மனதில் வஞ்சத்தையும், குரோதத்தையும், கீழ்த்தரமான எண்ணங்களையும் தவிர வேறு எதையுமே தான் வாழ்வில் அறிந்திராத, மனித விழுமியங்கள் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் சங்கி கும்பல் தன்னுடைய விச நாக்குகளால் இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக அவதூறு பரப்புரையை செய்வதன் மூலம், இன்று நாட்டில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையைப் பயன்படுத்தி பெரும் மதக் கலவரத்தை தூண்டிவிட துடித்துக் கொண்டு இருக்கின்றது.
"நாட்டில் நடக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாமிய சமூகம்தான் பொறுப்பேற்க வேண்டும். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சிறு குறு நிறுவனங்கள் இழுத்து மூடப்படுதல், காஷ்மீர் பிரச்சினை, வட கிழக்கு மாநிலங்களில் நடைபெறும் தேசிய இனப் போராட்டங்கள் என அனைத்துக்குமே இங்கிருக்கும் முஸ்லிம்கள்தான் காரணம். அவர்கள் பாகிஸ்தானோடு சேர்ந்து கொண்டு இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு எதிராக சதி செய்து பாரத நாடு வல்லரசு ஆக விடமால் தடுக்கின்றார்கள். முஸ்லிம்களின் இந்தக் கூட்டு சதித் திட்டத்தை முறியடிக்கத்தான் மோடி மற்றும் அமித்ஷா-ஜீக்கள் அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இல்லை என்றால் இந்நேரம் அப்படியே அறுத்துத் தள்ளி இருப்பார்கள்." - இப்படித்தான் சங்கிகள் ஓர் எண்ண ஓட்டத்தை இந்திய மக்களிடம் விதைக்க படாதபடு பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
முஸ்லிம்களை முஸ்லிம் அல்லாத சமூகத்தில் இருந்து தனியாகப் பிரித்து அடையாளப்படுத்துவதன் மூலம் அவர்கள் மீது வெறுப்பை விதைத்து, முஸ்லிம்கள் என்றாலே அவர்கள் தீவிரவாதிகள், இயல்பான மனிதர்கள் போல வாழத் தெரியாதவர்கள், மாட்டுக் கறி உண்பவர்கள், மதமாற்றத்தை செய்பவர்கள், திட்டமிட்டு லவ் ஜீகாத் என்ற பெயரில் இந்துப் பெண்களை மதமாற்றி திருமணம் செய்பவர்கள், இந்திய நாட்டிற்கு வந்தேறிகள் அதாவது மீலேச்சர்கள் என்று தொடர்ச்சியாக பரப்புரை செய்து ஏற்கெனவே பல காவித் தீவிரவாதிகளை பார்ப்பனிய சக்திகள் நாட்டில் உருவாக்கி வைத்திருக்கின்றன.
முஸ்லீம்கள் மீதான பார்ப்பனிய சக்திகளின் வெறி என்பது இன்று நேற்றல்ல, அது பல நூறு ஆண்டுகளாக இருக்கின்றது. பார்ப்பனிய சாதியக் கட்டமைப்பை இஸ்லாம் உடைத்து இங்கிருந்த கோடிக்கணக்கான தலித் மக்களுக்கும், சூத்திர சாதி மக்களுக்கும் விடுதலையைக் கொடுத்தது. நேற்று வரை தாழ்த்தப்பட்ட மக்களை ‘டேய்’ என்று விழித்தவனை இன்று ‘பாய்’ என்று அழைக்க வைத்தது. இதுதான் பார்ப்பன சக்திகளை கோபம் கொள்ள வைத்தது. தங்களால் பஞ்சமன் என்றும், பார்ப்பானின் வைப்பாட்டி மகன்(சூத்திரன்) என்றும் விலங்கினும் கீழாக இழிவுபடுத்தப்பட்டு, உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு இஸ்லாம் கொடுத்த விடுதலை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அடிமை நுகத்தடியில் அவமானப்படுத்தப்பட்டு கிடந்த மக்களை ஆசுவாசப்படுத்தியது.
தாங்கள் அடிமைகளாய் நடத்திய மக்களை இஸ்லாம் விடுவித்ததாலேயே தான் சனாதனவாதிகள் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் வெறுத்தொதுக்குகின்றார்கள். இன்றுவரை இந்தியாவில் இருக்கும் பார்ப்பன சக்திகளின் முதன்மையான எதிரியாக இஸ்லாம் இருப்பதற்கு இதுவே காரணம்.
அந்த வரலாற்று வஞ்சத்தை முஸ்லிம்களுக்கு எதிராக பல நூறு கலவரங்களை திட்டமிட்டே தூண்டிவிட்டு ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து இன்று வரை தீர்த்துக் கொண்டு இருக்கின்றது. இப்போதும் ஒரு பெரும் கலவரத்துக்கான உள்ளடி வேலையை செய்து கொண்டு இருக்கின்றது. அது இந்தியாவில் முஸ்லிம்கள் திட்டமிட்டே கொரோனோ ஜிகாத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள் என்று.
கடந்த மார்ச் 8-10, 12-15 ஆகிய தேதிகளில் டெல்லி நிஜாமுதீனில் இரண்டு இஸ்திமாக்கள் நடைபெற்றன. அதில், சவுதி அரேபியா, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1,850 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் தமிழகம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனோ தொற்று உள்ளதா என விமான நிலையத்தில் ஒழுங்காக சோதனை செய்யாததால் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த வெளிநாட்டினர் மூலம் இதில் கலந்து கொண்ட இந்தியர்கள் பலருக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கின்றது.
தங்களுக்கு கொரோனோ தொற்று இருப்பது தெரியாமல் அவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி இருக்கின்றனர். இதில் எள்ளவும் கொரோனோவைத் திட்டமிட்டே பரப்ப வேண்டும் என்ற சதியோ, தீய எண்ணமோ இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டதற்கும், திடீரென லாக்டவுன் அறிவித்து அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியதற்கும் முழு பொறுப்பும் மத்திய அரசையே சாரும். ஆனால் உண்மை இப்படி இருக்க, சங்கி கும்பல் முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைப்பதுபோல் ஒட்டுமொத்த பலியையும் முஸ்லிம்கள் மீது போட்டுள்ளது.
இந்தியாவில் ஜனவரி 31 அன்று முதல் கொரோனோ தொற்று கண்டறியப்பட்டு, மார்ச் 22 அன்று ஒரு நாள் ஊரடங்கு அறிவித்து மோடி மணி அடிக்கச் சொல்லும் வரை அரசு எந்த உருப்படியான நடவடிக்கையுமே எடுக்கவில்லை. மார்ச் 13 அன்று பேசிய சுகாதாரத் துறை இணைச் செயலாளர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேரின் உடல் நிலை சிகிச்சைக்குப் பின் குணம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
மொத்தம் 82 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 ஆயிரம் பேர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் லாவ் அகர்வால் தெரிவித்தார். மேலும், கொரோனா பரவல் மருத்துவ அவசர நிலையாக அறிவிக்கப்படவில்லை என்றும், எனவே மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.
மோடி அரசு மார்ச் 24 அன்று ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கும் முன்னர் இந்தியாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பல நிகழ்ச்சிகள் நடந்தன. குறிப்பாக பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் அமெரிக்க அதிபர் உரையாற்றினார். பிப்ரவரி 22 முதல் 25 வரை கோவா திருவிழா, பிப்ரவரி 13 உலக புனித ஆவி திருவிழா, பிப்ரவரி 21 அன்று ஈசா யோக நடத்திய மகா சிவாராத்திரி போன்றவை நடைபெற்றன. மோடி அரசு ஊரடங்கு அறிவித்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி அன்றுதான் அயோத்தியில் பெரும் மக்கள் கூட்டத்தோடு இராமருக்கு கோவில் கட்டும் பணிகள் தொடங்கின. மார்ச் மாதம் 7ஆம் தேதி அன்று திருமலை திருப்பதியில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் நாடெங்கிலுமிருந்து இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு மார்ச் 24-ல் நடைபெறவிருந்த மற்றொரு இஸ்திமாவை தப்லிக் ஜமாத் ரத்து செய்தது. எல்லாவித போக்குவரத்தும் முடக்கப்பட்டதால்தான் 2000 பேர் வரை நிஜாமுதீனின் மர்காஸிலும், அருகிலுள்ள பங்ளாவாலி மசூதியிலும் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஆனால் காவி போலிச் சாமியார்கள் மீதும், மோடியின் அறிவிப்பை கிஞ்சித்தும் மதிக்காத யோகி மீதும் நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்தியதாக நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்த்லாவி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. முப்படைகளையும் வைத்திருக்கும் இந்திய அரசால் மவுலானா சாத் கந்த்லாவியைப் பிடிக்க முடியாமல் அவரைக் கண்டுபிடிக்க தனிப்படை வேறு அமைக்கப்பட்டு உள்ளதாம்!.
முஸ்லிம்கள் தங்களின் நேர்மையை இந்த நாட்டிற்கு ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டி உள்ளது. தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்பதற்கும், தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பதற்கும், இந்துக்களை நேசிக்கின்றோம் என்பதற்கும், ஏன் தாங்களும் உந்த உலகில் வாழ்வதற்கு உரிமை உள்ள மனித ஜென்மங்கள்தான் என்பதையும் அவர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. இப்போதும் டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் சிலரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், போன்கள் சுட்ச் ஆப் ஆகி உள்ளது எனவும் அவசர கோலத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பொய்யாக்க 24 மணி நேரத்தில் அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருமே தாமாகவே சென்று மருத்துவமனைகளில் ஆஜராகி, தங்களின் நேர்மையை நிரூபித்திருகின்றார்கள்.
மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பாலான நபர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதற்கும், அதைச் சரிவர கண்டறியாமல் மெத்தனமாக இருந்ததற்கும் முழு பொறுப்பையும் மத்திய, மாநில அரசுகள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டுமே ஒழியே எந்த வகையிலும் அப்பாவி இஸ்லாமியர்கள் மீது குற்றம் சாட்டக்கூடாது.
ஆனால் தொடர்ச்சியாக சங்களும், சங்களின் சிந்தனை மட்டத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாத முட்டாள் கூட்டமும் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறு பரப்புரையை மேற்கொண்டு மிக மோசமான இஸ்லாமிய எதிர்ப்பு அலையை உருவாக்க தூபம் போட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சங்கிகளின் தலைவராக உள்ள எல். முருகன் “தமிழக அரசின் இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து தமிழக மக்களின் நலன் கருதி இந்த மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், அவர்தம் குடும்பத்தினர், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து அரசு மருத்துவமனைகளில் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இதை யாரும் அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்றும்,
“மாநில அரசும் மக்கள் நலன் கருதி இவர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், இதில் அரசியல் மதப் பிரச்சினைகளை யாரும் உட்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து இஸ்லாமிய அறிஞர்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என்று நம்புகிறேன்” என்று தனது பங்கிற்கு இஸ்லாமிய மக்களுக்கு நீதி போதனை செய்கின்றார். ஆனால் சமூக வலைதளங்களில் நஞ்சை பரப்பிக் கொண்டிருக்கும் முட்டாள் சங்கிகளை ஒரு வார்த்தைக்குக் கூட கண்டிக்க அவருக்குத் திராணியில்லை.
எல்.முருகன் என்னதான் முக்கினாலும் சங்கிகள் ஒருபோதும் கேட்கப் போவதில்லை. காரணம் வெளி உலகிற்கு அப்படித்தான் முருகன் அருள்பாலிப்பார் என்று சங்கிகளுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவர்கள் பணியை அவர்கள் தொடர்ச்சியாக செய்யத்தான் போகின்றார்கள். கொரோனோ பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் சொல்கின்றன. ஆனால் சங்கிகளின் இந்த அயோக்கியத்தனமான நடவடிக்கை எல்லாம் அந்த லிஸ்டில் வருமா என்று தெரியவில்லை. காவல்துறை இது போன்று சமூக வலைதளங்களில் நச்சுப் பரப்புரையை செய்பவர்களுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. நாம் இறுதியில் எங்குதான் செல்வது? ஹைகோர்ட்டுக்குப் போலாம் என்றால் சங்கிகள் அதையும் ‘ஹைகோர்ட்’ அளவுக்குக்கூட மதிப்பதில்லை. என்னதான் செய்வது?
- செ.கார்கி