வைக்கப்படுகின்றது
எடுக்கவும்படுகின்றது
பிணங்களாகவோ
வெடிபொருள் பெட்டகங்களாகவோ!

வைக்கப்பட்டது
செயல்பட்டாலும்
செயல்படாவிட்டாலும்!
வைக்கப்பட்டதென்பது
உண்மையிலயே வைக்கப்பட்டிருந்தாலும்
வைக்கப்படாமலயே இருந்தாலும்
வைக்கப்பட்டது
மசூதிகளினருகேவானாலும்
கோயில்களினருகேவானாலும்
தேவாலயங்களினருகேவானாலும்!
வைக்கப்பட்டவனாய் காட்டப்படுபவன்
முகத்தாடை மயிர் வளர்த்திருப்பான்
நூற்ப்பாகையால் தலைமுடி மறைத்திருப்பான்!

வைக்கப்பட்டதனால்
குவிக்கப்படும் பிணங்களின் தோற்றம்
வைத்தவனையே ஒத்திருக்கும்!

வைக்கப்பட்டதனால்
இடிந்து இறக்கும் கட்டிடங்களில்
வைக்கப்பட்டவனின் இல்லமும் சேர்ந்திருக்கும்!

வைக்கப்பட்டவனாய் சொல்லப்படுபவனின்
வாழ்க்கை எழுதப்பட்டுவிடும்
கம்பிகள் பொருத்திய ஓர் இருட்டறைக்கென!

வைக்கப்பட்டவனாய் சொல்லப்படுபவனின்
வாரிசுகள் வெளிச் சிறையில் தள்ளப்படுவர்
வைக்க வைத்தும் விடும் சமூகம் அவன் வாரிசை!

செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றப்படும்
அதில் மூவர்ணம் இருக்காது
இளஞ்சிவப்புத் துணி மட்டும் பறக்கும்!

காக்கி உடையும் மெல்ல மெல்ல
சாயம் மாறி முழுமையடைந்திருக்கும் காவியாய்
வைக்கப்படுதலென்பது அந்நாள் வரை ஓயாது!

- ஷஹான் நூர், கீரனூர்

Pin It