

அடுத்த நாள் காலைல பாப்பாவும் நானும் கோவிலுக்கு போய் மாலை போட்டுட்டு வீட்டுக்கு வந்து பாப்பாவ வீட்டிலவிட்டுட்டு நான் லீவுமுடிஞ்சுடுச்சுனு கேரளா போனேங்க. நான் கேரளா போயி அங்க வேலையா இருந்தப்போ ராத்திரி ஒரு எட்டு மணி இருக்கும் போன் வந்தது.. சாவித்திரி தான் பண்ணா.

போன எடுத்த உடனே அவ குரல்ல ஒரு பதட்டம், பரபரப்பு.. சொல்ல வந்த விசயம் முதல்ல எனக்குப் புரியவே இல்ல.

நான் கோவப்பட்டு கத்த ஆரம்பிச்சுட்டேன். என்னாடீ உனக்கு போன் பண்ணா ஒழுங்கா பேசக் கூட தெரியாதா. அப்படி என்ன அவசரம் தெளிவா சொல்லுனு கேட்டேன்ங்க சார். அதுக்கு சாவித்திரி அழுதுக்கிட்டே பாப்பாவ கானோமுங்கனு விம்மி விம்மி அழுதா. நான் ஒடனே லீவ போட்டு வீட்டுக்கு வந்துடேன் சார்.

வீட்டுக்குள்ள நுழைஞ்ச உடனே என்ன ஆச்சுன்னு கேட்டேனுங்க.. ”ரெண்டு நாள் நான் வீட்டுக்கு தூரங்க பாப்பாவ அடுத்த தெருல இருக்க அக்கா வீட்டுல தான் ரெண்டு நாளா தங்க வெச்சி இருந்த பாப்பா இன்னைக்கு சாயங்காலம் ஸ்க்கூல் விட்டுவந்து பைய வீட்ல வெச்சிட்டு அம்மா நான் இன்னைக்கு இங்கயே இருந்துக்கிறேன்மா.. ”பெரியம்மா வீட்டுக்கு போகலம்மானு சொல்லுச்சுங்க” ஆனா இன்னைக்கு ஒரு நாள் தான் பாப்பா நாளைல இருந்து நீ இங்கயே இருந்துக்களாம். அம்மாக்கு உடம்புக்கு சரி இல்லடா தங்கம்னு கதவு பின்னாடி இருந்த வாக்குலயே மறைஞ்சு இருந்து சொன்னேங்க.

”சரினு சொல்லிட்டு போச்சு. அப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சு அவங்க பெரியம்மாவே பாப்பாவ தேடி இங்க வந்துடுச்சி”.

அப்புறம் தான் நான் தேட ஆரம்பிசேன் எங்கயும் கானலங்க. அதான், உங்களுக்கு போன் பன்னேன் அப்படின்னு சாவித்திரி சொன்னாங்க. சரினு அவள முறைச்சுப் பார்த்துட்டு கீதாவை தேட நான் போயிட்டேன். நான் பக்கத்தில் இருந்த வயல்வெளி, கிணறு, கோவில், வழக்கமா கீதா விளையாடும் கோகிலா வீட்டுத் திண்ணை, புளியம்பழம் அடிக்கும் அந்த மில்லுக்கு பக்கம் இருக்கும் புளிய மரம் இப்படியா எல்லா இடங்களிலும் தேடித் தேடி கிடைக்காத பட்சத்தில் அக்கம் பக்கத்தினரை கூட்டிக்கிட்டு டேசனுக்கு ஓரு பெட்டீசன் குட்டுத்தேன். டேசன்ல ரைட்டர் அய்யா “சரி சரி எதும் தகவல் வந்தா சொல்லிஅனுப்புறோம் கிளம்புங்கனு சொன்னாரு. எனக்கு அவர் பேசினத கேட்டு ஆத்திரம் தாங்கல. நான், ”என்னயா இப்படி பொறுப்பில்லாம பேசிட்டு இருக்கீங்க. எம்பாப்பாவ கானோம் சார்”னு சொல்லிட்டு இருக்கும் போதே அழுகை வந்துடுச்சு.. அதுக்கு அவரு.

“ ஏய் சீ.. சீ… கிளம்பு இங்க நின்னுட்டு அழுகக் கூடாது.. கம்ப்ளைண்டு குடுத்திருக்கில்ல. தகவல் தெரிஞ்சா சொல்வோம்கிளம்புனு சொல்லி விரட்ராங்க. நாங்களும் அங்க இருந்து வந்துட்டோம். எங்களுக்கு என்ன செய்யுறதுனு தெரியல்”

மேற்கொண்டு பேசமுடியாத கணேசன் வாயடைத்துப் போனான்.

ஸ்டேஷனில் இருந்து திரும்பிய கணேசன் குழந்தையை தேடத்துவங்கி தேடித் தேடி கலைத்து அந்தத் தெரு நடுவிலிருந்த திண்ணையிலேயே கண் அயர்ந்தான். அடுத்த நாள் காலை விடிந்ததும், விழித்தவன் மெல்ல வீடு நோக்கி நகர்ந்து சென்றான். குழந்தை எங்கும் கிடைக்காததால் மனம் நொந்து வீடு திரும்பி கொண்டிருந்தவனைப் பார்த்த அனைவரும் துக்கம் விசாரிக்கத் துவங்கினர். அது அவனை மேலும் எரிச்சலடைய செய்தது. தன் மகளை நினைத்து நொந்துக்கொண்டே மெல்ல நகர்ந்து கொண்டிருந்தான்.

நினைவில் மீண்டவனாய் கணேசன் தொடர்ந்தான்.

”அப்புறம் காலையில் நான் வீட்ல இருந்தப்போ பக்கத்து தெரு முனியப்பன் மூச்சிறைக்க ஓடி வந்து ”அண்ணே இங்க கொஞ்சம் வந்து பாருங்களேனு” என்னை கூட்டிட்டு போனான்.
”நான் அங்க போனப்போ ஊர் சனம் பூரா அங்க கூடி நின்னு வேடிக்கை பாரத்துட்டு இருந்தாங்க”..

கணேசன் விம்மி அழ ஆரம்பித்தான். கோழி ஒன்று தன் குஞ்சுகளுடன் மேய்ந்து கொண்டிருந்தது.

மக்கள் கூடி இருந்த இடமோ ஒரு வயலின் நடுவில் கிடந்த ஒரு கிணறு. அந்தக் கிணற்றை நெருங்க நெருங்க ஒரு படபடப்பு ஏறிக்கொண்டே போனது கணேசனுக்கு. அவனால் என்ன நடந்திருக்கும் மென்பது சற்று ஊகிக்க முடிந்தது ஆனால் அதனைஅவன் மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. அவனுக்கு கிணற்றை எட்டி பார்க்கும் தைரியம் இல்லாமலே இருந்தது. ஆனால், இவன் ஊர்ஜிதம் செய்ய வேண்டி இருந்ததால் அவனும் பத்தோடு பதினொன்றாக ஊர் மக்களுடன் கலந்து அந்த கிணற்றை எட்டிப்பார்த்தான்.

கணேசனுக்கு இதயத்தை யாரோ பிடித்து அழுத்துவது போல் இருந்தது.

கிணற்றை எட்டி பார்த்த கனேஷனுக்கு காத்திருந்த செய்தியோ அவன் முன்னமே மனதினுள் யோசித்தவைதான் என்றாலும் தன் மகள் கிணற்றினுள் பிணமாக மிதப்பதைக் கண்டு மனம் தாழாமல் கதறி துடித்தான். ஆத்திரமும், கோபமும் அவன் மட்டுமே இந்த இறப்பிற்கு முழுப் பொறுப்பென அலறினான்.

என்ன சுற்றி இருந்த எல்லாரும் என்னை சமாதான செஞ்சாங்க. வெளிக்கி இருக்க வந்த புள்ள கால் இடறி விழுந்திருக்கும் அப்படின்னு சுத்தி இருந்தவங்க பேசிகிட்டாங்க.
அப்புறம் நாலு போர் கிணத்துக்குள்ள இறங்கி பாப்பாவ மேல தூங்கிட்டு வந்தாங்க.

பாப்பாவ மேல கொண்டு வரும்போது பார்த்தா மேல் சட்டையில்லாம கிடந்துச்சு. பக்கத்துல போயி பார்த்தா…

பாப்பா உடம்பெல்லாம் நகத்தால கீறின காயம் இருந்துச்சு சார். அது மட்டும் இல்லாம பாப்பா மாரெல்லாம் கடிச்சு வெச்சதழும்பு இருக்கு. கீழ் உதடு கடிச்சதுல உதட்டுலயும் காயம்.
பெட்டீசன் குடுத்து இருந்ததால் போலீசுகாரங்க எல்லாம் வந்துடாங்க. வந்த அப்புறம் எங்க யாரயும் பக்கத்துலயே விடல .

தண்ணியிலயே இரண்டு நாள் கிடந்ததால பாப்பா முகமெல்லாம் மாறி போச்சு. என்னால தொட்டு அழக்கூட முடியலங்கசார். போலீஸ்காரங்க பாப்பாவ பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்ட்டாங்க. பாப்பா சாவுக்கு இடறி விழுந்தது காரணம்இல்லனு ஊர் மக்கள் எல்லாம் ஒண்ணு கூடி பெரிய ஆஸ்பத்திரிக்கு போனோம்.

ஆஸ்பத்திரியில போஸ்ட்மாடம் முடிஞ்சு பாப்பா இறப்புக்கு காரணம் கற்பழிச்சி கழுத்த நெறிச்சி கொன்னு இருக்காங்கனுசொன்னாங்க சார். அப்படியே நான் சுக்கு நூறா உடைஞ்சு போயிட்டேன் சார்.

இந்த பச்சபுள்ளைக்கு போயி யார் இத பண்ணிருப்பாங்கனு. இந்த தகவல சாவித்திரிகிட்ட சொன்னா வயசுக்கு வந்தாதான் பாதுகாப்பா பார்த்துக்கனும்னு நினைச்சேன். இப்படிலா கூட நடக்குமாங்க இப்படிலா ஒண்ணு இருக்குனு தெரியாதேங்க. தெரிஞ்சு இருந்தா நான் பாப்பாவ தனியாவே விட்டு இருக்க மாட்டேனேனு அழுவுறா சார்.

இதுக்கு நடுவுல நாங்கள்லாம் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது இங்க மேல தெருக்காரன் ஒருத்தன் வந்து பாப்பாவ பத்தி சம்பந்தமேயில்லாம விசாரிச்சி இருக்கான். அந்த தேவிடியா மவன என்னனு விசாரிக்க பிடிக்கப் பாத்திருக்காங்க. ஆனா, அவன் தப்பிச்சு ஓடிட்டான்.

அவன் கூட சேர்ந்த இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க சார். இங்க தான் தெரு முனையில் தான் எப்பவும் குடிச்சுபுட்டு கிடப்பானுங்க. அவனுங்க மேல தான் சந்தேகம்னு போலீஸ்ல சொன்னோம். வந்து புடிச்சிட்டு போனாங்க. ஆனா, இப்போவர ஒரு தகவலும் இல்லங்க.

கடைசியா பாப்பா அந்த வயல்கிட்ட தான் ஜாதி மல்லி செடில பூ பறிச்சிட்டு இருந்திருக்கா. மூணாவது வீட்டுக் கிழவி சொல்லுச்சு. அதுக்கப்புறம் தான் பாப்பாவ கானோம் இவனுங்க தான் அங்க போதையை போட்டுட்டு இருந்திருக்கானுவ. ஆனா நாம கீழானவங்க. அவங்களாம் மேலானவங்கனு தான் இப்படிலா பண்றாங்க சார். அது தான் சார் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து போய் இத கேட்கலாம், போராட்டம் பண்ணலாம்னு போறோம் என்று கூறிக் கொண்டே இருந்த போது கீழே விழுந்து கிடந்த சாவித்திரி தன் சுயநினைவிற்கு வந்து கண்விழித்தாள்.

சாவித்திரி தான் விழுந்த இடத்திலிருந்து எழுந்து தன் வீட்டினுள் நுழைய முற்படும் போது பெருமாளை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில், கூட்டத்தினுள் இருந்த யாரோ ஒருவர் அவளை இடித்து விடவே கவனம் களைந்து தன்நிலையறிந்து வீட்டினுள் சென்றாள். அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவரின் குரல் மட்டும் மிக ரகசியமாய் அருகிலிருந்தவளிடம் ஒலித்தது. ”அங்க பாருடீ கீதாவோட அப்பனும் வந்திருக்கான்” என்றது. உள் நுழைந்த சாவித்திரி தன் கலைந்த கூந்தலைச் சரி செய்து அந்தக் கூட்டத்தின் முன் சென்று அனைவரையும் வழி நடத்தி சென்றாள். அங்கு கூடி இருந்த அனைவரும் சாவித்திரியின் பின் செல்ல பெருமாள் மட்டும் அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தான்,

Pin It