நாட்டில் திடீரென்று புல்டோசர்களுக்கு ‘கிராக்கி’ அதிகமாகிவிட்டது. நாடெங்கும் இசுலாமியக் குடியிருப்புகள் அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ளதாக இப்போது கண்டுபிடித்துவிட்டார்கள். அறிவிப்போ, பேச்சுவார்த்தையோ, நிவாரணங்களோ, சட்ட வழிகளோ இல்லாமல் அடைத்துவிட்டு, இசுலாமியர்களின் வீடுகளை இடிக்கக் கிளம்பிவிட்டார்கள் சங்கிகளின் விசுவாசிகள்!
எப்படித் தொடங்கியது இந்த அரசியல்? கடந்த மார்ச் மாதம் “கஷ்மீர் ஃபைல்ஸ்” என்ற ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. காசுமீரத்தில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்ட நிகழ்வுகளைச் சொன்ன அந்தப் படத்தைப் புகழ்ந்து, உண்மை பல தடைகளைக் கடந்து வெளிவந்துவிட்டதாகப் பூரித்தார் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள். அடுத்த சில வாரங்களிலேயே, முதலில் பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில், கார்கோன் மாவட்டத்தில், 10.04.2022 அன்று நடந்த ராம நவமி ஊர்வலத்தில் தொடங்கியது இந்த பயங்கரவாதம். கலவரங்களை ஏற்பாடு செய்து, அதன் விளைவாக 50க்கு மேற்பட்ட இசுலாமியர்களின் வீடுகளை இடித்துத் தள்ளினார்கள். கேட்டால் அவை அனுமதியின்றிக் கட்டப்பட்ட வீடுகள் என்றார்கள். அடுத்து உள்ளாட்சி அதிகாரத்தை பா.ஜ.க. கைப்பற்றி இருக்கும் டெல்லியில் ஜஹாங்கீர்பூரியில் 20.4.2022 அன்று இந்த பயங்கரத்தைத் தொடர்ந்தார்கள். இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்
திரு.பிருந்தா காரத் அவர்கள் ஓடோடிச் சென்று உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கி வந்தும், சில வீடுகளைக் காப்பாற்ற முடியவில்லை.
இப்போது உத்தரபிரதேசத்தில் இரண்டு முக்கிய இசுலாமியர்களின் வீட்டை இடித்தபின், ஜூன் 12 ஆம் நாள் அஃப்ரீன் ஃபாத்திமாவின் தாயின் வீட்டை அவர்கள் இடித்துத் தள்ளி இருக்கிறார்கள். அஃப்ரீன் பாத்திமா ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்து வித்தான விளைச்சல்! ஆளும் பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக இவர் எழுப்பிய குரல்களால் குறித்து வைக்கப்பட்டவர் இவர். இவரது தந்தை இசுலாமிய அமைப்பொன்றில் தலைவராக உள்ளார். போதாதா உத்தரபிரதேச அரசுக்கு? நபிகள் நாயகம் குறித்து கடந்த மே26 அன்று, நூபுர் ஷர்மா ஒரு தொலைக்காட்சியில் பேசிய அவதூறுப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்ததற்காக, அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையாக அவர்கள் வீட்டை இடித்துத் தள்ளி உள்ளார்கள்! ஆம்! அந்த மாநிலத்தின் முதலமைச்சரும், உள்துறை அமைச்சரும் அப்படியே சொல்கிறார்கள்!
ஆர்ப்பாட்டக்காரர்களின் வீடுகள் இடிக்கப்படுவது என்பது இதுவரை வரலாறு காணாத பாசிச வடிவம். அனுமதியின்றிக் கட்டப்பட்ட வீடுகளே இடிக்கப்படுகின்றன என்று நியாயம் கற்பிக்கிறார்கள். அனுமதி அற்ற வீடென்று அறிவிக்கவே இல்லை என்று சொல்வீர்களானால், இரவு அறிவிப்பை ஒட்டி, காலை இடிக்க வந்து விடுவார்கள். சனநாயக அடிப்படையிலோ, இயற்கை நீதியின் அடிப்படையிலோ, கால அவகாசம் கோரமுடியாது. சட்ட நடவடிக்கைகள் ஏதும் பின்பற்றப்படமாட்டா. “கேங்க்ஸ்டர் சட்டம்” எனும் மாநிலத்தின் சிறப்புச் சட்டத்தின் படி எல்லா விதிகளும் மீறப்படும்.
அருமை வாசகர்களே, நுபுர் ஷர்மா என்ற ஒரு பார்ப்பனப் பெண்ணைக் கைது செய்யாமல் பாதுகாக்க, உலக நாடுகளுக்குக் கொடுத்த எல்லா வாக்குறுதிகளையும் காற்றில் பறக்கவிட்டு, ஆளும் இந்துத்துவ அரசு எப்படிப்பட்ட ஒடுக்குமுறையையும் கையாளும் என அவர்கள் மக்களைப் புரிந்து கொள்ளச் செய்கிறார்கள்! மையத்தில் நின்று இயக்கும் பார்ப்பனீயத்திற்கு மோடியும் பயந்து தான் ஆக வேண்டும் என அவர்கள் சொல்கிறார்கள். “மோடி போனால் எங்களுக்கு யோகி” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
அவர்கள் இதை மட்டும் சொல்லவில்லை. இசுலாமியர்கள் மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்று அவர்கள் முதலில் சொன்னார்கள். வீடு புகுந்து குழம்புச் சட்டியில் கைவிட்டு மாட்டுக்கறி தின்பவர்களை அடித்துக் கொன்றார்கள். இரயிலில் மாட்டுக்கறி தின்றதாக இசுலாமியப் பயணிகளை அடித்துக் கொன்றார்கள். அவர்களுடைய உணவை நிம்மதியாக உண்ண விடாமல் செய்த பின்னர், அவர்கள் ஹிஜாப் அணிவது தவறு என்றார்கள்! ஹிஜாப் அணிந்தால் கல்வி கற்க முடியாது என அவர்கள் அச்சமூட்டினார்கள்.
உணவு, உடையில் கை வைத்த பின்னர், அவர்கள் இப்போது இசுலாமியரின் வீடுகளுக்குக் குறி வைத்துள்ளார்கள்! எதிர்த்து கேள்வி கேட்டால், சன நாயக ரீதியாக ஒருங்கிணைந்தால், இருக்க வீடு இருக்காது என்கிறார்கள்! இசுலாமியரின் அடிப்படைத் தேவைகள் ஒவ்வொன்றாகப் பிடுங்குவதன் மூலம் இந்த நாட்டை, அவர்களுக்கு வாழ வக்கற்றதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்! ஆம்! ஓடிவிடுங்கள் என்று சொல்லாமல் சொல்லி, மீண்டும் ஒரு பிரிவினை கோரும் இந்துத்துவாவின் அணுக்கமான திட்டத்தை அவர்கள் அரங்கேற்றிக் கொண்டுள்ளார்கள்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் ம்ருத்துன்ஜெய் இப்படிச் சொல்கிறார் - “ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்குப் பின்னரும் சனிக்கிழமை வரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிந்துகொள்ளட்டும்” - இது இசுலாமியர் மீது ஒடுக்குமுறைகள் தொடரும் என்பதற்கான மறைமுக எச்சரிக்கை!.
உலகின் அத்தனை சனநாயக ஆற்றல்களையும் இந்து பாசிசத்திற்கு எதிராக ஒருங்கிணைக்க வேண்டிய நேரம் வந்தேவிட்டது.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகள் சனநாயக ஆற்றல்களை ஒருங்கிணைக்கத் தொடங்கிவிட்டன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்களுக்கு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கே.சந்துரு, சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், ஏ.கே.கங்குலி, வி.கோபால கௌடா, பி.சுதர்சன ரெட்டி உள்ளிட்ட பல்வேறு நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் உத்தரபிரதேசத்தில் நடக்கும் இந்த அநீதிகளுக்கு எதிராக, தானாக முன்வந்து பதிந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கடிதம் எழுதி உள்ளனர்.
நூபுர் ஷர்மா விடயத்தில் பன்னாட்டு கண்டனங்கள் ஓய்வதற்கு முன்பே, இந்த நடவடிக்கைகளால் உலகநாடுகளின் மனசாட்சியை மீண்டும் எழுப்பி உள்ளார்கள் சங்கிகள்!
ஆம் நாமும் சொல்வோம்! வெள்ளிக்கிழமைகளுக்குப் பின் சனிக்கிழமைகள் மட்டுமல்ல, நீங்கள் மதத்தின் பெயரால் செய்யும் அநீதிகளுக்குப் பின்பு, மக்கள் புரட்சியும் வரும்! பாசிஸ்டுகளின் முடிவுகளை மக்களே வரலாறு முழுதும் எழுதியிருக்கிறார்கள்!
- சாரதாதேவி