காடு.... 

இது பெருங்காடு...... 
 
காட்டுக்குள் எந்தப் பகுதியில் இப்போது இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.......எல்லாப் பக்கமும் ஒரு வழி இருப்பது போல தோன்றுகிறது......"தோன்றுதல் எல்லாம் தோற்றங்களா......? தோற்ற மாயங்களா...."- காரணமே இல்லாமல் பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.....
 
காட்டுப் பூச்சிகளின் இரைச்சல், ராகமாகவும் அதேநேரம் பயமுறுத்துவதாவும் கேட்கிறது.... குயிலின் குரலில் இத்தனை ஆக்ரோசத்தை இப்போதுதான் கேட்கிறேன்.... பறவைகளின் சிறகடிப்பை விட மௌனங்களே என்னை அன்னியப் படுத்துகின்றன.... நிழலே விழாத வழித்தடத்தை என் பாதம் சமைத்துக் கொண்டே தேடுகிறது........... இந்தக் காடு....தவங்களின் தவமாக இருக்கிறது. 
 
இதே காட்டுக்குள் நாங்கள் அடிக்கடி வருகிறோம்தான்..... நாங்கள்.... என்றால்................ நான், விஜி, மற்றும்  சரோ....
 
எங்களுக்கு மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு அடர்ந்த காட்டுக்குள் சென்று இரண்டு நாட்கள் இருந்து விட்டு வந்தால்தான் ஏதோ வாழ்வதாகவே படும்...அப்படித்தான் இன்றும் வந்தோம்... 
 
ஏதோ ஒரு பிரிவில் நான் வழி மாறி வந்து விட்டேன்... திரும்பிப் பார்த்தால் அவர்களைக் காணவில்லை.... நான் திரும்பவும் வந்த வழியாக ஓடி தேடினேன்....... காணவில்லை... அவர்கள் ஒளிந்து கொண்டு விளையாடுபவர்கள் அல்ல.. அப்படி விளையாடுவது எங்களுக்கு பிடிக்காது.... இன்னொரு விஷயம்.. நாங்கள் காட்டுக்குள் வரும் போதெல்லாம் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அலைபேசியை எடுத்துக் கொள்ளாமல்தான் வருவோம்.... இன்று கூட... வேறு வேறு ஊருக்கு போவதாக பொய் சொல்லி விட்டு காட்டுக்குள் வந்திருக்கிறோம் .... 3 போத்தல் ரம் பேக்கில் இருக்கிறது..........எங்களுக்கு காட்டுக்குள் கிடைக்கும், காட்டுக் கோழி, முயல், வாத்து, பெருக்கான், ஆறு ஓடினால் மீன் என்று காட்டு வகையறாக்களைப் பிடித்து சுட்டு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்.... நாங்கள் காட்டுக்குள் இருப்பது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்வோம்....... "காட்டிலாதிகாரிகளிடம் என்று மாட்டிக் கொள்ளப் போகிறோமோ"- என்று ஆரம்பத்தில் பயப்படுவோம்.. பின் குடிக்க குடிக்க.... காட்டுக்குள் நடக்க நடக்க.. ஆதிவாசிகளைப் போல உணரப்படுவோம்...... உயிர்த்தெழுவோம்.. கொண்டாடுவோம்......இது எங்கள் காடு...... எங்கள் வானம்.... எங்கள்...மரங்கள்.... எங்கள்... தனிமை....எங்கள்...வாழ்வு....
 
இந்த வாழ்வு எதற்கு?......கொண்டாடத்தானே......... பணம் சேர்க்கவா....!................. பைத்தியகாரர்கள்... நல்ல காற்றை சுவாசிக்க கூட முடியாமல், ஒரு முட்டாள் பெட்டிக்கு முன் அமர்ந்து தட்டிக் கொண்டேயிருக்க எப்படி முடிகிறது.......!?..... பணம் வேண்டும்தான்..... ஆனால் பணம் மட்டும்தான் வேண்டும் என்பவன் பேசாமல் தூக்கு மாட்டி செத்துப் போகலாம்...... வாரம் முழுக்க வேலை செய்து விட்டு, ஞாயிறுகளில் வீட்டில் டிவி பெட்டி முன் உட்காரும் முட்டாள் மக்களை நாங்கள் மதிப்பதில்லை...... நாங்கள் இயற்கையின் பிள்ளைகள்.... இயற்கையின் உள்ளங்கைக்குள் நாங்கள் எங்களைப் பத்திரமாக உணர்கிறோம்.. காட்டு மிருகங்கள் காட்டுக்குள் இருக்கத்தான் செய்யும்... எத்தனை யானைகளை நாங்கள் கடந்து போயிருக்கிறோம்........ அவைகள்.... தங்கள் வேலைகளில் கவனமாக இருக்கும், அவைகளை தொந்தரவு செய்யாத வரை.....  நாங்கள் பிளாஸ்டிக் பொருட்களை காட்டுக்குள் எடுத்து செல்வதில்லை... எங்களின் குப்பைகளை... நாங்கள் மீண்டும் எங்கள் பேக்குகளில் போட்டு கொண்டு போய் விடுவோம்........
 
"இன்றும் கூட.... காடுகளின் பிள்ளைகளாகத்தான் நாங்கள் உள்ளே நுழைந்தோம்.. எங்கே எந்த வழியில் பிரிந்தோம் என்று தெரியவில்லை... உரக்க கத்தி அழைப்பது சரியான யோசனை இல்லை... அது ஆங்காங்கே இருக்கும் மிருங்களின் காதுகளை உரசிப் பார்க்கும் வேலை...."......நான் ஓடுகிறேன்....நான் ஓடிக் கொண்டே இருக்கிறேன்..... நேரம் ஆக ஆக என்னை யாரோ துரத்துவது போல தோன்றுகிறது... அல்லது நான் யாரையோ துரத்துவதாகப் படுகிறது... அமைதிக்குள் அரக்க பரக்க மூச்சு வாங்கும் எனது மூச்சு சத்தமே என்னை நிரப்பி கடினமாக்குகிறது.... நின்றேன்...நிற்கிறேன்....நிற்பது போல நிற்கும் யோசனையில் நிஜமாகவே நிற்கிறேன்.... 
 
இங்கு அமர வேண்டும் போல தோன்றுகிறது.... அமர்ந்தேன்.... இத்தனை அகலமான மரத்தை இப்போதுதான் பார்க்கிறேன்... மேலே பார்க்க பார்க்க என் கழுத்து பின்னோக்கி வளையத் துவங்கியது.. அது விர்ரென ரத்தத்தை தலைக்கு கொண்டு சென்று கண்ணை ஒரு கணம் இருட்டாகி விட்டு சுற்றியது.. நான் நிமிர்ந்து கொண்டு பின் குனிந்து அமர்ந்தேன்.... ஆவென ஆகாயம் ஆங்காங்கே வாய் பிளந்து கிடந்தது..... ஒரு குரங்கு என்னையே பார்ப்பது போல அருகே வந்து கொண்டிருந்தது, குரங்கை நாம் பார்ப்பது போல.......... 
 
நான் அடிக்கடி வரும் காடுதான்... இன்று என்னை மிரட்டுகிறது... என் தைரியம் எங்கே போனது என்று என்னைப் பார்த்து கேட்கிறது...மேப் எல்லாம் விஜியிடம் தானே இருக்கிறது....என்ன செய்வது....????? செய்யத் தூண்டும் மூளையின் மடிப்பில்.. காடு சறுக்கிக் கொண்டே எழும் புல்வெளிகளை நிரப்புகிறது...
 
நேரம் ஓட ஓட.... கால்கள் தளரத் தொடங்கின.... பேசாமல் வந்த வழியே வெளியே வந்து விடலாம் என்றும் முயற்சிக்கிறேன்.. ஆனாலும் முடியவில்லை... நான் வெகு தூரம் வழி தவறி வந்து விட்டேன் என்று மட்டும் உணர முடிகிறது.. 
 
விஜியும் சரோவும் வேறு பக்கம்  என்னை தேடிக் கொண்டு இருப்பார்கள்....மௌனம் மிகப் பெரிய பிரளயத்தை பசுமையாக்கி சிதறி விட்டிருப்பது போல நினைத்துக் கொண்டேன்.. ஒரு மாற்று வெளிக்குள் மாட்டிக் கொண்ட வேற்றுக் கிரகவாசியைப் போல உணரப் பட்டேன்.. உணர....உணர, நானே எனக்கு எடை கூடிப் போனேன்... போக, போக உயிர் தேடும் சலசலப்பில் உள்ளுக்குள் கொப்பளிக்கும் வாசலின் கதவுகள் படார்..... படார் என அடித்துக் கொள்ளுவது போல ஒரு வகை குமட்டல் எனை சுற்றிலும் நாக்கை நீட்டி நீட்டி வரவேற்பதாக இருந்தது...மரங்களினூடே புகுந்து புகுந்து ஓடுகிறேன்.. ஓட ஓட.. மரங்கள் தீர்ந்தபாடில்லை.... பச்சை வாசம் வீசும் காற்றை ஆழமாய் உள்ளிழுத்து விட முடிகிகிறது...... இது தீரா தடத்தின் தரிசனம் போல....... காடுகளின் அரசன் நானே என்று ஒரு மிதப்புக்குள் நான் இலையாகி, மலையாகிப் போன தருணத்தில் பெரு மழை திடும்மென வரத் தொடங்கியது.... நான் நனைகிறேன்.... அல்லது நனைக்கிறேன்.... இல்லாத உருவத்தில் இருப்பது போல இயற்கையின் நேசக் கரங்களில் பயந்து கொண்டே சிறு பிள்ளையாகிறேன்.. ஆவதும், ஆகிக் கொண்டேயிருப்பதும் நீண்ட அயர்ச்சி போல கண்கள் அவ்வப்போது சுழல, சுழல...சுழலுவதெல்லாம் சுழற்சியா.. என்று, கேள்வியோடும்... பதிலைக் கொல்லும் காட்டின் கூர்மையோடும்..... எப்பக்கமும்.. வழி மறக்கும் வரம் கொண்டவனாய்... முப்பக்கமும்... பலி தேடும்.. மரம் கொண்டவனாய்..... உச்சியில் கிளை அசைக்கும் சிறு பறவையின் நிழலென....... ஒரு பொந்துக்குள் நின்று கொண்டேன்... மழை வந்து, வந்து போனது.. போய், போய் வந்தது...
 
மரங்கள் பேசிக் கொள்ளத் தொடங்கின.. அல்லது பேசிக் கொள்வது அப்போதுதான் எனக்கு கேட்கத் தொடங்கின... அவைகளின் பேச்சு... மொழி கடந்து மென்மையாக இருந்தது.....ஒரு மேன்மையைப் போல.........வளைந்து வந்த ஒரு கிளை இன்னொரு கிளையின் முகம் தொட்டு கொஞ்சிப் போனதில் நான் மறக்க என்ன இருக்கிறது என்று நினைவுகளற்றவனானேன்... 
 
ஆனாலும் பயம் பயம்...  பயம். பயம். பயம். பயம். பயம். பயம். பயம். பயம். பயம்.............
 
கிரிச்..... கிரிச்...... சத்தங்களில் நான் ஒடிந்து ஒடிந்து விழுவது போல கற்பனைக்குள் பறக்கத் தொடங்கினேன்.. எனது எல்லா தொடக்கமும்.. அங்கே முடிவதாப் பட்ட ஒரு நேரத்தில்தான் அந்த இடம் வேகமாக சுற்றத் தொடங்கியது.. 
 
சுற்றுகிறது....... என் கண் முன்னே இந்த பூமி வேகமாக சுற்றுகிறது.... சாய்ந்த அச்சில் இந்தக் காலங்களின் கூடு பேய் பிடித்த கிராமத்துப் பெண் போல சுழலத் தொடங்கியது.... சுற்ற சுற்ற... நான் என் முதுகை நன்றாக பார்க்க முடிந்தது....... மழை தீவிரமானது... ஒரு துளிக்கும் மறு துளிக்கும்.. சம துளிக்கும் இடையே இருந்த இடைவெளியில் நான் காற்றாகி.. மரமாகி, இலையாகி, துளியாகி, துளிக்கும் துளிக்கும் இடையே புகுந்து கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்......... 
 
எனக்கு தலை சுற்றியது... சற்று தூரத்தில் மழை இல்லை.... அது மாலை நேரமாக இருக்க வேண்டும்... திரும்பிப் பார்த்தேன்....,... எனக்கு பின்னால் மழை இன்னும் வேகமாக பெய்து கொண்டிருந்தது, என்னை நனைத்தும், நனைக்காமலும்................ நான் இன்னும் ஒட்டி மரத்தின் அடியில் நின்று கொண்டு மீண்டும் எட்டிப் பார்த்தேன்.......பார்க்க, பார்க்க காட்சி விரிந்தது......... அங்கே.... இருவர் குழி தோண்டிக் கொண்டிருந்தார்கள்......... 
 
நான் கண்களை கசக்கி நன்றாக பார்த்தேன்... "அட...................அது விஜியும் சரோவும்தான்......' நான் கத்தினேன்... 
 
"டேய்.... சரோ... விஜி.... டேய்.. மட்.......சான்..... நான் இங்க இருக்கேண்டா...... அங்க என்ன பண்றீங்க.. "-என்றபடியே ..... நான் பதறி..., அவர்களை கண்டு கொண்ட சந்தோசத்தில்....அவர்களை நோக்கி கத்திக் கொண்டே ஓடத் தொடங்கினேன்........ அப்போதுதான் ஒன்று புரிந்தது.... நான் ஓடிக் கொண்டே இருந்தேனே தவிர....அவர்களை போய் சேர முடியவில்லை.. அவர்களும் நான் ஒருவன் இப்படிக் கத்திக் கொண்டு தங்களை நோக்கி ஓடி வருவதை கண்டு கொண்டது போல தெரியவில்லை.. 
 
எனக்கு பயம் அதிகரித்தது.......சட்டென்று நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன்....... இன்னும் பூமி சிதறிக் கொண்டுதான் இருந்தது..... ஆனாலும் அவர்கள் இருவரும் நிற்பதும் பேசுவதும்... மாற்றி மாற்றி குழி தோண்டுவதும்,  ஊமைப் படம் பார்ப்பது போல நன்றாக பார்க்க முடிந்தது..... ஏதோ கனவுக்குள் இருப்பதாக உணந்ர்தேன்..... கட்டமைக்கப் பட்ட சுற்றம் முழுக்க என் இஷ்டப்படி  அசைவதாக, ஆழமாய் உணர்ந்தேன்..... ..
 
என்ன நடக்கிறது என்ற உணரல் தாண்டிய புரியாமை எனக்குள் முளைந்து, முளைந்து தொலைந்து கொண்டிருந்தது......... நான் ஒரு ஓரமாக நின்று அவர்களை கவனிக்க ஆரம்பித்தேன்....... அப்போது இன்னொன்றையும் கவனிக்க முடிந்தது...... அவர்கள் தோண்டிக் கொண்டிருக்கும் குழிக்கு பக்கத்தில் ஒரு உருவம் கிடந்தது..... நான் உற்று நோக்கினேன்....நோக்க நோக்க.... பலியாட்டம்.... எனதெங்கும்......
 
எனக்கு இதயமே வெடித்து விடும் போல ஆனது.. .....'அயோ... கடவுளே.. அங்கே படுத்துக் கிடப்பது நான்தான்....நானேதான்......."- சட்டென நான் என்னை தொட்டுப் பார்த்தேன்.... "அப்போ நான் செத்து போய்ட்டேனா.........?....... இப்போ ஆவியா இருக்கேனா....?...... அதுக்குள்ளயா நான் சாகனும்....!......"-எனக்குள் துக்கம் பீறிட்டது.. அழுகை... மழை போல சிதறியது.... ஆத்மா வலித்த்து....... "அப்போ என் நியந்தா என்ன பண்ணுவா.....?... தனியா கஷ்ட படுவாளே........... எப்டி செத்தேன்.....?....இவுங்க ஏன் இங்கயே புதைக்க ட்ரை பண்றாங்க........ ஒண்ணுமே புரியலையே......" 
 
தலையை பிடித்துக் கொண்டே விஜி, என் உடலை ஓங்கி ஓங்கி மிதிப்பது தெரிந்தது...... தெரியாத ஓவியத்தின் பின் பக்கம் போல... முட்டி முட்டி ரத்த்ம் வருவதை உணராத காட்டுப் புறா போல... நான் செய்வதறியாது சிலையாகி நின்றபோது....குடித்துக் கொண்டே, என் உடலில் நெஞ்சுப் பகுதியில் ஒற்றைக் காலில் நின்று சிவபெருமான் போல பரதம் ஆடினான் சரோ........ எனக்கு இங்கே வலித்தது.........
 
"ஏண்டா என்னை கொன்னீங்க.... பாவிங்களா.. உங்கள நம்பித்தாண்டா காட்டுக்குள் வந்தேன்... என்ன காரணமா இருக்கும்.. ஒரு காரணமும் பிடிபடலையே....அயோ.... சாத்தான்களா.... மேல ஏறி நிக்காதீங்கடா....."- என்று கத்தினேன்...... ஆனால் அவர்களுக்கு கேட்பதாக தெரியவில்லை...கழுத்தில் காலை வைத்து அழுத்திக் கொண்டே... முயல் கறியை கடித்து கடித்து சாப்பிட தொடங்கினான் சரோ.. அதே நேரத்தில் விஜி குழியைத் தோண்டிக் கொண்டிருந்தான்..... தோண்ட தோண்ட.... கிடைத்துக் கொண்டே இருப்பது வெறும் மண் என்று சாவுக்கு முன்னால் தோன்றும்... செத்த பின், மண்ணல்ல பொன் என்று சொல்லத் தோன்றும்... தூண்டும்... மீண்டும்.... யோசிக்க மீண்ட மனம் மாண்டது போல துவண்டது.... குழி பெரிதானது.. 
 
பக்கத்திலேயே எரிந்து கொண்டிருந்த தீயில் காட்டுக் கோழியை சுட்டுக் கொண்டும்...குடித்துக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்தார்கள்.... உயிர் தோழர்கள்....... குழி வெட்டும் வேலையும் ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தது..........
 
குழி பெரிதாக பெரிதாக என்னால் இங்கு நிற்க முடியவில்லை.. அத்தனை அழுகையை அடக்கவும் முடியவில்லை.... அடக்க அடக்க வெடித்து விடும் சத்தத்தில் பெரும் மௌனம் தீராது என்பதாக ஒரு கோடு, ஒரு புள்ளி என்று என் கண்ணீர் என் கன்னம் நிரப்பியது....... நிரப்ப நிரப்ப, கன்னப் பரப்பு பிசு பிசுக்கத் தொடங்கியது....போத்தல் முடியவும்.. சுட்டுக் கொண்டிருந்த... கோழியை எடுக்கவும்... என்னை குழிக்குள் தள்ளி விட்டு மண்ணை சரிக்கவும்.... சரியாக இருந்தது..... நேரம் ஒன்று கூடும் மிக அற்புதமான தருணமாக என்னில் எங்கும் மின்சாரம் பாய்ந்தது போல... சுருக் சுருக் என்று கொல்லப் பட்டேன்...... கொல்லுதல் என்பது சாவது மட்டும் தானா.... செத்தும் தானே.....
 
அப்போது விஜி, அவர்களின் பேக்கில் இருந்து இன்னொரு மது போத்தலை வெளியே எடுக்க அதை சுற்றி இருந்த நியூஸ் பேப்பர் கீழே சரிந்து காற்றில் பறந்து, என்னை நோக்கி வந்து "இந்தா பிடித்துக் கொள்"- என்று என் கைகளில் விழுந்தது......... என்ன செய்கிறார்கள் என்பதை  பார்க்கும் அவசரத்தில் பேப்பரை தூர வீச முயற்சிக்கையில்தான் அது என் கண்ணில் விழுந்தது........ ஆம்.... நன்றாக உற்றுப் பார்த்தேன்.....  அந்த நியூஸ் பேப்பரின் தேதி 10.05.2019 என்று போட்டிருந்தது..... தூக்கி வாரிப் போட்டது எனக்கு.... எனக்குள் கொப்பளித்த நாட்களின் எண்ணிக்கை நிறைந்து வழிந்து வியர்வையாகிக் கொண்டிருந்தது....மனம் பர பரத்து கிடக்க மூளை நன்றாக யோசித்தது........ 
 
"அயோ.... இப்போ இன்னைக்கு தேதி 10.05.2017 தான....?!!!!!!!"- அப்டினா....?
 
நான் மறுபடியும் அவர்களைப் பார்த்தேன்..... அவர்கள் இன்னும் அங்கு தான் நின்று குடித்துக் கொண்டிருந்தார்கள்....இப்போது என்னை புதைத்த குழி மண் மேடாக மாறி இருந்தது........ எனக்கு எல்லாம் புரிந்தது போல இருந்தது..... "அப்படி என்றால்.... அது எதிர்காலமா.... அப்போ நான் சாகல..."- என்று என்னை நானே தொட்டுப் பார்த்தேன்..... சில்லிட்ட உடம்பில் கொஞ்சம் சூடு இருப்பதாக உணர்ந்தேன்..... என்ன நடக்கிறது...... கிறு கிறுத்த தலையை நேராக்க முயற்சிக்கையில்............
 
"மட்சான்.. எங்கடா போய் தொலைஞ்ச...... எங்கெல்லாம் தேடறது....." சத்தம் வந்த திசையில் திரும்பினேன்... எதிரே சரோவும் விஜியும்... வேர்த்து விறு விறுக்க சிரித்துக் கொண்டும்.. முறைத்துக் கொண்டும் நின்றார்கள்.......
 
"வெங்காயம்.... எங்க போன.... நாம என்ன மாமி யார் வீட்டுக்கா வந்துருக்கோம்... லூசு... காடுடா.. அதும் பாதுகாப்பில்லாம.... மொக்கை... சரி வா......வா........."- என்றபடியே அவர்கள் சற்று முன்னால் நடக்க நான் தயங்கியபடியே, பயந்து கொண்டே  அவர்களின் பின்னால் நடந்தேன்...கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வீணானதில் அவர்கள் புலம்பிக் கொண்டே முன்னே செல்ல.. நான் பின்னால் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே  அவரகளின் பின்னால் சென்றேன்.... 
 
மனதுக்குள் ஆயிரமும் கேள்விகள்...... 
 
"ஏன் என்னைக் கொல்ல வேண்டும்.... நான், இன்றுவரை நல்ல நண்பன்தானே.... ஒரு வேலை.... இனிமேல் சண்டை ஏதும் வருமா....?"
 
பின்னால் திரும்பிய விஜி.. "என்னடா யோசனை.. மறுபடியும் வழி மாறி போய்டாத... பசிக்குது.. இனி தேட முடியாது... பின்னாலையே வா...."- என்று பைக்குள் பிடித்து வைத்திருந்த முயலைக் காட்டினான்.. 
 
"எப்டி.. உன்ன தேடிட்டே இதையும் பிடிச்சிட்டோம்.... இப்பவே எச்சில் ஊருதுடா....."-என்ற சரோ... "விஜி சீக்கிரம் ஒரு இடத்தை புடிடா..... இனியும் ஆரம்பிக்கலனா அது சாமி குத்தம்"- என்று சொல்லி சிரித்தான்...... அவன் கண்கள் பையில் இருந்த மது போத்தலை பார்த்து சிரித்தது.....
 
சட்டென முடிவெடுத்தவனாய்... கையில் கிடைத்த மரக் கட்டையால் விஜியை சராமாரியாக தாக்க ஆரம்பித்தேன்..... ஆரம்பித்ததும் தெரியவில்லை..... முடித்ததும் தெரியவில்லை.. அத்தனை ஆக்ரோசத்தில் எங்கிருந்து வந்ததோ தெம்பு.......
 
என்ன நடக்கிறது என்று யோசிக்கும் முன்னமே ரத்த வெள்ளத்தில் விஜி தரையில் சரிந்தான்..... .... தலை சுற்றிய சரோ....."டேய்.. என்னடா ஆச்சு உனக்கு.. ஏன் இப்டி பண்ணின..."-என்று கத்திக் கொண்டே என்னை அடிக்க அருகே வர.. அதற்குள் மீண்டும் சுதாரித்துக் கொண்ட  நான், முன்பை விட இன்னும் பலமாக  சரோவை  அடி வெளுக்கத் தொடங்கினேன்.. 
 
மழையும் காற்றும் காட்டுக்குள் ஒரு வகையாக அமானுஷ்ய சூழலை தூவிக் கொண்டேயிருக்க எங்கிருந்தோ  வந்த ஒரு வகை இருள் எங்களை சூழ்ந்து கொள்ள, மாறி மாறி அடித்தேன்....அடித்து அடித்து அடித்தேன்..... மண்டை உடைந்து தொங்கியது..... ரத்தம் பீரிட்டு நிறைந்தது....... பையில் இருந்து மது போத்தலை எடுத்த நான், குடித்துக் கொண்டே....."ஏன்டா .. ரெண்டு வருஷம் கழிச்சு என்ன கொல்லப் போறீங்க......?!!!!....ஏன்.... நான் என்ன பண்ணினேன்.... உண்மையாத்தானே இருக்கேன்....ரெண்டு வருஷம் கழிச்சு என்னை கொல்ல நீங்க உயிரோடு இருக்கணும்ல..... இப்பவே நீங்க செத்துட்டா அப்புறம் எப்டீடா ரெண்டு வருஷம் கழிச்சு என்ன கொல்ல முடியும்.. ?....அதான்.... நான் முந்திகிட்டேன்.......சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்...கேள்விப்பட்டது இல்லையா....வேற வழி இல்ல நண்பர்களே.... நீங்க என்னை எப்டியும் கொல்லத்தான் போறீங்க... அதுக்கு நான் தயாரா இல்ல.. நான் வாழனும்...." என்று இன்னும் வேக வேகமாய் அடித்தேன்...... அவர்கள் பிணமாகும் வரை அடித்தேன்...... பிணமான பிறகும் அடித்தேன்....ஆசுவாசமற்ற இடைவெளியற்ற மன வெளியில் இன்னும் இன்னும் நான் அடித்துக் கொண்டே இருந்தேன்.. கைகள் மட்டும் குழி தோண்டத் தொடங்கியிருந்தது.......... காற்று வேகமெடுத்தது.. பசுமை, ரத்தமாய் தெரிந்தது ..... பறவைகளும்.. குரங்குகளும்.. மந்திகளும்.. பல்லை பல்லைக் காட்டிக் கொண்டும் கத்திக் கொண்டும்.... அவர்களை சுற்றி கும்மி அடிப்பது போல நகர்ந்து கொண்டே இருந்தன...
 
ஒரு காட்டின் அதிபதியாக அவர்களின் மரணத்தைக் கொண்டாடினேன்... ஆதி மனிதனும் தன் உயிரைப் பாதுகாக்க ஆயுதம் தூக்கி இருப்பான்.... தன் உயிர் போகத்தான் மற்றவன் உயிர்... விதி வெல்லும் விதியின் விதி கூட விதி தான்....புது புது அர்த்தங்களை காலம் என்னில் விதைத்துக் கொண்டிருந்தது..... காலங்களின் கையில் நான் சுழலுவதும் பின் சுழல வைப்பதும் நேரங்களை கடந்து தூறிக் கொண்டிருக்கும் மழையின் பார்வை கொண்ட, நானே எனக்கு சமாதானம் செய்து கொண்டேன்.... கொண்ட சமாதானம் நிறமற்ற பிரழ்வுகளின் ஏக்க துக்கமென... இடைவெளியற்ற பெரு மூச்சுக்குள் கணங்களை வீழ்த்திக் கொண்டே இருந்தேன்..... 
 
இந்தக் காட்சியை 2015ல் நின்று நடு நடுங்கி பார்த்துக் கொண்டிருந்த சரோவுக்கும் விஜிக்கும்.... பின்னால்... இருந்து சத்தம் வந்தது....
 
"எங்கடா போனீங்க... எங்கெல்லாம் தேடறது"- என்று கேட்டது... நானே தான்.....
 
திக் திக்......காடு கொள்ளாத காடு..... விரிந்தும்..... புரிந்தும்.....
 
- கவிஜி
Pin It